Wednesday, 22 April 2026

சாதி ஒழிப்பா, புரட்சியா? – எது முதலில்?

இந்தியச் சமூகத்தைப் பற்றிய அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் நீண்டகாலமாக ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது: 

“முதலில் சாதி ஒழிப்பா? அல்லது வர்க்கப் புரட்சியா?”

“முதலில் புரட்சிதான்” என்று வாதிடுபவர்கள் பெரிய அளவில் புரட்சியை நோக்கி முன்னேறவில்லை; அதேபோல் “முதலில் சாதி ஒழிப்புதான்” என்று வலியுறுத்துபவர்கள் கூட அதற்கான தெளிவான செயல்முறைத் திட்டத்தை முன்வைக்கவில்லை. 


இந்தச் சூழலில், சமூக ஆய்வாளர் Anand Teltumbde முன்வைக்கும் வாதங்களையும், இந்திய சமூகத்தின் நடைமுறை அனுபவங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

1. அக்கம் பக்கமாக நிகழ வேண்டிய மாற்றம்

“எது முதலில்?” என்ற கேள்விதான் சில நேரங்களில் தவறான வழிநடத்தலுக்கு இட்டுச் செல்கிறது. உண்மையில், சாதி ஒழிப்பும் வர்க்கப் போராட்டமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; அக்கம் பக்கமாக முன்னேற வேண்டிய சமூக மாற்றங்களாகவே அவை பார்க்கப்பட வேண்டும்.

Karl Marx கூறுவது போல, மதம் என்பது வெறும் தனிப்பட்ட நம்பிக்கை அல்ல; அது சமூக துன்பங்களின் வெளிப்பாடாகும். அடிப்படை சமூக-பொருளாதார நிலைமைகள் மாறும்போது மதமும் அதனோடு தொடர்புடைய பிற்போக்குச் சடங்குகளும் பலவீனமடையும்.
இந்தியச் சூழலில் சாதி அமைப்பு, குறிப்பாக இந்துமதத்தின் வரலாற்றுப் பண்பாட்டு அமைப்போடு ஆழமாக இணைந்துள்ளது. அதனால் இந்து மத அடிப்படையிலான சமூக கட்டமைப்பு சவாலுக்குள்ளாகாமல் சாதி ஒழிப்பு முழுமையாக சாத்தியமில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

2. அரசியல் சட்டமும் தேர்தல் முறையும்: சாதியின் மறைமுகத் தொடர்ச்சி

ஆனந்த் தெல்தும்டே தனது ஆய்வுகளில் இரண்டு முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டுகிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் முரண்பாடு
இந்திய அரசியலமைப்புச் சட்டம் “சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்” என்ற வரையறையின் அடிப்படையில் பல நலத்திட்டங்களை வழங்குகிறது. சமூக நீதி நோக்கில் அமைக்கப்பட்ட இந்த ஏற்பாடுகள், நடைமுறையில் சாதியச் சிக்கலை இது பலவீனப்படுத்தியுள்ளதா அல்லது மறைமுகமாக பலப்படுத்தியுள்ளதா என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 

சாதி என்பது இந்திய சமூகக் கட்டமைப்போடும், மதப் பண்பாட்டோடும் ஆழமாக இணைந்த ஒரு அமைப்பு. எனினும் இன்றைய சமூக சூழலில், “சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர்” என்பதற்கு மாற்றாக சாதிவாரி விகிதாச்சார இடஒதுக்கீடு போன்ற நடைமுறைகள், ஓரளவுக்கு சாதி அடிப்படையிலான அதிகாரச் சமநிலையை மாற்ற உதவக்கூடும். 

எனவே, தற்போதுள்ள வரையறைகளை மேலும் தெளிவான சமூக நீதிக் கோணத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. 

அதற்கு ஏற்ப சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமும் இங்கே உணரப்படுகிறது.

தேர்தல் முறையில் சாதியின் தாக்கம்

இந்தியாவில் நிலவும் First-Past-The-Post தேர்தல் முறையில், பல இடங்களில் சாதிதான், தேர்தல் வெற்றிக்கான அடித்தளமாக அல்லது “எரிபொருளாக” செயல்படுகிறது. 

ஒரு தொகுதியில் எந்தச் சாதியினர் அதிகமாக உள்ளார்களோ, அவர்களே பெரும்பாலும் அரசியல் ஆதிக்கத்தைப் பெறும் வாய்ப்பு அதிகமாகிறது. பலமுனைப் போட்டிகளில் 20 சதவீத வாக்குகள் பெற்றால்கூட வெற்றி பெறும் சூழல் உருவாகுவதால், தற்போதைய தேர்தல் முறை சாதி அடிப்படையிலான அரசியலை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இதற்கு மாற்றாக தெல்தும்டே முன்வைக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation) முறை, சமூக பிரதிநிதித்துவத்தை வேறுவிதமாக அமைக்கக்கூடிய ஒரு மாற்று வாய்ப்பாக கருதப்படுகிறது. 

3. பண்பாட்டுப் புரட்சி: மாற்றத்தின் சமூக அடித்தளம்

சாதி என்பது வெறும் சட்ட அல்லது அரசியல் பிரச்சனை மட்டும் அல்ல; அது ஒரு பண்பாட்டு மற்றும் சமூக பழக்கவழக்கங்களின் அமைப்பு.
அதனால் சமூக மாற்றம் பண்பாட்டு தளத்திலும் நிகழ வேண்டியது அவசியமாகிறது. இந்த மாற்றம் வெறும் கருத்தரங்குகளிலோ புத்தகங்களிலோ மட்டுமே நிகழாது; அது சமூகப் போராட்டங்களின் அனுபவங்களின் மூலம்தான் உருவாகும்.

ஒரு மனிதன் பொதுவுடைமைச் சமூகப் போராட்டங்களில் ஈடுபடும்போது, அவர் இயல்பாகவே பல மதச் சடங்குகளிலிருந்தும், சாதிய- சமூகப் பிரிவினைகளிலிருந்தும் வெளியே வர ஆரம்பிக்கிறார். அந்தப் போராட்டக் களமே அவருக்குப் புதிய பண்பாட்டை உருவாக்குகிறது.

அங்குதான் சாதி அடையாளங்கள் மெதுவாக கரைந்து, வர்க்க அடையாளம் முன்னிலைப்படத் தொடங்குகிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் போன்ற சமூக மாற்றங்களும் அத்தகைய சூழல்களில் இயல்பான வாழ்வியல் மாற்றங்களாக தோன்றுகின்றன.

4. பொருளாதார மாற்றமும் சமூக மாற்றமும்

சாதி அமைப்பு ஒரு பண்பாட்டு அமைப்பு மட்டுமல்ல; அது பொருளாதார உறவுகளோடும் இணைந்துள்ளது. நிலம், தொழில், உழைப்பு மற்றும் வளங்களின் கட்டுப்பாடு ஆகியவை பல இடங்களில் சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளன.
சமூகத்தின் பொருளாதார அடிக்கட்டுமானத்தை மாற்றும் அரசியல் சக்தியாக பொதுவுடைமை இயக்கங்கள் தங்களை முன்வைக்கின்றன. உடைமை உறவுகள் (Property relations) மாற்றப்படும் இடத்தில்தான் சாதி அதிகார உறவுகளும் சவாலுக்குள்ளாகும்.

அதனால் சாதி ஒழிப்பையும் வர்க்கப் போராட்டத்தையும் முற்றிலும் பிரித்துப் பார்க்காமல், இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புடைய சமூக மாற்றங்களாக அணுக வேண்டிய தேவை இருக்கிறது.

முடிவுரை

இன்று பலவீனமாக இருக்கும் பொதுவுடைமை இயக்கங்கள் கூட இந்தியச் சமூகத்தின் சாதி அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தங்களை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

பண்பாட்டுப் புரட்சியும் பொருளாதாரப் புரட்சியும் இணையும் புள்ளியில்தான் சாதியற்ற சமூகம் உருவாகும். அந்த இணைப்பை உருவாக்கும் அரசியல் மற்றும் சமூக முயற்சிகள்தான் எதிர்கால மாற்றத்தின் மையமாக அமையும்.

வர்க்கப் புரட்சியைப் பேசாத வேறு எந்தச் செயல்பாடும் சாதி ஒழிப்பை சாத்தியப்படுத்தாது. 

***
குறிப்பு: இக்கட்டுரையின் சமூக ஆய்வுக்கான அடிப்படை சாரம் Anand Teltumbde அவர்களின் “A Society Built as Caste Cannot Be Reformed Into Equality” என்ற கட்டுரையிலிருந்து பெறப்பட்டது. இருப்பினும் இக்கட்டுரையில் முன்வைக்கப்படும் தீர்வுக் கண்ணோட்டம் பொதுவுடைமை இயக்கங்களின் பண்பாட்டு மற்றும் வர்க்கப் போராட்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்ததாகும்.

ஊரான்

No comments: