Tuesday, 5 July 2011

வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா?

நம்மை சுருக்கெனக் கடிக்கும் எறும்பை நசுக்கிக் கொல்கிறோம்; மிதிக்க வரும் யானையை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறோம். நமது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அனைத்து விலங்குகளையும் நமது பலத்தால் கொன்றுவிடுகிறோம். இல்லை என்றால் விலங்குகளால் நாம் கொல்லப் படுவோம்.பலமானவைகள் மட்டுமே உயிர் வாழ முடியும். பலவீனமானவைகள் அனைத்தும் அழிந்து போகும். இது இயற்கை விதி.

விலங்குகளைப் பொருத்தவரை உயிர் வாழ்வதற்காகப் போராடுவதைத் தவிர வேறு நோக்கங்கள் கிடையாது. உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் விலங்குகளுக்கு உணவு தேவை. தன்னைவிட பலமான எதிரி விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும், இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளவும் பாதுகாப்பான வசிப்பிடம் தேவை. சில விலங்குகள் தாங்களாகவே தங்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்கிக் கொள்கின்றன. ஒரு சில விலங்குகள் பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்து கொள்கின்றன. ஆக விலங்குகள் அனைத்தும் உயிர் வாழ்வதற்காக அன்றாடம் போராடித்தான் ஆக வேண்டும். அவைகளுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். மனிதனுக்கும்தான். அதனால்தான் போராடுதல் (struggle) விலங்குகளின் தலையாயப் பொதுப் பண்பு என பிரபல ஹோமியோபதி மருத்துவர் இராஜன் சங்கரன் வரையறுக்கிறார்.  

ஆனால் மனிதன் என்கிற விலங்கு மட்டும் உயிர் வாழ்வதற்காக மட்டும் போராடுவதில்லை. அதற்கும் மேலே ஏறாளமான ஆசாபாசங்களை வளர்த்துக் கொண்டு அவைகளுக்குாகப் போராடுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விலங்குகளுக்கு, உணவும் பாதுகாப்பான இடமும் இருந்துவிட்டால் வாழ்க்கை வளமானதுதான். ஆனால் மனிதனுக்கோ தேவைகள் ஏறாளம். எவ்வளவு போராடினாலும் பலருக்கு வாழ்க்கை வளமாவதில்லை. எனவே மேலும் மேலும் போராட்டத்தை தீவிரப் படுத்துகிறான். இன்றைய உலகமயச் சூழலில் தேவைகள் அதிகரித்துள்ள அதே வேளையில் அவைகளைப் பெருவதற்கான போராட்டங்களும் மூர்க்கத் தனமாக மாறி வருகின்றன. அதனால்தான் கொலை, கொள்ளை, வரதட்சணை போன்ற கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிறார்கள். இந்த முயற்சியேகூட போராட்டத்தின் ஒரு வடிவம்தானே. என்னதான் போராடினாலும் வழுக்கி விழுந்து எழ முடியாதவர்களே ஏராளம். எழ முயல வேண்டுமானால் மீண்டும் போராடித்தான் ஆகவேண்டும்.

போராடிப் போராடி அலுத்துப் போன மக்களுக்கு வாழ்க்கை என்றுமே பூந்தோட்டமாக இருந்ததில்லை. மக்களின் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற விவேகானந்தரைப் போல ஆன்மீகத்தை நாடுவதுதான் ஒரே வழி என சமீபத்தில் ஒரு பட்டி மண்டபத்தில் நடுவராக வீற்றிருந்த சுகி.சிவம் தீர்ப்பு எழுதி முடித்து வைத்தார். பட்டி மண்டபத் தீர்ப்புகள் மேல் முறையீடுகள் ஏதும் இல்லாத இறுதித் தீர்ப்பாயிற்றே! யார் கேள்வி கேட்க முடியும்?  

அரங்கில் குழுமியிருந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்தான். இந்தியா ஒன்றும் நாத்திக நாடல்லவே. ஆன்றாடம் இறைவனை உள்ளன்போடு வழிபட்டு தங்கள் துன்பம் நீங்காதா என முறையிடும் மக்கள் நிறைந்த ஆன்மீக நாடுதானே இந்தியா. ஏற்கனவே ஆன்மீகத்தில் ஈடுபட்டும் இவர்களின் வாழ்க்கை ஒன்றும் பூந்தோட்டமாக மாறவில்லையே!

சுகி.சிவம் சொல்கின்ற ஆன்மீகம் விவேகானந்தரின் ஆன்மீகம் போல என்றால் அனைவரும் காவித் துண்டை போர்த்திக் கொண்டு ஆன்மீகம் வளர்க்க கிளம்பிவிட்டால் பிறகு யார் பயிர் வளர்ப்பார்கள்? யார் சோறு போடுவார்கள்? யார் ரோடு போடுவார்கள்? ஒரு வேளை காற்றை சுவாசித்து உயிர் வாழும் கலையைக் கற்றுக் கொடுப்பார்களோ! இப்பொழுதே அதைக் கற்றுக் கொடுத்தால் பட்டினியால் மாண்டு போகும் ஒரிசாவின் ஏழைகளைக் காப்பாற்றலாமே!

வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றியமைத்துக் கொண்டவர் விவேகானந்தராம்.  உண்மையான ஆன்மீகவாதியாக, அதாவது சாமியாராக மாறிவிட்டால் வாழ்க்கை எப்பொழுதுமே பூந்தோட்டமாம்.

பொதுவாக சாமியார்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆகவே குடும்பம் இல்லை. கணவன் மனைவிக்கு இடையிலான போராட்டம் இல்லை. பிள்ளை குட்டிகள் இல்லை என்பதால் மழலையர் பள்ளிக்குப் படையெடுக்கும் வேலை இல்லை. உயர் கல்வி பயில சேர்த்த சொத்தை எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டியதில்லை. பெண் பிள்ளைகள் இல்லை என்பதால் மூட்டை மூட்டையாக வரதட்சணையும் சீர் செனத்தையும் சேகரிக்க வேண்டியதில்லை.

விண்ணை முட்டும் விலைவாசியை சமாளிக்க வேண்டியதில்லை. ஏன் என்றால் செல்லும் இடமெல்லாம் வாய் ருசிக்க ஓசியிலேயே வயிறு முட்டத் தின்றுவிடுவதால் உணவுக்கான போராட்டம் இல்லை. நியாய விலைக் கடைக்கும் மளிகை, காய்கறி கடைகளுக்கும் மஞ்சள் பையை எடுத்துச் சென்று கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. பால் விலை ஏறினால் இவர்கள் ஏன் போராடப் போகிறார்கள்? பாலைத்தான் சுண்டக் காயச்சி பாதாம் கலந்து கொடுத்து விடுகிறார்களே! பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏறினால் இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? 

பேருந்து நிலையத்துக்கும், இரயிலடிக்கும் ஓட வேண்டிய அவசியமில்லை. போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் 'சொய்ங்' என விண்ணில் பறந்து நகரங்களைக் கடப்பவர்கள், சாலைப் புழுதியில் சிக்காமல் குளு குளு மகிழுந்தில் உடல் கலைப்பின்றி பயணிப்பவர்கள்.

வரவு செலவு திட்டம் போட்டா இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்? சம்பளக்காரன் மாதாந்திர வரவு செலவு கணக்குப் போட வேண்டும். தவறினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். சம்பளக்காரன் நடுத் தெருவுக்கு வந்தால் சமூகம் ஏளனமாய்ப் பார்க்கும். ஆனால் சாமியார்கள் நடுத் தெருவுக்கு வந்தால் பண மழை கொட்டும். 

சாலை வசதி, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைவகள் கூட கிடைக்காததால் மக்கள் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடைப்பதில்லை. ஆன்மீகத்தை நாடிவிட்டால் இவை எல்லாம் கிடைத்து விடுமா? வாழ்க்கை பூந்தோட்டமாக மாறிவிடுமா? அவ்வளவு ஏன்? குறைந்த பட்சம் கொசுத் தொல்லையிலிருந்தாவது மக்களை விடுவிக்க முடியுமா? இதைப் பற்றி கேள்வி எழுப்பினால் இதற்கும் ஒரு முல்லா கதையை கை வசம் வைத்திருப்பார்கள். கதை சொன்னால்தான் நம்மாளு கவுந்து விடுகிறானே!

சொற்பொழிகளும் ஆசிர்வாதங்களும்தான் இவர்களின் மூலதனம். இம்மூலதனம் 'ரெக்கரிங் டெபாசிட்' போல குட்டி போடுவதால் இவர்களின்  வாழ்க்கை எப்பொழுதும் பூந்தோட்டம்தான்.'ஷேர் மார்க்கெட்டில்' பணம் போட்டவன்கூட திவாலாகிவிடுகிறான். ஆனால் என்றுமே திவாலாகாத தொழில் ஆன்மீகம் ஒன்றுதான். ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்தை போதிப்பவர்கள் சொகுசாய் வாழ்கிறார்கள். இல்லாத ஒன்றை நோக்கி மக்களை இழுத்துச் செல்வதுதான் ஆன்மீகம். பட்டிமண்டபங்கள் நடத்தி, சொற்பொழிவுகளைப் பொழிந்து ஆன்மீகத்திற்கு புத்துயிரூட்ட சுகி.சிவம் போன்ற நவீன ஆன்மீகவாதிகள் சுற்றுலா செல்கிறார்கள்.

ஆன்மீகத்தை வளர்க்கவே விவேகானந்தர் அன்று ஊர் ஊராய் பிரசங்கம் செய்தார். அதே வேலையை இன்று சுகி.சிவம் போன்ற ஆன்மீக விற்பனையாளர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். இன்றைய ஆன்மீகம் மிகவும் 'மாடர்னானது'; ரொம்பவும் 'காஸ்ட்லியானது'. ஆயிரங்களை காலில் வைத்தால்தான் சாமியார்கள் கையை உயர்த்துவார்கள்;சுகி.சிவம் போன்றவர்கள் 'மைக்கை' பிடிப்பார்கள்.  ஆன்மீகமே சும்மா கிடைக்காத போது வாழ்க்கை மட்டும் சும்மா கிடைத்துவிடுமா?

சாமான்யனுக்கு வாழ்க்கை என்பது எப்பொழுதும் போராட்டம்தான். 

Saturday, 2 July 2011

பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?

விஜய் தொலைக்காட்சியில் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களை மையமாக வைத்து கோபிநாத்தின் “நீயா நானா?” நிகழ்ச்சி வாரம் தோறும் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் இவர்கள்தான் இந்தியாவோ எனக் கேட்கத் தோன்றும் அளவுக்கு நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களின் அன்றாட ஆசாபாசங்கள் அனைத்தையும் அக்கு வேறு ஆணிவேராக அலசி எடுத்து வருகிறார் கோபிநாத். மயிர் வரை நீண்டுவிட்ட இந்த மயிர்பிளக்கும் வாதம் இன்னும் எத்தனை நாளுக்குத்தான் எனத் தெரியவில்லை.

நிகழ்சியில் பங்கேற்போருக்கு பெரும்பாலும் தமிழில் பேச வராது. தங்களின் 'வளமான வாழ்க்கைக்கு' உதவாது என்பதால் தமிழை இரண்டாம் மொழியாகக்கூட படிக்க விரும்பாத இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தாய்த் தமிழையே வேண்டாம் என்பவர்கள் பெற்ற தாயை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களுக்காகத்தான் முதியோர் இல்லங்கள் திறந்து கிடக்கின்றனவே! இவர்களின் பிரச்சனைகள்தான் கோபிநாத்துக்கு மிகவும் பிடிக்கும் போலும்!

உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, வசிக்க இடமின்றி வாடும் பெரும்பான்மையான இந்திய உழைப்பாளிகளின் பிரச்சனையை அலசினால் அதை யார் பார்ப்பார்கள்? பசிக்காக அல்ல-ருசிக்காக உண்பவர்கள்;  தேவைக்காக அல்ல-பகட்டைக் காட்ட மானம் போனாலும் கவலையில்லை என 'பேஷனுக்காக' ஆடை அணிபவர்கள்;  வசிப்பதற்காக அல்ல-கனவுலகில் மிதப்பதற்காக வாழ்விடங்களைத் தேடுபவர்கள்; இவர்கள்தான் ”நீயா நானா!” நிகழ்ச்சியின் மாந்தர்கள்.

இவர்களை ஒன்று கூட்டி கால் நகம் முதல் உச்சஞ் தலை மயிர் வரை அலசி ஆராய்வதில் இவருக்கு நிகர் இவரே. இவர் இந்த வாரம் (26.06.2011) எடுத்துக்கொண்ட தலைப்பு "பெண் மனம் பெரிதும் விரும்புவது தன் அழகையா? அறிவையா?"

இங்கே பெண் மனம் என்பது ஏழை எளிய பெண்களுக்கானதல்ல. இவர்களுக்கு ஏது அழகும் அறிவும் என ஒதுக்கிவிட்டாரோ! அதனால்தான் மருந்துக்குக்கூட ஏழை எளிய பெண்கள் யாரையும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை போலும்!

அறிவின் கர்வத்தில் உள்ளவர்கள் ஒரு அணியாகவும், அழகின் கர்வத்தில் இருப்பவர்கள் மற்றொரு அணியாகவும் அறிவையும் அழகையும் அலசி எடுத்தார்கள். அழகு முக்கியமல்ல என வாதாடியவர்கள் அறிவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைவிட அழகுக்கே முக்கியத்துவம் கொடுத்து அலங்காரத்தோடு வந்திருந்தார்கள்.

இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய 'லேடீஸ் பேக்' இல்லாமல் வெளியே செல்லமாட்டார்கள். பிறகெதற்கு இந்த மயிர் பிளக்கும் வாதம்? நீயா நானாவின் 'ரேட்டிங்' ஏற வேண்டாமா? 


ஆண்களைக் கவரும் கவரிமான்

பொதுவாக அழகியல் குறித்த அடிப்படையான புரிதலுக்குப் பதிலாக, அழகு இரசிப்பதற்கானது, நுகர்வதற்கானது என்கிற கருத்தாக்கமே நிலவுகிறது. பெண்ணானவள் பிறரை குறிப்பாக ஆண்களைக் கவரும் கவரிமான் என்பதைத்தாண்டி இவர்களின் அழகியல் கண்ணோட்டம் செல்வதில்லை. வாடிக்கையாளர்களைக் கவர ஒரு விலைமாது செய்யும் அலங்காரத்திற்கும், ஒரு ஆண் தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் தன்னை அழகுப்படுத்திக் கொள்ளும் அலங்காரத்திற்கும் சாரம்சத்தில் வேறுபாடு கிடையாது. அழகின் கர்வத்தில் இருந்த ஒரு சிலர் இதை பகிரங்கமாகவே பகிர்ந்து கொண்டார்கள். உணர்ந்தோ உணராமலோ பெண்கள் இத்தகைய மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே இன்றைய எதார்த்தம்.

பிறர் புகழ வேண்டும்,  பாராட்ட வேணடும் என்கிற ஏக்கமே இவர்களை இத்தகைய நிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்த ஏக்கம் (longing for opinion of others) மனதளவில் ஒரு நோயக்குறி என்பதை ஹோமியோபதி மருத்துவம் தெளிவுபடுத்துகிறது. உருவ அழகுக்கு முக்கியத்துவம் தரும் அனைவருக்குமே-ஆண்கள் உட்பட-இது பொருந்தும்.

சாமான்யப் பெண்கள் யாரும் அழகுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இதைத்தான் “கிராமங்களில் யாரும் அழகைத் தூக்கி சுமப்பதில்லை.” என சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எழுத்தாளர் சந்திரா முன்வைத்தார்.

முழங்காலுக்கு மேல் புடவையைத் தூக்கிச் செருகி நாத்து நடும் பெண்கள்; வயல்களில் அவர்கள் நேர்த்தியாய் நட்டுள்ள நாத்துகள்; இங்கே அழகென இரசிப்பது அப்பெண்களின் உமைப்பால் உருவான நெல் வயல்களைத்தானே தவிர அவர்களின் முழங்கால்களை அல்ல. ஆனால் இதைக்கூட ஆபாசமாக்கி நாத்து நடும் பெண்களை அசிங்கப் படுத்துபவர்கள் திரைப்படக் கயவர்கள்.

ஒற்றை மயிருக்கு ஒப்பாரி வைக்கும் ஒய்யாரப் பெண்களே! கட்டு தூக்கியதால் ஒட்டுமொத்தக் கூந்தலும் ஒட்டிக் கொண்டு சிக்கெடுக்கும் விவசாயப் பெண்டிரை நீங்கள் கண்டதில்லையோ!

உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை உழைப்பே அவர்களுக்கு அழகு சேர்க்கிறது. உழைக்காதப் பெண்களுக்கோ அவர்களின் கூந்தல் மயிர் ஒன்று உதிர்ந்தாலே அழகும் சேர்ந்தே உதிர்கிறது.  

”அழகாய் இருக்க யாருக்குதான் ஆசை இல்லை?” என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது.  நமது ஆக்கங்களும், சேவையும் பயனுள்ளதாய் இருந்தால் நாம்தான் இவ்வுளகில் அழகானவர்கள். உழைப்பால் உருவாகும் அழகு உலகம் உள்ளவரை போற்றப்படும். உருவத்தால் எழுப்பப்படும் புற அழகு முப்பதுகளிலேயே முடிந்துவிடும்.

இயற்கையான நமது உள்மனது எதை அழகு எனப் பார்க்கிறது? நேர்த்தியாக கட்டப்பட்ட கட்டடங்கள், சீனாவில் உள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம், தாஜ்மகால் உள்ளிட்ட ஏராளமான மனிதனின் படைப்புகளைக் கண்டு வியந்து அவற்றின் அழகை இரசிக்கிறோம். மனித உழைப்பே இத்தகைய அழகுக்கு காரணம் என்பதால்தான் நம்மை அறியாமலேயே “என்னமா அழகா கட்டியிருக்காம் பாரு!” என்கிறோம். நேர்த்தியான மனிதப் படைப்புகள் அனைத்தையும் பற்றி நாம் கொண்டுள்ள மதிப்பீடு இதுதான். இது இயல்பாய் எழுகிற மன உணர்வு. இங்கே நாம் அழகெனப் பார்ப்பது உழைப்பைத்தான்.

உருவத்தால் கவர்ச்சியாய்த் தோன்றாத பலர் அவர்களது சேவை மற்றும் சாதனைகளால் நமக்கு அழகானவர்களாய்த் தோன்றுகிறார்கள். சேவைக்கும் சாதனைகளுக்கும் அடிப்படையாய் இருப்பது உழைப்பு மட்டும்தான். இப்படி இயல்பாய் உழைப்பையே அழகெனப் பார்க்கும் நம் மனம் தோற்றப் பொலிவில் மயங்கலாமா?

கோபிநாத்துகளும் இதைப் புரிந்து கொண்டால் சரி!

தொடர்புடைய பதிவுகள்:
எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!

Wednesday, 22 June 2011

கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா? ........தொடர்ச்சி

முதியோர்கள் மீது....

வரன் பார்க்கும் போதே மாமியார் இல்லாத வீடு அல்லது பையனை நம்பி அவனது அப்பா அம்மா வாழ்தாலும் அவர்கள் தனியாக இருந்தால் நல்லது என கணக்குப் போடும் பெண்வீட்டாரும் இருக்கத்தானே செய்கிறார்கள். முன்கூட்டியே தீர்மானிக்க முடியவில்லை என்றாலும் பிறகு என்ன செய்கிறார்கள்? மாமனாரையும் மாமியாரையும் வீட்டை விட்டு துரத்துவது அல்லது தனிக்குடித்தனம் செல்வது இதில் எது சாத்தியமோ அதற்காக மருமகள்கள் புகுந்த வீட்டில் தொடுக்கும் முதல் யுத்தம் இதுதான். இந்த யுத்தத்திற்கு இடைவிடாது தூபம் போடுவது மருமகளின் தாய்தான். இதில் வெற்றி பெறுவது என்னவோ மருமகள்தான். இந்த வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுவது மருமகள் கொண்டு வந்த நகை, பணம், சொத்து, சீர்-செனத்தைதான்.

மாமனாரும் மாமியாரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள், கனிசமாக 'பென்சன்' வாங்குகிறார்கள் என்றால் வீட்டின் ஒரு ஓரத்தில் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் சம்பாத்தியம் கணவனின் கைக்கு வந்தால் மட்டுமே இந்தச் சலுகை. அதே நேரத்தில் மாமனாருக்கு புதிய வேலைகளும் தீர்மானிக்கப்படும். மளிகைக் கடை, ரேஷன் கடை, காய்கறி மார்க்கெட், கரண்ட் பில், ஃபோன் பில் என வெளிப் பணிகள் அனைத்தும் பி.பி.ஓ (BPO) செய்யப்படும். மாமனாரும் மாமியாரும் 'தண்டச் சோறு' என்றால் வெளிப்பணிகளும் இல்லை, வீட்டில் தங்க இடமும் இல்லை.

மருமகள் கர்ப்பமாகி வளைகாப்பு முடிந்து அம்மா வீட்டிற்குச் சென்று விடுவார். அம்மா வீட்டில்தான் குழந்தை பிறக்கும். மகப்பேறு செலவுகள் அனைத்தையும் இப்போது பெண்வீட்டார்தான் சுமக்க வேண்டும். புதிதாய் குழந்தை பெற்ற தாய்க்கு குழந்தையை பராமரிக்கத் தெரியாதாம். அதனால் அம்மா வீட்டிற்குச் சென்றால் நன்றாக கவனித்துக் கொள்வார்களாம். தனது தாயைப்போல மாமியாரும் குழந்தை பெற்று வளர்த்த அனுபவசாலிதானே. ஏன் மாமியார் பார்த்துக் கொள்ளக்கூடாது? இதற்கு மாமியாரும் தயாரில்லை,  மருமகளும் தயாரில்லை.


குழந்தை பிறந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து மருமகள் புகுந்த வீடு திரும்புவார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள தனது தாயை உடன் அழைத்து வரலாம். ஆனால எத்தனை நாளுக்குத்தான் மகள் வீட்டில் தாயால் இருக்க முடியும்? அவருக்கும் கணவனும் குடும்பமும் உண்டே! புகுந்த வீட்டில் மாமியாரும் மாமனாரும் குறிப்பாக மாமியார் இருந்தால் ஒத்தாசையாக இருக்கும். என்ன செய்ய? அவர்களைத்தான் ஏற்கனவே விரட்டியாச்சே!

இப்பொழுது மருமகளின் பாடு திண்டாட்டம்தான். "ஏங்க மாமாவும் அத்தையும் தனியா எதுக்காக கஷ்டப்படனும். அவங்களும் நம்ம கூடவே இருந்துட்டுப் போவட்டுமே"என கணவனிடம் நைச்சியம் பேசி மாமனாரையும் மாமியாரையும் வரவழைப்பதில் மருமகள் வெண்புறாவாக மாறிவிடுவார். குழந்தை ஆய் போனால் கழுவுவது, பத்து பாத்திரம் தேய்ப்பது என வீட்டு வேலைக்கார ஆயாவுக்கு உரிய உட்பணிகள் அனைத்தும் மாமியாரிடம் ஒப்படைக்கப்படும். மாமனாருக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட வெளிப் பணிகளோடு குழந்தைகளை காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் மாலையில் அழைத்து வருவது என கூடுதலான வெளிப்பணி சேர்க்கப்படும்.

காலம் வெகுவேகமாக உருண்டோடிவிடும். பிள்ளைகள் வளர்ந்து தனியாகப் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள். மாமனார் மாமியார் இருவருக்கும் வயதாகிவிட்டது. ஒதுக்கப்பட்ட உள்பணி மற்றும் வெளிப் பணிகளை அவர்களால் சரிவரச் செய்ய முடிவதில்லை. குறிப்பாக மாமனார் அடிக்கடி நோய்வாய்படுவது அதிகரித்து விட்டது. எப்பொழுதும் இருமலும் காருவதுமாக இருப்பது தொல்லையாக மாறிவிட்டது. குறிப்பாக பிள்ளைகளுக்கு நோய் தொற்றிவிடும்.

நடுத்தர வர்க்கம் என்றால் முதியோர் இல்லத்தில் தள்ளி விடுவதும் ஏழைகளாயிருந்தால் மாட்டுக் கொட்டகையோ அல்லது வீட்டுத் தாழ்வாரமோ ஒதுக்கப்படும். உயிர் மட்டும் ஒட்டியிருப்பதற்குத் தேவையான கூழோ கஞ்சியோ ஊத்தப்படும். அவைகூட அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட டொக்கு விழுந்த ஒரு பாத்திரத்தில் கொட்டப் படும். 'கஞ்சி ஊத்திட்டாங்க போல' என அவர்களே தெரிந்து கொண்டு குடித்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் படுபாவி பட்டினி போட்டே கொன்று விட்டாளே என்ற பழி வந்து விடுமே! காலையிலும் மாலையிலும் கமழும் தேனீர் மற்றும் காஃபியின் மணம் நாசித்துவாரங்களைத் துளைக்கும் போது நாவில் எச்சில் ஊறும். சிறிது நேரத்தில் காற்றில் மிதந்து வந்த மணமும் மறையும்.  நாவில் ஊறிய எச்சிலும் வறண்டு போகும். வாசத்திலேயே தொண்டையை நனைக்கும் முதியோர்கள்தான் எத்தனை பேர்!   

முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பட்டியலிட்டால் வலைப்பூக்கள்கூட கருகிவிடும். இத்தகைய கொடுமைகளுக்கு மருமகள்களே முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

இப்படி மாமியார் மாமனார்கள் ஒருபுறமும், மருமகள்கள் மற்றொரு புறமும் என மாறி மாறி ஒருவரை ஒருவர் துன்புறுத்துகிறார்கள். சொந்த உறவுகளையே துன்புறுத்தும் இவர்களுக்கு சமூகத்தில் நிலவும் பிறரின் துன்ப துயரங்கள் மட்டும் எப்படிப் புரியும்? அதனால்தான் சமூக உணர்வு என்பது இத்தகையோருக்கு சுட்டுப் போட்டாலும் வருவதில்லை.  

மருமகள்களும் முதியோர்களும் துன்புறுத்தப்பட்டு இந்தியாவெங்கும் பிண வாடைதான் வீசுகிறது. இதுதான் இன்றைய இந்தியா.  ஏதோ ஒரு சிலர் மட்டும் இப்படி நடந்து கொண்டால் உபதேசம் செய்து திருத்திவிடலாம். ஆனால் விதிவிலக்காக ஒருசிலரைத் தவிர ஒட்டு மொத்த சமூகமும் இப்படி இருந்தால் எப்படித் திருத்த முடியும்?

இந்து, முஸ்லீம், கிருத்துவ மதத்தினரும், பார்ப்பனர், ரெட்டியார், பிள்ளைமார், கள்ளர், தேவர், மறவர், நாடார், முத்தரையர், செட்டியார், வன்னிய-வெள்ளாள-வேட்டுவ-ஊராளி-
குரும்ப கவுண்டர்கள், நாயுடு, பள்ளர், பறையர், சக்கிலியர், வண்ணார், வாணியர், நாவிதர், செங்குந்த-துளுவ வேளாள-அகமுடைய முதலியார் என சகல சாதி மக்களும் இதில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். தேசம் நெடுக இழையோடும் நமது பண்பாடு இதுதான்.

பணமும் பொருளுமே வாழ்க்கை என முன்னிறுத்தப்பட்டு இவற்றை அடைவதே வாழ்க்கையில் வெற்றியாக கருதப்படுகிறது. அதற்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்வது தவறில்லை என்கிற போக்கு நிலவுகிறது. குறிப்பாக இன்றைய உலகமயம் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற எதிர்காலம் இவற்றை மேலும் தீவிரப்படுத்திவருகிறது. அதனால்தான் சமீப காலங்களில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகரித்துள்ளன. முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன.

மருமகள்களும், மாமனார்-மாமியார்களும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இன்று நேற்றல்ல, காலம் காலமாக இத்தகையக் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறுவது எதனால்?  இது தனிநபர் சார்ந்த விவகாரமா அல்லது சமூகம் சார்ந்த பிரச்சனையா? கொடுமை செய்யும் தனி நபர்களுக்கு எதிராக போராடுகிற அதே வேளையில் இவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் இச்சமூகக் கட்டமைப்பை என்ன செய்யப் போகிறோம?

பணம் எனும் பிணத்தின் மீது கட்டப்பட்டுள்ள இச்சமூகக் கோட்டையிலிருந்து பிணவாடைதான் வரும். இத்துப்போன பழங்கோட்டையை தகர்க்காமல் பிண வாடை ஒரு போதும் அகலாது.

முற்றும்

ஊரான்

Monday, 20 June 2011

கொடுமைக்கு ஆளாவது மருமகள்களா அல்லது முதியோர்களா?

"முதியோரை கொடுமைப்படுத்துவதில் மருமகள்களுக்கே முதலிடம்!
கொல்கத்தா, ஜூன் 15: வீட்டிலுள்ள முதியோர்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்கு பெரும்பாலும் அவர்களுடைய மருமகள்களே காரணம் என்பது ஹெல்பேஜ் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9 கோடி பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய மருமகள் அல்லது மகன்களால் கொடுமைக்கு ஆளாகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் தங்களுக்கு எதிரான கொடுமை அதிகரித்திருப்பதாக 41 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர். தாங்கள் மென்மையான இலக்காக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் கொடுமைக்கு ஆளான முதியோர்களில் 98 சதவீதம் பேர் போலீஸிலோ அல்லது அரசு அதிகாரிகளிடமோ புகார் செய்வதில்லை. இதன் மூலம் அவர்கள் கொடுமையை அனுபவித்தபடி வேறு வழி தெரியாமல் தங்கள் மனதுக்குள்ளேயே அழுகிறார்கள் என்பதை அறியலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
முதியோர்களைக் கொடுமைப்படுத்துவது 63 சதவீதம் அவர்களின் மருமகள் தான். அதே நேரம் 44 சதவீத மகன்களும் அவர்களைக் கொடுமைப் படுத்துகின்றனர்.நாட்டின் தலைநகரான புதுதில்லியில் அனைத்து முதியவர்களும் தங்கள் மருமகளின் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வின் போது தெரிவித்தனர். அதாவது 100 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களால் கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளனர். கொடுமைக்கு ஆளாகும் முதியோர்களில் 52 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 66 சதவீதம் பேர் பொருளாதார ரீதியாக தங்கள் குடும்பத்தினரைச் சார்ந்து வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கு மருமகள்களையே நம்பியுள்ளனர். 85 சதவீதம் பேர் மருத்துவச் செலவுகளுக்கு மற்றவர்களை எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
முதியோருக்கு எதிரான கொடுமை என்பது மனதைக் காயப்படுத்தும் விதமாகப் பேசுவது மட்டுமின்றி உடல் ரீதியாகக் காயப்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முதியோர்களை சமூக, பொருளாதார, உடல்நல ரீதியாகக் காப்பாற்றுவது அவசியம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஹெல்பேஜ் இந்தியா, முதியோர் நலனுக்காக கடந்த 30 ஆண்டுகளாக செயல்படும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்."
இது 16.06.2011 அன்றைய தினமணி நாளேட்டில் வந்த செய்தி.

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்திரவதை

”...கோவை: வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை. 


திருமணம்
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சந்தியாவிற்கும், செளரிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன் செளரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போதே 25 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு பைக் ஆகியன சந்தியாவின் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது.
கருவை அழி
திருமணம் ஆன சில நாட்களிலேயே பாஸ்கரனின் தாயும், தந்தையும் மருமகள் சந்தியாவை கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் சந்தியா கர்ப்பம் தரித்தார்.
அவரது கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட இருவரும் கருவைக் கலைக்கச் சொல்லி தொடர்ந்து இம்சை செய்துள்ளனர். இதனால் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சந்தியா. அங்கேயே தங்கி பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கணவரோடு சேர்ந்து வாழ சந்தியா கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என பாஸ்கரனின் வீட்டிலிருந்து தொடர்ந்து துன்புறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததால், சந்தியா கோவை மாநகர போலீசில் புகார் செய்தார்...”.

மருமகள்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு வகை மாதிரிதான்.

மேலே கண்ட எதிரெதிரான இரு செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? இவை பற்றி பரிசீலிக்கின்ற அதே வேளையில் இவைகளைக் களைய முடியுமா? என்பதையும் பரிசீலிக்க வேண்டும். 

மருமகள்கள் மீது.... 

மாமியார் கொடுமை தாங்காமல் மருமகள் தற்கொலை, வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை, வரதட்சணை கேட்டு மருமகள் சித்திர வதை-தீயிட்டுக் கொலை, மருமகளிடம் மாமனார் சிலுமிசம், நாத்தனார் கொடுமை என புகுந்தவீட்டில் மருமகள்கள் மீது ஏவப்படும் வன் கொடுமைகளை பட்டியலிட்டு மாளாது.

இத்தகைய துன்புறுத்தல்களின் போது கட்டிய மனைவியை காக்கின்ற கணவன்மார்கள் எத்தனை பேர்?  இங்கே மருமகள்களை துன்புறுத்துகிற நிகழ்வுகள் பெரும்பாலும் பொருள் மற்றும் பணம் சார்ந்ததாகவே இருக்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு நகையும் பணமும் பொருளும் (சீர் - செனத்தை) கொண்டு வருகிறார்களோ அதைப்பொருத்தே சித்திரவதைகள் தீர்மானிக்கப் படுகின்றன.

நகை-பணம்-பொருள் இவற்றில் திருப்தியடைந்தாலும் மருமகள் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றுவிட்டால் அவள் சுடுகாடு செல்லும் வரை கொத்திக் குதறி விடுகிறார்கள். குழந்தைப்பேரில் ஆணா பெண்ணா என தீர்மானிப்பது ஆண்களின் விந்தணுவில் உள்ள செயல்பாடே காரணம் என மருத்துவ உலகம் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இவர்களின் காதுகளை அது எட்டுவதில்லை. ஆண் வாரிசுக்காக கட்டிய மனைவியை துரத்திவிட்டு மற்றொருத்திய கூட்டிக் கொள்ளும் கணவன்மார்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். இதற்கு தூபம் போட்டு உசுப்பேத்துபவர்கள் மாமியாரும் நாத்தனார்களும்தானே.

சமைக்கத் தெரியாததால் சில சமயம் சிறிதளவு பொருள் வீணாகிவிட்டால் அதற்காக மருமகளைக் கடித்துக் குதறி அமர்க்களப் படுத்திவிடுவார்கள். மருமகள்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதற்கு மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்கிற பழமொழி ஒன்று போதுமே. இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?   

வேலைக்குப் போகும் மருமகள் என்றால் சம்பளப் பணத்தை கணவனிடமோ அல்லது மாமியாரிடமோ கொடுத்துவிட வேண்டும். மறுக்கின்ற மருமகள்கள் வாழ்நாள் முழுக்க தூக்கத்தை தொலைக்க வேண்டும். மன உலைச்சலில் தூக்கம் மட்டும் எப்படி வரும்?

அங்கே உட்காராதே-இங்கே உட்காரதே, அங்க என்ன வேடிக்கை-இங்க என்ன வேடிக்கை, அங்க என்ன பேச்சு, யாருகிட்ட போன்ல பேசின, தலை வாருவதற்கு இதுவா இடம்? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு மிகச்சாதாரண உரிமைகளைக்கூட தரமறுப்பது புகுந்த வீடுகளில் அன்றாடம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. மொத்தத்தில் மருமகள்கள் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழ்கிறார்கள்.
மருமகள் என்பவள் புதிதாக அமர்த்தப்படும் ஒரு வைலைக்காரி. ஊதியம் இல்லாத இந்த வேலைக்கு இலட்சக் கணக்கில் இலஞ்சம் கொடுக்க வேண்டும். இந்த இலஞ்சத்தில் நகை, பணம், பொருள், சொத்து-பத்து, சீர்-செனத்தை எல்லாம் அடங்கும். பெண் மற்றும் ஆண் இருவரின் படிப்புக்கு ஏற்ப இலஞ்சத் தொகை மாறுடும்.இலட்சக் கணக்கில் அள்ளித் தரும் பன்னாட்டுக் கம்பெனிகள்கூட 'கேம்பஸ் இன்டர்வியூவ்' மூலம் ஒருசில மணி நேரத்தில் தங்களுக்குத் தேவையான வேலைக்காரர்களை கல்லூரிகளுக்குச் சென்றே தேர்வு செய்துவிடுகிறார்கள்.ஆனால் ஊதியமே இல்லாத மருமகள் வேலைக்கு ஆள் எடுக்க மிக நீண்ட நெடிய சிக்கலான 'புராசஸ்' கையாளப்படுகிறது. இங்கே ஆள் எடுக்க குறைந்தபட்சம் சில மாதங்களாவது தேவைப்படும். ஆண்டுக் கணக்கில் தேடுவோரும் உண்டு. பணியில் அமர்த்துவதற்கு முன்பு ஐயரின் 'கன்கரன்ஸ்' கட்டாயம் தேவை. இல்லை என்றால் 'அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டர்' கிடைக்காது.

வேலைக்காரிகள்கூட உடல் நிலை சரியில்லை என்றால் ஒன்றிரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். வேலை பிடிக்கவில்லை என்றால்  வேலையை விட்டு நின்று விடலாம்.ஆனால் மருமகள் என்கிற வேலைக்காரிக்கு விடுப்பு என்பதே வாழ் நாளிலேயே கிடையாது. வேலையை விட்டு நிற்கவும் முடியாது. இது இறக்கும் வரை 'ரிட்டையர்மெண்ட்டே' இல்லாத நிரந்தர வேலை.

மருமகள் என்கிற வேலைக்காரிக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி மருத்துவம் பார்க்கும் நிலைக்கு ஆளாகி, பிறர் உதவி கண்டிப்பாக தேவைப்படும் என்றால் அவளது தாய்வீட்டுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படும். தாய்வீட்டார் வந்து அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து சரிசெய்து குணமான பிறகு மீண்டும் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும். மருத்துவ செலவுக்கு எம்ளாயரிடமிருந்து 'ரீஇம்ர்ஸ்மெண்ட்' எல்லாம் கிடைக்காது.  'டிலாவலிங் அலவன்சும்' கிடையாது. இதெல்லாம் எழுதப்படாத 'செர்வீஸ் ரூல்ஸ்'. குணப்படுத்த முடியாது, இனி நிரந்தர சீக்காளி என்றால் 'வித்தவுட் நோட்டீஸ் டிஸ்மிஸ்தான்'.

இப்படி வேலையை பறிகொடுத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கும் மருமகள்களை மீண்டும் அதே வேலையில் அமர்த்துவதற்கு உறவினர்கள் நடத்தும் கட்டப் பஞசாயத்துக்கள் ஒருபுறம். பஞ்சாயத்து 'ஒர்க்அவுட்' ஆகவில்லை என்றால் காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் மனு மேல் மனு போட்டு அல்லாடும் அவலம் மறுபுறம். இவற்றையெல்லாம் 'எம்ளாயர்கள்' பொருட்படுத்துவதே கிடையாது. வெகு விரைவிலேயே வேறு ஒரு வேலைக்காரியை மருமகளாக வேலைக்கு அமர்த்திக் கொள்வார்கள். ஆனால் வேலையிலிருந்து விரட்டப்பட்ட மருமகளுக்கு வேறு வேலை கிடைத்து விடுமா என்ன? கையறு நிலையில் அவள் என்ன செய்வாள்? அதுவும் பிள்ளை குட்டிகளோடு விரட்டப் பட்டு விட்டால் குளமோ-குட்டையோ, ஆறோ-ஏரியோ, பாலிடாலோ-பாயிசனோ, தாம்புக் கயிரோ-கெரெசினோதான் இவளை அணைத்துக் கொள்ளும்.

போதும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன். இதற்கு மேலேயும் எமுத வேண்டுமா என்ன? 

இப்படி நசுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மருமகள்களா முதியோர்களை துன்புறுத்துகிறார்கள்?
...................தொடரும்

Friday, 17 June 2011

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....தொடர்ச்சி

எனது உடல் உருவத்தையும் கரிய நிறத்தையும் வைத்து இவன் நமது சாதிக்காரனாய் இருப்பானோ என கருதிக் கொண்டு வணக்கம் வைப்போரும் அல்லது இவன் அந்த சாதிக்காரனோ எனக் கருதி, கண்டு கொள்ளாமல் இருப்பதும் என இரு வேறு மக்கள் பிரிவினரை நான் அன்றாடம் பார்க்கிறேன். நான் யாருடைய ஆளு எனத் தெரியாமலேயே 'நம்ம ஆளுதான்' என எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு நபரைப் பற்றி என்னிடம் அறிய வைக்க ஒரு சிலர் முயலவும் செய்கிறார்கள். இரு வேறு சாதிகளைச் சார்ந்தவர்கள் அச்சாதிப் பெண்களுக்கு வரன் பார்க்கவேறு சொல்வார்கள். மேற்கண்ட இரு தரப்பாருமே அவ்வாறு முயல்கிறார்கள்.  நான் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. நான் அவர்களின் சாதிக்காரனா என்பதே அவர்களுக்குக் கவலை.

இதுவரை வணக்கம் வைத்தவன் நான் அவனது சாதிக்காரன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு வணக்கத்தை நிறுத்திவிடுகிறான். இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தவன் நான் அவனது சாதிக்காரன் எனத் தெரிந்து கொண்ட பிறகு வணக்கம் வைக்கத் தொடங்குகிறான்.முன் பின் அறிமுகமே இல்லாதவன் தனது மகனுக்குத் திருமணம் என அழைப்பிதழ் கொடுக்கிறான். நான் குழம்பிப் போகிறேன். நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இதைப் பகிர்ந்த போது, தெரியவில்லை என்றாலும் தங்களது சாதிக்காரர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுப்பது என முடிவெடுத்து அவ்வாறு ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் திட்டமிட்டு செய்வதாகச் சொன்னார்.

ஒருவர் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் செய்தால் உறவினர்கள்கூட ஒரு சிலர் சில காரணங்களுக்காக கோபித்துக் கொண்டு வராமல் இருப்பார்கள். ஆனால் தனது அலுவலகத்தில் ஆயிரக் கணக்கானோர் பணிபுரிந்தாலும் அதில் தனது சாதிக்காரர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இதுதான் இன்று அலுவலகங்களில் நடுத்தர வர்க்க மக்களிடம் காணப்படும் சாதித் தீட்டு. படித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். இச்சாதியத் தீட்டுதான் அலுவலக ஊழியர்களிடம் மிகப் பெரிய பிளவை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பனர்களில் ஐயர், ஐயங்கார், பட்டர், தீட்சிதர் என்றும்; முதலியார்களில் செங்குந்தர், துளுவ வேளாளர், அகமுடையர் என்றும்; நாயுடுகளில் கவரா, கம்மவா என்றும்;  முக்குலத்தோரில் கள்ளர், மறவர், அகமுடையர் என்றும் உட்பிரிவுகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ் வரும் எந்த உட்சாதிப் பிரிவும் பிற உட்சாதிக்குள் குடும்ப உறவு எதையும் வைத்துக் கொள்வதில்லை.  அதாவது ஒரு செங்குந்த முதலியார் அகமுடைய முதலியாரிடம் சம்பந்தம் செந்து கொள்ள மாட்டார். குடும்ப உறவுகளில் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்றாலும் அலுவலகங்களில் "நம்ம ஆளு" என்கிற கருத்தியலில் ஒன்றுபடுகிறார்கள்.

இவர்களுக்கிடையில் குடும்ப உறவு கிடையாது.பிறகு எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? படிநிலையில் தங்களின் சாதிக்கு மேலே இருக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற சாதியினர் ஒன்றுபட்டால் அதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். ஆனால் பார்ப்பனர்கள் எதற்காக ஒன்றுபடுகிறார்கள்? தங்களுக்கு மேலே யாரும் வந்துவிடக்கூடாது என்பது பார்ப்பனர்களின் கவலை. இதே கவலைதான் ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் ஒரு சிலர் சில இடங்களில் ஆளுமைக்கு வந்துள்ளனர். இந்த ஆளுமையைத்தான் பிற உயர் சாதியினரால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தனது வாய்ப்பை தாழ்த்தப்பட்டவன் தட்டிப் பறித்துவிட்டதாகத்தான் பிற உயர் சாதிக்காரன் நினைக்கிறான். அரசு வகுத்திருக்கிற கொள்கை மற்றும் சட்டங்களின்படிதான் ஒரு தாழ்த்தப்பட்டவன் கல்வியைப் பெறுகிறான்; வேலைவாய்ப்பைப் பெறுகிறான்; பதவி உயர்வு பெறுகிறான். இதற்கு சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்டவன் எப்படி பொறுப்பாக முடியும்? தனிப்பட்ட முறையில் அவன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வது எந்த வகையில் நியாயமாகும்? அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாயப்பு என்பதை உத்தரவாதப் படுத்தாத அரசின் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது கோபம் கொள்வது கோழைத்தனமல்லவா!

பார்ப்பனர் உள்ளிட்ட பிற ஒடுக்கும் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து வகையான சதி வேலைகளையும் அரங்கேற்றுகின்றனர். துறைத் தலைவராகவோ, நிறுவனத் தலைவராகவோ, தொழிற்சங்கத் தலைமைக்கோ தாழ்த்தப்பட்டவர்கள் வந்துவிடக்கூடாது என்பதே இவர்களின் கவலை. உயர் சாதியினர் அனைவரும் ஒன்றாகக்கூடி தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கேவலமாகப் பேசி அவர்களுக்குள்ளேயே கிண்டலடித்துக் கொள்வார்கள். 'கவர்மெண்ட் ஐயர்' என்றும் 'கோட்டா' என்றும் 'மேற்படி' என்றும் பேசும் இவர்களது பேச்சு வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுப்பதற்கு ஏதுவானது.

தரமான கல்வி கிடைக்காத கிராமப்புற மாணவனின் திறமை, நகர்ப்புற மாணவனைவிட குறைவாகத்தானே இருக்கும்.  இதை ஏற்றுக் கொள்ளும் உயர் சாதியினர் காலம் காலமாக கல்வி மறுக்கப்ட்ட தாழ்த்தப்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள் சற்றே திறமை குறைவானவர்களாக இருப்பது மட்டும் எப்படி குற்றமாகும்? இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட ஊழியர்களை 'ஜீரோ ' என்றும் 'வேஸ்ட்' என்றும் மிகக் கேவலமாகப் பேசுவது அன்றாடம் அலுவலகங்களில் நடக்கிறது.  இப்படி தாழ்த்தப்பட்டவர்களை இழிவு படுத்தும் செயல் அவர்களை எட்டாமல் இல்லை.

இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை தண்டணையிலிருந்து காப்பாற்ற தங்களுக்கு வேண்டிய உயர் அதிகாரிகளின் தயவை நாடுகின்றனர் சாதிச் சங்கத்தினர். என்ன இருந்தாலும் "நம்ம ஆளு" இல்லையா என சப்பைக் கட்டு கட்டுகின்றனர். தனது சாதிக்காரன் என்றால் தாராளவாதமும், பிற சாதிக்காரன் என்றால் கறார் தன்மையும் என்பது இன்று அலுவலகங்களில் காணக்கூடிய ஒரு கேடு கெட்ட நடைமுறை. இத்தகைய சாதிப் பற்றுதான் அலுவலகங்களில் நடைபெறும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு மிகப் பெரிய தடையாக நிற்கிறது. ஐம்பது ரூபாய் கையூட்டு வாங்கிய கடை நிலை ஊழியன் பிற சாதிக்காரன் என்றால் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆனால் இலட்சக் கணக்கில் கையூட்டு பெற்ற தனது சாதிக்காரனை காப்பாற்றுவதற்கு சென்னை முதல் டெல்லி வரை படை எடுக்கிறார்கள்.

கற்பழிக்கும் காமுகனைக்கூட காப்பாற்ற சாதி எனும் ஆயுதத்தை இவர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்.

நீதியும் நியாமும் இந்கே சாதியச் சாக்கடையில் மூழ்கடிக்கப்படுகிறது. இந்தச் சாதியப் போர்வையை பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் முதல் தாழ்த்தப்பட்ட சாதியனர் வரை அனைவருமே பயன்படுத்துகின்றனர். பிற உயர் சாதியினர் பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாத சாதியப் போர்வை, தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தும் போது மட்டும் பிற சாதியனரின் கண்களுக்கு 'பவர்' கண்ணாடி போடாமலேயே தெரிகிறது. உயர்சாதிக்காரன் தவறு செய்யலாம், தாழ்ந்த சாதிக்காரன் செய்யக்கூடாது என்கிற நால்வர்ணக் கோட்பாடுதான் இங்கே கோலோச்சுகிறது. இப்படிச் சொல்வதனால் தாழ்த்தப்பட்டவர்களின் தவறுகளுக்கு நான் சப்பைக்கட்டு கட்டுவதாக நினைக்க வேண்டாம். தவறுகளைக் காண்பதில்கூட சாதியப் பார்வை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே இதைக் கூறுகிறேன். மற்றபடி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனபதே எனது கருத்தும்.

கிராமமோ நகரமோ தீண்டாமை இன்னும் அகலவில்லை. தன்மையில்தான் மாறுபடுகிறது.

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
.............................முற்றும்