Showing posts with label George Thomson நிச்சயதார்த்தம் முகூர்த்தம் மொய் சீர் ஜானவாசம் பந்தக்கால். Show all posts
Showing posts with label George Thomson நிச்சயதார்த்தம் முகூர்த்தம் மொய் சீர் ஜானவாசம் பந்தக்கால். Show all posts

Monday, 3 March 2025

வலை உலகில் எனது எழுத்துப் பயணம்! பழைய திருமண முறைகள்!---2

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற புரட்சிகரத் திருமணம் குறித்து "உலகின் அழகிய மணமக்கள்!" என்ற தலைப்பில் வினவு தளத்தில் சந்தன முல்லை அவர்கள் 2010 இல் எழுதிய கட்டுரை மீது வாசகர்கள் முன் வைத்த கருத்துக்கள் மீதான எனது எதிர்வினை.
***
"பதிவர்களுக்கு வணக்கம்,

வழக்கமான திருமணத்திலிருந்து இந்தத் திருமணம் மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால், இதில் சரி தவறு என்ற அறிவு பூர்வமான விவாதத்தை நடத்துவதை விடுத்து பதிவர்கள் பொருளற்ற அல்லது தலைப்பிற்குத் தொடர்பில்லாத கருத்துக்களை முன்வைப்பது, பதிவர்களை எது சரி என்று எடை போடுகின்ற ஆற்றலை வளர்ப்பதற்குப் பதிலாக சலிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் உணர்ந்ததை மட்டுமே, சரியானது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். “People not talk about the world(reality), but about their perception” அதாவது, மக்கள் தாங்கள் உணர்ந்ததைத்தான் பேசுகிறார்களே ஒழிய எதார்த்தத்தை அல்ல; மாறாக எதார்த்தம் என்பதை எதார்த்தமாகவே உணரும் போதுதான் எல்லோரும் ஒரே கருத்தை வந்தடைய முடியும். அந்த எதார்த்தத்தை அல்லது உண்மையைக் கண்டறிவதற்கு, ஜார்ஜ் தாம்சனின் கூற்றுபடி, புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை என்ற இயங்கியல் / அறியவியல் அணுகுமுறைதான் எந்த ஒரு செயல்பாட்டையும் சரியா தவறா என்பதைத் தீர்மானிக்க உதவும்.

இங்கு விவாதம் என்பதே திருமண வடிவம் சார்ந்ததாக அமைந்து விட்டதால் அதனுள் நின்று கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது. திருமணத்திற்குப் பிறகு சந்திக்கவிருக்கின்ற வாழ்க்கைப் பிரச்சனைகள் இங்கு விவாதத்திற்கு வரவில்லை அல்லது அது ஒரு தனியான பிரச்சனை. அதனால், கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு பண்பாடு என்ற முறையில் இங்கு திருமண வடிவத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு  பேசுவது சரியாக இருக்கும்.

திருமணத்தை ஏன் ஊர்கூட்டி நடத்த வேண்டும்? பழைய திருமண முறைகள் எல்லாம் ஊர் கூட்டித்தான் நடத்தப்படுகிறது. இங்கே ஆடம்பரமும் சடங்கு சம்பிரதாயங்களும் இல்லாத முறையில் புரட்சிகரத் திருமணம் நடத்தப்படுகிறது. இங்கு எளிமை என்ற விசயத்தை ஏன் சொல்லவில்லை எனில், பழைய திருமணமுறையில் நடக்கும் திருமணங்கள்கூட எளிமையுடன்தான் நடத்தப்படுகின்றன. ஆனால், சடங்கு சம்பிரதாயத்தைப் புறக்கணித்து நடத்தப்படுவதில்லை. 

காதலித்து ஓடிபோய் திருமணம் செய்து கொள்பவர்கள்கூட, “கோவில்ல வச்சி தாலி கட்டிட்டுவது” என்ற சடங்கைச் செய்கிறார்கள். ஆனால் இங்கே, ஆடம்பரம், சடங்கு சம்பிரதாயம் ஆகியவற்றைப் புறக்கணித்து நடக்கிறது என்பதுதான் இந்த புரட்சிகரத் திருமணத்தின் முக்கிய அம்சம்".

***
"பழைய திருமணமுறைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன?


பொருத்தம் 

கருப்பா, சிவப்பா; நெட்டையா, குட்டையா; ஊத்தப்பல்லா, நல்லப்பல்லா; சப்பை மூக்கா; மாறு கண்ணா, நல்ல கண்ணா; காது, நடை, பாவனை, குரல்….. ஆணா இருந்தா 'ஹாண்ட்ஸம்'; பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம்; இப்படி 'ஜோடி' பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது.

வசதி வாய்ப்புகள்

ஆணா இருந்தா என்ன வேலை, கை நிறைய சம்பளம், குறிப்பா 'கவர்மெண்ட்' மாப்பிள்ளையா, பொண்ணை உட்கார வச்சி சோறு போடுவானா, அதாவது, உழைக்காமல் வாழவேண்டும்- உழைப்பை வெறுப்பது; சம்பளத்தோடு மேற்படி வருமானம் (கிம்பளம்) எவ்வளவு (அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா); வீடு நிலபுலம் சொத்து, அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு; ஏழையாக இருந்தால் ஆடு மாடு என வசதி பார்த்து – இதனை பங்கு போட உடன் பிறந்தவர்கள் (நாத்தனார், கொழுந்தனார், மூத்தார்) இருக்கிறார்களா; சாதி சணம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு (நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே?) என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே, அடுத்த பொருத்தத்திற்குச் செல்கின்றனர்.

இதே போல பெண்ணைத் தேடுபவர்கள், பெண் 'கலரா' இருக்க வேண்டும். (ஐஸ்வர்யா ராய் போல இது பையனின் எதிர்ப்பார்ப்பு) இதற்குமேல், பையனை பெற்றவர்கள் எதிர்பார்ப்புகள் தனி. மற்ற உருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில். முதல் விசயமே, பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள் குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது (எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கு வரவேண்டும். இப்போதைக்கு வாங்குவதையும் விடுவதில்லை).

முன்பெல்லாம், பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய இருக்க வேண்டும் என்று கருதினர் (மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள், காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று).
சாதாரண வீட்டுப் பெண்ணாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது….மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா? தன்னை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்து காலத்தில்கூட அந்தப் பெண் உதவக் கூடாது.

இதில் வேலை வேறு வேறு இடத்தில் இருந்தால் வேலையை விடக்கூடாது, மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் வேலையை விடத் தயாராக இருக்க வேண்டும்.

வரதட்சணை

அடுத்து நகை. பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா; கார் பங்களா சீர் எவ்வளவு தேறும்? சாதாரண குடும்பத்தில் 'டூவீலரில்' தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு, செருப்பைக்கூட விடாமல் வாங்க வேண்டும். 

தனக்குத் தேவைப் படுகிறதோ இல்லையோ 'வாஷிங் மிசின்', 'ஏசி', 'ஃபிர்ட்ஜ்', கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மேடையின் அருகில், மணமக்களுடன் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.

ஜாதகம்

இவற்றை எல்லாம் உறுதி செய்த பிறகுதான் ஐயரைப் பார்ப்பது, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது; ஜாதகப் பொருத்தம் முன்ன பின்னே இருந்தாலும் மேலே சொன்ன பொருத்தங்கள் பொருந்திவிட்டால் ஜாதகப் பொருத்தத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். இதற்கு ஐயரும் துணை புரிவார்.

ஒற்றரை வைத்து உளவு பார்ப்பது

என்ன உளவு? சாதியை உறுதி செய்வது; பையன் (பீடி, சிகரெட், தண்ணி, கிண்ணி, சீட்டு, பொம்பள கிம்பள இத்தியாதி இத்தியாதி) நல்லவனா கெட்டவனா, பெண் நல்லவளா (ஆண்களுடன் இயல்பாகப் பழகுவது ஒரு குற்றம் என்ற வகையில்), குறிப்பாகப் பெண்ணுடைய தாயார் நல்லவளா, சொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா என உளவு (CIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் எம்மாத்திரம்) பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகே அடுத்த படலம் தொடரும்.

பெண் பார்க்கும் படலம் 

முதலில் நெருங்கியவர்கள் மட்டுமே சென்று பார்ப்பது. இதற்கு நாள், நேரம் அதாவது கிழக்கே போவதா, தெற்கே போவதா, எந்தப் பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டுதான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டு இல்லாத பெண்ணோ கண்ணில்கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து. போய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா, அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கைமட்டும் நைனைக்கக் கூடாதாம்! இது என்ன லாஜிக்கோ?

அடுத்து படை பலத்தைக் கூட்டிக் கொண்டு சென்று பார்ப்பது. இதற்கு குறிப்பாக பிற சாதியினர் ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்தில் குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை (வாடகைக்குத்தான்) வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.

கை நனைக்கும் படலம்

பொருத்தம் அமைந்துவிட்டால் அடுத்து கை நனைக்கும் படலம். இதற்குப் படைபலம் சற்றே கூடுதல். செல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோவிலில் தேங்காய் கட்டாயம் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக (கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ) ஏதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR (நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்) போட்டுக் கொள்வார்கள்!

இப்போது பெண்ணை அலங்காரம் செய்து அழைத்து வருதல். இதற்கென அழகுக் கலைஞர்களை அழைத்து வந்து அழகு படுத்திக் காட்டுவது உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பொண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் பிடித்ததனால்தான் இந்தப் படலம் தொடர்கிறது. இந்த அலங்காரமெல்லாம், படைபலத்திற்கு பெண்ணை பிடிக்க வேண்டுமே என்பதற்காக. விருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும்.

நிச்சயதார்த்தம்

இதை நடத்துவது யார் என்பது இருவீட்டாரில் யார் இளிச்சவாயர் என்பதைப் பொருத்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தைக் காட்டவேண்டாமா? நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கே திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு எப்புடி?

நாள் குறிப்பது

கல்யாணத்திற்கு நாள் குறிப்பது: இவர்களே முதலில் பஞ்சாங்கத்தைப் பார்த்து தோராயமாக நாள் ஒன்றைத் தீர்மானித்துக் கொள்வார்கள். ஒரு ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR போட்டுக் கொண்டு தங்களை சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், முகூர்த்த நாள் பஞ்சாங்கப்படி மாதத்தில் மூன்றோ, நான்கோதானே? பிறகு எப்படி ஒரே நாளில் பத்து திருமணங்கள் செய்ய முடியும்? மண்டபம் மட்டுமல்ல, ஐயரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக ஐயர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்?

முன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கின்ற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோவில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்துத் தனிக் கல்யாண மண்டபம்.

பத்திரிக்கை

இதற்கு ஐயரை கன்சல்ட் பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்கப் போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சனம் என்று மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் பெயருக்குப் பின்னால் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டாலும் சாதிப் பட்டம் (கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா); கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் இவர் கல்யாணத்திலும் மிஸ்ஸிங்.

பத்திரிக்கை வீட்டுக்கு வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும்! பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டில் புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெற்றிலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர், கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் (சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா?)

புடவை எடுத்தல்

மணப் பொண்ணுக்குப் பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு! பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே? பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.
சொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க, செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்தப் பிரச்சனை அதிகமாக வரும்.

தாலி வாங்குவது

உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.

பந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது (எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்) குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.

பந்தி

பசிக்கு சோறுபோடுவதை விட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவைத் (ஐயிட்டங்கள்) தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே? அதற்காகத்தான் இவ்வளவும்.
முன்பெல்லாம், சோறு, கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒருசிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.

திருமண வைபவம்

முதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்; லைட்டிங், பிரம்மாண்டமான மேடை பின்புறம். முதலில் வாயிலில் அலங்கார வளைவு அமைப்பது தொடங்கி பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனரில் மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்னியாக வேண்டும். ஜானவாசம் என்ற பெயரில் நடக்கும் மாப்பிளை அழைப்பிற்கு அலங்கார வண்டி ஏற்பாடு. அதற்கான நாதஸ்வரம். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச் சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது – பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ண விளக்குகளால் பூத்து குலுங்கும் – வரவேற்பு மேடை அமைப்பது. குறிப்பாக, மரம் செடி கொடி புல் பூண்டுகளை அத்தனையும் அள்ளி தெளித்து முடிந்தால் புறாக்களை வைத்து, வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள். 

இன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் அலறுகிறார்கள் (பாட்டு கச்சேரிதான்).
திருமணத்திற்கு நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக் கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள் கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

இந்த மேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது.

மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.
காலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. இடம் கருதி இவற்றை விவரிக்கவில்லை.

மொய்

"மொய்யில்லாமல் கல்யாணமா?”, மாமன் வச்ச மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி, பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து (கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமாலும் திண்டாடுவதும் தனிக்கதை). ஏற்கெனவே எழுதிய மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கறையும்’, மொய்யை வாங்கியவன் திரும்ப தனது கடனை செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இதில் இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்படுவதில்லை! இதற்குத் தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.

மேற்கண்ட எமது விளக்கங்கள் இந்து மத சம்பிரதாயத் திருமண வடிவம் என்ற வகையில் அமைந்தவை. இன்னமும் கூடுதலாகவோ, குறைவாகவோ சம்பிரதாயங்களும், சடங்குகளும் அமையக் கூடும். இதில் இசுலாமிய, கிருத்துவ மதத் திருமண வடிவங்கள் மதம் சார்ந்த சம்பிரதாயங்களில் மாறுபட்டிருந்தாலும் உள்ளடக்கமான நடவடிக்கைகள் பொருந்தக் கூடியவையே".

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்