பாரதிய
ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக தமிழகத்தில் எடப்பாடி கும்பலிடம்
தமிழகம் சிக்கிய பிறகு பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சனாதனிகளின் நாக்கு
தடித்து விட்டது. இதனால் பெரியார் மறைவுக்குப் பிறகு சற்றே உறங்கிக்கிடந்த
பகுத்தறிவு - சுயமரியாதை குறித்த விவாதங்கள் இன்று தீவிரமடைந்துள்ளன. இதன் விளைவை
சகல துறைகளிலும் காண முடிகிறது.
வீடு, தெரு, ஊர், அலுவலகம், நாடு,
ஊடகம் என எங்கு பார்த்தாலும் சாதி-மதம் குறித்து பேச்சாகத்தான்
இருக்கிறது. வாட்ஸ்அப் குழுக்களிலும், முகநூலிலும் நண்பர்களிடையே இது குறித்து
மயிர் பிளக்கும் விவாதங்கள் நடக்கின்றன. முகநூல் நட்பாவது முகம் பார்த்திராத
நட்பு. முகநூல் வட்டத்திலிருந்து ஒருவர் விலகினால் பெரிதாக நட்டம் ஏற்படப்
போவதில்லை. ஆனால் வாட்ஸ்அப் குழு நட்பு மிக நெருக்கமானது. பெரும்பாலும் முகம்
பார்த்துப் பழகிய வட்டம். நேற்றுவரை சுக துக்கங்களில் இரண்டரக் கலந்த நட்பு.
சாதி-மதம் சார்ந்தப் பதிவுகளால் இந்த நட்பு வட்டமே இன்று அதகளப்படுகிறது. இதனால்
நேற்றுவரை முகம் பார்த்துக் கொண்டவர்கள் இன்று முதுகைக் காட்டி நகர்கிறார்கள்.
அரசியல் கருத்துக்களும் சர்ச்சையில் சிக்குவதால் நடையின் வேகம் சற்றே கூடுகிறது.
பொதுவாக
சாதி-மதம்-அரசியல் சார்ந்தப் பதிவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தங்களது நட்பைத்
தக்கவைத்துக் கொள்ளவே இவர்கள் முயலுகின்றனர். தான் சாதி-மதம் பார்ப்பதில்லை
என்றும், அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் நட்புடன்
பழகுவதாகவும்தான் பலரும் தங்களைக் கருதிக் கொள்கின்றனர். இவர்கள் கருதுவது
சரிதானா? இல்லை என்பதைத்தான் இன்றைய சமூக நடப்பு காட்டுகிறது. கல்வி-வேலை
வாய்ப்பில் இட ஒதுக்கீடு, பதவி உயர்வு, காதல்-சாதி மறுப்புத் திருமணங்கள், வழிபாட்டுரிமை
உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இதைக் காண முடிகிறது. ஒரு வரியில் சொன்னால் சாதியும்
மதமும், அதையொட்டிய உயர்வு – தாழ்வு – பொறாமை - பகைமை எண்ணங்கள் பலரது வாழ்வில்
இரத்தமும் சதையுமாக ஒன்று கலந்து விட்டன.
கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்றார்கள். தூண்களையும்
உடைத்துப் பார்த்தோம், துரும்மையும் கிள்ளிப் பார்த்தோம், கடவுளைத்தான்
காணமுடியவில்லை. ஆனால் சாதியும் மதமும் அங்கிங்குகெனாதபடி எங்கும்
வியாபித்திருக்கிறது.
தமிழர்
வாழ்வில் சாதி இல்லை, மதம் இல்லை என்கின்றன சங்க இலக்கியங்கியங்கள். பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவனின் வாக்கு அதை உறுதி செய்கிறது. பிறகு தமிழனின்
வாழ்வில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதியும் மதமும் எப்படி ஊடுருவியது? சாதி –
மதம் மட்டுமல்ல அதைச் சார்ந்த சடங்குகளும், சம்பிரதாயங்களும், நம்பிக்கைகளும் மனித
வாழ்வில் எப்படி ஒன்று கலந்தன? சனாதன தருமம் என்றால் என்ன? இதற்கு எது அடிப்படை? இவற்றை
எல்லாம் யார் போதித்தது? இது குறித்துதான் இந்தத் தொடரில் பேசவிருக்கிறோம்.
ஊரான்
தொடரும்
No comments:
Post a Comment