Sunday, 26 February 2012

தனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்!

தமிழக பார்ப்பனர்களின் சங்கமான 'தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின்' (thambraas) அதிகார்வ பூர்வ ஏடான "தம்ராஸ்" பிப்ரவரி 2012 மாத இதழை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.


ஹும்... இந்தக் காலத்து பசங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ...
ஒன்னு 'தல விரி'...
இன்னொன்னு 'கொலவெறி..அதான்!'

அந்த இதழில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள ஸ்ரீ-யின் ஒரு கார்ட்டூன் வசனம் இது.

'தல விரி'...

ஜிம்னாஸ்டிக் தொழிலுக்கு ஏற்ற இறுக்கமான முழுக்காலுரை,அதற்கு 'மேட்சான' மேற்சட்டையுடன் தலை மயிர்களை ஒன்றுசேர்த்து கட்டிப்போடாமல் ஒவ்வொரு முடிக்கும் முழுவிடுதலை கொடுத்து இரு கன்னங்களையும் தொட்டுக் கொண்டு அணிவகுத்து விரிந்து தொங்கும் முடி அலங்காரத்துடன் நிற்கும் இரு இளம் பெண்களைப் பார்த்து சடை பின்னிய மடிசார் மாமிகள் இரண்டு பேர் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்கே இவர்கள் குறிப்பிடும் 'தலவிரி'பசங்க,மாமி வீட்டு குலக் கொழுந்துகளைத்தான்.பார்ப்பனர்கள் பிறரைப்பற்றி எப்போது கவலைப்பட்டிருக்கிறார்கள் இப்பொழுது மட்டும் கவலைப்படுவதற்கு?

ஒரு பக்கம் இத்தகைய பண்பாடுகளை தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தி அதையே பிறருக்கும் பரவச் செய்யும் பணிகளையும் இவர்களே செய்வார்களாம். அதே நேரத்தில் இவாளுடைய பத்திரிக்கையில் கண்டிக்கவும் செய்வார்களாம். இது யாரை ஏமாற்ற?

உடை மற்றும் முடி அலங்காரம் என்பது தாங்கள் செய்கிற தொழிலுக்கு ஏற்ப இருந்தால் அதில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 'கொலவெறி..

இங்கே இவர்கள் கவலைப்படுவது தலவிரிக்காக அல்ல, தனுஷின் காதல் கொல வெறிக்காகத்தான். இந்தக் கொலவெறியைத் தூண்டும் தனுஷ் அவாளின் வட்டத்துக்குள்தானே இருக்கிறார்? ஏன் இப்படிக் கொல வெறியைத் தூண்டுகிறாய் என கண்டிக்கக் கூடாதோ! அப்படிக் கண்டித்தால் அவாளுக்காக அவ்வப்பொழுது குரல் கொடுக்கும் தனுஷின் மாமாவுக்கு சங்கடம் ஏற்படுமோல்ல?

கல்லாக் கட்ட மட்டும்தான் இந்தக் கொல வெறியத் தூண்டலாம். ஆனால் வாழ்க்கையில் கூடாது. காதல்-கீதல்-கொல வெறி என கலப்புத் திருமணம் ஏதும் பிராமணர்கள் செய்து விடக்கூடாதாம். அதற்காக பிராமணாகள் சத்தியம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இது பற்றி அவர்களின் இணைய தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அந்தணர் என்போர் அறவோராம். நீதி-நேர்மை-நியாயம்-தர்மம் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப் பட்டவர்களாம். அதனால் புராணங்களிலும் இலக்கியங்களிலும் இவர்களுக்கு மிக உயரிய அந்தஸ்து அளிக்கப்பட்டதாம். தமிழகத்தில் ஒருதலைபட்சமான பிராமண துவேஷ பிரச்சாரத்தால் இவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டார்களாம்.அதனால் கலாச்சார சீரழிவு தொடங்கிவிட்டதாம்.

பிராமணர் என்பது சாதியா?

 எப்படி முதலியார் என்பது சாதி அல்லவோ,  எப்படி கவுண்டர் என்பது சாதி அல்லவோ,  எப்படி பிள்ளை என்பது சாதி அல்லவோ,  எப்படி செட்டியார் என்பது சாதி அல்லவோ அது போல பிராமணர் என்பதும் சாதி அல்ல.

எப்படி முதலியார் என்பது செங்குந்தர், அகமுடையர், துளுவ வேளாளர் போன்ற சாதிகளை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடோ அது போல பிராமணர் என்பது ஐயர், ஐயங்கார் போன்ற சாதிகளை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடு. கவுண்டர், பிள்ளை, செட்டியார் போன்ற குறியீடுகளிலும் பல்வேறு சாதிகள் உண்டு. இவர்கள் ஒரே குறியீட்டின் கீழ் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டாலும் அந்தந்த சாதிகளுக்குள்தான் திருமண உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள். ஐயங்கார் ஐயருக்குப் பெண்தரமாட்டார். துளுவ வேளாளர் அகமுடையர் வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.

குடும்ப உறவுகளில் தங்களுக்குள் ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளாதவர்கள் பிறகு ஏன் தங்களை பிராமணர்கள் என்றும் முதலியார்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்? காரணம் வர்ணாசிரம அடிப்படையில் இவர்கள் பிராமணர்கள் என்றும் சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அப்படி சொல்லிக் கொள்வதில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பெருமிதம் கொள்கிறார்கள். அதனால்தான் ஐயர் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். செட்டியார் தன்னை வைசியன் என்று சொல்லிக் கொள்கிறான். கவுண்டர் தன்னை சத்திரியன் என்று சொல்லிக் கொள்கிறான்.

சாதியப்படிநிலையில் தாங்கள் பெருமைக்குரியவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள முடியாததால்தான் பள்ளர், பறையர் அருந்ததியர் உள்ளிட்ட சாதியினர் தங்களை சூத்திரர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள்கூட தங்களுக்குள் திருமண உறவுகளை வைத்துக் கொள்வதில்லை. அகமணமுறையை ஒழிப்பது சாதியை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறை என்பதை டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியும் அவரது வழிகாட்டுதலை ஒதுக்கிவிட்டு சனாதன தர்மத்தை கடைபிடிப்பது ஒரு அவலமாக இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.  வர்ணாசிரம தர்மத்தின் வெற்றி இதில்தான் அடங்கி இருக்கிறது.

உலக மயமும் கொலவெறியும்

மேலும் பிராமணர்கள் சொல்கிறார்கள்,

"சமீபத்திய உலகமயமாக்கல் மற்றும் கணினிமயமாக்குதல் (IT Revolution) காரணமாக மாபெரும் கலாச்சார சீரழிவு அனைத்து சமூகங்களையும் பாதித்தாலும் நமது பிராமண சமூகத்தை மிகப்பெரும் அளவில் பாதித்துள்ளது. இதன் விளைவாக பல பிராமண சமூகப் பெண்களும், சில பிராமண சமூக ஆண்களும் கலப்புத் திருமணம் செய்து கொள்வது பெருகி வருகின்றது. கலப்புத் திருமணம் நமது பிராமண பாரம்பரியத்தை வேரறுக்கச் செய்திடும்.

உலக மயமாக்களால் தனியார் மயம் - தாராள மயக் கொள்கைகள் அமுலுக்கு வந்ததால் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். விவசாயம் நொடிந்து போய் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படார்கள். சிறு தொழில், சிறு வணிகம் உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.பன்னாட்டுக் கம்பெனிகள் இந்நாட்டைக் கொள்ளையடிக்க கதவுகள் திறக்கப்பட்டதால் உள்நாட்டுத் தொழில் நலிவடைந்தது.உலகமயமாக்கலின் விளைவால் இன்று கோடிக் கணக்கானோரின் வாழ்வு கேள்விக்குரியதாகிவிட்டது. இதெல்லாம் நமக்குக் கவலை அளிக்கிறது.

ஆனால் அவாளுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிட்டதே என்கிற கவலை.
பிராமண பாரம்பரியத்தை காதல் திருமணங்கள் வேரறுக்கச் செய்து விடுமாம். அதனால் பிராமணர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடாதாம். உலக மயத்தால் சமூகம் சீரழிகிறது, காதல் திருமணங்கள் அதிகரிக்கிறது, பிராமணியம் அழிகிறது என்றால் உலக மயத்தையல்லவா பிராமணர்கள் எதிர்க்க வேண்டும். அவன் பேண்டதைத் இவன் தின்பானாம். ஆனால் 'நோய்' மட்டும் வரக்கூடாதாம் என்பது போல இருக்கிறது இவாளின் கவலை.

பிறவியிலே மிகச் சிறந்த பிறவியான மனிதப் பிறவியில் அதிலும் புண்ணிய பாரத தேசத்தில், மேலும் குறிப்பாக ரிஷிவர்க்கமாக பிராமணத் தாயார், தகப்பனாருக்குப் பெண்ணாக / பிள்ளையாக பிறந்த நான் எனது வாழ்நாள் முழுவதும் பிராமண பாரம்பரியத்தை கடைப்பிடிப்பேன்.”
“எதிர்காலத்தில் என்னுடைய கணவர் / மனைவி பிராமண சமூகத்தினராகவே இருந்திடுவார். அதாவது வேறு ஜாதியினரை, வேறு மதத்தினரை கலப்புத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது குடும்பப் பெரியவர்கள் மத்தியில் / ஸ்வாமி சந்நிதியில் / தாம்ப்ராஸ் நடத்துகின்ற சத்யப்ரமாண நிகழ்ச்சியில் நான் இந்த சத்யப் பிரமாணத்தை எடுத்துக் கொள்கின்றேன்.”

என்று பிராமணப் பெண்களும் பையன்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

"நடந்தவகைள் நடந்தவைகளாக இருக்கட்டும்!
இனி நடக்க இருப்பவை நம்மவைகளாக மட்டுமே இருக்கட்டும்!!"

என நம்பிக்கை வைத்து அந்த அறிவிப்பை முடித்துள்ளார்கள்.

இனி நடப்பவை அவாளுடையதாக இருக்கக் கூடாது. உலக மயம் சமீபத்தியது. வீழ்த்திவிடலாம். நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பார்ப்பனியம் பல ஆயிரம் ஆண்டு பழைமையானது: உறுதிப் படுத்தப்பட்டது. வீழ்த்துவது கடினம். பார்ப்பனியத்தை வீழ்த்த உலக மயம் உதவும் என்றால் சிறிது காலம் உலக மயத்தை வீழ்த்துவதை தள்ளிப் போடலாமோ என்று கூடத் தோன்றுகிறது!

Wednesday, 22 February 2012

சிவராத்திரி: நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!

"2011 இல் எழுதப்பட் இந்தக் கட்டுரை இந்த ஆண்டு சிவராத்திரியையொட்டி மீள் பதிவு செய்யப்படுகிறது!”

இரண்டு நாட்களுக்கு முன்பு மகா சிவராத்திரி. சிறப்பு வழிபாடு, நாட்டியாஞ்சலி என சிவன் கோயில்கள் கலைகட்டியிருந்தன. நாட்டியாஞ்சலியைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தார்களாம். வெளிநாட்டினர்கூட மெய்சிலித்தார்களாம். இருக்காதா பின்ன?  ஈசனை எழுப்புவதற்கு இதுவரை ஆடாதவர்கள்கூட ஆண் பெண் உட்பட என்னமாய் ருத்ரதாண்டவம் ஆடுகிறார்கள். புதிதாக ஆடுபவர்களைக் கண்டால் பார்ப்பவன் பரவசமடையமாட்டானா என்ன?

ஒரு சிலர் தூக்கமுடியாத தமது‌ கால்களைத் தூக்கி தாண்டவமாடிய காட்சிகள் அரங்கேறின. இதெல்லாம் ஒரு சிலருக்கு வரும்படி 'சீசன்'. அமெரிக்காவிலிருந்து வந்து ஆடுகிறார்கள் என்றால் சும்மாவா வந்து ஆடுவார்கள்? 

ஈஷா யோகாவில், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் கேளிக்கை விருந்து நடனங்களைப் போல மகாசிவராத்திரி மேன்மக்களின் திருவிழா.

மகா சிவராத்திரியை அடுத்து மயானக் கொள்ளை. அம்மனைக் கட்டி இழுத்து ஆற்றுக்குச் செல்கிறார்கள். கூட்டம் அலைமோதுகிறது. மக்களின் முகங்களில் மலர்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து பாட்டிமார்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போல அம்மனைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்த மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் கீழ்தட்டு மக்கள். 

எதற்காக மயானக் கொள்ளைத் திருவிழா?

மகா சிவராத்திரியையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் நடத்தப்படுவது மயானக் கொள்ளைத் திருவிழா.  இதற்கு ஒரு புராணக் கதை உண்டாம்.

சிவ பெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தனவாம். தனக்கும் ஐந்து தலைகள் வேண்டும் என சிவனிடமே முறையிட்டு தவம் செய்து ஐந்து தலைகளைப் பெற்றானாம் பிரம்மா. கர்வத்துடன் கயிலாயம் சென்ற பிரம்மாவை சிவன்தான் வந்துவிட்டான் என்று பார்வதி வணங்கினாளாம். பிறகு உண்மையை அறிந்த பார்வதி சிவனிடம் முறையிட்டாளாம். சிவனும் பிரம்மாவின் ஐந்து தலைகளையும் துண்டித்தானாம்.

இருப்பினும் வெட்டப்பட்ட தகைள் மீண்டும் மீண்டும் வந்தனவாம். 999 தலைகள் வந்ததும் அவைகளை மாலையாக அணிந்து கொண்டானாம் சிவன். ஆயிரமாவது தலையை சிவன் எடுத்த போது பிரம்ம கபாலம் சிவனது கையுடன் ஒட்டிக் கொண்டதாம்.

இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம். ஆண்டவனுக்கே தோஷமா எனக் கேட்காதீர்கள். தோஷம் பிடித்து காடு மேடுகளில் அலைந்த சிவனைக் கண்ட மகாவிஷ்ணு, பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க அங்காளம்மனுக்கு ஆலோசனை தெரிவித்தானாம். அதர்மத்தை அழிக்க பல அவதாரங்கள் எடுத்த மாவிஷ்ணு அந்த வேலையை ஏன் அங்காளம்மனுக்கு ஒப்படைத்தான் என கேள்வி கேட்கக் கூடாது. 'ஒர்க் லோடு' அதிகமாய் இருந்திருக்கும். 

உலகில் உள்ள பயிர்களை ஒன்று சேர்த்து, உணவாக படைத்து, அதை மூன்று கவளமாக்கி, அவற்றில் இரு கவளங்களை கபாளத்தில் போடு. மூன்றாவது கவளத்தை தரையில் வீசு. அதை எடுக்க கபாலம் கீழே இறங்கும் போது அதை அழித்து விடு என அங்காள பரமேஸ்வரிக்கு 'பிராசஸை' விளக்கினானாம் மகாவிஷ்ணு.

அதன்படி அங்காளம்மன் பிரம்ம கபாளத்தை தனது காலடியில் மிதிக்க, சிவனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாம். இதுவே மயான கொள்ளைத் திருவிழாவாக நடத்தப் படுகிறதாம்.

அது அவாளின் கட்டுக் கதை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னதான் புராணங்களை எழுதி வைத்தாலும் உண்மையை ஒருக்காலும் மறைக்க முடியாது. அதனால்தான் மயானத்தில் அதாவது இடுகாட்டில் புதைக்கப்பட்ட மூதாதையருக்கு படையல் இடும் விழாவாக இத்திருவிழா இப்பொழுது மாறி உள்ளதாக தினமணி எழுதுகிறது.

இப்பொழுது மாறவில்லை. எப்பொழுதும் அதுதான் உண்மை. புராணப்படி மும்மூர்த்திகளும் சம்பந்தப்பட்ட இந்த விழாவில் பார்ப்பனர்கள் ஏன் கலந்து கொள்வதில்லை? உயர் சாதியினர் ஒருவர்கூட எடுத்து நடத்துவதில்லையே? இது ஒன்று போதாதா இது புராணக் கதை அல்ல, புருடாக் கதை என்பதற்கு.

பாட்டிகளே படைத்தலைவிகளாய்...

இது தாய்வழிச் சமுதாயத்தின் எச்சமாய் தொடரும் ஒரு விழா. இங்கே ஈசனுக்கு வேலை இல்லை. ஏழைகளைக் கொடுமைப்படுத்திய கயவர்களை நம் மூதாதைய மகளிர் குத்திக் கொன்று வீர மரணம் அடைந்ததைக் கொண்டாடும் நாள். கயவர்கள் யாராய் இருந்திருக்க முடியும்? ஆண்டைகளைத் தவிர.

இரத்தக் கறையோடு தொங்கும் நீண்ட நாக்கும், மடித்துக் கடித்து தடித்த நாக்கும்,  இரண்டுக்குப் பதிலாய் நான்கு கைகளும், அக்கைககளில் வீச்சரிவாளும் கோடரியும், உருட்டி மிரட்டும் கண்களும், அட்டைக் கரியாய் மேனியும் என சூர்ப்பநகை போல யார் இருந்திருக்க முடியும்? ஏழைகளைத் தவிர.

ஆட்டைக் கடித்து இரத்தம் குடிப்பதும், பச்சைக் கறியை கொத்துக் கொத்தாய் தின்பதும் இன்றும் இவ்விழாக்களில் நடக்கின்றனவே. இவை ஆக்ரோஷத்தின் வெளிப்பாடல்லவா? 

அம்மன்கள் இப்படி ஆக்ரோஷமாய் யாருக்கெதிராய் வெகுண்டெழுந்திருப்பார்கள்? வெள்ளையனுக்கு எதிராய் வேலுநாச்சியார் வெகுண்டெழுந்ததைப் போல அன்று ஆண்டைகளுக்கெதிராய் சில தாய்மார்கள் ஆர்த்தெழுந்திருக்க வேண்டும். அவர்களே இன்று அம்மனாய்த் தெரிகிறார்கள் நம் மக்களுக்கு. அங்காளத்தாள் தலைமையேற்றிருக்க வேண்டும். பிறகு பார்ப்பனர்கள் அவளை பரமேஸ்வரியாக்கி நிறுவனப் படுத்தியிருக்க வேண்டும்.

யார் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்?

மேல் மலையனூர் போன்ற சில ஊர்களில் செம்படவர்களும் (மீனவர்கள்), ஆற்காடு போன்ற சில ஊர்களில் வன்னியர்களும் வேலூர் விருதம்பட்டு தோட்டப்பாளையம் போன்ற சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே இதை தங்கள் வீட்டுத் திருவிழாவாக நடத்துகிறார்கள். விழாவில் பங்கேற்போரும் இப்பிரிவு மக்களே. அதிலும் குறிப்பாக கீழ் வருவாய் பிரிவினர் (lower income group) மற்றும் அன்றாடங்காய்ச்சிகளே. மருந்துக்குக்கூட ஒரு உயர் சாதிக்காரனை பார்க்க முடியாது. தெரு வழியாக அம்மன் வரும் போது கும்பிடாமல் விட்டால் மரியாதை போய்விடும் என்பதாலும், சாமி குத்தம் வந்து விடுமோ என்ற அச்சத்தாலுமேயொழிய உயர் சாதியினர் யாரும் அம்மனை விரும்பி வழி படுவதில்லை.  

அங்காளம்மனைப் போல கொடுமைக்கெதிராய் கொதித்தெழவா இன்று இதுபோன்ற விழாக்கள் நடத்தப் படுகின்றன? விழாவை நடத்தும் பொறுப்பு ஊர்ப் பெரியவர்களுக்கு இருந்தாலும் நடைமுறை வேலைகளை இளைஞர்கள்தான் முன்னெடுக்கிறார்கள்.

நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!

அண்ணன்களுக்கும், அய்யாக்களுக்கும், தளபதிகளுக்கும், கேப்டன்களுக்கும் அல்லக்கைகள் வைக்கும் கட் அவுட்களைப் போல இங்கே அம்மன்களுக்கும் கட் அவுட்டுகள். இதில் ஆக்ரோஷமாய் காட்சியளிக்கும் அம்மன்கள் அதிகம் என்றாலும் பத்மினி, கே.ஆர்.விஜயாக்களும் அம்மனாய் அவதரித்துள்ளதும் இருக்கத்தான் செய்கின்றன. குத்தாட்டம் போட்ட ரம்யாக்கள்கூட அம்மனாய் அவதாரம் எடுத்துள்ளார்கள். நல்ல வேளை நமீதாக்கள் இதுவரை அம்மன் வேடம் போட்டதில்லை.   பாவம் ஓவியர்கள்தான் என்ன செய்வார்கள்? 'ஒரிஜினல்' அம்மனை யார்தான் பார்த்தார்கள்? மனப் பதிவுகள்தானே படைப்பாய் வரும்.

இந்த ஆண்டு மயானக் கொள்ளையை என்னால் மறக்கவே முடியாது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் 80 வயதான எனது தந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மூத்திரப் பையை மாற்றிக் கொண்டு திரும்பி வர மாலை மூன்று மணியாகிவிட்டது. பேருந்து நிலையத்தில் ஐந்து மணிவரை காத்திருந்த பிறகே ஒரு பேருந்து வந்தது. ஏறிப் பயணித்தோம். முப்பது கிலோ மீட்டர் தூரப் பயணம்தான். ஆனால் மூன்று நகரங்களைக் கடக்க வேண்டும். 

வழி நெடுக மயானக் கொள்ளை. கூட்டம் அலைமோதியது. பேருந்துகள் ஊர்ந்துகூட செல்ல முடியவில்லை. சில இடங்களில் போக்கு வரத்து நிலைகுலைந்து போனது. காவல் துறையினர்தான் என்ன செய்வார்கள்? கட்டுப் படுத்தமுடியவில்லை.

மூன்று மணி நேரப் பயணம். பேருந்து நிலையத்தில் காத்திருந்த இரண்டு மணி நேரம். ஆக மொத்தம் ஐந்து மணி நேரம். ஒரு மணி நேரத்திற்குப் பதிலாக ஐந்து மணி நேரமானால் எரிச்சல் வராமலா இருக்கும்? பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு ஆட்டோவில் சென்றபோது மயங்கிச் சுருண்டுவிட்டார் எனது தந்தை. வாந்தியும் வேறு. எப்படி இருந்திருக்கும் எனக்கு? எவன் கண்டு பிடித்தான் 'பஸ் டேவை' என்று சில பதிவர்கள் கேட்பது போல எவன் கண்டுபிடித்தான் மயானக் கொள்ளையை என்று கேட்கவா முடியும்.

விழாக்கள் தேவைதானா?

துன்ப துயரங்களால் அவதிப்படும் மக்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தவும்,  மயானத்தில புதைக்கப்பட்ட மூதாதையருக்கு படையல் இடும் விழாவாகவும் இது போன்ற விழாக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அவர்களும் பொது மக்கள்தானே. வேறு ஒரு தரப்பினர் ஒரு விழா கொண்டாடும் போது அவர்களும் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகத்தானே செய்கிறார்கள். யாரை யார் நொந்து கொள்வது?

விழாக்கள் தேவைதானா என்பது பரிசீலனைக்குரியவைதான். தேவையற்ற விழாக்களை தவிர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்தான். அதுவும் இன்றைய விழாக்கள் எதுவாக இருந்தாலும் தண்ணியில் மிதக்காமல் நடப்பதில்லையே. குறிப்பாக குடிக்காத இளைஞர்களே இன்று இல்லை என்ற நிலைதான் எங்கும் நிலவுகிறது. இதற்காகவே விழாக்களை ஒழித்துக் கட்டினால் தவறொன்றும் இல்லைதான்.

ஆனால், மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்ட விழாக்களை ஒரேயடியாக ஒழித்துவிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாமல் யாராலும் இப்போதைக்கு வாழமுடியாது. விழாக்களில் கிடைக்கும் மகிழ்ச்சி அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு கிடைக்கும் போது தேவையற்ற விழாக்கள் கண்டிப்பாய் காணாமல் போகும்.

ஊரான்

Wednesday, 15 February 2012

பள்ளி மாணவன் தனது வகுப்பு ஆசிரியரை குத்திக் கொன்றது அதிர்ச்சியான செய்தியா?

15 வயது பள்ளி மாணவன் ஒருவன் தனது வகுப்பு ஆசிரியரையே குத்திக் கொலை செய்கிறான். இச்செயல் சென்னையில் நடந்திருந்தாலும் இதன் 'அதிர்ச்சி' அலைகள் தமிழகத்தைத் தாண்டி இந்தியாவைவே உலுக்கியதாக ஊடகங்கள் ஓயாது செய்திகள் வெளியிட்டன. உளவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன் காரண காரியங்களைக் கண்டறிய பெரும் பாடுபட்டு வருகிறார்கள். இனி இது போன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என பலரும் ஆலோசனைகளை அள்ளி இறைக்கின்றனர்.

"ஆசிரியரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதற்காக இரண்டு பள்ளி மாணவர்கள் கைது செய்யப்டுகிறார்கள். 

"சிறப்பு வகுப்புக்கு வரவழைத்து தொடர்ந்து ஆறு மாதங்களாக தன்னைக் கற்பழித்ததால் தான் கர்ப்பம் அடைந்ததாக பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்படுகிறார்.

"வீட்டுப் பாடம் எழுதவில்லை என்பதங்காக பள்ளிச் சிறுவனை ஆசிரியர் பிரம்மால் அடித்ததால் அச்சிறுவனின் ஒரு கண் பறி போகிறது.

"செய்யாத குற்றத்திற்காக தன்மீது திருட்டுப் பட்டம் சூட்டி தன்னை நிர்வாணப்படுத்தி சோதித்ததால் அவமானத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயல்கிறாள்.

"நண்பர்களோடு சேர்ந்து தனது காதலியையே கும்பலாக கற்பழிக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்.

"பெற்ற மகளையே வீட்டில் சிறை வைத்து மாதக் கணக்கில் கற்பழிக்கிறான் ஒரு தந்தை. 

"சொந்த சித்தி மகளை அதாவது தனது தங்கையையே காதல் மணம் புரிகிறான் ஒருவன்.

"உயிருக்கு உயிராய் நேசித்த நண்பனுடன் தனது மனைவி தகாத உறவு வைத்துள்ளதைக் கண்டு அதிர்ந்து போகிறான் ஒருவன்.

"கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டிய கணவனையே கொலை செய்கிறாள் ஒருத்தி.

"தான் வேறு ஒரு பெண்ணுடன் கொண்டுள்ள கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியையே தீர்த்துக் கட்டுகிறான் ஒருவன்.

"செலவுக்குப் பணம் கேட்டு தொல்லை செய்ததால் சொந்த மகனையே கொலை செய்கிறாள் ஒரு தாய்.

"வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகறாரில் சொந்த அண்ணனையே வெட்டிக் கொலை செய்கிறான் ஒரு விவசாயி.

"தொழில் தொடங்க பெற்றோர்கள் பணம் தர மறுத்ததால் சொந்த வீட்டிலேயே நண்பர்கள் உதவியுடன் பணம் நகைகைளைக் கொள்ளையடிக்கிறான் ஒரு மகன்.

"மாமியார் வீட்டு விசேசத்திற்கு வந்த மருமகன், எட்டு பவுன் தங்க நகையை மாமியார் வீட்டு பீரோவிலிருந்து கபளீகரம் செய்கிறான்.

இப்படி நம் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எங்கு நோக்கினும் 'அதிர்ச்சி' தரக்கூடிய செயல்கள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன என்று சொல்லாலாமேயொழிய ஏதோ திடீர் என இப்போது மட்டும் நடப்பவை அல்ல.

ஆதிகால சமூகத்தில் பல்வேறு இனக்குழுக்குள் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். போருக்குப் பின் அரசுகள் தோன்றுகின்றன. தோற்றவர்கள் அடிமைகளாகிறார்கள்.பொருளோடு சிறைபிடிக்கப்பட்ட பெண்களும் மன்னனின் உடைமைகளாகின்றனர். பெண்கள் அனுபவிப்பதற்கான போகப் பொருளாக ஆக்கப்பட்டதால்தான் அன்று அந்தப் புறங்கள் உருவாகின.

அதன் நீட்சியாகத்தான் இன்றும் பெண்கள் போகப் பொருளாக பார்க்கப்படுகின்றனர். போதாக் குறைக்கு முதலாளிகள் பணம் ஈட்டுவதற்காக திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பெண்களை போகப் பொருளாகவே சித்திக்கின்றனர். பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மேலும் அதிகரிக்க இவை வழி வகுக்கின்றன.

மாணவனோ-ஆசிரியரோ, விவசாயியோ-தொழிலாளியோ,  பண்ணையாரோ-முதலாளியோ, ஆணோ-பெண்ணோ இவர்களின் மேற்கண்ட குற்றங்கள் யாவும் ஒன்று பணம்-பொருளுக்காகவோ அல்லது காமத்துக்காகவோதான் நடக்கின்றன.

இச்சமூகத்தில் தனக்கும் - தன் சந்ததியினருக்கும் உத்தரவாதமான எதிர்காலம் இல்லை எனக் கருதுகிறான் பணம் பொருளுக்காக குற்றமிழைப்பவன்.  பொருள் ஈட்டுவதில் வெற்றி பெற முடியாத போதும் அல்லது ஈட்டிய பொருளை பாதுகாக்க முடியாதோ என அஞ்சும் போதும் குரூரமாகவும் குறுக்கு வழியிலும் செயல்படத் துணிகிறான். அதன் விளைவு குற்றச் செயலில் முடிகிறது.

இத்தகைய குற்றச் செயல்களிலிருந்து மக்களைக் காக்க பல மகான்கள் உலகெங்கிலும் அவதாரம் எடுத்தார்கள். போதனைகளை வாரி வாரி இறைத்தார்க்ள். மதங்களையும் -மார்க்கங்களையும் தோற்றுவித்தார்கள். புத்தனையும் - ஏசுவையும் - வள்ளுவனையும் - நபிகளையும் பின்பற்றினால் நல்ல சமுதாயம் அமையும் என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஓயாமல் போதித்து வருகிறார்கள். ஆனால் சமூகம் மேலும் சீரழிகிறதேயொழிய அவர்களின் போதனைகள் எதுவும் எடுபடவில்லை. மொத்தத்தில் இத்தகைய மகான்களின் போதனைகள் அனைத்தும் தோற்றுப் போயின என்றுதான் சொல்ல வேண்டும்.

உடைமை மாறாத வரை இனி எத்தனை மகான்கள் அவதாரமெடுத்தாலும், ஒழுக்க நெறிகளை ஓயாமல் போதனை செய்தாலும் குற்றங்கள் ஒரு போதும் குறையப் போவதில்லை. 

Thursday, 19 January 2012

உறவுகளை அறுத்தெறியும் அரசு!

பண்டிகைகள் தேவைதானா?

எதற்காகப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்கிற கேள்வி பல ஆண்டுகளாகவே என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது. 

"பண்டிகைகள் நம் பாரம்பரியம் அல்லவா, விட்டுவிட முடியுமா?"

"உறவுகள் அப்போதுதானே ஒன்றுபட முடியும்!"

"நம்மை வாழவைக்கும் விலங்குகளுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றிக்கடனை செலுத்தவேண்டாமா?"

"பண்டிகை இல்லை என்றால் பிறகு எப்படித்தான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது?”

"உறவுகளையும் நட்பையும் பண்டிகைகள்தானே புதுப்பிக்கின்றன!"

இப்படி பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான 'நியாயங்கள்' மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றன.

விழாக்கள் நுகர்வுக்கானவைகளா?

ஆனால் வியாபாரிகளுக்கு பண்டிகைகள் கொண்டாடுவதற்கான காரணங்கள் இரண்டாம் பட்சமானவை. கல்லாப் பெட்டி நிறைகிறதா என்பதே அவர்களின் கவலை.சமீப காலமாக முதலாளிகளும் வணிகர்களும் கல்லா நிறைவதற்கான புதுப் புது யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய யுக்திகள் மேற்சொன்ன நியாயங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டன. அனுபவிப்பதற்காகத்தான் பண்டிகைகள் என்கிற நுகர்வு பண்பாட்டை திணித்து வருகின்றனர். "நாங்க எஞ்சாய் பண்ண வந்திருக்கோம்" என விழாக்களின் போது மக்கள் அளிக்கும் பேட்டிகள் இதை உறுதி செய்கின்றன. 

நியாயங்கள் பல சொல்லப்பட்டாலும் ஒரு சில காரணங்களுக்காக சில பண்டிகைகைளை நாமே கொண்டாடுவதில்லை. எமது மிக முக்கியமான மூதாதையர் ஒருவர் பொங்கல் அன்று இறந்து விட்டாராம். ஆகையினால் பெரும் பொங்கல் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான பொங்கல் விழாவையே எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக எமது உறவினர்கள் யாரும் கொண்டாடுவதில்லை.

ஒரு சில பண்டிகைகளை-விழாக்களை சிலர் கொண்டாடுவதில்லை என்றாலும் திருமண விழா மட்டும் அவரவர் சக்திக்கேற்ப கண்டிப்பாக நடத்தப் படுவதுண்டு. பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கிற திருமணங்களாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர்கள் எதிர்த்த போதும் அதையும் மீறி காதல் மணம் புரிந்தோருக்கு அதை முறைப்படுத்துவதற்கு அதன் பிறகு நடக்கும் திருமண வரவேற்பு விழாவாக இருந்தாலும் சரி இவ்விழாக்கள்தான் உறவுகளை ஒன்றிணைக்கவும் நட்பை பலப்படுத்தவும் உதவுகின்றன.

முன்பெல்லாம் கைநிறைய ஊதியத்துடன் கூடிய அரசு வேலை கிடைத்தால்தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்வார்கள். இப்படி 'பிழைக்கச் செல்வோர்' ஒரு சிலர்தான்.  அந்த ஒருசிலர்கூட திருமண விழா உள்ளிட்ட எந்த விழாவாக இருந்தாலும் தொலை தூரத்தில் இருந்தாலும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்வார்கள். அதற்காக ஆகும் செலவை அவர்கள் ஒரு பெரிய சுமையாகக் கருதவில்லை. அவர்களும்கூட பணி ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கே வந்து நிரந்தரமாய் தங்கிவிடுவார்கள். மற்றபடி ஆகப் பெரும்பாலானோர் சொந்த பங்தங்களோடும் நண்பர்களோடும் வாழுகின்ற சூழல் அன்று நிலவியது.   

உறவுகளைத் துறத்தும் உலக மயம்

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது. உலக மயம் நடைமுறைக்கு வந்த பிறகு விவசாயமும் கிராமப்புற சிறுதொழில்களும் நலிவடைந்தன. வேளாண்மைக்குத் தேவையான நீர் ஆதாரம் குறைந்து போனதாலும், விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமையாலும் பலர் வேளாண்மையைக் கைவிட்டனர். வேறு வழி இன்றி பிழைப்புக்காக பலர் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் தஞ்சமடைந்தனர். சொல்லிக் கொள்ளும் படியான வருவாய் இல்லை என்றாலும் எப்படியோ வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு நகரங்களிலேயே நிரந்தமாகத் தங்கத் தொடங்கி விட்டனர்.

வயித்துக்கும் வசிப்பிடத்திற்குமே எட்டாத போது நல்லது கெட்டதுகளுக்கு கிராமங்களை எட்டிப் பார்ப்பதும் குறைந்து போனது. உறவுகளும் நட்பும் குறைந்து போனாலும் இதுவரை உறவு அறுந்து போகாமல்தான் இருந்து வருகிறது. கடன ஒடன வாங்கியாவது உறவையும் நட்பையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர் வண்டிப் பயணம்!

இந்தச் சூழலில் தை பிறந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தத் தையில் பலருக்கு வழியே அடைபட்டுவிட்டது. ஒரு சிலருக்கு வழி இருந்தாலும் பாதை கல்லும் முள்ளுமாக மாறி விட்டது. 

சுமார் 530 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு பெரிய தொழிற்சாலையில் பயிற்சி எடுக்க வந்த பயிற்சி மாணவன் (apprentice) இந்தப் பொங்கலுக்கு தனது சொந்த ஊருக்குச் சென்றுவந்தான். தொழிற்சாலை உணவகத்தில் (canteen) வழங்கப்படும் பூரியைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத பலகீனமான உடல்வாகு உள்ளவன். 

வசதி குறைவான குடும்பம் என்பதால்தான் பொறியியல் பட்டயப் படிப்பு (diploma) படித்துவிட்டு மாதம் மூவாயிரம் ஊக்கத் தொகை கிடைத்தாலும் பரவாயில்லை என்று தொலைதூரமாக இருந்தாலும் பயிற்சி பின்னாளில் பயனளிக்கும் என நம்பி வந்துள்ளான். ஊரைவிட்டு வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என முடிவெடுத்து பயணமானான். நேரடிப் பேருந்து வசதி இருந்தாலும் தொடர் வண்டியில் செல்ல முடிவெடுத்து உட்கார இடம் கிடைக்க வில்லை என்றாலும் இடிபடாமல் நிற்க முடிந்ததே என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நான்கு மணி பயணத்திற்குப் பிறகு ஈரோடு சென்றடைந்தான்.

விருது நகர் செல்லும் தொடர் வண்டியிலாவது உட்கார இடம் கிடைக்குமா என்கிற கவலை,தொலைந்து போன தூக்கத்தின் வேதனையை மறக்கடித்துவிட்டது. தொடர் வண்டியும் வந்தது. ஏறவே முடியாத அளவுக்கு கூட்டம் ஏற்கனவே நிரம்பி வழிந்ததால் உட்கார்ந்து செல்லலாம் என்கிற கனவும் தகர்ந்து போனது. அலைமோதிய கூட்டத்தைக் கண்டு ரயில்வே நிருவாகம் சரக்குப் பெட்டியைத் திறந்துவிட மொத்தக் கூட்டமும் திபு திபு வென அப்பெட்டிக்குள் நுழைந்தது. இவனோ பலகீனமானவன். எப்படியோ தட்டுத்தடுமாறி பெட்டியில் ஏறிவிட்டான். மூட்டைகளுக்குப் பதிலாக மனிதர்கள் அடைக்கப்பட்ட பெட்டியை இழுத்துக் கொண்டு வண்டியும் நகர்ந்தது. மூண்று மணி நேரம் மூச்சுவிட முடியவில்லை என்றாலும் எப்படியோ தம் கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தான். 

மதுரையிலாவது இடம் கிடைக்குமா என ஏங்கியவனுக்கு அடுத்த பேரிடி காத்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்ற வேண்டும் என சரக்குப் பெட்டியிலிருந்த அனைவரையும் கீழே இறக்கிவிட்டார்கள். இங்கே சரக்குக்கு இருந்த மதிப்புகூட மனிதர்களுக்கு தரப்படவில்லை. மற்ற பெட்டிகளிலும் கூட்டம் அலைமோதியது. என்ன செய்ய? ஊர்ப் போய்ச் சேர வேண்டுமே! பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற புத்துணர்வு இவனை உந்தித்தள்ள, எப்படியோ முண்டியடித்து படியில் தொத்திக் கொண்டான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படியின் பிடியிலிருந்து சொந்த ஊரான விருதுநகரில் விடுபட்டான்.

இந்த அனுபவத்தை அவன் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது பொங்கலைக் கொண்டாடச் சென்றானா இல்லை வேதனையை சுமக்கச் சென்றானா என்பதை அவனது முகமே எனக்கு உணர்த்திவிட்டது.

முன்பதிவு செய்துவிட்டு பேசாமல் பேருந்தில் சென்றிருந்தால் இத்தகைய வேதனைகள் வந்திருக்காதே என நான் கேட்ட போது, "சார் பஸ்சில் சென்றால் போக வர ரூ.800. அதுவே ரயிலில் சென்று வர ரூ.320 தான். ஆனால் ரயிலில் இவ்வளவு கூட்டம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" என்றான். 480 ரூபாய்தான் இவனது பயணத்தை கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பயணமாக மாற்றி விட்டது. இவனைப் போலதானே மற்றவர்களும் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

சொகுசுப் பேருந்துப் பயணம்!

மலரத் துடிக்கும் மொட்டுகள் கூட பஞ்சாங்கப் பரதேசிகளால் மார்கழியில் உறைந்து, பிறகு தையில்தானே மலர்கின்றன. தை பிறந்து விட்டதால் பல மொட்டுகள் ஒரே நேரத்தில் மலர்வதால் மணவிழாக்களோ எக்கச் சக்கம். இதனால் பேருந்துகளிலும் தொடர் வண்டிகளிலும் கூட்ட நெரிசல் குறையவில்லை. அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக முன்பெல்லாம் தொடர்வண்டிப் பயணத்தை தேர்வு செய்வார்கள். சமீப காலமாக தொடர் வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால்,தொடர் வண்டிப் பயணம் அலுப்பாய்தான் இருக்கிறது. அலுப்பாய் இருந்தாலும் இன்று பலர் தொடர் வண்டியில்தான் பயணிக்கிறார்கள்.

நண்பரின் மகனுக்குத் திருமணம். எனக்கும் மணவிழா அழைப்பு வந்தது. குடும்பத்தோடு வர வேண்டும் என கண்டிப்பாய் கூறிவட்டார். திருமணமோ திருச்சியில். ஏழு மணி நேரம் பயணிக்க வேண்டும். உடல் நலம் குன்றி இருந்தாலும் திருமணத்தை புறக்கணிக்க முடியாது. தொடர் வண்டி வசதி இருந்தால் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் சற்று கூடுதல் கட்டணமாக இருந்தாலும்-பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான்-சென்று வரலாம். அதற்கும் வழி இல்லை. எனவே சொகுசுப் பேருந்தில் சென்று வர தீர்மானித்து முன்பதிவு செய்துவிட்டேன். 

முதல் நாள் செல்லும் போது இரவுப் பயணம். அடுத்த நாள் திரும்பி வரும் போதும் இரவுப் பயணம்தான். 500 ரூபாய் கட்டணத்தில் சொகுசுப் பேருந்தில்தான் பயணம். இருக்கையில் முப்பது டிகிரியில் சாய்ந்து கொண்டால் சொகுசாய் தூங்கலாம் என கண்களை மூடினால் கொக்கிகள் - window lock- இல்லாத சன்னல்களின் கண்ணாடிகள் பேருந்து ஓடும் வேகத்தின் அதிர்வுகளால் விலகி உஸ் என்ற பனிக்காற்று உள்ளே நுழைந்து "உறங்காதே" என எனக்கு பயணம் முடியும் வரை வேலை கொடுத்து வந்தது. மற்றவர்களும் இதையேதான் செய்து வந்தனர். 

உறக்கம் தொலைந்ததால் ஒட்டிக் கொண்ட அலுப்பு, மணவிழாவில் பழைய நண்பர்களைக் கண்டபோது எங்கோ ஓடி ஒளிந்து விட்டது. நண்பர்களைப் பிரியும் போது ஓடி ஒளிந்த அலுப்பு மீண்டும் நம்மை ஒட்டிக் கொள்ளும். இது தவிர்க்க முடியாதது. 

மணவிழாவுக்கு அழைத்திருந்த நண்பரைக் கண்டபோது,  "என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க. வீட்ல வரலையா, பிள்ளைங்க வரலயா?" என அவர் வினவும் போது அவரைப் பொருத்தவரையில் நட்பில் ஒரு கீரல் விழுந்து விட்டது என்றுதான் பொருள். என்னைப் பொருத்தவரையில், என் ஒருவனுக்கே பேருந்துக் கட்டணம் 500 ரூபாய் -முன்பு இதுவே 200 ரூபாய்தான்-நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் ரூ.2000. என்றுதான் என் மனம் கணக்குப் போடும். என் மனம் போடும் இந்தக் கணக்கு எதார்த்தமானது உங்களுக்கும்தான்.

ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நம்மால் ஒரு திருமணவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனால் காரணத்தைச் சொல்லி சமாளித்துவிடலாம்.

நட்போ உறவோ இங்கு கணக்கு என்னவோ ஒன்றுதான். அடிக்கடி இப்படி திருமணங்களுக்குச் செல்ல நேர்ந்தால் "இனி முடியுமா?" என்றுதான் எண்ணத் தோன்றும். திருமணங்களுக்குச் செல்வது மெல்ல மெல்ல குறைந்து பிறகு நின்றே போய்விடும். அன்றே உறவும் நட்பும் அறுந்து போகும்.

Monday, 9 January 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை!

பழனியப்பனுக்கு வயது 54. சென்னை-கொரட்டூரில் உள்ள தனியார் காகித உற்பத்தி ஆலையில் பணிபுரிபவர். அம்பத்தூருக்கு அருகில் உள்ள கருக்கு கிராமத்தில் தனது மனைவி நாகவள்ளியுடன வசித்து வருகிறார். நாகவள்ளிக்கு வயது 50. முப்பது வயதிலேயே விவாகரத்து வாங்கிக் கொண்ட மகள் ராஜேஸ்வரியும் இவர்களோடுதான் தங்கியுள்ளார்.

சென்னைவாசி என்றாலும் பழனியப்பனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. சென்னையின் விலைவாசியோ, போக்குவரத்து நெரிசலோ, ஜெயாவின் பேருந்து கட்டண உயர்வோ இவரது வெறுப்புக்குக் காரணமில்லை. நிரந்தரமான வருவாய் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. நிம்மதியைத் தேடி இவர் அடிக்கடி கோவில் கோவிலாக வெளியூருக்கு யாத்திர சென்றுவிடுவார்.

பக்தி முத்தியதாலோ அல்லது ஆன்மீக நாட்டத்தாலோ இவர் யாத்திரை செல்வதில்லை. பக்கத்து வீட்டுக்கார்களுடன்  தனது மனைவி அடிக்கடி சண்டை போடுவதை சகிக்க முடியாமல்தான் பழனியப்பன் யாத்திரை சென்றுவிடுகிறார். 

கடந்த வாரம் யாத்திரை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாரோ இல்லையோ தனது சண்டைக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என வலியுத்துகிறார் நாகவள்ளி. அதற்கு பழனியப்பன் மறுக்கிறார். அது மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர் தனது மனைவி மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது பழனியப்பனும் உடன் சென்றதாகத் தகவல். அதனால் ஆத்திரம் அடைந்த நாகவள்ளி கணவனைத் திட்டித் தீர்க்கிறார். 

பழனியப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆத்திரமடைகிறார். வீட்டில் இருந்த கடப்பாரையால் மனைவியின் மண்டையைப் பிளக்கிறார். பலத்த அடிபட்ட நாகவள்ளி சற்று நேரத்தில் மாண்டு போகிறார். பிறகு தனது மகள் ராஜேஸ்வரியையும் பழனியப்பன் கொலை செய்கிறார். 

இது கதையல்ல. கடந்த வியாழன் அன்று சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம்.

இங்கே கொலை செய்கிற அளவுக்குச் செல்வது அசாதாரணமானதுதான். ஆனால் அக்கம் பக்கத்து வீட்டாருடன் சண்டை என்பது இச்சமூகத்தில் மிகச் சாதாரணமானது.

இத்தகைய சண்டை-சச்சரவுகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது பொறாமை. 

"Neighbour's envyOwner's Pride" இது ஒனிடா (ONIDA) நிறுவனத்தின் பிரபலமான விளம்பரம். அதாவது ஒனிடா நிறுவனத்தின்  தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தப் பொருளை ஒருவர் வைத்திருந்தாலும் அது "அண்டை வீட்டுக்காரரின் பொறாமை; (பொருளின்) சொந்தக்காரரின் பெருமை" என பறை சாற்றிக் கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

இந்தப் பொறாமை அண்டை வீட்டாரோடு நிற்பதில்லை.

Neighbour என்ற ஆங்கிலச் சொல்லிற்கு -
அயலவர்; 
அருகிலுள்ளவர்; 
அக்கம் பக்கத்திலுள்ளவர்;
அண்டை வீட்டார்; 
அடுத்திருப்பவர்; 
அடுத்த தெருவினர்;
பக்க ஊரினர்; 
அண்டை நாட்டினர்
என சென்னை பல்கலைக்கழக "ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்" பொருள் கூறுகிறது.
இதில் அண்டை மாநிலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இதே Neighbour க்கு அதே சொற்களஞ்சியத்தில்
நட்புணர்ச்சியுடையவர்:
பாசமுடையவர்: 
பாசத்துக்குரியவர்
என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் Neighbour யாராக இருந்தாலும் நட்போடும் பாசத்தோடும் இருக்க வேண்டும் என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்க முடியும்.

பாசத்தோடும் நட்போடும் பழக வேண்டியவர்களை ஒனிடா வந்து பொறாமை கொள்ள வைத்துவிட்டதோ!  ஆனால் ஒனிடா பொருள் இல்லாத போதும் பொறாமை குடி கொண்டுள்ளதே,  அண்டை வீட்டாருடன் சண்டை சச்சரவுகள் நீடிக்கின்றனவே! என்ன காரணம்?


-----தொடரும்