Sunday, 29 July 2018

வெல்லப் போவது யார்? ஐய்யப்பனா? அரசியல் சட்டமா?


பக்த கோடிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
நமது கோவிலில் பிரசாதம் வாங்கும் பொழுது தயவுசெய்து நம்பூதிரிகளைத் (பூசாரிகளைத்) தொடாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகம் ஐயப்பன் கோவில் கேரளா.
சபரிமலையில் பார்ப்பனர்களால் கடைபிடிக்கப்படும் முதல் வகைத் தீட்டு இது.

சீறிப் பாயும் பம்பை ஆற்றில் முங்கித்தானே பக்தன் கோவிலுக்குள் செல்கிறான். பம்பை ஆற்றின் சீற்றத்தில் கோவணமே கந்தலாகும் போது அவனது கைகள் மட்டும் கறையோடு கரையேறுமா என்ன? அது மட்டுமல்ல. அவன் முங்குவது வெறும் தண்ணீரா என்ன! புனித நீராச்சே! புனித நீராடியவனே உன்னைத் தொட்டால் தீட்டு என்றால் யாருக்கடா தேவை உன் ஐயப்பன் என கேள்வி கேட்க எந்த ஒரு ஆணுக்கும் துணிவில்லை.

சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் இருக்கிறானாம். ஐயப்பனை வழிபட வேண்டுமானால் 41 நாள் விரதமிருக்க வேண்டுமாம். பெண்கள் மாதவிடாய்க்கு ஆட்படுவதால் அவர்களால் விரதத்தையும் தூய்மையையும் பின்பற்ற முடியாதாம். .அதனால் ஐய்யப்பனை வழிபட பெண்களை அனுமதிப்பதில்லையாம். இது பார்ப்பன திருவாங்கூர் தேவஸ்தானம் சொல்லும் நியாயவாதம். மாதவிடாய் என்பது தீட்டு, தோஷம், அசுத்தம். இது தூய்மையற்றது என்பதை மிகத் தெளிவாகச் சொல்கின்றனர் பார்ப்பனர்கள். சபரிமலையில் கடைபிடிக்கப்படும் இரண்டாம் வகைத் தீட்டு இது.

ஐயப்பன் எங்களுக்குமானவர். ஐயப்பனை வழிபடுவது எங்களது மத உரிமை; தனிமனித வழிபாட்டுரிமை என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர் கேரளப் பெண்கள். இது குறித்த பஞ்சாயத்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த பஞ்சாயத்து மிகவும் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆண்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்றுள்ள நிலையில்தான் பெண்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி உள்ளனர்.

பெண்கள் கோவிலுக்குள் வந்தால் தீட்டாகி விடும் என்றால் அவ்வளவு பலவீனமான சாமியை என்ன வெங்காயத்துக்கு கும்பிடுறீங்க? என சீறுகிறார் ஆதவன் திட்சண்யா. பார்ப்பனர்களுக்கு எதிராக திருப்பப்பட வேண்டிய சீற்றம் பக்கத்தர்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளது என்கிற வருத்தம் எனக்கு உண்டு.

சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சொல்கிறார். இது மனித உரிமை மீறல் இல்லையாம். ஆண்டாண்டு காலமாக அனுமதிப்பதில்லையாம். கார்த்திகை – தை - மார்கழி மாதங்களில் கடுங் குளிர் நிலவுவதாலும் மலைப் பிரதேசங்களில் தங்க நேரிடுவதாலும் பெண்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுமாம். இது அவரது நியாயவாதம்.

சரி. இந்த சிரமங்களுக்காக நீங்கள் பெண்களை சபரிமலைக்கு வரவேண்டாம் என்பதை ஒரு வாதத்திற்காக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சபரிமலையிலேயே ஒரு நூறு மீட்டர் தூரத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை வழிபட அனுமதிக்கலாமே!

ஆனால் விசயம் இதுவல்ல. ஜீயர் மேலும் அடுக்குகிறார்.

ஒரு சிலரால் (அதாவது ஒரு சில பெண்களால்) ஐயப்பனுக்காக பக்தர்கள் (அதாவது ஆண் பக்தர்களுக்கு) இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியே நம் முன்னோர்கள் (அவாள்தான் வேறு யார் நம் முன்னோர்கள்) இந்த ஏற்பாட்டை செய்துள்ளனராம். இது வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறதாம். எந்தெந்த வேலைகளை யார் யார் எப்போது செய்ய வேண்டும், ஆண்மீகப் பணிகளில் ஆண்கள் செய்ய வேண்டிய காரியங்கள் எது, பெண்கள் செய்ய வேண்டிய காரியம் எது என வேதங்கள் சில வழி காட்டுதல்களையும் செய்து வைத்துள்ளவாம். இந்து மதம் பெண்களைப் பெருமையாகக் கருதுகின்றதாம்.

800 ஆண்டுகால ஐயப்பன் குறித்து ‘5000’ ஆண்டுக்கு முந்தைய வேதங்களில் எப்படி சொல்லியிருக் முடியும் என கேள்வி எழுப்ப இங்கு யாருக்கடா தைரியம் இருக்கு என்கிறார் இந்த ஜீயர்.

ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கும் ஐயப்பனை வழிபடுவது அடிப்படை உரிமை. 1950 க்குப் பிறகு சட்டத்துக்கு உட்பட்டே எதுவும் இருக்க வேண்டும். அரசியல் சாசன விதி-மதக்கோட்பாடு இதில் எதற்கு எது உட்பட்டது? என சரமாரியாக நீதிபதிகள் கேள்விகள் எழுப்புகின்றனர்.

ஆனால்,

10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாதவிடாய் காரணமாக 41 நாள் விரதத்தையும், தூய்மையையும் பின்பற்ற முடியாது அதனால் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட்டால் பெரும் சர்ச்சை ஏற்படும் என நீதிமன்றத்தையே எச்சரிக்கிறார் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி. மாதவிடாய் என்பது தூய்மையற்றதுதான் என்பதை திருவாங்கூர் தேவஸ்தானம் தனது வழக்கறிஞர் மூலம் நிறுவ முயல்கிறது.

வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வியும் (பார்த்தீர்களா வழக்கறிஞருக்குள்ளும் ஒரு மனு இருக்கிறான்), திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஜீயர் உள்ளிட்ட பார்ப்பனர்களும் பார்ப்பன இந்து மதத்தின் சட்டத் தொகுப்பான மனுஸ்மிருதியை ஆதாரமாகக் கொண்டுதான் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர்.

மாதவிடாய் காலத்தில் உள்ள ஒரு பெண்ணை ஒருவன் தொட்டுவிட்டால் தான் குளிப்பதன் மூலம் அவன் தூய்மையடைகிறான் என்கிறது மனுஸ்மிருதி (மனு:  5-85). மாதவிடாய் தீட்டு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதா!

“மாதர்களின் சுபாவமே மனிதர்களுக்கு சிரிங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால் தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அசாக்கிரதையாயிரார்கள்” (மனு:  2-213).  ஒரு சிலரால் (அதாவது ஒரு சில பெண்களால்) ஐயப்பனுக்காக பக்தர்கள் (அதாவது ஆண் பக்தர்களுக்கு) இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற ஜீயரின் அச்சம் மனுவால் உறுதி செய்யப்படுகிதே!

“புலன்களையடக்கியவனாயினும் (அவன் ஐயப்ப பக்தனேயாயினும்), அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பினால் காமக்குரோதமுள்ளவனாகக் செய்வர் மாதர்” என்கிறது மனுஸ்மிருதி (மனு:  2-214)

பால் அடிப்படையில் எவரையும் பாகுபாடு செய்யக் கூடாது என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் விதி 15 வலியுறுத்தினாலும் ஜீயர் சொன்னது போல இதற்கெல்லாம் மேலான விதி வேதங்களில் இருக்கிறதுதானே? வேதம் என்று சொன்னாலே நாம்தான் வீழ்ந்து விடுகிறோமே! இது வேதத்தையும் விஞ்ஞானத்தையும் கலந்து செய்த கலவை என்று ஒருவன் விளம்பரம் செய்யும் போது நாம் வாய்பிளந்துதானே நிற்கிறோம்.

தொடர்புடைய பதிவுகள்:


    Saturday, 7 July 2018

    பணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்னவோ இந்தியக் குடிமகனுக்கு கருத்துச் சுதந்திரம் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச் சூழல் பற்றி பேசினால் கைது-சிறை. சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச் சாலையால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிபோவது பற்றி பேசினால் கைது-சிறை. நடுவண் மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்கள்-செயல்பாடுகள் குறித்து பேசினால் கைது-சிறை. இந்தியக் குடிமகனின் குரல் வலையை ஒரு பக்கம் நெறித்துக் கொண்டே மற்றொரு பக்கம் உலகிலேயே இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான் என பெருமை பேசுகின்றனர் ஒரு சாரார். உண்மையிலேயே நாம் ஒரு திறந்த வெளிச் சிறையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல.

    அரசு ஊழியராகவோ அல்லது ஒரு பொதுத் துறை ஊழியராகவோ ஒரு இந்தியக் குடிமகன் இருந்துவிட்டால் போதும் அவன் தனது வேலையைத் தவிர வேறு எதையும் பற்றி பேசக்கூடாது. அவன் பணிபுரியும் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஊழியர்களுக்கு எதிரானதாக இருந்தால்கூட அவன் வாய் திறக்கக் கூடாது.

    நடுவண் மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள், தான் பணிபுரியும் நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றாலும்கூட, இந்த பாதிப்பு தனது வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் என்றாலும்கூட அவன் வாய் திறக்கக் கூடாது. மீறினால் அவனது வேலை-வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வீதியில் வீசப்படுகிறான். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆங்கிலேயர் காலத்து நடத்தை விதிகளே இன்றைய சுதந்திர இந்தியாவிலும் அப்படியே நீடிக்கிறது. ஜனநாயக உணர்வு கொண்ட ஒருவர் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் சேருவது என்பது கிளைச் சிறையில் அடைக்கப்படுவதற்கு ஒப்பாகும்.

    1981 ல் நடுவண் அரசின் பொதுத்துறை ஒன்றில் பணிக்குச் சேர்ந்த நான் அந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு சிலரின் ஊழல் முறைகேடுகளை தட்டிக் கேட்டத்தற்காக பணி நீக்கம் செய்யப்பட்டு வீதியல் வீசப்பட்டேன். தொடர் போராட்டத்தின் மூலம் அதே நிறுவனத்தில் வேறு ஒரு கிளையில் நான் மீண்டும் புதிதாக பணியில் சேர்ந்தேன்.

    கிளைச்சிறையில்தான் எனது வாசம் என்றாகிவிட்ட பிறகு வெளிப்படையாக எனது எண்ணங்களை வெளிப்படுத்தவியலாத சூழலில்தான் இணையத்தின் வலைப் பக்கம் என்னை ஈர்த்தது. கிளைச் சிறைவாசி என்பதனால் மெய்யுலகில் நேரடியாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்றாலும் மெய்நிகர் உலகிலாவது எனது எண்ணங்களை வெளிப்படுத்தாலாம் என்கிற வகையில்தான் நான் ஊரான் வலைக் பக்கத்தை 2010 ல் தொடங்கினேன்.

    நான் 60-வது அகவையை நிறைவு செய்ததால் 23.06.2018 அன்று நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஒரு கிளைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன். கிளைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் திறந்த வெளிச் சிறைக்குதான் தள்ளப்பட்டுள்ளேனே தவிர தற்போதும் நான் சுதந்திரமானவன் அல்ல.

    இந்தச் சூழலில்தான் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இராணிப்பேட்டை பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் சார்பில் எனது பணி ஓய்வு மற்றும் ஊரான் வலைப் பக்கம் அறிமுக விழா 28.06.2018 அன்று நடைபெற்றது.

    இவ்விழாவில் அலுவலக ஊழியர்கள், நண்பர்கள், பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் அங்கத்தினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஊரான் வலைப்பக்கதில் உள்ள படைப்புகள் குறித்து விமர்சன நோக்கில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். சால்வை மற்றும் மாலைகள் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது என்பதை முன்கூட்டிடே அறிவித்து விட்டதால் புத்தகங்கள் மட்டுமே விழாவில் பரிசாக பெறப்பட்டது. மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விழாவில் ஒருவரும் கலைந்து செல்லாமல் இறுதிவரை இருந்து சிறப்பித்தனர். இது ஒரு விழா என்பதைவிட ஒரு கருத்தரங்கமாக அமைந்ததே இதன் சிறப்பு. விழாவை சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

    பொன்.சேகர்








    தொடர்புடைய பதிவு:

    Sunday, 24 June 2018

    எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு "ஊரான்" அறிமுக விழா!

    2010 முதல் "ஊரான்" பெயரில் இயங்கி வரும் வலைப் பதிவு அறிமுக விழா!
    எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக விழாவா என பலர் வினவக் கூடும்.
    "ஊரான்" வலைப் பதிவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய வாய்ப்பு தற்போதுதான்  கிட்டியது.
    ஊரானை மேலும் செம்மையாக்க தங்களது மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.
    28.06.2018 அன்று மாலை 5.00 மணிக்கு விழாவில் சந்திப்போம்! 
    வாய்ப்புள்ள வலைப்பதிவர்கள் அவசியம் வருக!
    மேலும் விவரங்கள் இணைப்பில்..
    நன்றி!

    Friday, 27 April 2018

    இராமதாஸ் அப்பாவியாம்!

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையிலான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று தி.மு.க, அ.தி.மு.க போன்ற அக்கட்சிகள் வலியுறுத்துவது நியாமில்லை” இது இராமதாசின் புலம்பல்.

    அய்யா இராமதாஸ் அவர்களே!
    ‘ஆண்ட பரம்பரைகளான’ நீங்கள் எல்லாம் உங்கள் கிரீடங்களை கழட்டி வைத்துவிட்டு BC/MBC/OBC என மண்டியிட்டு கல்வி-வேலை வாயப்புகளை கெஞ்சிப் பெறலாம். இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வந்த உங்களைப் பார்த்து “கோட்டா“ என நாக்கை புடுங்கிற மாதிரி பார்ப்பனர்கள் கேள்வி கேட்டாலும் உங்களுக்கு தன்மான உணர்ச்சி வருவதில்லை. ஆனால் தீண்டத்தகாதவர்கள் உங்களைப் போன்றே இட ஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வந்து உங்களுடன் சமமாக உட்கார்ந்தால் உங்களுக்கு குண்டி எறிகிறது. அதுவும் உங்களுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் அதிகாரியாக வந்துவிட்டால் உடம்பே எறிகிறது. உங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என ஒட்டு மொத்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ”தகுதி, திறமை” பேசி பார்ப்பன அவதாரம் எடுக்கிறீர்கள்.
    நீங்கள் என்னதான் ஆண்ட பரம்பரை என அலப்பறை செய்தாலும், பார்ப்பனர்களின் வேதங்களையும் சட்டங்களையும் மதிக்காமல், பார்ப்பன புரோகிதர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் ஆட்சி செலுத்தியதால் உங்களது முன்னோர்களை சத்திரிய நிலையிலிருந்து சூத்திரர் நிலைக்கு தரவிறக்கம் செய்யப்பட்ட கதை உங்களுக்குத் தெரியுமா? (மனு 10-43 & 44). உங்களது முப்பாட்டன்களே சூத்திரர்களான பிறகு நீங்கள் மட்டும் எப்படி சத்திரியர்களாக முடியும் என்று என்றைக்காவது யோசித்ததுண்டா?
    இன்றைய காலகட்டத்தில், அதாவது கலியுகத்தில் சத்திரியர்கள், வைசியர்கள் என்று யாரும் கிடையாது; கலியுகத்தில் பார்ப்பனர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டும்தான் உண்டு, சத்திரிய மறறும் வைசிய வருணங்கள் கிடையாது என பார்ப்பனர்கள் வகுத்து வைத்துள்ளதாவது தெரியுமா? பார்ப்பன அதிகாரத்திற்கு டெல்லியே மண்டியிடும் போது தைலாபுரம் மட்டும் தலை நிமிர்ந்து விடுமா என்ன? படையாச்சி, கவுண்டர், நாயகர், ரெட்டி என நீங்கள் ஊருக்கொரு அவதாரம் எடுத்தாலும் படிநிலைச் சாதி அமைப்பில் உங்களுக்கு மேலே உள்ள ‘உயர்’சாதியினர் உங்களை ‘பள்ளி’ப்பசங்க என ஏளனம் செய்கிறார்களே! அப்பொழுதுகூட உறைக்கவில்லையா நீங்கள் சத்திரியர்கள் இல்லை என்று. உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இழிவைப் போக்க உங்களுக்கு வக்கில்லை.
    ஆனால் தீண்டத்தகாதவன் ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது. டூ வீலரில் போகக் கூடாது. காதலிக்கக் கூடாது. திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீது ஊர்வலம் போகக் கூடாது. சொந்தமாக குதிரை வளர்க்கக் கூடாது. பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்கக் கூடாது. தெரு வழியாக பிணத்தை எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலில் நுழையக் கூடாது என கொக்கறிப்பீர்கள். மீறினால் கௌசல்யாக்களையும் திவ்யாக்களையும் விதவையாக்குவீர்கள். இம்மாபாதகச் செயல்களைச் செய்வோர் உங்களுக்கு அப்பாவிகளா? 

    பாவிகள் எல்லாம் அப்பாவிகளாக அவதாரம் எடுத்தால் அது கலியுகத்திற்கே அடுக்காது!

    திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கான வழக்குகளில்கூட அப்பாவி மக்கள் மீது பல்வேறு பொய்வழக்குகள் தொடுக்கப்பட்டுதான் வருகின்றன. அதற்காக அத்தகைய சட்டப் பிரிவுகளையே நீக்கக் கோருவீர்களா? 

    காவல்துறையில் ஆகப் பொரும்பான்மையினர் தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினரே! அப்படியிருக்க வன்கொடுமை சட்டத்தின் கீழ் தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினரான தங்களது சாதியினர் மீதே இவர்கள் பொய் வழக்கு போடுகிறார்கள் எனக் கூறுவது உங்களுக்கே வேடிக்கையாகத் தெரியவில்லையா?

    தீண்டாமை என்கிற மாபாதகச் செயலை தீண்டத்தக்க உயர் மற்றும் இடைநிலைச் சாதியினர் முற்றிலுமாக  கைவிட்டு விட்டால் வன்கோடுமைச் தடுப்புச் சட்டமே தேவைப்படாதே! பொய்வழக்கு புலம்பல்களுக்கு இது ஒன்றுதான் மருந்து என்பது மருத்துவராகிய உங்களுக்கு தெரியாத ஒன்றா என்ன?

    தொடர்புடைய பதிவுகள்.

    தருமபுரி: ராமதாஸ் சொன்னதும் நாம் சொல்ல நினைப்பதும்!


    Friday, 13 April 2018

    ஜீன்ஸ் பேண்ட்டைக் கண்டு அலறும் ‘ஆண்ட பரம்பரைகள்!’

    மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயின் அருகில் உள்ள கத்தியா நகரத்தைச் சேர்ந்த 27 வயதான தீண்டத்தகாதவரான இராம்பிரசாத் பாம்னியா தனது திருமணத்தையொட்டி 02.04.2018 அன்று குதிரை மீது ஊர்வலம் வந்தபோது ராஜபுத்திர சாதிவெறியர்கள் அவர் மீது கற்களை வீசியதோடு பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். சாதி வெறியர்களின் தாக்குதலிலிருந்து இராம்பிரசாத்தை பாதுகாக்க காவல் துறை உதவியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இராம்பிரசாத்தே ஒரு காவலர்தான். காவல் துறையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாமான்யர்களின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்.

    இராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பகோரா கிராமத்தைச் சேர்ந்த புராராம் பர்மார். குஜராத்தில் அரசு ஊழியராகப் பணிபுரியும் இவர் ஒரு தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர். இவரது மகன் பரத் தனது திருமணத்தையொட்டி 2014 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குதிரை மீது ஊர்வலம் வந்ததற்காக ராஜபுத்திர சாதி வெறியர்களால் பரத் தாக்கப்பட்டதோடு கடந்த நான்கு ஆண்டுகளாக இவரது குடும்பம் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளது. அதோடு இவருக்கு ரூ.5000 அபராதமும் விதித்துள்ளனர் ராஜபுத்திர சாதி வெறியினர்.

    உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்தவர் சன்ஜய் ஜாதவ். இவர் அலிகர் கல்லூரி மாணவர். தனது திருமணத்தையொட்டி  குதிரை மீது ஊர்வலம் நடத்த பாதுகாப்புக் கோரிய போது கஸ்கந்த் மாவட்ட மாஜிஸ்ரேட்டும் மற்றும் கிராம சர்பஞ்சும் அனுமதி மறுத்ததால் இவர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். உள்ளூர் காவல் துறையினரை அனுகுமாறு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியது. மாவட்ட மாஜிஸ்ரேட் தாகூர் சாதியைச் சேர்தவர். குதிரை ஊர்வலத்தை பொதுத்தெரு வழியாக அனுமதிக்க முடியாது என்றும் வேண்டுமானால் சுமார் 800மீ தூரமுள்ள மாற்றுப்பாதையில் செல்லலாம் எனவும் காவல்துறை கூறியதால் அவர் உயர்நீதி மன்றத்தை நாடவுள்ளார். இன்னும் இரண்டு வாரத்தில் அவரது திருமணம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் துவாலியா கிராமத்தைச் சேர்ந்த இராம்பால் பலாய் ஒரு தீண்டத்தகாத சாதியைச் சார்ந்தவர். தனது மகள் நன்கு படித்தவர் என்பதால் மகளின் திருமணத்தை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விமரிசையாக நடத்தத் திட்டமிட்டார். திட்டமிட்டபடி தனது மகளை மணக்கப் போகும் மாப்பிள்ளையை குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வந்தபோது ஜாட் சாதி வெறியர்கள் ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இராம்பால் காவல் துறை உதவியை நாடினாலும் இந்த தாக்குதல் திருமண விழாச் சூழலையே சீர்குலைத்து விட்டது என வேதனையோடு தெரிவிக்கிறார் இராம்பால் பலாய். தாங்கள்தான் மனிதர்கள், தீண்டத்தகாத நாங்கள் எல்லாம் விலங்குகள் என ஜாட் சாதியினர் கருதுகின்றனர். இந்த வழக்கை தான் விடப்போதில்லை என்றும் ஜாட் சாதி வெறியர்களை சட்ட நீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் இராம்பால் கூறுகிறார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் என்ற ஊரில் 10.05.2015 அன்று தீண்டத்தகாத இளைஞர் ஒருவர் தனது திருமணத்தையொட்டி குதிரையில் ஊர்வலம் வந்தபோது உயர் சாதி வெறியர்கள் அவரைத் தாக்கியதோடு குதிரையையும் கைப்பற்றிச் சென்றனர். அதன் பிறகு காவல் துறை பாதுகாப்புடன் அவர் தலையில் ஹெல்மட் அணிந்து தனது ஊர்வலத்தை நடத்தினார்.

    வட மாநிலங்களில் தீண்டத்தகாதவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் உயர் சாதி வெறியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. தீண்டத்தகாவர்கள் முறுக்கு மீசை வைக்கக் கூடாதாம். ஷேடு உள்ள ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாதாம் திருமணங்களில் பாட்டுக் கச்சேரி வைக்கக் கூடாதாம். இப்படித்தான் கூப்பாடு போடுகின்றனர் வடஇந்திய உயர் சாதி வெறியினர்.

    குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், டிம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட் (வயது 21). தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த இவர் 8 மதங்களுக்கு முன்பு குதிரை ஒன்று வாங்கினார். தனது வயலுக்கு இவர் தனது குதிரையில் சென்று வருவார். தீண்டத்தகாதவர் குதிரையில் செல்லக் கூடாது, நடந்துதான் செல்ல வேண்டும் என இதற்கு உயர் சாதி வெறியர்கள் மிரட்டல் விடுத்து வந்த நிலையில் 29.03.2018 அன்று இரவு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப் பட்டார். (ஏப்ரல் 1, 2018 தமிழ் இந்து)




    தீண்டத்தகாத சாதிப் பையன்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு தங்களது சாதிப் பெண்களை வளைத்துப் போடுகிறார்கள் என இங்குள்ள வன்னியர் சாதி வெறியர் இராமதாஸ், கொங்கு கவுண்டர் சாதி வெறியர் ஈஸ்வரன் உள்ளிட்ட பிற உயர்சாதி வெறியர்கள் கொஞ்சமும் வெட்கமின்றி பிதற்றி வருவது நாம் அறிந்ததே. இதன் பொருள் என்ன? தீண்டத்தகாதவன் ஜீன்ஸ் பேண்ட் போடக் கூடாது என்பதுதானே!. வட இந்திய சாதி வெறியர்களும் தென் இந்திய சாதி வெறியர்களும் இதில் ஒன்று படுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?

    பேஷ்வா பார்ப்பனர்கள் மராட்டியத்தில் ஆட்சியிலிருந்த போது பம்பாயில் தீண்டத்தகாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப் படவில்லை. கந்தல் துணிகளைத்தான் உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்கு துணிகள் விற்கும் போது அந்தத் துணிகளை கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்),

    தீண்டத்தகாதவர்கள் பிணத்தின் துணியைத்தான் உடுத்த வேண்டும் (மனு 10-52) என மனு வகுத்து வைத்த விதிதான் இன்று ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என நீள்கிறது.

    தீண்டத்தகாதவர்கள் நாயையும் குரங்கையும் மட்டும்தான் வளர்க்கலாம். மாடு முதலியவற்றை வளர்க்கக் கூடாது (மனு 10-51).  என மனு வகுத்து வைத்த விதிதான் இன்று தீண்டத்தகாதவர் குதிரை வளர்ப்பதை குற்றமாக பார்க்கிறது.

    பேஷ்வாக்கள் ஆட்சியில் தலை நகரமான புனே நகரில் மாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படவில்லை. காரணம் இந்த நேரத்தில் ஏற்படும் நீண்ட நிழல் பார்ப்பான் மீது பட்டு விட்டால் தீட்டாகி விடுமாம். ஒரு பார்ப்பான் வருவது தெரிந்தால் தீண்டத்தகாதவன் தரையில் குப்புறப் படுத்து தனது நிழல் பார்ப்பான் மீது விழுவதை தவிர்க்க வேண்டும்.
    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்),

    நிழல் பட்டாலே தீட்டுப்பட்டுவிடும் என்று வளர்க்கப்பட்ட ஒருவன் தற்போது குதிரையில் ஒரு தீண்டத்தகாதவன் கம்பீரமாக செல்வதை ஏற்றுக் கொள்வானா? இந்த மனநிலைதான் தற்போது பிரதீப் ரத்தோட்டை கொலை செய்யத் தூண்டியுள்ளது. தீண்டத்தகாதவர்கள் குதிரை மீது ஊர்வலம் வருவதை தடுக்கச் சொல்கிறது. இது அப்பட்டமான தீண்டாமையின் நேரடி வடிவமாகும்.

    இந்தியக் கிராமங்களில் தீண்டத்தகாதவர்கள்

     *     நிலம், கால்நடைகள் போன்ற செல்வங்கள் சேர்ப்பது குற்றம்

    * சுத்தமான உடை உடுப்பது, ஷீ அணிவது, கைக் கடிகாரம் அணிவது அல்லது தங்க நகை அணிவது குற்றம்

    * ஓர் இந்துவின் முன்னால் நாற்காலியில் அமர்வது குற்றம்

    * கிராமத்தின் வழியே குதிரை மீதோ, பல்லக்கிலோ அமர்ந்து செல்வது குற்றம்

    * கிராமத்தின் வழியே ஊர்வலத்தை நடத்திச் செல்வது குற்றம்.

    இப்படி தீண்டத்தகாத சாதியினர் மீது பல்வேறு நிபந்தனைகளை
    விதித்து அதன்படிதான் அவர்கள் வாழ வேண்டும் என விதி வகுத்து
    வைத்தனர் உயர் சாதியினர் என அன்றைய இந்தியச் சூழலை
    அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.
    (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்), பக்கம் 36-37.

    பார்ப்பனர்களா நேரடியாக தாக்குகின்றனர் என சிலர் வாதிடக் கூடும். மனுநீதியை ஒரு வாழ்க்கை நெறியாக உருவாக்கியவர்கள் பார்ப்பனர்களே. அவர்கள் வகுத்து வைத்த நீதியைத்தான் மற்ற எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என சட்டம் வகுத்தவர்களும் அவர்களே. இவர்கள் வகுத்த சட்டங்களை ஒரு மன்னன் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அந்த மன்னனையே தண்டிக்கும் அதிகாரத்தை பார்ப்பனர்கள் கொண்டிருந்தனர்.   

    கீழ்சாதியைச் சேர்ந்த ஒரு மனிதன் பேராசை காரணமாக மேல் சாதித் தொழிலைச் செய்து வாழ்ந்தால் மன்னன் அவனுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவனை நாடு கடத்த வேண்டும் (மனு: 10-96)

    சுருக்கமாகச் சொன்னால் மேல்சாதிக்காரனைப் போல ஒரு கீழ்சாதிக்காரன் வாழ முயலக்கூடாது என்பதுதான் மனுவின் சட்டம்.

    இந்தச் சட்டத்தை மன்னன் செயல்படுத்த வேண்டும் என மனு கட்டளையிடுகிறான்.

    சாதிகள் குழப்புவதைத் தடுப்பதன் மூலம் …… மன்னனின் அதிகாரம் வளர்கிறது. அவன் இவ்வுலகிலும் மறு உலகிலும் நற்பேறு பெருகிறான் (மனு: 8-172)

    பார்ப்பன வர்ணாசிரம சட்டங்களை அமுலாக்குவதில் மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வெண்டும் என மனு மன்னனுக்கு எடுத்துக் கூறுகிறான்.

    மன்னன் தனது விருப்பு வெறுப்புகளைக் கருதாமல் யமனைப் போலவே செயல்பட வேண்டும்அதாவது அவன் மரண நீதி தேவைதையான யமனைப் போல பாரபட்சமற்றவனாக இருக்க வேண்டும் (மனு: 8-173)

    இந்த விசயத்தை மன்னனின் புனிதமான கடமை உணர்வுக்கு விட்டுவிட மனு விரும்பவில்லை. மன்னனுக்கு இதை மனு கடமையாக்குகிறான். மன்னனுக்கு பின்வருமாறு கட்டாயப் பொறுப்பை மனு அளிக்கிறான்.

    மன்னன், வைசியனை வர்த்தகம், கடன் கொடுத்தல், நிலத்தில் சாகுபடி செய்தல், கால்நடை வளர்த்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். சூத்திரனை இரு பிறப்பாளர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு உத்தரவிட வேண்டும். (மனு: 8-410)

    மனு இது குறித்து மேலும் கூறுகிறான்.

    வைசியர்களும் சூத்திரர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுமாறு மன்னன் கவனமாக கட்டாயப்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு சாதிகளும் தங்கள் கடமைகளிலிருந்து விலகினால் இந்த உலகம் முழுவதிலுமே பெரும் குழப்பம் ஏற்படும். (மனு: 8-418)

    வைசியர்கள் சூத்திரர்களுக்கே இந்த நிலை என்றால் நான்கு வர்ணத்திற்கு வெளியே தள்ளப்பட்ட தீண்டத்தகாதவர்களின் நிலை பற்றி கூறவா வேண்டும்.

    மன்னன் இந்தக்கடமைப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் என்ன செய்வது? அத்தகைய மன்னனை ஒழித்துவிட வேண்டும் என்கிறான் மனு. காரணம் நால்வருண சட்டம் மனுவின் கருத்துப்படி எல்லாவற்றிலும் உயர்ந்தது.

    சத்திரியர்கள் பிராமணர்களிடம் எந்த விதத்திலாவது அகந்தையுடன் நடந்து கொண்டால் பார்ப்பனர்களே அவர்களைத் தண்டிப்பார்கள்; ஏனென்றால், சத்திரியர்கள் பார்ப்பனர்களிடமிருந்துதான் தோன்றினார்கள். (மனு: 9-320).

    சத்திரியர்கள் பார்ப்பானர்களிடத்திலிருந்து தோன்றியதால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடங்கிப் போகிறார்கள். (மனு: 9-321).

    இப்படி, மன்னனுக்கு மேலாக நின்று கொண்டு நால்வருண தர்மத்தை பார்ப்பனர்கள் நடைமுறைப்படுத்தியதன் விளைவாகத்தான் பார்ப்பன இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வான படிநிலைச் சாதி அமைப்பு முறையும் ஒவ்வொரு சாதிக்கான தர்மமும் இன்றுவரை நிலைபெற்று நீடிக்கின்றன.

    தொடர்புடைய பதிவுகள்

    · குஜராத்தில் குதிரையில் சென்ற ...

    · Dalit groom attacked for riding a horse