Tuesday, August 1, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உழைத்துப் பார்! தெரியும் களைப்பு!" தொடர் - 5

'கைய கால வெச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டியா?' என்று என்னைப் பார்த்து எனது தங்கை அடிக்கடி கேட்கும் கேள்வி இது. ஆம்! கிராமங்களுக்குச் சென்றால் நான் சும்மா இருப்பதில்லை. மண்வெட்டி, கடப்பாறை, கொடுவா என எது கிடைத்தாலும் அதைக்கொண்டு மண்டிக் கிடக்கும் புற்களையும், புதர்களையும், முச்செடிகளையும் அப்புறப்படுத்தி அழகு பார்ப்பவன்.

இந்த ஆறு நாட்களில், கொடுக்காப்புளி முட்செடிகளை வெட்டிய போது அதனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்த சீங்கை முட்கள் என் கைகளைப் பதம் பார்த்தன. மாமரத்துக்கடியில் மண்டிக் கிடந்த தேங்காய் மட்டைகளை அப்புறப்படுத்தி செருப்பணியாமல் சமன் செய்த போது மண்ணில் புதைந்து கிடந்த கவரிங் தோடு ஒன்றின் ஊசி முனை என் பாதத்தைத் துளைத்தது. தேவையற்ற கொளஞ்சிச் செடியின் கிளைகளை வெட்டிக் கழித்து அப்புறப்படுத்திய போது வலது தோள்பட்டை வலி கண்டது. மேட்டுக்கும் பள்ளத்திற்கும் இடையில் ஏறி இறங்கி வேலை செய்த போது வலது கணுக்காலில் ஏற்பட்ட உட்காயம் இன்னும் வலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. 

இந்த நாட்களில் நான் கல்லக்கா பறித்தேன். முல்லை, கனகாம்பரம் எடுத்தேன். மண்டிக் கிடந்த காய்ந்த சரகுகளை அப்புறப்படுத்தி வாழை மரங்களை மிடுக்காக்கினேன். 

இவையெல்லாம் நான் சிறு வயதில் செய்த வேலைகள்தான் என்பதனால், வயது மூப்பால் களைப்பு தெரிந்தாலும் அலுப்புத் தட்டவில்லை. விவசாயிகளின் அன்றாட வேலைகளில் இவை ஒரு சிறு பகுதிதானே?. 

எனது தாத்தாவுக்கு ஊருக்குள் பழைய வீடு ஒன்றிருந்தது. நாள் பட்டதால் அது சிதைந்து சிதிலமடைந்து இன்று வெறும் மனையாய் காட்சியளிக்கிறது. அதனால் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கொல்லையில், 10×12 அளவில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்ட ஒரே அறை கொண்ட வீட்டில்தான் நீண்ட காலம் ஐந்து பேர் கொண்ட எனது தங்கை குடும்பம் வசித்து வந்தது. 

இளைய மகளுக்கு வரன் பார்க்க வேண்டி இருந்ததால் ஊருக்குள்ளே வாடகைக்கு வீடெடுத்து சிலகாலம் வசித்து வந்தனர். இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு இல்லை என்றால் வரன் கிடைப்பது கொம்புத்தேன் என்ற கதையாகிப் போனதனால், தாய்மாமன் மறைவிற்குப் பிறகு அவரும் அத்தையும் வசித்து வந்த வீட்டை, மகனுக்கு வரன் பார்ப்பதால் சற்றே புணரமைத்து அங்கே தற்போதைய வாசத்தைத் தொடர்கின்றனர். 

மூன்று படி ஏறி உள் நுழைந்தால் 6×10 அடி அளவில் ஒரு வெராண்டா. அதன் இடது மூளையில் ஒரு மேசை, அதற்கு மேலே ஒரு சிறிய ஸ்மார்ட் டிவி. வலது பக்க ஓரத்தில் சமையல் மேடை. மேசைக்கருகில் ஒரு ஒற்றைப் பாய் விரிக்கும் அளவு இருந்த இடம்தான் ஆறு நாட்களிலும் நான் படுத்துறங்கிய இடம். இந்த வெராண்டாவுக்கு ஒரு கிரில் கேட் மட்டுமே. எந்த நேரத்திலும் பூச்சி பொட்டு உள்நுழைய வாய்ப்புண்டு. 

அடுத்து, இரும்புக் கதவை பலம் கொண்டு திறந்து உள் சென்றால் வெளிச்சத்திற்கு பின்பக்கம் ஒற்றைச் சன்னலைக் கொண்ட 10×10' அறை. இடப்பக்க தெற்கு மூலையில் ஒரு இரும்புக் கட்டில், வடக்கு மூலையில் ஒரு பீரோ, போக கல்லக்கா உள்ளிட்ட வேளாண் பொருட்களை அடுக்கி வைக்க கொஞ்சம் இடம். இதுதான் இந்த வீட்டின் படுக்கை அறை மற்றும் பாதுகாப்பு அறை எல்லாமுமே! வெளிப்புற படியேறி மேலே சென்றால், பகலில் கல்லக்கா உள்ளிட்டவைகளைக் காய வைக்கவும், இரவில் மைத்துனர் படுத்து உறங்கவுமான மொட்டை மாடி.

அவசரத்துக்கு ஒதுங்க வேண்டுமானால் 
திறந்தவெளிதான். கதிரவன் மேலெழுந்து வருவதற்குள் காலைக் கடனை முடித்துக் கொள்வது சாலச் சிறந்தது. இல்லையேல் இடம் தேடித் திண்டாட வேண்டி வரும். உரிய இடம் ஏதும் கிட்டவில்லை என்றால் மாலை இருட்டும் வரைக் காத்திருக்க நேரிடும். 

20 ஆண்டுகளாக 'வெஸ்டர்ன் டாய்லெட்டி'லேயே வெளிக்குப் போயி பழகிப்போனதால் திறந்த வெளியில் குத்துக்காலிட்டு கடனைக் கழிப்பது எனக்குக் கடினம்தான் என்றாலும் கடனைக் கழித்து எழ கைத்தடியை நாடியதால் சமாளிக்க முடிந்தது. கடன் முடித்து குதம் கழுவ பிளெக்சிபிள் ஹோசுடன் பிளஷர் கிடையாது.  நெல் வயலில் தேங்கி நிற்கும் சேறு கலந்த கழனி நீரையோ, பாசன நீர்தொட்டியில் மீதமிருக்கும் நீரையோதான் நாட வேண்டும். 

உடலும் மனமும் பேசும் மொழி ஒன்று என்பார்கள் ஹோமியோபதியில். இத்தகைய சூழலில் வாழ்வதற்கு மனம் வெறுத்தால் மலம்கூட கட்டிப் போகும். ஆனால், இதுதான் வாழ்க்கை என்று மனம் ஏற்றுக் கொண்டால் எல்லாமே இயல்பாய் கடந்து போகும்.

தாளிட்டுக் குளிக்க இங்கே தனி அறை இல்லை, வாழை மரத்தடிதான். வயதுப் பெண்கள் வெட்டவெளியில் குளிப்பதென்பது சங்கடமாய் இருந்தாலும் இருட்டிய பிறகே பெரும்பாலும் குளியல். காலை முதல் மாலை வரை ஓய்வின்றி உழைப்பவர்க்கு உகந்த நேரமும் இதுதான். உடை கலைந்து குளிக்கும் போதும், பின் உடைமாற்றும் போது நிகழும் கணநேர ஆடை விலகல்கள்கூட இங்கே ஆபாசமாய்த் தெரிவதில்லை. 

காலையில் கஞ்சியோ, கூழோ இருப்பதை குடித்துவிட்டு, பிற்பகலில் முழு உணவு, பின் ஏழு மணிக்கெல்லாம் இரவு நேர உணவை முடித்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் உறங்கினால்தான் மறுநாள் அதிகாலை எழுந்து பூப்பறிக்க முடியும். நேரம் தொலைப்பவருக்கு மட்டுமே தொலைக்காட்சித் தொடர்கள்; உழைப்பவருக்கு வாழ்க்கையே ஒரு தொடர்தானே!

உழைப்பினூடே அன்றாடம் பூரான்களையும் சொய்யான்களையும்,  பாம்புகளையும் பல்லிகளையும், தேரைகளையும் தவளைகளையும், பூச்சிப் புழுக்களையும் வண்டுகளையும், தேளையும் நட்டுவாகத் தெறிக்கிகளையும், மரவட்டைகளையும் பிற எண்ணற்ற பூச்சிகளையும் எதிர்கொள்ளலாமல் கிராம வாழ்க்கையைக் கடந்து செல்ல முடியாது.

தொடரும்

ஊரான்

6 comments:

  1. வேந்தன்: படிக்க படிக்க எஙகள் கிராம நினைவுகள் கண்முன்னே. நன்றிங்க தோழர் வணக்கம்.

    ReplyDelete
  2. திருச்சி சேகர்: தொழிற்சாலையில் தாங்கள் நமது சங்க வாயில் கூட்டங்களில் தாங்கள் எடுத்து கூறும் புள்ளி விபரங்கள் அடங்கிய பேச்சு எனக்கு அந்த நாட்களில் ஆச்சரியமாக இருந்தது அதேபோல் தலைவர் சிங்கராயர் பேச்சு நிர்வாகத்திற்கு ஒரு எச்சரிக்கை பேச்சாகவே இருக்கும் தொழிலாளர்கள் அன்றைய டீ பிரேக்கில் எல்லோரும் நமது வாயிற் கூட்டம் பற்றியே பேசுவார்கள். இன்று அது கனவாக உள்ளது தோழர்😊 வணக்கம்.

    ReplyDelete
  3. திருச்சி சேகர்: உங்கள் எழுத்து நடை மற்றும் எதார்த்தமான கிராமத்து வாழ்க்கை முறை மிகவும் அனுபவித்து படிக்க மகிழ்ச்சி அளிக்கிறது தோழர்.

    ReplyDelete
  4. விஜயகுமார், திருச்சி: அன்றைய கிராமிய வாழ்க்கைச் சூழல் தத்ரூபமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. அரசு: ஐந்து கட்டுரையும் படித்து விட்டேன். அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். ஏன் மாலை நேர குளியல் என்பதை கட்டுரை படிக்கும் போது தான் உணர முடிந்தது.

    ஒரு நாள் விவசாயம் செய்து பார். வேண்டாம் வேண்டாம் ஒரு நாள் விவசாயி யோடு இருந்து பார். என்று திரைபடத்தில் கூறப்பட்ட வசனம் நறுக்குத் தெறித்தார் போல் கட்டுரையில் வெளிப்படுகிறது.

    ReplyDelete
  6. ரவிக்குமார் ப: இந்தப் பதிவிலுள்ள, ' மேட்டுக்கும் பள்ளத்திற்கும் இடையில் ' என்ற சொற்றொடர் - பிற்பகுதியில் விளக்கியுள்ள - மேட்டுக்குடி (நகர) வாழ்க்கை முறைக்கும், கிராம வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக் காட்டுவது போல் உள்ளது .

    மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்......தங்கள் பதிவு ஒரு தகவல் பெட்டகம் 👏👏👏

    ReplyDelete