Saturday, October 10, 2015

‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா?

2015, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொலைக்காட்சி விவாதத்தின் போது “பசு வேறு! மாடு வேறு!” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

ஒரே குழப்பம். தொலைக்காட்சி விவாதத்தை நடத்திய நெறியாளர், தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றவர்கள்,  என்னைப் போன்று அந்த விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மற்றும் மாடுகளைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கிற அனைவருக்குமே ஒரே குழப்பம்தான்.

மனதில் ஏற்படுவதுதானே குழப்பம். உடலில் பிரச்சனை என்றால் சில சமயம் கை வைத்தியமே போதுமானது. ஆனால் மனக் குழப்பம் என்றால் மன நல மருத்துவரைத்தான் நாட வேண்டும். இல்லையேல் சென்னை கீழ்பாக்கமோ, வேலூர் பாகாயமோ கதி எனக் கிடக்கவேண்டியதுதான்.

குழப்பம் (confusion) வந்தாலே ஒரு மனிதன் நோயாளி ஆகிறான் என்கிறார் கிரேக்க நாட்டைச் சேர்ந்த வித்தல்காஸ் என்கிற ஹோமியோபதி அறிஞர்.

மனதளவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஹோமியோபதி சிறந்த மருத்துவம் என்கிறார்கள். அதனால் சின்தசிஸ் ரெப்ரட்டிரியை (மருந்து காண உதவும் களஞ்சியம்) புரட்டினேன். அதில் ”மாடு வேறு! பசு வேறு!” என்கிற குழப்பத்திற்கு நேரடியான ரூப்ரிக் (நோய்க்குறி) இல்லாததால் மனக்குழப்பம் (confusion of mind) என்கிற பொதுவான ரூப்ரிக்கில் மருந்து தேடினேன். இந்த ரூப்ரிக்கில் ஏபியஸ் கனாடென்சிஸ் (abies canadensis) முதல் ஜிங்கம் பாஸ்பாரிகம் (zincum phosphoricum) வரை சுமார் ஐநூறு வகையான மருந்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தனித்துவமான குறி இருந்தால் மட்டுமே சரியான மருந்தைத் தேர்வு செய்வது சாத்தியமானது என்பதை ஹோமியோபதி மருத்துவமுறை சொல்கிறது. இந்த நிலையில் தனித்துவமான குறி இல்லாத போது ஒரு பொதுக்குறியைக் கொண்டு இந்த ஐநூறு மருந்துகளில் சரியான மருந்து ஒன்றை தேர்வு செய்வது இயலாத செயல் என்பதால் மீண்டும் வித்தல்காசின் உதவியை நாடினேன்.

எவன் ஒருவன் தெளிவாக (clarity) இருக்கிறானோ அவன் நோயற்றவன். அதாவது அவன் நலமாக இருக்கிறான் என்று பொருள். உடல் நலம் (health) குறித்து வித்தல்காஸ் கொடுத்த இந்த விளக்கத்தைப் பரிசீலித்தேன். மாடு-பசு குறித்தத் தெளிவு எனக்கு ஏற்பட்டுவிட்டால் குழப்பம் நீங்கி நான் நலமாகிவிடுவேன்; எனக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் தேவைப்படாது.

அதனால் தெளிவைத் தேடினேன். நர்மதாவின் தமிழ் அகராதியைப் புரட்டினேன். பசு என்றால் பாலுக்காக வீட்டில் வளர்த்திடும் எருமை அல்லாத மாட்டினத்தின் பெண் விலங்கு; எருமை அல்லாத மாட்டினத்தினைக் குறிக்கும் பொதுப் பெயர் என பொருள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அது என்ன ‘எருமை அல்லாத’? இங்கே எருமை என்றால் என்னவென்று தெரிந்தால் மட்டுமே பசு என்றால் என்னவென்று புரிந்து கொள்ள முடியும். அதனால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

எருமை என்றால் நீளமான வளைந்த கொம்பையும், கரிய நிறத்தையும், தடிமனான தோலையும் உடைய மாடு வகை. (எம தருமனின் வாகனம் எருமை ஆகும் - ஏண்டா எருமை! படிக்காம எங்கேடா போய் சுத்திக்கிட்ட வர்ற?)

பசு மற்றும் எருமை ஆகிய இரு விளக்கங்களிலும் ‘எருமை அல்லாத மாட்டினம்’ என்றும் ‘மாடு வகை’ என்றும் சொற்றொடர்கள் வருகின்றன. எனவே மாடு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால்தான் பசுவைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

மாடு என்றால் விவசாய வேலைகளுக்கும் வண்டி இழுத்தல் போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படும் ஆண் விலங்கையும், பாலைத் தரும் பெண் விலங்கையும் குறிக்கும் பொதுப் பெயர்.

என்ன? ஏதாவது விளங்கியதா? மீண்டும் குழப்பமா? பால் கொடுப்பது பசு. ஏர் இழுப்பது எருது. இது என்ன புதுசா எருது? இப்பொழுது எருது என்றால் என்னவென்று தெரிந்தால்தான் பசுவைப் பற்றியும் மாட்டைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். அதனால் மீண்டும் அகராதியைப் புரட்டினேன்.

எருது என்றால் காளை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இது போதுமானதல்ல. எருது என்றால் வண்டியில் பூட்டிப் பிரயாணம் செய்யவும், வயலில் உழுதிடவும் பயன்படும் காயடிக்கப் பெற்ற ஆண் மாடு. காளை என்றால் இளமைப் பருவத்தில் இருக்கும் இனவிருத்திக்கான காயடிக்கப்படாத ஆண் மாடு.

அப்படியானால் எருமை வகையில் பால் கொடுக்கும் பெண் எருமையை என்னவென்பது? அது பசு வகையில் சேராதா? வண்டி இழுக்கவும் மற்றும் ஏர் உழவு செய்யவும் பயன்படும் ஆண் எருமையை என்னவென்பது? பெண் எருமையை எருமைப் பசு என்றும் ஆண் எருமையை எருமைக்கிடா என்றும் சொல்லலாமா? மொத்தத்தில் இவைகளும் மாடுகள்தானே?

ஆவின் பாலில் இருக்கும் ‘ஆ’வும் பசுதான். ‘ஆ’வினில் பசு இருப்பதால் ஆவின் பால் எல்லாம் பசும்பாலாகிவிடுமா? 

மொத்தத்தில் பசு, எருது, காளை, எருமை எல்லாமே மாடுகள்தான். நாட்டு மாட்டில் பால் கொடுக்கும் பசு உண்டு. ஏர் உழும் எருது உண்டு. இனவிருத்திக்கு பயன்படும் காளை உண்டு. எருமை மாட்டிலும் பால் கொடுக்கும் எருமைப் பசு உண்டு. ஏர் உழும் எருமைக் கிடா உண்டு.

நாட்டு மாடோ! எருமை மாடோ! இரண்டு வகை மாடுகளுமே மனிதனுக்குச் செய்கின்ற சேவைகள் ஒன்றுதானே. இதில் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? நாட்டுப் பசுவை மட்டும் புனிதம் என்பது நன்றிகெட்டச் செயல் அல்லவா?

உழவன் என்னவோ இவைகளுக்கு ஒரே மரியாதையைத்தான் தருகிறான். ஆனால் ‘ஆ’வை ‘கோ’வாக்கிய  சில தயிர் வடைகள்தான் புனிதம் - புண்ணாக்கு என பீற்றித் திரிகின்றனர். 
பசு

காளை

எருது

எருமை பசு

எருமை கிடா

ஏர் உழும் எருமை




தொடர்புடைய பதிவு:

ஒரு கல்லூரி நிர்வாகத்தின் பச்சைப் பசுக்கொலை!


No comments:

Post a Comment