Saturday, December 14, 2024

இந்தியாவில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் யார்? யார்? -11

தமிழ்நாடு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு 

தமிழ்நாட்டில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பு-முஸ்லிம் (BC-M), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (MBC) என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன.
 
இவர்களுக்கு முறையே 
BC=26.5%, 
BC-M=3.5% (உள் ஒதுக்கீடு), 
MBC=20% என
ஆக மொத்தம் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதே போல பட்டியல் சாதி (SC), பட்டியல் சாதி அருந்ததியர் (SC-A), மற்றும் பழங்குடியினர் (ST) என தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மூன்று வகுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு முறையே 
SC=15%, 
SC-A=3% (உள் ஒதுக்கீடு), 
ST=1% என 
ஆக மொத்தம் 19% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டபூர்வமாகவே வழங்கப்படுகிறது. 

தமிழ் நாடு இட ஒதுக்கீடு

மண்டல் குழு பரிந்துரைகளின் படி தமிழ் நாட்டில் பயன் பெறுவோர் யார்? யார்? 

மண்டல் குழு பரிந்துரைகளின்படி மத்திய அரசு வேலைகளில் 27% இட ஒதுக்கீடு வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குத் தகுதியுள்ளவை என தமிழ்நாட்டில் மட்டும்,

ஆச்சாரி, அகமுடையர், அம்மட்டன்,  ஒட்டர், தாழ்த்தப்பட்ட வகுப்பு கிறித்தவர், தேவாங்கர், இடையர், வடுகர், இல்லத்து பிள்ளைமார், இசை வேளாளர், செங்குந்தர், கள்ளர், கம்மாளர், கருணீகர், தேவர், கொங்கு வேளாளர், குரும்பர், குறவர், லப்பை முஸ்லீம், லம்பாடி, லத்தின் கத்தோலிக்கர், நாவிதர், மறவர், மீனவர், முத்துராஜா, சாணார், நாய்க்கர், நரிக்குறவர், ஒட்டர், தெலுங்குச் செட்டி, சேனைத் தலைவர், சௌராஷ்டிரா, சோழிய வேளாளர், தேவர், தொட்டி நாயக்கர், ஊராளிக் கவுண்டர், வாணியச் செட்டியார், வண்ணான், வன்னிய குல சத்திரியர், வேடர், வேட்டுவக் கவுண்டர், ஒக்கலிகர், இடையர் 
உள்ளிட்ட 288 சாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) இடம் பெற்றுள்ளன.

நடுவண் அரசு இட ஒதுக்கீடு

அதே வேளையில், மத்திய அரசுப் பணிகளில் இது 
OBC=27%, 
SC=15%, 
ST=7.5% என ஆக மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மீதி 50.5% அனைவருக்குமான பொதுப் பட்டியலாகும். இதை பயன்படுத்திக் கொண்டுதான் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினர் நடுவண் அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில்
பெருமளவு இடத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். தற்போது இந்த 50.5% இல் EWS என்ற பெயரில் சொளையாக 10 சதவீத்தைத் தட்டிச் செல்கின்றனர். 

'கிரீமி லேயர்' (Creamy Layer)

ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற உரிமை கிடையாது என்பதுதான் இந்தக் கிரீமி லேயர் ஏற்பாடு. இதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ரூபாய் 8 லட்சத்திற்கும் கீழ் வருவாய் உள்ளவர்கள், ஏழைகள் பயன்பெற இது உதவும் என்று ஒருவர் கருதக் கூடும். ஆனால், இந்த வரையறையின்படி பொருத்தமான நபர்கள் இல்லை என்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் நிரப்பப்படாத இடங்கள், மூன்று ஆண்டுகள் கழித்துப் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, அதையும் உயர் சாதியினரே அபகரித்துக் கொள்ளும் ஆபத்துதான் உள்ளது. 

ஒருவன் ஏழையா என்று பார்ப்பதைவிட அவன் சமூகத்தில் (socially) பிறரால் எவ்வாறு நடத்தப்படுகிறான் என்பதை அளவுகோளாக வைத்துதான் அவனுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். உயர்சாதிகளில் உள்ள ஏழைகளை ஒப்பிடும் பொழுது SC, ST & OBC பிரிவிகளில் உள்ள மக்கள் சமூக ரீதியாக மிகவும் கீழான நிலையில்தான் உள்ளனர்.

SC, ST & OBC மக்களின் நிலையை முன்னேற்ற வேண்டும் என்று சொன்னால், சட்டத்தை இயற்றவும், திட்டங்களை வகுக்கவும், இவற்றை நடைமுறைப் படுத்தவும் அதிகாரம் கொண்ட  IAS, IPS, அரசின் உயர் மட்டச் செயலாளர்கள், மந்திரிகள், நீதித்துறை, IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை உணர்ந்த SC, ST & OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இடம் பெற வேண்டும். 

இந்தக் கிரீமி லேயர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்புகளில் மட்டுமல்ல அவர்களின் பதவி உயர்வுகளிலும், அதேபோல SC, ST ஊழியர்களின் பதவி உயர்வுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. 

அதனால், SC, ST & OBC  மக்கள் இட ஒதுக்கீடு மூலம் அரசு வேலைகளில் பணிக்குச் சேர்ந்தாலும், மேற்கண்ட கிரீமி லேயர் முறையால் அவர்கள் கீழ்மட்ட (C&D) ஊழியராகவே பணியாற்றி ஓய்வு பெற்று விடுவர். பதவி மூப்பின் அடிப்படையில்கூட அவர்கள் ஒருபோதும் மேலே குறிப்பிட்ட உயர் பதவிகளை அடையவே முடியாது.

ஆனால், ஐயகோ! இவற்றில் எல்லாம் இன்னமும்கூட SC, ST & OBC
மக்களின் எந்த ஒரு வலியையும் உணராத பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனரே? 

I.I.Tகளில் பார்ப்பனகளின் ஆதிக்கம்

அடுத்து அரியவகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு (EWS) குறித்துப் பார்ப்போம்.

தொடரும் 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்










No comments:

Post a Comment