யார் யார் எதிராளிகள்?
பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPI(M) உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்,
இந்தியன் எக்ஸ்பிரஸ், த இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் முதலான நாளேடுகளும்,
இந்தியா டுடே, சண்டே, கல்கி முதலான வார ஏடுகளும்,
வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், சமூக ஆய்வாளர்கள் உள்ளிட்ட சில பல அறிவுத் துறையினரும்,
மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களும்,
IIM, IIT, NIT (REC) உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும்
மண்டல் எதிர்ப்புப் போராட்டம்
அகில இந்திய அளவில், குறிப்பாக வட மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டு, கலவரங்களை உண்டு பண்ணி, மண்டல் குழு பரிந்துரைகள் அமலாவதைத் தடுக்க முனைந்தனர்.
மேற்சொன்ன அனைத்திலும், உயர் சாதியினரே ஊடுருவி இருப்பதால்தான் இத்தகைய எதிர்ப்பை அவர்களால் பூதாகரமாகக் காட்ட முடிந்தது. ஊடகங்களும் இவர்களின் போராட்டச் செய்திகளை ஊதிப் பெருக்கின.
ஆனால், பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரியும், மண்டல் குழு அறிக்கையை வெளியிடவும், அதை அமல்படுத்தவும் கோரி இந்தியா முழுக்க நடைபெற்ற பிற்பட்ட மக்களின் போராட்டச் செய்திகளை இதே ஊடகங்கள் முழுமையாக மூடி மறைத்தன. காரணம் இவை எல்லாம் உயர் சாதியினர் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான்.
மண்டல் குழு அமலாவதைத் தேசமே, அதாவது இந்தியாவே எதிர்ப்பது போன்றதொரு பிம்பத்தை இவர்கள் கட்டமைத்தனர். 'இவர்கள்தான் தேசம். இவர்கள்தான் இந்தியா. இவர்களுக்கு எதிரானது எல்லாமே தேசத்திற்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது. இவர்கள் மீது பற்று வைப்பதுதான் தேசப்பற்று'. இதுதானே இன்றும் இவர்களின் எண்ணமாக உள்ளது.
அனைத்துச் சாதி அர்ச்சகர் உள்ளிட்டப் பிரச்சனைகளில், பார்ப்பனிய மேலாதிக்கம் குறித்துப் பேசினாலே அதை இந்து விரோதம், தேசத் துரோகம் என்று எச்.ராஜா போன்ற பார்ப்பனர்களும், அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட சில எடுபிடிகளும் பேசுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே? பார்ப்பனர்களுக்கு உவப்பான எதை ஒன்றையுமே இந்து விரோதமாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் அல்லவா இவர்கள்?
எதிர்ப்புக்கான காரணம் என்ன?
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால், சாதி வளரும் மற்றும் தகுதியும் திறமையும் நாசமாய்ப் போகும் என்பதுதான் எதிர்ப்புக்கு இவர்கள் கூறும் காரணம்.
இவை உண்மையா?
இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் பார்ப்பனச் சடங்குகளாலும் சம்பிரதாயங்களாலும்,
இந்து மதத்தில் சாதி மாறித் திருமணம் செய்யக் கூடாது என்று 1944 வரை இந்து மதச் சட்டங்கள் தடை செய்திருந்ததாலும், 4000 சாதிகளும் தங்கள் தங்கள் சாதிகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டதாலும், இன்றும் அதே நிலை தொடர்வதாலும்,
அர்ச்சகர்கள், மடாதிபதிகள், புரோகிதர்கள் உள்ளிட்ட வேலைகளில், சாதியை மட்டுமே தகுதியாக வைத்துக் கொண்டு, பார்பனர்களே மேற்கண்ட அனைத்திலும் ஆதிக்கம் செய்வதாலும்தான்
சாதி பாதுகாக்கப்படுகிறதே ஒழிய, இட ஒதுக்கீட்டினால் சாதி வளரும் என்பது ஒரு சதவீதம் கூட உண்மை கிடையாது.
அடுத்து, தகுதியும் திறமையும் நாசமாகிவிடும் என்கிற இவர்களது புலம்பல் குறித்து,
தகுதி திறமை பற்றி வாய் கிழியப் பேசும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர்தான், குறிப்பாகப் பார்ப்பனர்கள்தான் அரசின் உயர்மட்டப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எண்ணற்ற பார்ப்பனர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் அரசாங்கப் பொறுப்புகளிலும் உள்ளனர். இவர்கள் தங்களுடைய தகுதியினாலும் திறமையினாலும் இதுவரை கிழித்தது என்ன?
நில உச்சவரம்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இவர்கள் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறார்களா? அல்லது அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை ஏதேனும் எடுத்திருக்கிறார்களா? நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்தும் இவர்கள் பாரபட்சம் ஏதும் இன்றி உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறார்களா?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள்கூட சட்டங்கள்தானே? இதை அடிப்படையாகக் கொண்டு, ஆறுகளையும் ஏரிகளையும் நீர்நிலைகளையும் சாலைகளையும் இரயில் பாதைகளையும் காடுகளையும் மலைகளையும் அரசின் புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்து, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்பட்டுள்ள கோவில்கள் அனைத்தையும் உடனடியாக இடித்துத் தள்ள வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்குத் தகுதி திறமை பற்றிப் பேசும் பார்ப்பன அதிகாரிகள் என்ன செய்திருக்கிறார்கள்?
அயலுறவுத் துறையில் வெளிநாட்டுத் தூதர்கள் அனைவருமே இன்று பார்ப்பனர்கள்தானே? தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அன்றாடம்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் அவலம் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுதானே இருக்கிறது? தகுதியும் திறமையும் படைத்த பார்ப்பன வெளியுறவு தூதர்களால் இதை ஏன் தடுக்க முடியவில்லை?
இப்படி, இவர்கள் பேசும் தகுதி திறமை குறித்து எண்ணற்ற ஆதாரங்களை அடுக்க முடியும். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால், இவர்கள் கூப்பாடு போடும் தகுதி திறமை எல்லாம் நாசமாய்ப் போய்விடும் என்பது இவர்களின் ஆதிக்கம் கேள்விக்குள்ளாகிறதே என்கிற ஆதங்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை!
சரி! இட ஒதுக்கீடு சர்வரோக நிவாரணியா? அடுத்து பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment