இட ஒதுக்கீடு சர்வரோக நிவாரிணியா?
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடப்பங்கீடு என்பது சமூக நீதிக்கான முதல் படி. மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், எல்லாத் துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இட ஒதுக்கீட்டினால் சமதர்மம் வந்துவிடுமா என்றால், வராதுதான். ஆனால், இட ஒதுக்கீட்டினால் சமூக நீதி உறுதியாக வரும். இது இப்போதைக்கான முதல் தேவை.
இட ஒதுக்கீட்டினால் வேலையில்லாத் திண்டாட்டம் தீர்ந்துவிடுமா என்றால் தீராதுதான். ஆனால், தற்போது கிடைக்கிற அரசு வேலைகள் எல்லோருக்குமான பங்காகும். இதைப் பெறுவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு கொடுப்பது உடனடித் கடமையுமாகும்.
இப்படிப்பட்ட சம வாய்ப்பு தரும் சமூக நீதி நடவடிக்கைகளை, உயர் சாதியில் உள்ள அரசியல்வாதிகள் பேராசிரியர்கள் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் ஆய்வாளர்கள் பொதுநல ஊழியர்கள் மற்றும் மார்க்சியம் பேசும் புரட்சி மனப்பான்மை கொண்டோர் அனைவரும், இந்தச் சமூகக் கட்டமைப்பின் தன்மையை உணர்ந்து கொண்டு, இதைச் சரியான கோணத்தில் அணுகி மிகமிகப் பொறுப்புணர்வுடன் சிந்தித்து ஆதரிக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கா? சாதிகளுக்கா?
ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப் பரிந்துரைக்குமாறு இந்திரா காந்தியே மண்டல் குழுவிடம் கண் ஜாடை காட்டினார். ஆனால் ஜாடை எடுபடவில்லை.
ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினர், "ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு" என்று தங்கள் எதிர்ப்பை வேறு வகையில் பேசுகின்றனர். இது சரியா?
இந்துச் சமூக அமைப்பில், பிறப்பின் அடிப்படையில் மக்கள் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ மன்னர்கள், அன்னியர்கள் ஆண்ட போதும், இந்தச் சமூக அடித்தளமும் கட்டமைப்பும் அப்படியேதான் தொடர்கிறது. இதனால் விளைந்த சில கொடுமைகளை மட்டுமே ஆங்கிலேயர்கள் களையை முன் வந்தனர்.
இந்து மத மிதாட்சரச் சட்டப்படி தென்னாட்டில் பிராமணர், சூத்திரர் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே இருப்பதாக 1802 இல் ஆங்கிலேயர்கள் உறுதிப்படுத்தினர். இதில் சூத்திரர்கள் 97%, பார்ப்பனர்கள் 3%. தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொள்ளும் சைவைப் பிள்ளைமார்கள் உள்ளிட்ட சில உயர் சாதியினரையும் சூத்திரர்களாகத்தான் பார்ப்பனர்கள் கருதுகின்றனர்.
இந்து மத தாயபாகச் சட்டப்படி, வடநாட்டில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வருணங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதில் பார்ப்பனர்கள் 7%, மற்றவர்கள் 93%. இந்த 93% இல் சூத்திரர்கள் 80%.
நான்கு வருணத்தாருக்கு வெளியே இருந்த தீண்டத்தகாத மக்கள் சண்டாளர்கள் என வகைப்படுத்தப்பட்டு அவர்களை இந்துக்களாகவே ஏற்றுக் கொள்ளப்
பார்ப்பனர்கள் மறுத்து விட்டனர்.
சூத்திரர்களே இந்து மதத்தில் அதிகமாக உள்ளனர். மனு தர்மப்படி, பிறருக்குத் தொண்டு செய்வதே இவர்களுக்குக் கடமையாக்கப்பட்டதால். இவர்கள் கல்லாமையிலும் இல்லாமையிலும் வீழ்த்தப்பட்டனர். பண்பாட்டில் இவர்கள் அடிமைகளாகவே உருவாக்கப்பட்டனர்.
'வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு போதிய வாய்ப்பு அளித்தல்' என்கிற அடிப்படையில்தான் இன்று சூத்திரர்கள் என்று சொல்லப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு, கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது ஒரு இடைக்கால தீர்வுதான் என்றாலும் இதை ஒரு சீர்திருத்த ஏற்பாடாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்ற ஒரு சமூக அமைப்பு, அதாவது மார்க்சின் பொதுவுடைமைச் சமூகம் மலரும் போது வேண்டுமானால், சாதி அடிப்படையிலான வகுப்புவாரி இட ஒதுக்கீடுகள் தேவைப்படாமல் போகலாம்.
சமூகக் கட்டமைப்பு குறித்துத் தெளிவானப் புரிதல் இல்லாத காரணத்தினால்தான் ஏழ்மை அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோரிலேயே ஏழையாக உள்ளவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தரலாம் என்று சிலர் தவறாகப் பேசுகின்றனர்.
ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்பது சரியா?
இந்துச் சமூக அமைப்பு ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய படிநிலை சாதிகளைக் கொண்டது. சமூகத்தளத்திலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும் எல்லா சாதிகளும் சமமாக இல்லை. பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதிகளில் ஒருசில ஏழைகள் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத் தளத்திலும், பண்பாட்டளவிலும் அவர்கள் உயர் நிலையில் இருக்கிறார்கள். இதனால் வாழையடி வாழையாக அவர்கள் தங்கள் வாரிசுகளை வளர்த்தெடுப்பதற்கு ஏற்றக் குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, எல்லாச் சாதியினரையும் சரிநிகராக சமன்படுத்தி, அவர்களில் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கூறுவது, கல்வியில் சமநிலை இல்லாதவர்களிடையே, ஏழ்மை எனும் சம உரிமையை திணிக்கின்ற அநீதியாகும். இப்படித் திணிப்பதன் மூலம், காலங்காலமாக தகுதியை மட்டுமே காட்டி ஆதிக்கம் பெற்றவர்கள், இப்பொழுது ஏழ்மையைக் காட்டி மேலும் இரட்டை ஆதிக்கம் பெறுவதற்கே வழி வகுக்கும். இது வலது கையால் உரிமையைக் கொடுத்து இடது கையால் பறிப்பதற்கு ஒப்பாகும்.
'சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் பொழுது, அந்த சாதியில் வாய்ப்பு வசதி உள்ள ஒரு சிலர் மட்டுமே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வளைத்துப் போட்டுக் கொள்கிறார்கள். எனவே, ஏழை பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரலாம்' என்று சிலர் முன்மொழிகின்றனர். பட்டியல் சாதி உள்ளிட்ட எல்லா வகுப்புகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. ஆயிரம் ஆண்டுப் பிரச்சனையை ஓரிரு தலைமுறையின் அனுபவத்தைக் கொண்டு தீர்மானித்து. வசதி வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஒரு சிலரை பொதுப்பட்டியலுக்குள் தள்ளிவிடுவது, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையே நீர்த்துப் போகச் செய்யும்.
எனவே, பொதுவில் ஏழ்மை அடிப்படையில் எல்லோருக்கும் ஒதுக்கீடு என்பதும், பிற்படுத்தப்பட்டோருக்குள்ளேயே ஏழைகளுக்கு ஒதுக்கீடு என்பதும், பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினர் மட்டுமே எல்லாக் கல்வியையும் வேலைகளையும் அபகரிக்கச் செய்யும் ஆபத்தான சூழ்ச்சியாகும். அதுதான் EWS இல் நடந்தது.
அனைவருக்கும் கல்வி மற்றும் அனைவருக்கும் வேலை என்கிற நிலை உருவாகும் வரை, ஒரு இடைக்கால ஏற்பாடாக வகுப்புவாரி விகிதாச்சார ஒதுக்கீடு தவிர்க்க முடியாதது.
இந்தியாவில் யார் யாரெல்லாம் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment