Tuesday, 13 October 2015

மாட்டுக் கறி சாப்பிடாதவன் நல்ல இந்துவே அல்ல!

ஓரளவுக்காவது மார்க்சியக் கோட்பாடுளைத் தெரிந்திருந்தால்தான் மார்க்சியத்தை ஆதரிக்க முடியும். மார்க்சியக் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவன் அக்கோட்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவர தீவிரமாகப் போராடுவான். அதே போல நாத்திகக் கோட்பாடுகளையும் பெரியாரியலையும் தெரிந்தவன் மட்டுமே அதற்காகப் போராட முன்வருவான்.

ஆனால் இன்று இந்து மதக் கோட்பாடுகளை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ளதாக கூப்பாடு போடும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இயக்கங்களின் போர்வையில் போராடும் நபர்களுக்கு உண்மையில் இந்து மதக்கோட்பாடு பற்றி எதுவும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சொன்னப் போனால் அவர்கள் இந்து மதத்திற்கு எதிராகத்தான் போராடுகிறார்கள்.

இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி உணவு பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது? இறைச்சி உணவை அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உணவை தடை செய்ய வேண்டும் என இவர்கள் கூப்பாடு போடுவதன் உள்நோக்கம் என்ன? இந்து மத சமய நூல்களை இவர்கள் என்றைக்காவது புரட்டி இருப்பார்களா? இவர்கள் உண்மையிலேயே பசுவைப் பாதுகாக்கத்தான் போராடுகிறார்களா? இல்லை மாட்டிறைச்சியை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்களா?

இந்து மதம் உள்ளிட்ட உலகில் உள்ள அனேக மதங்கள் மதப் புனிதத்தைப் போற்றிக்காக்க விலங்குகளை பலியிட்டுள்ளனர். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் உணவுக்காகவே விலங்குகள் பலியிடப்பட்டதற்கு மனுஸ்மிருதி, வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், தர்மசூத்திரங்கள் உள்ளிட்ட இந்து மத சமய நூல்கள்களே சான்றாக உள்ளன.

”சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல”. (மனு: 5-30)

“மதச் சடங்குகளில் முறையாக ஈடுபட்டுள்ள ஒருவன் இறைச்சி உண்ணவில்லை எனில், அவன் இறைச்சி உண்ணாத பாவத்திற்காக அடுத்து வரும் 21 பிறப்புகளிலும் பலியிடப்படுகிற விலங்காகவே பிறப்பான்”. (மனு: 5-35)

“நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான்” - சத்பத பிராமணத்தில் மகரிஷி யாக்யவல்கியன். (3/1/2/21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்” என்கிறது அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1/3/10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும் (10/85/13), பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான் (6/17/1) என்கிறது ரிக் வேதம்.

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான் என்கிறது வஷிஸ்த தர்ம சூத்திரம் (11/34).

இப்படி இறைச்சிக் கொழுப்பின், குறிப்பாக மாட்டிறைச்சிக் கொழுப்பின் வழவழப்பு புராணங்களின் பக்கங்களில் வழிந்தோடுகிறது.

புராணங்களில் வழிந்தோடும் இந்தக் கொழுப்பை தனது வாலால் வழித்து மறைக்கப் பார்க்கின்றன சங்பரிவார வானரங்கள்

காலம் கடந்து விட்டதால் இனி வானரங்கள் ஒரு போதும் மனிதனாக பரிணாம வளர்ச்சி பெறும் என எதிர்பார்ப்பது அறிவீனம். அதே வேளையில் ஒட்டு மொத்த மனிதர்களையும் வானரங்களாக மாற்ற முயல்வதை வேடிக்கை பார்ப்பது கோழைத்தனம்.

“பழைய இந்து சமய சடங்குகளின்படி மாட்டிறைச்சியை சாப்பிடாத ஒரு மனிதன் நல்ல இந்து அல்ல!” என்கிறார் சுவாமி விவேகானந்தர். (விவேகானந்தர் தொகுப்பு; பகுதி:3, பக்கம்: 536)

வெறும் இந்துவாக வாழ்வதை விட – நல்
இந்துவாக வாழ்வதே மேல்!.
------------
தொடர்புடைய பதிவுகள்:

ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?


Saturday, 10 October 2015

‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?

2015, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொலைக்காட்சி விவாதத்தின் போது “பசு வேறு! மாடு வேறு!” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

ஒரே குழப்பம். தொலைக்காட்சி விவாதத்தை நடத்திய நெறியாளர், தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றவர்கள்,  என்னைப் போன்று அந்த விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மற்றும் மாடுகளைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கிற அனைவருக்குமே ஒரே குழப்பம்தான்.

மனதில் ஏற்படுவதுதானே குழப்பம். உடலில் பிரச்சனை என்றால் சில சமயம் கை வைத்தியமே போதுமானது. ஆனால் மனக் குழப்பம் என்றால் மன நல மருத்துவரைத்தான் நாட வேண்டும். இல்லையேல் சென்னை கீழ்பாக்கமோ, வேலூர் பாகாயமோ கதி எனக் கிடக்கவேண்டியதுதான்.

குழப்பம் (confusion) வந்தாலே ஒரு மனிதன் நோயாளி ஆகிறான் என்கிறார் கிரேக்க நாட்டைச் சேர்ந்த வித்தல்காஸ் என்கிற ஹோமியோபதி அறிஞர்.

மனதளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஹோமியோபதி சிறந்த மருத்துவம் என்கிறார்கள். அதனால் சின்தசிஸ் ரெப்ரட்டிரியை (மருந்து காண உதவும் களஞ்சியம்) புரட்டினேன். அதில் ”மாடு வேறு! பசு வேறு!” என்கிற குழப்பத்திற்கு நேரடியான ரூப்ரிக் (நோய்க்குறி) இல்லாததால் மனக்குழப்பம் (confusion of mind) என்கிற பொதுவான ரூப்ரிக்கில் மருந்து தேடினேன். இந்த ரூப்ரிக்கில் ஏபியஸ் கனாடென்சிஸ் (abies canadensis) முதல் ஜிங்கம் பாஸ்பாரிகம் (zincum phosphoricum) வரை சுமார் ஐநூறு வகையான மருந்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தனித்துவமான குறி இருந்தால் மட்டுமே சரியான மருந்தைத் தேர்வு செய்வது சாத்தியமானது என்பதை ஹோமியோபதி மருத்துவமுறை சொல்கிறது. இந்த நிலையில் தனித்துவமான குறி இல்லாத போது ஒரு பொதுக்குறியைக் கொண்டு இந்த ஐநூறு மருந்துகளில் சரியான மருந்து ஒன்றை தேர்வு செய்வது இயலாத செயல் என்பதால் மீண்டும் வித்தல்காசின் உதவியை நாடினேன்.

எவன் ஒருவன் தெளிவாக (clarity) இருக்கிறானோ அவன் நோயற்றவன். அதாவது அவன் நலமாக இருக்கிறான் என்று பொருள். உடல் நலம் (health) குறித்து வித்தல்காஸ் கொடுத்த இந்த விளக்கத்தைப் பரிசீலித்தேன். மாடு-பசு குறித்தத் தெளிவு எனக்கு ஏற்பட்டுவிட்டால் குழப்பம் நீங்கி நான் நலமாகிவிடுவேன்; எனக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் தேவைப்படாது.

அதனால் தெளிவைத் தேடினேன். நர்மதாவின் தமிழ் அகராதியைப் புரட்டினேன். பசு என்றால் பாலுக்காக வீட்டில் வளர்த்திடும் எருமை அல்லாத மாட்டினத்தின் பெண் விலங்கு; எருமை அல்லாத மாட்டினத்தினைக் குறிக்கும் பொதுப் பெயர் என பொருள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அது என்ன ‘எருமை அல்லாத’? இங்கே எருமை என்றால் என்னவென்று தெரிந்தால் மட்டுமே பசு என்றால் என்னவென்று புரிந்து கொள்ள முடியும். அதனால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

எருமை என்றால் நீளமான வளைந்த கொம்பையும், கரிய நிறத்தையும், தடிமனான தோலையும் உடைய மாடு வகை. (எம தருமனின் வாகனம் எருமை ஆகும் - ஏண்டா எருமை! படிக்காம எங்கேடா போய் சுத்திக்கிட்ட வர்ற?)

பசு மற்றும் எருமை ஆகிய இரு விளக்கங்களிலும் ‘எருமை அல்லாத மாட்டினம்’ என்றும் ‘மாடு வகை’ என்றும் சொற்றொடர்கள் வருகின்றன. எனவே மாடு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால்தான் பசுவைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

மாடு என்றால் விவசாய வேலைகளுக்கும் வண்டி இழுத்தல் போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படும் ஆண் விலங்கையும், பாலைத் தரும் பெண் விலங்கையும் குறிக்கும் பொதுப் பெயர்.

என்ன? ஏதாவது விளங்கியதா? மீண்டும் குழப்பமா? பால் கொடுப்பது பசு. ஏர் இழுப்பது எருது. இது என்ன புதுசா எருது? இப்பொழுது எருது என்றால் என்னவென்று தெரிந்தால்தான் பசுவைப் பற்றியும் மாட்டைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். அதனால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

எருது என்றால் காளை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இது போதுமானதல்ல. எருது என்றால் வண்டியில் பூட்டிப் பிரயாணம் செய்யவும், வயலில் உழுதிடவும் பயன்படும் காயடிக்கப் பெற்ற ஆண் மாடு. காளை என்றால் இளமைப் பருவத்தில் இருக்கும் இனவிருத்திக்கான காயடிக்கப்படாத ஆண் மாடு.

அப்படியானால் எருமை வகையில் பால் கொடுக்கும் பெண் எருமையை என்னவென்பது? அது பசு வகையில் சேராதா? வண்டி இழுக்கவும் மற்றும் ஏர் உழவு செய்யவும் பயன்படும் ஆண் எருமையை என்னவென்பது? பெண் எருமையை எருமைப் பசு என்றும் ஆண் எருமையை எருமைக்கிடா என்றும் சொல்லலாமா? மொத்தத்தில் இவைகளும் மாடுகள்தானே?

ஆவின் பாலில் இருக்கும் ‘ஆ’வும் பசுதான். ‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா? 

மொத்தத்தில் பசு, எருது, காளை, எருமை எல்லாமே மாடுகள்தான். நாட்டு மாட்டில் பால் கொடுக்கும் பசு உண்டு. ஏர் உழும் எருது உண்டு. இனவிருத்திக்கு பயன்படும் காளை உண்டு. எருமை மாட்டிலும் பால் கொடுக்கும் எருமைப் பசு உண்டு. ஏர் உழும் எருமைக் கிடா உண்டு.

நாட்டு மாடோ! எருமை மாடோ! இரண்டு வகை மாடுகளுமே மனிதனுக்குச் செய்கின்ற சேவைகள் ஒன்றுதானே. இதில் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? நாட்டுப் பசுவை மட்டும் புனிதம் என்பது நன்றிகெட்டச் செயல் அல்லவா?

உழவன் என்னவோ இவைகளுக்கு ஒரே மரியாதையைத்தான் தருகிறான். ஆனால் ‘ஆ’வை ‘கோ’வாக்கிய  சில தயிர் வடைகள்தான் புனிதம் - புண்ணாக்கு என பீற்றித் திரிகின்றனர். 
பசு

காளை

எருது

எருமை பசு

எருமை கிடா

ஏர் உழும் எருமை




தொடர்புடைய பதிவு:

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!


Wednesday, 23 September 2015

விஷ்ணுப்பிரியா உயிர்த்தெழுவாரா?

“தீண்டாதவர்களின் பரிதாபமான நிலையைக்கண்டு மனம் வருந்துவோர் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது “தீண்டாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்று ஓலமிடுவதை வழக்கமாகக் கேட்கிறோம். இந்தப் பிரச்சனையில் அக்கறையுள்ள எவரும் ‘தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்வதைக் கேட்பது அரிது. மீட்கப்பட வேண்டிவர் தீண்டாதவர்தான் என்றே எப்போதும் கருதப்படுகிறது. நற்பணிக் குழு ஒன்றை அனுப்புவதானால் அதைத் தீண்டத்தகாதவர்களுக்குத்தான் அனுப்ப வேண்டும். தீண்டாதவர்களைத் திருத்திவிட முடிந்தால் தீண்டாமை மறைந்து போகும். தீண்டத்தக்கவருக்கு எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அவர் மனத்திலும், நடத்தையிலும், ஒழுக்கத்திலும் நலமாயிருக்கிறார், அவர் ஆரோக்கியாய் இருக்கிறார், அவரிடம் எந்தக் கேடும் இல்லை.

இவ்வாறு கருதுவது சரிதானா? சரியோ, தவறோ இந்துக்கள் இந்தக் கருத்தைத்தான் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். தீண்டாதவர்களின் பிரச்சனைக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்று தங்களைத் தாங்களே திருப்தி செய்து கொள்ள உதவுகிறது என்ற பெரிய சிறப்பு இந்தக் கருத்துக்கு உள்ளது” (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்:  பேச்சும் எழுத்தும்: தொகுதி 9).

தீண்டாமை குறித்த சாதி இந்துக்களின் மனநிலையை வேறு யாராலும் இதைவிட சிறப்பாக படம் பிடித்துக் காட்ட முடியாது. அம்பேத்கரின் இந்த தீர்க்கமான கூற்று உண்மைதான் என்பதை விஷ்ணுப்பிரியாவின் தற்கொலை நமக்கு உணர்த்துகிறது.

இளவரசன் மரணம், கோகுல்ராஜ் படுகொலை, விஷ்ணுப்பிரியா தற்கொலை என தீண்டத்தகாத சாதிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகும் போது “தீண்டாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்” என்று, சாதியப் படிநிலையில் உயர் நிலையில் உள்ள ஐயர் - ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர் முதல் சாதியப் படிநிலையில் கீழ்நிலையில் உள்ள சூத்திரச்சாதி வரை பலரும் ஓலமிடுவதைக் கேட்கிறோம். விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என ஓலமிடும் பார்ப்பன பா.ஜ.க முதல் சூத்திரவாள் ராமதாஸ்வரை தாழ்த்தப்பட்டவர்களின் இந்த நிலைக்குத் தாங்கள் கடைபிடிக்கும் தீண்டாமைதான் காரணம் என்பதை என்றைக்காவது உணர்ந்துள்ளார்களா? 

தீண்டத்தகாதவர்களுக்காக கரிசனப்படுவதைவிட தீண்டத்தகுந்த சாதி இந்துக்கள் தாங்கள் கடைபிடிக்கும் தீண்டாமையால்தான் இளவரசன்களும், கோகுல்ராஜ்களும், விஷ்ணுப்பிரியாக்களும் மாண்டு போகிறார்கள்; இவர்களின் கொலைக்கும் – மரணத்திற்கும் தாங்கள்தான் பொறுப்பு என்பதை குற்ற உணர்வோடு முதலில் ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதற்குக் காரணம் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும், நடைமுறைகளும்தான் என்பதை உணர வேண்டும். இந்துமத நம்பிக்கைளையும், நடைமுறைகளையும் அன்றாட வாழ்விலிருந்து அகற்றுவதன் மூலம் மட்டுமே தீண்டாமையை கடைபிடிக்கும் கருத்தியலிலிருந்தும், நம்பிக்கைகளிலிலிருந்தும் சாதி இந்துக்கள் தங்களைத் துண்டித்துக் கொள்ள முடியும். இது அவ்வளவு எளிதானதல்ல என்றாலும் சாதி இந்துக்களை சமூகப் போராளிகளாக, புரட்சியாளர்களாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைக் கைவிட வேறு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. 

'தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்’ என்று சொல்வதைக் கேட்பது அரிது என்கிற அம்பேத்கரின் ஆதங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், படிநிலைச் சாதி அமைப்பு முறையையும், சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும் உயிர் மூச்சாகக் கொண்டுள்ள இந்து மதத்தை புதைகுழிக்கு அனுப்ப வேண்டும். அதுவரை விஷ்ணுப்பிரியாக்கள் உயிர்த்தெழ முடியாது.

தொடர்புடைய பதிவுகள்:

Thursday, 10 September 2015

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! இறுதிப் பகுதி

அலுவலகங்களில், பேருந்துகளில், பொது இடங்களில் நம்மை அறியாமலேயே நமது கால் மற்றொருவர் மீது பட்டுவிட்டாலோ அல்லது அவசரத்தில் ஒருவரை இடித்துவிட்டாலோ “சாரி சார்!” என நாமாகவே முன்வந்து நமது வருத்தத்தை மற்றவர்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாக தெரிவிக்கிறோம். தெரியாமல் நடந்துவிட்டால்கூட நம்முடைய செய்கை மற்றவரை பாதிக்கும் என்பதை உணர்ந்திருப்பதால்தான் நாம் வருத்தம் தெரிவிக்கிறோம். அவ்வாறு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நமது மனம் குறுகுறுக்கிறது. இதுதான் ஒரு மனிதனின் இயல்பான மனநிலை.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவதில் ஆதிக்கச் சாதியினர் எவரும் தங்களது செயல் மற்றவரை பாதிக்கிறதே என்கிற எண்ணம் சிறிதுகூட இல்லாமல், ‘தான் செய்வது சரி!’ என்ற மனநிலையிலேயே செய்கின்றனர். ஆனால், அதே ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரவன் பொது இடத்தில் ஒருவரை தெரியாமல் இடித்துவிட்டால் வருத்தம் தெரிவிக்கின்றான். ஏன் இந்த முரண் நிலை? தனிப்பட்ட மனிதனாக இருக்கும் போது ஜனநாயகவாதியாகவும், சமூக வாழ்க்கை என வரும் போது அராஜகவாதியாகவும் அவன் ஏன் நடந்து கொள்கிறான்?

இந்து மத சமூக வாழ்க்கையே அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது என்பதால் ஒரு இந்துவாக வாழ்பவன் இந்து மத வழக்கப்படிதான் வாழ்வான். தனக்குக் கீழே உள்ள சாதிக்காரனை இழிவாகத்தான் நடத்துவான். அப்படி நடத்துவதுதான் இந்து தர்மம். அராஜகவாதியாகத்தான் வாழ வேண்டும் என ஒருவனை ஒரு மதம் வளர்க்கும் போது அவனிடம் ஜனநாயகத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்து தர்மத்திற்கு, அதாவது மனுதர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ, அதர்மத்தின் கை ஓங்குகிறதோ – இங்கே அதர்மம் என்பது மனுதர்மத்தை கேள்விக்குள்ளாகும் செயல்கள் - அப்பொழுதெல்லாம் இந்து தர்மத்தைக் காக்க கிருஷ்ணனே நேரில் தோன்றுவான் என்பதைத்தானே பகவத்கீதை சொல்கிறது (4:7). லேடியாக, மோடியாகக்கூட கிருஷ்ணன் அவதாரம் எடுப்பான் என்பதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே! கிருஷ்ணன் நேரில் தோன்றுவது மட்டுமல்ல ‘அதர்மவாதிகளை’ அரக்கர்கள் என முத்திரை குத்தி அழிக்கவும் செய்கிறான். இடதுசாரி சிந்தனையாளராகவும், பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்ட கன்னட அறிஞரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் எம்.எம்.கல்புர்கியின் படுகொலை கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் அவதாரம் எடுக்கிறான் என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

கிருஷ்ணன்கள் அவதாரம் எடுக்க எடுக்க, இந்து தர்மம் பாதுகாக்கப்பட்டுக் கொண்டே வரும். இந்து தர்மம் பாதுகாக்கப்படும் வரை தன்னை இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்பவன் அராஜகவாதியாகத்தான் வாழ்வான். அராஜகவாதிகள் இருக்கும் வரை தீண்டாமையும் தொடரும்.

தென் அமெரிக்கா நாடான பொலிவியா, ஸ்பெயின் நாட்டின் காலனி நாடாக இருந்தபோது “அமெரிக்காவை கீழ்படுத்தும்” திட்டத்தின் கீழ் கத்தோலிக்க சர்ச்சுகளால் பொலிவிய நாட்டு பூர்வகுடி மக்கள் மீது கடந்த நூற்றாணடுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், அநீதிகளுக்கும் அர்ஜென்டைனா நாட்டைச் சேர்ந்த தற்போதைய போப் பிரான்சிஸ் பொலிவிய நாட்டு மக்களிடம் மிகவும் கீழ்படிந்து பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடவுளின் பெயரால் அமெரிக்க மக்கள் மீது மிகக் கடுமையான குற்றங்களை கத்தோலிக்க சர்ச்சுகள் செய்துள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். (THE HINDU: 11.07.2015)

கடந்த நூற்றாண்டுகளில் நடந்த அநீதிகளுக்கு போப் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இந்த நூற்றாண்டிலும் இன்றளவும் இந்து மதத்தின் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதே! எந்த இந்து மதத் தலைவராவது தீண்டப்படாதவர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு மன்னிப்பு கோரியதுண்டா? குறைந்த பட்சம் வருத்தமாவது தெரிவித்ததுண்டா?

அவர்கள் வருத்தம் தெரிவிக்கமாட்டார்கள். ஓநாய்களிடம் ஆடுகளுக்கு நீதி கிடைக்குமா என்ன?  

முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்:

*ஆதிக்கச் சாதியினரின் அக்குளுக்குள் அடைக்கலமாகும் தலித்துகளுக்கான சட்ட உரிமைகள்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 15

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? - 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 14

*எது மிகவும் கொடுமையானது? அடிமைத்தனமா, தீண்டாமையா? -1

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 13

*ஏமாளி என்றால் எரித்துவிடு! பலசாலி என்றால் பதுங்கி ஓடு! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 12

*நிழல் பட்டதால் உணவு தீட்டாகிவிட்டதாம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 11

*வணங்கவில்லை என்பதற்காக முதியவர் அடித்துக் கொலை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 10

*தீண்டப்படாதவர்களை இந்துக்கள் தங்கள் சமுதாயத்தில் இணைத்துக் கொள்வார்களா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 9

*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
*நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
*வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

*ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

*தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!