Thursday, December 5, 2024

பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு: அம்பேத்கர் துரோகம் இழைத்தாரா? - 5

சென்னை மாகாணத்தில்,   ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் 
பிற்படுத்தப்பட்டோருக்கு
கல்வியிலும் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை, ஒழித்துக்கட்ட பார்ப்பனர்கள் தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஆம் ஆண்டில்அடுத்த சில மாதங்களிலேயே பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியில் இருந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர். உச்சநீதிமன்றமும் பார்ப்பனர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பை உறுதி செய்தது

இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பெரியார் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக, இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முறையாக திருத்தப்பட்டு, விதி 15(4) உட்பிரிவின் கீழ் சென்னை மாகாணத்தில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இருந்து வந்த
இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

அம்பேத்கர்

ஆதிதிராவிட மக்களுக்கு 1943 இல் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீடு, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 16(4) இன் கீழ் உறுதி செய்யப்பட்டதால், விடுதலைக்குப் பிறகும் அவர்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசுப் பணிகளில் தொடர்ந்தது. 1935 இல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அரசமைப்புச் சட்டம் 16(4) இல் கூறப்பட்டுள்ள "எந்த ஒரு பிற்பட்ட வகுப்பும்" (any backward class) என்பதை அடிப்படையாகக் கொண்டு, மீண்டும் 1951 இல் தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலும் (SC) பழங்குடியினருக்கான (ST) பட்டியலும் தயாரிக்கப்பட்டு இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

அப்படியானால் தனது சாதி மக்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொண்டு, இதர பிற்பத்தப்பட்ட மக்களுக்கு (OBC) அம்பேத்கர் துரோகம் இழைத்து விட்டாரா? அப்படித்தானே OBC பிரிவு மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையா? 

"எந்த ஒரு பிற்பட்ட வகுப்பு" என்பதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினர் அடங்குவர். இவர்களுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகுதான் அது SC / ST என்று அறியப்பட்டு வருகிறது. இவர்களைத் தவிர, சமுதாயத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள் யாருமே இல்லையா? இருக்கிறார்கள் அவர்கள்தான் இன்று இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவினர் என்று அழைக்கப்படும் OBC (Other Backward Class) மக்கள். 

இந்தச் சட்டப்பிரிவிலேயேஇதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான இட ஒதுக்கீட்டையும் அம்பேத்கர் உறுதி செய்திருக்கிறார். இதன் அடிப்படையில் இவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய 1953 இல் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் தலைமையிலான "முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின்" அறிக்கையை  பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல், 25 ஆண்டுகள் கிடப்பில் போட்டது காங்கிரஸ் அரசு. கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சியும் இது குறித்து கவலைப்பட்டதாகவும் 
தெரியவில்லை

1976-77 இல் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நிலவிய போது, கல்வியில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்பட்ட போது, இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கக் கோரி 1978 இல் பிரதமர் இந்திரா காந்திக்கு ஆனைமுத்து அவர்கள் கடிதம் எழுதினார்

பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்கனவே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டிருக்கும் பொழுது, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று தானும் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், இப்புரிதல் பிழையானது என்றும் ஆனைமுத்து அவர்கள் பதிவு செய்கிறார்

அரசமைப்புச் சட்டம் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு 
அம்பேத்கர் வழங்கிய 
இடஒதுக்கீட்டு உரிமையை அமல்படுத்த ஆட்சியாளர்களும் முன்வரவில்லை; அதைச் சரியாகப் புரிந்து கொண்டு
நடைமுறைப் படுத்தக்கோரி அரசியல்  கட்சிகளும், பிற்படுத்தப்பட்டோர் இயக்கங்களும் கோரவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான உரிமையை அரசமைப்புச் சட்டத்திலேயே வழங்கிய அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்கப்படுகிறார். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று செயல்பட்டு வந்த / செயல்பட்டு வரும் அரசியல்வாதிகளை (அன்று காங்கிரசைச் சார்ந்த பலரும் இன்று பாஜகவை சேர்ந்த பலரும் இதில் அடங்குவர்) தங்களது தலைவர்களாக பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இது ஒரு நகை முரண். 

மத்திய மாநில அரசுகளில் பிற்பட்டோருக்கு 60% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ப அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று, நாடாளுமன்றத்தில் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள், 1978 இல் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்த விவரம் ஆனைமுத்து அவர்களின் பார்வைக்கு வந்தபிறகு, இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, டெல்லி சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் இந்திரா காந்தி, குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோரைச் சந்தித்து, கோரிக்கை மனுவை நேரில் கொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 
அரசமைப்புச் சட்டப்படி உள்ள இடஒதுக்கீடு உரிமை குறித்து விவாதிக்கிறார்

காகா கலேல்கர் குழு பரிந்துரையை அமல்படுத்துவோம் என்று 1977 தேர்தலில் ஜனதா கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, 1978 மார்ச்சில் பீகாரில் பெருங்கிளர்ச்சி தொடங்கப்பட்டிருந்தது

1978 இல் பீகாரின் 32 மாவட்டங்களில் பெரியார் நூற்றாண்டு விழாக் கூட்டங்களில் பங்கேற்று, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் ஆனைமுத்து. பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பீகாரில் 1978 அக்டோபரில் நடைபெற்ற பாட்னா சிறை நிறப்புப் போராட்டத்தில் பத்தாயிரம் பேர் சிறைப்பட்டனர்

கலேல்கர் பரிந்துரையை அமல்படுத்தக் கோரி ஆனைமுத்து அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியபோது, அந்தப் பரிந்துரை 20 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்று நிராகரித்து விட்டார் பிரதமர் மொரார்ஜி தேசாய்

1978 இறுதியில் பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது பீகார் அரசு. அதை எதிர்த்து உயர் சாதியினர் செய்த கிளர்ச்சி நிலவிய சூழலில், கலேல்கர் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குப் பதிலாக, கோரிக்கையை திசை திருப்பும் நோக்கில், இரண்டாவது பிற்பட்டோர் குழுவை, 1978 டிசம்பரில் மொராஜி தேசாய் அமைத்தார். அதுவே மண்டல் குழுவானது

அடுத்து என்ன நடந்தது?

தொடரும் 

ஊரான்

No comments:

Post a Comment