Monday, October 14, 2024

இலக்கியத்திற்கு வடார்க்காடு தூரமா? - தொடர் 1

தெற்கிலிருந்து குமரிக்கடலின் நாஞ்சில் நாடும், தாமிரபரணியின் நெல்லைச் சீமையும், விருதுநகரின் கரிசல் காடும், காவிரி பாயும் சோழ மண்டலமும்தான் இலக்கியத்தின் விளைநிலங்களா? இதைத் தாண்டி வடக்கே வந்தால்
தொண்டைமண்டல வடார்க்காட்டில் பாலாற்றைப் போல இலக்கியமும் வறண்ட பாலைகள்தானா?

சாகித்ய அகாதமி விருது பெற்ற திருப்பத்தூரின் மு.வரதராசனாருக்கு முந்தியும் பிந்தியும் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய வடார்க்காட்டில் இலக்கியங்கள் படைக்கப்படவில்லையா, இலக்கியவாதிகள் யாரும் உருவாகவில்லையா?

1800 ஆண்டுகளுக்கு முன்பு ஜவ்வாது மலையையொட்டிய செங்கன்மாநகரின் நன்னனைப் பாடிய  மலைபடுகடாம் கண்டவர்களால் இடையில் ஏன் இலக்கியம் படைக்க முடியாமல் போனது?
 
பத்துப் பாட்டில்வரும் ஒரு சங்க இலக்கிய நூல் இது. இன்றைய செங்கம்தான் மலைபடுகடாமின் செங்கன்மாநகர் என வரலாற்றுக் குறிப்புகள் கூறினாலும், இது மட்டவெட்டு கிராமத்தில் புதையுண்டு கிடக்கும் நகரமாகக்கூட இருக்கலாம் என்கிற ஒரு கருத்தும் நிலவுகிறது.
 
நேர், நிரை, தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என சீர் கொண்டு இயற்கையை, காதலை, மனித வாழ்வியலை, அறநெறியைப் பொருளாகக் கொண்டு  செய்யுள்  கண்ட காலம் ஒன்றிருந்தது. அதன் பிறகு வடவரின் வரவால் கடவுளை மட்டுமே பாடியத் துறவிகளால் இலக்கியமும், மனித வாழ்வியலை விட்டகன்று துறவறம் பூண்டது. இலக்கியம் மட்டுமா, படிப்பும் பாடமும்கூட நம்மை விட்டுப் பிரிந்து அக்கிரகாரத்தில் அடைக்கலமானது.
 
எழுத்திருந்தும், தமிழ் பெரும்பாலானோரின் பேச்சு மொழியானதுதமிழ்க் குடிகளும் மீண்டும் கற்கால மனிதர்களாகினர்வெறும் பேச்சு மொழியால் வட்டார வழக்குகளே கோலோச்சின
நெல்லைத் தமிழும்கொங்குத் தமிழும், வடார்க்காடு தமிழும் இப்படித்தான் வடிவமெடுத்ததோ
ஒருவேளை எழுத்துப் படிப்பு நம்மோடு தொடர்ந்திருந்தால் வட்டார வழக்கும் வராமல் போயிருக்குமோ? வடார்க்காட்டின் கெல்லு, கீது, கீறான், கெயவி, கெயவன், பூட்ச்சி என்கிற இன்னபிற வட்டார வழக்கும் பிறரால் இழிவுக்கு உள்ளாகாமல் இருந்திருக்குமோ? 

நல்லவேளை வெள்ளைக்காரன் வந்தான். ஏட்டுச்சுவடிகளை தூசு தட்டினான். பாடுவதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கும் தமிழ் தேவை என்பதை தமிழன் உணர்ந்தான். ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள் கண்டான். அதுதான் நமக்கான சமூக நீதி என்றான். தமிழனும் மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டி மீண்டும் படிக்கத் தொடங்கினான். நேர்-நேர்-நிரையும், தேமா-புளிமாவும், கூவிளம்-கருவிளமும் மீண்டும் புழக்கத்திற்கு வந்தன. ஆனாலும், ஊருக்கு ஒருவரோ இருவரோதான் இதில் பழக்கப்பட்டதால் அன்றாட வாழ்வில் வட்டார வழக்கே பலரிடமும் இன்றும் கோலோச்சுகிறது.
 
பள்ளியைத் தாண்டிய சிலர் கல்லூரிகளுக்கும், கல்லூரி முடித்த சிலர் வேலைகளுக்கும் வேறு வேறு ஊர்களுக்குச் சென்றதால்
அவர்களால் பிற பகுதி மக்களின் மொழி நடையை, வாழ்வியலை அறிந்து கொள்ள முடிந்தது. இலக்கியப் படைப்புகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது. எழுத்துச் சொல்லும், பேச்சுச் சொல்லும் வேறு வேறாய் இருப்பதை உணர முடிந்தது.
 
செய்யுளில் தொடங்கிய இலக்கியம் பிறகு பாடலாய், கவிதையாய், உரை நடையாய், சிறுகதையாய், நாவலாய் என பல வடிவங்களில் இன்று நடைபோடுகின்றன. எழுத முனைந்தோர் பேசும்போது, வட்டார வழக்கு மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. வட்டார வழக்கு என்று மறைகிறதோ அன்றுதானே சங்ககாலம் போல நாம் அசலான தமிழ் பயின்ற மாந்தவினமாவோம்!
 
இலக்கியங்களில் மட்டும் தமிழ் வாழ்ந்தால் போதாது, தமிழ் நமது அன்றாட வாழ்வின் அங்கமாக மாற வேண்டும். இதற்கு தமிழ் பயின்றால் மட்டும் போதாது, தமிழ் ஆட்சி மொழியாகவும், தொழில் மொழியாகவும் (professional language) மாற வேண்டுமல்லவா?
 
தொடரும்
 
ஊரான்

No comments:

Post a Comment