Friday, May 10, 2024

நினைவில் நிழலாடும் பள்ளிப் பருவம்! ---1

மேல்நிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறித்து பேசப்படும் இத்தருணத்தில், ஏனோ, எனது பள்ளிப்பருவ நாட்கள் என் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

கிராமத்தை விட்டு வயல்வெளியிலேயே நாங்கள் குடியிருந்ததால், முதலாம் வகுப்புக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். சாலை வசதி கிடையாது. வயல் வரப்புதான் பாதை. மட்டவெட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எப்படியோ ஐந்தை முடித்தாயிற்று. ஆனால், ஆறாம் வகுப்புக்கு மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்பதால் பாசக்கார எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் நாங்கள் உயரமாக வளர வேண்டும் என்பதற்காகவே ஐந்தாம் வகுப்பிலேயே மேலும் ஓர் ஆண்டுக்கு  நிறுத்திக் கொண்டார்.

நடுப்பாலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டு வரை வெற்றிகரமாக முடித்தாயிற்று. இதுவரை நடைபயணம்தான். முழு ஆண்டுத் தேர்வு எழுதிவிட்டு இடையில் பள்ளியை எட்டிக் கூட பார்க்காததால் முதல் மாணவன் என்ற தகுதி இருந்தும் அன்றைய உதவித்தொகை பெறுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு எழுவதற்கான வாய்ப்பையும் நழுவ விட்டேன்.

ஒன்பதாவது படிக்க உயர்நிலைப்பள்ளி செல்ல வேண்டும்.
காஞ்சி, கடலாடி, புதுப்பாளையம் என மூன்று திசைகளில், கிட்டத்தட்ட சம தொலைவில் மூன்று உயர்நிலைப் பள்ளிகள் இருக்க, நான் காஞ்சியை நோக்கிப் படையெடுத்தேன்.

செய்யாற்றங்கரையையொட்டி ஊருக்கு உள்ளே இருந்த பள்ளிக்கூடம் இட வசதி போதாததால் ஆற்றின் அக்கரையைத் தாண்டி புதிய வளாகத்தில் தொடங்கப்பட்டிருந்தது. வகுப்பறையில் சுற்றுச்சுவர் கூட முழுமையாக எழுப்பப்படாத நிலையில் தென்னங்கீற்று கூரையின் கீழ்தான் பள்ளி இயங்கியது. 1972 இல் நாங்கள் வைத்த புங்கன் கன்றுகள் பெருமரங்களாய் எழும்பி நின்று இன்று நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

விதவிதமாய் உடை உடுத்தி, ஒய்யாரமாய் நடை நடந்து வித்தை காட்டும் ஒருவன் தனக்கு சொந்தமாக ஒரு மிதிவண்டி கூட இல்லை என்று புலம்பும் காலம் இது. ஆனால், அன்றே நான் மிதிவண்டிக்குச் சொந்தக்காரன் ஆனேன். வேறு வழி? கடன் பட்டாவது வாங்கித்தானே ஆக வேண்டும். பத்து கிலோமீட்டர் நடக்க வேண்டுமே? முடியுமா? 

காலை 8 மணி வரை வயலில் வேலை செய்துவிட்டு கிணற்றில் மூழ்கி எழுந்துப, ஈரத்தோடு வீட்டுக்கு ஓடோடி வந்து, பள்ளிச் சீருடைக்கு மாறி, அம்மா செய்து வைத்த உணவு பழையதோ புதியதோ வயிற்றுக்கு கொஞ்சம் போட்டுக் கொண்டு, பித்தளை தூக்குவாளியில் மதிய உணவிற்காக கொஞ்சம் அடைத்துக்கொண்டு, மிதிவண்டியின் கிராஸ்பாரில் அதை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு, பள்ளி பாடப் பத்தகம் நோட்டுகளை ஒரு கைப்பையில் திணித்து, அந்தப் பையை மிதிவண்டியின் ஹேண்ட்பாரிலே மாட்டிக் கொண்டு, ஒரு கிலோ மீட்டருக்கு ஏறிக்கரை வயல் வரப்பு என ஏறி இறங்கி, அதன் பிறகு சாலை வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து மூச்சிரைக்க பள்ளிக்குச் சென்றடைந்தால், அப்பொழுது காலை பிரேயர் நடந்து கொண்டிருக்கும். மிதிவண்டி பழுதானால் பாலூர் பாபுஜான் கடையில் விட்டுவிட்டு பழுது பார்க்கப்படும் வரை மொத்த தூரமும் நடைபயணம்தான்.

தொடக்கப் பள்ளியிலும் நடுநிலைப் பள்ளியிலும் படித்தபோது மதிய உணவு கிடைத்தது. ஆனால்  ஏனோ உயர்நிலைப் பள்ளியில் கிடைக்கவில்லை. கடைசி வரை கட்டுச் சோறுதான். ஜோல்னா பைகளோ, ஏர்பேக்குகளோ அன்று கிடையாது என்பதால் கைப்பைகள்தான் எங்கள் சொத்துகளைக் காத்தக் பெட்டகங்கள்.

தாமதமாக வந்தவர்கள் பிரேயர் முடியும் வரை காத்திருந்த பிறகு பள்ளி மைதானத்தில் ஐந்து ரவுண்டு ஓட விடுவார்கள். தாமதத்திற்கான தண்டனை அது. அனேகமாக இந்தத் தண்டனையை அன்றாடம் அனுபவித்தவன் நான். 

தொடரும்

ஊரான்

No comments:

Post a Comment