Sunday, 23 June 2013

நடுத்தர வர்க்கத்தின் பகற் கனவு!

‘உனது தேசத்தை நேசி’ (Love your country) என்ற தலைப்பில் மின்னஞ்சல் செய்தி ஒன்று நடுத்தர வர்க்கத்தினரிடையே தற்போது பரிமாறிக் கொள்ளப்படுகிறது. அதிலிருந்து .....

“12 மாதங்களுக்கு முன்பு 1 டாலரின் மதிப்பு ரூ.43

12 மாதங்களுக்குப் பிறகு தற்போது 1 டாலரின் மதிப்பு ரூ.58

இதைப் பார்த்து இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து விட்டது என நினைக்கிறீர்களா?

இல்லை!

இந்தியப் பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

தற்போது இந்தியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. நமது நாட்டைப் போலவே பல ஆசிய நாடுகளும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்தியப் பொருளாதாரத்தை சரியான நடவடிக்கைகள் மூலம் சரி செய்யத் தவறினால், வரும் காலங்களில் மேலும் தீவிரமான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

நமது நாட்டிலேயே பயிரிடப்பட்டு, தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்கள், தின் பண்டங்கள், தேயிலை, குளிர் பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் மூலம் சுமார் 30 000 கோடி ரூபாய் அளவிற்கான அந்நிய செலாவணித் தொகை நமது நாட்டிலிருந்து வெளியே செல்கிறது.

70 முதல் 80 பைசாவிற்குத் தயாரிக்கப்படும் ஒரு குளிர் பானம் ரூ.9 க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு பெரும் தொகை இலாபமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது இந்தியப் பொருளாதாரத்தை உறிஞ்சும் மிகக் கொடிய செயல்”.

இப்படி இந்தியாவின் உண்மை நிலை கண்டு கவலை அடைந்துள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர். நடுத்தர வர்க்கம் இவ்வாறு சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒரு ஆறுதலான விசயம்தான். இதிலிருந்து இந்தியாவை எப்படி மீட்பது? அவர்களே சொல்கிறார்கள்.

“நமது நாட்டைப் பாதுகாக்க ஒவ்வொரு இந்தியனும் இந்திய நாட்டுப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பம். பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ள இன்றைய நிலையில் நாம் இதைச் செய்யவில்லை எனில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து நாம் பயன்படுத்தும் அதே பொருட்களுக்கு வரும் காலங்களில் கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும்.

நீங்கள் அதற்காக என்ன செய்ய முடியும்?

  1. இந்திய நிறுவனங்கள் தயாரித்த பொருட்களை மட்டுமே வாங்குதல்
  2. இந்த நோக்கத்திற்காக முடிந்த வரை அதிகமானோரை இணைக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் தலைவராக மாற வேண்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நமது நாட்டை பாதுகாக்க இது ஒன்றுதான் வழி. அதற்காக உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். மாற்றுப் பொருட்களை தேர்வு செய்ய வேண்டும்.

இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் எல்லா வகையான பொருட்களும் கிடைக்கின்றன.

அதன் பட்டியல் இதோ.

  • கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிராண்டா, ஸ்பிரைட் இவைகளுக்குப் பதிலாக
எலுமிச்சை சாறு, பழச்சாறு, குளிர்ந்த லஸ்ஸி - தயிர் – மோர், இளநீர், மசாலா பால் போன்ற பானங்களைக் குடிக்க வேண்டும்.

  • லக்ஸ், லைஃப்பாய், ரெக்சோனா, லிரில், டவ், பியர்ஸ், லெசான்சி, கேமே, பாமோலிவ் சோப்புகளுக்குப் பதிலாக
சிந்தால் மற்றும் கோத்ரேஜ் நிறுவனத் தயாரிப்புகள், சந்தூர், விப்ரோ சீகைக்காய், மைசூர் சான்டல், மார்கோ, நீம், எவிட்டா, மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா, சந்திரிகா சோப்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கோல்கேட், குலோசப், பெப்சோடெண்ட், சிபாகா, போர்ஹான்ஸ், மென்டாடெண்ட் பற்பசைகளுக்குப் பதிலாக
நீம், பபூல், பிராமிஸ், வீக்கோ வஐ்ரதந்த்தி, புரூடெண்ட், டாபர், மெஸ்வாக் போன்ற இந்திய பற்பசைகளைப் பயன்படுத்துங்கள்.

  • பல் துலக்க கோல்கேட், குலோசப், பெப்சோடெண்ட், ஓரல்-பி பிரஷ்களுக்குப் பதிலாக
புரூடெண்ட், அஜந்தா, பிராமிஸ் பிரஷ்களைப் பயன்படுத்துங்கள்.

  • பாமோலிவ், ஓல்டு ஸ்பைஸ், ஜில்லெட் கிரீம்களுக்குப் பதிலாக
கோத்ரேஜ், இமாமி சேவிங் கிரீம்களைப் பயன்படுத்துங்கள்.

  • முகச்சவரம் செய்வதற்கு செவன்-ஓ–கிளாக், 365, ஜில்லெட் பிளேடுகளுக்குப் பதிலாக
சூப்பர்மாக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா பிளேடுகளைப் பயன்படுத்துங்கள்.

  • முகத்திற்கு பாண்ட்ஸ், ஓல்டு ஸ்பைஸ், ஜான்சன் பேபி பவுடர், வர் டு வர் பவுடர்களுக்குப் பதிலாக
சந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோ பிலஸ் போன்ற பவுடர்களைப் பயன்படுத்துங்கள்.

  • அனிக்ஸ்பிரே, மில்கானா, எவரி் டே மில்க், மில்க்மெயிட் பால் பவுடர்களுக்குப் பதிலாக
இன்டியானா, அமுல், அமுல்யா பால் பவுடர்களைப் பயன்படுத்துங்கள்.

  • ஹாலோ, ஆல்கிளியர், நைல், சன் சில்க், பேன்தீன், ஷாம்புகளுக்குப் பதிலாக
லேக்மி, நிர்மா, வெல்வெட் போன்ற ஷாம்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கைபேசிகளுக்கு ஹட்சுக்குப் பதிலாக
பிஎஸ்என்எல், ஏர்டெல் இணைப்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • கேஎப்சி, மேக்டோனால்ட்ஸ், பிசா ஹட், எ&டபிள்யூ உணவுப் பொருட்களுக்குப் பதிலாக
தந்தூரி, சிக்கன், இட்லி, தோசை, உப்புமா உணவுகளை உட்கொள்ளுங்கள்.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும். அது இந்தியாவை காப்பாற்றும். இன்றே அதற்காக உறுதியாக ஒரு முடிவை எடுப்போம்”.

இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குவதன் மூலம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் 30 000 கோடி ரூபாயை தடுத்து நிறுத்தி இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியும் எனக் கனவு காண்கின்றனர்.

“நமது நாட்டை பாதுகாக்க முயல்கிறோம். ஒவ்வொரு நாளும் சுதந்திரத்திற்கான போராட்ட நாளாகும். பலரை பலி கொடுத்துதான் நாம் சுதந்திரம் வாங்கினோம். நாம் அமைதியாக வாழ்வதற்காகத்தான் அவர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துவதாக உள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தை உலக மயமாக்குவது என்கின்றனர் பன்னாட்டு நிறுவனங்கள். உங்களையும் என்னையும் போன்ற இந்தியர்களுக்கு இது நாட்டை மறுகாலனியாக்குவதாகும். அப்போது காலனியவாதிகள் இந்தியாவை விட்டுச் சென்றார்கள். ஆனால் இந்த முறை அவர்கள் தவறு ஏதும் செய்யமாட்டார்கள். அது பொன் முட்டை இடும் வாத்தாக இருந்தாலும் வெளியெ போகச் சொல்கிறோம்.

பொருளாதாரச் சுதந்திரம் இல்லாமல் அரசியல் சுதந்திரம் மட்டும் இருப்பது பயனற்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரசியா, தென் கொரியா, மெக்சிகோ போன்ற நாடுகளின் பட்டியல் மிக நீளமானது. அவர்களின் அனுபவங்களிலிருந்தும் நமது வரலாற்றிலிருந்தும் நாம் பாடம் கற்க வேண்டும். உண்மையான இந்தியனாக இருந்து நமது கடமையைச் செய்வோம்”.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்திருப்பது வெறும் வணிக நோக்கம் கொண்டது மட்டுமல்ல அது இந்தியாவை மறுகாலனியாக்குகின்ற நோக்கமாகும் என்பதை நடுத்தர வர்க்கத்தினர் புரிந்து வைத்திருந்தாலும் அதற்கு இந்திய அரசு கடைபிடிக்கும் உலக மயம் – தனியார் மயம் - தாராள மயம் என்கிற கொள்கைகள்தான் காரணம் என்பதை உணரத் தவறுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அகலக் கதவைத் திறந்துவிடும் அரசாங்கத்தை தூக்கி எறியாமல் நாடு மேலும் மேலும்  அடிமையாவதை தடுத்து நிறுத்த முடியாது என்பதையும் உணர மறுக்கின்றனர். நாடாளுமன்ற வாக்குச்சீட்டு அரசியல் கட்சிகள் அனைத்துமே இக்கொள்கைகளில் ஒன்றுபடுகின்றனர் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இத்தகைய அரசியல் புரிதல் இல்லாத காரணத்தினால்தான்

“இந்தியனாக இரு இந்தியப் பொருட்களையே வாங்கு! என்று சொல்லும் அதே வேளையில் வெளிநாட்டுப் பொருட்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாம். நாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரிகள் அல்ல”. என பல்டி அடிக்கின்றனர்.

மேலும் இவர்களே முன்வைக்கும் கோரிக்கைகளில் கூட இவர்களால் உறுதியாக நிற்க முடியவில்லை. அதனால்தான்

“பட்டியலிடப்பட்டுள்ள எல்லா அந்நிய நாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் உங்களால் கைவிட முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் ஒரு பொருளையாவது கைவிடுங்கள்”.

என தங்களால் முடியாது என முடிவு செய்து கொண்டு கடைசியில் ஒரு பொருளையாவது கைவிடுங்கள் என கெஞ்சுகிறார்கள்.

“விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதை பரப்புங்கள். தயை கூர்ந்து இந்தியனாக இருக்க முயலுங்கள். உண்மையான இந்தியன் இதை பரப்ப வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம். இந்தியாவை நேசிப்போம்.”

எனக்கூறி தேசப்பற்றை நெஞ்சு கூட்டிற்குள் அடைக்க முயல்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்கள் சமீபத்தில் இமயத்தையே உலுக்கிய பெரு வெள்ளம் போல் ஆர்ப்பரித்தால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களும், அவர்களைக் காக்கும் அரசுகளும் சுக்கு நூறாக உடைந்து நொறுங்கி சின்னாபின்னமாகி மண்ணில் புதையுண்டு போவார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் போராட்டங்களை கணக்கில் கொள்ளாமல் நடுத்தர வர்க்கம் முன்வைக்கும் சிறு துளி பெரு வெள்ளம் என்கிற “குறைந்த பட்சம் ஒரு பொருளையாவது கைவிடுங்கள்” என்கிற சிந்தனைப் போக்கு மறு காலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப் போகவே செய்யும்.

தொடாபுடைய பதிவுகள்:

Sunday, 9 June 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... இறுதிப் பகுதி


பாடலில் பொருள் இல்லை என்றாலும் ஒரு சில பாடகர்களின் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றும். அந்த அளவிற்கு அவர்களின் குரல் வளம் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். சிறந்த குரல் வளம் உள்ள பாடகர்களை பிறவிப் பாடகர்கள் என்று சொல்வதை நாம் கேள்விப்படத்தானே செய்கிறோம். அவ்வாறு சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. பயிற்சியின் மூலம் இசை நுணுக்கங்களை கற்றுக் கொண்டாலும், குரல் வளம் சரியாக அமையவில்லை என்றால் ஒரு சிலரின் பாடல்கள் நம்மை ஈர்ப்பதில்லை. இசை நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாமல் சிறந்த குரல் வளத்தைக் கொண்டிருந்தாலும் ஒருவர் சிறந்த பாடகர் ஆகிவிட முடியாது. அதற்கு இசை நுணுக்கங்கள் குறித்த அறிவும், பயிற்சியும் தேவை. ஒரு சிலரின் குரல் வளம் சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பிறவியிலேயே அவர்களுக்கு அமைந்திருக்கும் குரல்வளை அதிர்வு நாளங்கள்தான் (vocal chord).

குரல்வளை அதிர்வு நாளங்கள் சரியாக அமையாததால்தான் ஒரு சில ஆண்கள் பெண்களைப் போன்ற குரல் அமைப்பையும், ஒரு சில பெண்கள் ஆண்களைப் போன்ற குரல் அமைப்பையும் கொண்டிருக்கின்றனர். பெண்களின் குரல் மெண்மையானதாகவும், ஆண்களின் குரல் தடிமனானதாகவும் நமக்கு பதிவாகிவிட்டதால்தான் மாறுபட்ட குரல் அமைப்பைக் கொண்டோரை நாம் பரிகாசத்தோடு பார்க்கிறோம். பெண்களின் குரல் அமைப்பு ஆண்களிடமும், ஆண்களின் குரல் அமைப்பு பெண்களிடமும் இருந்திருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டுதான் இருப்போம்.

இப்படி பிறப்பால் தீர்மானிக்கப்படுகின்ற பல்வேறு அம்சங்களை உடல் கட்டமைவு சார்ந்த கூறுகளாகக் கொள்ளலாம். இவைகள் சாதி – மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவாக அமைகின்ற அம்சங்களாகும்.

சாதி - மதம் சார்ந்த அடையாளங்களும் பண்புகளும்

ஒரு மனிதன் தனது வளர்ச்சிப் போக்கில் சாதி – மதம் உள்ளிட்டு தான் சந்திக்கின்ற பல்வேறு விசயங்கள் குறித்து, பல்வேறு விதமான பண்புக் கூறுகளை தனதாக்கிக் கொள்கிறான். அதற்கேற்றவாறு சில புறத் தோற்ற அடையாளங்களையும் ஒருவன் ஏற்படுத்திக் கொள்கிறான்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம், மடிசார் புடவை போற்ற அடையாளங்கள் ஐயர் – ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களின் அடையாளங்களாகவும்; இடப்புற சேலை மாராப்பு இடையர் குலப் பெண்களின் அடையாளமாகவும் இன்றளவும் நீடிக்கின்றன. இத்தகைய அடையாளங்கள் ஒருவன் தான் சார்ந்திருக்கின்ற சாதி மற்றும் மதத்தைப் பொருத்து மாறுபடுகின்றன. அவன் தன்னை இவ்வாறு அமையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்ளும் மனநிலையையும் வளர்த்துக் கொள்கிறான்.

இந்து மத ஆண்கள் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்துக் கொள்வதும் பெண்கள் பூவும், பொட்டும், தாலியுமாக இருப்பதும் இந்து மத அடையாளங்களாக தொடர்கின்றன. இதில் ஆண்கள் முன்ன – பின்ன இருந்தாலும் பெண்களின் அடையாளங்கள் அவசியம் என அன்றாடம் உணர்த்தப்படுகிறது. இவற்றை மீறுவது பெண்மைக்கு அழகல்ல என்கிற மனநிலைக்கு மக்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தான் பழகுகிற மனிதர்கள், படிக்கிற நூல்கள், பார்க்கிற சம்பவங்கள் மூலம் பெறக்கூடிய கருத்துக்களை சுயபரிசீலனை செய்வதன் மூலம் ஒரு சிலர் சாதி – மத வட்டத்திற்கு புறம்பான அல்லது நேர் எதிரான சில பண்புகளை வளர்த்துக் கொள்வதும் உண்டு. இத்தகையவர்களே பகுத்தறிவாளர்களாக - சீர்திருத்தவாதிகளாக அறியப்படுகிறார்கள். மற்றபடி ஆகப் பெரும்பான்மையினர் தாங்கள் சார்ந்திருக்கிற சாதி மற்றும் மத வட்டத்திற்கு ஏற்புடைய பண்புகளையே கொண்டிருக்கின்றனர்.

மனம் சார்ந்த தனி மனிதப் பண்புகள்

மேலும் ஒவ்வொருவனும் சுயேச்சையான சில தனி மனிதப் பண்புகளையும் கொண்டிருக்கிறான்.இவைதான் ஒருவனை மற்றவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட உதவுகின்றன.

சாதி - மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றுபட்டிருக்கும் அதே வேளையில் தனிமனிதப் பண்புகளில் வேறுபட்டே காணப்படுகின்றனர்.

சமூகத்தில் நிலவும் அரசியல் – பொருளாதார – பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்பவும், ஈடுபடும் தொழிலுக்கு ஏற்பவும் ஒவ்வொரு தனிமனிதனும் சில தனி மனிதக் குணங்களை வளர்த்துக் கொள்கிறான்.

இது கோபக்காரர்கள் நிறைந்த உலகம். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு காட்டாமல் வாழ்வதென்பது அரிதாகிவிட்டது. இந்த வெறுப்பு தனி மனிதன் சார்ந்த வெறுப்பாகவோ அல்லது சாதிமதம்இனம்தேசம் சார்ந்த வெறுப்பாகவோ இருக்கிறது.

இருட்டில் இருக்கப் பயம், தனியாக இருக்கப் பயம், விலங்குகளைக் கண்டு பயம், பறவைகளைக் கண்டு பயம், மரணத்தைக் கண்டு பயம், நோயை நினைத்தால் பயம், தண்ணீரைப் பார்த்தால் பயம், வேலையைக் கண்டு பயம் என பலர் பயபீதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

எதிலும் நாட்டமின்றி வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும், எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவதும், சிடுசிடுப்பாக நடந்து கொள்வதும், எளிதில் சீற்றமடைவதும், முரட்டுத்தனமாய் இருப்பதும், பிறர் மீது பொறாமை கொள்வதுமாய் பலர் இருப்பதையும் நாம் காண்கிறோம்.

பக்திப் பரவசமாய் இருப்போரும், காமக் குரோதத்துடன் நடந்து கொள்வோரும் நம்மைச் சுற்றிதான் வாழ்கின்றனர்.

படு கஞ்சத்தனமும், சுயநலமும் நம்மைச் சுற்றிதான் உலவுகின்றன.

வாயடிப்போரும், பேசா மடந்தைகளும், நாணுவோரும், அழுமூஞ்சிகளும் நம் அக்கம் பக்கத்தில்தான் வாழ்கின்றனர்.

ஒருவன் தனது வாழ்க்கையின் போக்கில்தான் இத்தகைய மனம் சார்ந்த குணங்களை (mind symptoms) வளர்த்துக் கொள்கிறான்.

அதுபோலத்தான் காதல், வாடகை வீடு, கோவில் வழிபாடு, பொதுக்குழாய் – கிணற்று நீர் போன்றவற்றில் கடைபிடிக்கப்படும் சாதித் தீண்டாமை, உணவு – மொழித் தீண்டாமை, பூணூல் உள்ளிட்ட சாதி மத அடையாளங்களை அணிந்து கொள்வதிலும் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதிலும் பெருமிதமடைதல், அடக்கி ஆள வேண்டும் என்கிற ஜனநாயகத்திற்கு எதிரான ஆதிக்க மனநிலை, இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் மீதான காழ்ப்புணர்ச்சி, ஜாதகம் – ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை, சடங்குகள் – சம்பிரதாயங்களை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பார்ப்பனிய பண்புகளையும், குணங்களையும் ஒருவன் வளர்த்துக் கொள்கிறான்.

எனது பார்ப்பனத் தோழி ஐந்து வயதிலிலேயே மாமியானது இப்படித்தான்? அவள் முதல் வகுப்பைத் தாண்டும் போதே பார்ப்பனியத்தை கைப்பற்றிக் கொள்கிறாள். இப்படித்தான் ஒவ்வொரு சாதியைச் சார்ந்த மற்றும் மதத்தைச் சார்ந்த குழந்தைகளும் அந்தந்த சாதி, மதத்திற்கான குணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். சாதிகளும், மதங்களும் நிறுவனங்களாய் அதாவது அமைப்புகளாய் இருப்பதனால் அத்தகைய அமைப்புகளுக்குள் ஒருவர் இருக்கும் வரை அதன் பண்புகளையும் குணங்களையும்தான் கொண்டிருக்க முடியும்.

எங்க லேங்வேஜ கிண்டல் பண்றீங்காளா? இரு எங்கப்பாகிட்ட சொல்றேன்?” என கோபத்தோடு எழுந்து சென்ற போதுஅடியேய்! எங்கள பார்க்க வருவீயாடி?” என எனது துணைவியார் கேட்ட போதுஎங்க மாமா வீட்டுக்கு எப்பவாவது வருவோம். அப்படி வரும்போது நேரம் கெடச்சா, ஆண்ட்டி! உங்கள மட்டும்தான் வந்து பார்ப்பேன். இந்த அங்க்கிள கண்டிப்பா பார்க்க மாட்டேன்என்று சொன்னவள் மீண்டும் வருவாள்; அவள் மடிசார் மாமியானது பற்றி புரிய வைக்க!

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...

முற்றும்.
நன்றி!
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


Tuesday, 28 May 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 11


உடல் கட்டமைவு

நமது தோல்பட்டையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரத்தை முழங்கையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரத்தைக் கொண்டு  வகுக்கும் விகிதமும், இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தை முட்டியிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தைக் கொண்டு  வகுக்கும் விகிதமும், தலை உச்சியிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தை தொப்புளிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தைக் கொண்டு  வகுக்கும் விகிதமும் ஒன்றாகவே இருக்கும். அது போல உடலின் இதர கட்டமைப்புகள் இதே விகிதத்தில் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதை உறுதிப்படுத்துவதற்காக லியார்னடோ டா வின்சி அவர்கள் சுடுகாட்டிற்கே சென்று மனித எலும்புகளை ஆய்வு செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

உதாரணத்திற்கு முழங்கையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரம் 1 அடி நீளம் என்றால் தோல் பட்டையிலிருந்து விரல் நுனிவரை உள்ள தூரம் 1.618 அடி நீளம் இருக்குமாம். இந்த விகிதத்தை ஆங்கிலத்தில் கோல்டன் ரேஷியோ (golden ratio) என்கிறார்கள். கணிதத்திலும், தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட பலவற்றிலும் இந்த விகிதம் பொருந்துவதாகச் சொல்கிறார்கள். இந்த விகிதத்தில் இருந்தால்தான் அது சரியான கட்டமைப்பாகும். இதைத்தான் ‘பையன் நல்லா வாட்ட சாட்டமா இருக்கான்’ ‘பொண்ணுக்கு குறை ஏதும் இல்ல, லட்சணமா இருக்கா’ என்கிறார்களோ!

இடுப்பிலிருந்து தலை வரை உள்ள நீளம் அதிகமாவும் இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள நீளம் குறைவாகவும் இருக்கும் நபர்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இவர்கள் 1:1.618 விகிதத்திலிருந்து மாறுபட்டவர்கள். இத்தகைய உடல் அமைப்பு உள்ளவர்களை மிக எளிதில் அடையாளம் காண முடியும். இத்தகைய உடல் கட்டமைப்பு பிறப்பின் அடிப்படையிலேயே அமைகிறது.

மொட்டை மூக்கு, சப்ப மூக்கு, கொக்கி மூக்கு, யானைக் காது, ஏறுன நெற்றி, முட்டைக் கண், பூனைக் கண், ஒண்ற கண், கோண வாய், கூன் முதுகு, கப்பக் கால், குட்டை – நெட்டை என உடல் கட்டமைப்பில் குறை காண்போரும் உண்டு.

‘கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என ஒரு பெண்ணால்தான் பாட முடிகிறது. ஆனால் கனவுலகில் கருப்பழகி கிளியோபாட்ராவை காதலிப்பவன் நிஜ உலகில் கருப்பைக் கண்டு விலகுகிறான். தோலின் நிறத்திற்கு வந்த கேடு இது. தோலின் நிறம் பிறப்பால் தீர்மானிக்கப்பட்டாலும் சிவப்புத் தோலில் உயர் சாதி பெருமிதத்தைத் தேடுவதும், கருப்புத் தோலில் தீண்டாமையை பார்ப்பதும் இன்றும்கூட இருக்கத்தானே செய்கிறது.

மேற்கண்ட உடல் அமைப்பு உள்ளவர்கள் திருமணச் சந்தையில் விலை போவது மிக மிகக் கடினம். பெண்ணாய் இருந்தால் ‘ஒரே பொண்ணு, சொத்து வேற நிறைய இருக்கு, எல்லாம் நம்ம பையனுக்குத்தானே! பொண்ணு முன்ன பின்ன இருந்தா என்ன?’ என சமாதானமடைவதும், அதுவே ஆணாய் இருந்தால் ‘பரவாயில்ல, கை நிறை சம்பாதிக்கிறான், ஒரே பையன், சொத்து வேறு இருக்கு, கெட்ட பழக்கம் எதுவுமில்ல, நம்ம பொண்ணுக்கு இவன விட்டா வேற எவன் கெடைப்பான்’ என சமாதானமடைவதும் இன்றைய சந்தை நிலவரம்

அன்று சிவப்பாய் - மூக்கு கூராய் இருந்தால் ஒருவரை பார்ப்பனர் என எளிதில் அடையாளம் காண முடிந்தது. ஆனால் இன்று சிவப்பாய் உள்ள கூர் மூக்கு ‘திராவிடர்’களையும், கருப்பாய் உள்ள மொட்ட மூக்கு ‘ஆரியர்’களையும் பார்க்கிறோம். இது இரண்டாயிரம் ஆண்டு இனக்கலப்பின் விளைவு.

ஒரு குறிப்பிட்ட இனத்தினர் பிற இனத்தினரோடு இனக் கலப்புக்கு உட்படாதவரை அந்த இனத்தினரின் புறத்தோற்றம் ஒன்று போல தோன்றும். மேலும் ஒரு மனிதனின் புறத்தோற்றத்தை நுணுகிப் பார்க்கும் போது அவன் தன்னளவில் அதே இனத்தைச் சேர்ந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதையும் காண முடியும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தை அப்பாவைப் போலஅம்மாவைப் போல - தாத்தா / பாட்டியைப் போல அல்லது மூதாதையர்களின் அம்சங்களை உள்ளடக்கியது போல புறத்தோற்றத்தில் இருப்பதை பரம்பரைத் தன்மை என்கிறோம்.

அக்குழந்தை வளர வளர அதன் உயரம், பருமன், நடை, உடல் அசைவு (gesture) ஆகியவை மூதாதையர்களின் ஏதாவதொரு அம்சங்களைக் கொண்டிருப்பதையும் காண முடியும். ஆனால் இத்தகைய அம்சங்களும் உடல் உழைப்பின் தம்மைக்கேற்ப நாளடையில் மாற்றமடைகின்றன.

வெயிலிலேயே உழன்ற ஒரு பரம்பரை கருப்பாய்த் தோன்றுவதும், பிறகு வசதி வாய்ப்புகள் கிடைத்த பிறகு வெயில் படாமல் வாழும் இவர்களின். எதிர்காலத் தலைமுறையினரின் தோலின் நிறம் மாறுதலடைவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இனக் கலப்பின் மூலமாகவும் புறத்தோற்றத்தின் சில அம்சங்கள் மாறுதலடைகின்றன.

உழைப்பின் தன்மையும் மனிதர்களின் புறத்தோற்றத்தை மாற்றி அமைக்கின்றன. கடுமையான உழைப்பில் ஈடுபடும் குழந்தையின் புறத்தோற்றமும், உழைப்பில் ஈடுபடாத குழந்தையின் புறத்தோற்றமும் அக்குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் ஒன்றுபோல இருப்பதில்லை. மேலும் குழந்தைகளின் உணவு முறையும் புறத்தோற்றத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.

மேற்கூறப்பட்ட யாவும் ஒரு மனிதனின் உடற்கட்டமைவு (body constitution) சார்ந்த அம்சங்களாகும். இவை ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து அடையாளப்படுத்த உதவுகின்றன. இத்தகைய அம்சங்கள்கூட எப்பொழுதும் தொடர்ந்து ஒரே மாதிரி இருப்பதில்லை. இயக்கப் போக்கில் மாறுதலடைகின்றன.

தொடரும்.....

தொடர்புடைய பதிவுகள்:


Thursday, 23 May 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 10


சுயசாதிப் பற்று

அரசின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் இருப்பதால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் தங்கள் சாதியினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதற்காகத்தான் பிற சாதியினர் பார்ப்பனர்களை எதிர்க்கிறார்களே ஒழிய பார்ப்பனியத்தை ஒழிப்பதற்காக அல்ல. பார்ப்பனர்களைப் போலவே பிற சாதியினரும் அத்தகைய உயர் பதவிகளுக்கு வந்த பிறகு தங்கள் சாதியினருக்கே முன்னுரிமை தருகின்றனர். பார்ப்பனரோ பிற சாதியினரோ, இவர்கள் தங்கள் சாதிக்காரர்களை மேலே கொண்டு வருவதற்காக சகல தில்லு முல்லுகளையும் கடைபிடிக்கின்றனர்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும், ஏன் தனியார் நிறுவனங்களிலும் கூட இதுதான் நடைமுறை.  ஓராண்டு ‘அப்ரண்டிஸ்’ பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதில்கூட இதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. ஒரு பக்கம் நீதி – நியாயம் பேசிக் கொண்டே மற்றொரு புறம் அதற்குப் புறம்பாகத்தான் நடந்து கொள்கின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால்தான் வேலை “வாய்ப்பில் ‘பேக்லாக்கை’ நிரப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமுல் படுத்து” என தாழ்த்தப்பட்டோர் நலச்சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. நெறிமுறைகளுக்கு முரணாக பார்ப்பனர்கள் தங்களது சாதிக்காரர்களுக்கு சலுகை காட்டுவது மட்டும் பார்ப்பன புத்தி என்றால் பிறசாதிக்காரர்கள் தங்களது சாதிக்காரர்களுக்கு இதே போன்று நெறிமுறைகளுக்கு முரணாக சலுகை காட்டுவது பார்ப்பனிய புத்தியாகாதா? இல்லை என்றால் இந்த புத்திக்கு என்ன பெயர்?

ஒவ்வொரு சாதியினரும் பல விசயங்களில் தங்களின் சுயசாதிப் பற்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுதான் பிற சாதியினரை வசைபாடி வருகின்றனர். இது பார்ப்பனியத்தின் மற்றொரு அம்சம். சமூகத்தின் மீது எவ்வித அக்கறையும் இல்லாதவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது ஆச்சரியத்துக்கு உரியதல்ல. ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிரானவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு சமூக நீதிக்காகப் போராடுவதாக சொல்லிக் கொள்ளும் தமிழினவாதிகள், 'தலித்'தியவாதிகள், பெண்ணியவாதிகள், திராவிடவாதிகள், போலிப் பொதுவுடமைவாதிகள் என பலரும் தங்களது சொந்த வாழ்க்கையில் பார்ப்பனியத்தின் அம்சங்களை கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இடதுசாரி அரசியலில் தீவிரத்தன்மையுடன் இருக்கும் ஒரு நண்பர், ‘செம்மலர்’ என தனது மகளுக்கு பெயர் சூட்டியவர் இன்று ‘திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரத்திம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள்ளாக மிதுன லக்கினத்தில்’தான் தனது மகளுக்கு திருமணத்தை செய்து முடிக்கின்றார்.

சேரிகளை ஆக்கிரமிக்கும் பார்ப்பனியம்

முன்பெல்லாம் பார்ப்பனர்களை அழைக்காமல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது குடும்ப நிகழ்சிகளை நடத்தி வந்தனர். ஆனால் இன்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவது முதல் இறப்பிற்குப் பிறகு செய்யப்படும் காரியம் வரை பார்ப்பனர்களை அழைத்து வந்து சடங்குகள் சம்பிரதாயங்களை நடத்துவது அதிகரித்து வருகிறது. இது கிராமங்களில் வேண்டுமானால் தற்போதைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நகர்புறங்களில் இன்று இது மிகச் சாதாரணமாகிவிட்டது. பார்ப்பனியம் மெல்ல மெல்ல சேரிகளையும் ஆக்கிரமித்து வருகிறது.

மொத்தத்தில் ஐயர் முதல் அருந்ததியர் வரை பகுதியாகவோ அல்லது முழமையாகவோ பார்ப்பனியம் வேர் பிடித்து நிலைபெற்றுள்ளது. ஒட்டு மொத்தத் தமிழனும் பார்ப்பனியத்தில் ஐய்க்கியமாகிவிட்ட பிறகு ‘தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு’ என்பது இன்றைக்குப் பொருந்துமா எனக் கேட்கத் தோன்றுகிறது. அதற்காக பார்ப்பனியம் தமிழனின் பிறவிக்குணம் என வரையறுத்துவிட முடியுமா என்ன?

தொடரும்.....




Monday, 20 May 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 9


தொட்டால் தீட்டு

தீண்டாமைதான் பார்ப்பனியத்தின் மிக முக்கியமான கூறு. தீண்டாமையை ஆங்கிலத்தில் untouchable என்கிறார்கள். தீண்டுதல் என்றால் தொடுதல், மீறி தொட்டு விட்டால் தீட்டாகிவிடும் என்பதுதான் இதன் நேரடி பொருள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து வசதிகள் மேம்படாத காலத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவனின் உடை காற்றில் அசைந்து தங்கள் மேல் பட்டுவிட்டாலே தாங்கள் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதினார்கள் பிற மேல்சாதியினர். இப்படித் தீட்டுப்பட்டுவிட்ட மேல் சாதியினர் தீட்டோடு தங்கள் வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். வீட்டை நெருங்கும் போது குழந்தைகள் பாசத்தோடு ஓடிவந்து அணைக்க முயலும் போது “தொடாதே!” என ஒதுங்கிக் கொள்வார்கள். தன்னைத் தொட்டு விட்டால் குழந்தையும் தீட்டுப்பட்டு விடுமாம். அதனால்தான் இத்தனை எச்சரிக்கை.

பிறகு பின்வாசல் வழியாகச் சென்று உடுத்தியிருக்கும் ஆடைகளைக் களையாமல் குடம் குடமாய் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்ட பிறகுதான் வீட்டிற்குள் நுழைவார்கள். உடுத்தியிருந்த ஆடைகளை நனைக்காமல் கழற்றி போட்டுவிட்டு குளித்தால் நனைக்கப்படாத துணியில்கூட தீட்டு ஒட்டிக் கொண்டிருக்குமாம். அதனால்தான் உடுத்திய உடையோடு தலை முதல் பாதம் வரை தண்ணீரால் கழுவுகிறார்கள். சாவுக்குச் சென்று வந்தவன் என்ன செய்கிறானோ அதைத்தான் ஒரு தாழ்த்தப்பட்டவனின் துணி தன்மேல் பட்டுவிட்டதற்கும் செய்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவனை பிணத்துக்குச் சமானமாகத்தான் பார்க்கின்றனர்.

தனது துணியின் நுனி ஒரு உயர்சாதிக்காரன் மீது பட்டுவிட்டது என்பது மட்டும்தான் அந்தத் தாழ்த்தப்பட்டவனுக்குத் தெரியும். ஆனால் தீட்டுக் கழிப்புகள் எப்படி நடக்கின்றன என்பதை அவன் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. தீண்டாமை எத்தனைக் கொடியது என்பதை அவன் இன்னமும் முழமையாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் இச்செயல்கள் உணர்த்துகின்றன. ஒரு தாழ்த்தப்பட்டவனின் உடையின் ஒரு நுனி தன்மேல் பட்டுவிட்டதற்கே இத்தனை தீட்டுக்கழிப்புகள் நடத்தும் பிற மேல் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை மற்ற விசயங்களில் எப்படி நடத்தியிருப்பார்கள் / நடத்துகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. குடம் குடமாய் தலையில் ஊற்றுவதற்குத் தண்ணீர் இல்லை என்றால் தலையில் தண்ணீர் தெளித்துவிட்டு ஆடைகளை மாற்றிக் கொண்டு தீட்டுக் கழிப்போரும் உண்டு.

இன்று போக்குவரத்து வசதிகள் கிராமம் வரை செய்யப்பட்டுள்ளன. எல்லாச் சாதியினரும் ஒரே பேருந்தில் ஒட்டி உரசிக் கொண்டு பயணிக்கிறார்கள். முன்பு துணியின் நுனி பட்டதற்கே தலை முழுகியவன் இன்று இவன் வேர்வையும் அவன் வேர்வையும் ஒன்று கலந்தாலும் அவ்வாறு தலை முழுகுவதில்லை. அப்படியானால் தீண்டாமை ஒழிந்துவிட்டதா? இது போன்ற சில மாற்றங்களை வைத்துதான் “இப்பவெல்லாம் யாரு சார் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்?” என்று பலரும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். 

வாடகை வீட்டில் தீட்டு

ஐயர் முதல் அகமுடையர் வரை சாதியைக் கேட்காமல் நகரங்களில் வாடகைக்கு வீடு தருகிறார்களா? எதற்காக முன்கூட்டியே சாதியைத் தெரிந்து கொள்கிறார்கள்? வாடகைக்கு வருபவன் தாழ்த்தப்படவனாக இருந்தவிடக்கூடாது என்பதால்தானே? இது தீண்டாமை இல்லையா? கிராமங்களில் சேரிகள் தனியாக இருப்பதனாலும், தாழ்த்தப்பட்டவர்கள் வாடகை வீடு தேடுவதற்கான தேவை இல்லை என்பதனாலும் வாடகை வீட்டுத் தீட்டு கிராமங்களில் இருக்க வாய்ப்பில்லை.

பரோடா மன்னரால் மாநிலத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தில் அம்பேத்கருக்கு பயிற்சியாளர் வேலை கிடைத்த போது அவர் ஒரு பயணிகள் விடுதியில் தங்குகிறார். அது பார்சிகள் தங்கும் விடுதி. தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் விடுதியில் தங்க இடம் தரமாட்டார்கள் என்பதால் தன்னை ஒரு பார்சி எனக்கூறியதால்தான் அவருக்கு அங்கே இடம் கொடுத்தார்கள். ஆனால் சில நாட்களில் பார்சிகள் இதைத் தெரிந்து கொண்டு அவரை அடிக்க வந்த போது “இன்னும் ஒரு வாரமாவது தங்க அனுமதியுங்கள்” எனக் கெஞ்சிக் கேட்கிறார். ஆனால் பார்சிகள் அதற்கு இடம் தரவில்லை.

அதன் பிறகு தனது நெருங்கிய நண்பர்களான ஒரு இந்துவையும், ஒரு கிருஸ்தவரையும் அணுகி அவர்களது வீட்டில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி கோருகிறார். ஒரு தாழ்த்தப்பட்டவரை வீட்டில் அனுமதித்தால் வேலையாட்கள் வெளியேறி விடுவார்கள் என்பதற்காக அந்த இந்து நண்பரும், பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த பழைமைவாதி என்பதால் தனது மனைவி ஒரு தாழ்த்தப்பட்டவரை வீட்டில் அனுமதிக்கமாட்டார் என அந்தக் கிருஸ்தவ நண்பரும் கைவிரித்துவிட அன்று இரவே ஊரைக் காலி செய்துவிட்டு பம்பாய்க்குப் பயணமாகிறார் அம்பேத்கர்.

“இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்” என 1916 ல் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வேதனையோடு பதிவு செய்கிறார் அம்பேத்கர். கிட்டத்தட்ட நுறு ஆண்டுகள் முடியப் போகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாடகை வீடு தருவதில் அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. தீண்டாமை எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது?

கோவில்களில் தீட்டு

கோவில்களில் நுழைய தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதில்லையே ஏன்? அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் என்ன நடந்து விடும்? கோவில் இடிந்து விழுந்து விடுமா? அல்லது கோவிலில் வீற்றிருக்கும் சாமி கோபித்துக் கொண்டு வெளியேறிவிடுமா? “இது எங்க கோவில், வேண்டுமானால் அவர்கள் தனியாக கோவில் கட்டிக் கொள்ளட்டுமே, ஏன் இங்கே வர வேண்டும்?” என்று கேட்கிறார்களே இதில் தீண்டாமை இல்லையா?

தண்ணீரில் தீட்டு

அம்பேத்கர் உள்ளிட்ட சுமார் 30 பேர் வேருலிலுள்ள புத்த சமயக் குகைகளைப் பார்க்க அவர்கள் தவுலாதாபாத் நகரைக் கடந்து பிறகு அவுரங்காபாத் வழியாகச் செல்ல வேண்டும். தவுலாதாபாத் கோட்டை மிகவும் பிரபலமானது என்பதால் அதைப் பார்ப்பதற்காகச் செல்கிறார்கள். இவர்களோடு உள்ளூர் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்து செல்கின்றனர். பயணக் கலைப்பைப் போக்க கோட்டை வாயிலுக்கு வெளியே நீர் நிரம்பியிருந்த குளத்தில் முகத்தையும் கால்களையும் கழுவிக் கொண்டு கோட்டை வாயிலுக்குச் சென்ற போது ஒரு வயதான வெள்ளைத் தாடியுடன் கூடிய முகமதியர் “தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டார்கள்” என்று கூப்பாடு போடுகிறார். அந்த முதியவரோடு பல இளம் முகமதியர்கள் சேர்ந்து கொண்டு “இந்தக் குளத்தை தீண்டத்தகாதவர்கள் உபயோகிக்கக்கூடாது என்பதை நீங்கள் ஏன் வெளியூர்க்காரர்களுக்குச் சொல்லவில்லை?” எனக் கொலை வெறியோடு உள்ளூர் தாழ்த்தப்பட்டவர்களை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்ததோடு மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தார்கள். அதன் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டாலும் எந்தத் தண்ணீரையும் அவர்கள் தொட்டுவிடக்கூடாது என்பதை கண்காணிக்க கூடவே ஆயுதந்தாங்கிய சிப்பாய் ஒருவனை அனுப்பி வைக்கிறார்கள்.

“ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவனே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டும்” என 1934 ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

இஸ்லாமியர்களே இப்படி என்றால் இந்துக்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?. எண்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் பொதுக் கிணற்றிலும், பொதுக் குழாயிலும் தண்ணீர் பிடிப்பதற்கு இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே.ஏன்?  தீண்டாமை எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது?

காதலில் தீட்டு

பிற உயர் சாதிக்காரர்கள் தங்கள் சாதிகளுக்குள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஏதோ ஒரு வழியில் சமாதானமாகி விடுகிறார்கள். இங்கே தீண்டாமை என்கிற கேள்வியே எழுவதில்லை. ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவன் பிற சாதிப் பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்டால் அது எட்டிக் காயாகக் கசக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுதானே என அவன் இங்கே சமாதானமாவதில்லை. தாத்தப்பட்டவன் உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து விட்டால் நாயக்கன் கொட்டாய்கள் பற்றி எரிகின்றன. இத்தகைய காதல் திருமணங்களை எதிர்ப்பதில் தீண்டாமை கிடையாதா?

பொதுவாக பார்ப்பனர்கள் வேறு சாதிப் பெண்களைக் காதலிப்பதில்லை. ஒரு பார்ப்பனப் பெண் பிற்படுத்தப்பட்டவன் வீட்டிற்கு மருமகளாக வரலாம். அல்லது ஒரு பிற்படுத்தப்பட்டப் பெண் மற்றொரு பிற்படுத்தப்பட்டவனின் வீட்டிற்கு மருமகளாக வரலாம். சாதிய ஏற்றத்தாழ்வு என்கிற எதிர்ப்புகள் இருந்தாலும் பிறகு சமாதானமாகி விடுகிறார்கள். ஆனால் ஒரு தாழ்தப்பட்டவள் தனது வீட்டிற்கு மருமகளாக வந்தவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்களே பிற உயர் சாதியினர். அது ஏன்? அதனால்தானே தாழ்த்தப்பட்டப் பெண்களை பிற உயர் சாதியினர் காதலிப்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது. இந்த எச்சரிக்கை உணர்வில் தீண்டாமை ஒளிந்திருக்கவில்லையா?

இப்படி தீண்டாமைக் கொடுமைகள் அன்றாட வாழ்க்கையில் ஏறாளமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய நவீன காலத்தில் தீண்டாமை என்பது தொட்டால் தீட்டு என்கிற பழைய வடிவிலிருந்து புதிய வடிவில் தொடர்கின்றன. இத்தகைய தீண்டாமையை பார்ப்பனர்கள் மட்டுமா கடை பிடிக்கிறார்கள்? தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேல் உள்ள எல்லா சாதியினரும்தான் கடைபிடிக்கிறார்கள். அப்படியானால் இவை எல்லாம் பார்ப்பனியம் கிடையாதா?

தொடரும்.....

தொடாபுடைய பதிவுகள்




பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7