Thursday, January 16, 2020

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? தொடர்-2


பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியும், நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் மற்றும் உயிரினங்களும், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாலில்லாக் குரங்கும், பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதனும் தோன்றியதாக பரிணாமக் கோட்பாடு கூறுகிறது. ஆப்ரிக்காவிலிருந்துதான் மாந்தவினம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டமே குமரிக் கண்டத்திலிருந்து பிரிந்ததுதான் என்பதால் மாந்தவினத்தின் தோற்றம் குமரிக்கணடமே என தமிழ் வரலாற்றறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.

முதலில் விலங்குகளைப் போலவே வேட்டையாடி வாழ்ந்த மனிதன் பிறகு பயிரிடுதலைத் தொழிலாகக் கொண்டு ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கி உள்ளான். உழவுத் தொழிலுக்கான கருவிகளின் தேவை மற்றும் செம்பு, வெண்கலம், இரும்பு என தொடர் உலோகக் கண்டபிடிப்புகளும் கருவிகள் பயன்பாடும் கைவினைத் தொழிலுக்கு வித்திட்டுள்ளன. கைவினைத் தொழில் பட்டறைத் தொழிலுக்கு வித்திட்டு அதுவே ஆலைத் தொழிலுக்கு வித்திட்டுள்ளது. இன்று நாம் காணும் நவீன சமுதாயம் இப்படித்தான் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் சிந்து சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், சீன நாகரிகம் என பல்வேறு நாகரிகங்கள் இருந்ததாக அறியப்படுகிறது. கி.மு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் குறித்த அகழ்வாய்வு முடிவுகளும் கீழடி அகழ்வாய்வு முடிவுகளும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிந்து சமவெளி
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் பழம் பெரும் நாகரிகம் இருந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் செப்புக் காலமும், தமிழ் மொழிக்கான வரிவடிவக் காலமும் கி.மு 10000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பார் சிலர். இந்தக் காலத்தில் முதல் தமிழ் கழகமும் அதன் பிறகு கி.மு 2500 ஆண்டு வரை இரண்டாம் தமிழ்க் கழகமும் செயல்பட்டு வந்ததாகத் தமிழறிஞர்கள் கருதுகின்றனர். இக்காலகட்டங்களில் பல்வேறு கடற்கோள்கள் அடுத்தடுத்து நிகந்ததால் பல்வேறு திசைகளில் தமிழர்கள் குடியேற்றம் நிகழ்ந்ததாகவும் அதில் ஒரு பிரிவினர் சிந்து சமவெளியைத் தமது இருப்பிடமாகக் கொண்டனர் என்பதும் அறிஞர்கள் கருத்து.

தொல்லியல் ஆய்வுச் சான்றுகள் தவிர்த்து, பழைய நாகரிகங்களை அறிவதற்கு இலக்கியங்களே பெரிதும் பங்காற்றுகின்றன. தமிழின் தொன்மை வாய்ந்த இலக்கியம் தொல்காப்பியம். தொல்காப்பியர் காலம் கி.மு. 1000-700 என்பது தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. தொல்காப்பியம் வளர்ச்சியுற்ற தமிழ் மொழியின் வளமையைக் கூறுகிறது. தொல்காப்பியர் புதியனவாக எவற்றையும் சொல்லிவிடல்லை. சுருக்கமாகச் சொன்னால் தொல்காப்பியம் முந்தைய தமிழ் நூல்களின் தொகுப்பு எனலாம். தொல்காப்பியருக்கு முன்னமே செம்மையான தமிழர் நாகரிகம் இருந்தமைக்கு தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது.
கீழடி

சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பிறகே கி.மு. 2000 ஆண்டு வாக்கில் ஆரியர்கள் இந்திய நிலப்பகுதிக்குள் வந்ததாகக் கருதப்படுகிறது. கி.மு 500 வாக்கில் தமிழர் பகுதிகளில் ஆரியத்தின் தாக்கம் உணரப்பட்டதாகக் கூறுகின்றனர். தொல்காப்பியம் தொடங்கி களப்பிரர் ஆட்சிக்காலமான கி்.பி 575 வரை தமிழர் வாழ்வில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐவகை நில வாழ்வியல் முறையே சொல்லப்பட்டுள்ளன. ஆரியர்களின் வருண முறையும், சாதி முறையும் அறியப்பட்டிருந்தாலும் அவை தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்ததில்லை. ஆரியக் கதைகளிலும் புராணங்ககளிலும் தமிழரின் ஐவகை நில வாழ்வியல் முறையைக் காணவியலாது என்பதை நினைவில் கொள்க.

மாயோன் (திருமால்) – சேயோன் (முருகன்) – வேந்தன் (இந்திரன்) -வருணன் பற்றிய செய்திகளும், அந்தணர் – அரசர் – வணிகர் - வேளாளர் பற்றி ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்கிற செய்திகளும் தொல்காப்பியப் பாடல்களில் இடம் பெற்றுள்ளமை, ஆரியம் அக்காலத்தில் புகுந்தமையை இயம்புவதாக இருந்தாலும் அது தமிழரின் வாழ்வியலை ஆட்கொண்டுவிடவில்லை என்பதே உண்மை. சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கிய நூட்கள் சிலவற்றில்கூட இத்தகைய ஆரியக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளமை இங்கு நோக்கத் தக்கது. 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? - தொடர்-1


No comments:

Post a Comment