Showing posts with label ம.க.இ.க. Show all posts
Showing posts with label ம.க.இ.க. Show all posts

Wednesday, 15 June 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?


காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது 'இப்பவெல்லாம் படிச்சவங்கதான் அதிகமா சாதி பாக்கிறாங்க' என்றார் உடன் வந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். படித்தவர்,  நல்ல ஊதியத்துடன் நடுத்தர வர்க்க வாழ்க்கையை நடத்துபவர். பொருளாதாரத்தில் அவருக்கு குறையேதும் இல்லை. பிறகு ஏன் இத்தகைய சலிப்பு!

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து பள்ளிப் பருவத்தில் எனக்கு நேர்ந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்தது என்பதைவிட எப்பொழுதும் எனது நினைவில் நிலைத்திருப்பது.

என்னுடன் படித்த மாணவ நண்பன் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் சைவப்பழக்கம் உள்ள உயர்சாதி என்பது பிறகு தெரிய வந்தது. பகல் நேரத்தில் அவனுடன் அவனது வீட்டிற்குச் சென்றேன். அவனது தாயார்தான் வீட்டில் இருந்தார். முன் பின் தெரியாத ஒருவனை தனது மகன் அழைத்து வந்துவிட்டால் அவனை உடனடியாக வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள். இது கிராமப்பகுதிகளில் அன்று நிலவிய நடைமுறை. ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் கொண்டு வந்து திண்ணையில் வைத்தார் அவனது தாயார். கையில் கொடுக்கமாட்டார்கள். தீட்டுப் பட்டுவிடுமாம். இருந்தாலும் வந்தவர்களுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடுக்க மட்டும் மறுக்கமாட்டார்கள். கேட்கவில்லை என்றாலும் அவர்களாகவேத் தருவார்கள். இது தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு என்கிறார்கள் சிலர். ஆனால் இந்த சிறந்த விருந்தோம்பலில் இருக்கும் தீண்டாமை,தாகம் தீர்க்கும் தண்ணீரைக்கூட கொடிய நஞ்சாகவல்லவா மாற்றிவிடுகிறது. இது அந்தத் தண்ணீரைக் குடிப்பவனுக்குத்தான் உரைக்கும்; கொடுப்பவர்களுக்கு அது ஒரு நடைமுறைப் பண்பாடு. சமூகம் அப்படித்தான் மக்களை பயிற்றுவித்திருக்கிறது. எனது கருப்புத்தோலும் ஏழ்மையின் உருவத்தோற்றமும் நான் என்ன சாதியாயிருக்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

இந்த நிகழ்வு எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இது நடந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இடைப்பட்ட காலத்தில் ஏராளமான நண்பர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என பலதரப்பட்ட மக்களோடு பழகியிருக்கிறேன், பழகி வருகிறேன். இதில் பட்டியலின மக்கள் முதல் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் என கசல தரப்பு மக்களும் அடங்குவர். படிக்கிற காலத்தில் பார்ப்பன மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் என்ன சாதி என்பதை கண்டுபிடிப்பது கடினம். சாதிகளைக் கடந்து சக மாணவன் என்கிற உணர்வு மட்டுமே நிலவியது. ஆண்டுக் கணக்கில் ஒரே அறையில் தங்கிய நண்பர்கள்கூட என்ன சாதி என்பதை தெரிந்து கொள்ளவில்லை. அவர்களும் காட்டிக்கொள்ளவில்லை. இதுதான் அன்றைய இளைஞர்களின் மனநிலை.

தீண்டாமை என்பது எத்துனை கொடியது என்பது சாதியப் படிநிலையில் தனக்கு மேலே உள்ள சாதிக்காரர்களால் ஒருமுறையேனும் அனுபவப்பட்டவர்கள் மறக்க முடியாது. சாதியப் படிநிலையில் ஆகக் கடைகோடியாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே தீண்டாமைக் கொடுமையை அதிகம் அனுபவிப்பவர்கள்.
கிராமங்களில் பல்வேறு சாதிப் பிரிவு மக்களுக்கிடையில் கூலி விவசாயி, சிறு விவசாயி, பணக்கார விவசாயி என்கிற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்தாக வேண்டும். ஒருவரின் உழைப்பு இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது. சாதியால் வேறுபட்டாலும் உழைப்பால் ஒன்றிணைவதால் மனதில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இன்றி 'அண்ணன்-தம்பி, மாமன்-மச்சான்களாகப்' பழகுகிறார்கள்.  கிராமப்புற தீண்டாமை என்பது தனிப்பட்ட நபர்களின் எண்ணத்தினால் கடைபிடிக்கப்படுவதல்ல. மாறாக கிராமப்புற தீண்டாமை என்பது தான் சார்ந்த சாதிய சமூகத்திற்குப் பயந்து கடைபிடிக்கப்படும் ஒருவித 'சமூக ஒழுங்கு'. தனிநபர்கள் மனம் மாறினாலும் சமூகக் கட்டமைப்பை மீறி அவர்களால் நடந்து கொள்ள முடியாது. கோவில் திருவிழாக்கள் மற்றும் காதல் போன்ற விவகாரங்கள் தோன்றும் போது உயர் சாதி பணக்காரர்களாலும், நாட்டாமைகளாலும்தான் தங்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் தேவைகளுக்காக பெரும்பாலான சாதிக்கலவரங்கள் கிராமப்புறங்களில் உருவாக்கப்படுகின்றன.

திருச்சி உறையூரில் குழுமாயி-குழுந்தலாயி அம்மன் திருவிழா மிகவும் பிரபலம். அறிவியல் வளர்ந்தாலும் கிராமங்கள் மாநகரங்களாக வளர்ச்சி பெற்றாலும், இதுபோன்னற திருவிழாக்களின் போது அவை குக்கிராமங்களாக மாறிவிடுவதும், மக்கள் காட்டுமிராண்டிக் காலத்திற்குத் தங்களை ஆளாக்கிக் கொள்வதையும் காணமுடியும். ஆடுகளின் கழுத்தை அறுத்து அதிலிருந்து கொட்டும் இரத்தத்தை சளைக்காமல் குடித்து பிரமிப்பூட்டும் நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.  இரத்தம் குடிப்பதில் மட்டுமல்ல சாதிய ஒடுக்குமுறையிலும் தாங்கள் காட்டுமிராண்டிகள்தான் என்பதையும் ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.

தில்லைநகர் ஐந்தாவது குறுக்குத் தெருவிலில் இருக்கிறது குழுமாயி அம்மன் கோவில். அலங்கரிக்கப்ட்ட அம்மன் இங்கிருந்து புறப்பட்டு பறையர்கள் வாழும் காந்திபுரம் வழியாக உறையூர் செட்டித் தெருவை சென்றடையும். பூசைக்காக அம்மன் காந்திபுரத்தில் நிற்காது. படையாச்சி,வெள்ளாளர்,  செட்டியார், முத்தரையர் என பிற உயர்சாதி தெருக்களில் நாள் வாரியாக உலா வரும் அம்மன் அங்குள்ள மக்களுக்கு அலங்காரத்துடன் காட்சியளிப்பாள். உலா முடித்து மீண்டும் அம்மன் தில்லைநகருக்கு வரவேண்டும். அப்படி வரும் போது காந்திபுரத்திற்குள் நுழையும் முன்பு செட்டித் தெருவில் நிறுத்தப்படும். அம்மனின் மொத்த அலங்காரமும் அங்கே உருவப்பட்டு அம்மனமான அம்மன் மட்டுமே காந்திபுரத்திற்குள் நுழையும். உருவப்பட்ட இந்த அம்மனைத்தான் காந்திபுரம் பறையர்கள் பூசை செய்து வழிபட வேண்டும். இரத்தம் குடிக்கும் காட்டுமிராண்டித் தனத்தைவிட இது மிகக் கொடிய காட்டுமிராண்டித்தனம்.

இக்கொடுமையை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திபுரம் மக்கள் ம.க.இ.க தலைமையில் போராடினார்கள். அரசு சார்பில் ஒரு பஞ்சாயத்தும் கூட்டப்பட்டது. அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர். அம்மனின் அலங்காரத்தை கலைக்காமல் அப்படியே அனுப்பி வையுங்கள் என்பதுதான் காந்திபுரம் மக்களின் கோரிக்கை. காலம் காலமாக உள்ள முறையை மாற்ற முடியாது என பிற உயர் சாதியினர் அனைவரும் ஒரே குரலில் பேசினர். காந்திபுரம் மக்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் கோவில் சாவியை நீந்களே வைத்துக் கொண்டு திருவிழாவையும் நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கு அம்மனும் வேண்டாம்; திருவிழாவும் வேண்டாம் என பிற உயர் சாதியினர் அனைவரும் ஏகக் குரலில்  பேசினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றிணைவதில் மட்டும் பிற சாதிக்காரர்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு.

காந்திபுரம் மட்டுமல்ல விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் கோவிலில் வழிபாட்டு உரிமை கேட்ட போது கோவில் சாவியைக் கொடுத்துவிட்டார்கள் வன்னியர்கள், ரெட்டியார்கள் உள்ளிட்ட பிற உயர் சாதியினர். இன்றைய உத்தபுரங்கள் வரை இதுதான் நிலைமை.

படிக்காதவர்கள்தான் சாதி பார்க்கிறார்கள். படித்தவர்கள் யாரும் சாதி பார்ப்பதில்லை என்கின்றனர் சிலர்.

ஆனால் இன்று...... அரசு அலுவுலகங்களில்... பொதுத்துறை நிறுவனங்களில்.... நகரங்களில்.....

.................தொடரும்

Saturday, 19 March 2011

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!


கழிவறை, மலக்கூடம், மலசலக் கூடம், கழிப்பறை இதைத்தான் 'கக்கூஸ்', சில வேளைகளில் 'கக்கூசு' என விளிக்கிறோம். டச்சுக்காரன் சென்றுவிட்டாலும் அவனது டச்சு மொழியை மட்டும் 
நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது போல. காலனியாதிக்கத்தின் பதிவுகள் சில சமயங்களில் நமது உயிரோடு கலந்து விட்டது என்றால் அது மிகையல்ல.

உயிர் என்றால் என்ன? பலருக்குப் புரியாத புதிராக இன்று வரை சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. மாபெரும் மகான்கள் எல்லாம் மயிர் பிளக்கும் பல விவாதங்களை நடத்தி பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்துள்ளார்கள். ஆனாலும் உயிர் என்றால் என்னவென்று இன்னமும் பலருக்கு விளங்கில்லை. 

மலத்தில் ஒளிந்திருக்கும் 
உயிர்

'கக்கூசில்தான்', அதாவது மலத்தில்தான் நமது உயிர் ஒளிந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? உட்கிரகித்தலும் கழிவுகள் வெளியேற்றமும் நடக்கும் செயல்பாட்டுக்குப் (PROCESS) 
பெயர்தான் உயிர். உணவு உட்கொள்ள முடியவில்லை, தண்ணீர் குடிக்க முடியவில்லை என்கிற உட்கிரகித்தில் நின்று போனாலோ அல்லது சிறுநீர் போகவில்லை, மலம் கழிக்கவில்லை என்கிற கழிவுகள் வெளியேற்றம் நின்று போனாலோ  அப்பொழுது உடலின் செயல்பாடு முடிவுக்கு வருகிறது, அதாவது உடல் உயிரற்றதாகி விடுகிறது; செயலற்றதாகிவிடுகிறது என்று பொருள்.

அதனால்தான் நாம் மருத்துவரைப் பார்க்கும் பொழுது நோய் எதுவாக இருந்தாலும் 'ஒன்னுக்கு நல்லா போவுதா?', 'வெளிக்கு நல்லா போவுதா?', என்று மறக்காமல் கேட்கிறார்கள். 

மலம் வெளியேறுவது ஒரு இயற்கையான நிகழ்வுதான். ஆனால் உயிரின் ஆதாரமாகவும் திகழ்கிறதே! அத்தகைய மலத்தை வெளியேற்றுவதற்கு தடங்கல்கள் ஏற்படுமேயானால் அது உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதாகும். உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதாகக்கூறி, மனித உரிமைகள் சட்டத்தின்கீழ் வழக்கு தொடுப்பதற்கும் வலுவான காரணிகளைக் கொண்டது.

ஒரே ஒரு வேளை மலத்தை அடக்கிப் பாருங்கள், பிறகு தெரியும் மலம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று. பெரும்பாலும் எல்லோருக்கும் இதில் அனுபவம் இருக்கும் என்றே கருதுகிறேன்.

மலம் கழிப்பதில் இத்தனை சிக்கல்களா?:

அன்றாடம் மலம் கழிப்பதில்தான் எத்தனை எத்தனை சிக்கல்கள். வீடற்றவர்களுக்கும், வீடிருந்தும் கக்கூஸ் வசதியியற்றவர்களுக்கும், வீதியோரங்களும் - வாய்க்கா வரப்புகளும் - ஓடைகளும் - ஏரிக்கரைகளும் - முட்புதர்களும் - ஆள் நடமாட்டமில்லாத சந்து, பொந்துகளும்தான் 'கக்கூசுகள்'. வேறென்ன செய்வார்கள்?

'கக்கூஸ்' போவது பெரிதல்ல. கழுவுவதுதான் பெரும் பிரச்சனை. நீரில்லை என்றால் கல்லைக் கொண்டும், கல் கிடைக்கவில்லை என்றால் மண்ணாங்கட்டியைக் கொண்டும், வயல் வரப்பு என்றால் புல்லாலேயே தேய்த்தும், எதுவும் கிடைக்கவில்லை என்றால் காற்றிலே தவழ்ந்து வரும் இத்துப்போன பழைய பேப்பரைக் கொண்டும் துடைத்துக் கொள்ளலாம். ஏதோ தண்ணீர் வசதி இருக்குமானால் ஒரு சொம்பு தண்ணீர் கிடைத்தாலே போதும்.

ஆனால் கழித்த மலம்? ஓடை என்றால் காலாலேயே மண்ணைத் தள்ளி மூடிவிடலாம். நீரோடும் ஓடை, வாய்கால் என்றால் ஓடும் நீரோடு இரண்டறக் கலந்துவிடும். பல் துலக்கி வாய் கொப்பளிப்பவனுக்கும், முங்கி முங்கி குளிப்பவனுக்கும், சமையல் - சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தேய்ப்பவர்களுக்கும் இதெல்லாம் சாதாரணமாகிவிட்டன.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு நண்பரின் திருமணத்திற்குச் சென்ற போது இந்தக் காட்சிகளைக் கண்ட நானும் என்னுடன் வந்த மற்றொரு நண்பரும் பல்லும் துலக்கவில்லை, குளிக்கவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உறவை அறுக்கும் 'கக்கூஸ்': 

உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்று கல்லங் கபடமற்ற மக்களைப் பார்ப்பது மட்டுமல்ல, நெஞ்சையள்ளும் இயற்கை அழகை இரசித்து வரலாம் என புறப்பட்டு கிராமங்களுக்குச் சென்றால்... அடடா.... பேருந்திலிருந்து இறங்கி கிராமத்தை இணைக்கும் சாலையில் நடந்து செல்லும் போது... சாலையின் இரு பக்கங்களிலும் மலக்குவியல்கள் உங்களை 'நறுமணத்தோடு' வரவேற்கும். அதுவே காலை நேரமானால் சிறுவர்கள் நெளிவதைப் பார்க்க வேண்டுமே... என்ன செய்வார்கள் பாவம்?. அந்தச்சூழலில் நெளிவதைத் தவிர வேறு வழியில்லை. பெரியவர்கள் என்றால் சற்றே அடக்கிக் கொண்டு அதக்கி அதக்கியாவது வாய்கா வரப்பைத் தேடிச் சென்றுவிடலாம். சிறுவர்களால் முடியாதே. லேசான மழை பெய்திருந்தால் போதும். காய்ந்து போன மலம் ஈரம்பட்டதால் வரும் வாடை இருக்கிறதே... ஜென்மத்திற்கும் உங்கள் 'மெமரியிலிந்து டெலிட்' செய்ய முடியாது. வேலை முடிந்து ஊரின் மற்றொரு முனையின் வழியாகச் சாலையைக் கடந்து சென்றாலும், உங்களை வழியனுப்பவதற்கும் இதே மரியாதைதான். இரு சக்கர வாகனத்தில் வேகமாய்ச் சென்றாலும் வாடையின் வேகத்தை வண்டியின் வேகத்தால் தடுத்துவிடவா முடியும்?

கிராமங்களை விட்டு நகரங்களில் குடியேறிய பிறகு, மனைவி குழந்தைகளோடு மிக நெருங்கிய உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துச்சென்று வருவதற்கே படாதபாடு பட வேண்டும். கிராமத்து விசேசங்களுக்கு அழைத்தால் வர மறுக்கிறார்கள். ”வந்தா எங்கே வெளிக்கு போரது?”, ”வயல் வரப்புக்கும் முள்ளுக் காட்டுக்குமா?” ”நம்மால முடியாதுப்பா. நீ மட்டும் போயிட்டு வா”. இதுதானே மனைவி மக்களின் கேள்வியும் பதிலுமாக இருக்கிறது. தனியாக ஊருக்குச் சென்றால் "எங்கே, பசங்கள கூட்டிட்டு வரலயா?" "கல்யாணம் ஆனதுக்கப்பறம் உன் வீட்டுக்காரிய பாக்கலயப்பா, கூட்டிட்டு வரக்கூடாதா?" இது கிராமத்து பெரிசுகளின் ஆசை. எப்படிச் சொல்வது 'கக்கூசுக்காகத்தான்' அவர்கள் வரவில்லை என்று. எப்படியோ சமாளிக்க வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளில் இந்த 'கக்கூஸ்' பிரச்சனையால் உறவிழந்து நிற்க வேண்டியிருக்கிறது. 

இரயில் பாதைகளின் ஓரங்களில்:

சென்னை போன்ற நகரங்களில் இரயில் பாதைகளின் ஓரங்களில் பெண்கள் படும் 'அவஸ்தை'... எழுதவே எனக்குக் கூசுகிறது. அடுத்த ரயில் எப்பொழுது வரும் என்று தெரியாது. அதற்குள் எல்லாம் வெளியே வந்து விட்டால் ஏகப் பெருமூச்சு. இல்லை என்றால் ...இரயில் வரும் வேகத்தைவிட இரு மடங்கு வேகத்தில் எழுந்து கொள்ள வேண்டும். இந்தப் பீதியில் மலம் கழித்தால் அடுத்த ரயில் வருவதற்குள் மீதியும் வருமா? மலம் வெளியேறுவது குடலின் 'பெரிஸ்டாலிக் ஆக்சன்' (PERISTOLIC ACTION) என்று கொல்லக்கூடிய ஒருவித நெகிழ்வுத் தன்மையால்தான். வந்த மலத்தை ரெயில் வருகிறதே என அடிக்கடி உள்ளிழுத்துக் கொண்டால் குடலின் நெகிழ்வுத் தன்மை எதிர்த் திசையில் செயல்பட்டு நிரந்தர மலச்சிக்கலுக்கும், மூலநோய்க்கும் அல்லவா வழி வகுக்கும்!


வேலிகாத்தான் முட்புதர்களில்:

திருச்சி போன்ற பெரு நகரமாக இருந்தாலும், சாயல்குடி போன்ற சற்றே பெரிய கிராமமாக இருந்தாலும் ஆங்காங்கே இருக்கும் வேலிகாத்தான் முட்புதர்களே மக்களின் 'கக்கூசுகள்'. அதிலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஏல்லைக்கோடு வேறு. மிக எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். இல்லை என்றால் மானம் கப்பலேறி விடும். அதே நேரத்தில் கையில் ஒரு வாளெடுத்துச் செல்ல வேண்டும். அதாங்க நீளமா ஒரு குச்சி. வாளைச் சுழற்றிக் கொண்டேதான் நீங்கள் மலம் கழிக்க வேண்டும். இல்லை என்றால் மலத்தைக் கவ்வ வரும் பன்றிகளின் கூட்டம் குண்டியைக் குதறிவிடும். நினைத்தாலே குலை நடுங்குகிறது. மலத்தைக் கழிப்பதா அல்லது பன்றிகளை துரத்துவதா? குச்சி எடுக்க மறந்துவிட்டால், பன்றிகளைத் துரத்தக் கல்லைத் தேடினால் ஒரு கல்லையும் தொடமுடியாது. எல்லாம் குண்டி துடைத்து காய்ந்து கிடக்கும். எப்படித் தொடுவது? 

மலம் கழிக்கத்தான் எத்தனை எத்தனை அவஸ்தைகள். மலம் கழிக்கும் போது ஒரே இடத்தில் இருக்க முடியாதல்லவா? சற்று நகர்ந்தாலே போதும். பன்றிகளுக்கிடையில் நடக்கும் போட்டா போட்டியை பார்க்க வேண்டுமே. 'நேஷனல் ஜியாகரபிக் சேனல்காரனுக்கு' இதெல்லாம் தெரிந்தால் ஒரு பெரிய 'எபிசோடே' கிடைக்கும். பன்றிகள் இல்லை என்றால் நகரங்கள் நாறிவிடும்.
வேலிகாத்தான் முட்புதர்களில், நரகலை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் பன்றிகள் படையெடுக்கும் காட்சிகளின் 'ட்ரெயிலர்' ஜேஜே கூட்டரங்கில்  தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் காட்சி களேபரமானது. பெரிய பன்றி, மற்ற பன்றிகளை – அவை கூட்டமாக வந்தாலும் சீறிப்பாய்ந்து மொத்த மலத்தையும் கப்பெனக் கவ்வும் காட்சி இருக்கிறதே… அடடா … அதுதான் நேற்று நடந்தது. ஆனாலும் சிறிய பன்றிகள் அதற்காக ஓடிவிடவில்லை. பம்மி…பம்மி சற்றே மெல்ல அருகில் சென்று பெரிய பன்றி கவ்வியபோது சிதறிய எச்சங்களை நக்கி எடுத்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டே திரும்பும் காட்சி இருக்கிறதே…..அடடா…. அதுதான் இன்று நடந்தது.
நரகலில் நகரங்கள்:
நகரவாசிகள் காலை எழுந்தவுடன் வாசல்கூட்ட வெளியே வந்தால் மலம் குவியல் குவியலாய் மலர்ச்சியோடு வரவேற்கும். நீங்கள் எழுவதற்கு முன்பாகவே சிறுவர்கள்....யார் என்று தெரியாது...உங்கள் வீட்டு வாசலின் ஓரம் சாக்கடையில் மலம் கழித்துவிட்டுச் சென்றிருப்பார்கள். பாவம் சிறுவர்களுக்கு சாக்கடையின் நடுவே மலத்தைக்கழிக்கும் பயிற்சி போதாது என்பதால் பாதி கரைகளிலேயே குவிந்த விடும். பன்றிகள் இல்லாத தெரு என்றால் நீங்கள் வாசலோடு சேர்த்து மலத்தையும்தான் கழுவவேணடும். காத்தாட வாசலில் உட்கார முடியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மழைக்காலம் என்றால், அதுவும் சற்றே பலமான மழை என்றால், மழை நீர் முழுவதையும் சாக்கடை கொள்ளாத போது, சாக்கடையில் புரளும் மலத்தை அள்ளிக் கொண்டும், உருட்டிக் கொண்டும், தாழ்வான வீட்டு வாசல்களில் மலத்தை ஒதுக்கிவிட்டு மழை நீர் சீறிப்பாயும் காட்சியைப் பார்க்க வேண்டுமே. நீர் வடிந்த பிறகு தெருவெங்கும் கட்டிக் கட்டியாக ஒதுங்கியிருக்கும் மலத்தின் மீதுதான் உங்கள் வாகனங்கள் பயணிக்க வேண்டும். பாதங்கள் பதிய வேண்டும்.


எங்கிருந்து திடீரென மலக்குவியல்கள் வந்தன என ஐயம் இருக்கா?. குறைந்த வருவாயில் வாழும் பலரால் 'செப்டிக் டேங்க்' வசதியுடன் வீடு கட்ட முடியாது. வீட்டின் ஓரத்தில் திறந்த வெளிக் 'கக்கூசைக்' கட்டி, அதைக் கழிவு நீர்க் கால்வாயோடு இணைத்து விடுவார்கள். இருக்கிற தண்ணீர் வசதிக்கு எங்கே செல்லும் மலக் கழிவுகள். சாக்கடையும் திறந்த வெளிதானே? அரைகுறையாக கழுவப்பட்ட நிலையில் மல மிச்சத்தில் ரீங்காரமிட்ட ஈக்கள் பிற்பாடு உங்களது உணவுப் பண்டங்களை மொய்க்கும் போது ... என்ன குமட்டுகிறதோ.. அதுதானப்பா நம் மக்களின் அன்றாட வாழ்க்கை. இவ்வளவு சகிப்புத் தன்மைகளோடு வாழப் பழகிக் கொண்ட நம் மக்களை போராட வைப்பது அவ்வளவு எளிதானதா என்ன?
நகராட்சிக் கழிப்பிடங்கள் இல்லையா எனக் கேட்பது எனக்குப் புரிகிறது
நகராட்சிக் கழிப்பிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உள்ளே செல்வதற்கே நீங்கள் நடை பயில வேண்டும். ஆங்காங்கே குவிந்து கிடக்கும் மலத்தில் கால் வைக்காமல், வழிந்தோடும் மலம் -மூத்திரத்தில் வழுக்கி விழாமல் செல்வது அவ்வளவு எளிதானதா என்ன? சில நேரங்களில் செல்லும் பாதையில் கால்வைக்கக்கூட முடியாது. மூடியிருக்கும் 'செப்டிக் டேங்க்' மீது போடப்பட்டுள்ள 'சிமெண்ட் சிலாப்' வழியாகச் செல்ல முயன்றால் அரைகுறையாக உடைந்து ஆ....வென வாயைப் பிளந்து நிற்கும் அடுத்த 'சிலாப்பின்' ஓட்டையினூடே பூகம்பப் பேரழிவின் சகதி போல குவிந்து கிடக்கும் மலக் கழிவைப் பாக்காமல் செல்ல முயன்றால், உடைந்திருக்கும் அடுத்த 'சிலாப்' ஓட்டைக்குள் கால் மாட்டிக் கொண்டு மல 'அபிஷேகம் ஜோராய்' நடக்கும். இதையெல்லாம் மீறி 'கக்கூசுக்குள்' நுழைந்து விட்டாலும் உங்களது மானத்தைக் கப்பலேற்ற வேண்டியதுதான். கதவு இருக்காதே.. வேறென்ன செய்ய முடியும்? கதவு இல்லை என்று திரும்பவா முடியும்? கால் வைக்கவே இடமில்லை. கையில் உள்ள சொம்பை எங்கே வைப்பது? அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும். வெளிக்குப் போகத்தான் எத்தனை சூரத்தனங்கள்.

இந்தக் கன்றாவிகளைக் கண்டு மனுமேல் மனுக் கொடுத்தும் செவி மடுக்காத நகராட்சியை உலுக்கியது நகராட்சி வாசலில் மலம் கழிக்கும் போராட்டம். இது திருச்சி தில்லை நகர், காந்திபுரம் 'கக்கூசுக்காக' சில ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க வினர் நடத்திய போராட்டம். மலம் கழிக்க அணிதிரள்வதற்கு முன்பாகவே ஒரு பெரும் படை நகராட்சி அலுவலகத்திலிருந்து பறந்து வந்தது. வந்த வேகத்தில் அலசி அள்ளிச் சென்றது மலக்குவியல்களை. அதிரடிப் போராட்டங்களை அன்றாடமா நடத்த முடியும்?

ஊர்ப் பயணம் மேற்கோள்ளும் போது, இந்தக் கடனைக் கழிக்க நாம் படும் பாடு இருக்கிறதே. எழுதி மாளாது. உலக வங்கிக் கடனைக்கூட அடைத்து விடலாம். ஆனால் இந்தக் கடனை மட்டும் கழிக்க முடியாது. அவ்வளவு 'கலிஜாக' இருக்கும் நமது பேருந்து நிலைய - ரயில் நிலைய கழிப்பிடங்கள். இருக்கிற கடன் பத்தாது என்று இந்தக் கடனைக் கழிக்க காசு வேறு கொடுக் வேண்டும்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை செல்ல அருகில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். திடீர் என வயித்தக் கலக்கிவிட்டது. 'கக்கூசைத்' தேடினேன். எதுவும் இல்லை. பக்கத்தில் முள் காடு தெரிந்தது. கடனை முடித்தேன் தண்ணீர் இல்லை. என்ன செய்வது. அருகில் இருந்த கல்தான் உதவியது. 

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு:

ஆக இதுதான் இந்திய மக்களின் ஆகப் பெரும்பாலோரின் 'கக்கூஸ்' பிரச்சனை. இதைத் தீர்ப்பதற்குத்தான் எத்தனை எத்தனைத் திட்டங்கள். கிராப்புறங்கள் உள்ளிட்டு பொது சுகாதாரக் கழிப்பிடங்கள், வீட்டுக்கு வீடு அரசின் செலவில் 'கக்கூஸ்'வசதிகள் என நமது அரசுகள் மக்களை திக்கு முக்காட வைத்துவிட்டன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல் உபாதை தொடர்பாக நாட்டு வைத்தியரைப் பார்க்க புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்திற்குத் தோழர் ஒருவருடன் சென்றிருந்தேன். வீடுகளே அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தெரிந்தன. அரசின் பொதுக் கழிப்பிடக் கட்டடம் எங்களைப் பார்த்து சிரித்தது. மூடித்தான் கிடந்தது. யார் அதைப் போய்த் திறப்பார்கள் அந்தக் கிராமத்தில்?. 

சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு வீடு அனைவருக்கும் இலவச 'கக்கூஸ் 'அமைத்துக் கொடுத்திருந்தது அரசு. அப்பொழுது ஒரு முறை எனது தங்கை வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனக்கோ மூட்டு வலி. ஏரிக்கரைக்கும், வயல் வரப்புக்கும் போக முடியாது. சரி. அரசுதான் 'கக்கூஸ்'கட்டிக் கொடுத்திருக்கிறதே. நமக்கென்ன கவலை என வீட்டின் பின்புறம் சென்றேன். கால் வைத்து உட்காரும் 'பேஸ்' மட்டும்தான் தெரிந்தது. மீதி மண்ணால் மூடப்பட்டிருந்தது. என்னவென்று கேட்டேன். ”அத மட்டும்தான் வைச்சாங்க. அதல போய் யார் போக முடியும். கரும்புத் தோட்டத்துக்குள்ள போய் வா” என்றார் எனது தங்கை. இதுதான் அனைவருக்கும் இலவசமாக அரசே செய்த 'கக்கூஸ்' வசதி. இப்படி திட்டங்களோ ஏராளம். இத்திட்டங்களால் நமது வயிற்றைக் காலி செய்ய, அரசியல்வாதிகளும் - அதிகாரிகளும் அவர்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டார்கள்.   

நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களுக்கு அறைக்கு ஒரு 'கக்கூஸ்', சொந்தக் காரர்கள் வந்தால் அவர்களுக்கென தனி 'கக்கூஸ்', அதிலே 'பாம்பே மாடல்' 'வெஸ்ட்டர்ன் மாடல்கள்'. தண்ணீா் இல்லை என்றாலும் பரவாயில்லை துடைத்துக் கொள்ள 'பேப்பர்' உருளை .... என்ன கிராமத்தான் கல்லில் துடைத்துக் கொள்கிறான்.  நகரத்தான் 'பேப்பரில்' துடைத்துக் கொள்கிறான்.. நாகரிக வளர்ச்சி...வேறொன்றுமில்லை. 'ஷவர் பாத்' போல 'ஸ்ப்பிரேயர் ' கொண்டு  அலச தனி 'பிளக்சிபிள் ஹோஸ்'. இப்ப அதுகூடத் தேவையில்லை. 'வெஸ்டர்ன் மாடலில்' உட்கார்ந்தால் போதும் அடியிலிந்து தண்ணீர் பீச்சியடித்து அதுவே கழுவி விடும். கைக்கு வேலையில்லை. இப்படி வசதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.எத்தைனை பேருக்கு? வசதியற்றவர்களுக்கு இதற்கெல்லாம் வாய்ப்பில்லையே!

ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் தேர்வு நிலைப் பேரூராட்சிகளாகவும், தேர்வுநிலைப் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் ஒதுங்க ஒரு இடம் இல்லையே?

இதோ! தேர்தல் வந்து விட்டது. மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுத்துவிட்டன. எதற்கும் எச்சரிக்கை! கவ்வப் போவது மலத்தை மட்டமல்ல,  நமது வாழ்வையும் சேர்த்துதான்.

ஊரான்