Thursday, 28 September 2023

"இந்தியா முன்னேற வேண்டுமானால் சனாதனத்தை வேரடி மண்ணோடு அழித்து ஒழிக்க வேண்டும்!" - அம்பேத்கர்

தர்காவில் தட்சணை வாங்கும் பிராமணன்

"பம்பாய்க்கு அருகே கல்யாண் என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில், பாவா மலங்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டுதோறும் உர்ஸ் விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர்.

அவர் முஸ்லிம் உடை அணிந்து தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்திற்காக செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ பிராமணருக்கு வேண்டியது தட்சணைதான். உண்மையில் பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டார்கள்" என்கிறார் அம்பேத்கர்.

முன்னேற்றத்திற்கான முதல் படி

"புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்பட வேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஏனென்றால், ஐயம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது. ஆய்வு இல்லை என்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல. தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத்தான் அறிவு கிட்டுகிறது.

ஐயம் குறுக்கிட்டால்தான் ஆய்வு தொடங்கும். எனவே, ஐயப்படும் செயல்தான் எல்லாம் முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது. அல்லது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்"

அறிஞர் பக்கிள் அவர்களின் "நாகரிகத்தின் வரலாறு" என்கிற நூலிலிருந்து மேற்கண்ட மேற்கோள் ஒன்றை எடுத்துக்காட்டி அம்பேத்கர் கீழ்கண்டவாறு எழுதுகிறார்,

உதவாக்கரை வேதங்கள்

"பிராமணர்கள் ஐயம் எழுவதற்கு இடமே வைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தை மக்களிடையேப் பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை, தவறுக்கு இடமற்றவை என்பதே இந்தக் கருத்து. இந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், இந்து நாகரீகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்க வேண்டும். வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள்தான் அவற்றைப் புனிதம் என்றும், பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் பிற்காலத்தில் இடைச் செருகளான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள் பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன.

இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள் எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, தங்களை வழிபடுபவருக்குக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளும் வேண்டுகோளைத் தவிர வேறெதுவும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமல் போயிற்று.

இந்தியாவின் வருங்காலம்

ஆனால் பிராமணர்கள் பரப்பி உள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியிலிருந்து, இந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த விடுதலை ஏற்படாமல், இந்தியாவுகு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத்தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்".
என்று, "இந்து மதத்தில் புதிர்கள்"  என்ற நூலுக்கான முன்னுரையில் தெரிவிக்கிறார் அம்பேத்கர். (தொகுதி: 8)









புதை சேற்றில் இந்து மதம்

மேலும், "பிராமணர்கள் இந்துக்களை ஒரு புதை சேற்றில் கொண்டு போய் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்வதற்காகவும் பகுத்தறிவு ரீதியான சிந்தனைப் பாதையில்இந்துக்களை இட்டுச் செல்வதற்காகவும் இந்த நூலை தான் எழுதி உள்ளதாகக் குறிப்பிடுகிறார்" அம்பேத்கர். 

"இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது" என பிராமணர்கள் பரப்பி வரும் கருத்து, "உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்த புத்தகத்தில் எடுத்துக்காட்ட" அம்பேத்கர்  முயன்றுள்ளார்.

புதை சேற்றில் சிக்கித் தவிக்கும் இந்துக்களை, பிராமணர்களின் பிடியிலிருந்து மீட்பதற்கும், சனாதனத்தை அழிப்பதற்கும், ஒழிப்பதற்கும் அம்பேத்கரின் எழுத்துக்கள் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

ஊரான்

Thursday, 21 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-13, இறுதிப் பகுதி

இதுவரை சனாதான தருமம் குறித்து மிக சுருக்கமாகவே பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். சனாதன தருமத்தின் மூல நூல் மனுதருமம் என்பதால் பெரும்பாலும் அதிலிருந்தே மேற்கோள்கள் காட்டி உள்ளேன். 

சனாதன தருமத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லை. இதன் விளைவாகத்தான் சாதிய ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் இன்றளவும் கோலோச்சுகிறது. 'இந்து சாதி முறை, தேச வளர்ச்சிக்கு மகப் பெரிய இடையூறாக இருக்கிறது. இந்தியாவில் 75% மக்கள் உரிமை இழந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளதால், இந்தியா இறந்துபட்ட நாடு என்ற நிலையை அடையாவிட்டாலும், சிதைந்து வரும் நாடாக ஆயிற்று' என்பார் அம்பேத்கர் (தொகுதி 7). 

சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது?

பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பிறகும், ஒரு இந்து தனது வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஜாதகம் கணித்தல், வலைகாப்பு, திருமணச் சடங்குகள், கிரகப்பிரவேசம், பிறப்பு இறப்புச் சடங்குகள், யாகம் வளர்த்தல், திதி கொடுத்தல், புனித யாத்திரை, பரிகாரம் தேடுதல், கோவில்களுக்குச் சென்று வழிபடுதல் உள்ளிட்ட எண்ணற்ற சடங்குகள் சம்பிரதாயங்களுக்குப் பின்னே புரோகிதர் இருக்கிறான். இதன் மூலம் ஒரு பக்கம் நமது வருவாயின் ஒரு பகுதியை புரோகிதன் பறித்துக் கொள்வதோடு சனாதன தருமத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறான். 

சனாதனத்தைப் பலவீனப் படுத்த...

வாழ்வின் சுக-துக்க நிகழ்வுகளுக்கு புரோகிதனை அழைக்காதீர்கள். குடும்பப் பெரியோர்களைக் கொண்டு முடித்துக் கொள்ளுங்கள். அதிலும், சனாதான தருமத்தின் வழிகாட்டுதலைப் புறந்தள்ளி மாற்று முறைகளைக் கைக்கொள்ளுங்கள். பயிரிடுதலை இழி தொழில் (மனு 10: 84) என்று வசைபாடி, உழைக்காமல் உண்டு கொடுக்கும்  புரோகிதத் தொழிலை விட்டு பார்ப்பனர்கள் வெளியேறட்டும்.

பக்தி உள்ளவர்கள் வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள். சனாதனத்தின் கோட்டைகளாக இருக்கும் கோவில்கள் அர்ச்சகனோடு புதைந்து போகட்டும். 

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் துன்ப-துயரங்களுக்கான காரணங்களை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்க முயற்சிப்போம். 

அகமண முறைதான் சாதி தோன்றுவதற்கும், சாதியக் கட்டமைப்பு நீடிப்பதற்கும் அடிப்படை என்று அம்பேத்கர் அவதானித்தாலும், புறச்சாதியில் கலப்பு மணம் புரிவோர், திருமணத்திற்குப் பிறகு சாதியையும் சேர்த்தே சுமப்பதால், சாதி அவர்களை விட்டு அகலவில்லை. ஆனாலும், காதல் திருமணங்கள், சாதியக் கட்டமைப்பில், விரிசலை ஏற்படுத்துவதால், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

சுயமரியாதையோடு வாழ...

நூறு வயது சத்திரியனைவிட பத்து வயது பிராமணனே மரியாதைக்குரியவன் (மனு 2: 135) என்று சொல்லும் சனாதனத்தை ஏற்று, பார்ப்பனப் பொடியன்களின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆசிபெறும், ஆடு அண்ணாமலையைப் போல சுயமரியாதையிழந்து மானங்கெட்டு வாழாமல், நெஞ்சை நிமிர்த்தி சுயமரியாதை உள்ள மனிதனாய் வாழப் பழகிக் கொள்வோம்.


கல்வியில் முன்னுரிமை

பார்ப்பனரல்லாத பிற சாதியினர், பெண்கள் உள்ளிட்ட தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக அரசுத் துறைகளில், வேலை வாய்ப்புகளைப் பெறும்போதுதான் அங்கே நீடிக்கும் பார்ப்பன மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்த முடியும். 

2024 நாடாளுமன்றத் தேர்தலில்...

சனாதனத்தை மீட்டெடுக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவது உடனடி அவசரக் கடமையாக என்பதால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வது சனாதானத்திற்குக் கொடுக்கும் ஒரு பெரிய அடியாக இருக்கும்.

மனமாற்றமா? போராட்டமா?

மக்களின் அன்றாட வாழ்வில் சனாதனக் கருத்துக்களைப் புகுத்தி, அவர்களை இந்து என்ற சட்டகத்திற்குள் அடைத்து, இப்படித்தான் ஒரு இந்து வாழ வேண்டும் என்று பெரும்பான்மை உழைக்கும் மக்களை இந்து மதத்திற்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது சனாதனம்.

இந்து சமூகத்தில் நிலவும், சாதியக் கட்டமைப்பே, மன்னராட்சி-நிலவுடமை காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சுரண்டல் வடிவமாகும். ஒவ்வொரு பிரிவினருக்குமென ஒரு தொழிலைத் தீர்மானித்து, அவர்கள் அந்தத் தொழிலைத்தான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வரையறுத்தது, குலத்தொழில் முறையிலான ஒருவகை வர்க்கப் பிரிவினையாகும். அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை தொடர்ந்து சுரண்டுவதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மோடி அரசு இன்று கொண்டு வந்துள்ளது.

தீண்டாமை உள்ளிட்ட இந்து மத நம்பிக்கைகள், கருத்தளவில் நீடிக்கும் வெறும் உளவியல் பிரச்சனையா, மனதளவில் மாற்றிக் கொள்வதற்கு? அது அவனது மத நம்பிக்கையோடு தொடர்புடையது. விதிவிலக்காக, இந்து மத நம்பிக்கைகளை கைவிட்ட சொற்பமான ஒரு சிலர் வேண்டுமானால் மாறக்கூடும். ஒட்டுமொத்த மக்களையும் அப்படி மாற்றிவிட முடியாது.

கருத்துத் தளத்தில், சனாதன தருமம் சமூக கட்டமைப்பின் மேல் தளத்திலும், வர்க்கப் பிரிவினை என்ற அடிப்படையில் சமூகத்தின் அடிக்கட்டுமானத்திலும் நீடிப்பதால், மதத்திற்கு எதிரான சீர்திருத்தப் போராட்டங்கள் மூலமாகவும், சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்கின்ற வர்க்கப் போராட்டங்கள் மூலமாகவும்தான் சனாதனத்தை முற்றிலுமாக வீழ்த்த முடியும். 

சீர்திருத்தமும் வர்க்கப்போராட்டமும்

பெண் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம், சமத்துவபுரங்கள், பார்ப்பனரல்லாதோருக்கான இட ஒதுக்கீடு-குறிப்பாகப் பெண்களுக்கான தனி ஒதுக்கீடு போன்ற சில சீர்திருத்த நடவடிக்கைகள் சனாதனத்தில் பெரும் உடைப்பை ஏற்படுத்துவதால், அவற்றை ஆதரித்து ஊக்கப்படுத்தும் அதே வேளையில், உழைப்புச் சுரண்டலிலிருந்து ஒட்டு மொத்த மக்களையும் விடுவித்து சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை உத்தரவாதம் செய்யும் பொதுவுடமைச் சமூகத்தை அமைப்பதற்கான பாதையில் முன்னேற வேண்டும். 

சனாதான தருமம், அதாவது, இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும், சாதி இருக்கும் வரை தீண்டாமை நீடிக்கும். சனாதன தருமம் இல்லாதொழியும் போதுதான் தீண்டாமையும் ஒழியும்.

மனிதனின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் போது, மதத்தின் தேவையும் முடிவுக்கு வரும். இது, இந்து மதம் உள்ளிட்ட எல்லா மதங்களுக்கும் பொருந்தும். ஆனால் இருக்கின்ற மதங்களிலேயே ஆகக் கொடியது இந்து மதம் என்பதால், அதை எவ்வளவு விரைவில் வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவில் வீழ்த்த வேண்டும்.

சனாதனத்திற்கு எதிரானப் போராட்டம் கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்கள் தங்களுடைய நூல்களையேத் திருத்தத் தொடங்கி விட்டார்கள். நான்காவது வருணத்தவர்கள் சூத்திரர்கள் என்று நேற்று வரை புத்தகம் போட்டவர்கள் இன்று அதை வேளாளர்கள் என்று திருத்திப் போடுகிறார்கள். 

வருணப் பிரிவுகள், ஒருவரின் பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதல்ல; மாறாக, அது அவர்களின் செயலால், குணத்தால் தீர்மானிக்கப்படுவது என்று கதை அளந்து கொண்டிருக்கிறார்கள் சனாதனிகள். "வருணங்களை ஒருவரின் குணத்தைக் கொண்டு தீர்மானித்தால், கடைசியில் வருண அமைப்பு தலைகீழாக மாறிவிடும். வருண ஏற்பாடு என்பது குலைந்து போய்விடும். ஆகவே, செயலினால் மட்டும் வருண அமைப்பைத் தீர்மானிப்பது சரியல்ல" (ஸ்ரீமத் பகவத் கீதா, பக்கம்: 274, நாக்பூர் வெளியீடு) என்று வெளிப்படையாகவே தெளிவுபட்டுவிட்டது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம். 

கீதையையே திருத்தி எழுதுபவர்கள், சனாதனத்தின் இழிவுகளை மூடி மறைக்க நாளை எதையும் செய்யத் துணிவார்கள்! 

2022 இல் கீதை, நாக்பூர் வெளியீடு

1919 இல் மனுதருமம்

அவர்கள் சொல்வது போல, சனாதனம் அழிவில்லாதது; என்றும் நிலைத்திருப்தல்ல. மாறாக, உடன் கட்டை ஏறுதலுக்குத் தடை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், விதவைகள் மறுமணம், தேவதாசி முறை ஒழிப்பு உள்ளிட்ட எண்ணற்ற சனாதனப் பழக்க வழக்கங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சனாதனத்தின் ஒரு பகுதி வீழ்த்தப்பட்டுள்ளது. 

Hence, sanatan is not eternal. It should be eradicated as soon as possible.

சனாதனம் குறித்த விரிவான விவாதத்திற்கு வித்திட்ட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!

வணக்கம்!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-12

நீதித்துறையில் சனாதனம்

பிராமணர்களோடுதான் நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு வரவேண்டும். (மனு 8: 1). இன்று நீதித்துறையே  பிராமணர்கள் கையில் இருக்கும் போது அவர்களுக்கு என்ன கவலை?

வருணாசிரம தருமப்படிதான் விசாரணை நடத்த வேண்டும் (மனு 8: 24); சாஸ்திரப்படிதான் தீர்ப்பு வழங்க வேண்டும் (மனு 8: 3) என்கிறது சனாதனம்.

சபரிமலை வழக்கில் ஒரு பார்ப்பனப் பெண் நீதிபதியினுடைய தீர்ப்பும், அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பார்ப்பன நீதிபதியின் தீர்ப்பும் சாஸ்திரப்படிதானே  வழங்கப்பட்டுள்ளது?

சூத்திரனும் நாத்திகனும் நீதிபதியாகக் கூடாது. அப்படி அவர்கள் நீதிபதிகளாகிவிட்டால் சேற்றில் சிக்கிய பசு போல அந்த நாடும் சிக்கி சீரழியும் (மனு 8: 20, 21). அதனால்தான் நீதித் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லையோ?

விசாரணையின் போது குற்றம் புரிந்தவன், அவன் பிராமணனாய் இருந்தால் 'உண்மையைச் சொல்' என்றும், வைசியனாய் இருந்தால் 'பொய் சொல்லாதே, சொத்து பூரா அழிஞ்சு போயிடும்' என்றும், சூத்திரனாய் இருந்தால் 'பொய் சொன்ன, கொன்னுடுவேன் படவா' என்றும் விசாரிக்க வேண்டும் (மனு 8: 88).

இன்றும்கூட காவல் நிலையங்களில், நீதிமன்றங்களில், ஆர் பி வி எஸ் மணியனுக்கு, பத்ரி சேஷாத்திரிக்கு, எஸ் வி சேகருக்கு ஒரு அணுகுமுறையும், சாதாரண சூத்திர உழைப்பாளிக்கு ஒரு அணுகுமுறையும் இருக்கத்தானே செய்கிறது.

பிராமணனைக் காப்பாற்ற பொய் சாட்சி சொல்லலாம் என்கிறது சனாதனம் (மனு 8-112). 

நமது தலைவர்களை மிகவும் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, வழக்கு என்று வந்துவிட்டால், தாங்கள் அவ்வாறு எதையும் பேசவில்லை என்று அவர்களே, அவர்களுக்கான பொய்சாட்சியாக பார்ப்பனர்கள் மாறிவிடுகிறார்களே? அங்கே நிற்கிறது சனாதனம்.

சூத்திரன் ஒரு பிராமணனைக் கொடுமைப் படுத்தினால், அவன் கையை வெட்டச் சொல்கிறது சனாதனம் (மனு 8: 270). மேலும், பெயரையும் சாதியையும் சொல்லி இழிவாகத் திட்டினால் பத்து அங்குல கம்பியைக் காய்ச்சி அவன் வாயில் சொருக வேண்டும் என்கிறது (மனு 8: 271).

உதயநிதியின் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் பத்து கோடி ரூபாய் சன்மானம் தருவேன் என்று ஒரு சாமியார் பேசுவதற்கும்,  சனாதனத்தை எதிர்த்தால் நாக்கைப் பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என கஜேந்திரசிங் செகாவத் என்ற மத்திய அமைச்சர் பேசுவதற்கும் சனாதனம்தானே வழிகாட்டுகிறது.

பிராமணனுக்கு ஒரு போதும் கொலை தண்டனை விதிக்கக்கூடாது; தலையை மொட்டையடித்தாலே அது கொலைத் தண்டனைக்கு ஒப்பானது. ஆனால், மற்றவர்களுக்கு கொலை தண்டனை உண்டு. (மனு 8: 379). 

பிராமணன் எந்தப் பாவம் செய்தாலும் அவனைக் கொல்லாமல் காயமின்றி அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (மனு 8: 380).

சங்கரராமன் கொலையும், காஞ்சி நடுவாளும், பெங்களூருவும் நினைவுக்கு வருகிறதா? என்ன செய்ய சாஸ்திரப்படிதானே நீதி வழங்க முடியும்?

இப்படி நீதி பரிபாலன முறையில், மாறுபட்ட விசாரணை முறைகளும், வேறுபட்ட தண்டனைகளும் வகுக்கப்பட்டிருக்கிறது. இன்றளவும், இதுதான் நடைமுறையாகவும் இருந்து வருகிறது.

தொழிலாளர்களைச் சுரண்டுவதில் சனாதனம்

பிராமணனுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவன் சூத்திரன் என்கிற தொழிலாளி. எனவே, ஒரு சூத்திரனுக்கு சம்பளம் கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ ஒரு பிராமணன் சூத்திரனிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம் என்கிறது சனாதனம் (மனு 8: 413).

சந்திரயான்-3 க்காக உழைத்த தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் சம்பள பாக்கி வைத்திருப்பதும் சனாதன ஆட்சியால்தானோ?

போரில் அடிமையாகப் பிடிபட்டவன் (1), பக்தியினால் வேலை செய்பவன் (2), வேசியின் மகன் அதாவது சூத்திரன் மகன் (3), தானமாகக் கொடுக்கப்பட்டவன் (4), விலைக்கு வாங்கப்பட்டவன் (5), குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்பவன் (6),  தான் செய்த குற்றத்திற்கான தண்டனையைக் கழிக்க வேலை செய்பவன் (7) என தொழிலாளர்களை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கிறது சனாதனம் (மனு  8: 415). பெரிய அளவில் ஊதியம் தராமல் இவர்களது உழைப்பைச் சுரண்டுவதற்கான ஏற்பாடுதான் இது.

அதேபோன்றதொரு சுரண்டல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்தில், இதுவரைத் தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, நான்கு சட்டத் தொகுப்புகளாகச் சுருக்கி, தொழிலாளர்களை ஏழு வகையாகப் பிரித்து, (1.நிரந்தரத் தொழிலாளர்கள், 2.NEEM தொழிலாளர்கள், 3.பயிற்சியாளர்கள் (apprentice), 4.தொழில் பழகுனர்கள் (probationers), 5.FTE தொழிலாளர்கள், 6.ஒப்பந்தத் தொழிலாளர்கள், 7.பதிலிகள்), இதில் பெரும்பாலானோருக்கு சொற்ப கூலியைக் கொடுத்து அதானி அம்பானி போன்ற பார்ப்பன பனியா முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது இன்றைய மோடி தலைமையிலான சனாதன ஆட்சி.

*****

சனாதனம் எப்படி உயிர் வாழ்கிறது, அதை எப்படி வீழ்த்தப் போகிறோம் என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Wednesday, 20 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-11

'சனாதன தருமம் சமத்துவத்தை போதிக்கிறது, அதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை' என்று சப்பை கட்டு கட்டுகின்றனர் அதன் ஆதரவாளர்கள். இது உண்மையா?

சமத்துவமின்மையே சனாதன தருமத்தின் வேர்

சாஸ்திரப்படி தற்போது நடப்பது கலியுகம். கலியுகத்தில் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வருணங்கள் மட்டுமே இந்து மதத்தில் உண்டு. சத்திரிய, வைசிய வருணங்கள் கிடையாது. இவை தவிர அவர்ணர்கள் என்று சொல்லக்கூடிய தீண்டத்தகாத பிரிவினரும் இன்றைய இந்து மதத்தில் அடங்குவர். 

சனாதன தருமப்படி இந்து மதத்தில், தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பிராமணர்கள் கருதிக் கொள்கின்றனர். அடிமட்ட வேலை செய்தாலும், அன்றாடம் கஞ்சிக்கே அல்லாடினாலும் ஒரு பார்ப்பனனின் மனநிலை இதுதான்.

அதேபோல, சூத்திர சாதிகளில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பிள்ளைமார்களும், அதற்கு அடுத்து செட்டியார், நாயுடு, ரெட்டி,  முதலியார், வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர், முத்தரையர், வண்ணார், நாவிதர், நாடார் என ஏணிப்படிகள் போல அமைக்கப்பட்டுள்ள சாதிகளில் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். தீண்டத்தகாத சாதிகளில் பள்ளர்கள் உயர்ந்தவர்களாகவும் அடுத்து பறையர்களும், அதற்கு அடுத்து சக்கிலியர்களும் என படிநிலையாக உயர்வு தாழ்வு பேணப்படுகிறது.

இத்தகைய உயர்வு தாழ்வு பார்ப்பது என்பது இவர்களிடம் தானாக வந்துவிடவில்லை. மாறாக பார்ப்பனர்களிடமிருந்தே இவர்கள் இதை கற்றுக் கொண்டனர். சமத்துவமின்மையே சனாதனத்தின் ஆணிவேர்.

உயர்ந்த இடத்தில் பார்ப்பனர்கள்

எந்தப் பிராணியும் பசுவை விட உயர்ந்தது கிடையாது, புழு பூச்சிகளை விட பசு உயர்ந்தது, பசுவை விட மனிதன் உயர்ந்தவன், மனிதர்களில் அந்தணர்கள் உயர்ந்தவர்கள், அந்தணரை விட பண்டிதர் உயர்ந்தவர், பண்டிதரைவிட ஞானிகள் உயர்ந்தவர்கள். (மனு 1: 96, 97).

அக்ரகாரத்தில் குடியிருக்கும் ஒரு சாதாரண பிராமணன் மற்ற இந்துக்களைவிட உயர்ந்தவனாவான். சாதாரண பிராமணனைவிட, வேதம் ஓதும் அர்ச்சகன் பண்டிதராக உயர்ந்து நிற்கிறான். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் சங்கராச்சாரியார், ஜீயர் போன்ற ஞானிகள் எல்லோரையும் விட உயர்ந்து நிற்கிறார்கள்.

சலுகை பெற்ற பார்ப்பனர்கள்

பார்ப்பனர்கள் மேலான தெய்வம் அல்லவா?; அதனால் இவர்கள் கெட்டவர்கள் ஆனாலும், பூஜிக்கத் தக்கவர்கள். (மனு 9: 316).

அதனால்தான் கருவறையில் சல்லாபம் செய்த காஞ்சி தேவநாதனும், அனுராதா ரமணனை சல்லாபத்திற்கு அழைத்த காஞ்சி நடுவாளும்,  சொர்ணாக்காவோடு பாண்டி விளையாடிய இளையவாளும் பூஜிக்கப்படுகிறார்கள்.

பார்ப்பனர்கள் பிறருக்குக் கெடுதல் செய்தாலும், அவர்களுக்கு நாம் திருப்பிக் கெடுதல் செய்யக்கூடாது (மனு 4: 162). அவர்கள் செய்யும் குற்றத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் (மனு 7-32).

சூத்திரர்களுக்கு எதிராக வஞ்சத்தைக் கொட்டும் எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும், பத்ரி சேஷாத்ரியையும், இன்ன பிற பார்ப்பனர்களையும் எதுவும் செய்ய முடிவதில்லையே? எதனால் என்று புரிகிறதா?

அதிகாரத்தில் பார்ப்பனர்கள்

மன்னராட்சிக் காலமானாலும், ஜனநாயகக் குடியரசுக் காலமானாலும் பார்ப்பனர்கள் தங்களுடைய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவே முயல்கின்றனர். 

பிராமணன் சொல்படிதான் ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். (மனு 7: 37), அவ்வாறு ஆட்சி நடத்துகிற போது தனக்கு நியாயம் என்று தெரிந்தாலும், அதை பிராமணனிடம் வணங்கிக் கேட்க வேண்டும். (மனு 7: 39). அவ்வாறு வணங்காததால் வேணன் யவணன் போன்ற மன்னர்கள் அழிந்து போனார்கள் (மனு 7: 40, 41);  வணங்கியதால் பிருகு, விசுவாமித்திரன், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் வாழ்ந்தார்கள். (மனு 7: 42).

பார்ப்பனர்களை வணங்காததால்தான் அன்று கருணாநிதியை குடைந்தெடுத்தார்கள். இன்று ஆளுநர் ஆர்.என் ரவி சொல்வதைத் கேட்காததால் ஸ்டாலினைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சரவையில் வேதம் தெரிந்த மந்திரிகள், அதாவது நிதின் கட்கரி, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி, பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் போல குறைந்த பட்சம் ஏழு-எட்டு பார்ப்பனர்களை வைத்துக் கொள்ள வேண்டும். (மனு 7: 54). ஆட்சித் தலைவன் இவர்களிடம் அன்றாடம் ஆலோசனை கேட்க வேண்டும் (மனு 7: 59). மோடி இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பேருக்கு ஒரு பார்ப்பன எம்எல்ஏ கூட கிடையாது. இதில் மந்திரி சபைக்கு எங்கே போவது? தமிழ்நாடு இப்படி இருப்பதனால்தான் ஸ்டாலின் மீது பார்ப்பனர்கள் கடும் கோபத்தைக் கொட்டுகின்றனர்.

சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களை அயல்நாட்டுத் தூதர்களாக வைத்துக் கொண்டால் அது ஆட்சியாளருக்கு பெருமை சேர்க்கும் என்கிறது சனாதனம் (மனு 7: 63, 64). 

இன்று இந்தியாவின் அயல்நாட்டுத் தூதர்கள் கிட்டத்தட்ட அனைவருமே பார்ப்பனர்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தத் தூதர்கள் மோடிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்தானே?

IIM, IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், ஆட்சி அதிகாரத்தின் கேந்திரமானத் துறைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நாத்திகர்கள் பற்றி

சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பனர்கள் வாழக்கூடாது. (மனு 4: 61). சனாதன தருமப்படி பார்த்தால் பார்ப்பனர்கள்தான் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஆனால், அவர்கள் ஆட்சியில் உள்ள உதயநிதியை வெளியேறச் சொல்லுகிறார்கள்.

இதற்கும் சனாதன தருமத்தில் வழி வைத்திருக்கிறார்கள். வேதத்தை நம்பாதவனை மதிக்காதே என்கிறது சனாதனம். (மனு 4: 30). அதனால்தான் பெரியாரை, அண்ணாவை, கலைஞரை, உதயநிதியை அவர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். 

கடவுளை நம்பாதவனை மட்டுமன்றி வேதத்தை நம்பாதவனும், நிந்திப்பவனும் நாத்திகன்தான். (மனு 2: 11). சனாதன தருமபப்படி, சத்தியவேல் முருகனாரும், பிரஜாபதி அடிகளாரும் நாத்திகர்கள்தான்.

*****

அடுத்து நீதித்துறையில் சனாதன தருமம் குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-10

கர்ப்ப தோஷம், மாதவிலக்கு போன்றவற்றில் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது சனாதனம் என்பது குறித்து ஏற்கனவே பார்த்துள்ளோம்.

பெண் அர்ச்சகர்கள்: சனாதானத்திற்கு சம்மட்டி அடி

பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களை ஒரு இழி பிறவியாகவே நடத்துகிறது சனாதனம். பார்ப்பன-சத்திரிய-வைசியப் பெண்களாக இருந்தாலும், அவர்களுக்குப் பூணூல் அணியும் உரிமையை மறுத்து சூத்திர நிலைக்குத் தள்ளிவிடுகிறான் மனு (மனு 2:66). 

வேத-மந்திரம் ஓதுகின்ற உரிமை சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டதால்தான், ஆகமக் கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள், அதாவது சூத்திரர்கள் அர்ச்சகர் ஆவதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது பார்ப்பன சனாதனக் கும்பல். மனுவின்படி பெண்களும் சூத்திரர்கள் என்பதால் அவர்களுக்கும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது.

மாதவிடாய்க்கு ஆட்பட்ட பெண்கள் கோவிலுக்கே வரக்கூடாது என சபரிமலையில் சண்டமாருதம் செய்யும் சனாதனத்தை, அதன் பிடறியிலேயே அடித்து மாதவிடாய் காலத்திற்குட்பட்ட இளம் வயதுப் பெண்களை அர்ச்சகராக்கி, சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் அரசு. சனாதன எதிர்ப்புப் போராட்டத்தில் இது ஒரு மைல்கல்.

பெண் அர்ச்சகர்கள்

குழந்தைத் திருமணம்

கூப்பிடுவதற்கு சுகமாய் இருக்கும்படி பெண்களுக்குப் பெயர் வைக்க வேண்டும் (மன 2: 33) என்று சொல்லியும், அன்ன நடை நடக்க வேண்டும், சிறு குரல் உடையவர்களாக இருக்க வேண்டும் (மனு 3: 10), கணவனை விட அதிக உயரமாக இருக்கக் கூடாது (மனு 3: 8) என இலக்கணம் வகுத்துப் பெண்களை கீழே தள்ளுகிறான் மனு. பெண் பார்க்கச் செல்லுகையில் இவை எல்லாம் இன்றும் சோதிக்கப்படுகிறதுதானே?

ருது காலத்திற்கு முன்பே, அதாவது எட்டு வயதுக்கு முன்பே, (மனு 9-88), தந்தையின் அனுமதி பெற்று (மனு 3: 4), தந்தை யாரைக் காட்டுகிறானோ அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் (மனு 5-151).

ஏப்ரல் 1, 1930 அன்று ஆங்கிலேயன் கொண்டு வந்த குழந்தைத் திருமண தடைச் சட்டம் சனாதனத்திற்கு சாவுமணி அடித்தது. ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்பது இன்று விதியாயிற்று. இல்லையேல் இன்று கம்ப்யூட்டரைப் கையாலும் கைகள் கரண்டியை மட்டும்தான் பிடித்துக் கொண்டிருக்கும்.

ஒரு பெண்ணை ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக நிச்சயம் செய்த பிறகு அத்திருமணம் நின்று போனால், அவனது தம்பிக்கோ அல்லது அண்ணனுக்கோ அந்தப் பெண்ணைக் கட்டி வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது சனாதனம் (மனு 9: 69).

அப்பப்பா! சனாதனத்தை நினைத்தாலே படு பயங்கரமாக இருக்கிறது பெண்களின் நிலை.

கேடுகெட்டவனானாலும், கணவனே கண்கண்ட தெய்வம்

கணவன் எவ்வளவுதான் கேடு கெட்டவனாக இருந்தாலும், (அண்ணன் சீமானைப் போல பொம்பள) பொறுக்கியாக இருந்தாலும், அவனிடம் நற்குணங்கள் ஏதும் இல்லை என்றாலும், (அண்ணி கயல்விழி போல) கணவனை தெய்வமாகப் பூசிக்க வேண்டும் என்கிறது சனாதனம் (மனு 5-154).

கணவன் ஒரு சூதாடியாக, குடிகாரனாக, நோயாளியாக இருந்தாலும் அவனுக்கு மனைவியானவள் பணிவிடை செய்ய வேண்டும்; பணிவிடை செய்ய மறுத்தால் மூன்று மாத காலத்திற்கு அவளுக்கான அலங்காரத்தையும் உடைகளையும் படுக்கையையும் பறித்துக் கொள்ளச் சொல்கிறான் மனு (மனு 9-78).

கூட்டிக் கொடுக்கும் சனாதனம்

குழந்தை இல்லை என்றால், கணவன் மற்றும் மாமனாரின் ஒப்புதலோடு,  கணவனுடைய அண்ணனுடனோ அல்லது தம்பியுடனோ அல்லது ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகளிடமோ படுத்து, பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கிறது சனாதனம் (மனு 9: 59). நல்ல வேளை, இன்று டெஸ்ட் டியூப் பேபிகள் வந்துவிட்டதால் பெண்கள் தப்பித்தார்கள்.

படுக்கையும், காமமும், அலங்காரமும் பெண்களுக்கானது (மனு 9: 17). பெண்கள் பெரும்பாலும் விபச்சாரத் தன்மையுடையவர்கள் (மனு 9-19), என்பதனால் அவர்கள் தனியாக இருக்கக் கூடாது (மனு 5: 149) என்கிறது சனாதனம்.

மனைவி மலடியாக இருந்தால் அல்லது நோஞ்சான் குழந்தையைப் பெற்றெடுத்தால் அல்லது தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அத்தகைய மனைவியை ஓரங்கட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணை கணவன் திருமணம் செய்து கொள்ளலாம் (மனு 9: 81). இன்றும் தொடரும் சனாதன அவலம் அல்லவா இது!

பெண்களுக்குச் சொத்துரிமை

சிறுவயதில் தகப்பன் பாதுகாப்பிலும், திருமணத்திற்குப் பிறகு கணவன் பாதுகாப்பிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளையின் பாதுகாப்பிலும்தான் ஒரு பெண் இருக்க வேண்டும் (மனு 5: 148). இப்படி தந்தை-கணவன்-மகன் பாதுகாப்பில் இருப்பதனால் அவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது என்கிறான் மனு (மனு 9: 3).

பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்றால், அவர்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென 1929,  செங்கல்பட்டு மாநாட்டில் தந்தை பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை, 1989 இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனிச் சட்டமாகக் கொண்டு வந்து, சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உத்தரவாதம் செய்தார்.

விதவைக் கோலமும் உடன்கட்டையும்

கணவனை இழுந்த ஒரு பெண் விதவையான பிறகு, நல்ல உடை உடுத்தக் கூடாது, மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளை உடைதான் உடுத்த வேண்டும். கிழங்கு, பழம், பூ தவிர வேறு நல்ல உணவை உண்ணக் கூடாது, சொற்பமான அளவே சாப்பிட வேண்டும் (மனு 5: 157), மறுமணம் செய்து கொள்ளக் கூடாது (மனு 5: 162) என கட்டுப்பாடு விதிக்கிறது சனாதனம். ஆனால் மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என ஆணுக்கு மட்டும் சலுகை அளிக்கிறது (மனு 5: 169).

விதவைப் பெண்கள் இந்த விதிகளை மீறிவிட்டால், சாஸ்திரம் அழிந்து போகும் என்பதனால்தான் இறந்துபோன கணவன் எரிக்கப்படும் போது அந்தத் தீயில் அவனது மனைவியும் தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உடன் கட்டை ஏறுதல் வழக்கத்தைக் கொண்டு வந்தனர். இதுவும் வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் முடிவுக்கு வந்தது.

1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விதவைகள் மறுமண உதவித்தொகைத் திட்டம், விதவைப் பெண்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது.


அடுப்பங்கரையிலிருந்து சந்திரயானை நோக்கி...

வீட்டை சுத்தம் செய்தல் (மனு 5: 150), பிள்ளைகளைப் பெறுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல், விருந்தினர் வந்தால் உபசரித்தல் இவைதான் பெண்களுக்கான வேலை என்கிறது சனாதனம் (மனு 9-27), 

கலைஞர் கருணாநிதி அவர்கள் 1989 ஆம் ஆண்டு அரசு வேலைகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால், ஏராளமான பெண்கள் வெளியில் வேலைக்குச் சென்று சம்பாதித்து, சொந்தக் காலில் நிற்பதைக் கண்டதால்தான், தமிழ்நாட்டில் பெண் கல்வி மிகத் தீவிரமாக முன்னேற்றம் அடைந்தது. அதன் விளைவாகத்தான் இன்று மருத்துவம், பொறியியல், கல்வி, ஐடி உள்ளிட்ட துறைகளில் பெண்கள் கோலோச்சுகின்றனர். சனாதனத்தை அடுப்பில் போட்டுப் பொசுக்கிவிட்டு சந்திரயானில் பறக்கின்றனர் பெண்கள்.

பார்ப்பன சனாதனவாதிகள் கூச்சலிடுவததைப் போல சனாதனத்தைப் பாதுகாத்தால் பெண்களின் கதி என்னவாகும் என்று எண்ணி பாருங்கள்.

*****

சாதிய ஏற்றத்தாழ்வு, பார்ப்பனிய மேலாதிக்கம் குறித்து இனி பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்