Wednesday, 13 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

இடைநிலைச் சாதிகளின் தோற்றம்

கீழ்நிலைச் சாதிகளின் தோற்றம்  குறித்து ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் உயர் சாதியினர் எப்படித் தோன்றினர் என்ற கேள்வி எழுவது இயல்புதான். 

பிராமணர்கள்

ஐயங்கார், ஐயர், ஆச்சார்யா, தீட்சித், திவாரி, திரிவேதி, திக்கே, தாக்கூர், துபே, ஜெட்லி, ஜோஷி, ஷோரி, பாகவதர், பண்டிட், பாண்டே, பட், பதக், சுக்லா, மிஸ்ரா, ராய், வைத்தியா, வாஜ்பேயி, உபாத்யாயா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளாக பார்ப்பனர்கள் இருந்தாலும், அவர்கள் இன்றுவரை பிரம்மா எப்படிப் படைத்தானோ அப்படியே, பிராமண வருணமாகத் தங்களைக் கருதிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி 10) 

வடக்கே இமய மலை, தெற்கே விந்திய மலை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு அமைந்திருந்த ஆரியவர்த்த தேசத்தில், பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சனாதன தருமம் (மனு 2: 21, 22).

சத்திரியர்கள் சூத்திரர்களாக ஆன கதை

பார்ப்பன மேலாதிக்கம் நாலாதிசைகளிலும் விரிவடைய முயன்ற போது, பிராமணர்களை வணங்காததாலும், பூணூல் அணிவதைப் புறந்தள்ளியதாலும் சுற்றியிருந்த பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் ஆகிய பண்ணிரெண்டு நாடுகளைச் சேர்ந்த சத்திரியர்கள் வரவர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள் (மனு 10: 43, 44). 

எனவே, விந்திய மலைக்குத் தெற்கே ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட திராவிடப் பகுதிகளில் ஆட்சி செலுத்திய அனைத்து சத்திரிய மன்னர்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர். அது மட்டுமன்றி, சனாதனத்தை ஏற்க மறுத்த வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் உள்ளிட்ட அரசர்கள் ஆட்சியை இழந்து அழிந்து போனார்கள் (மனு 7: 41)

மேலும், நான்கு யுகங்களில், முதல் மூன்று யுகங்களான திருத, திரேதா, துவாபரா யுகங்களில் நான்கு வருணங்களும் இருந்தன. கி.மு 3102 இல் தொடங்கியதாக பார்ப்பனர்களால்  நம்பப்படும் கலியுகத்தில், கேடுகள் நிறைந்து விட்டதால், பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என பார்ப்பனர்கள் உறுதியாக இன்றுவரை நம்புகின்னர். எனவே, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட எங்கும், இன்று பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என்பது உறுதியாகத் தெரிகிறது. (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி-8, பக்கம் - 441). 

இடைநிலைச் சாதிகள்

தமிழ்நாட்டில் ஆசீவகம் காலம் தொடங்கி சங்ககாலம் வரையிலும் நான்கு வருணங்கள் கிடையாது. மாறாக இனக்குழுக்களை வழிநடத்திய தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியத் தலைவர்கள் பேரரசர்களாகவும் செயல்பட்டிருக்கக்கூடும். சனாதனத்தை ஏற்க மறுத்த இவர்கள் அனைவரும் சூத்திரர்களாக தரம் இறக்கப்பட்டு, இவர்களின் இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர் என்றுதான் கருத வேண்டி உள்ளது. 

இத்தகைய இனக்குழுக்களின் பிரிவினர்தான் இன்று வேளாளர்களாகவும் (பிள்ளை), முதலியார்களாகவும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களாகவும், நாயுடு-ரெட்டிகளாகவும், வன்னியர்களாகவும், முத்தரையர்களாகவும், கள்ளர் - மறவர் - அகமுடையர் உள்ளிட்ட‌ முக்குலத்து தேவர்களாகவும் அறியப்படுகின்றனர். இதில் நாடார் சாதி அடங்குமா என்ற கேள்வி ஒருசிலருக்கு எழக்கூடும். இது குறித்து தீண்டாமை என்ற தலைப்பில் பார்ப்போம்.

பிற்காலச் சோழர்களின் ஆட்சியிலும், அதற்கு அடுத்த காலத்திலும், மேற்கண்ட சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்ததால் "நாங்கள் ஆண்ட பரம்பரை" என்று உரிமை கோரி, தங்களைச் சத்திரியர்களாகக் காட்டிக் கொள்ள இன்று இவர்கள் முயல்கின்றனர். அதற்காக, கற்பனையான தளபுராணங்களை ஏற்கனவே ஒரு சிலர் உருவாக்கிக் கொண்டதோடு, இன்று வரலாற்றையும் புதிதாக திருத்தி எழுத முயல்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் சிற்றரசர்களாக இருந்திருந்தாலும், சனாதன தருமப்படி அவர்களும் சூத்திரர்களே; எனவே, அவர்களின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் இடைநிலைச் சாதியினரின் சந்ததியினரும் சூத்திரர்களே. 

சாதியப் படிநிலையில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர்நிலையில் உள்ள சைவப்பிள்ளைமார்களே, இன்றைய பார்ப்பனர்களின் சனாதன தருமப்படி சூத்திரவாளாகக் கருதப்படும் போது, படிநிலையில் அதற்கும் கீழே உள்ள வன்னியர்கள் உள்ளிட்ட பிற சாதியினர் எம்மாத்திரம்? இவர்கள் எல்லாம் வெறும் ஜூஜூபி!

அடுத்து தீண்டாமை குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4

சாதிகளைத் தோற்றுவித்த சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

சாதிகளின் உருவாக்கம்

இரு பிறப்பாளர்கள் என்று சொல்லப்படும் பிராமண-சத்திரிய-வைசிய வருணத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரவர் வருணத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதி (மனு 3: 12) இருந்த போதும், வருணக் கலப்பை தடுக்க முடியவில்லை. ஐந்தாவது வருணம் என்று ஒன்று கிடையாது என்பதனாலும் (மனு 10:4), இத்தகைய வருணக் கலப்பை, தகாத மணம் அல்லது முறையற்ற மணம் என்று சொல்லி, இவர்களின் வாரிசுகளை,  வருணங்களின் சேர்க்கைக்கு ஏற்ப, தனித்தனி சாதிகளாக வகைப்படுத்துகிறான் மனு.

சங்கரா சாதிகள்

மேல் வருண ஆணுக்கும் கீழ்வருண பெண்ணுக்கும் பிறந்தவர்களை அநுலோம சாதி (மனு 10: 6-10) என்றும், கீழ் வருண ஆணுக்கும் மேல் வரும் பெண்ணுக்கும் பிறந்தவர்களை பிரதிலோம சாதி (மனு 10: 11-14) என்றும், அனுலோம சாதி மற்றும் பிரதிலோம சாதிகளின் வாரிசுகளுக்கு இடையிலும், இவர்களின் வாரிசுகள் மற்றும் வருணங்களுக்கு இடையிலும், உருவான வாரிசுகளை அந்தராள சாதி (மனு 10: 15-19)  என்றும், பாகியா சாதி என்றும், பூணூல் அணியாததால் உருவான பிராமண-சத்திரிய-வைசிய வாரிசுகளை விராத்திய சாதி (மனு 10: 20-25)  என்றும், ஐந்து வகை சாதிகளாகப் பிரித்து வைக்கிறான் மனு. சங்கரா சாதிகள் என்று அழைக்கப்படும் இந்தச் சாதிகளை, ஈன சாதிகள் என்கிறான்.

இத்தகைய கலப்புகளால், நூற்றுக்கணக்கான சாதிகள் உருவாக்கப்படுகின்றன.

நாவிதர் சாதி

பிராமண ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவனை அம்மஷ்டன் என்று நாமகரணம் சூட்டி, ரண வைத்தியம் செய்வது அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 8)

இது அநுலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

மேளக்கார சாதி

வைசிய ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் உருவான வைதேக சாதி ஆணுக்கும், அம்பஷ்டப் பெண்ணுக்கும் பிறந்தவனை வேணன் என்ற சாதியாக்கி, தாளம் முதலிய வாத்தியம் வாசிப்பது அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 19, 49)

இது அந்தராள சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

கலைஞர் குடும்பத்தை 'மேளக்காரன்' என்று இன்றும் சனாதனவாதிகள் இழிவு படுத்திப் பேசுவதற்கான அடிப்படை இதுதான்.

மீனவ சாதி

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவனை நிஷாதன் என்றொரு சாதியாக்கி, மீன் பிடித்தல் அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 8)

இது அநுலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

ஆசாரி / விஸ்வகர்மா சாதி

சூத்திர ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவனை அயோகவன் என்றொரு சாதியாக்கி, தச்சு வேலை செய்வதை  அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான்.(மனு 10: 12) 

இவர்கள்தான் இன்று ஆசாரி அல்லது விஸ்வகர்மா என்று அழைக்கப்படுகின்றனர்

இது பிரதிலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

பூணூல் அணியாத வைசிய ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவர்களையும் ஆசாரி என்கிற சாதியாக்கி தச்சு வேலை அவர்களுக்கானத் தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 23)

இது விராத்திய சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இருளர் சாதி

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்த நிஷாதன் என்ற சாதியைச் சேர்ந்த ஆணுக்கும், சூத்திர பெண்ணுக்கும் பிறந்தவனை புலக்கசன் என்றொரு சாதியாக்கி, அவனுக்கு எலி மற்றும் உடும்புப்  பிடித்தலைத் தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 18).

இன்று இருளர்கள் என்று அறியப்படும் இவர்களின் துயர நிலையை "ஜெய் பீம்" திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்.

இது அந்தராள சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

பறையர் சாதி

"ஐயையோ! அந்த சண்டாளப் பசங்க நம்ம பொண்ணுங்கள இழுத்துட்டு ஓடுறாங்க"! என்று 1989 இல் "சீறும் சிங்கங்கள்" திரைப்படத்தில் வீ.கே.ராமசாமி வசனம் பேசும் போதும், 

"சண்டாளி உன் பாசத்தாலே, நானும் சுன்டெலியா ஆனே புள்ள" என்று 2003 இல், 'பருத்தி வீரன்' படத்தில் சினேகனின் பாடல் வரிகள் நம் காதுகளை வருடிய போதும், சண்டாளன் என்ற சொல்லின் பொருள் தெரியாமல் இரசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவனை சண்டாளன் என நாமகரணம் சூட்டி, சாதிகளிலேயே ஆகக் கீழான சாதி என வகைப்படுத்தி, தொழிலுக்காக இவன் அலைந்து திரிய வேண்டும் என்று வரையறை செய்கிறான் மனு (மனு 10: 13, 52). சண்டாளர்கள்தான் பறையர்கள் என்பது தெரியாமலேயே, கெட்ட செயல்களில் ஈடுபடுபடுவோரை "சண்டாளப் பாவி!" என்று வசை பாடுவது இன்றளவும் தொடர்கிறது. 

இது பிரதிலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

சக்கிலியர் சாதி

அந்தராள சாதிகளில் ஒன்றான நிஷாத ஆணுக்கும், வைசிய ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்த வைதேக என்கிற சாதியைச் சேர்ந்த  பெண்ணுக்கும் பிறந்தவனை காருவாரன் என்றொரு சாதியாக்கி, தோல் வேலை செய்வதை தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 35). இவர்கள்தான் இன்று சக்கிலியர் அல்லது அருந்ததியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

வெட்டியான்

சண்டாள ஆணுக்கும் நிஷாத பெண்ணுக்கும் பிறந்தவனை அந்தியாவசாயி என்றொரு சாதியாக்கி, சுடுகாட்டைக் காப்பதை அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான். வெட்டியான் என்று அழைக்கப்படுபவர்கள் இவர்கள்தான் (மனு 10: 39).

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

ஒரு சாதியாரைத் திட்டுகிறோம் என்ற உணர்வின்றியே, எதற்கும் பயன்படாத ஒரு வேலையை "வெட்டி வேலை" என்றும், சும்மா வெளியில் போய் சுத்திட்டு வந்தா "வெட்டிப் பய" என்றும் பலரும் பேசுவதைப் பார்க்கிறோம். 

செம்படவ சாதி

நிஷாத ஆணுக்கும் அயோவகப் பெண்ணுக்கும் பிறந்தவனை மார்க்கவன் என்றொரு சாதியாக்கி, ஓடம் விடுதலை  அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 34).

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இப்படி நூற்றுக்கணக்கான கீழ்நிலைச் சாதிகளை, சனாதனம் உருவாக்கி உள்ளது. இந்தச் சாதியினர் அனைவருமே ஈன சாதிகள் என்று இழிவுபடுத்தப்படுவதால், இவர்கள் ஊரில் வசிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை; மாறாக இவர்கள் அனைவரும் ஊருக்கு வெளியே மரத்தடியில், தோப்புகளில், மயானத்திற்கு அருகே, மலையடிவாரங்களில் வசிக்க நேர்ந்தது (மனு 10: 50).

அடுத்து உயர்சாதி மற்றும் இடைநிலைச் சாதிகளின் தோற்றம் குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

வருணங்களில் சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். அதனால், இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

வருணங்களின் உருவாக்கம்

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்கிறான் பகவத் கீதையில் கிருஷ்ணன் (கீதை 4:13), அதன்படி,

பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், தோளிலிருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், பாதத்திலிருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும், அந்த நான்கு வருணங்களைக் குறிப்பிடுகிறான் மனு. (மனு 1:31).

தூய்மைக்கு பார்ப்பனர்கள், வீரத்திற்கு சத்திரியர்கள், தானத்திற்கு வைசியர்கள், சேவை செய்வதற்கு சூத்திரர்கள் என்று அவர்களுக்கான குணங்களையும் வகுத்ததோடு,

பிராமணர்கள் வேதங்களை ஓதவும், சத்திரியர்கள் நாட்டையும் மக்களையும் காக்கவும், வைசியர்கள் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்யவும், சூத்திரர்கள் மேலே உள்ள மூன்று வருணத்தாருக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமென அவர்களுக்கான தொழிலையும் இறுதி செய்கிறான் மனு. (மனு 1: 88-91)

அவரவர் தொழிலை, அவரவர் தனித்தனியாக செய்ய வேண்டும் என்றும், ஒருவர் தொழிலில் மற்றவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் முன் நிபந்தனை விதிக்கிறான் மனு (மனு 1: 87)

வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ள எல்லா தருமங்களும், ஒழுக்கங்களும், இந்த மனுதரும சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன (மனு 1: 101, 102). இந்த தருமங்களைக் கடைபிடித்தால் சொர்க்கத்தை அடைய முடியும் என்கிறான் மனு (மனு 2: 9)

பெயர் சூட்டல்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அது மூன்று பகுதிகளாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு பெயரிடும் போது, பிராமணன் பெயர் மங்களகரத்தைக் குறிப்பதாகத் தொடங்கி இறுதியில் சர்மா எனவும், சத்திரியன் பெயர் நலத்தைக் குறிக்கும் வகையிலான தொடங்கி வர்மா எனவும், வைசியன் பெயர் செல்வத்தைக் குறிக்கும் வகையில் தொடங்கி பதி எனவும், சூத்திரன் பெயர் தாழ்வைக் குறிக்கும் வகையில் தொடங்கி தாசன் எனவும் முடிய வேண்டும் என கட்டளையிடுகிறான். (மனு: 2: 31, 32)

சங்கர் தயாள் சர்மாவும், ராம் கோபால் வர்மாவும், குமுத் பல்லவ் பதியும், சித்த ரஞ்சன் தாசும் இன்றளவும் இருப்பதற்குக் காரணம் மனு இன்றும் உயிரோடு இருக்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது!

ஆனால், பெண்கள் இத்தகையப் பெயர்களை சூட்டிக் கொள்ள முடியாது. மாறாக, பெண்களின் பெயர்கள் சுகமாக கூப்பிடத்தக்கதாயும், கொடுமை இல்லாததாயும், அர்த்தமுள்ளதாயும், மங்களமாயும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறதாயும் இருக்க வேண்டும் என்கிறான் மனு. (மனு 2:33) அதாவது நெடில் எழுத்துகளில் (long vowels: a, e, I, o, u) முடிய வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சொல்லுகிறான். தெரிந்தோ தெரியாமலோ இன்றும்கூட, இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் இப்படித்தான் வைக்கப்படுகின்றன.

பூணூல் கல்யாணம்

என்னதான் முதல் மூன்று வருணத்தார் தலையிலும் தோளிலும் தொடையிலும் பிறந்தாலும், அவர்கள் மீண்டும் ஒருமுறை (துவிஜர்கள்-இருபிறப்பாளர்கள்)  பிறந்தால்தான் அவர்களை மனிதர்களாகக் கருத முடியும் என்பதால்,

பிராமணர்கள் 8 வயதில் பஞ்சு நூலாலும், சத்திரியர்கள் 11 வயதில் சனப்பை நூலாலும், வைசியர்கள் 12 வயதில் வெள்ளாட்டு மயிரினால் ஆன நூலாலும் பூணூல் அணிய வேண்டும் என்கிறான் (மனு 2: 36, 44).

பூணூல் அணியவில்லை என்றால் அவர்களை சாதி விலக்கம் செய்து அவர்களை விராத்திய ஜாதி என்று சொல்லி  வருணத்திற்கு வெளியே விரட்டுகிறான் மனு (மனு 2: 39). சாதி விலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, இன்றும் கூட, இந்தியா முழுக்க பார்ப்பன குடும்பங்களிலும் தங்களை  சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் வீடுகளிலும் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. 

இரு பிறப்பாளர்கள் உயர்ந்தவர்கள் (மனு 2-169) என்றும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் (மனு 2-66) பூணூல் அணிகிற உரிமை கிடையாது என்பதனால் அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

பூணூல் அணிவது ஒரு வருணத்திற்கான அடையாளம் அல்ல, மாறாக அது தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டிக் கொள்வதற்கான அடையாளம் என்று மகாத்மா காந்தி பூணூல் அணிவதைச் சாடுகிறார்.

திருமணம்

அவரவர், அவரவர் வருணத்திலேயே, தந்தையின் அனுமதியைப் பெற்று திருமணம் செய்து கொள்ள வேண்டும். (மனு 3-11, 12).

ஏராளமான பார்ப்பன வீட்டுப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்வதை இன்று அதிகமாகக் காண முடிகிறது. அதனால்தான் பிராமணப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது; பிராமணப் பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் கதருகிறார்கள். 

ஆணவப் படுகொலை

கீழ் சாதிப் பையன்கள், மேல் சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருவதால், மற்ற சாதிகளிலும் இத்தகையக் கதரல்களைக் காணமுடிகிறது. மீறி திருமணம் செய்வோரை, ஒன்று சாதி விலக்கம் செய்வது, இல்லை என்றால் நாயக்கன் கொட்டாய் இளவரசனைப் (திவ்யா) போல, உடுமலை சங்கரைப் (கௌசல்யா) போல  படுகொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று வருணக் கலப்பு மற்றும் சாதிக் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதால், திருமணங்களை எட்டாக வகைப்படுத்தி அதில் சிலவற்றை இழிவானத் திருமணங்கள் என முத்திரை குத்துகிறான் மனு (மனு 3: 21, 41).

வருணக் கலப்பில் பிறந்த வாரிசுகளை, புதிய சாதிகளாக எப்படி வகைப்படுத்துகிறான் மனு என்பதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, 12 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

இந்திய வரலாற்றில் பார்ப்பனியம்

மனித குல வரலாற்றில், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத ஒரு சமூகக் கட்டமைப்பை இந்தியாவில் மட்டும்தான் காண முடிகிறது. ஹரப்பா மற்றும் சிந்து சமவெளி நாகரிகக் காலகட்டத்தில் (கி.மு 3000), ஒரு சிறந்த நகர நாகரிகம் இருந்ததாக வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. ஆனால், நாடோடிக் கூட்டமாக வாழ்ந்த ஆரியர்களின் வருகைக்குப் பிறகான வேத காலத்தில் (கி.மு.1750) இந்தியாவின் சமூகக் கட்டமைப்பே தடம் மாறுகிறது. 

பிறப்பின் அடிப்படையில், மனிதர்களை நான்கு வருணங்களாகவும், வருணங்களைப் பல்வேறு சாதிகளாகவும் பிரித்து,  அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி ஒரு கொடுங்கோன்மை வடிவிலான சமூகக் கட்டமைப்பைப் பார்ப்பனர்கள் உருவாக்குகின்றனர். பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிராக மகாவீரரும், கௌதம புத்தரும் மக்களை மீட்டெடுத்து சமத்துவத்தை போதிக்கின்ற சமண மற்றும் பௌத்த நெறி வாழ்வியல் முறைகளைத் தோற்றுவிக்கின்றனர் (கி.மு.600).

பார்ப்பனியத்தின் பொற்காலம்

சமண-பௌத்த நெறிகளைப் பின்பற்றிய மௌரியர்களின் ஆட்சிக் காலம் வரை (கி.மு 322) சீராகச் சென்று கொண்டிருந்த இந்தியச் சமூகத்தில், புஷ்யமித்திரன் காலத்தில் (கி.மு 185) மீண்டும் பார்ப்பன மேலாதிக்கும் தலை தூக்குகிறது. குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (கி.பி 320-551) பார்ப்பனியம் உச்சத்தை தொடுகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் பார்ப்பன மேலாதிக்கத்தை நியாயப்படுத்துகின்ற பல்வேறு புராணங்களும், சாஸ்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. அதனால்தான் குப்தர்களின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று புகழ்கின்றனர் பார்ப்பனர்கள். 

அதன் பிறகு, சாளுக்கியர்களின் ஆட்சி (கி.பி 600) சில காலம் இருந்தது. இதைத் தொடர்ந்து கஜினி முகமது (கி.பி 1002) படையெடுப்பு மற்றும் முகமது பின் துக்ளக் உள்ளிட்ட சுல்தான்களின் ஆட்சி (1306), இடையில் விஜயநகரப் பேரரசு (கி.பி 1336), பிறகு முகலாயர்கள் ஆட்சி (1527) என, இந்தியா, இஸ்லாமியர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி (கி.பி 1664) மற்றும் பேஷ்வாக்களின் (கி.பி 1657) ஆட்சிக்காலத்தில், அதிலும் குறிப்பாக பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில்தான் பார்ப்பனக் கொடுங்கோன்மை மீண்டும் உச்சத்தைத் தொட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவை தங்களது ஆளுகையின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் (கி.பி 1857) சில கொடூரமான பார்ப்பனிய நடைமுறைகளைத் தடை செய்தனர். 

ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சி அதிகாரம் கை மாறிய பிறகு (கி.பி.1947), காங்கிரஸ் கட்சியும், இடையில் ஜனதா கட்சியும் ஆட்சியில் இருந்த போதும் பார்ப்பனிய மேலாதிக்கம் தொடரவே செய்தது. இன்று மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனிய மேலாதிக்கும் மீண்டும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு வரலாற்றில் பார்ப்பனியம்

கீழடி நாகரீகமே (கி.மு 600) தமிழ் நாட்டின் தொன்மையான நகர நாகரீகம் என்று சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன. மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோரின் சமகாலமாகக் கருதப்படும் தொல்காப்பிய காலகட்டத்தில் (கி.மு 711), தமிழ்நாட்டில் மற்கலி கோசாலர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஆசிவக நெறிமுறை தமிழ்நாட்டில் இருந்ததாக அறியப்படுகிறது. ஆனாலும், சங்க காலத்திலும், முற்கால மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலும் (கி.மு 600) பார்ப்பனிய மேலாதிக்கத்தின் தாக்கங்கள் தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் இருப்பதைக் காண முடிகிறது.

ஆசீவகம்

பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி 300-600) தலை தூக்கிய பார்ப்பனிய மேலாதிக்கம், சமண மற்றும் பௌத்த நெறிமுறைகளைப் பின்பற்றிய களப்பிரர் ஆட்சிக் காலத்தில் (கி.பி 250-600) சற்றே மௌனித்து, பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில், அதிலும் குறிப்பாக இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலம், பார்ப்பனர்களின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. 

சமண நெறிமுறைகளை வீழ்த்திவிட்டுத் தோன்றிய பக்தி இயக்கம் (கி.பி 600-1300), சைவம் மற்றும் வைணவம் என இருவேறு பிரிவுகளாக செயல்பட்ட காலத்தில், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம், திருப்புகழ் உள்ளிட்ட சைவ நெறி நூல்கள் நாயன்மார்களாலும், நாச்சியார் திருமொழி, திருப்பாவை உள்ளிட்ட வைணவ நூல்கள் ஆழ்வார்களாலும் இயற்றப்பட்டன. கம்பராமாயணம் இந்தக் காலகட்டத்தில்தான் படைக்கப்பட்டது. பார்ப்பனிய மேலாதிக்கத்தில் சில சீர்திருத்தங்கள் மட்டுமே இந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்டன.

அதன் பிறகு, தமிழ்நாட்டில் சில இடங்கள் மராட்டியர்களின் ஆளுகையிலும், பல இடங்கள் நாயக்கர்கள் ஆளுகையிலும், இருந்த காலகட்டத்திலும், பார்ப்பனிய மேலாதிக்கும் தொடரவே செய்தது. பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகத் தோன்றிய நீதிக் கட்சி ஆட்சி காலத்தில், பார்ப்பனிய மேலாதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

தமிழ்நாட்டில் தலைதூக்கும் பார்ப்பனிய மேலாதிக்கம்

தமிழ்நாட்டில், இராஜகோபாலாச்சாரி தலைமையிலான ஆட்சியின் போது தலை தூக்க முயன்ற பார்ப்பனியம், திராவிட இயக்கக் கருத்தியல் செல்வாக்கு அடைந்ததன் விளைவாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி உருவான பிறகு, சற்றே அடக்கி வாசிக்கத் தொடங்கியது. நடிகை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில், பார்ப்பனியம் குதூகலிக்கத் தொடங்கியது.  தமிழ் நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தபோதிலும், டெல்லியில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடப்பதால், தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் இன்று கொக்கரித்து வருகின்றனர்.

பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராக 2000 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தர் காலத்தில் தொடங்கிய போராட்டம், இடையில் மராட்டியத்தில் மகாத்மா ஜோதிராவ் புலே, வடக்கே சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், கர்நாடகாவில் பசவண்ணா, கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் சித்தர்கள், அய்யா வைகுண்டர், வள்ளலார், தந்தை பெரியார் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட போதும், பார்ப்பனிய மேலாதிக்கம் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. 

மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்களின் கோட்பாடு, எப்படி மீதமுள்ள 97 சதவீத மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடிகிறது? அதற்கான பின்னணி என்ன? உண்மையிலேயே அவர்களின் கோட்பாடு மக்களுக்கானதுதானா என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 10 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

இந்து மதத்தில் இருக்கின்ற அனைவருமே ஒரே மாதிரியான வாழ்வியல் முறையைக் கொண்டவர்களா? ஆன்மீக இந்துக்கள்கூட அன்றாட வாழ்வியல் நடைமுறையில் ஒரே மாதிரி இருப்பதில்லை.

இந்து மதத்தில் இருக்கின்ற கடவுள் மறுப்பாளர்கள், சீக்கியர்கள்,  ஜைனர்கள், பௌத்தர்கள் சட்டப்படி இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களது அன்றாட வாழ்வியல் முறையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 

இவர்கள் அனைவரின் அன்றாட வாழ்வியல் முறையை சனாதனம் என்று கூற முடியுமா? முடியாது. மனு தரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை எவர் ஒருவர் கடைபிடிக்கிறாரோ, அவரை சனாதனவாதி என்று கூறலாம். அவர்கூட சிலவற்றில் மனுதரும சாஸ்திரத்தைப் கடைபிடிப்பவராகவும், சிலவற்றில் மீறுபவராகவும் இருப்பார். 

சனாதனத்தை எதிர்க்கும் ஆன்மீகவாதிகள்

இந்து மதத்தில் உள்ள பல ஆன்மீகவாதிகள், அவர்கள் தங்களது இந்துக் கடவுள்களை வணங்கிக் கொண்டே, சனாதனத்தை எதிர்க்கின்றனர். ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம், ஊடகவியலாளர் இராம.சுப்பிரமணியன், ஆன்மீகப் பற்றாளர் சத்தியவேல் முருகனார், அய்யா வைகுண்டரின் சீடர் பிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட எண்ணற்ற ஆன்மீகவாதிகள் உதயநிதி பேசியதில் தவறேதுமில்லை என்று தங்களது கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.  

இதன் பொருள் என்ன? மனுதரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள, சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பெண்ணடிமை உள்ளிட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்குப் புறம்பான, வழிமுறைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதில்லை என்று பொருள். 

நஞ்சைக் கக்கும் சங்கிகள்

உண்மை இப்படி இருக்க,  80% இந்துக்களை இனப்படுகொலை செய்யச் சொல்லி,  வன்முறையை தூண்டுகிறார் உதயநிதி என அவரது உரையை திரித்துப் புரட்டி, பாஜக, ஐடி பிரிவைச் சேர்ந்த அமித் மாலிக் தனது பொய்யுரையைத் தொடங்கி வைக்க, இவரைத் தொடர்ந்து சனாதன ஆதரவாளர்கள் பலரும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். 

ஓய்வு பெற்ற நீதிபதிகள், இராணுவ அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், சினிமாக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 சனாதன ஆதரவாளர்கள், உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

பியூஸ் ராய் என்ற ஒரு சாது உதயநிதியின் தலையைக் கொண்டு வந்தால் ரூ.10 கோடி தருவதாகக் கூறிய வன்முறைப் பேச்சைக் கண்டிக்காமல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பேராசிரியர் சீனிவாசன், எச்.ராஜா, நடிகை குஷ்பு உள்ளிட்ட தமிழ் நாடு பாஜக-வினர், தெலங்கானா-புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 


மேற்கு வங்க முதல்வர் மம்தா, அவரது கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி மற்றும் குணால் கோஷ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன் கெரா மற்றும் கரன்சிங், அதிமுக-வைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தனது சகாக்கள்,

சனாதனத்தை ஒழிக்க 2003 ஆம் ஆண்டு போர்ப் பிரகடனம் செய்த புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட அரசியல்வாதிகளும்,

புஷ்பவனம் குப்புசாமி-அனிதா குப்புசாமி போன்ற சில பிரபலங்களும் உதயநிதியைக் கடுமையாகச் சாடுவதோடு சனாதனத்திற்கு புதுப்புது விளக்கங்களைத் கொடுத்து தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சனாதனக் காமெடிகள்

தனக்குக் கோவில் கட்டியதுதான் சனாதனம் என குஷ்பு விளக்கம் கொடுத்த போதே சனாதனத்தின் ஆதரவாளர்கள் தூக்கு மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, பொட்டு-பூ வைத்துக் கொள்வது, கோலம் போடுவது அதிலும் அரிசி மாவுக் கோலம் போடுவதுதான் சனாதனம் என அனிதா குப்புசாமி சொன்னபோதாவது சில சங்கிகள் குறைந்தபட்சம் நஞ்சையாவது குடித்திருக்க வேண்டும். மாறாக, உண்மையைப் பேசிய உதயநிதி மீது கொடும் நஞ்சைக் கக்கி வருகின்றனர்.

உண்மையில் எது சனாதனம் என்பதைத் தெரிந்து கொண்டால்தான், உதயநிதி பேசியது சரியா, தவறா என்பதை முடிவு செய்ய முடியும். அதற்கு, மனுதரும சாஸ்திரத்தையும், அதன் நடைமுறையையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது

எனவே, இனி மனுதரும சாஸ்திரம் குறித்தும், அதன் நடைமுறை குறித்தும் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்‌
தொடர்புடைய பதிவுகள்
சனாதன தருமத்தின் மூலம் எது?