Friday, November 22, 2024

ஒற்றைக் கோழி!

பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுதே பட்டறிவால் பகுத்தறிவைப் பெற்ற நான் இன்று வரை மதம் சார்ந்த பண்டிகைகள் எதையும் கொண்டாடுவதில்லை. எத்தனையோ இடையூறுகளை எதிர்கொண்ட / எதிர்கொள்ளும் போதும் உதவிக்கு 'இறைவனை' என்றும் நான் நாடியதில்லை / நாடுவதில்லை. பண்டிகைகளால் தூண்டப்படும் கணநேர மகிழ்ச்சியை விட எந்நேரமும் மகிழ்ச்சியாய் இருப்பதையே நான் விரும்புகின்றேன். 

பெருமைக்காகச் சேர்க்கும் பணமும் பொருளும், ஆசைக்காக அணியும் ஆடைகளும் அணிகலன்களும், ருசிக்காக உண்ணும் உணவும் இன்ன பிறவும், பொழுது போக்கும் உல்லாசப் பயணங்களும் ஏற்படுத்தும் மகிழ்ச்சி, விடிந்தவுடன் மறைந்து போகும் மது போதையைப் போன்றது என்பதனால் இவற்றிலும் எனக்கு அதிக நாட்டம் இல்லை. 

பலன் எதுவாயினும் உழைப்பு எனும் அழகில் நாட்டம் கொண்டால் இன்பம் இயல்பாய் நம்மை ஒட்டிக் கொள்ளும். எதை எதையோ இரசிக்கத் தெரிந்த நமக்கு உழைப்பை மட்டும் இரசிக்கத் தெரியவில்லை.  ஒரு முறை உழைப்பை இரசித்துப்பார், மகிழ்ச்சி உன்னை ஆட்கொள்ளும். உழைப்பை நீ எட்டிக்காயாய்
நினைத்து விட்டால் மகிழ்ச்சி எப்பொழுதும் எட்டாக் கனிதான்.

நான்தான் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லையே ஒழிய கொண்டாடும் உறவுகளையும், நட்புகளையும் நான் வெட்டி விடுவதில்லை. பண்டிகைகளின் பலகாரங்களும், பாய் வீட்டு பிரியாணியையும்  ஒரு கை பார்க்காமல் விடுவதுமில்லை. 

இந்த ஆண்டு தீபாவளியும் எப்பொழுதும் போல வந்து போனது. மக்களும் விலை கொடுத்து வாங்கிய மகிழ்ச்சியில் மூழ்கிக் திளைத்து ஓரிரு நாளில் இயல்பு நிலைக்குத் திரும்ப, நானோ  சந்தனக் காட்டின் சமவெளிப் பகுதியில் ஓரிரு ஆண்டுகளாக ஏர் கலப்பைகளுக்காக ஏங்கிக் கிடந்த உறவினரின் நிலத்தை மண்வெட்டியும் கடப்பாரையுமாக பத்து நாட்கள் புரட்டி எடுத்தேன். மா, பலா வாழை என முக்கனியும் பிற கனியும் கனிவதற்காய் களம் அமைத்தேன். உழைப்பை நான் நேசிக்க, மண் என்னை அரவணைக்க மகிழ்ச்சி அங்கே தாண்டவமாடியது. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு சகலையால் வாங்கி வந்த ஒற்றைக் கோழிக் குஞ்சு இன்று விடலையாய் வளர்ச்சி கண்டு  கவர்ச்சி காட்டியது. பறவைகள் பகல் முழுக்கப் பறந்தாலும் மாலையில் வீட்டிற்கு வந்துதானே ஆகவேண்டும்.  இரவில் அவிழ்த்து விடப்படும் சிப்பிப்பாறைகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மாலை மங்கும் வேலையில் 'கிரில் கேட்டில்' சிறிது நேரம் அமர்ந்து பின் எதிரில் உள்ள வேப்பமரக்கிளையில் லாவகமாய் இடம் பிடித்து இரவைக் கழிக்கிறது இந்த ஒற்றைக் கோழி. கதிரவன் துயில் களையும் வேலையில் தானும், தானாகவே எழுந்து தோட்டத்தில் தஞ்சமடைந்து விடுகிறது இந்த விடலைக் குஞ்சு. 


விடலைப்பருவத்தின் ஏக்கம் போக்க மூன்று முடிச்சுப் போடுவதைத் போல இந்த விடலைக்கும் இப்போது முடிச்சுப் போட்டுவிட்டதால், என்றோ இரையாகப் போகிறோமே என்பதையும் அறியாமல் அவை தோட்டத்தில் ஜோடியாய் இரைதேடி இன்புற்றிருக்கின்றன. பகலில் சிப்பிப்பாறைகள் சிறைவைக்கப்படுவதால் தோட்டத்தில் இவை சுதந்திரமாய் சுற்றி வருகின்றன. 


பத்து நாள் கழித்து சந்தனக் காட்டின் கீழ் திசையில், சொந்த மண்ணைத் தொட்டுவிட்டு, தெளிந்து ஓடும் ஆற்று ஊற்றுகளையும், நிரம்பி வழியும் ஏரிகளையும், பசுமை படர்ந்த காடு மலைகளையும், செழித்து வளரும் பயிர் பச்சைகளையும், விளைந்து வலைந்த நேற்சோலைகளையும் பார்த்தவாறு, கூட்டை நோக்கிப் பறக்கும் பறவைகளைப் போல நானும் வீட்டை நோக்கிப் பயணமானேன். வன்மம் நிறைந்த சில உறவுகளால் சில சமயம் ஏற்படும் மனக்காயங்களுக்கு இந்த இயற்கைதான் நம் நெஞ்சுக் கூட்டை இதமாய்த் தடவி வருடிக் கொடுக்கிறது. 

விரைந்து ஓடும் தனியார் பேருந்தில் சற்றே சலசலப்பு. என்னவென்று எட்டிப் பார்த்தேன்.

தொடரும்

ஊரான்



No comments:

Post a Comment