Wednesday, 14 October 2026

கார்ப்பரேட் – காவி பாசிச எதிர்ப்பு அரசியலே முழுமையான மார்க்சியப் புரிதல்!


மார்க்சியம் என்பது வெறும் நூல்களில் மட்டும் விவாதிக்கப்படும் தத்துவம் அல்ல; மாறாக, உலகை மாற்றி அமைப்பதற்கான ஒரு நடைமுறை ஆயுதம். ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான ‘பின்னை மார்க்சியம்’ (Post-Marxism) மற்றும் பின்-நவீனத்துவச் சிந்தனைகள், மார்க்சியத்தில் “போதாமை” இருப்பதாகக் கூறி அடையாள அரசியலை முன்நிறுத்தின. கடந்த முப்பது ஆண்டு கால இந்திய அரசியல் அனுபவத்தில், இந்த அடையாள அரசியல் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சிதறடித்து, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தைப் பலவீனப்படுத்தியிருக்கிறது என்பதே கசப்பான உண்மை.

இத்தகைய சூழலில், இந்திய சமூகத்தின் தனித்துவமான சாதிய-சனாதனக் கட்டமைப்பையும், கார்ப்பரேட் சுரண்டலையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எதிர்க்கும் “கார்ப்பரேட் – காவி பாசிச எதிர்ப்பு அரசியல்” எவ்வாறு முழுமையான மார்க்சியப் புரிதலாக அமைகிறது என்பதை விளக்கும் விரிவான கட்டுரை இது.

பின்னை மார்க்சியமும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ அரசியலும்

மேலைநாடுகளின் பல்கலைக்கழக அறைகளில், களப்போராட்டப் பின்னணி இல்லாத பேராசிரியர்களால் உருவாக்கப்பட்டதுதான் ‘பின்னை மார்க்சியம்’. காரல் மார்க்ஸ் முன்வைத்த வர்க்கப் போராட்டத்தையும், உற்பத்திச் சக்திகள்-உற்பத்தி உறவுகள் சார்ந்த பொருளாதார அடித்தளத்தையும் ஓரங்கட்டிவிட்டு; சாதி, இனம், பாலினம், பெண்ணியம், சூழலியம், நுகர்வுப் பண்பாடு போன்ற அடையாளங்களை மட்டுமே முதன்மைப் போராட்டப் புள்ளிகளாக இவர்கள் மாற்றினர்.

கோட்பாடும் நடைமுறையும் இணைந்த களப் போராட்டம் இல்லாத தத்துவம்: களப்போராட்ட அனுபவமும், உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வியல் துயரங்களோடு தொடர்பும் இல்லாதவர்கள் மேலைநாட்டுக் கோட்பாடுகளை அப்படியே இறக்குமதி செய்து தமிழ்நாட்டில் பரப்பத் தொடங்கினர்.

வர்க்க ஐக்கியத்தின் வீழ்ச்சி: இதன் விளைவாக, கடந்த 30 ஆண்டுகளில் வர்க்க அடிப்படையில் ஒன்றுபட வேண்டிய உழைக்கும் மக்கள் சாதி, பிராந்தியம், இனம், மொழி என குறுங்குழுவாத அமைப்புகளாகத் துண்டாடப்பட்டனர்.

யாருக்கு லாபம்?: “அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பொது எதிரி முதலாளித்துவமும், அதைத் தாங்கும் பார்ப்பன பாசிசமும்தான்” என்ற உணர்வு மழுங்கடிக்கப்பட்டு, உழைப்பாளர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலையை இந்த அடையாள அரசியல் உருவாக்கியது. இதன் விளைவாக நவதாராளமய கார்ப்பரேட் முதலாளித்துவமே பயனடைந்தது.

இந்தியச் சூழல்: சனாதனம், சாதி, பாலினம், பெண்ணியம் மற்றும் வர்க்கம்

இந்தியாவில் சாதியையும் பாலின ஒடுக்குமுறையையும் வர்க்கப் போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அவை உற்பத்திக் கட்டமைப்போடு இயங்கியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளன.

வர்ணமும் வர்க்கமும்: இந்தியாவில் நிலப்பிரபுத்துவக் காலத்தில் உற்பத்திச் சாதனமான நிலம் ஆதிக்கச் சாதிகளிடம் முடங்கிக் கிடப்பதற்கும், உழைக்கும் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதற்கும் சனாதன வர்ணாசிரம அமைப்பே சித்தாந்தக் கருவியாகச் செயல்பட்டது. அம்பேத்கர் கூறியது போல, சாதி என்பது வெறும் “உழைப்புப் பிரிவு” அல்ல; அது “உழைப்பாளர்களின் பிரிவு”.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை: சாதியத் தூய்மையையும் வர்ணக் கட்டமைப்பையும் காப்பாற்ற ‘அகமணமுறை’ (Endogamy) அவசியமானது. சாதிப் படிநிலை உடையாமல் இருக்கவே பெண்களின் சுதந்திரமும், உடலும் சனாதனப் பிடிக்குள் ஒடுக்கப்படுகின்றன.

சித்தாந்த மேல்கட்டுமானம்: எனவே, சனாதனம் என்பது வெறும் மதம் சார்ந்த நம்பிக்கை அல்ல; அது வர்க்கச் சுரண்டலைப் பாதுகாக்கவும், பாட்டாளி வர்க்க உணர்வு உருவாகாமல் தடுக்கவும் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் சித்தாந்த மேல்கட்டுமானம் (Ideological Superstructure) ஆகும்.

‘கார்ப்பரேட் – காவி பாசிச எதிர்ப்பு’ தான் முழுமையான மார்க்சியப் புரிதல்!

மரபார்ந்த வறட்டுச் சூத்திரவாதிகள் போலச் சாதியைப் புறக்கணிக்காமலும், பின்-நவீனத்துவவாதிகள் போலச் சாதியை வர்க்கத்திலிருந்து தனியாகப் பிரித்து “அடையாள அரசியலாக” மாற்றாமலும் அணுகுவதே சரியான மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டமாகும்.

மார்க்சியத்தின் அடித்தளம் (Base) மற்றும் மேல்கட்டுமானம் (Superstructure) ஆகிய இரண்டு தளங்களையும் ஒரே நேரத்தில் தாக்கும் உத்தியாகவே “கார்ப்பரேட் – காவி பாசிச எதிர்ப்பு” அரசியல் அமைகிறது.

பொருளாதார அடித்தளத்தில் (Base), கார்ப்பரேட் முதலாளித்துவமானது நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடி, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து, நவதாராளமயச் சுரண்டலை நிகழ்த்துகிறது. இதை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பொருளாதார அடித்தளத்தின் மீதான தாக்குதல் நேரடியாக முன்னெடுக்கப்படுகிறது.

அதேநேரத்தில், சித்தாந்த மேல்கட்டுமானத்தில் (Superstructure), சனாதன மற்றும் காவி பாசிசமானது உழைப்பாளர்களிடையே பாட்டாளி வர்க்க உணர்வு உருவாகாமல் தடுத்து, சாதி-மத மோதல்களை மூட்டிவிட்டு உழைக்கும் மக்களைத் துண்டாடுகிறது. இந்த சங் பரிவார் பாசிசச் சித்தாந்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதன் மூலம் மேல்கட்டுமானத்தின் மீதான தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.

கார்ப்பரேட் முதலாளித்துவத்திற்குத் தன் சுரண்டலை மறைக்கவும், தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையை உடைக்கவும் “காவி பாசிசமும் சனாதனமும்” தேவைப்படுகின்றன. அதேபோல, காவி பாசிசத்திற்குத் தன் அதிகாரத்தைத் தக்கவைக்க “கார்ப்பரேட் பண பலம்” தேவைப்படுகிறது. இவ்விரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்!

களப் போராட்டமே நிஜமான கோட்பாடும் நடைமுறையும் இணைந்த செயல்பாடாகும்.

மார்க்சியம் என்பது உலகை விளக்குவது மட்டுமல்ல, அதை மாற்றுவதுமாகும். நூல்களை மட்டும் படித்துவிட்டு மேலைநாட்டுக் கருத்துகளை இங்கிருக்கும் சூழலுக்குப் பொருத்தமில்லாமல் பேசுவது மார்க்சியத்தைக் காயடிக்கும் செயலாகும்.

இந்திய மண்ணில் உண்மையான புரட்சிகர மார்க்சியம் என்பது:
கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டத்தையும், சனாதன / சாதிய எதிர்ப்புப் போராட்டத்தையும்
ஒரே நேர்கோட்டில் இணைத்து, பாசிசத்திற்கு எதிராக அனைத்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களையும் திரட்டுவதே ஆகும்.

அடையாள அரசியலின் பிளவுகளையும், ஏட்டுச் சுரைக்காய் பின்-மார்க்சியத்தையும் புறந்தள்ளி, கார்ப்பரேட் – காவி பாசிசத்தை ஒரே நேரத்தில் எதிர்த்து நிற்கும் அரசியலே – கோட்பாடும் களப் போராட்டமும் இணைந்த – முழுமையான, உண்மையான மார்க்சிய-லெனினிய வழிமுறையாகும்!

தமிழ்மணி

யார் தீய சக்தி? இடைத் தேர்தல் உணர்த்தும் பாடம்!


"தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் உச்சம் தொட்ட மனிதர்கள், தங்கள் சொந்த வாழ்க்கையில் மூடநம்பிக்கையின் பிடியில் சாய்வது தமிழ்நாட்டின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது."

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்றிருப்பது ஒன்றும் பெரிய அதிசயமோ, ஜனநாயகத்தின் வெற்றியோ அல்ல.

“மை காய்வதற்கு முன்பே குதிரை பேரத்திற்கு விலை போனவர்கள்” என்று ஆளுங்கட்சியையும், வெற்றி பெற்ற வேட்பாளர்களையும் நோக்கிப் பலரும் சமூக வலைதளங்களில் காரசாரமாக எழுதி வருகிறார்கள். ஆனால், “நாங்கள் தூய சக்தி, மாற்று சக்தி” என்று மேடைகளில் முழங்கியவர்கள்தான் இந்த குதிரை பேரத்தின் முக்கியக் கர்த்தாக்கள் என்பதைப் பலரும் ஏனோ சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள்.

டிபன் பாக்ஸ்களிலும், ஜி-பே (GPay) கணக்குகளிலும் கரன்சிகளை வாரி இறைத்துத்தான் இந்தத் ‘தூய சக்தி’ தன் முதல் இடைத்தேர்தல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

உண்மையிலேயே யார் தீய சக்தி?

அடிப்படைக் குறைபாடுகளைக் கொண்ட இந்த முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் காலப்போக்கில் ‘தீய சக்திகளாகத்’ தான் மாறுவார்கள். அவர்களின் அடக்குமுறையிலும் சுரண்டலிலும் அளவுகளில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாமே தவிர, தீயவை தொடரவே செய்யும்.
“திமுக ஒரு தீய சக்தி” என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ‘தூய சக்தி’யின் உண்மையான சாயம் என்னவென்பது வெறும் 100 நாட்களிலேயே மக்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. ஆனாலும், அதே மக்கள்தான் அந்தத் ‘தூ(தீ)ய சக்திக்கு’ இந்த இடைத்தேர்தலிலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

ஒரு கட்சியை மக்கள் தூய சக்தியா அல்லது தீய சக்தியா என்று அணுகுவதில் இரண்டு பிரதான அம்சங்கள் மட்டுமே வேலை செய்கின்றன:

ஒன்று, அவர்கள் வீசும் கவர்ச்சி வலையில் முதலில் மக்கள் மயங்குவது.

மற்றொன்று, அவர்கள் வாரி இறைக்கும் கரன்சிகளுக்குப் பின்னால் வீழ்வது.

இதைத் தவிர வேறு எந்தத் தத்துவார்த்த அரசியலோ, கொள்கைப் பற்றோ இங்கே இல்லை. கவர்ச்சி காட்டி ஆட்சிக்கு வந்து, மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் தீய சக்திகளை விரட்ட வேண்டும் என்று மக்கள் நினைப்பதில்லை. அதேபோல, “மற்றவர்கள் எல்லாம் காசு கொடுத்துத்தான் வெற்றி பெறுகிறார்கள்” என்று புலம்பி விட்டு, தற்போது அதே தூய சக்தி காசு கொடுத்தபோதும் அதை வாங்கிக்கொண்டு வாக்களித்திருக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரையில், வெற்றி பெற்றவர்களோ அல்லது தோல்வியடைந்தவர்களோ முதன்மையான தீய சக்திகள் அல்ல. ஒருபுறம் கவர்ச்சிக்கு வீழ்வதும், மறுபுறம் பணத்திற்குத் தன்மானத்தை அடகுவைப்பதுமான வேலையைச் செய்கிற இந்த வாக்காளர்கள்தான் உண்மையான ‘தீய சக்தி’!

இந்தத் தீய சக்தியாக மாறியிருக்கும் மக்கள் மனநிலையை மாற்றுவது மிகவும் கடினமான, நீண்டநெடிய வேலைதான். எனினும் வேறு வழியில்லை; வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் சாடுவதைவிட, மக்களை அரசியல்படுத்துவதும் சரிசெய்வதும்தான் முற்போக்கு இயக்கங்களின் முதன்மையானக் கடமை. மக்களிடம் நேரடியாகச் செல்லாமல் இது சாத்தியமில்லை!

பொருளாதார வளர்ச்சியும் சித்தாந்த வறட்சியும்!

வேளாண்மை, தொழில்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பு, போக்குவரத்து, குடியிருப்பு வசதிகள் எனக் கட்டமைப்புச் சார்ந்த எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
இந்த உள்கட்டமைப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தின் காரணமாகவே, மிகக் குறைந்த கூலி கிடைக்கும் அடித்தட்டு உடலுழைப்பு வேலைகளுக்குச் செல்ல உள்ளூர்வாசிகள் தயங்குகிறார்கள். எவ்வளவு குறைந்த ஊதியம் கொடுத்தாலும் உழைக்கத் தயாராக இருக்கும் வடஇந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டை நோக்கித் திரளாக இடம்பெயர்வதற்கு இந்தச் சூழலே பிரதான காரணம். 

ஆனால், இதே தமிழ்நாடு அரசியல் விழிப்புணர்விலும், களப் போராட்ட குணத்திலும், அறிவியல் மனப்பான்மையிலும் முன்னேறிய மாநிலமா என்றால்? “இல்லை, இது இன்னமும் ஒரு பிற்போக்கு மாநிலமே” என்றுதான் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அரசியல் வறுமையும் மேட்டிமைத்தனமும்

அண்மைய பொதுத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் முடிவுகளும், தெருவில் இறங்கிப் போராடும் உழைக்கும் வர்க்கத்திற்காக உதவிக் கரம் நீட்டாமல் வேடிக்கை பார்த்துச் செல்லும் மேட்டிமைத்தனமும் தமிழ்நாட்டின் சித்தாந்த வீழ்ச்சியையே உணர்த்துகின்றன.

உயர் கல்வி பயின்று, கைநிறையச் சம்பாதித்து, அரண்மனை போல வீடும், ஆடம்பரக் காரும் வாங்கும் வசதியைப் பெற்றவர்கள்கூட, தத்துவார்த்தப் பின்னணியோ அரசியல் தெளிவோ இல்லாத விஜய் போன்ற அரசியல் சூனியங்களை எப்படித் தன் வழிகாட்டியாக ஏற்க முடிகிறது? இது நமது கல்வி முறை தந்த அறியாமையா அல்லது சமூகம் சார்ந்த பொறுப்பற்றத் தன்மையா?

அறிவியல் உணர்ச்சியா? மூடநம்பிக்கையா?

“அர்ச்சனைகளாலும் சடங்குகளாலும் வாழ்க்கை மாறப்போவதில்லை” என்ற அடிப்படை அறிவியல் உண்மை தெரிந்த பிறகும், படித்த சமூகமே கோயில்களில் வரிசையில் நின்று படி ஏறுவது எந்த வகையான பகுத்தறிவு? 

தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் உச்சம் தொட்ட மனிதர்கள், தங்கள் சொந்த வாழ்க்கையில் மூடநம்பிக்கையின் பிடியில் சாய்வது தமிழ்நாட்டின் மிகப்பெரிய முரணாக இருக்கிறது.

போலி பெருமிதங்களும் நார்வீஜிய மாடலும்

• “கீழடி கண்ட தொன்மை…”

• “பெரியார் மண்…”

• “திராவிட பாரம்பரியம்…”

— என்றெல்லாம் மேடைகளில் முழங்குவதற்குக்கூட இன்று நா கூசுகிறது. மேடைப் பேச்சிலும் வரலாற்றுப் பெருமையிலும் மட்டுமே பகுத்தறிவைப் பேசும் நாம், அன்றாட வாழ்வியலில் அதை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டோம். 

நார்வே போன்ற ஸ்காண்டிநேவிய நாடுகளில் மக்கள் வாழ்வது போல, சடங்குகளற்ற, மூடநம்பிக்கைகளற்ற, பகுத்தறிவு சார்ந்த வாழ்க்கையை நம்மால் ஏன் வாழ முடியவில்லை?

தமிழ்நாடு உலக வரைபடத்தில் வெறும் பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. மக்கள் தங்கள் நுகர்பொருள் மோகத்திலிருந்தும், பிம்ப வழிபாட்டிலிருந்தும், பணத்திற்காக வாக்களிக்கும் வீழ்ச்சியிலிருந்தும் வெளிவர வேண்டும்.

அரசியல் விழிப்புணர்வையும் அறிவியல் சிந்தனையையும் தங்களது அன்றாட வாழ்வியலாக மக்கள் கைக்கொள்ளும்போதுதான், தமிழ்நாடு உலக வரைபடத்தில் உண்மையான “பகுத்தறிவு நாடாக” தலைநிமிர்ந்து நிற்கும்!
அதுவரை தமிழ்நாடு தீய சக்திகளால் கட்டுண்டே கிடக்கும்.

தமிழ்மணி

(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)

Friday, 9 October 2026

நாய்களின் ராஜ்ஜியம்..!

தெருவில் வாழும் நாய்களுக்கென்று ஒரு ராஜ்ஜியம் உண்டு. அதற்கு எல்லைகள் உண்டு, எதிரிகள் உண்டு, அதிகாரப் போட்டிகளும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், நாய்களின் ராஜ்ஜியத்திலும் அரசியல் உண்டு.

எல்லைக் கல்லும் எல்லைச் சண்டையும்


ஒவ்வொரு தெருவிலும் சில நாய்கள் தமக்கென ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு வாழ்கின்றன. அந்த எல்லைக்குள் வேறு தெரு நாய்கள் நுழைய முடியாது. எல்லையைக் காட்டப் பெயர்ப் பலகை இல்லை, கொடிக்கம்பம் இல்லை. அவை எல்லையின் இருபுறமும் மலம்-சிறுநீர் கழித்து, "இது எங்க ஏரியா, உள்ளே வராதே!" என்று சொல்லாமல் சொல்லிவிடுகின்றன.

அரசியல்வாதிகளுக்கும் இதே கதைதான். அவர்களுக்கு நாயின் மலம்-சிறுநீருக்குப் பதில் ஃப்ளெக்ஸ் பேனர்களும் கட்சிக் கொடிக்கம்பங்களும் உண்டு. ஊராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லை. ஒருவன் எல்லைக்குள் இன்னொருவன் நுழைந்து அரசியல் செய்ய முடியாது.
புதிதாக ஒரு நாய் எல்லைக்குள் வந்துவிட்டால் முதலில் சந்தேகப் பார்வை, பிறகு குரைப்பு, அதன்பின் விரட்டல். அரசியலிலும் புதியவன் வந்தால் முதலில் விசாரிப்பார்கள், பிறகு கதை கட்டுவார்கள், பின்னணியைத் தேடுவார்கள், இறுதியில் தங்கள் எல்லைக்குள் அவனை நுழையாமல் பார்த்துக்கொள்வார்கள்.

எலும்புத் துண்டுக்கான யுத்தம்

தெருநாய்களின் உணவு பெரும்பாலும் மனிதர்கள் உண்டு மிஞ்சிய எச்சம்தான். ஆனால் எல்லா எச்சங்களையும் அவை விரும்புவதில்லை. நேற்றைய சோறு என்றால் முகர்ந்து பார்த்துத் திரும்பிவிடும். ரேஷன் அரிசிச் சோறு மனிதர்களுக்குப் பயன்படலாம்; நாய்கள் அதை முகர்ந்துகூடப் பார்ப்பதில்லை.
ஆனால் ஓர் உண்மையான எலும்புத் துண்டு விழுந்துவிட்டால், அதைச் சுற்றிப் பத்து நாய்கள் கூடிவிடும். பலசாலியான நாய் மற்றவற்றை விரட்டிவிட்டு எலும்பைத் தனதாக்கிக்கொள்ளும். ஏமாந்த நாய்கள் எட்டி நின்று பரிதாபமாகப் பார்க்கும். கடைசியில் அவை எலும்பு கிடந்த இடத்தை நக்கிவிட்டுச் செல்லும். அவற்றுக்குக் கிடைத்தது அவ்வளவுதான்.

அதிகார அரசியலிலும் இதே காட்சிதான். செல்வாக்குள்ளவன் மற்றவர்களை ஓரங்கட்டிப் பதவியையும் அதிகாரத்தையும் வளங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறான். எலும்பு சிறு துண்டாக இருந்தாலும் சண்டை எப்போதும் மூர்க்கமாகவே இருக்கும்.

எலும்பு போடுபவனுக்கே விசுவாசம்

யார் அதிகம் எலும்புத் துண்டு போடுகிறார்களோ அவர்களுக்குத்தான் நாயின் விசுவாசம். போட்டவன் எப்போது அழைத்தாலும் வாலாட்டிக்கொண்டு ஓடும்; குழைந்து குழைந்து அவனைச் சுற்றிக் "கிரிவலம்" வரும். நாளை இன்னொருவன் பெரிய எலும்பை வீசினால் அவனிடமும் வாலாட்டத் தொடங்கும்.

அரசியலும் அப்படித்தான். கல்குவாரி முதலாளிகளும் மணல் கொள்ளையர்களும் பெருமுதலாளிகளும் வாசலில் வீசும் எலும்புகளைப் பொறுக்கித் தின்னும் அரசியல் நாய்கள், அவர்களின் வாசலைக் காக்கத் தொடங்குகின்றன. இது புதிய கதை அல்ல; ஆனால் நாய்கள் அதைக் கூச்சமின்றிச் செய்கின்றன.

‘கில்லி’ ‘குட்டி’

எல்லா நாய்களும் பிறந்தவுடனேயே பயமுறுத்துவதில்லை. குட்டி நாய்க்கு ஒரு தனி வசீகரம் உண்டு. துள்ளி விளையாடும் அழகைப் பார்த்துச் சொக்கி நிற்பவர்கள் பிஸ்கட் கொடுப்பார்கள், தலையைத் தடவுவார்கள், "என்ன அழகான குட்டி!" என்று கொஞ்சுவார்கள்.
குட்டி வளர வளரக் காட்சி மாறிவிடுகிறது. உடல் பெருக்கிறது, குரல் பெருக்கிறது, "வளர்ந்துவிட்டோம்" என்ற செருக்கு தலைக்கேறுகிறது. புதிய எஜமானர்கள் பிஸ்கட் போடக் கிடைத்துவிட்டதால், நேற்றுவரை கொஞ்சிக் கொடுத்தவனையே இன்று விரட்டுகிறது.

நம் "கில்லி குட்டி"யும் இப்படித்தான். புதிதாக வந்தபோது "மாற்றம்" என்று நம்பிக்கை ஊட்டியது. அதிகாரம் கைக்கு வந்ததும் குரல் மாறியது, நடத்தை மாறியது, எல்லை பெருகியது, காவலர்கள் பெருகினர். நேற்று வாசலில் கொஞ்சிய மக்களையே இன்று காவலர்களை நிறுத்தி விலக்குகிறது. குட்டியாக இருந்தபோது இருந்த வசீகரம் இப்போது அதிகாரத்தின் குரூரமாக மாறிவிட்டது.

கூட்டமும் குரைப்பும்

நாய்கள் தனியாகச் செல்வதைவிடக் கூட்டமாகச் செல்வதையே விரும்புகின்றன. ஐந்து நாய்கள் சேர்ந்தால் தெருவே அவற்றுடையது.  அரசியல்வாதிகளும் அப்படித்தான்; தனியாகச் சென்றால் அதிகாரம் தெரியாது, பத்துப் பேர் பின்னால் வந்தால் தெரியும். கொடிகள், கார்கள், பாதுகாப்புப் படையினர் வந்தால்தான் பதவியின் உயரம் தெரிகிறது.

நாய்களின் போர் ஆயுதமே குரைப்புதான். ஒரு நாய் குரைக்கும், எதிரே இன்னொன்று குரைக்கும், மூன்றாவது எங்கிருந்தோ ஓடிவரும். சில நிமிடங்களில் தெருவே அதகளமாகிவிடும். அரசியலிலும் ஒருவன் மேடையில் பேசுகிறான், இன்னொருவன் மறுக்கிறான், மூன்றாவது கண்டனம் சொல்கிறான், நான்காவது பதிலடி கொடுக்கிறான். குரைத்தவர்கள் குரைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் நம் "குட்டி" நாய் மேடையில் கத்தத் தொடங்கினால், அது குரைப்பா, கத்தலா, மிமிக்ரியா என்றே புரியாமல் செவித்திரை கிழிகிறது. சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரைப் போல நடித்துக் காட்டுவது மக்களின் பிரச்சினைகளுக்குப் பதிலாகிவிடாது.

கத்தத் தெரிந்த குரலுக்கு, மக்களின் பிரச்சினை என்று வந்தால் மட்டும் மௌனம். தெருவே இருட்டில் மூழ்கும்போது குரல் எங்கே போனது? அறிவிக்கப்படாத மின்வெட்டுகளுக்கு எதிராக மக்கள் சாலையில் இறங்கிப் போராடிய பிறகும், மின்வெட்டுகளை "மின் பற்றாக்குறை" என்று பெயர் மாற்றும் சொல்லாடல் மட்டுமே வருகிறது. இருட்டில் அமர்ந்திருப்பவனுக்கு அது வெட்டா, பற்றாக்குறையா என்ற இலக்கணம் எதற்கு?

கூட்டம் காட்டுவது பலத்தையா, பயத்தையா என்பது வேறு கேள்வி. 2025 செப்டம்பரில் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 உயிர்கள் பறிபோன துயரத்தை இங்கே நினைவுகூராமல் இருக்க முடியாது. கூட்டம் சேர்ப்பதில் காட்டிய அக்கறையில் பாதியாவது கூட்டத்தைக் காப்பதில் இருந்திருந்தால் என்ற கேள்வி இன்றும் எஞ்சி நிற்கிறது.

நள்ளிரவு யுத்தம்

தெருநாய்களின் எல்லைச் சண்டைகள் பெரும்பாலும் நள்ளிரவில்தான் தொடங்கும். நாம் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்போம்; திடீரென்று "லொள்! லொள்! லொள்!" ஒரு நாய் குரைக்கும், எங்கிருந்தோ இன்னொன்று பதில் குரைக்கும். தெருவே போர்க்களமாகிவிடும். அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த மனிதர்களின் தூக்கம் கலைந்துவிடும்.

அரசியல்வாதிகளின் அதிகாரச் சண்டைகளும் அப்படியே. அவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்; நிம்மதி கெடுவதோ மக்களுக்கு.
நல்ல நாய் எது? வெறிநாய் எது?

தெருவில் நடக்கும்போது எந்த நாய் நல்ல நாய், எது வெறிநாய் என்று எளிதில் கண்டுபிடிக்க முடியாது. எல்லா நாய்களும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டுதான் அலைகின்றன. இன்று வாலாட்டுபவன் நாளை கடிக்கலாம். அதேபோல அரசியலில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று முகத்தையும் உடையையும் பார்த்து முடிவு செய்ய முடியாது. வாக்குறுதிக் கொடியை அசைப்பவன் கையில் என்ன இருக்கிறது என்பதை நடத்தைதான் காட்டும். அதனால்தான் நாய்களைக் கண்டு மனிதர்கள் அஞ்சுகிறார்கள்; அதிகார அரசியலைக் கண்டு மக்களும் அஞ்சுகிறார்கள்.

பசி!

நாய்கள் இனப்பெருக்கத்துக்காக மட்டுமே சேர்கின்றன. அங்கே நிறமில்லை, சாதியில்லை, மதமில்லை; எந்த நிறமாக இருந்தாலும் அது நாய்தானா என்பது மட்டுமே பார்க்கப்படுகிறது. மனிதனுக்கோ சேர்வதற்கே சாதி, மதம், இனம், நிறம், பணம், பதவி என எத்தனை தடைகள்! ஆனால் தடைகள் எவ்வளவு இருந்தாலும் அவன் ஆசைக்கு மட்டும் தடையே இல்லை.

நாய்களுக்கு இரண்டே பசிகள்: வயிற்றுப் பசி, எல்லைப் பசி. ஒரு எலும்புத் துண்டு கிடைத்தால் அவற்றின் வயிறு நிரம்பிவிடுகிறது. மனிதனுக்கோ பணப்பசி, நிலப்பசி, தங்கப்பசி, பதவிப்பசி, அதிகாரப்பசி, புகழ்ப்பசி, பாலியல் பசி என முடிவே இல்லாத பசிகள். ஒரு கோடி கிடைத்தால் பத்து கோடி வேண்டும், பத்து கோடி கிடைத்தால் நூறு கோடி வேண்டும். நாயின் பசி வயிற்றோடு முடிகிறது; மனிதனின் பசி கல்லறைவரை தொடர்கிறது. பித்ருலோகத்தில்கூட மனிதன் பசியோடு அலைவதாகத்தானே சொல்கிறார்கள்.

இதுவே அடிப்படை வேறுபாடு. நாயின் அசிங்கம் பசியால் வருகிறது; மனிதனின் அசிங்கம் பேராசையால் வருகிறது.

நாய்களின் ராஜ்ஜியத்தில் யாருக்கு மரியாதை?

நாய்களின் ராஜ்ஜியத்தில் நாய்களுக்காவது ஓர் இடம் உண்டு. பசியென்றால் உணவு தேடுகின்றன, எல்லை என்றால் காக்கின்றன, ஆபத்து என்றால் கூட்டமாக நின்று குரைக்கின்றன. தங்களுடைய கூட்டத்தை அவை கைவிடுவதில்லை.

ஆனால் மனிதர்களின் உலகில்? பசியென்று குரல் கொடுப்பவனைக் காவல்துறையை வைத்து அடித்து விரட்டுகிறோம். கடந்த ஆண்டு ரிப்பன் மாளிகை முன் வேலை பறிபோவதைக் கண்டு போராடிய தூய்மைப் பணியாளர்கள் இரவோடு இரவாக வாரியடித்துக் கைது செய்யப்பட்டதை யார்தான் மறக்க முடியும்? ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டமும், இன்றைய செவிலியர்களின் போராட்டமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உழைப்பவன் உரிமை கேட்டால் துரத்துகிறோம். வேலை கேட்டால் காத்திருக்கச் சொல்கிறோம். இருட்டில் அமர்ந்தவன் மின்சாரம் கேட்டால் "பற்றாக்குறை" என்கிறோம். அதிகாரம் உள்ளவன் கேட்டால் மட்டும் கதவுகள் திறக்கின்றன.

இறுதியாக…

நாய்களின் ராஜ்ஜியத்தைப் பார்த்துச் சிரிப்பதற்கு முன், நம்முடைய மனித ராஜ்ஜியத்தை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம். அங்கே யார் எலும்புக்காகக் காத்திருக்கிறார்கள்? யார் எலும்பு போடுகிறார்கள்? யார் வாலை ஆட்டுகிறார்கள்? யார் இருட்டில் குரைக்கிறார்கள்?

நாய்களின் ராஜ்ஜியத்தில் நாய்களுக்கு இருக்கும் மரியாதைகூட, மனித ராஜ்ஜியத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
மனிதனாகப் பிறந்ததால் நாம் பசியையும் பேராசையாக்கிவிட்டோம். நாய்கள் நாடாளவில்லை; நாடாள்பவர்கள்தான் நாய்களைவிடக் கீழிறங்கிவிட்டார்கள்!

— தமிழ்மணி

Monday, 5 October 2026

நொறுங்கி விழும் இதயங்கள்!

எங்கே தொடங்கி, எங்கே முடிப்பது என்று எனக்கே தெரியவில்லை. சில சமயங்களில் நமது நெஞ்சு நொறுங்கிப்போகிறது. அப்படி நொறுங்கிய நெஞ்சை வைத்துக்கொண்டு அதன் பிறகு என்னதான் செய்ய முடியும்?


உடைந்த பானையின் ஓடுகள் வேண்டுமானால் கீழடியின் தொல்லியல் சாட்சியங்களாகக் காட்சியளித்து, நமது வரலாற்றுப் பெருமையைப் பேசலாம். ஆனால், இதயம் நொறுங்கிச் சிதைந்துபோனால்—அதன் சிதிலங்கள்கூட வெளியில் தென்படுவதில்லை.

பானையின் வாய்ப்பகுதி உடைந்தால்கூட, புதிய பானை வாங்க வசதியில்லாத சூழலில் அதை ஓரளவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் அடிப்பகுதியே உடைந்துவிட்டால், அது எதற்குமே பயன்படாது. நமது இதயமும் அப்படித்தான்—ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நொறுங்கிவிட்டால், அதன் பிறகு உயிர் வாழ்வது மிகவும் கடினம்.

நமது இதயம் ஒன்றும் நசுங்கி, ஒடுக்கு விழுந்தாலும் துருப்பிடிக்காமல் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கும் ‘ஆஸ்டெனிடிக் எவர்சில்வர்’ (Austenitic Stainless Steel) அல்ல. அது பக்குவமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு மண்பாண்டம். அதன் மீது அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றித் தாறுமாறாகப் பயன்படுத்தினால், ஒரு நாள் அது நொறுங்கி விழுவதைத் தடுக்க முடியாது.

பானை தாங்கும் சுமை ஒரே மாதிரியானது; ஆனால் நம் இதயம் தாங்கும் பாரங்களோ விதவிதமானவை. அவற்றில், ‘ஆசை’ என்பதுதான் ஓசையில்லாமல் நம் இதயத்திற்குள் நுழையும் முதல் சுமை. அதைத் தொடக்கத்தில் நாம் ஒரு பாரமாகவே கருதுவதில்லை. அதை இயல்பானதாகக் கருதுகிறோம்.

உழைப்பவன் தன் உழைப்பை மட்டுமே நம்புகிறான்; இன்று உழைத்தால் நாளை வாழ முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது. ஆனால், உழைக்காமல் வாழ வேண்டும், எப்படியாவது சொத்து சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதே ஆசை பிறக்கிறது. ஆசை நிறைவேறாதபோது அது நிராசையாகி, இதயத்தில் ஒரு சிறிய விரிசலை ஏற்படுத்துகிறது. அந்த விரிசலைப் பொருட்படுத்தாமல் ஆசையைப் பேராசையாக வளர்த்துக்கொண்டே போனால், ஒரு நாள் அது பெரும் பிளவாகி இதயத்தையே நொறுக்கிவிடுகிறது.

‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ஆனால் இன்று ‘எல்லாவற்றிற்கும் ஆசைப்படு’ என்று முற்றும் துறந்த முனிவர்கள் போதிக்கிறார்கள். ஆசையால் பேரரசுகளே சரிந்திருக்கும்போது, நமது சிறிய இதயச் சாம்ராஜ்யம் மட்டும் தாங்கி நிற்குமா என்ன?

மண், பொன், பொருள், பெண் மீதான ஆசைகள்—வேலிக்குள் நுழைந்த ஓணானைப் போல—நம் வாழ்வைச் சீரழித்துவிடுகின்றன.

மண்ணாசை

உயிர் வாழவும், விவசாயம் செய்யவும், குடியிருக்கவும் ஒரு நிலம் இருந்தால் போதும். ஆனால், தலைமுறை தலைமுறைக்குச் சேர்த்து வைக்க நினைக்கும்போதுதான், பிறரை ஏமாற்றவும், பிறர் உரிமையைப் பறிக்கவும் மனிதன் துணிகிறான். அதில் ஏமாற்றப்பட்டவனின் இதயம் சுக்குநூறாகிறது. கிடைக்காத போது, ஆசைப்பட்டவன் இதயமும் நொறுங்கி விழுகிறது.

பொன்னாசை

‘தங்கம் எதிர்காலத்தில் கைகொடுக்கும்’ என்று நம்பி வாங்கி, அதை வங்கி லாக்கரில் வைப்பதா, இல்லை வீட்டில் வைத்திருப்பதா என்று முடிவெடுப்பதற்குள், எவனோ ஒருவன் களவாடிவிடுகிறான். வாழ்நாள் உழைப்பை இழந்து, அடுத்த நொடியே உடைந்து போகிறோம். நம்மைக் காப்பாற்ற வேண்டியது தங்கமல்ல; நமது உழைப்பும், உறவுகளும், உடல்நலமும்தான் என்பதைக் களவுகள்தான் நமக்கு அடிக்கடி உணர்த்துகின்றன.

பெண்ணாசை

ஆண்-பெண் உறவு என்பது இயற்கையின் மறு உற்பத்திக்கான பகுதி. அதை வெறும் உடல் இன்பப் பொருளாக மட்டும் பார்த்து, பெண்ணாசையில் விழும் ஒருவன், தனது குடும்பத்தின் பல இதயங்களை ஒரே நேரத்தில் நொறுக்கிவிடுகிறான்.

பண ஆசை

பசியாற உண்ணும் உணவைப்போல, தேவைக்கான பணம் சுகமானது. ஆனால், பத்து நாளுக்குத் தேவையான உணவை ஒரே நாளில் திணித்தால் வயிறு எப்படித் தாங்காதோ, அதுபோல—"இன்னும் அதிக வட்டி, இன்னும் அதிக பணம்" எனும் பேராசையைத் திணிக்கும்போது, நெஞ்சு மட்டும் தாங்குமா என்ன?

என் மனதுக்குள் இந்த எண்ணங்கள் ஆழமாகக் கிளறப்படுவதற்கு ஒரு கசப்பான காரணம் இருக்கிறது. அண்மையில், 70 வயதைத் தொடுவதற்கு முன்பே நொறுங்கிப்போன இதயங்களோடு இருவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டனர். அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில், தனியார் நிதி நிறுவனங்களில் லட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்து ஏமாந்தவர்களின் நிலை இதுதான். இவர்கள் இழப்பது பணத்தை மட்டுமே அல்ல; பல ஆண்டுகள் சிறுகச் சிறுகச் சேமித்த நம்பிக்கை, எதிர்காலம், குடும்பத்தின் பாதுகாப்பு—எல்லாவற்றையும்தான். "நான் ஏமாந்துவிட்டேனே!" என்ற மன உலைச்சல், இதயத்தின் மீது தாங்க முடியாத பாரமாகி, இறுதியில் அவர்களின் உயிரையே குடித்துவிடுகிறது.

சாராயத்திற்கு அடிமையானவனால்கூட ஒரு நாள் மீண்டுவிட முடியும்; ஆனால் அளவற்ற ஆசையில் தன்னைத் தொலைத்தவன் மீள்வது கடினம். பொருள்களையும், செல்வத்தையும் சேர்ப்பதைவிட, நிம்மதியையும் உறவுகளையும் சேமிப்பதே முக்கியம்.

ஏனெனில்...

உடைந்த பானைக்கு மாற்றாக வேறொரு பானையை வாங்கிவிடலாம்;
ஆனால், நொறுங்கிய இதயத்திற்கு மாற்று இதயம் கிடைக்காது!

— ஊரான்

Wednesday, 30 September 2026

இடைத்தேர்தல் முடிவுகளும் கூட்டணிக் கணக்குகளும்!

இடைத்தேர்தல் முடிவுகளும் கூட்டணிக் கணக்குகளும்!


தமிழ்நாட்டில் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலாக மட்டும் பார்க்க முடியாத அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முக்கியமான சோதனைச் சாவடி இவை.

இங்கு முக்கியமான கேள்வி, யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பது மட்டுமல்ல; இந்த முடிவு தமிழ்நாட்டின் அடுத்த கூட்டணி அரசியலை எவ்வாறு மாற்றக்கூடும்? என்பதுதான்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டவில்லை. இதனால் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்தது. அதேநேரத்தில் சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், தங்களை தவெக கூட்டணியின் அங்கமாகக் கருதவில்லை. இதனால் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் நிலை உருவாகியுள்ளது. அரசை ஆதரிப்பது வேறு; தேர்தல் கூட்டணியில் இல்லாமல் இருப்பது வேறு. இது ஒரு புதிய அரசியல் வேதம்.

தமிழ் நாட்டின் இன்றைய அரசியல் கணக்கு

திராவிட அரசியலால் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதை யாரும் மறுதலிக்க முடியாது.. ஆனால் அதே வேளையில் கருத்தியல் தளத்தில்  போதிய அளவு மக்கள் விழிப்புணர்வு பெறாததால், உதவாக்கரை திரைக் கவர்ச்சி, ஒரு அரசியல் பிம்பமாக மாறி, தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது திரைபிம்பம் பற்றியது மட்டுமல்ல, மக்களின் எதிர்பார்ப்புகள், அதிருப்திகள் இங்கே அரசியல் மூலதனமாகவும் மாற்றப்படுகிறது. 

***

இடைத்தேர்தல் என்பது வெறும் தொகுதி அளவிலான போட்டி மட்டுமல்ல அது நடிகர் சோசப் ஆட்சியின் அரசியல் அடித்தளம் இனி எவ்வாறு கட்டமைக்கப்படப் போகிறது என்பதற்கான ஒரு சோதனைக் களமாகவும் பார்க்க வேண்டியுள்ளது.

‘அனபாண்ட்’ கூட்டணி அரசியல்!

தவெகவைச் சுற்றி காங்கிரஸ், விசிக, IUML உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு உள்ளது. மறுபுறம் சிபிஐ தாராபுரத்திலும், சிபிஎம் மதுராந்தகத்திலும் தவெகவை எதிர்த்து தனித்துப் போட்டியிடுகின்றன; அதேவேளையில் தவெக அரசுக்கு அவை தொடர்ந்து ஆதரவும் அளிக்கின்றன. அதனால் இந்தக் கூட்டணியை நிரந்தரமானதாகப் பார்க்க முடியாது.

அரசியல் கட்சிகளின் பதவி ஆசைகள் மாறும்போது, கூட்டணி உறவுகளும் மாறலாம்.

அதனால்தான் இன்றைய ‘அனாபாண்ட்’ அரசியல் கூட்டணி நாளை ‘செல்லோ டேப்’ போல பிய்ந்தும் போகலாம். 

விசிகவா? பாமகவா? தவெக-வுக்கு எது உகந்தது?

இதில்தான் அடுத்த முக்கியமான கணக்கு தொடங்குகிறது.

தவெக எதிர்காலத்தில் தனது கூட்டணியை மறுசீரமைக்க முயன்றால், விசிகவைத் தொடர்ந்து உடன் வைத்துக்கொள்வதா அல்லது பாமக போன்ற வேறு ஒரு சாதி அடித்தளத்தைக் கொண்ட கட்சியை அணுகுவதா? என்றுகூட தவெக யோசிக்கக் கூடும். 

குறிப்பாக பாமகவுக்கு வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சாதி அடித்தளத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால், அதனை அணுகுவது தவெக-வுக்கு சாதகமாக அமையலாம். 

அதே நேரத்தில், விசிகவை விலக்குவதால் விசிக மூலம் கிடைக்கும் பட்டியல் சாதி ஆதரவில் குறிப்பாக பறையர் சாதி ஆதரவில் ஏற்படக்கூடிய இழப்பையும் தவெக கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும். 

அதாவது, இது வெறும் “ஒரு கட்சியை மாற்றி இன்னொரு கட்சியைச் சேர்ப்பது” என்ற கணக்கு அல்ல. இது சாதியை மாற்றும் கணக்காகவும் இருக்கலாம்.

தற்போது பாமக இரு இடைத் தேர்தல்களிலும் எந்தக் கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளது. அதேவேளை, தவெக–பாமக இடையே எதிர்கால அரசியல் உறவு குறித்த விவாதங்களும் உலவுகின்றன.

எனவே விசிகவா? பாமகவா? அல்லது இருவரையும் உள்ளடக்கிய வேறு ஒரு கூட்டணி வடிவமா? என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது.

ஆனால் இந்தக் கேள்விதான் எதிர்கால அரசியல் கணக்கின் முக்கியமான கேள்வியாக இருக்கக்கூடும்.

சனாதன அரசியலின் புதிய கணக்கு?

ஒருவேளை விசிக, தவெக கூட்டணியில் இருந்து வெளியேற நேர்ந்தால், இனி அதன் அரசியல் செயல்பாடு எவ்வாறு இருக்கும்? சனாதன எதிர்ப்பை அது தொடர்ந்து பேசுமா அல்லது ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளையின் நலன் கருதி கூட்டணி தர்மத்திற்காக சனாதன எதிர்ப்பைக் கைவிடுமா? இந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

ஒருவேளை சனாதன எதிர்ப்பு அரசியலை விசிக கைவிட்டால் விசிக-வின் எதிர்காலம் என்னவாகும்? முற்போக்கு முகாம் என்கிற அடையாளத்தைக்கூட அது இழக்க நேரிடலாம்.

தவெக-வைப் பொறுத்தவரை அது சனாதன எதிர்ப்பு கொள்கை கொண்டதல்ல; சொல்லப்போனால் அது கிட்டத்தட்ட சனாதன ஆதரவாளர்களால் நிரம்பி வழியும் ஒரு கட்சி. அதற்குத் தேவை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதுதானே ஒழிய கொள்கையை தக்கவைத்துக் கொள்வது அல்ல. கொள்கை இருந்தால்தானே தக்க வைத்துக் கொள்ள என்று நீங்கள் முனுமுனுப்பது என் காதுகளை எட்டுகிறது.

இவை இப்போது உறுதியான முடிவுகள் அல்ல என்றாலும் எதிர்கால கூட்டணி அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான புள்ளியாகும்.

தவிர, இடதுசாரிகளின் தற்போதைய “அரசுக்கு ஆதரவு — தேர்தலில் எதிர்ப்பு” என்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும்?

பாமக போன்ற கட்சிகள் எதிர்காலத்தில் எந்த அணியை நோக்கி நகரும்?

இந்தக் கேள்விகளுக்கான விடைகள் அக்டோபர் 6 முடிவில் மட்டும் கிடைக்காது. அதற்குப் பிறகு நடைபெறும் அரசியல் நகர்வுகளில்தான் அடுத்த கூட்டணி கணக்கும் தெளிவாகும்.

எனவே மதுராந்தகமும் தாராபுரமும் இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல — தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் கூட்டணி கணக்கை தீர்மானிப்பதற்கான சோதனைச் சாவடிகள்.

திரைப் பிம்பங்களையும் தேர்தல் முழக்கங்களையும் தாண்டி, அவற்றுக்குப் பின்னால் இருக்கும் அவர்களின் அதிகாரப் பசியைப் புரிந்துகொள்வதுதான் நமக்குச் சவாலானது; அவர்களுக்கோ அது மிகச் சாதாரணமானது. 

பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் அதிகாரப்பசி எதுவரை பாயும் என்பதை இதுவரை யாரும் கண்டதில்லை.

— தமிழ்மணி