Sunday, January 9, 2011

இளம் பெண்களே அச்சப்படாதீர்கள்!

மாலை ஐந்து மணி. பேருந்து நிறுத்தம். பேருந்தில் ஏறுவதற்காக வேகமாகச் சென்று கொண்டிருந்தவர்கள், பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்குச் செல்பவர்கள் என பேருந்து நிறுத்தமே கலை கட்டியிருந்தது. நடுத்தர மற்றும் உயர் வருவாய்ப் பிரிவினர் வாழும் பகுதிக்கான பேருந்து நிறுத்தம் அது. கல்லூரி மாணவர்களே அதிகமாகப் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். ஒரே கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் குடியிருப்புப் பகுதியின் நுழைவு வாயிலருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். 

"ஏ வாப்பா இப்டியே போலாம்". முழங்கால் வரையிலான ஜீன்ஸ் பேண்ட்டும் டி-சர்ட்டும் அணிந்திருந்த மாணவி, சுடிதார் போட்ட மாணவியைப் பார்த்து அழைக்கிறார். 

"நான் உங்கூட வரலப்பா,  பயமா இருக்கு!" என்று சத்தமாகச் சொல்லிவிட்டு  சேலை உடுத்திய மற்றோரு மாணவி முயற்சி செய்தும், அதைப் பொருட் படுத்தாமல் சுடிதார் போட்ட அம்மாணவி மற்றொரு தெரு வழியாக நடக்கத் தொடங்கினார். 

அனைவருமே ஒரே குடியிருப்பைச் (township) சேர்ந்தவர்கள். இதுவரை பேருந்தில் ஒன்றாக வந்தவர்கள் தற்போது வீட்டிற்குத் தனியாகப் பிரிந்து செல்லக் காரணம் என்ன? 

ஒருவருக்கொருவர் அறிமுகமான குடியிருப்புப் பகுதி அது. ஐந்திலிருந்து பத்து நிமிடங்களில் நடந்தே வீட்டிற்குச் சென்றுவிடலாம். மாலை ஐந்து மணி, இருட்டுப் பயமும் கிடையாது. பிறகு பயமேன்? இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் என்னைத் துளைத்தெடுத்தது.

ஒரு நல்ல வேலைக்கு வந்து பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் முதல் தலைமுறையினர் வாழும் பகுதி அது. அவர்களின் வாரிசுகள்தான் இம்மாணவிகள். கல்வியில் மட்டுமல்ல, நடை உடை பாவனைகளில், நகர்ப்புறங்களில் உள்ளவர்கயோடு போட்டிப் போட வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் சுதந்திரமாக முடிவெடுக்கும் தைரியத்தைப் பெறாதவர்கள். அதனாலேயே வீட்டில் உள்ளவர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் என்ன சொல்வார்களோ என அஞ்சுபவர்கள் இவர்கள்.

"அவ டிரஸ்சப் பாரு அசிங்கமா, நீ அவளோட சேராதே"  என வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிட்டால் என்ன செய்வது?. அவளோடு சென்றால் மற்றவர்களும் நம்மைத் தவறாகப் பார்த்து விட்டால் அசிங்கமாகி விடாதா? இதுவே பயத்திற்கு அடிப்படை. இந்தப் பயமே அவரைத் தனியாக வீட்டிற்கு விரட்டுகிறது.

அந்த மாணவி அணிந்திருந்த உடை அப்படி ஒன்றும் அசிங்கமாகவோ, ஆபாசமாகவோ இல்லை. வட இந்தியாவில் சிறு நகரங்கள் மற்றும் டெல்லி, மும்பய் உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான இளம் பெண்களின் உடை அதுதான். அங்கு ஆண்கள் உள்ளிட்ட யாரும் இதை அசிங்கமாகப் பார்ப்பதில்லை. ஏன் தமிழகத்திலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள உயர் கல்வி பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் கணிசமானப் பெண்கள் அணியும் உடையாகப் பேண்ட் - டி சர்ட் உருவெடுத்துள்ளது.

முதலில் நாகரிகம்-பேஷன் என்ற பெயரில் இவை அறிமுமானாலும், இத்தகைய உடை மாற்றங்கள் பிறகு சாதாரணமாகி விடுகின்றன. இப்படித்தான் சுடிதார் நுழைந்தது. அப்போதும் சுடிதார் போட்டவர்களை அசிங்கமாகப் பார்க்கும் மன நிலை இருந்தது. இன்று கிராமப்புறம் வரை சுடிதார் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண உடையாக மாறி விட்டது. தாவணிகள் 'ஏனை'களாகிவிட்டன.

தாவணிக் கனவு கண்டவர்கள் பதறிப் போனார்கள். தமிழ்ப் பண்பாடு அழிவதாகக் கூச்சலிட்டார்கள். ஆனால் பெண்கள் இக்கூச்சலை பொருட்படுத்துவதாகத் தெரிய வில்லை. தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு எந்த உடை பொருத்தமாக இருக்கிறதோ, அது ஆபாசமாக இல்லாத பட்சத்தில் அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஆபாசமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம்கூட பெண்களுக்கு உரியதே ஒழிய ஆண்களுக்கு உரியதல்ல. காரணம் எந்த உடையை அணிந்தாலும் அதில் ஆபாசத்தைத் தேடுவதுதான் ஆணாதிக்க மனப்போக்காயிற்றே?

உடையில் ஏற்படும் மாற்றம் என்பது பண்பாட்டளவில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அது தவிர்க்க முடியாதது. அந்தந்தச் சமூகச் சூழலுக்கு ஏற்ப, தாங்கள் மேற்கொள்ளும் தொழில் மற்றும் வேலை நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தமான உடையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுடையது. மத, இனப் பண்பாட்டைக் காக்கிறேன் என்ற பேரில் இதில் மூக்கை நுழைப்பது ஆதிக்கத் தன்மை கொண்டது. 

ஆபாசமான உடைகளை விதவிதமான வகைகளில் புகுத்த முயல்பவர்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள அலையும் திரைத் துறையினரும், வியாபாரிகளும், பேஷன் டிசைனர்களும்தான். இல்லை என்றால் இவர்களில் பலர் கல்லா கட்ட முடியாது. இவர்களே ஆபாசத்தின் ஊற்றுக் கண்களாகவும் இருக்கிறார்கள். இன்றைய உலக மயமும், தாராளமயமும் ஏற்படுத்தி வரும் லாபவெறி இவற்றை மேலும் விரிவுபடுத்துகிறது.  

ஊரான்

2 comments:

  1. அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டிய கருத்து.பதிவுக்கு நன்றி...

    இதையும் கொ ஞ்சம்படியுங்களேன்..
    http://kavithaiveedhi.blogspot.com/2011/01/blog-post_8163.html

    ReplyDelete