Showing posts with label ஆணாதிக்கம். Show all posts
Showing posts with label ஆணாதிக்கம். Show all posts

Saturday, 7 March 2026

பெண் விடுதலை: சமூகக் கட்டமைப்பின் மாற்றமும் பொதுவுடமைச் சமத்துவமும்!

முன்னுரை

ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேசப் பெண்கள் தினம்" கொண்டாடப்படும் வேளையில், பெண்களின் நிலை குறித்த விவாதங்கள் முன்னெழுவது வழக்கம். பெண்ணடிமைத்தனம் என்பது வெறும் ஆண்களின் தனிப்பட்ட விருப்பத்தினால் விளைந்ததல்ல; அது ஆழமான சமூக, பொருளாதார மற்றும் மதக் காரணிகளால் கட்டமைக்கப்பட்டது. இந்த அடிமைத்தளையை உடைக்க வேண்டுமானால், வெறும் மனமாற்றம் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பிலும் மாற்றம் தேவை.

1. ஆண் ஆதிக்கம்: ஒரு கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறை

பெண்கள் ஒடுக்கப்படுவதற்கு ஆணாதிக்கம் (Patriarchy) ஒரு நேரடி வெளிப்பாடு என்றாலும், அதன் பின்னணியில் இருப்பது வலுவான சமூகக் கட்டமைப்பு.

பொருளாதாரச் சார்பு: பல நூற்றாண்டுகளாகச் சொத்துரிமையும், வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் ஆண்களிடமே இருந்தன. இது பெண்ணை வாழ்நாள் முழுவதும் ஒரு ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளியது. உதாரணமாக, வரலாற்று ரீதியாக விவசாய சமூகங்களில் சொத்து வாரிசுரிமை ஆண்களுக்கு மட்டுமே இருந்தது, பெண்களைப் பொருளாதார ரீதியாகச் சார்ந்தவர்களாக்கியது.

பணிப்பகிர்வு: "பெண்கள் வீட்டு வேலைக்கு, ஆண்கள் வெளி வேலைக்கு" என்ற பிரிவினை, பெண்களின் உழைப்பை அங்கீகாரமற்றதாகவும், ஊதியமற்றதாகவும் மாற்றியது. இது இன்றும் உலகளவில் பெண்களின் தொழில்முன்னேற்றத்தைத் தடுக்கிறது.

2. மதமும் மரபும்: ஆதிக்கத்தின் வேர்கள்

மதங்கள் சமூகத்தின் ஒழுக்க நெறிகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தபோது, அவை ஆணாதிக்கத்தை ஒரு "தெய்வீகக் கட்டளையாக" மாற்றின.

இந்து மதச் சூழலில்: பிற்கால ஸ்மிருதிகள் பெண்ணை எப்போதும் ஒரு ஆணின் பாதுகாப்பிலேயே இருக்க வேண்டியவளாகச் சித்தரித்தன. சடங்குகள், வாரிசுரிமை மற்றும் தீட்டு போன்ற நம்பிக்கைகள் பெண்ணின் தனித்துவத்தை ரத்து செய்தன. "கணவனே தெய்வம்" என்ற போதனை குடும்ப அமைப்பிற்குள் பெண்ணை ஒரு தியாகியாகவும், அடிமையாகவும் முடக்கியது.

இஸ்லாமிய சூழலில்: குரானின் சில வசனங்கள் மற்றும் ஹிஜாப், பலதார மணம் போன்ற பழக்கங்கள் பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தின. இது பெண்களைக் குடும்பப் பொறுப்புகளுக்குள் மட்டும் பிணைக்கும் வகையில் ஆணாதிக்கத்தை வலுப்படுத்தியது.

கிறிஸ்தவ சூழலில்: புதிய ஏற்பாட்டில் பவுலின் எபிச்டில்கள் பெண்களைச் சபையில் அமைதியாக இருக்கச் சொல்லி, ஆண்களின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தின. இது ஐரோப்பிய சமூகங்களில் பெண்களின் பொது வாழ்க்கை பங்கேற்பைத் தடுத்தது.

3. தற்கால மாற்றங்களும் அதிகாரப் பகிர்வும்

இன்று கல்வி மற்றும் பொருளாதாரத் தற்சார்பு காரணமாகச் சில குடும்பங்களில் மனைவிகளே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள். 2017-18 இல் 22% இருந்த பெண்கள் தொழில்வாய்ப்பு விகிதம் 2023-24 இல் 40.3% ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், பெண்களிடம் 79.6% பணியாளர்கள் பாதுகாப்பில்லாத வேலைகளில் (vulnerable employment) ஈடுபட்டுள்ளனர்.
இங்கு நாம் ஒரு உண்மையை உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது:

 "பெண்கள் கல்வியறிவு பெற்று வேலைக்குச் செல்வது மட்டும் மாற்றமல்ல; அவர்கள் ஈட்டும் வருமானத்தின் மீதான முழு அதிகாரம் அவர்களிடம் இருக்கிறதா என்பதே உண்மையான விடுதலை."

பொருளாதாரச் சுதந்திரம் என்பது சம்பாதிப்பது மட்டுமல்ல, அந்தச் செல்வத்தை எப்படிக் கையாள்வது என்கிற முடிவெடுக்கும் அதிகாரத்தையும் உள்ளடக்கியது.

4. தீர்வு: பொதுவுடமைச் சமூகமே விடிவெள்ளி

பெண் அடிமைத்தனத்தின் வேர் "தனிச்சொத்துரிமை" (Private Property) என்பதில் இருப்பதாகப் பொதுவுடமைச் சிந்தனை முன்வைக்கிறது. ஒரு பொதுவுடமைச் சமூகத்தில் மட்டுமே பெண் விடுதலை முழுமையடையும்.

தனிச்சொத்து ஒழிப்பு: சொத்து என்பது பொதுவானதாக இருக்கும்போது, வாரிசுரிமைக்காகப் பெண்ணைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் நீங்கும்.

உழைப்பின் சமூகமயமாக்கல்: சமையல், குழந்தைப் பராமரிப்பு போன்ற வீட்டு வேலைகள் சமூகப் பொறுப்புகளாக மாற்றப்படும்போது (Socialization of domestic work), பெண் வீட்டுச் சிறையிலிருந்து விடுபடுவாள்.

முழுமையான சுதந்திரம்: பெண் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து வாழத் தேவையில்லாத சூழல் உருவாகும்போது, ஆணாதிக்கம் தனது அடித்தளத்தை இழந்து வீழும்.

முடிவுரை

ஆணாதிக்கம் என்பது ஒரு நச்சு மரம் என்றால், இந்தச் சமமற்ற சமூகக் கட்டமைப்புதான் அதன் மண். மண்ணைச் சீர்படுத்தாமல் கிளைகளை மட்டும் வெட்டுவதால் மாற்றம் வராது. தனிச்சொத்துரிமை ஒழிக்கப்பட்டு, உழைப்பு பொதுவாக்கப்படும் ஒரு பொதுவுடமைச் சமூகத்தில்தான், பெண் ஒரு போகப் பொருளாகவோ அல்லது வீட்டுப் பணியாளராகவோ அன்றி, ஒரு முழுமையான மனிதராக வாழ முடியும். அந்தச் சமூக மாற்றமே உண்மையான பெண் விடுதலையைச் சாத்தியப்படுத்தும்.

ஊரான்

Sunday, 4 December 2011

மீண்டும் உச்சத்தில் மல்லிகைப் பூ!

"மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு ஒரு இடுகையை வெளியிட்டேன். முதலில் வினவு தளத்தில் வெளியானது. அதன் பிறகு எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ! என்ற தலைப்பில் ஊரான் வலைப் பூவில் மீள் பதிவு செய்யப்பட்டது.

 ஒரு கிலோ மல்லைகைப் பூவின் நேற்றைய விலை ரூபாய் 1500, இன்றைய விலை ரூ 2000. அப்படியானால் ஒரு முழம் என்ன விலை இருக்கும்? எப்படி கணக்குப் போடுவது? ஒன்றும் விளங்கவில்லை. சரி, இந்த விலை விற்கிறதே அவ்வளவு சாசு கொடுத்து வாங்குவார்களா என ஒரு கணம் யோசித்தேன். பலரின் கூந்தலைப் பார்த்து திகைத்துப் போனேன். இன்று திருமண நாள் என்பதால் திருமணங்களும் புது மனை புகு விழாக்களும் அதிகமாக நடைபெற்றன. மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறதே என்பதற்காக யாரும் கூந்தலை காயப் போடவில்லை. கொண்டையில் கொத்துக் கொத்தாக பூத்துக் குலுங்கத்தான் செய்தன. 

தலையில் சூடிய ஆறு மணி நேரத்திற்குள் வாடி வதங்கி குப்பைக்குச் செல்லும் மல்லிகைப் பூ இந்த விலை விற்கிறது. என்னக் கொடுமை சார் இது? 

ஒரு பொருளின் பயன்பாடு பற்றியோ அதன் அத்தியாவசியம் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. உற்பத்தியாளனுக்கும் விற்பனையாளனுக்கும் கை நிறை காசு சேர்ந்தால் சரி. அவன் ஜோலி முடிந்தது.

ஒன்றை நாம் செய்யும் போது அதுவே நம் வழக்கத்திற்கொன்றானதாக மாறிவிட்டால் அதை யாரும் சொல்லாமலேயே செய்வோம். அப்படித்தான் பூச் சூடிக் கொள்வதும். அழகுக்கும் பெண்மைத்தன்மைக்கும் பூ அவசியமானது என பெண்கள் மீது அவர்கள் அறியாமலேயே ஒரு கருத்தியல் திணிக்கப்பட்டுள்ளதால் பெண்ணானவள் பூ அவசியமாதா இல்லையா என்பதைப் பற்றி அறியாமலேயே ஒரு வக்கமான செயலாக பூச்சூடிக் கொள்வதை செய்து வருகிறாள். வழக்கமாகிவிட்ட ஒரு செயலை அதற்கான செலவு அதிகம் என்பதால் அவ்வளவு இலகுவில் அதை விட்டுவிடுவதில்லை. வேண்டுமானால் குறைத்துக் கொள்வார்களே ஒழிய வழக்கத்தைக் கைவிட மாட்டார்கள். 

குடிப்பழக்கம் ஒருவனின் வழக்கமான செயலாக மாறிவிட்டபிறகு ஒரு குவார்ட்டர் ஆயிரம் ரூபாய் என்பதற்காக குடிப்பதை விட்டுவிடுவானா என்ன? குவார்ட்டரை வேண்டுமானால் கட்டிங்காக குறைத்துக் கொள்வானே ஒழிய குடியை விட்டுவிட மாட்டான்.

Thursday, 27 January 2011

எட்ட முடியாத உச்சத்தில் மல்லிகைப்பூ!

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்!
"வாங்க முடியாத உயரத்தில் மல்லிகை!"  என்ற தலைப்பில் இன்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் எடைக்கு விற்கப்பட்ட மல்லிகை தற்போது நூறு பூக்கள் ரூ 35 முதல் ரூ40 வரை என எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. அதாவது ஒரு மொட்டு 40 பைசா. ஒரு கிலோ ஆயிரம் ரூபாயிலிருந்து இன்னும் விலை குறையவில்லை. எடைக்குப் பதிலாக தற்போது எண்ணிக்கையில் விற்கப்படுகிறது.

பூக்களின் 'அவசியம்' குறித்து "மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!" என்ற தலைப்பில் 30.12.2010 அன்று வினவு தளத்தில் எனது கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. தேவை கருதி அதை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

வினவுக்கு நன்றி!

ஊரான்
----------------------------------------------------------------------------------------------
தொடர் மழையை காரணமாகச் சொல்லி வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு முருங்கைக்காயின் விலை பதினைந்து ரூபாய். முந்தானை முடிச்சு படமா ஓடுகிறது இந்த விலை விற்பதற்கு? சந்தையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். சந்தையை ஒரு சுற்று சற்றிவிட்டு அப்பாடா என ஒரு பெருமூச்சுவிட்டபடி என்னிடம் வந்தார்.
“என்ன பை காலியா இருக்கு. எதுவும் வாங்கலியா?” என்றேன்.
“வெலயக் கேட்டா பயமா இருக்கு. நான் ஏதோ அப்பிடி இப்பிடி எதையாவது வாங்கிக்கிட்டு போயிடுவேன். ஆனா சாதாரண ஜனங்க,  அதுவும் மாசம் மூவாயிரம்,  நாலாயிரம் சம்பாதிக்கிறவங்க என்ன செய்வாங்க பாவம்?” என்றார்.
கை நிறைய சம்பளம் வாங்குபவரையே மிரள வைத்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.
விலைவாசி உயர்வு, உயிர்வாழும் உரிமையைப் பறித்துவருகிறது. இதே நிலை நீடித்தால், ஒன்று பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் அல்லது ஊட்டச்சத்துக் குறைவால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுவதும், தொடர் மரணமும் அன்றாட நிகழ்வாகிவிடும்.
மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரசித்திப் பெற்ற மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாயாம். சென்ற வாரம் மல்லி என்றால் இந்த வாரம் கனகாம்பரம். கனகாம்பரமும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயாம்.
சமீபத்திய தொடர் மழை காரணமாகவும், கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாகவும் விளைச்சல் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். நூறு கிலோ கிடைத்த ஒரு ஏக்கரில் இப்போது ஒரு கிலோதான் கிடைக்கிறதாம்.
விளைச்சல் குறைந்துவிட்டதே என விவசாயிகள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. நம்பி மல்லியைப் பயிர் செய்துவிட்டார்கள். விளைச்சல் இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
பூ பயிரிடும் விவசாயிகள் மட்டுமல்ல இத்தொழிலையே நம்பி வாழும் பூக்களைக் கொய்வோர்,  பூக்களைக் கொள்முதல் செய்வோர்,  பூக்களை மொத்தமாக வாங்கி உதிரியாக விற்பனை செய்வோர், பூக்களைக் கோர்த்து முழம்போட்டு விற்பனை செய்வோர் என ஒரு பெரும் கூட்டமே பூக்களின் விலை உயர்வால் பாதிக்கப்படுவர்.
விளைச்சல் குறைவாலும், விலை உயர்வாலும் நுகர்வோருக்கு பாதிப்பில்லாமலா? பூக்களின் விலை உயர்வைக் கண்டு அங்கலாய்த்தாலும், கொத்துக் கொத்தாகக் கொண்டையில் பூச்சூடிக்கொள்ளும் மகளிர் பூச்சூடாமல் நிறுத்திக் கொள்வார்களா? இன்று மல்லி முழம் ஐம்பது ரூபாய். ஐம்பது  ரூபாய் என்ன, நூறு ரூபாயானாலும் பெண்ணுக்கு அழகு பூச்சூடுவதுதானே! விடுவார்களா என்ன? பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தானே நமது மகளிர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் காலையிலும், வீட்டோடு இருக்கும் பெண்கள் மாலையிலும் பூச்சூடிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?
கோயிலுக்கோ அல்லது திருமணத்திற்கோ பூச்சூடாமல் சென்றுவிட்டால் இச்சமூகம் சும்மா விடுவதில்லை. சமூகத்திற்குப் பயந்தே பெரும்பாலான பெண்கள் பூச்சூடிக்கொள்கிறார்கள். பெண்களைப் போகப் பொருளாக மாற்றுகின்ற வேலையைத்தான் பூக்கள் செய்கின்றன. பிறரைக் கவருவதற்காகத்தான் நாம் பூச்சூடுகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இதை ஒரு பண்பாடாகக் கருதி செய்து வருகிறார்கள். இன்று நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்களிடம் வளர்ந்து வரும் குட்டைக்கூந்தல் கலாச்சாரம் பூக்களை சற்றே ஓரம் கட்டி வருவது ஒருவித முன்னேற்றம்தான்.
நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு ஆகிய விசேட நாட்கள் என்றால் பூக்களுக்கு ஏக கிராக்கிதான்.
ஆட்டோக்களிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வீட்டுப் பூசை அறைகளிலும், கோயில்களிலும் உறையும் கடவுள் சிலைகளுக்கும், படங்களுக்கும் பூ அபிஷேகம் செய்து, பூ மாலைகள் சூடுவதை கிலோ ஆயிரம் ரூபாய் என்பதற்காக பக்தர்கள் நிறுத்தவா போகிறார்கள்? அறியாமையும் இயலாமையும் குடி கொண்டிருக்கும் நம் மக்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான்.
எவ்வளவுதான் விலை ஏறினாலும் சந்தனக்கூடுகளிலும், பூச்சொறிதல்களிலும், பாடைகளிலும், மணமேடைகளிலும், தலைவர்களுக்காக வைக்கப்படும் அலங்கார வளைவுகளிலும்-மலர்ப்பாதைகளிலும்-வரவேற்பு மேடைகளிலும் கொட்டப்படும் பூக்கள் குறையவா போகிறது?
பிறந்த நாள் பொக்கேக்கள், பிரபல தலைவர்களின் சிலைகளுக்கும்-இறந்தவர்களின் உடலுக்கும்  மலர் மாலை-மலரஞ்சலி என மலர்களின் பயன்பாடோ விரிந்து செல்கிறது.
மேற்கண்டவைகள் அவசியமான அடிப்படைத் தேவைகள் இல்லை என்றாலும், மக்களிடையே நிலவும் அறியாமையின் காரணமாகவும் அற்ப பந்தாவுக்காகவும்தானே பூக்கள் இவ்வாறு கொட்டப்படுகின்றன.
நமது மண் வளமும், நீர் வளமும் நம் சொந்தங்களின் உழைப்பும் இது போன்ற அவசியமற்ற, அர்த்தமற்ற தேவைகளுக்காக வீணடிக்கப்பட வேண்டுமா?  மருந்துகளுக்காவும் உணவுக்காவும் பயன்படும் மலர்களை மட்டும் பயிர் செய்வது அவசியமானது. மற்ற தேவைகளுக்காக மலர்களை உற்பத்தி செய்வது அர்த்தமற்றது; அவசியமற்றது.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் காலத்திலிருந்து நமது விவசாயம் என்பது சுதேசித் தேவையை விடுத்து பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக மாற்றப்பட்டும் அந்த விதத்தில் அழிக்கப்பட்டும் வருகிறது. சுயதேவைக்காக இருந்த உணவுப் பயிர்களின் இடத்தில் பணப்பயிர்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதுவும் கூட விவசாயிகளை வாழவைப்பதாக இல்லை. பூக்களின் விலை உயர்வின் பின்னே உள்ள காரணம் இதுதான். மேலும் அழகு, நுகர்வு என்ற பெயரில் பூக்களை வைத்து மிகப்பெரிய நுகர்பொருள் சந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அர்த்தமற்ற முறையில் இயற்கை வளமும், மனித வளமும் விரயமாக்கப்படுவதற்கு பூக்கள் ஒரு எடுப்பான உதாரணம். இந்தப் பொருளாதாப் பின்னணியோடு பெண்களை அழகு சாதனமாகவும், துய்த்தெறியும் பொருளாகவும் பார்க்கும் பண்பாட்டு காரணமும் இணைந்திருக்கிறது. அந்த வகையில் பூக்களின் மாய உலகிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.
____________________
- ஊரான்

____________________