Wednesday, September 25, 2024

பேளுவதற்கு அவனை நாடினால் பாடைதான் உனக்கு!

ஆடியைப் பீடை என்றான்
புரட்டாசியே கூடாதென்றான்
மார்கழியை மட்டமென்றான்
இப்படி, 
ஆண்டின் கால்வாசியை 
நம்மிடமிருந்து 
பிடுங்கிக் கொண்டான்!

மாதத்தில் 
பாதி நாளை 
தேய்பிறை என்று 
திருடிக் கொண்டான்
வளர்பிறைதான் 
வளர்ச்சி என்றான் 
அதிலேயும்
திங்களும் செவ்வாயும் 
வியாழனும் விளங்காதென்றான்
சனி கூட சங்கடமென்றான்
மீதம் இருப்பதோ 
ஞாயிறு புதன் 
வெள்ளி மட்டுமே!

அதிலேயும்,
பொழுது சாஞ்சிருச்சி - என 
பாதி நாளை 
எடுத்துக் கொண்டான்.
இந்தப் பாதியிலும் பாதியை
எமகண்டம், குளிகை, 
இராகு காலம் என 
எடுத்துக் கொள்ள - சில மணித்துளிகளை மட்டுமே 
நமக்கு விட்டு வைத்தான்!


இவை தவிர 
அஷ்டமி நவமி என 
நம்மை நடுங்க வைத்து 
அந்தத் துளிகளையும் 
வழித்துக் கொண்டான்.
கழித்துப் பாருங்கள்
வழித்தது போக
இருப்பது எவ்வளவு என்று?

இதில்தான்,
பருவம் எய்தபின் 
இணை தேட,
அதுகுறித்துப் பேச-சந்திக்க
பிறகு, 
கை நனைக்க
நிச்சயம் செய்ய
முகூர்த்தப் புடவை, 
தாலி எடுக்க என
நேரம் காலம் பார்க்க வைத்தான்!

அவன் வகுத்த நாளிலும்
அவன் குறிக்கும் நேரத்திலும் மட்டுமே 
மணம் முடிக்கனும்
முதலிரவைக்கூட கூட 
அவன்தான் குறிப்பான்
அதையும் வெட்கம் இன்றி அவனிடம்தான் கேட்கிறோம்!

கருவுற்றால் தோஷம் என்றான்
வலைகாப்பே அதை 
போக்கும் என்றான்
அதற்கும் 
அவனே நாள் குறித்தான்!

சூரியன்-சுக்கிரன் 
சந்திரன்-லக்னம் என்றான்
ராகு-கேது, 
செவ்வாய் தோஷம் என்றான்
பயபீதி நம்மைத் 
தொற்றிக் கொள்ள
வேண்டிய ராசி-நட்சத்திரத்திற்காக
தாயின் கருவறையில் 
கை நுழைத்து 
பச்சிளம் சிசுவை 
குறுதி சொட்டச் சொட்ட
இழுத்துப் போட்டான்!

தவழும் மழலையை 
தொட்டிலில் போட 
அதற்கும் கூட 
அவனைத்தான் தேடுகிறோம் 
நாள் நேரம் குறிக்க!
பிறகு,
பெயர் வைக்க
பெண் பூப்பெய்தால்
அதையும் தீட்டாக்கி 
அதைக் கழிக்க 
பூப்புனித நீராட்டு என்றான்
இதற்கும் அவனைத்தான் நாடுகின்றோம்!

பிறகு
இணை தேட
மீண்டும் முதலிலிருந்து

இவை மட்டுமா?
துன்ப காலத்தில் 
கை நீட்டி கடன் வாங்க,
சொத்து-நகை வாங்க
மனை வாங்கி பதிவு செய்ய
பூமி பூஜை போட
வாசக்கால் பதிக்க
முடிந்தபின் குடி புக 
என 
எல்லாவற்றிற்கும் அவன்தான் 'அத்தாரிட்டி!'
இவை எல்லாம் போதாதென்று
வீட்டைப் பூட்ட
வாசலைத் தாண்ட
பயணம் தொடர என 
இந்தப் பட்டியல் 
சிந்துபாத்தையே விஞ்சுகின்றன!

நல்ல வேளை
பேளுவதற்கு மட்டும்
அவனை நாம் நாடவில்லை
நாடினால் 
நமக்குப் பாடைதான் மிஞ்சம்!

பார்த்தீர்களா, 
காலநேரம்தான் எத்தனைக் கொடியது?
நாமும்தான் என்ன செய்வோம்? துன்பங்களும் துயரங்களும் நம்மைத்
துரத்தத் துரத்த 
அதற்கான 
காரணங்களையும் 
களையும் வழிகளையும் 
காண முடியாமல்
காலத்தையும் நேரத்தையும் தேடி அவனை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?
 
ஊரான்

No comments:

Post a Comment