Thursday, 12 March 2026

மாலை நேரங்களில் சாலை ஓரம் பந்தி விரிக்கும் குடிகாரர்கள்!

தமிழகத்தின் மாலைப் பொழுதுகள் ஒரு காலத்தில் தென்றலின் வருடலுக்காகக் காத்திருந்தன; ஆனால் இன்று, சாலையோரச் சாக்கடைகளின் ஓரம் விரிந்து கிடக்கும் 'குடிகாரர்கள் விரிக்கும் பந்திகளின்' மதுநெடியால் அருவருக்கத்தக்கச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

சாலையோரப் பந்தியும் 'கண்ணாடி'க் காடுகளும் சாராயக் குடுவைகள், நெகிழித் தண்ணீர் பைகள், ஊறுகாய் பொட்டலங்கள், கறி வருவல், நொறுக்குத் தீனிகள் என சாலையோரங்களில் விரிக்கப்படும் பந்திகள் வெறும் போதைக்கானவை மட்டுமல்ல; அவை ஒழுக்கத்தின் சீர்கேடுகள்.

குடித்துவிட்டு வீசப்படும் சாராயக் குடுவைகள், இந்தப் பூமியில் மனிதன் கால் வைக்க முடியாத அளவுக்கு 'கண்ணாடிக் காடுகளை' அன்றாடம் வளர்க்கின்றன. பூமியின் பசுமையைவிட, உடைந்த பாட்டில்களின் கூர்மையே இன்று சாலையோரங்களின் அடையாளமாகிவிட்டது.

எரியும் வயிறுகள் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 300 ரூபாய். இது வெறும் மதுவிற்கான செலவு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் அடுப்பு எரிய வேண்டிய காசு. தங்களது ஈரலை எரித்துக் கொள்ளும் இந்தக் குடிகாரர்கள், வீட்டிலிருக்கும் மனைவி, குழந்தைகளின் வயிறுகளையும் பட்டினி போட்டு எரியவிடுகிறார்கள். மேட்டுக்குடிகள் நட்சத்திர விடுதிகளில், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் குடிக்கும்போது, சாமான்யன் புழுதிபடிந்த சாலையோரம் ஒதுங்குகிறான். இடம் மாறினாலும், இந்த இரு தரப்பினரும் அழிப்பது தங்களை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தின் அறத்தையும்தான். போதை: அரசியலும் மௌனமும் இன்று இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக ஆட்சியாளர்களும், ஆளத் துடிப்போரும் மேடைதோறும் முழங்குகிறார்கள். உண்மைதான். ஆனால், கஞ்சாவிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் இந்தத் தலைவர்கள், அரசாங்கத்திற்குப் பெரும் வருவாய் ஈட்டித் தரும் சாராயத்தைப் பற்றி மட்டும் மௌனம் காக்கின்றனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆண்கள் ஏதோ ஒரு வகையில் போதையில் மிதக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. கஞ்சா என்பது பேசுபொருளாக இருக்கிறது, ஆனால் சாராயம் என்பது வாழ்வியலாகவே மாறிவிட்டது. வீழ்த்தப்பட்ட விழுமியங்கள்

ஒழுக்கமே உயிருக்கு நிகரானது என்றும், அதை உயிரைவிட மேலானதாகக் காக்க வேண்டும் என்றும் வள்ளுவன் கற்பித்தான்:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்."
மேலும், நாணத்தையும் மானத்தையும் உயிராகக் கருதி வாழ்பவர்கள், அறிவை மயக்கிச் சீரழிக்கும் மதுவை விரும்ப மாட்டார்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
"நாணத்து வாழ்வார் நயந்தாரே பேணாது
கள்ளுண்டல் என்னும் களி."
ஆனால் இன்று, அந்த நாணத்தையும் ஒழுக்கத்தையும் போதையில் எரித்து, உயிரைச் சிதைத்து, சாலையோரம் சிதறிக் கிடக்கும் பாட்டில் துண்டுகளாக்கி வருகின்றனர்.
ஒரு காலத்தில் 'குடி' என்பது சமூகத்தால் அருவருக்கத்தக்கச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அது ஒரு இயல்பான சடங்காக மாறிவிட்டது. மதுவைப் போலவே, தகாத உறவுகளும் இன்று சமூக அங்கீகாரம் பெறத் தொடங்கி விட்டதை அண்மைய 'விசில்' சப்தங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒழுக்கக்கேடுகளே இன்று நவீன வாழ்வியலின் அங்கமாகத் தரம் தாழ்ந்து போயினவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
“ஐயகோ! இந்தச் சமூகத்தைச் சீரழிவிலிருந்தும், போதை இருளிலிருந்தும் மீட்கப்போகும் அந்த மீட்பர் யாரோ?” என ஏங்குவதைவிடுத்து, நீயே மீட்பராக அவதாரம் எடு! புழுங்கிப்போன மாதர்கள் புடைசூழு நீ வாகை சூடுவாய்!
ஊரான்

3 comments:

sekar said...

கனகராஜ்: சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது தான் அரசியல்வாதிகளின் நோக்கம். ரூ.1000, 2000, இலவச பேருந்து என்று மக்களை அடிமைப் படுத்தி வைத்து இருக்கிறார்கள். மக்களுக்கும் இலவசங்களை ஏற்கக் கூடாது என்ற சிந்தனை இல்லை. "ஏற்பது இகழ்ச்சி" என்று ஔவையார் சொன்னதை படித்தால் மட்டும் போதுமா? அரசு எந்த இலவசங்களையும் வழங்காமல் உழைப்பிற்கு ஊதியம் தர வேண்டும். படிப்பு (எல்லா நிலைகளுக்கும்) , சுகாதாரம், மாணவர்களுக்கு சீருடை, முதியோர் உதவி இவற்றிற்கு இலவசம் சரி. மற்ற எதற்கும் குறைந்த அளவாவது காசு வாங்க வேண்டும். இல்லையெனில் சோம்பேறிகளாக மாறி விடுவர். இலவசத்திற்காக நில விற்பனை வரி அதிகரிப்பு, சாராய விற்பனை போன்றவைகளை அரசு கைவிட வேண்டும்.

sekar said...

பாஸ்கரன்: இரண்டு/ மூன்று வாரங்களுக்கு முன்பு, இரண்டு இளைஞர்கள் வீடு வீடாக வந்து, வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பியுங்கள்; பரிசுப் பொருட்கள் தருகிறோம் என்று சொன்னார்கள். என்னுடைய 'முன் ஜாக்கிரதை முத்தண்ணா' மனது 'வேண்டாம்' என்று சொன்னது. மேலும், பரிசை வாங்கி விட்டால், கொடுத்தவருக்கே வாக்களிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் தோன்றியது.
பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாம் அடையாள அட்டையைக் காண்பித்தார்கள். அதற்கான பரிசுப்பொருட்கள் விநியோகம் நேற்று நடந்தது. பரிசு வாங்கிச் சென்ற பெண்கள் வெற்றிப் புன்னகையுடன் எங்களை ஏளனமாகப் பார்த்துச் சென்றார்கள்.

sekar said...

கலீல்: மது மாது சூது இந்த 3ம் மனிதனை சீரழிக்க உள்ளவை