Showing posts with label கிரகப்பிரவேசம். Show all posts
Showing posts with label கிரகப்பிரவேசம். Show all posts

Tuesday, 19 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-9

கிரகப்பிரவேசமும் கும்பாபிஷேகமும்

ஒருவன் தனது வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வதும் மற்றும் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்வதும் அவ்வளவு சுலபமானதல்ல. அதனால்தான் "வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்" என்பார்கள். 

பணம் இருந்தால் மட்டும் போதாது; பலரது கடினமான உழைப்பும் ஒன்று சேர்ந்தால்தான் ஒரு இல்லத்தை உருவாக்க முடியும். வீட்டின் தரத்தை அதன் கட்டுமானம்தான் உறுதி செய்யும் என்றாலும், குடும்பத்தின் நல்லவை-கெட்டவைகளை, வீட்டின் அமைப்போடு, முடிச்சுப் போட்டு, வீட்டை இப்படி அமைத்தால்தான் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும் என பயமுறுத்தி "வாஸ்து சாஸ்திரம்' என்கிற சனாதனத்தைப் புகுத்தி, மக்களை முட்டாளிக்கி வைத்துள்ளனர். 

மக்களை முட்டாளாக்கியதோடு நில்லாமல், வீட்டை நிர்மாணிக்க உழைத்த உழைப்பாளிகளை அசிங்கப்படுத்துகிறது சனாதனம். சண்டாளன், பறையர் போன்றவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள், மண்ணை மிதித்திருப்பார்கள் என்பதால், இல்லம் தீட்டாகி இருக்கும் என்று சொல்லி, பசுமாட்டை ஓட்டி வந்து, கோமியம் தெளித்து, மந்திரம் ஓதி, கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வை அரங்கேற்றுகின்றனர் நம் மக்கள், அது இன்னதென்று தெரியாமலேயே! தீண்டத்தகாத மக்களும் இதைச் செய்வதுதான் காலக் கொடுமை. 

சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடித்தளமாக இருந்தாலும், ஐந்தாவது தளமாக இருந்தாலும், பசுவைக் கொண்டு வர சில ஆயிரங்கள் செலவழித்து, மாடி ஏற பசு அடம் பிடித்தாலும், மல்லுக்கட்டியாவது வீட்டிற்குள் இழுத்துச் செல்கின்றனர். தீண்டாமை எவ்வளவு வலுவானது என்பதை இந்த மல்லுக்கட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

சிறிய கோவிலோ, பெரிய கோவிலோ அங்கும் தீண்டத்தகாதவர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள், மண்ணை மிதித்திருப்பார்கள், அதனால் கோவில் தீட்டுப்பட்டிருக்கும் என்பதனால் "மகா சம்ரோட்சணம்" என்கிற "மகா கும்பாபிஷேகம்" என்கிற "குடமுழுக்கு" எனும் தீட்டுக் கழிப்பு நிகழ்ச்சியை செய்கின்றனர். 

"வீடு முதலானவற்றிற்கு சண்டாள சாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது, விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணை எடுத்து அப்பால் போடுதல், பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும் படி செய்தல் இவை ஐந்தாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது. (மனு 5: 124)".

தன் கனவு இல்லத்தைக் கட்டியவனை, ஆண்டவன் உறையும் ஆலயத்தை  எழுப்பியவனை, தீண்டத்தகாதவன் என்று இழிவுபடுத்தி, அவனால் இல்லமும் ஆலயமும் தீட்டாகி விட்டது என்று சொல்லி, கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம் என்ற பெயரில் தீட்டுக் கழிப்பு செய்யும் நபர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏன் கைது செய்யக் கூடாது?

வீடு தேடி வரும் தீண்டத்தகாதவர்களை, வீட்டு வாசலில் நிற்க வைத்துப் பேசுவதும், ஆண்டவனை வழிபட வந்தால் ஆலயத்தின் வாசலிலேயே தடுத்து நிறுத்துவதும் எதனால்? தீண்டத்தகாதவர்கள் பாதம் பட்டால் மண்ணும் தீட்டாகிவிடும் என்கிற சனாதனம்தானே? 

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் அவரது மனைவியும் 2019 ஆம் ஆண்டு பூரி ஜெகநாதர் ஆலயத்திற்குள் நுழைந்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டது எதனால்?  அவர் தீண்டத்தகாத சாதி, என்பதனால்தானே? 

ராம்நாத் கோவிந்த்

இந்த ஆண்டு ஜூன் 23 அன்று டெல்லியில் உள்ள ஜெகநாத் கோயிலின் கருவறைக்குள் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்டபோது, இன்னாள் குடியரசுத் தலைவர் துரௌபதி முர்மு மட்டும் வெளியிலேயே நிறுத்தப்பட்டாரே? எதனால்? 

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவிற்கு முர்மு அழைக்கப்படவில்லையே? எதனால்? அவர் பழங்கடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் ஒரு விதவை என்பதும்தானே காரணம்?

முர்மு

தீண்டத்தகாதவர்கள் நுழைந்து கோவில் மண்ணை மிதித்து விட்டால், அம்மண் தீட்டாகிவிடும்; பிறகு தீட்டுக் கழிப்பு செய்ய வேண்டும். அதற்கு, கால விரயமும் பணமும் செலவாகும் என்பதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திண்டாமையை இன்றளவும் கடைபிடிக்கின்றனர். குடியரசுத் தலைவர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலையை சற்றே எண்ணிப் பார்த்தால் குலை நடுங்குகிறது. 

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமம் திரௌபதி அம்மன் கோயில் நுழைவு (2023) உள்ளிட்ட எண்ணற்ற கோயில்களில் தீண்டத்தகாதவர்கள், அவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம் இந்தத் தீண்டாமைதானே?

இலை சாப்பாட்டில் ஒளிந்திருக்கும் தீண்டாமை

பலரது வீடுகளில் இலையில் சாப்பாடு போடுவதை, தனக்குக் கிடைக்கும் மரியாதை எனக் கருதி பெருமைப்படுகிற விருந்தினர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். தனது கணவனோ அல்லது மகனோ அழைத்து வருகின்ற நண்பன் என்ன சாதி என்பது தெரியாது. அதனால் மகனுக்குத் தட்டிலும், நண்பனுக்கு இலையிலும் சாப்பாடு போடுவார்கள். நண்பனுக்கும் தட்டில் சாப்பாடு போட்டு விட்டால் தீண்டாமை ஏற்பட்டு விடும் என்கிற ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இந்த இலை சாப்பாடு. எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் பறையன் தீண்டின பாத்திரம் சுத்தமாகாது என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். 

எதற்கு வம்பு என்று இரண்டு பேருக்கும் இலையிலேயே சாப்பாடு போடுவதும் உண்டு. மேலும், தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பாடு போடும்போது, சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சாணம் கொண்டோ அல்லது தண்ணீர் கொண்டோ மெழுகுவார்கள். இது ஒரு தீட்டு கழிப்பு நிகழ்ச்சி என்பது சாப்பிட்டவருக்குத் தெரியாது. தெரிந்தால், வித விதமாய் நீங்கள் சாப்பிட்ட அனைத்தும் ஒரு நொடியில் வெளியே வாந்தியாய் வந்துவிடும், ரோசம் இருந்தால்!

நமது அன்றாட வாழ்வில், இப்படி எண்ணற்ற தீண்டாமைச் சடங்குகளை சனாதனம் புகுத்தி இருக்கிறது. இன்று வரையிலும் அது தொடர்கிறது. 

ஆம்! சனாதன தருமம், அழிவில்லாதது, it is eternal என்று அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. தீண்டாமை எனும் சனாதன தருமம் அழிவில்லாமல் இன்றும் நீடிக்கத்தானே செய்கிறது.

அடுத்து பெண்கள் மீதான சனாதன தருமம் குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

****"

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-6

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-7

Tuesday, 12 August 2014

கல்யாணம் முதல் கருமாதி வரை விடாது துரத்தும் சமஸ்கிருதம்!

100 கோடி பேருக்கு மேல் வாழக்கூடிய இந்திய நாட்டில் வெறும் 14,135 பேர் மட்டுமே சமஸ்கிருத மொழியை தங்களது தாய்மொழி என அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், வடக்கு தெலிங்கானா, தெற்கு இராஜஸ்தான், நாக்பூர், மற்றும் ஹரித்துவார் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க ஒரு சிலர் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளோர்:

சித்பூர் மாவட்டம் (உத்தரப்பிரதேசம்) : 550
யுன்னாவோ (உத்தரப்பிரதேசம்)      : 334
லக்னோ (உத்தரப்பிரதேசம்)          : 307
கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்)         : 300
ஹரித்துவார் (உத்தரகாண்ட்)         : 288
டெல்லி                              : 279
பெங்களூரு                          : 235
அடிலாபாத் (தெலிங்கானா)          : 134

1981 ல் 6,106 பேரும், 1991 ல் 49,736, பேரும், 2001 ல் 14,135 பேரும் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப்பிரதேசத்துக்கு கிழக்கே உள்ள மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டோர் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.

சென்னை மாகாணத்தில் 315 பேர் சமஸ்கிதத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்ததாக 1921 ஆண்டு புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதன் பிறகு சமஸ்கிதத்தை தாய்மொழியாகக் கொண்டோர் 1981 ல் 6,106 பேரும், 1991 ல் 49,736, பேரும், 2001 ல் 14,135 பேரும் என ஏற்ற இறக்கங்கள் கண்டுள்ள ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே. ஒரு வேளை இது புள்ளி விவரக் கணக்கெடுப்பில் நேர்ந்துள்ள தவறாக இருக்குமோ என ஒரு சிலர் கருதக்கூடும். உடனடி அரசியல் தேவைகளுக்காக இவர்கள் அடிக்கடி தாய்மொழியை மாற்றிக் கொள்வதே இந்த ஏற்ற இறக்கங்களுக்குக் காரணம்.

மேற்கு இந்தியாவில் வாழும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பேசும் ‘பில்’ (BHIL) மொழியை தங்களது தாய் மொழி என அறிவித்ததால் 1991 மற்றும் 2001 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அம்மொழி பேசுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. இவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் பில் மொழிதான் தங்களது தாய்மொழி என் அறிவித்ததற்குக் காரணம் ஜார்கண்ட்டைப் போல தங்களுக்கு ஒரு தனி மாநிலம் தேவை என்பதற்காகத்தான்.

இந்திக்கு அடுத்தபடியாக பேசப்படும் வங்காளி மொழி பேசுவோரின் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அம்மாநில மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் குடியேறிய வங்காள தேசத்தினர் தங்களது தாய்மொழி உருதுவாக இருந்த போதிலும் “இந்தியக் குடியுரிமை“ கிடைக்கும் என்பதற்காக அவர்கள் தங்களது தாய்மொழி வங்காளம் என்று அறிவித்ததே  மேற்கண்ட எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம். இது கடந்த முப்பது ஆண்டு கால விவரக் கணக்கு.

கௌரவத்திற்காகவும், இந்திய அரசமைப்பில் சமஸ்கிருதத்திற்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டிருப்பதனாலும் ஒரு சிலர் தங்களது தாய்மொழி சமஸ்கிருதம் என போலியாக அறிவித்துள்ளனர். இல்லை எனில் சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை மேலும் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

இந்தியாவின் ஏதோ ஒரு மூளையில் இன்னமும் சமஸ்கிருதம் பேசப்படுவதாக ஒரு சிலர் உணர்வதால்தான் (feel) இம்மொழி செல்வாக்கு செலுத்துவதாகக் கருதப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் உள்ள சமஸ்கிருத கிராமம் என வர்ணிக்கப்படும் மட்டூர் (mattur) கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சமஸ்கிருதத்தை தங்களது தாய்மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.


வெறும் 0.000014135 சதவீதம் பேரின் தாய்மொழியாக இருக்கக்கூடிய சமஸ்கிருதம் எவ்விடத்திலும் எப்பொழுதும் இல்லாத ஒரு மொழியாக இருந்த போதிலும், அது நமது கருத்துக்களில், எண்ணங்களில் நம்முடன் வாழ்கிறது. அம்மொழியோடு ஒரு உணர்ச்சி பூர்வமான பிணைப்பு இருக்கிறது. புராண - இதிகாசங்கள் மீதும், சடங்குகள் - சம்பிரதாயங்கள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைகள் நீடிக்கும் வரை சமஸ்கிருதம் செல்வாக்கு செலுத்தவே செய்யும்.

வறட்சி - புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் விளைவால் ஏற்படும் கேடுகளிலிருந்தும், அரசியல் -  பொருளாதார – பண்பாட்டுச் சூழலை கட்டுப்படுத்தும் சமுதாயச் சக்திகள் ஏற்படுத்தும்  கேடுகளிலிருந்தும் மந்திரச் சடங்குகள் செய்வதன் மூலம் தனக்குத் துன்பங்கள் நேராதிருக்கவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். அடிமை உடைமைச் சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்து  மந்திரங்கள் சமய வடிவில் பிரதிபலிப்பதாலும், இந்தியாவைப் பொருத்தவரை வேத - மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதாலும், மந்திரம் ஓதுவது ஒரு முழுநேரத் தொழிலாக இருப்பதாலும் இறப்பிற்குப் பிறகும் மந்திரங்கள் மனிதனை துரத்திக் கொண்டிருக்கின்றன.

அதனால்தான் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக யாரும் ஏற்றுக் கொள்ளாமலேயே அல்லது சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லாமலேயே பூமிபூஜைகளிலும், கிரகப்பிரவேசங்களிலும், கணபதி ஹோமங்களிலும், பூப்புனிதநீராட்டு விழாக்களிலும், கல்யாணம் – கருமாதி – திதிகளிலும், கோவில்களில் அன்றாட வழிபாடு மற்றும் பரிகாரப் பூஜைகளிலும் சமஸ்கிருதம் கோலோச்சுகிறது.

சமஸ்கிருதம் மக்களின் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை அறிவால் மட்டுமே ஒழித்துவிட முடியாது. இயற்கைக் கேடுகளிலிருந்தும், சமூகக் கேடுகளிலிருந்தும் மனிதனை பாதுகாக்கக்கூடிய, மனித வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரக்கூடிய ஒரு சமூகம் அமையும் பட்சத்தில் சமய வடிவில் பிதிபலித்து நிற்கும் சடங்குகளும் மந்திரங்களும் மறைந்தொழியும். அப்பொழுது மந்திரங்களில் மட்டுமே ‘உயிர் வாழும்’ சமஸ்கிருதமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மறையும். இதற்கு தனிமனித செயலைவிட ஒரு சமுதாயச் செயலே இன்றைய தேவையாக இருக்கிறது.


(குறிப்பு: புள்ளி விவர ஆதாரம்: THE HINDU, Chennai. 10.08.2014)

தொடர்புடைய பதிவுகள்: