Tuesday, August 1, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உயிரைப் பணயம் கேட்கும் முல்லைகள்!" தொடர் - 4

இது முல்லை அரும்புகள் முகிழ்க்கும் காலம். 
கணவன் மனைவி இருவரும் அதிகாலை மூன்று மணிக்கு தலைச்சுடரொளியை (head torch light) மாட்டிக் கொண்டு ஐந்து செண்ட் அளவுள்ள முல்லைத் தோட்டத்திற்குள் நுழைகிறார்கள். தலைச்சுடரொளியின் சிறு ஒளிவட்டத்தில் வெண்மையாய் உள்ள முல்லை அரும்புகளை மட்டும் மென்மையாய்ப் பறித்து மடியிலே போடுகிறார்கள். 

கடலைச் செடியை பிடுங்கும் போதும், கடலையைப் பறிக்கும் போதும் கரடு முரடாய் இயங்கும் விரல்கள், முல்லையைத் தொட்ட உடன் மென்மையாகி விடுகின்றன. இல்லையேல் அரும்புகள் நைந்து போகுமென காய்த்துப் போன விரல்கள்கூட உணர்கின்றனவே!? கனகாம்பரத்தைப் பறிக்கும் போது மேலும் மேலும் மென்மை தேவை. 

பார்வை சற்றே பிசகினால், மறுநாள் பறிக்க வேண்டிய முகிழ்க்கா அரும்புகளும் கையில் சிக்கிவிடும். என்னதான் உற்று உற்றுப் பார்த்து பறித்தாலும், சில முகிழ்த்த மொட்டுக்கள் இலைகளுக்கிடையில் ஒளிந்து கொள்ளும். அவைகள் அடுத்த நாள் பூத்துக் குலுங்கி வீணாய்ப் போகும். 

சில சமயம் கொடிய வஞ்சகர்கள்கட தோட்டத்திற்குள் வாசம் செய்ய முயல்வர். வஞ்சகர் இருக்கும் பக்கம் நீங்கள் காலடி எடுத்து வைத்தால் அவைகள் 'உஸ்! உஸ்!' என ஒலி எழுப்பும். எச்சரிக்கையாய் இல்லையெனில் அவை உங்களை போட்டுத் தள்ளும். 

குரல் எழுப்பி, கும்மிருட்டில் வயல் வரப்புகளுக்கிடையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே, கொடிய நாகனின் நஞ்சு உங்கள் கதையை முடித்திருக்கும். வசீகரிக்கும் வாசமும் வெண்மையும் நிறைந்த முல்லைக்குப் பின்னே உள்ள ஆபத்து யாருக்குத் தெரியும்? உயிரைப் பணயம் வைத்தல்லவா மங்கையரை மகிழ்விக்கிறான் விவசாயி.

இளைய மகளின் இரண்டு வயதுக் குழந்தையை வீட்டில் தூங்கவைத்துவிட்டு, கதவை சரியாகத் தாழிடாமல், தாயும் தாத்தா பாட்டியும் அதிகாலையில் தோட்டத்துக்குச் சென்றுவிட, கண்விழித்தக் குழந்தை இவர்களைத் தேடி தோட்டத்தை நோக்கிச் சென்று 'அம்மா' என குரல்  எழுப்ப, அதிர்ந்து போய் குழந்தையை அரவணத்தச் செய்தியை அவர்கள் சொல்லும் போது யாரால்தான் பதறாமல் இருக்க முடியும்? வரும் வழியில் புற்களும் புதர்களும் நிறைந்த வாய்க்கா வரப்புகளில் ஏதேனும் தீண்டியிருந்தால், வரப்பை ஒட்டி மதிர்ச்சுவரில்லா ஆழ்கிணற்றில் இடரி விழுந்திருந்தால்....? அப்பப்பா, நினைத்தாலே நமக்கே நெஞ்சம் பதறுகிறதே! பெற்ற தாய் என்ன பாடுபட்டிருப்பாள்?

கீழ் வானம் சிவக்கும் வேளையில்  மொட்டுக்கள் பறிப்பதை நிறுத்திவிட்டு பசு மாட்டைத் தட்டிக் கொடுத்து பால் கறக்க வேண்டும். கறந்த பாலை பால்காரிடம் சேர்த்து விட்டு மீண்டும் தோட்டத்திற்குச் சென்று மீதமுள்ள மொட்டுக்களை பறித்து வந்து, எடை போட்டு ஏழு மணிக்கெல்லாம் காட்டோர கூட்ரோட்டுக்கு ஓடோடிச் சென்று முல்லைப் பாக்கெட்டை பேருந்தில் சேர்க்க வேண்டும். அது கோணாகுட்டை கேட்டில் உள்ள இடைத்தரகரிடம் சென்று, பிறகு  அங்கிருந்து செங்கம் அல்லது திருவண்ணாமலை நகரில் உள்ள மொத்த பூ வியாபாரிகளைச் சென்றடையும். இறுதியாக அங்கே எடை பார்த்து பின் மாதம் கழித்து கணக்குப் பார்த்து காசு கொடுப்பார்கள். 

நிலம் உழுது, குழி தோண்டி, எருவிட்டு, செடி நட்டு, உரமிட்டு, நீர் பாய்ச்சி, களை எடுத்து, கவ்வாத்து பண்ணி, வறட்சி என்றால் குடம் சுமந்து நீர் ஊற்றி, பெருமழை என்றால் நீர் வடித்து பாதுகாத்து வளர்த்த முல்லையல்லவா? முல்லை முகிழ்த்தலுக்குள் எத்தனை உழைப்பு? உழைப்புக்கான பலன் கிடைக்கும் என  எல்லாவற்றையும் நம்பித்தான் விவசாயி உழைத்துக் கொண்டிருக்கிறான்.


குடும்பமே மூன்று மணி நேரம் இடுப்பொடிய, கால்கடுக்க நின்று பறித்தாலும், இரண்டு கிலோவைத் தாண்டுவதே சிரமம். வெளிச்சந்தையில் ஒரு கிலோ ஐநூறோ ஆயிரமோ விற்றாலும் மொத்த வியாபாரிகள் வைப்பதே விலை. இதில் விவசாயிக்கு நூறு இருநூறு கிடைத்தாலே பெரிது. கூலிக்கு ஆள் வைத்து பறித்தால் கிலோவுக்கு ரூபாய் ஐம்பதைக் கூலியாகத் தரவேண்டுமே என்பதால் இங்கேயும் குடும்பமே உழைக்கிறது, ஏதாச்சும் மிச்சப்படுத்த முடியாதா என்று! 

பூக்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள் விலைவிக்கின்ற பொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிற உரிமையும் அதை சந்தைப்படுத்துகிற வசதியும் கிடைக்காத வரை இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளும் கொழுப்பார்களே ஒழிய விவசாயிக்கு என்ன கிடைக்கப் போகிறது? 'உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது' என்று அதனால்தான் அன்றே சொல்லி வைத்தானோ?

பூ உற்பத்தி ஒன்றும் மனிதனுக்கு அத்தியாவசியமானதல்ல. அதில் செலுத்தப்படும் உழைப்பு அர்த்தமற்ற உழைப்புதான். அர்த்தமற்ற உழைப்பிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்காத வரை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர முடியாது என்பான் மக்சிம் கார்க்கி. என்ன செய்ய? இங்கு, இன்று, இந்தப் பூக்களாவது பாடுபடும் விவசாயப் பாட்டாளிகளின் அடிவயிற்றை ஈரப்படுத்துகிறதே என்று இப்போதைக்கு ஆறுதலடைவதைத் தவிர? 

சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைபேசி, சுண்ணாம்பு, சிமெண்ட், பெயிண்ட், சேலை, சுடிதார், செருப்பு, ஜட்டி, சட்டை, பேண்ட் என மக்கள் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களே அதற்குரிய விலையை தீர்மானித்து சந்தைப்படுத்தும் உரிமை இருக்கும் பொழுது விவசாயிக்கு மட்டும், தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து சந்தைப்படுத்தும் உரிமை ஏன் இல்லை என்று கேட்க நாதி இல்லை. 

தொடரும்

ஊரான்


2 comments:

  1. ஜெயராமகிருஷ்ணன்: விவசாய பெருமக்களின் சாபக்கேடு என்பது அவர்களின் உழைப்பினால் உருவாகும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு தானியங்களுக்கு காய்கறிகளுக்கு அவர்களால் விற்பனை விலையை முடிவெடுத்து சொல்ல இயலாது நிர்ணயம் செய்ய முடியாது ...

    ReplyDelete
  2. ரவிக்குமார் ப: முல்லைப் பூவுக்குள் இவ்வளவு விஷயங்களா என வியப்பையும், வலியையும் தருகிறது தங்கள் பதிவு.
    உழவர் வாழ்க்கைத் தரம் நிச்சயம் உயர்வு பெற வேண்டும். நடக்கும் என நம்புவோம்.
    நம்பிக்கைதானே வாழ்க்கை ?!!

    ReplyDelete