Sunday, 20 July 2014

நாங்கல்லாம் கீரைக்கு மாறி ரொம்ப நாளாச்சு!

இன்று வாரச்சந்தை. பழமும் மீனும் வாங்கி வரலாம் என காலை 11 மணிக்கு சந்தைக்குச் சென்றேன். மீன் கடை காலியாக இருந்தது. நான் அவரது வாடிக்கையாளர் என்பதால் என்னைப் பார்த்ததுமே-  

"சார்! இன்னைக்கு மீன் சரியா வரல சார்!" என்றார். 

"சரி! அடுத்த வாரம் வாங்கிக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு தக்காளி வாங்கலாம் என வழக்கமாக தக்காளி வாங்குபவரிடம் சென்றேன். அவரிடம் வழக்கமாக இருப்பதைவிட சரக்கு மிகக் குறைவாக இருந்தது. தக்காளி கிலோ ஐந்து ரூபாய்க்கும் - பத்து ரூபாய்க்கும் விற்கும் போது விலை எல்லாம் கேட்பது கிடையாது. நேரே கடைக்குச் சென்று ஒரு கிலோ தக்காளியை வாங்கிக் கொண்டு அடுத்த பொருளை வாங்க வேறு கடைக்குச் சென்று விடுவேன்.

கடந்த பதினைந்து நாட்களாக தக்காளியின் விலை ஏறுமுகமாக இருப்பதாலும், தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பதாலும் 'தக்காளி வாங்கலாமா? வேண்டாமா?' என்கிற கேள்வி வேறு என்னுள் எழுந்தவாறே இருந்தது. சந்தையில் முதல் தர தக்காளியைக் காணமுடியவில்லை. நான் வழக்கமாக வாங்கும் கடைக்காரரிடமும் இரண்டாம் தர தக்காளிதான் இருந்தது. 

விலை கேட்டேன். "கிலோ 50 ரூபாய்" என்றார். வாங்குவதற்கு மனம் இடம் தரவில்லை. சாி! சந்தையை ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம், வேறு கடையில் 30 ரூபாய்க்கு கிடைக்கலாமில்லையா என்கிற  நப்பாசையில் வேறு சில கடைகளில் விசாரித்தேன். அங்கேயும் 50 ரூபாய்தான். மீண்டும் அவர் கடைக்கே வந்தேன். "எல்லா எடத்திலேயும் ஐம்பது ரூபாய்தான்" என்று அவர் முணு முணுத்தது சந்தையின் இரைச்சலில்கூட என் காதில் விழத்தான் செய்தது. பிறகு ஒரு கிலோ தக்காளியை வாங்கிக் கொண்டேன். வேறு கடைகளில் வாங்காமல் இவர் கடையிலேயே வாங்கியதற்குக் காரணம் எடை குறித்த நம்பிக்கைதான்.

இலவசமாக கருவேப்பிலை - கொத்தமல்லி வாங்கிய காலம் போய், பிறகு ஒரு ரூபாயாகி,  பிறகு மேலும் இரண்டு ரூபாயாகி, அதன் பிறகு ஐந்து ரூபாயாகி, தற்போது பத்து ரூபாயாகிவிட்டது.  கொத்தமல்லி - கருவேப்பிலை - இஞ்சி - பச்சை மிளகாய் - புதினா இவை ஐந்தையும் வாங்கினால் ரூபாய் ஐம்பது காலியாகிவிடும். வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாதே. ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால் ஐம்பது ரூபாய் காலி. அடுத்து காய்கறிகள் வாங்கலாம் என்றால் கத்தரியிலிருந்து பாகற்காய்வரை எல்லாமே கிலோ ரூபாய் நாற்பதிலிருந்து ரூபாய் எண்பது வரை. காய்கறிகளுக்காக ஒதுக்கும் வாராந்திரத் தொகையோ 200 ரூபாய்தான். இந்த இருநூறை வைத்துக் கொண்டு என்ன வாங்குவது? என்ன சமைப்பது? ஒன்றும் விளங்கவில்லை. குழப்பம்தான் மிஞ்சியது.

'ஒண்ணும் வேணாம் வா!. வீட்ல வெரமிளகாய் இருக்கு. முட்டை வாங்கிக்கலாம். அரைக்கீரை, மொளக்கீரை, சிறுகீரை, மணத்தக்காளிக் கீரை, புளிச்சக்கீரை  என ஒவ்வொன்றிலும் ஒரு கட்டு வாங்கினால்கூட  கட்டு பத்து ரூபாய் என்றாலும் ஐம்பது ரூபாய்க்குள் முடிந்துவிடும். ஒரு டசன் முட்டை வாங்கினால் ஒரு ஐம்பது ரூபாய். ஒரு வாரத்தை சமாளித்துவிடலாம்!' என சென்ற வார சந்தையில் இரு பெண்மணிகள் பேசிக்கொண்டதாக எனது துணைவியார் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. 

ஏற்கனவே வீட்டில் கீரைகள் இருப்பதால் அதை வைத்தே சமாளித்துக் கொள்ளலாம் என்பதால் ஏதாவது ஒரு பழம் மட்டும் வாங்கலாம் என யோசித்து 'கொய்யா சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு நல்லது' என பலரும் சொல்வதால் அரை கிலோ கொய்யாவை வாங்கி பையில் வைப்பதற்கள் "கொய்யா வெல அதிகம். அரை கிலோ முப்பது ரூபாய்!" என்றார் கடைக்கார பெண்மணி. எடை நாணயம் கருதி இவரிடமும் நான் விலை கேட்பது கிடையாது. 

"என்ன ஏதாவது திருவிழா வருதா?" என்று கேட்டேன். 

"ஆமா! கிருத்திகை வருதே!" என்றார். கஷ்ட காலம் என்றால் 'அப்பா! முருகா!' என்பார்கள் பக்தர்கள். விக்கிற வெலவாசி கஷ்டத்துல கொய்யா வாங்கலாம் என்றால் 'இப்ப அந்த முருகனே கஷ்டத்தைக் கொடுக்கிறானே!' என எண்ணிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

கீரைகளை அதிகம் சாப்பிடுங்கள் உடம்புக்கு நல்லது என இனி மருத்துவர்கள் அறிவுரை கூற வேண்டியதில்லை. நாங்கல்லாம் கீரைக்கு மாறி ரொம்ப நாளாச்சு!

Saturday, 19 July 2014

நெருப்பைக் கக்கும் டிராகன்களை நேரில் பார்க்க வேண்டுமா?

முசோலினி மற்றும் ஹிட்லரை பாசிஸ்டுகள் என்று சொன்னபோது அது நமக்கு விளங்கவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த ராசபக்சேவை பாசிஸ்ட் என்று சொன்ன போதுதான் பாசிஸ்ட் என்றால் என்ன என்பதை நம்மால் மிக எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. 

தொடர் வண்டிக் கட்டணம் பெட்ரோல்-டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தமிழக மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் குறித்த பிரச்சனைகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடுகள் பற்றிய விவாதங்களில் ஊடகவியலாளர்களும் மாற்றுக்கட்சியினரும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில சொல்ல முடியாமல் மூஞ்சி தொங்கிப்போன சங்பரிவாரத் தலைவர்கள், தற்போது சமூக வலைதளங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்த நடுவண் அரசு பிறப்பித்த உத்தரவு மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமசுகிருத வாரம் கொண்டாட அரசு சுற்றறிக்கை அனுப்பியது குறித்த விவாதங்களில் பங்கேற்கும் எதிர் அணியினரை பயங்கர வெறிகொண்டு மூர்க்கத்தனத்தோடு எதிர்க்கின்றனர்.

18.07.2014 அன்று தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவதாதத்தின் போது பாரதிய ஜனதாகட்சியைச் சேர்ந்த ராசா என்பவர் கடுஞ் சீற்றத்துடன் "இந்தியை எதிர்ப்பவன் தேசத்துரோகி" என தனது தோழமைக்கட்சியான ம.தி.மு.க வின் அந்திரிதாசு மீது  பாய்ந்த காட்சியைப் பார்த்தபோது  எனக்கு சற்றே நடுக்கம் ஏற்பட்டது. நல்ல வேளை. விவாதம் அந்த நேரத்தில் முடியும் தருவாயில் இருந்ததால் அந்திரிதாசு தப்பித்தார்.

அதோபோல இந்தியாவில் இனி ஒருவன் தன்னை தமிழன் என்றோ, தெலுங்கன் என்றோ, மலையாளி என்றோ, மராட்டியன் என்றோ, காசுமீரி என்றோ, வங்காளி என்றோ சொல்லிக் கொள்ளக்கூடாது. அப்படி எந்த ஒரு இனமும் இந்தியாவில் கிடையாது. இந்தியாவில் இருப்பது ஒரே இனம்தான். அது இந்தியன் என்கிற இனம் மட்டுமே. இதற்கு எதிராக எவன் பேசினாலும் அவனும் தேசத்துரோகிதான் என்பதுதான் சங்பரிவாரத் தலைவர்களின் இனம் குறித்த முடிவு.

நெருப்பைக் கக்கும் டிராகனை நான் நேரில் பார்த்ததில்லை. இனி அந்தக் குறை எனக்கு இல்லை. தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்கும் சங்பரிவாரத் தலைவர்களைப் பார்த்தாலே போதும். 

Thursday, 17 July 2014

கிரேதா யுகம் நிச்சயம் வரும்! இந்தியாவும் வல்லரசாகும்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதில் தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் உள்ள பிணக்கு தீர்ந்த பாடில்லை.

காவிரி நதி நீர்ப் பங்கீடு பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையிலான சச்சரவு முடிவுக்கு வந்தபாடில்லை.

பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்ட முயற்சிப்பதால் தமிழ்நாட்டிற்கும் ஆந்திரத்திற்குமிடையே பிரச்சனை.

நதி நீர்ப் பங்கீட்டில் பல்வேறு மாநிலங்களுக்கிடையில் பிரச்சனை.

பிழைப்பு தேடி வட இந்தியர்கள் தமிழகம் நோக்கி படை எடுப்பதால் தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்குமிடையே பிரச்சனை.

வட இந்தியாவிலேயே பிகாரிகளுக்கும் மராட்டியர்களுக்குமிடையே பிரச்சனை.

காசுமீரத்துக்கும்  இந்தியாவிற்குமிடையே பிரச்சனை.

வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே பிரச்சனை.

இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்குமிடையெ பிரச்சனை.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற உயர் சாதிக்காரர்களுக்குமிடையே பிரச்சனை.

பார்ப்பனர்களுக்கும் பிற சாதிக்கார்களுக்குமிடையே பிரச்சனை.

இப்படி திரும்பும் இடமெல்லாம் இந்தியவெங்கும் பிரச்சனை! பிரச்சனை!!

இப்பொழுது காங்கிரசு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுவிட்டது. இனி யாரும் கவலைப்பட வேண்டாம். குறிப்பாக தமிழர்கள் காவிரி பிரச்சனை குறித்தோ அல்லது முல்லைப் பெரியாறு பற்றியோ அல்லது பாலாறு பிரச்சனை பற்றியோ கவலைப்பட வேண்டாம் என சங்பரிவாரத்தலைவர்கள் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் தமிழக மக்கள் தங்களுடைய பிள்ளைகளை மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் மட்டுமே சேர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இத்தகைய பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை என்றால் கவலைப்படாமல் தங்களின் பிள்ளைகளை "அம்மா” வழங்கிய விலையில்லா ஆடு-மாடுகளை மேய்க்க அனுப்பி வைத்தாலே போதும். பிள்ளைகள் படிக்கவில்லை என்றாலும் பாண்டவர்கள் வனவாசத்தில் வாசம் செய்ததைப்போல இந்தப் பிள்ளைகளும் ஆடு-மாடுகளை  மேய்த்துக் கொண்டே வனத்திலேயே வாசம் செய்து சுதந்திரமாய் சஞ்சரிக்கலாம். வனத்தில் கிடைக்கும் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு வாழலாம்.

அதே நேரத்தில் மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் இடம் கிடைத்த பிள்ளைகளோ ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் சமசுகிருத வாரக் கொண்டாட்டங்களில் பங்கேற்று தேசிய ஒருப்பாடு பற்றிய விழிப்புணர்வைப் பெறுவார்கள்தேசிய ஒருப்பாடு பற்றிய விழிப்புணர்வைப் பெறுகிற அதே வேளையில் அவர்கள் சமசுகிருதத்தில் புலமையும் பெறுவார்கள். இப்படி அவர்கள் சமசுகிருதத்தில் புலமை பெற்றுவிட்டால் தேசிய ஒருமைப்பாடு பற்றிய உணர்வு அவர்களின் குருதியில் ஊறிவிடும்

தேசிய ஒருமைப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஒன்று மட்டுமே இந்தியாவைப் பீடித்திருக்கும் நதிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க வழிவகுக்கும். மற்றபடி இந்தப் பிரச்சகைளைத் தீர்க்க வேறு குறுக்கு வழிகள் கிடையாது.

அப்பொழுது நாடு அமைதிப் பூங்காவாக மாறியிருக்கும். அதன்பிறகு காடுகளுக்குச் சென்று வனவாசம் மேற்கொண்ட பிற பிள்ளைகள் ஊருக்குத் திரும்பி அமைதியான முறையில் தங்கள் மாடுகளை சமவெளிப் பிரதேசங்களில் மேய்த்துக் கொள்ளலாம். அம்மா கொடுத்த மாடுகள் எல்லாம் கோமாதாக்களாக அவதாரமெடுத்திருக்கும்.

கன்றுக்கு இல்லை என்றாலும் கோமாதாக்களின் பாலை ஒட்டக் கறந்து மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் செயல்படும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குக் கொடுத்து வந்தால் அவர்கள் கோமாதாக்களின் பாலைக் குடித்து தயிரும் நெய்யும் உண்டு கொழுகொழுவென வளர்வார்கள். அவர்களின் உடலும் வனப்பு பெறும்; மூளையும் விருத்தியடையும். இறுதியில் அவர்களின் அறிவுக்கூர்மையாலும் பிறரை எளிதாகக் கையாளும் ஆற்றலாலும் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டு அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். பிறகு வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேறும். அப்பொழுது இந்தியா வல்லரசாவதை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது.

பாண்டவர்களைப் போல பதின்மூன்று ஆண்டு காலத்திற்குள் முடிந்து விடுவதற்கு இது ஒன்றும் கிரேதா யுகம் அல்லஇது கலியுகம். நூற்றுமுப்பது ஆண்டுகள்கூட ஆகலாம். பொருத்தவன்தானே பூமி ஆள்வான். என்ன அவசரம்! பொருத்திருப்போம். கிரேதா யுகம் நிச்சயம் வரும். இந்தியாவும் வல்லரசாகும்.

தொடர்புடைய பதிவுகள்:

கோவணம்!

Wednesday, 16 July 2014

பேஷா பேஷராறு ராகவன்!

சமூக வலைதளங்களில் இந்தியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என அன்மையில் நடுவண் அரசு பிரப்பித்த ஆணை மற்றும் அதையொட்டி தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு பற்றி தொலைக்காட்சி ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

அத்தகைய விவாதங்களில் பங்கேற்ற பா.ஜ.க வின் ராகவன் அவர்கள் ஆங்கிலத்தின் மீது கடும் சினம் கொண்டு பேஷினார். ஆங்கிலம் தனக்கு அந்நிய பாஷை என்றும் அது தனக்குத் தேவையில்லை எனவும் பொறிந்து தள்ளினார்.

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் - பத்திரிக்கையாளர் வேத பிரதாப் வைதிக் சந்திப்பு பற்றிய பிரச்சனை குறித்து இன்று (16.07.2014) தந்தி தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு நடைபெற்ற விவாதத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஹரிஹரன் மற்றும் சி.பி.எம்.மின் குமரேசன், காங்கிரசின் அமெரிக்கை நாராயணன் ஆகியோருடன் ஷொன்னீங்க, பேஷரது, பிரஷ்னை, கேழ்ப்பது, விஷயம், ஷொல்ரது என தமிழில் ரொம்ப பேஷாகப் பேஷினார்  திருவாளர் ராகவன் அவர்கள். அன்று ஆங்கிலத்தின் மீது பொறிந்து தள்ளிய அதே ராகவனுக்கு இன்று parliament, issue, devil, certificate, select, selection, government, consideration, right, intelligence bureau, advice போன்ற அந்நியனின் ஆங்கில ஷொற்கள் தமிழை இணைக்கும் இணைப்பு ஷொற்களாக இருந்தது ஏனோ?

Monday, 14 July 2014

“ஐயா”வை அசிங்கப்படுத்தும் ‘அய்யா’க்கள்!

வால் நெருப்பைக் கொண்டே இராவணனின் லங்காவையே பொசுக்கிய வானரக்கூட்டதிற்கு ராஜபக்சேவெல்லாம்  சும்மா ஜுஜுபி என நேற்றுவரை கூப்பாடு போட்ட ‘அய்யா’வுக்கு இன்று திடீர் நெஞ்சுவலியாம்.

‘அய்யா’வின் நெஞ்சு வலிக்கான காரணத்தைக் கண்டறிய முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகிறார்களாம். ‘அய்யா’வை குணப்படுத்துவது ஒரு சவாலான வேலை என்பதால் ஒரு தனி அறையில் மருத்துவக் குழாம் மிகத்தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்த போது

“இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது” என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சொன்னதைக் கேட்டதனால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் ‘அய்யா’வின் நெஞ்சுவலிக்குக் காரணம் என அசரீரி ஒலித்ததாம். 

இதற்கெல்லாம் எப்படி மருத்துவம் பார்ப்பது என்கிற குழப்பத்தில் மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்களாம். இதைக்கண்ட பாட்டாளிச் சொந்தங்கள் ‘அய்யா’வுக்குத் தைலம் தெளிக்க தயாராகிவிட்டதாகக் கேள்வி!

பொருள் பொதிந்த “ஐயா”வை பொருளற்ற ‘அய்யா’க்கள் அசிங்கப்படுத்தியது போதும்!

-------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்:

கோவணம்!