அலுவலகங்களில் நிலவும் சாதிய முரண்கள்
1978 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மூன்றாண்டு பொறியியல் பட்டயப் (Engineering Diplamo) படிப்பை முடித்தபோது, இரு எழுத்துத் தேர்வுகளை நடத்தி 500 பேரை திருச்சி பாரத மிகு மின் நிறுவனம்
(BHEL) தேர்வு செய்தது. இதில் நானும் ஒருவன். ஆண்டுக்கு 200 பேர் வீதம் அவர்களுக்கு ஓராண்டு தொழிற் பழகுநர் (Technician Apprentice) பயிற்சி கொடுத்து இறுதியாக ஒரு நேர்முகத் தேர்வு வைத்து அவர்களை பொறுப்பாளர் (Chargeman) பதவியில் அமர்த்தியது நிர்வாகம்.
அப்பொழுது பட்டியல் சாதியினருக்கு மட்டுமே நடுவண் அரசு பொதுத்துறைகளில் இட ஒதுக்கீடு இருந்ததனால், மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த பட்டியல் மற்றும் பழங்குடி சாதியினர் அனைவருமே மூன்றாவது தொகுப்பில் (Technician Apprentice III Batch) சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதற்கடுத்த நான்காவது தொகுப்பில் (IV Batch) பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டச் சாதியினர் (FC and OBC) மட்டுமே இருந்தனர்.
அரசின் பல்வேறு நிறுவனங்களில், வேலைக்குச் சேர்ந்த புதிதில் சாதிகளை மறந்து நண்பர்களாக மட்டுமே பழகி வந்தவர்களுக்கு, ஆலையில் அடுத்தடுத்து சந்தித்த பதவி உயர்வுகளின் போது, தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், அதிகாரிகள் என எல்லா நிலைகளிலும் அவர்களுக்குள் மறைந்திருந்த சாதி வெளிக்காட்டத் தொடங்கியது. பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு, பதவி உயர்வு பெற்றவர்களின் மீதான காழ்ப்பாக, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வெறுப்பாக அது மாறியது.
வேலை வாய்ப்பிலும், பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அன்றே சட்டம் இருந்தது. அதனால் அவர்கள் பதவி உயர்வு பெறுவது நீதியானது, சட்டப்படியானது. அது தவிர்க்க முடியாதது. அதே போல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அவர்களுக்குரிய விகிதாச்சாரப் பங்கீட்டைப் பெற்றிருக்க முடியும் என்றல்லவா இவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்?
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், இட ஒதுக்கீடு பெறுவதற்கான வாய்ப்புகளை இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அம்பேத்கர் அவர்கள் உறுதி செய்திருந்த போதும், அதை நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தின் மீது கோபப்படுவதற்குப் பதிலாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானக் கோபமாகச் சிலரால் அது மடை மாற்றப்பட்டுவிட்டது.
இதில் கொடுமை என்னவென்றால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்குச் சட்ட உரிமை வழங்கிய அம்பேத்கரையே தங்களுக்கு எதிரானத் தலைவராகச் சித்தரித்ததுதான். மண்டல் குழு அமலுக்கு வந்த பிறகும் தாழ்த்தப்பட்டோர் மீதான காழ்ப்பு மனநிலைதான் இன்றுவரை பிற சாதிக்காரர்களிடம் நீடிக்கிறது.
தொழிலாளர்கள் மேற்பார்வையாளர்கள் அதிகாரிகள் என ஒவ்வொரு மட்டத்திலும் இத்தகையப் போக்கே நிலவியது; இன்றும் அதுவே தொடர்கிறது.
இதன் விளைவாக, அரசு நிறுவனங்களில் அதுவரை ஒற்றுமையாய் இருந்த ஊழியர்களும், தொழிலாளர்களும், சாதி அடிப்படையில் பிளவு பட்டனர். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கென தனி சங்கங்களையும், பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கென தனி சங்கங்களையும் அமைத்துக் கொண்டனர். ஒற்றுமையாக ஒன்றிணைந்து போராட வேண்டிய ஆற்றலை இவர்களே சிதைத்துக் கொண்டதால் அது நிர்வாகத்திற்கு மட்டுமே சாதகமாய் அமைந்து போனது.
***
SC, ST மற்றும் OBC என வகுப்பு வாரியாக ஊழியர்கள் பிளவு பட்டுப் போனாலும், ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் பல்வேறு சாதிகள் இருப்பதால், பதவி உயர்வு உள்ளிட்ட சிலவற்றைப் பெறுவதில் இவர்களுக்குள்ளேயே சாதிய அடிப்படையில் முட்டி மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது.
இது குறித்து அடுத்து பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment