Friday, October 4, 2024

சாம்சங் தொழிலாளர்கள் நம்ம வீட்டுப் பிள்ளைகள் இல்லையா?

அண்மையில் எனது பள்ளித் தோழனிடம் குசலம் விசாரித்த போது, “புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமைக்குள் ஏரி கோடி போகவில்லை என்றால் அந்த ஆண்டு வேளாண்மை விளங்காதுஎன  50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைகளை நினைவு கூர்ந்தான்

ஏரிப் பாசனத்தில் இரண்டு போகம் விளைந்தாலே, பத்தைப் பெத்துப் போட்டாலும் பட்டினி இல்லாமல் வாழ முடிந்தது அன்று.

சுற்றுச்சூழல் கேடுகளாலும், பருவநிலை மாற்றங்களாலும், வழமையான மழைப்பொழிவு அற்றுப் போனதால், வயிற்றுப் பாட்டுக்குக் கூலிகளாக நகரங்களை நோக்கி நகரத் தொடங்கினர் கிராமவாசிகள்.


போராடும் சாம்சங் தொழிலாளர்கள்

கிராமப்புறங்களில் கிடைத்த அரைகுறை கல்வியில் நீந்திக் கரை சேர்ந்த ஒரு சிலர் ஆலைகளுக்கும், அலுவலக வேலைகளுக்குமாக இடம் பெயர்ந்தனர். படிக்காத பாமரர்களோ கிடைத்த வேலைகளில் ஒட்டிக்கொண்டனர்.

ஒரு பக்கம் வேலை கிடைத்தாலும், மறுபக்கம் விலைவாசி உயர்வால் மேலும் வயிறுகள் காய்ந்ததே ஒழிய நனைந்ததாய் இல்லை. 1980 களில் தொடங்கிய இந்தப் போக்கு, தாராளமயக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு 1990 களின் இறுதியில் தீவிரமடைந்தது.

நிரந்தரப் பணி என்றால் நிர்வாகத்திற்குச் சுமை என்பதை உணர்ந்துகொண்ட முதலாளிகள், நிரந்தரத் தன்மை கொண்ட வேலைகளைக்கூட ஒப்பந்த முறைக்கு மாற்றினார்கள்

இதனால், முதலாளிகளின் வயிறுதான் பெருத்ததே ஒழிய, தொழிலாளர்களின் வாழ்வு மேலும் நலியவே செய்தது. வாங்குகிற சம்பளம் வயிற்றுக்கே எட்டாத போது வாடகைக்கு வீடெடுத்து நகரங்களில் தங்க முடியுமா என்ன?  

தான் வாங்கும் ஊதியத்தில் தனக்குப் போக கொஞ்சமாவது உபரி இருந்தால்தானே உறவுகளையும் கவனிக்க முடியும்? தனக்கே எட்டாத போது அவன் என்னதான் செய்வான் பாவம்? ஓரிரு ஆண்டு அனுபவத்தில் கசந்து போய் மீண்டும் கிராமத்துக்கே திரும்ப சில இளைஞர்கள் முனைந்ததை உணர்ந்து கொண்ட முதலாளிகள் கிராமங்களை நோக்கித் தனது கம்பெனி வண்டிகளைத் திருப்பி விட்டு ஆட்களை அள்ளிச் செல்கின்றனர். அதே சம்பளம் என்றாலும், வாடகை மிச்சம் என்பதால் வேலையை விட முடியாமல் ஓரகடம், ஓசூரை நோக்கி ஆயிரக்கணக்கில் அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

படிப்பைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு சிலர் அன்று மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை என பெரு நகரங்களை நோக்கி அரசாங்க வேலைகளுக்காக நகர்ந்தனர். இன்று அமெரிக்காவை நோக்கி ஹாயாய் ஆகாயத்தில் பறக்கின்றனர். அங்கேயே செட்டிலும் ஆகி விட்டனர்

ஆனால் நம்ம ஆட்களும்  இன்று துபாய்க்கும், எமிரேட்சுக்கும் என எங்கெங்கோ பறக்கின்றனர். அவர்கள் செல்வ வளம் பெருக்க நகர்கிறார்கள்நம்மவர்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்காக ஓடுகிறார்கள்

பறக்க வேண்டாம், இங்கேயே சிறப்புப் பெறலாம் என்பதாலோ என்னவோ முதல்வர்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்கிறார்கள், முதலீடுகளை ஈர்க்கிறார்கள். ஆலைகளும் வருகின்றன. வேலைகளும் கிடைக்கின்றன. ஆனால், உழைப்புதான் சுரண்டப்படுகிறதே ஒழிய தொழிலாளர்களின் வாழ்வு சிறப்புற்றதாகத் தெரியவில்லை.

நமது மண்ணை, நமது நீரை, நமது கச்சாப் பொருட்களை, நமது உழைப்பைச் சுரண்டும் அந்நிய முதலாளிகள் கோடி கோடியாய் தங்களது நாடுகளுக்கு அள்ளிச் செல்கின்றனர்.

ஒரு காலத்தில் ஆலையில் பணிபுரியும் அனைவருமே நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள். நிரந்தர ஊழியர்கள் என்றால் முதலில் வேலைப் பாதுகாப்பு, போதுமான ஊதியம், விடுப்பு உள்ளிட்ட சட்டபூர்வமான எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், மெல்ல மெல்ல இங்கே ஒப்பந்த முறை புகுத்தப்பட்டு, வேறு எந்தவித சலுகைகளும் இல்லாமல் அற்பக் கூலிக்கு தொழிலாளர்கள் சுரண்டப்படுவது அதிகரித்தது. 

இந்த ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 1970 இல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுபோல தொழிலாளர்களுக்குச் சாதகமாகக் கொண்டுவரப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை இன்று நான்கு சட்டத்தொகுப்புகளாகச் சுருக்கி முதலாளிகள் மேலும் தொழிலாளர்களைச் சுரண்டிக் கொழுக்க வழி செய்து கொடுத்திருக்கிறார் மோடி. இதனால் உழைப்பு சுரண்டல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இப்படித்தான் தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது. 

இதனால், வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், தொழிற்சங்க அங்கீகாரம், மகப்பேறு விடுப்பு, 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாத காலமாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அயல்நாடுகளுக்கு ஆகாயத்தில் பறந்து முதலீடுகளை ஈர்க்கத் தெரிந்த முதல்வருக்கு, அருகில் உள்ள சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் மட்டும் கண்களுக்குத் தெரியவில்லையோ? தொழிலாளர்கள் எழுப்பும் முழக்கங்கள் ஆட்சியாளர்களின் செவிகளை எட்டவில்லையோ?

கண்ணிருந்தும் குருடர்களாய், செவி இருந்தும் செவிடர்களாய் இருப்போரின் கண்களைக் திறக்க, செவிகளில் அறைய நீலமலை, கோவை, சென்னை, இராணிப்பேட்டை என தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே இடதுசாரிகளும், தொழிலாளர்களும் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டுகின்றனர்.  

'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கதைப்பதனால் களம் மாறாது. மாறாக, வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீதியில் இறங்கியது போல, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாகின்பாத்துகளைக் கண்டதைப் போல, ஜல்லிக்கட்டுக்காக மல்லுக் கட்டியதைப் போல சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாம் களமாட வேண்டாமா? அவர்கள் நம்ம வீட்டுப் பிள்ளைகள் இல்லையா?

ஊரான்


x

No comments:

Post a Comment