Monday, 27 September 2021

ஐயகோ! என் செய்வேன்? கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!

ஐயகோ! என் செய்வேன்?
கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!

அன்று
‘பாலிடெக்னிக்’கில் படிக்கும் போது
‘சிபிடி’-யில் கூட்டம்
அதிகம் என்பதால்-நாம்
வேறு வேறு வகுப்புகளில்
பழக்கமில்லை அவ்வளவாக…
 
இறுதி ஆண்டு
தேர்வுகள் முடிந்து தேர்ச்சியானோம்
திருச்சி ‘பெல்’லுக்கு – ‘என்எம்ஆராய்’!
நீயும் நானும் லிங்கராஜூம்
கீழரண் சாலை ‘லிபர்ட்டி லாட்ஜி’ல்!
அடைக்கலமானோம்! நெருக்கமானோம்!
 
விடுமுறை நாட்களில்
நீராடச் செல்வோம்
கொடி நடையாக காவிரிக்கு!
நினைவிருக்கிறதா - 1979 ல் ஒரு நாள்
பொங்கி வந்த புதுப் புனலில் - நீ
சிக்கித் தடுமாறினாய் நீச்சல் தெரியாததால்-
உனை மீட்க நான் நெருங்கியபோது
உடும்புப்பிடியாய் பிடித்துக் கொண்டாய்-
நீந்த வழியின்றி
நானும் உன்னோடு.தத்தளித்த போது
நம் குடுமியைப் பிடித்து
இழுத்துப் போட்டான் ஒரு இளைஞன்
இல்லையேல்
அன்றே காவிரியில் நாம் கலந்திருப்போம்!
அன்று ஈருடல் ஓர் உயிரானோம்
அதனால்தானோ என்னவோ
என்னுள் நீ அமர்ந்து கொண்டாய்!
 
ஐயகோ! என் செய்வேன்?
கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!
என்னுள் வெறுமை.
ஏனோ உனைப் பார்க்க மனம் ஏங்குகிறது!
 
பொன்.சேகர்
13.06.2021

face book 

Monday, 20 September 2021

இராணிப்பேட்டை 'பெல்' நிறுவனத்தில் பெரியார் பிறந்த நாள் விழா!

பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் தானாக நடந்து விடுவதில்லை. வரலாறு நெடுகிலும் மாறிவரும் சமூகச் சூழலில் எண்ணற்றத் தலைவர்களின் முன்முயற்சி மற்றும் உழைப்பினாலும்தான் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழமையால் பயன் பெற்று வந்த ஒரு கூட்டம் புதியவற்றைக் கொண்டுவரும் தலைவர்களை எள்ளி நகையாடுவது ஒன்றும் புதியதல்ல.  

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத மறுப்பு என்கிற திராவிடக் கருத்தியலை  உயர்த்திப் பிடித்து, சாதி மதத்தின் பெயரால் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்ததனால்தான் பெரியாரை சமூகநீதிக் காவலராகத் தமிழகம் போற்றுகிறது; அவரது பிறந்தநாளை புதுப்பொலிவுடன் கொண்டாடுகிறது.

ஆரியத்துக்கு எதிரான திராவிடக் கருத்தியலை, தமிழனுக்கு எதிரான கருத்தியலாக மடை மாற்ற முயலும் சில அற்பர்களின் முகத்தில் கரியைப் பூசி உள்ளனர் தமிழக மக்கள். 

இந்த ஆண்டு செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள்" கொண்டாட்டத்தில் இராணிப்பேட்டை பெல் நிறுவனமே மூழ்கிக் திளைத்தது. மாறுபட்ட கருத்து உள்ளவர்களைக் கூட தனக்கு மலர் தூவ வைத்து விட்டாரே! அதனால்தானோ என்னவோ அவர் மேலும் மேலும் ஆழமாய்... நம் இதயங்களில்........!

இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தின் (BHEL) வாயிலில் 17.09.2021 அன்று காலை 7.00 மணி அளவில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க துணைப் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன்  வரவேற்புரை நிகழ்த்த,  இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத் தலைவர் தங்கமணி மற்றும் பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் தேவேந்திரன் ஆகிய இருவரும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கப் பொதுச் செயலாளர் பிரகாசம் மற்றும் பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்க துணைத் தலைவர் கார்த்திகேயன் சமூகநீதி நாள் உறுதிமொழி வாசிக்க விழாவில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

BAPSU, BAPEU, Supervisors Union,  Executive Association, EGTU/INTUC, LPF, BMS, Welders Association, Crane Operators & Riggers Association, Physically Challenged Welfare Association உள்ளிட்ட சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் அமைப்புச் செயலாளர் வாசுதேவன் விழாவினை நெறியாளுகை செய்ய, அதன் துணைத் தலைவர் ராஜா நன்றி உரையுடன் இனிதே நிறைவுற்றது. பெல், இராணிப்பேட்டை அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத் தோழர்களும் திரளாக விழாவில் பங்கேற்றனர். 

பணிக்குச் சென்ற பெல் ஊழியர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டதோடு பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழா ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

விழாக் காட்சிகள்

























தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடைமையை நேசித்த பெரியார்!


Tuesday, 29 June 2021

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

திராவிட என்ற சொல் மனுஸ்மிருதியிலேயே (கி.மு 150 முதல் கி.பி 100) இருக்கும் போது, இராபர்ட் கால்டுவெல்தான் (1856) முதன் முதலில் திராவிட என்ற சொல்லைப் புகுத்தித் தமிழனின் அடையாளத்தைத் திசை திருப்பிவிட்டார் என்று தற்போது பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகின்றனர். திராவிட என்ற சொல் மீது அவர்களுக்கு ஏன் கடுங் கோபம்?; தம்பிகளுக்கும்தான்!

“பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயன முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொன்ன சத்திரிய சாதிகள் இவ்வுலகில் வரவர சூத்திரத்தன்மையை அடைந்தார்கள் (மனு: 10-43)”

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களை ஆண்ட அனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாகி விட்டார்கள் (மனு: 10-44)”

10-43: But in consequence of the omission of the sacred rites, and of their not consulting Brahmanas, the following tribes of Kshatriyas have gradually sunk in this world to the condition of sudras;

10-44: (VIZ) the Paundrakas, the Kodas, the Dravidas, the Kambogas, the Yavanas, the Sakas, the Paradas, the Pahlavas, the Kinas, the Kiratas, and the Daradas.

(ஆங்கிலத்தில் உள்ள Kodas தமிழில் ஔண்டரம் என்றுள்ளது. தமிழில் உள்ள கசம் ஆங்கிலத்தில் இடம்பெறவில்லை)

மனு கூறியபடி மேற்கண்ட பன்னிரண்டு நாடுகளின் மன்னர்களும் பூணூல் அணிவதை ஏற்கவில்லை. பார்ப்பனர்களை வணங்கி அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தவில்லை.  அதனால் அவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டார்கள். இங்கே எடப்பாடி நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்தப் பன்னிரண்டு நாடுகளும் எந்தெந்தப் பகுதி என்பதை வரலாற்றில் தேடினால் சுலபமாகக் கிடைக்கக் கூடியவைதான். திரவிடம் என்றால் பார்ப்பன எதிர்ப்போடு தொடர்புடைய சொல் என்றப் புரிதலைத்தான் மனு நமக்குக் கொடுக்கிறான்.

எனவே, திரவிடம் என்றாலும் பௌண்டரம், ஔண்டரம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம், யவனம் என்றாலும் ..... பார்ப்பன எதிர்ப்பு - வேத மறுப்பு என்பதுதான் அதன் சாரம். இந்தப் புரிதலில்தான் பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்ட பெரியார் அன்று இச்சொல்லைப் பயன்படுத்தி திராவிடர் கழகம் என்று தான் தொடங்கியக் கட்சிக்குப் பெயர் வைத்திருக்கக்கூடும். அப்படியானால் தரதம் என்றோ யவனம் என்றோ வைத்திருக்லாமே என்றுகூடத் தோன்றலாம். திராவிடம் தென்னிந்தியாவை-தமிழர்களைக் குறிப்பதால் பெரியார் திராவிடத்தைத் தெரிவு செய்துள்ளார்.

பின்னாளில் திராவிட என்ற பெயரைத் தாங்கி பல கட்சிகள் தோன்றின. அதனாலேயே அக்கட்சிகள் எல்லாம் பார்ப்பன எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டவை என்று பொருளாகி விடாது. மேலும் திராவிட என்ற பெயரைத் தாங்கி உள்ள கட்சிகளில் உள்ள பலர் பிழைப்புவாதிகளாக, ஊழல்வாதிகளாக சீரழிந்து விட்டால் இதைத் திராவிட என்ற சொல்லோடு முடிச்சுப் போட்டு ‘திருட்டுத் திராவிடம்’ என புதுப் பொருள் விளக்கம் கொடுத்து திராவிட என்ற சொல்லின் பரிமானத்தைக் கொச்சைப் படுத்துகின்றனர். மேலும் திராவிட என்ற பெயரைத் தாங்கி உள்ள கட்சிகளில் உள்ள அனைவருமே பார்ப்பன எதிர்ப்பைக் கடைபிடிப்பவர்களா என்ன?

*****

பார்ப்பனர்களை வணங்காமல், அவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் ஆட்சி நடத்திய மன்னர்கள் சூத்திர நிலைக்குத் தள்ளப்பட்டது மட்டுல்ல அவர்களில் பலர் பார்ப்பனர்களால் வீழ்த்தப்பட்டனர் அல்லது கொன்றொழிக்கப்பட்டனர்.

அரசன் தினந்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதம் ஓதினவர்களாயும், நீதி சாஸ்திர வித்வான்களாயும் இருக்கிற பார்ப்பனர்களை உபசரித்து அவர்கள் சொல்கிறபடி நீதி செலுத்த வேண்டியது (மனு: 7-37)

தான் நியாயம் அறிந்திருப்பினும், பார்ப்பனர்களிடத்தில் நியாயத்தை வணக்கமாய் கேட்க வேண்டியது. பார்ப்பனர்களை வணங்கி ஆட்சி நடத்தினால் ஒரு போதும் மன்னன் அழியமாட்டான். (மனு: 7-39)

பார்ப்பனர்களை வணங்காமல் ஆட்சி நடத்தாததால் அனேக மன்னர்கள் சதுரங்க சேனையுடன் அழிந்து போனார்கள், நாட்டை விட்டு காட்டுக்கு ஓடிப் போனார்கள். (மனு: 7-40)

அந்த வணக்கமில்லாததால் வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் ஆட்சியை இழந்து அழிந்த போனார்கள். (மனு: 7-41)

மேற்கண்ட மன்னர்களின் கதைகளை பாகவத புராணம், இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக் கதைகளில் காண முடியும்.

பார்ப்பனர்களை வணங்கியதால் பிருது, மனு இவ்விரு அரசர்கள் ஆட்சியையும், குபேரன் செல்வத்தையும், விசுவாமித்திரன் பார்ப்பனத் தன்மையையும் அடைந்தார்கள். (மனு: 7-42)

7-37: Let the king, after rising early in the morning, worship Brahmanas who are well versed in the three fold sacred science and learned (in polity), and follow their advise.

7-39: Let him, though he may already be modest, constantly learn modesty from them; for a kind who is modest never perishes;

7-40: Through a want of modesty many kings have perished; together with their belongings; through modesty even hermits in the forest have gained kingdoms.

7-41: Through a want of humility Vena perished, like wise king Nahusha, Sudas, the son of Pigavana, Shumukta and Nemi.

7-42: But the humility Prithu and Manu gained sovereignty, Kubera the position of the Lord of wealth and the son of Dadhi the rank of a Brahmana.

இங்கு பார்ப்பனர்களை வணங்கியதற்கு எடப்பாடியும்,  வணங்காமைக்கு அண்ணா – கலைஞர் - ஸ்டாலின் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

*****

கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் ஒரு பார்ப்பனர் என்பதால் திராவிடர்கள் என்றாலும் பார்ப்பனர்கள் என்றாலும் ஒன்றுதான் என்ற ஒரு வாதத்தையும் அப்பாவித்தனமாக சிலர் முன்வைக்கின்றனர். இது உண்மையா?

“இந்தியப் பார்ப்பனர்கள் இருவேறு வகைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஒரு பிரிவு திராவிடர்கள் என்றும் மறு பிரிவு கவுடர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

திராவிடர் என்ற வகைப் பிரிவு ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டது. இந்த ஐந்தும் சேர்ந்து பஞ்ச திராவிடர் எனப்படும். இவ்வைந்து உட்பிரிவுகளின் பெயர் பின்வருமாறு:

1.மகாராஷ்டிரர்

2.ஆந்திரர்

3.(முறைப்படியான) திராவிடர் (தமிழ் பார்ப்பனர்கள்)

4.கர்னாடகர்

5.குர்ஜரர்”  

இந்த உட்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு உட்சாதிகள் உண்டு. கவுடர்கள் வகையிலும் இதுபோன்று பல்வேறு உட்பிரிவுகளும் உட்சாதிகளும் உண்டு. இப்படியாக பார்பனர்களில் பாகவதர், பண்டிட், பரத்வாஜ், திரிவேதி, ஜெட்லி, பதக், தத்தா, வைத்தயா, பாண்டே, துபே, மிஸ்ரா, பட், முன்ஷி, சுக்லா, வாஜ்பேயி, தீட்சிதர், உபாத்யா, ஆச்சார்யா என ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சாதிகள் உண்டு.

ரிக்வேதிகள், கிருஷ்ண யஜூர்வேதிகள், சுக்ல யஜூர்வேதிகள்-மத்தியாந்தினார்கள், சுக்ல யஜூர்வேதிகள்-கன்வார்கள், சாமவேதிகள், அதர்வர்கள், வைணவர்கள், வீர வைணவர்கள், ஸ்ரீ-வைணவர்கள், பாகவதர்கள், ஷக்தர்கள் ஆகிய பார்ப்பன சாதிகள் தமிழ்ப் பார்ப்னர்களில் அடங்குவர். இன்று நமக்குத் தெரிந்த ஐயர், ஐயங்கார் உள்ளிட்டவை எப்படி சாதிகளாக அறியப்படுகின்றன என்று தெரியவில்லை. ஒரு வேளை அவை மேற்கண்ட சாதிகள் ஏதாவதின் தமிழாக்கமோ என்னவோ?

“பஞ்ச திராவிடர்கள் என்பது விந்திய மலைக்குக் கீழ்ப்புறம் வாழும் பார்ப்பனர்களுக்கு ஒரு பொதுப் பெயர் ஆகும். பஞ்ச கவுடர்கள் என்பது விந்திய மலைக்கு மேற்புறம் வாழும் பார்ப்பனர்களுக்கு ஒரு பொதுப் பெயர் ஆகும். வேறு விதமாகச் சொன்னால் பஞ்ச கவுடர் என்பது வடக்கத்திய பார்ப்பனர்களையும், பஞ்ச திராவிடர் என்பது தெற்கத்தியப் பார்ப்பனர்களையும் குறிக்கும்”.

எனவே, திராவிடம் என்றால் அது தென்னிந்தியாவோடு தொடர்டையது என்பது மட்டும் தெளிவு.

மலேசியத் தமிழன், ஈழத் தமிழன் என்று விளிப்பது அவர்கள் வாழும் பகுதியைக் குறிப்பது போல திராவிடப் பார்பனர்கள் என்று விளிப்பது அவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கவே. திராவிடப் பார்ப்பனர்கள் என்றாலும் தென்னிந்திய அல்லது தமிழ்ப் பார்ப்பனர்கள் என்றாலும் ஒன்றுதான்.  

*****

பார்ப்பன எதிர்ப்பை ஏற்றுக் கொண்டவர்கள் திராவிட என்ற பெயர் தாங்கி உள்ள கட்சிகளில் மட்டுமல்ல பொதுவுடைமை உள்ளிட்ட பிற கட்சிகளிலும் ஏராளமாக உள்ளனர். பார்ப்பன எதிர்ப்பைக் கைக்கொள்பவர்கள் அனைவருமே  திராவிடர்கள்தான்.

திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் மூலம் தமிழை-தமிழனை சிறுமைப்படுத்தி விட்டார்கள் என்று கூப்பாடு போடுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? திராவிட என்ற சொல்லைக் கைவிடுவது பார்ப்பன எதிர்ப்பைக் கைவிடுவதற்கு ஒப்பாகும்.

ஆம்! இந்தப் புரிதலில் நான் திராவிடன்; நீங்கள்?

ஊரான்

ஆதார நூல்கள்: 

1. மனுதரும சாஸ்திரம், 
2.. டாக்டா அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 10

தொடர்புடைய பதிவுகள்

கலைஞர் கடைசி அசுரனா?

Thursday, 13 May 2021

கோமியம் கரோனாவைத் துரத்துமா?

முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பக்கங்களைப் புரட்டினாலே, நேற்றுவரை உறவாடிய உறவுகள், நண்பர்கள், தோழர்களின் மரணச் செய்திகள். விரல் நடுங்குகிறது. நெஞ்சம் பதறுகிறது. 

பிரிந்த உயிர்களின் 'ஆன்மா' சாந்தி அடையட்டும் என்ற ஆறுதலால் இழப்பை ஈடு செய்து விட முடியுமா?  நாம் இழப்பது  வெறும் உயிர்கள் அல்ல; நேற்றுவரை இந்த நாட்டை வளப்படுத்த உழைத்த உழைப்பாளிகள். 

கரோனா எனும் பேரிடர் யாரை இழுத்துச் செல்லும் என்று சொல்ல முடியாது. ஏழை எளியோர் மட்டுமல்ல, மருத்துவ வசதிகளைப் பெறக்கூடிய வசதி படைத்தவர்களைக்கூட கரோனா விட்டுவைப்பதில்லை. 

தடுப்பூசிப் போட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம், தடுப்பூசி போட்டுக்கொண்டால் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் மற்றொருபுறம் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

ஆவி பிடி,  மூலிகை குடி, சூடாகக் குடி, சத்தாகச் சாப்பிடு என எண்ணற்ற ஆலோசனைகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. எல்லாம் செய்தும் இழப்பைத் தடுக்க முடியவில்லையே? ஏன்?

கரோனாவை குணப்படுத்த முடியும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். முகக் கவசம், சமூக இடைவெளி, தனித்திரு போன்ற நடைமுறைகளால் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும்தான் எஞ்சி  நிற்கிறது. இது நடைமுறைச் சாத்தியமற்றதுதான் என்றாலும் இதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு முறை சுனாமி பேரிடரால் பாதிக்கப்பட்டவன் அடுத்த சுனாமியிலும் அடித்துச் செல்லப்படுகிறான் என்றால் அவன் முதல் சுனாமியில் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள்?

கரோனாவைப் பொறுத்தவரை அதுதான் இன்று இந்தியாவின் நிலை. கரோனாவைக் கோமியத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் ஆட்சிக்கட்டிலில் உள்ளவரை நம்மை யாராலும் காக்க முடியாது.

'நமக்கு நாமே' என்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. எச்சரிக்கையாயிருங்கள்.

பொன்.சேகர்

Friday, 16 April 2021

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

மனிதக் காதலை திசை மாற்றிய பக்தி இயக்கம்

சனாதனம் என்றால் பழைமையானது; சனாதன தர்மம் என்றால் பழைமையான நீதி நெறி என்று பொருள். ‘நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை; சமூகத்திற்குப் பொருத்தமான நீதி நெறிகளை அன்றே வகுத்து வழிகாட்டி உள்ளார்கள். பழைய நீதி நெறிகளை கடைபிடிக்கத் தவறியததால்தான் நாட்டில் கேடுகள் பெருகிவிட்டன. எனவே சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதன் மூலம்தான் நற்சமூகத்தை மீட்டெடுக்க முடியும்” என்பதுதான் சனாதன தர்மத்தை உயர்ந்ததாகக் கருதுவோரின் கருத்து. பார்ப்பனர்கள் மட்டுமல்ல பார்ப்பனியத்துக்கு பலியாகிப் போன பலரின் கருத்தும் இதுதான்.

சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட நெறிமுறைகளையே தமிழர்கள் தங்களது மரபாகப் பார்க்கின்றனர். சங்க இலக்கியங்கள் சனாதனக் கருத்துக்களை வலியுறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. அப்படியானால் சனாதன தர்மத்தை எங்கிருந்து, எப்படிப் புரிந்து கொள்வது? பார்ப்பன இந்து மத நூல்களான, சுருதிகள் என்று சொல்லக்கூடிய ரிக்-யஜூர்-சாம-அதர்வன உள்ளிட்ட 4 வேதங்களிலும், ஸ்மிருதிகள் என்ற சொல்லக்கூடிய மனு-யாக்ஞவல்கியர்-அங்கிரஸ்-ஆபஸ்தம்பர் உள்ளிட்ட 18 தர்ம சாஸ்திரங்களிலும், நாரத-பாகவத-கருட-லிங்க-நாரத-சிவ-ஸ்கந்த-விஷ்ணு உள்ளிட்ட 18 புராணங்களிலும். இதிகாசங்கள் என்று அறியப்படுகிற இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதையிலும் சனாதன தர்மம் குறித்த விவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் பகவத் கீதை ஸ்மிருதி வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்து மதத்தைச் சார்ந்த ஒருவன் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படிச் செய்யக் கூடாது என்பதை ஸ்மிருதிகள் வலியுறுத்துகின்றன. இதில் முதன்மையானது மனுஸ்மிருதி. அதனால்தான் இது சட்டமாகவும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட நூல்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததால் பார்ப்பனர்கள் மட்டுமே அவற்றை விரித்துக் கூறும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்ததால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள்.

மனுவின் காலம் கி.பி 185 க்குப் பிறகு என அறியப்பட்டாலும் சமணம் செழித்தோங்கிய களப்பிரர் ஆட்சி (கி.பி 250-575) வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில்தான் தமிழர் வாழ்வில் மனு ஸ்மிருதி கோலோச்சத் தொடங்கி உள்ளது. சண்டாளர்கள் தீயவர்களாகக் கருதப்பட்டார்கள் என்கிற பாஹியான் (கி.பி 400) கூற்றிலிருந்தும், தோட்டிகள் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்கிற யுவான் சுவாங் (கி.பி 620) கூற்றிலிருந்தும், அறிய முடிகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் (கி.பி 400-600) தீண்டாமையும் புகுத்தப்பட்டிருக்கிறது.

களப்பிரர் காலம்வரை படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை அடிப்படையாகக் கொண்டவை. பக்தியினால் முக்தி எளிதாகும்; இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் எனக் கூறி சமணத்தையும் பௌத்தத்தையும் அழிப்பதற்காக சைவமும் வைணவமும் தோற்றுவித்த பக்தி இயக்கம், மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை, தெய்வத்துக்கும் மனிதனுக்குமானக் காதலாக திசை மாற்றியது. கி.பி ஆறாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இல்லாதிருந்த விநாயகர் வணக்கம் பிற்கால நூல்களிலேயே காணப்படுகிறது. சனாதன தர்மம் தமிழகத்தில் ஆழமாகக் கால் பதிக்க பக்தி இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. பின்னாளில் சைவத்துக்கும் வைணவத்துக்குமான மோதல் என்பது தனிக்கதை.

சனாதன தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்எஸ்-பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் கால்பதிக்க முயலும் இத்தருணத்தில் சனாதன தர்மம் குறித்தப் புரிதல் காலத்தின் கட்டாயம் என்பதால் அது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்