Sunday, 19 May 2024

உயிர் என்றால் என்ன?

உயிர் என்பது ஒரு இயக்கம். உடல் என்கிற இயந்திரத்தில் உட்கிரகித்தலும் கழிவுகள் வெளியேற்றமும் என்கிற செயல்முறைக்குப் (process) பெயர்தான் உயிர். உட்கிரகத்தில் மற்றும் கழிவுகள் வெளியேற்றம் இவற்றில் எது ஒன்று முடிவுக்கு வந்தாலும் உடலில் இயங்கிக் கொண்டிருக்கிற செயல் முறையும் முடிவுக்கு வந்துவிடுகிறது அதாவது உயிர் முடிவுக்கு வருகிறது. இதைத்தான் உடலில் இருந்து உயிர் பிரிந்து விடுகிறது என்று சொல்லுகிறோம். இதைத் தாண்டி உயிருக்கு வேறு பொருள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.


இயந்திரங்கள் பழுதடைந்து இனி செயல்படவே முடியாது என்ற நிலை வரும் பொழுது அது படுத்துவிட்டது என்று சொல்லுகிறோம். எரிபொருளை உள்வாங்க முடியவில்லை என்றாலோ அல்லது எரிபொருளை உள்வாங்கினாலும் அதைப் பயன்படுத்தியும் இயங்க முடியவில்லை என்றாலோ அல்லது எரிபொருளை உள்வாங்கி அதைப் பயன்படுத்தி இயங்கிய பிறகு கழிவுகளை வெளியேற்ற இயலவில்லை என்றாலோ அந்த இயந்திரத்தின் இயக்கம் எவ்வாறு முடிவுக்கு வருகிறதோ அது போலத்தான் மனித உடல் இயக்கமும். 

ஒரு இயந்திரம் செயல்படாமல் முடிவுக்கு வந்து விட்டால் அதை காயலான் கடையில் போடுகிறோம். அதன் பிறகு அது உருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டு வேறு பொருளாக மாற்றப்படுகிறது.

ஆனால் இயக்கம் நின்று போன மனித உடலை அவ்வாறு காயலான் கடையில் போட முடியாது. ஒன்று செல்கள் அழுகி மண்ணோடு மண்ணாகும் அல்லது எரிக்கப்பட்டால் அது எரிந்து சாம்பலாகும், அதிலிருந்து வாயுக்கள் (gas molecules) வெளியேறும். இதைத்தான் ஆவி என்கிறார்கள் போலும்?

எலும்புகள், பற்கள், மண்டை ஓடுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம் அல்லது அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் உடலின் மற்ற பகுதிகள் அழுகக் கூடியவை. அவற்றை மண்ணில் புதைத்தாலும் அல்லது எரித்தாலும் அவற்றில் உள்ள தனிமங்களின் சேர்க்கைகளினால் இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு ஒன்று தனிமங்களாக மண்ணில் மறையும் அல்லது வாயுக்களாக காற்றில் கரையும்.

திடப்பொருளோ, திரவப் பொருளோ வாயுக்களோ, உயிர் உள்ளவையோ, உயிரற்றவையோ எல்லாமே தனிமங்களின் சேர்க்கைதானே. தனித்த தனிமங்களாகவோ அல்லது மூலக்கூறுகளாகவோ அல்லது உயிர் செல்களாகவோதானே இந்த உலகில் பொருட்கள் இருக்கின்றன. இதைத் தாண்டி வேற என்ன இருக்கு?

ஹோமியோபதி கோட்பாடுகளைக் கற்ற பிறகு உயிர் பற்றிய எனது புரிதல் இது.

உயிர் பிரிந்த பிறகு ஆன்மா அல்லது ஆத்மா (soul) பற்றி பேசுகிறோம். அப்படி ஒன்று இருக்க முடியுமா? இது குறித்து பிறகு பேசுவோம்.

ஊரான்

Friday, 17 May 2024

தீவட்டிப்பட்டிகளுக்குத் தீர்வே கிடையாதா?

நண்பர்களே! அன்பர்களே!

நாடெங்கிலும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கோவில்களில் வழிபாட்டு உரிமை கேட்டு சேரி மக்கள் குரல் கொடுக்கும் போது, அதற்கு எதிராக ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். சேரி மக்கள் உள்ளிட்ட அனைவருமே இந்துக்கள் என்றாலும் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஏன் மறுக்கிறார்கள்?
தீவட்டிப்பட்டி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளிலும் (TNHB), அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கட்டமைத்துள்ள நகரியப் (township) பகுதிகளிலும்,  நகரங்களில் ஓங்கி உயர்ந்த வளாக குடியிருப்புகளிலும் (apartments) ஊரிலிருந்தும் சேரியிலிருந்தும் வந்தவர்கள்தானே குடியிருக்கிறார்கள். அங்கு இது போன்ற வழிபாட்டுப் பிரச்சனைகள் பெரும்பாலும் வருவதில்லையே ஏன்?

கிராமப் பகுதிகளில், மனுதர்மம் வகுத்தளித்தபடி ஊரும் சேரியும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஊரிலும் கூட பார்ப்பன அக்ரகாரம் தனியாகவும், பிற சாதியினர் தனித்தனி தெருவிலும் வசித்து வருகின்றனர்.

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக படிநிலையில் தாங்கள் இருப்பதாகக் கருதும் வெள்ளாளர்கள் மேல வீதியிலும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதற்குக் கீழான தெருக்களிலும்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதற்கும் கீழே உள்ள தெருக்களிலும் வாழ்கின்றனர். பெரும்பாலும் இத்தகைய சாதியினர் அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் - சேரியை ஒட்டியே வாழ்வதால் இந்தச் சாதியினருக்கும் சேரி மக்களுக்கும்தான் அதிகமாக மோதல்கள் நடக்கின்றன.

சேரிகளில் கூட படிநிலை சாதி அமைப்புக்கு ஏற்ப, மேலே தேவேந்திரகுல வேளாளர் தெரு, அடுத்து பறையர் தெரு, கீழே சக்கிலியர் தெரு என்றுதானே அமைந்துள்ளன. 

பெரு நகரங்களில்கூட இத்தகைய ஊர் சேரி அமைப்பு முறை இன்னும் சில நகரங்களில் இருக்கத்தான் செய்கின்றன.

புதிதாகக் கட்டமைக்கப்பட்ட குடியிருப்பு வளாகங்களில் வராத வழிபாட்டு உரிமைக்கான பிரச்சனைகள் கிராமப்புறங்களில் வருவதற்குக் காரணம் மேற்கண்ட கிராமப்புற கட்டமைப்புதான்.

எனவே, பார்ப்பனிய மனுதர்மம் வகுத்தளித்த  ஊர்-சேரி கட்டமைப்பை முற்றிலுமாக சிதைத்து விட்டு (demolish), புதிய குடியிருப்பு வளாகங்களை உருவாக்கி, அதில் குலுக்கல் முறையில் அனைவருக்கும் வீடு வழங்குவது ஒன்றுதான் இந்தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக இருக்க முடியும். 

கலைஞரின் சமத்துவபுரம் இதற்கான ஒரு முன்னோடித் திட்டம் என்றால் அது மிகை அல்ல. இனி ஊரும்-சேரியும் சிதைக்கப்பட்டு  தமிழ்நாடே புதிய சமத்துவபுரங்களாக மாறும்போது மட்டும்தான் வழிபாட்டு உரிமைக்கான மோதல்களும் முடிவை நோக்கி நகரும்.

ஊரான்

Sunday, 12 May 2024

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு முடிவே கிடையாதா?

இராஜஸ்தானில் குடிநீர் பானையைத் தொட்ட ஒரு தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம், தமிழ்நாட்டில் வேங்கை வயல் சம்பவம்  என சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் குறித்து whatsapp நண்பர்கள் குழு ஒன்றில் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
அந்த விவாதத்தில் நான் பதிவு செய்த கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

***
நண்பா,

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாதிய முரண்களும் மோதல்களும் குறையப் போவதில்லை. இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கம்யூனிஸ்டுகள் வந்தால் ஓரளவுக்கு குறையக் கூடும். அவ்வளவுதானே ஒழிய முற்றிலுமாக சாதிய மோதல்கள் நின்று விடாது.


காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் பிணக்குகளும் இந்து மதத்தோடு, சொல்லப்போனால் மனுதர்ம சாஸ்திரத்தோடு பிணைக்கப்பட்டவை. மனுதர்ம சாஸ்திரத்தை ஆகப்பெரும்பான்மையோர் படிக்கவில்லை என்றாலும் அதைத்தான் ஒவ்வொரு சாதியினரும் கடைபிடித்து வருகின்றனர். இது மன்னராட்சி காலத்தில் மிக வலுவாக ஊன்றபட்ட ஒன்று.

தமிழ்நாட்டின் வள்ளலார் முதல் கேரளாவின் தர்மதீர்த்த அடிகளார் வரை எத்தனையோ மத சீர்திருத்த வாதிகள் இந்தச் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. காரணம் இந்து மதத்தில் குறிப்பாக மத அதிகாரத்தில் உள்ள பார்ப்பனியம்தான். இங்கு நான் தனிப்பட்ட பார்ப்பனர்களைச் சொல்லவில்லை.

பார்ப்பனியம் என்பது ஒரு சித்தாந்தம். மக்களை, ஏற்றத்தாழ்வுடைய வருணங்களாகவும் படிநிலைச் சாதிகளாகவும் பகுத்து அவர்களுக்கான கடமைகளையும் வகுத்து அதை நிலை நிறுத்தி வைத்திருப்பபது மனுதர்ம சாஸ்திரம்.

மனுதர்ம சாஸ்திர நூலைப் படித்தால் இது நன்றாக விளங்கும். "சனாதன தர்மம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! என்கிற தொடரில் இது பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன்.

டாக்டர் அம்பேத்கரைப் போல மனுதர்ம சாஸ்திரத்தை மிக விரிவாக ஆய்வு செய்தவர் எவரும் இல்லை. இவருக்கு முன்பாகவே மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவும் அதைப் பற்றி அலசி இருக்கிறார்.  எனவே, மத அதிகாரத்திலிருந்து பார்ப்பனர்களையும், இந்து மதத்திலிருந்து பார்ப்பனிய சித்தாந்தத்தையும் அகற்றாமல், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் பார்ப்பனிய பண்பாட்டு நடைமுறைகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு நெறிமுறைகளை வகுத்து நடைமுறைப் படுத்தாமல் சாதியை முரண்களும் மோதல்களும் நிற்கப் போவதில்லை. 

இந்து மதத்திலேயே பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் பங்காரு அடிகளார், பிரேமானந்தா, அமிர்தானந்தமயி, நித்தியானந்தா உள்ளிட்ட நவீன கால ஆன்மீகவாதிகள். தனிப்பட்ட முறையில் இவர்களது நடைமுறையில் சில முறைகேடுகள் இருந்த போதிலும் உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனிய மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்தியவர்கள். 

பார்ப்பனியத்துக்கு எதிராகப் போராடிய ஆன்மீகவாதிகளில் வள்ளலாரே முன்னிலை வைக்கிறார். ஐயா வைகுந்தர் வழிபாடும் அத்தகையதே.  இன்றைய குன்றக்குடி அடிகளாரும், சுகிசிவம் போன்ற ஆன்மீக வாதிகளும் இதில் அடங்குவர்.

ஆன்மீகத்தில் நம்பிக்கையும் நாட்டமும் உள்ளவர்கள் மேற்கண்ட ஆன்மீகவாதிகளை பின்பற்றலாமே ஒழிய பார்ப்பன குருமார்களை அல்ல.

இந்து மதத்தில், மனுதர்ம சாஸ்திர நடைமுறைகளில் மாற்றமே நடைபெறவில்லையா என்று கேட்டால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதற்கு வித்திடுகிறது. அவரவர் அவரவர் சாதியிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதவாதிகளும் மனுதர்ம சாஸ்திரமும் வலியுறுத்தினாலும், சாதி மறுப்பு காதல்  திருமணங்கள் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் நவீன கால உற்பத்தி முறையும் அது ஏற்படுத்தி உள்ள உற்பத்தி உறவுகளும்தான் என்றால் அது மிகையல்ல. சாதி மறுப்பு திருமணங்களுக்கு தாமாக முன்வரும் குடும்பங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே புதிய உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளை நோக்கி இந்தச் சமூகம் நகரும் போது, இது போன்ற மதமாச்சரியங்களும் அது தொடர்பான ஏற்றத்தாழ்வுகளும், மதத்தின் மீதான நம்பிக்கைகளும் மெல்ல மெல்ல மறைந்து போகும்.

ஊரான்

Saturday, 11 May 2024

நான் கடவுளைக் கண்டேன்! --- இறுதிப் பகுதி

ஆபத்துக் காலங்களில் உதவி செய்வோரை 'ஆபத்தாண்டவன் மாதிரி வந்து காப்பாத்தனாம்பா' என்றுதான் சொல்கிறோம். அத்தகையோரை ஆண்டவனின் மாதிரியாகப் பார்க்கிறோம். அப்படியானால் ஆபத்துக் காலங்களில் உதவுவதற்கு ஒரிஜினல் ஆண்டவன் இருக்க வேண்டும் அல்லவா?

தெரு நாய் மோதி நான் கீழே விழுந்து அடிபட்டேனே, அதற்கு எதிரில்தான் ஸ்ரீ செல்வ விநாயகன் வீற்றிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் விநாயகனுக்கு எதிர் வீடுதான் என்னுடையது. அன்றாடம்  அவனுக்கு ஐயர் செய்யும் சேவையை நான் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல, எனது செயல்களையும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் எனக்கு நேர்ந்த விபத்தை  அவன் தடுக்கவும் இல்லை; அடிபட்ட பிறகு எழுந்து ஓடி வரவும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டவனின் வாகனமான பைரவன்தானே என் மீது மோதியவன்? 

நடைபயிற்சியின் போது தடுக்கி விழுந்து கருங்கல்லில் மோதி மண்டை உடைந்ததையும், எதிரில் இருந்த ஐயப்பனும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். மற்ற மூன்று இடங்களிலும் விபத்து நடந்த போது அங்கிருந்த தெய்வங்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தன.

நான் கடவுள் மறுப்பாளன் என்பதனால்கூட இந்தக் கடவுளர்கள் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஒரு சிலர் எண்ணக்கூடும். ஆனால் அன்றாடம் நடைபெறும் எண்ணற்ற விபத்துகளில் பாதிக்கப்படுவோர், பலியாவோர்  ஆண்டவனை அனுதினமும் ஆராதிக்கும் அப்பாவிகள்தானே? வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டுத்தானே செல்கின்றனர்.  விபத்துகளைத் தடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், விபத்து நடந்த பிறகு ஓடோடி வந்து உலகின் எந்த மூலையிலாவது எந்த ஆண்டவனாவது பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டி இருக்கிறானா?

ஆனால் விபத்து நடக்கின்ற இடங்களில் எல்லாம் ஓடோடி வந்து உதவிக்தரம் நீட்டுபவர்கள் சக மனிதர்களே. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதல் உதவி செய்கிறார்கள். ஆம்புலன்சையோ ஆட்டோவையோ வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். மருத்துவமனைக்கு வருவோரை அரவணைத்து உடனடியாக செவிலியர்களும், மருத்துவர்களும் உரிய சிகிச்சை அளித்து உயிரைக் காக்கின்றனர்.

எனக்கு நடந்த ஐந்து சம்பவங்களும் ஒப்பிட்டளவில் சிறியவைதான் என்றாலும்கூட, சக மனிதர்கள் உரியநேரத்தில் எனக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? 

ஐந்து முறையும் நான் அடிபட்ட போது எனக்கு மயக்கம் வரவில்லை, வாந்தி வரவில்லை, மூக்கில் இரத்தம் வரவில்லை; அதனால் அதிகம் அச்சப்பட வேண்டியதில்லை என்றாலும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும் அது ஆபத்துக்குரியதாகத்தான் பார்க்கப்படும். இதைத்தான் மருத்துவர்களும் முதலில் கேட்கிறார்கள். 


தெய்வங்களை சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்கள் என்கிறார்கள். பெருந்தெய்வங்கள் நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு யாருக்கோ படி ஆளந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுவோர் வீதி ஓரங்களில் கேட்பாரற்ற கிடக்கின்றனர். இவர்களை நம் மூதாதையர்கள் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். முந்தைய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகரம் நீட்டி இன்றும் நினைவு கூறப்பட்டு வணங்கப்படுபவர்கள். அன்றைய சகமனிதர்களே அவர்கள்.

எனக்கு நடந்த ஐந்து சம்பவங்களில் மட்டுமல்ல, எனது உறவினர்கள், நண்பர்கள் என‌ப்பலரும் பாதிக்கப்பட்ட போது இத்தகைய சிறு தெய்வங்களை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். 

ஆபத்துக் காலங்களில் வேடிக்கை பார்க்காமல் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவோம். மனிதநேயம் காப்போம். கடவுள் வேறு யாருமல்ல, நாமே கடவுள்!

நன்றி!

முற்றும்

நான் கடவுளைக் கண்டேன்! ---3

மாலை நேர மயக்கம் 1

நவம்பர் 14, 2021 அன்று இராணிப்பேட்டை காரையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வழக்கமான எனது சுசுகி மேக்ஸ் 100 இல் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தேன். மாலை நேரம் சற்றே இருட்டிவிட்டது. சுசுகியின் முகப்பு விளக்குகூட அவ்வளவாக பளிச்சென்று இருக்காது. 2000 மாடல் ஆச்சே? 'எப்ப மாத்த போற?' என்று அடிக்கடி பிள்ளைகள் கேட்பதுண்டு.


சாலையின் இடது ஓரமாக ஆட்டோ நகரில் வந்து கொண்டிருந்த பொழுது நேர் எதிரில் ஒரு உருவம் வருவது மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது. சுதாரிப்பதற்குள் அவர் மீது வண்டி மோதியது. நான் மோதினேனா அல்லது அவராக வந்து விழுந்தாரா என்பதெல்லாம் தெரியாது. பாதசாரிக்கு என்ன ஆனது என்றும் எனக்குத் தெரியவில்லை. 

உடனே கூட்டம் கூடிவிட்டது. ஒருவர் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டார். இது போன்ற சம்பவங்களில், அதாவது பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விட்டால், அடி பலமாக இல்லை என்றாலும் வாகனக்காரரிடமிருந்து முடிந்தவரை கறப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். 
அவரைத் தெரிந்த ஒரு சிலர் இராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்றனர். நானோ, 'இல்லை இல்லை வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் போவோம்' என்றேன். நான் வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டு கிடக்கிறேன். நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. எனவே நண்பர் வாலாஜா அசேன் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள, அவர் உடனே வி.சி.மோட்டூரிலிருந்து ஒரு நண்பரை அனுப்பி வைத்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு எதிரில் உள்ள கடைக்காரர் எனது வீட்டுக்கு எதிர் வீட்டு நண்பரின் மருமகன். அவரும் வந்து விடுகிறார். எனக்கு ஆதரவாக முக்கியமான நபர்கள் வந்துவிட அங்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த நபர்கள் ஒதுங்கிக் கொள்ள ஒரு ஆட்டோவைப் பிடித்து இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே எனக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க அழைத்த போது அவர் காணாமல் போய்விட்டார். காரணம் பிறகுதான் தெரிய வந்தது, அவர் போதையில் இருந்தார் என்று. விபத்து நடந்த இடத்திற்கு எனது மகனும் உடனே வந்து விட்டதால் எனது வண்டியும் வந்து சேர்ந்தது. 

மாலை நேர மயக்கம் 2

2018 இல் பணி ஓய்வு பெற்ற பிறகு பழைய வீட்டை இடுத்துவிட்டு புதிய வீடு கட்டிக் கொண்டிருந்த போது  பிப்ரவரி 12, 2019 அன்று வீடு கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட பிறகு, மாலையில் பெல் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அவ்வளவாக இருட்டிவிடவில்லை. சிப்காட் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி அதே சுசுகி மேக்ஸ் 100 இல் வந்து கொண்டிருந்த பொழுது இடது பக்கமிருந்து ஒரு இரு இருசக்கர வாகனம் இருவரை சுமந்து கொண்டு சற்றே தாழ்வான பகுதியிலிருந்து மேலேறி சர்ரென பிரதான சாலையில் நுழைய, அதன் மீது எதிர்பாராத விதமாக எனது வண்டி மோதி நான் கீழே விழுகிறேன். இந்த முறையும் மண்டைதான் தரையில் மோதுகிறது. எப்பொழுதும் தலைக்கவசம் அணியும் நான் அன்று மட்டும் தலைக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் மண்டை தப்பி இருக்கும் . 

நெற்றியின் மேல் பகுதியிலிருந்து இரத்தம் வழிகிறது. வண்டி ஒரு பக்கம் பழுதாகி விழுந்து கிடக்கிறது. அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட பலர் கூடிவிட்டனர், நான் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் என்னை உடனடியாக பெல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே முதல் உதவி அளிக்கப்பட்டு மண்டை காயத்திற்கு எட்டு தையல் போடப்பட்டது.

எனது வண்டியை பத்திரமாக எடுத்து வைத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மறுநாள் வண்டியை என்னிடம் ஒப்படைத்தார். எதற்கும் மண்டையை ஒரு ஸ்கேன் செய்து பார்த்து விடலாம் என்று மேல் சிகிச்சைக்காக விஷாரம் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டேன். உள்காயம் ஏதுமில்லை என்று உறுதி செய்து கொண்டேன்.

வலதுகை மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 25 வயது  சுசுகியையும், 20 வயது ஸ்கூட்டியையும் வேறு ஒருவருக்கு கைமாற்றிய பிறகு கடந்த ஐந்து மாதங்களாக எங்கு சென்றாலும் நடராஜாவும், ஆட்டோக்களும் பேருந்துகளும்தான். போகிறப் போக்கை பார்த்தால் இதுவே பழகிவிடும் போலத்தான் தெரிகிறது. எனினும் உற்ற நண்பர்களை இழுந்து விட்டது போன்ற ஒரு வெறுமை என்னுள் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு வகைமாதிரிக்காக எனது சொந்த அனுபவத்திலிருந்து ஐந்து சம்பவங்களை நான் மேலே விவரித்திருக்கிறேன். இந்த சம்பவங்கள் உணர்த்தும் படிப்பினை என்ன? அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்