Showing posts with label அண்ணன். Show all posts
Showing posts with label அண்ணன். Show all posts

Friday, 31 July 2015

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா?

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 5

தீண்டாமையை கடைபிடிப்பதில் இஸ்லாமியர்களும் சளைத்தவர்களல்ல.

1934ம் ஆண்டு அம்பேத்கர் மற்றும் அவருடன் பணிபுரியும் தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 30 பேர் ஒரு சுற்றுலா செல்கின்றனர். அப்பொழுது தவுலாதாபாத் கோட்டையை பார்க்கச் சென்றபோது பயணக் களைப்பில் இருந்ததால் கோட்டைக்கு வெளியே இருந்த ஒரு குளத்தில் கை கால் கழுவினர். தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டதாக ஒரு முகமதியர் கூப்பாடு போட்டார். தெத்களுக்கு கர்வம் பிடித்தவிட்டது. தெத்கள் தங்களுடைய மதத்தை மறந்துவிட்டனர் என இளம் மற்றும் வயதான முகமதியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு அம்பேத்கரையும் அவரது நண்பர்களையும் வசை பாட ஆரம்பித்தனர்.

அவர்கள் தாக்கும் மனநிலையில் இருந்தனர். அவர்கள் தங்கள் கோபக்கனலை உள்ளூர் தீண்டத்தகாதவர்கள் மீது வீசினார்கள். மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தனர். 

அதன் பிறகு தீண்டப்படாதவர்கள் உள்ளே எந்தத்தண்ணீரையும் தொட்டுவிடக்கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் ஆயுதங்தாங்கிய சிப்பாய் ஒருவன் பின்தொடர அம்பேத்கரும் அவரது நண்பர்களும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவன்தானே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துகாட்டுவதாக அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.

தாயையும் சேயையும் கொன்ற தீண்டாமை

கத்தியவார் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான ஒரு பள்ளி ஆசிரியர் பிரசவித்திருந்த தனது மனைவி மற்றும் குழந்தைக்கு மருத்துவம் செய்ய அணுகிய போது தீண்டத்தகாதவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாது என மருத்துவர் ஒருவர் மறுத்துவிட்டார்.

கெஞ்சிக்கூத்தாடிய பிறகு மற்றொரு மருத்துவர் வர ஒப்புக்கொண்டாலும் வீட்டிற்குள் வர மறுத்துவிட்டார். அதனால் தனது மனைவியை பிறந்த குழந்தையுடன் குடியிருப்புக்கு வெளியே கொண்டு வந்தார். பிறகு மருத்துவர் ஒரு வெப்பமானியை ஒரு முஸ்லீமிடம் கொடுக்க, அதை அவர் ஆசியிரியடம் கொடுக்க, அதன் பிறகு அந்த ஆசிரியர் அதை தன் மனைவியிடம் கொடுத்தார். அதை உபயோகித்த பிறகு அதே முறையில் அது திரும்பக் கொடுக்கப்பட்டது. நோயாளிக்கு நிமோனியா ஜீரம் எனக்கூறிவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அவளைப் பார்க்க மறுத்தவிட்டார். மருத்துவம் கிடைக்காததால் அந்தப் பெண் இறந்து போனார்.

மருத்துவர் படித்தவராக இருந்தும் தொழில் ரீதியான நடத்தை நெறிகளை குழிதோண்டிப் புதைத்துவிட்ட அந்த மருத்துவருக்கு மனசாட்சி உறுத்தவில்லலை. ஓர் இந்து தீண்டத்தாகாதவனைத் தொடுவதைவிட மனிதாபிமானமற்று இருப்பதையே சிறந்ததாகக் கருதுகிறான்.

வீடு வாடகைக்கு விடும் போது ஜாதி கேட்பதே தீண்டத்தகாதவனா என்பதை அறிவதற்கே!

குஜராத்  ஆமதாபாத்திலுள்ள பிற்பட்டோர் துறை அலுவலகத்தில் கிராம பட்வாரி (தலாத்தி) வேலைக்கு 1938 ம் ஆண்டில் தேர்வு செய்ப்பட்ட தாழ்த்தப்பட்ட பங்கி சாதியைச் சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமையை அவரே விவரிக்கிறார்.

அலுவலக எழுத்தர்: ‘நீ யார்’?

‘ஐயா, நான் ஒரு ஹரிஜன்’

தூரப் போ! தள்ளி நில். இவ்வளவு அருகே நிற்க உனக்கு என்ன தைரியம்? இப்போது நீ அலுவலகத்தில் இருக்கிறாய். நீ வெளியே மட்டும் இருந்திருந்தால் உனக்கு ஆறு உதை கொடுத்திருப்பேன். இங்கு வேலைக்கு வர உனக்கு என்ன தைரியம்?’

தலாத்தி வேலைக்கான நியமனக் கடிதத்தையும் சான்றிதழ்களையும் தரையில் போடச் சொல்லி பிறகு அதை அவர் பொறுக்கி எடுத்துக் கொண்டார்.

அலுவலகத்தில் ஒரு தகரக் குவளையில் குடி தண்ணீர் இருக்கும். தொட்டால் தீட்டாகிவிடும் என்பதால் அதைத் தொடுவதற்கு இந்த தாழ்த்தப்பட்ட இளைஞர் அனுமதிக்கப்படவில்லை. இவருக்கு மட்டும் ஒரு பழைய அழுக்கான பானை ஒன்று வைக்கப்பட்டிருக்கும். குடிநீர் வழங்குபவர் இவர் குடிப்பதற்காக சிறிதளவு தண்ணீரை அந்தப் பானையில் ஊற்றி வைப்பார். ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு தண்ணீர் ஊற்றுவது பிடிக்காததால் அவர் எங்கேயாவது நழுவி விடுவார். அப்பொழுதெல்லாம் இவர் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் திண்டாட வேண்டும்.

.அதே போல எந்தச் சாதி இந்துவும் இவருக்கு வீடு வாடகைக்கு கொடுக்கவில்ல. அதனால் 6 மைல் தொலைவில் உள்ள தன் மூதாதையர் கிராமத்திலிருந்து அன்றாடம் வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்.

இவருடைய தந்தை, அண்ணன் எல்லாம் அலுவலகத்தில் குப்பை கூட்டியவர்கள் இவர் மட்டும் எப்படி அலுவலக வேலை பார்க்கலாம் என்பதால் இவர் மீது வெறுப்பு காட்டினர். ஒரு முறை கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் நாற்காலியில் அது அவருடையது எனத் தெரியாமல் உட்கார்ந்ததற்காக “இந்த பங்கி நாயை நாற்காலியில் உட்கார யார் அனுமதித்தது?” என கிராம நூலகத்தின் நூலக அதிகாரியின் தூண்டுதலின் பேரில் அங்கிருந்த மக்கள் வசைமாறி பொழிந்து கண்டதுண்டமாக வெட்டிவிடுவதாக இவரை மிரட்டினர். “இவ்வாறு மீண்டும் நடக்காது! நான் வேலையை விட்டுவிடுகிறேன்!” என இவர் இரக்கம் காட்டுமாறு கெஞ்சிக் கேட்ட பிறகுதான் அந்தக்கூட்டம் கலைந்தது. பிறகு 15 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பம்பாயிலுள்ள தன் பெற்றோரிடம் சென்றுவிட்டார்.

(ஆதாரம்: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

“இன்று யார் சாதி பார்க்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்புவோர் ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்கு விடத்தயாரா?

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

Monday, 19 March 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! .... தொடர் - 2

எங்கு நோக்கினும் பொறாமை

மண்ணும் – நீரும், விதைத்திருக்கிற நெல்லும் ஒன்றே ஆனாலும் அண்ணனின் நிலத்தில் அதிக விளைச்சல் என்றால் தம்பிக்குப் பொறாமை. 

தான் வளர்க்கும் பசு சினைகூட பிடிக்காத போது பங்காளியின் பசு இரண்டு கன்றுகளை ஈன்றால் அங்காளிக்குப் பொறாமை. 

கோயில் - குளம் எனச் சுற்றித் திரிந்தாலும் தன் வயிற்றில் ஒரு புழு - பூச்சிகூட தங்காத போது நாத்தனாருக்கு மட்டும் பத்து மாதத்தில் அழகியக் குழந்தை - அதுவும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மதனிக்குப் பொறாமை. 

நேற்றுவரை நட்பாய் இருந்த பள்ளித் தோழன் திடீரென தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்திருந்தாலும் பள்ளிக்கூட நட்பை விடாமல் தொடர்ந்தவர்கள். இருவருக்குமே வேலை கிடைக்காத வரை நட்பு தொடர்கிறது. ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டால் மற்றவனுக்கு பொறாமை. பள்ளிக்கூட நட்பும் அத்தோடு முடிவுக்கு வருகிறது. 

ஒரே படிப்பு; ஒரே நிறுவனத்தில் வேலை. ஆனால் பதவி உயர்வில் தன்னை மிஞ்சும் சக ஊழியன் மீது பதவி உயர்வு கிடைக்காதவனுக்குப் பொறாமை. 

வேலைக்குச் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் சொந்தமாய் ஒரு வீடு இல்லையே என ஏங்கிக் கொண்டிருக்கும் ஆலை ஊழியருக்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் உடன் பணிபுரியும் சக தொழிலாளி சொந்தமாய் ஒரு வீடு வாங்கி விட்டால் சொந்த வீடு கனவு காணும் ஆலைத் தொழிலாளிக்குப் பொறாமை. 

தனது மகன் நாற்பது மதிப்பெண்கள் பெறுவதற்கே திண்டாடும் போது பக்கத்து வீட்டுப் பையன் எண்பது மதிப்பெண்கள் எடுத்தால் அவன் மீது நாற்பது மதிப்பெண்கள் பெற திண்டாடும் மாணவனின் தாய்க்குப் பொறாமை. 

தான் ஒருதலையாய் காதலிக்கும் கல்லூரி மாணவி வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவன் மீது இவனுக்குப் பொறாமை. 

‘அழகாய்’ இருக்கும் சக மாணவி மீது ‘அழகில்லாத’ கல்லூரி மாணவிக்குப் பொறாமை. 

கேசவர்த்தினிகளைத் தேய்த்துத் தேயத்து கூந்தலை வளர்க்க முயன்று தோற்றுப் போனவர்கள் நீண்ட கூந்தல் உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். 

மீசை வளராத காளைகளுக்கு அரும்பு மீசைக்காரனைப் பார்த்தால் பொறாமை. 

தங்களது தெருவுக்கு கிடைக்காத சாலை-மின்விளக்கு-ரேசன் கடை-குடிநீர்க் குழாய் உள்ளிட்ட வசதிகள் அடுத்தத் தெருக்காரனுக்கு கிடைக்கும் போது வசதிகள் கிடைக்காத தெருக்காரனுக்குப் பொறாமை. 

பொங்கல் விழாவையொட்டி தங்களது ஊரில் நடந்த கபடிப் போட்டியில் அடுத்த ஊர்க்காரர்கள் கோப்பையைத் தட்டிச் சென்றால் போட்டி நடத்திய ஊர்க்காரர்களுக்கு கோப்பையை தட்டிச் சென்ற ஊர்க்காரர்கள் மீது பொறாமை. 

அண்ட வந்த அடுத்த மாநிலத்துக்காரன் வசதியில் தன்னை விஞ்சும் போது மண்ணின் மைந்தனுக்குப் பொறாமை. 

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றுவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியனுக்குப் பொறாமை.

விளைச்சல் - கால்நடைகள் - குழந்தைப்பேறு - படிப்பு - வேலை வாய்ப்பு - பதவி உயர்வு - சொந்த வீடு - அழகு - காதல் - திறமை - விளையாட்டு என எதுவாக இருந்தாலும் இது வரை ஏதும் இல்லாதிருந்தவன் இனி இவைகளைப் பெற்றுவிடக்கூடாது அல்லது தன்னிடம் இல்லாதது மற்றவனிடம் இருக்கக்கூடாது அல்லது தன்னைவிட அடுத்தவனிடம் அதிகமாகிவிடக்கூடாது என்று பார்க்கிற மன நிலையையே மனிதன் வளர்த்துக் கொண்டிருக்கிறான்.

இங்கே அடுத்தவன் என்பது முதலில் தனது உறவுக்காரர்களையும்; அதற்கடுத்து, அக்கம் பக்கத்தில் வாழ்வோரையும்; அதற்கடுத்து, பணியிடத்தில் உள்ளோரையும்; அதற்கடுத்து, நண்பர்களையும்; அதற்கடுத்து, அடுத்தத் தெரு - அடுத்த ஊர் - அடுத்த மாநிலம் - அடுத்த நாட்டினரையும் குறிக்கும். இந்த வரிசைக்கிரமத்தில்தான் இவர்களின் பொறாமையின் உக்கிரமும் அமைகிறது.

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமியார்-மருமகள், நாத்தனார்கள் என எந்த உறவையும் இந்தப் பொறாமை விட்டு வைக்கவில்லை.

பக்கத்து வீடு - எதிர் வீடு, மேல்வீடு - கீழ்வீடு, அடுத்த தெரு - அடுத்த ஊர், அண்டை மாநிலம் - அண்டை நாடு என சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது இந்தப் பொறாமை. 

பாமரன் முதல் படித்தவன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, சிறுவர் முதல் முதியவர் வரை இப்படி ஆண் - பெண் பால் வேறுபாடின்றி எங்கும் இந்தப் பொறாமை வியாபித்திருக்கிறது. 

பள்ளி - கல்லூரி மாணவர்கள், தொழிலாளி - முதலாளி, அதிகாரி - ஊழியர், விவசாயி - வியாபாரி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது இந்தப் பொறாமை. 

பொறாமை என்று வந்துவிட்டால்…… 

சளித்தொல்லையால் அவதிப்படும் பக்கத்து வீட்டுக் குழந்தையின் இருமலும் தும்மலும் கூட இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். 

எங்கோ இருந்து காற்றில் மிதந்து வரும் தலைமுடிகூட இது மேல்வீட்டுக்காரி வேண்டும் என்றே நம்மீது போட்டது என முடிவு செய்து கீழ் வீட்டுக்காரி மேல்வீட்டுக்காரியை சண்டைக்கு இழுக்கிறார். 

பள்ளத்தை நோக்கி வழிந்தோடும் மழை நீர் தன்வாசல் பக்கம் எப்படி வரலாம் என பக்கத்து வீட்டுக்காரரை சண்டைக்கு இழுப்பவர்களும் தெருவுக்குத் தெரு இருக்கிறார்கள்! 

காற்றில் கரைந்து காணாமல் போகும் அடுப்புப் புகைக்குக்கூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை காரணமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. 

மேல் வீட்டுக்காரனின் பிஞ்சுக் குழந்தையின் மெல்லிய காலடிகள்கூட கீழ் வீட்டுக்காரனுக்கு பேரிடியாய் எதிரொலிக்கிறது. 

தற்செயலாய் கை தவறி விழும் தேனீர்க் குவலையின் ஓசைகூட கீழ்வீட்டுக்காரனின் காதுகளை செவிடாக்கி விட்டதாக மாடியில் குடியிருப்பவனிடம் கூப்பாடு போடுகிறான்.

உள்ளத்தில் பொறாமை எண்ணம் மேலோங்குவதால் சண்டைகளும் சச்சரவுகளும் மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டன.

பொறாமைக்கு ஆட்படாதவர்கள் சொற்பமே. 'நியாயமாக' இருப்பதாகக் கருதிக் கொள்ளும் சிலரிடமும், அறிந்தோ - அறியாமலோ சில சமயங்களில் அவர்களிடமும் பொறாமை குணம் வெளிப்படத்தான் செய்கிறது.ஆகப் பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கும் இந்தகையப் பொறாமை குணம் மக்களிடையே எப்போது தோன்றியது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

தொடரும்....

தொடர்புடைய பதிவு:
அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ----- தொடர் ....1
http://hooraan.blogspot.in/2012/03/1.html