Thursday, 8 April 2021

தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு மூடுவிழா! தொடர்-6

தொழிலகத்தில் ஏற்படும் தொழிற்தகராறுகளைைத் தீர்த்துக் கொள்வதற்கு பழைய சட்டப்படி சமரச அதிகாரியிடம் (conciliation) முறையிடலாம். அதன் பிறகு தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால் தற்போது, சமரச அதிகாரியிடம் முறையிடுவதற்கு முன்பாக நடுவர்களை (arbitrator) ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டை புதிதாகப் புகுத்தி உள்ளனர். தொழிற்தகராறு ஒன்றில் ஒரு முடிவைப் பெறுவதற்குப் பழைய நடைமுறையிலேயே தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது தொழிற்தகராறை மேலும் இழுத்தப்படிப்பதற்கான ஏற்பாடாக இந்த நடுவர் முறை நுழைக்கப்பட்டுள்ளது. இது முதலாளிகளுக்குத்தான் சாதகம் என்பதை சொல்ல வேண்டுமா என்ன? (பிரிவு 42: தொழிலுறவு சட்டத் தொகுப்பு)

பழைய நடைமுறையில், சமரச அதிகாரியிடம் நியாயம் கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களில் முறையிட முடியும். இனி மாவட்டங்களில் தொழிலாளர் நீதிமன்றங்கள் இருக்காது. அதற்கு மாறாக மாநில அளவில் ஓரிரு தீர்ப்பாயங்கள் (tribunal) மட்டுமே அமைக்கப்படும். அதே போல தேசிய அளவிலும் ஓரிரு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் இனி மாநிலத் தீர்ப்பாயங்களுக்கு மாற்றப்படும். இதன் மூலம் மாவட்டங்களிலேயே உடனடியாக அணுகக் கூடிய வாய்ப்பைப் பறித்து விட்டது மோடி அரசு (பிரிவு 43-61: தொழிலுறவு சட்டத் தொகுப்பு).

 

நடுவர் முறையைப் புகுத்தியது மற்றும் மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களைக் கலைத்துவிட்டு தீர்ப்பாயங்களை ஏற்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளியை தொலை தூரத்திற்கு அலைய விடுவதோடு நீதியைத் தாமதப்படுத்தி அவனை நடைபிணமாக்குவதற்குத்தான் வழிவகுக்கும். மொத்தத்தில் "சொன்னதைக் கேட்டுக் கொண்டு அடிமை போல வேலை செய்யப் பழகிக் கொள்!” என்பதை சொல்லாமலேயே உணர்த்துகிறார் மோடி.


வேலை நிறுத்தம் மற்றும் ஆலை மூடல்

 

குடி நீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் எத்தனை முறை மனு கொடுத்தாலும் மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தினால்தான் அதிகார வர்க்கம் செவி மடுக்கிறது. அதுபோலத்தான் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும்.

 

வேலை நிறுத்தம் மற்றும் ஆலை மூடல் எதுவாக இருந்தாலும் 60 நாள் முன்னறிவிப்பின்றி, 14 நாட்களுக்கு முன்பாக, சமரசம் நிலுவையில் உள்ள போது செய்யக்கூடாது என பொதுவாகச் சொல்லப்பட்டாலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையைப் பறிக்கின்ற வகையிலேயே சட்டத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரும் அசம்பாவிதம் நடந்து விட்டது, நிர்வாகம் அதை அலட்சியப்படுத்துகிறது என்கிற சூழலில் திடீர் வேலைநிறுத்தம் மூலம்தான் நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியும். ஆனால் இனிமேல் இத்தகைய திடீர் வேலை நிறுத்தங்கள் (flash strike) எதையும் தொழிலாளர்கள் மேற்கொள்ள முடியாது. மேலும் வேலை நிறுத்தம் செய்வதற்கு 60 நாள் முன்னறிவிப்புத் தேவை என்பதே வேலை நிறுத்தப் போராட்டமே செய்யக் கூடாது என்பதுதான். (பிரிவு: 62-64, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 


நீதியை எங்கே தேட?


சட்டத்தை  மீறிச் செயல்படும் ஒரு நிர்வாகத்தின் மீது பழைய சட்டங்களின்படி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றங்களில்கூட இனி  நீதிமன்றங்கள் தலையிட முடியாது. மாறாக சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது மத்திய மாநில அரசு அதிகாரிகளே விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவார்களாம். (பிரிவு: 85-89, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 


ஆளும்வர்க்கத்தின் எடுபிடிகளான அரசுஅதிகாரிகளின் ஆசியோடுதான் எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீருகிறார்கள். ஆசி கொடுத்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நீதி கிடைக்கும்? தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் நான்கு புதிய சட்டத் தொகுப்புகளிலும் நீதி தேவதையின் காதுகள் செவிடாக்கப்பட்டுவிட்டன.


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்:

 

Tuesday, 6 April 2021

பறிபோகும் தொழிற்சங்க-கூட்டுபேர உரிமைகள்! தொடர்-5

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஏழு தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தொழிற்சங்கத்தை அமைக்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களில் குறைந்தது 10% பேர் அல்லது 100 பேர்-இதில் எது குறைவோ அந்த அளவுக்கு-அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே அந்தத் தொழிற்சங்கம் பதிவு செய்யப்படும். எடுத்துக்காட்டாக 500 தொழிலாளர்கள் எனில் 50 பேரும் அல்லது 1000 தொழிலாளர்கள் எனில் 100 பேரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒருவேளை தொடக்கத்தில் மேற்கண்ட நிபந்தனைகளின்படி ஒரு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அச்சங்கம் தொடர்ந்து அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே தொழிற்சங்கப் பதிவை தக்க வைத்துக் கொள்ள முடியும். (விதி 6, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 

ஒரு நிறுவனத்தில் ஒரு சங்கம் மட்டுமே இருந்தால், அந்தச் சங்கம் கூட்டுபேர உரிமை பெற முடியும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்குமேயானால், எந்தச் சங்கம் 51 சதவீதத்திற்கு மேல் தொழிலாளர்களின் ஆதரவு பெற்றுள்ளதோ, அச்சங்கம் மட்டுமே நிர்வாகத்துடன் கூட்டுபேர உரிமையில் பங்கெடுக்க முடியும். எந்த ஒரு சங்கமும் 51 சதவீதத்திற்கு மேல் ஆதரவு பெறவில்லை என்றால் 20 சதவீத ஆதரவு பெற்ற தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் கூட்டபேர கவுன்சில் ஒன்றை நிர்வாகமே ஏற்படுத்தும். (விதி 14, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).


அரசியல் சட்டம் வழங்கியுள்ள சங்கமாகச் சேரும் உரிமையை நேரடியாக பறிப்பதோடு, அங்கீகாரம் பெற்ற ஒரு சங்கம் நிர்வாகத்தின் எடுபிடிச் சங்கமாக செயல்படும் சூழலில், புதியதோர் மாற்றுச் சங்கம் அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அடைத்து விடுகின்றன மேற்கண்ட பிரிவுகள்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொழிலாளர்களைப் பழிவாங்குவதில் எதேச்சதிகாரமாக செயல்படும் நிர்வாகங்களை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களுக்கான நிலை ஆணைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். 100 பேருக்கு மேல் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு நிலை ஆணைகள் சட்டம் பொருந்தும் என்றிருந்த பழைய சட்டத்தைக் குப்பைத் தோட்டியில் வீசிவிட்டு இனி 300 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே நிலை ஆணைகள் பொருந்தும் என சட்டத்தைத் திருத்தி உள்ளது மோடி அரசு. (விதி 28-29, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).

 

'நீம்' தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு ஏற்ப சட்டம் திருத்தப்பட்டுள்ளதால் இனி நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 300 பேருக்கும் குறைவாகவே வைத்துக் கொள்வார்கள். அனைத்து வகையான தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அந்த நிறுவனத்துக்கு நிலை ஆணைகள் தேவையில்லை என்கிறார் மோடி. இதன் மூலம் முதலாளிளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு இனி அளவே இருக்காது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்  நிலை ஆணைகள் சட்டத்தின் மூலம் நிவாரணம் கோருவதற்கான அரைகுறை உரிமைகளையும் பறித்துக் கொண்டுவிட்டது பாஜக அரசு.


மாதிரி நிலை ஆணைகள் ( Model Standing Orders)


300 பேருக்கு மேல் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு மாதிரி நிலை ஆணைகள் (Model Standing Orders) ஒன்றை வெளியிட்டுள்ளது நடுவண் அரசு. இதன்படி நிரந்தரத் தொழிலாளர்கள் (Permanent), தற்காலிகத் தொழிலாளர்கள் (Temporary), பயிற்சியாளர்கள் (Apprentices), தகுதிகாண் தொழிலாளர்கள் (Probationers), பதிலிகள் (Badlies) மற்றும் குறிப்பிட்ட கால வேலை வாய்ப்புத் தொழிலாளர்கள் (Fixed Term Employment) என தொழிலாளர்களை வகைப்படுத்துகிறது இந்தச் சட்டம். (விதி-3: மாதிரி நிலை ஆணைகள்)


நான்கு சட்டத் தொகுப்புகளும் பயிற்சியாளர்களுக்குப் (Apprentices) பொருந்தாது என ஏற்கனவே சொல்லிவிட்டு அவர்களை மாதிரி நிலை ஆணைகள் பட்டியலில் சேர்த்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.


படித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டால் வாழ்க்கையில் ‘செட்டில்’ஆகி விடலாம் என இனி யாரும் கனவுகூடக் காண முடியாது. பொறியியல் பட்டதாரியானாலும், முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும் இனி குறிப்பிட்ட காலப் பணிக்கான வேலைவாய்ப்பு மட்டுமே கிடைக்கும். ஆறு மாதமோ, ஓர் ஆண்டோ அல்லது மூன்று ஆண்டுகளோ என கால அளவு நிர்ணயிக்கப்பட்டால், கால இலக்கு முடிந்த பிறகு எந்தவித அறிவிப்பும் இன்றி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஏற்கனவே ‘பெல்’ போன்ற மத்திய அரசு நிறுவனங்களே இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன. குறிப்பிட்ட கால வேலை முடிந்த பிறகு வேறு ஒரு வேலை தேடி ஓட வேண்டும். ஒருவேளை உணவுக்காக பிச்சைக்காரர்கள் தட்டேந்தி வீடு வீடாக ஓடுவதைப் போல படித்தவர்கள் இனி வேலை தேடி ஓட வேண்டும். மாற்று வேலை கிடைக்க ஆறு மாதமோ ஓர் ஆண்டோ ஆகலாம். அதுவரை உயிரோடு இருந்தால் அடுத்த வேலைக்குப் போகலாம். இல்லையேல் எமதர்மன் உங்களை எடுத்துக் கொள்வான்.  


குறிப்பிட்ட கால வேலை வாய்ப்பு என்பது மிகவும் ஆபத்தானது. மலிவான தொழிலாளர் சந்தைக்கு வழிவகுப்பதோடு வாழ்க்கை நிலையற்றதாக மாற்றப்படும். எங்கும் அமைதியின்மை ஏற்பட்டு சமூகத்தில் எப்பொழுதும் பதற்றமே நிலவும்.


யுத்தத்தில் பிடிபட்டவன், பக்தியினால் வேலை செய்பவன், தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், தானமாகக் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்பவன் மற்றும் குற்றத்திற்காக வேலை செய்பவன். இவர்கள் மனு வகைப்படுத்தும் ஏழு வகைத் தொழிலாளர்கள் (மனு:8-415). மனு காட்டிய வழியில்தான் இன்றைய மனுவாதிகளும் தொழிலாளர் வர்க்கத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர்.


அனைத்துவிதமான உடல்தகுதி சோதனைக்குப் பிறகுதான் ஒருவருக்கு வேலையே தருகிறார்கள். பணிச் சூழலால் ஒரு தொழிலாளிக்கு உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்பட்டால் அவற்றைக் கண்டறிந்து தொழிலாளியை சரி செய்வதோ அல்லது உடல் தகுதிக்கு ஏற்ற மாற்று வேலையை தருவதோ நிர்வாகத்தின் கடமை. இதுதான் இதுவரை உள்ள நடைமுறை. ஆனால் இனி எந்த நேரத்திலும் தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என நிலை ஆணைகளை வகுத்திருக்கிறார்கள் (விதி-19: மாதிரி நிலை ஆணைகள்). தொழிலாளர்களின் உழைப்பைச் சக்கையாகப் பிழிந்துவிட்டு நிறுவனத்திற்காக உழைத்தத் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் உடல் தகுதியைக் காரணம் காட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முதலாளிகளுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளார் மோடி.  


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்


மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4

 

Saturday, 20 March 2021

மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4

யாரெல்லாம் தொழிலாளி?

யார் யார் எல்லாம் தொழிலாளி (worker), யார் யார் எல்லாம் ஊழியர்கள் (employee) என்கிற வரையறையிலேயே குழப்பங்கள் உள்ளன. ஊழியர்கள் மற்றும் தொழிலாளி வரையறைக்குள் பயிற்சியாளர்கள் வரமாட்டார்கள் என்கின்றன சில சட்டத் தொகுப்புகள். யார் தொழிலாளி என்பது பற்றி சில சட்டத் தொகுப்புகள் வாய் திறக்கவில்லை. ஆனால் மாதிரி நிலை ஆணைகளில் பயிற்சியாளர்களும் தொழிலாளர்கள்தான் என்கின்றனர்.


அப்ரண்டிஸ் பயிற்சியாளர்கள் மற்றும் ‘நீம்’ (NEEM) பயிற்சியாளர்கள்தான் எல்லா ஆலைகளிலும் பயிற்சியாளர் என்ற போர்வையில் பெருமளவில் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இனி பயிற்சியாளர்களுக்கு எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் கை கழுவுவதற்கேற்பவே சட்டத்தில் மேற்கண்டவாறு குழப்பமாக வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.



‘நீம்’ பயிற்சியாளர்கள் (NEEM-National Employability Enhancem,ent Mission) என்ற பெயரில், திறன் வளர்ப்பு என்ற போர்வையில் 16 வயது முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களின் உழைப்பைச் சுரண்ட அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் சட்டத்தில் ஏற்கனவே திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏஜெண்டுகள் மூலம் அமர்த்தப்படும் இவர்களுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் கிடையாது. இவர்கள் பற்றி புதிய சட்டத் தொகுப்பில் ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை.


குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழிகாட்டும் மனு


அடிமட்ட ஊதியத்தை (floor wages) விட குறைந்த பட்ச ஊதியம் (minimum wage) குறைவாக இருக்கக்கூடாது என்று கூறி அடிமட்ட ஊதியம் ஒன்றை அரசு தீர்மானிக்கும் என்கிறது ஊதியத் தொகுப்புச் சட்டம் (பிரிவு-9). அதன்படி தற்போது மத்திய அரசு தீர்மானித்திருக்கும் அடிமட்ட ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.178. இதை 26 ஆல் பெருக்கி மாதம் ரூ.4628 என நிர்ணயித்திருக்கிறது. மாதத்தில் 30/31 நாட்கள் வருகிறதே! மீதி 4/5 நாட்களுக்குப் பட்டினி கிடப்பதா என்று கேட்காதீர்கள். கேட்டால் இதுவே அதிகம் என்பார் மோடி.

 

குறைந்த பட்ச ஊதியத்தை எப்படி நிர்ணயிப்பது என்பது பற்றி ஊதியத் தொகுப்புச் சட்டத்தின் விதிகளில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது (பிரிவு-3). கணவன், மனைவி, இரு குழந்தைகளளை உள்ளடக்கியதுதான் ஒரு குடும்பம் என்கிறது விதி. உழைத்துச் சம்பாதிக்க முடியாத வயதான தாய்-தந்தை, மாமனார்-மாமியார்  இருந்தால் அவர்களை யார் பராமரிப்பது? அவர்களை கொன்றுவிடச் சொல்கிறாரோ மோடி!


குழந்தைகள் இருவரையும் ஒரு நபராகக் கணக்கில் கொண்டு குடும்பத்தில் மூன்று பெரியவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டுமாம். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் அரை வயிறு போதும் என்கிறார்களோ?


ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2700 கலோரி உணவும், குடும்பத்திற்கு ஆண்டுக்கு 66 மீட்டர் துணியும் தேவையாம். உணவுக்கும் துணிக்கும் ஆகும் செலவில் 10 சதவீதம் வீட்டு வாடகைக்கு ஒதுக்க வேண்டுமாம். 2700 கலோரி அதிகம் என்று சொல்லி அதை 2400 ஆகக் குறைக்க வேண்டும் என்றுவேறு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போதைய தகவல்


கேஸ், மின்சாரத்திற்கு குறைந்த பட்ச ஊதியத்தில் 20 சதவீதம் ஒதுக்க வேண்டுமாம். குழந்தைகள் கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் கல்யாணம்-கருமாதி உள்ளிட்ட எதிர்பாராத செலவுகளுக்குக் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 சதவீதம் ஒதுக்க வேண்டுமாம்.


தற்போதைய நிலவரப்படி குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.375 என்று கணக்கிட்டால், ஒரு மாதத்திற்கு ரூ.9750 கிடைக்கும். இங்கேயும் 26 ஆல்தான் பெருக்க வேண்டுமாம். 4/5 நாட்கள் வயிறைக் காயப்போடு என்கிறார்கள்.

 

குறைந்த பட்ச ஊதியம் ரூ10000 என்று வைத்துக் கொண்டால் கீழ்கண்டவாறுதான் நீங்கள் செலவு செய்ய வேண்டும்.


உணவு மற்றும் துணி @45%      = ரூ.4500

வீட்டு வாடகை @10%            = ரூ.1000

கேஸ், மின்சாரம் @20%           = ரூ.2000

கல்வி, மருத்துவம் இதர @25%    = ரூ.2500


இந்தத் தொகையை வைத்துக் கொண்டு வாழ முடியுமா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் உங்களை யார் வாழச் சொன்னது என்று அவர்கள் கேட்கிறார்களே!


பொறியியல் பட்டதாரிக்கே இன்று பத்தாயிரம் கிடைப்பதில்லை. ஆனால் மாதம் ரூ.67000 சம்பாதிக்கும் பார்ப்பனர் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினரை ஏழை என்று வரையறுக்கிறது உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை.


”ஏவல் புரியும் வேலைக்காரர்களுக்கு தக்கபடி மன்னன் அன்றாடம் சம்பளம் ஏற்படுத்த வேண்டும்” (மனு 7-125). தினக்கூலி (daily wage) முறைக்கு மனுதான் வழிகாட்டுகிறான்.


கீழ்மட்ட வேலையாட்களுக்கு அன்றாடம் ஒரு பணமும், ஆறு மாதத்திற்கு இரண்டு துணியும், மாதத்திற்கு ஒரு துரோண நெல்லும் சம்பளமாக அரசன் தீர்மானிக்க வேண்டும் (மனு 7-126). குறைந்தபட்சக் கூலியைத் தீர்மானிப்பதற்கும் மனுவே வழிகாட்டுகிறான்.


இன்றைய ஆட்சியாளர்களும் மனுவை வழிகாட்டியாகக் கொண்டுதான் குறைந்தபட்சக் கூலியைத் தீர்மானிக்கின்றனர் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்

 

குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.


தொடர்புடையப் பதிவுகள்:


Thursday, 18 March 2021

கொல்லைப்புற வழியாக புகுத்தப்பட்ட நான்கு சட்டத் தொகுப்புகள்! தொடர்-3

தூத்துக்குடி, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் சென்னை பின்னி ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், உரிமைகளுக்கான போராட்டங்களாக மட்டுமன்றி ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களாகவும் உருவெடுத்த 1910 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில்தான் இழப்பீடுச் சட்டம் (1923), தொழிற்சங்கச் சட்டம் (1926) கொண்டு வரப்பட்டன. நிலை ஆணைகள் சட்டம் 1946 இல் கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு தொழிற் தகராறு சட்டம் (1947), தொழிற்சாலைகள் சட்டம் (1948), குறைந்த பட்ச ஊதியச் சட்டம் (1948), சேம நலநிதிச் சட்டம் (1952), போனஸ் சட்டம் (1965), தனியார் செக்யூரிட்டி முறைப்படுத்துதல் சட்டம் (2005) என ஐம்பதுக்கும் மேற்பட்ட மத்தியச் சட்டங்களும், இருநூறுக்கும் மேற்பட்ட மாநிலச் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. பல்வேறு போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலமாகவே இத்தகையச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இவை தொழிலாளர்களின் நலன்களை ஓரளவுக்குப் பாதுகாப்பதனால்தான் இந்தச் சட்டங்கள் தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று அழைக்கப்பட்டன.


முதலாளிகள் தொழில் தொடங்கவும், தொடர்ந்து தொழில் நடத்தவும் பழைய தொழிலாளர் சட்டங்கள் இடையூறாக இருப்பதால் தங்களுக்குச் சாதகமாகத் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என அவர்கள் தொடர்ந்து கூப்பாடு போட்டு வந்த நிலையில், முதலாளிகளுக்குச் சாதகமாகவே மோடி அரசு தற்போது தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. முதலாளிகள் தொழில் தொடங்குவதையும், தொடர்ந்து தொழில் நடத்துவதையும் இந்தச் சட்டத் திருத்தங்கள் எளிமைப்படுத்தி உள்ளன என்கின்றனர் முதலாளிகள். அதனால் இனி அதிக ஆலைகள் தொடங்கப்படும் என்றும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறுகின்றனர். இது உண்மையா?


1990 களில் புதிய தாராளவாதக் கொள்கை அமுல்படுத்தப்பட்ட பிறகு சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், உள்ளிட்ட இடங்களில் நோக்கியா, ஃபோர்டு, நிசான், மோட்டரோலா, சாம்சங், செயிண்ட் கோபெயின், BMW என எண்ணற்ற பன்னாட்டுக் கம்பெனிகள் ஆலைகளைத் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தன. இந்தக் காலகட்டத்தில் பழைய சட்டங்கள்தானே அமுலில் இருந்தன. தொழில் தொடங்குவதற்கு இந்தச் சட்டங்கள் தடையாக இருந்தன என்றால் இத்தனை நிறுவனங்கள் எப்படி தொடங்கப்பட்டிருக்க முடியும்? அவர்கள் எப்படி இன்றுவரை தொடர்ந்து பெருத்த இலாபத்துடன் தொழில் நடத்த முடியும்?


பழைய சட்டங்கள் இருந்த போதே நோக்கியா நிறுவனம் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி பல அயிரம் கோடி இலாபத்தை அள்ளிச் சென்றது. ஹுண்டாய் நிறுவனமோ சுமார் 2000 நிரந்தர ஊழியர்களுக்குச் சராசரியாக மாதம் ரூ.25000 முதல் ரூ.87000 வரை ஊதியம் கொடுக்கிறது. ஆனால் சுமார் 5000 பயிற்சியாளர்கள் மற்றும் 4000 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சராசரியாக சுமார் ரூ.15000 ஊதியம் கொடுத்து பெருவாரியான தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது. இந்தச் சூழலில் புதிய சட்டங்கள் யாருக்குச் சாதகம் என்பதை சட்டத்திற்குள் சென்று பார்த்தால்தான் தெரியும்.



புதிய சட்டத் தொகுப்புகள்


1. ஊதியச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், போனஸ் சட்டம் மற்றும் சம ஊதியச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களின் தொகுப்புதான் ”ஊதியத் தொகுப்பு” (Code on Wages 2020) என்ற பெயரில் வந்துள்ளது.

 

2. தொழிற்சங்கச் சட்டம், நிலை ஆணைகள் சட்டம் மற்றும் தொழிற் தகராறுச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் தொகுப்புதான் ”தொழில் உறவு தொகுப்பு” (Industrial Relations Code) என்ற பெயரில் வந்துள்ளது.


3. இழப்பீடுச் சட்டம், ஈட்டுறுதிச் சட்டம், சேம நலநிதிச் சட்டம், வேலைவாய்ப்புச் சட்டம், மகப்பேறுச் சட்டம், பணிக்கொடைச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது சட்டங்களின் தொகுப்புதான் ”சமூகப் பாதுகாப்புத் தொகுப்பு” (Code on Social Security) என்ற பெயரில் வந்துள்ளது.

 

4. தொழிற்சாலைகள் சட்டம், தோட்டத் தொழிலாளர் சட்டம், சுரங்கச் சட்டம், மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், துறைமுகத் தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட பதின்மூன்று சட்டங்களின் தொகுப்புதான் ”பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்பு” (Occupational Safety, Health and Working Conditions Code) என்ற பெயரில் வந்துள்ளது.


மேற்கண்ட நான்கு தொகுப்புகளுக்குள் அடங்கிய பழைய சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.


சட்டத் திருத்தங்கள் மீது மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என 30 முதல் 45 நாட்கள் வரை அவகாசம் தருவதாகக்கூறி, கரோனா நோய்த் தொற்று காலத்தில் மக்கள் இதன் மீதெல்லாம் கவனம் செலுத்தமாட்டார்கள் என்பதைத் தெரிந்தே, அவசர அவசரமாக மேற்கண்டச் சட்டங்களைக் கொண்டு வந்தள்ளது மோடி அரசு. இச்சட்டங்கள் யாவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிட்டுவிட்டனர். அதேபோல இச்சட்டங்களுக்கான விதிமுறைகளையும் உருவாக்கிவிட்டனர். கடைசியாக கடந்த டிசம்பரில் ”தொழில் உறவு” தொகுப்புச் சட்டத்தோடு தொடர்புடைய மாதிரி நிலை ஆணைகளையும் உருவாக்கிவிட்டனர்.


கரோனா காலத்தில்தான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் மீது கருத்துக் கூறவோ, எதிர்த்துப் போராடவோ இந்தியத் தொழிலாளி வர்க்கம் குறிப்பாக தொழிற்சங்கங்கள் இன்று வரை தவறி உள்ளன என்பது ஒரு கசப்பான உண்மைதான்.


01.04.2021 முதல் தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகள் அமுலுக்கு வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னமும் இந்தியத் தொழிலாளி வர்க்கம் விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.


தொடர்புடைய பதிவுகள்:

அரசியல் அமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் உரிமைகள்! தொடர்-2


Wednesday, 17 March 2021

அரசியல் அமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் உரிமைகள்! தொடர்-2

சமத்துவம், சுதந்திரம், சுரண்டலுக்கு எதிரான உரிமை, மதச் சுதந்திரம், கல்வி-பண்பாட்டு உரிமை, பரிகாரம் தேடுவதற்கான ரிட் உரிமைகள் இவை யாவும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளாகும். (பிரிவு: 12-35).

குறிப்பாக பேச்சுரிமை-எழுத்துரிமை, ஆயுதங்கள் இன்றி கூட்டமாகக் கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல-வசிக்க, தான் விரும்பியத் தொழிலைச் செய்ய உள்ள உரிமைகள் யாவும் அடிப்படை சுதந்திர உரிமைகளாகும். (பிரிவு: 19)

அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் ஏதேனும் சட்டம் இயற்றப்படுமானால் அச்சட்டம் செல்லாது (பிரிவு-13)


அதே போல ஒருவரை, ஒரு குற்றத்திற்காக ஒருமுறை மட்டுமே தண்டிக்க வேண்டும், மாறாக இரண்டு முறையோ அல்லது அதற்கு மேலோ ஒரே குற்றத்திற்காகத் தண்டிக்கக் கூடாது. (பிரிவு-20)



சட்டத்தின் முன் சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும்  தர அரசு மறுக்கக் கூடாது (பிரிவு-14);


சாதி, சமயம், இனம், பால், பிறப்பிடம், அல்லது வேறு எந்தக் காரணத்துக்காகவும் எந்தக் குடிமகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக் கூடாது (பிரிவு-15-1);


அரசின் கீழுள்ள எத்தகைய அலுவலகங்களில் நியமிக்கப்படுவதற்கும், பணியாற்றுவதற்கும் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புத் தரப்பட வேண்டும் (பிரிவு-16-1)


இந்தியக் குடிமக்கள் யாவருக்கும் சங்கங்களையும், அமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் (பிரிவு-19-1-C);


மனிதர்களை விற்பதும் வாங்குவதும், வற்புறுத்தி வேலை வாங்குவது, பிச்சை எடுக்கச் செய்வது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன (பிரிவு-23);


பதினான்கு வயதுக்குக் குறைந்த குழந்தைகளை எந்தத் தொழிற்சாலையிலும், சுரங்கத்திலும் அல்லது வேறு அபாயகரமான வேலைகளிலும் எவரும் அமர்த்தக் கூடாது (பிரிவு-24);


குடிமக்கள் அனைவரும் ஆண் பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும் (பிரிவு-38A),


ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் கிடைப்பதற்கும் (பிரிவு–38C);


தொழிலாளர் நலத்தையும், வேலைத் திறனையும், ஆண், பெண், குழந்தைகள் ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும் மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் சக்திக்கும் தகுதியற்ற ஒரு வேலைக்குப் பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படாமல் தடுப்பதற்கும் (38E);


உரிய வகையில்; அரசு தமது கொள்கைகளை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


தனது பொருளாதாரச் சக்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும், கல்வி பெறுவதற்கும் வழிவகைகள் காணப்பட வேண்டும் (பிரிவு – 41);


நியாயமானதும் மனிதத் தன்மையோடும் உள்ள தொழில் நிலையங்களை உருவாக்குவதோடு, மகப்பேறு காலத்துக்குரிய உதவிகளும் செய்யப்படுவதற்கான வழிவகைகள் காணப்பட வேண்டும் (பிரிவு - 42);


தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் அனைவருக்கும் வாழ்வதற்குரிய ஊதியம், தொழிலாற்றுவதற்கேற்ற சுமுகமான சூழ்நிலையில், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டு பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஆகியவை கிடைப்பதற்கும் உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும்… உறுதிப்படுத்தப்பட வேண்டும் (பிரிவு - 43);


தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்கள் ஆகியவற்றின் மேலாண்மைப் பணியில் தொழிலாளர்களும் பங்கு பெறுவதற்கான தக்கச் சட்டத்தை உருவாக்கி அல்லது வேறு எந்த வகையிலாவது அத்தகைய வழிவகை காணத்தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் (பிரிவு - 43A)


என பல்வேறு உரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.


அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள மேற்கண்ட உரிமைகளை தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள் வழங்குகின்றனவா என்பதை இனி பார்ப்போம்.

 

தொடரும்

 

பொன்.சேகர்

வழக்குரைஞர்

 

குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்:


தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள்: யாருக்குச் சாதகம்? தொடர்-1