Thursday, December 19, 2024

முதலைக் கண்ணீர்! - 2

திருவண்ணாமலை, மத்தாளங்குளத் தெரு முனையில் கம்பி வலைக்குள் பெரியார். வலப்பக்கம் ஸ்ரீ கெங்கையம்மன். அதற்கு அருகிலே கிறிஸ்தவ தேவாலயம்.

சிலைகளுக்கு வலை போடலாம், ஆனால் சிந்தனையைச் சிறைப்படுத்திவிட முடியுமோ? அதனால்தானோ என்னவோ, கிழவன் அமர்ந்தாலே அலறுகிறது ஒரு கூட்டம். சிலைகளுக்குப் 'பவர்' உண்டா? நம்புகிறேன் நானும் இந்தக் கிழவனைக் கண்ட பிறகு.


பேருந்துத் திரையில் விஜயகாந்தின் 'பெரியமருது'வைப் பார்த்துக் கொண்டே தண்டராம்பட்டைத் தாண்டி விட்டேன். திரையில் ஒரு கண்ணுமாக, வெளியில் ஒரு கண்ணுமாக பார்வை அலைபாய, திரையில் மகேஷ் ஆனந்த், ரஞ்சிதாவை கொத்திக் குதரத் துரத்த, தனது 'கற்பைக்' காக்க அவள் மாடியிலிருந்து விழுந்து மாண்டு போகிறாள். வெளியில், கிரானைட் காடையர்களால் கொடூரமாய் சிதைக்கப்பட்டு வீழ்ந்து கிடந்தன சீரிளம் குன்றுகள்.

ஃபெஞ்சலால் உலகின் கவனத்தை ஈர்த்த சாத்தனூர் அணையை நோக்கிப் பேருந்து விரைந்தது. 'காரியத்துக்கு' என்று சொல்லி கட்டணம் இன்றி உள்ளே சென்றேன். பைரவனைச் சுமந்த கலைப்போ என்னவோ, பைரவனின் வாகனங்கள் சில சாலையில் படுத்துக் கிடந்தன. 

வழக்கமாகக் 'காரியம்' நடக்கும் ஒன்பதுகண் பாலத்திற்கு அருகில் ஐயர் சம்மணமிட்டு அவரது வேலைகளைத் தொடங்கியிருந்தார். உறவுகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அதற்குள், தமிழ்நாட்டின் அழகிய அணையை ஒரு சுற்றுப் பார்த்து வரலாம் என்று உறவுப் பேரனோடு புறப்பட்டேன். 

முதலைப் பண்ணைக்குப் போகும் வழியில் சிற்றோடையில் ஊற்றுநீர் ஓடிக்கொண்டிருந்தது. இடப்பக்கம் அடர்ந்த மரங்கள். மரங்களுக்கு அடியில் ஆட்கள் அடிக்கடி சென்று வரும் பாதைத் தடம். எட்டிப் பார்த்தேன். அங்கே மதுப் பிரியர்களின் கண்ணாடிக் காடுகள். 

பார்வையைத் திருப்பி நேரே சென்று பண்ணைக்குள் நுழைந்தோம். ஆசியாவிலேயே பெரிய பண்ணை. 500 இருந்த இடத்தில் இன்று 300 மட்டுமே. ஆறுகளிலும் அணைகளிலும் சுதந்திரமாய் உலாவும் முதலைகள், பாவம் இங்கே மக்களை மகிழ்விக்கச் சிறு சிறு குட்டைகளில் கைதிகளாய். 

வஞ்சக நெஞ்சுடன் நாம் வடிக்கும் போலிக் கண்ணீரை, முதலைக் கண்ணீர் என்று எவன்தான் சொன்னானோ? ஆனால் இங்கே முதலைகளின் நிஜக் கண்ணீரைக் காண முடிந்தது.

கொட்டடிக்குள், சிறு தொட்டிகளில் வண்ண மீன்கள், கண்ணாடிச் சுவர்களில் முட்டி மோதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தன.


கூரைகளுக்குக் கீழே, கம்பி வலைகளுக்குள் பச்சைக்கிளிகளும், பலவண்ணப் பறவைகளும், மாடப் புறாக்களும், மயில்களும், முயல்களும் என வாயில்லா ஜீவன்கள் அடைக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்தன.

சுதந்திரமாய் நீந்தி, பறந்து, ஓடி ஆடி உல்லாசமாய் வாழ வேண்டிய இடத்தில், சிறைக் கைதிகளாய் நம் கண்முன்னே. சிறைக்குள் வாடுவோரின் கண்ணீரைக் கண்டு இரசிக்கிறோமே, நாம் 'சேடிஸ்டுகளா' என்ற எண்ணம் ஒரு பக்கம் என்னைக் குடைய, அணையின் பதினோருகண் நீர்ப்போக்கியை நோக்கி மெதுவாய் நடந்தோம்.

பசி இல்லை என்றாலும், சுற்றுலாத் தளங்களில் பார்த்ததை எல்லாம் வாங்கித் தின்ன நாம் பழகிக் கொண்டதால், ஐஸ்கிரீம், பஜ்ஜி, நொறுக்குத் தீனிகளுக்குப் பஞ்சம் இல்லை. பஜ்ஜியை கையில் வாங்கிய அடுத்த நொடியே, தாவிப் பாய்ந்து பறித்துச் சென்றது வானரம் ஒன்று. இது அவர்களின் தேசமன்றோ?

காரப்பட்டைப் புரட்டிப் போட்டு, கடலூரை மூழ்கடித்த லட்சம் கனஅடி எப்படி இருக்கும் என்பதன் சுவடுகள் மட்டுமே அங்கே தென்பட்டன. பதினோருகண்
நீர் போக்குப் பாதையில், சிறு குன்றுகளை ஏறி மிதித்து, மரங்களை எல்லாம் வளைத்து நெளித்து, பாய்ந்து சென்ற பெருவெள்ளத் தடங்கள் பளிச்செனத் தெரிந்தன. நாங்கள் பார்த்தபோது வெளியேறிய 2000 கனஅடியே பேரிரைச்சலோடு சீறிப்பாய்ந்தது. அப்படியானால் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கன அடி எப்படி இருந்திருக்கும்? நினைக்கையிலே உடல் சிலிர்க்கிறது.


பிற்பகல் 2 மணி. அணையின் பரந்த நீர் பரப்பைப் பார்த்தவாறு கீழே இறங்கினோம். மீனவர்கள் மேலே ஏறிக் கொண்டிருந்தார்கள். "என்ன மீனுக்கா?" என்று வினவிய போது, "ஆம், நாளை காலைதான் திரும்புவோம்" என்று கடந்து சென்றனர்.

அணையின் காட்சிகள் இங்கு கவர்ச்சிக் காட்டியதால், நாங்களும் சில இடங்களில் மயங்கினோம்.  கைபேசியில் அவற்றை உள்ளடக்கியவாறு பேசிக்கொண்டே வந்தபோது, திடீரென, "நீங்கள் எத்தியிஸ்டா?" என்று கேட்டான் பேரன். "ஆம்" என்றேன். "நானும்தான்" என்றான். எனக்குள் ஒரு இளமைத் துள்ளல். 'அடடா, நம்மைப் போல் ஒருவன்' என்ற பெருமை என்னுள்.


50 ஆண்டு இடைவெளியில்,
இருவருமே ஒரே பருவத்தில், ஆம், பள்ளிப் பருவத்தில், பிறரின் தூண்டுதல் ஏதுமின்றி தானாகவே "எத்தியிஸ்ட்" ஆன ஒற்றுமை ஒன்று போதாதா பெருமை கொள்ள? நம்பிக்கைகளை விதைக்காமல் இருந்தால் நாமும் இங்கு 'நார்வே'க்கள்தானே?
(எத்தியிஸ்ட் - atheist)- நாத்திகன்)

"ஐயர் வந்தார், அள்ளிச் சென்றார்" என்பதற்கிணங்க 'காரிய' வேலைகள் கனஜோராய் நடந்து கொண்டிருந்தன. ஆண்கள் முகம் மழித்து, காசு பணம் வேட்டி சேலை என முறையுள்ளவர்கள் சம்பந்தம் கட்ட, கடைசியில் ஆற்று நீரை தலையில் தெளித்து தீட்டுக் கழிக்க, எதுவும் செய்யாதிருந்த என்னைப் பார்த்து "ஏன் நீங்கள் மட்டும் எதுவும் செய்யவில்லை?" என மற்றொரு பேரன் கேட்டான். 

"பிறப்பு, இறப்பு, பெண் பருவம் எய்தல், மாத விடாய், கிரகப்பிரவேசம் என எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் நமக்குத் தீட்டாக்கி, அதைக் கழிக்க சடங்குகள் சம்பிரதாயங்களைப் புகுத்தி, அன்றே நம்மை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி உள்ளனர். இவை எல்லாமே புரோகிதர்கள் தங்களுடைய வருமானத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஏற்பாடுதானே தவிர, இதனால் கால நேர பண விரயத்தைத் தவிர, நமக்கு ஆவப்போவது ஒன்றுமில்லை என்பதனால், நான் இவற்றை எல்லாம் செய்வதில்லை" என்று எடுத்துச் சொன்னேன். 

கம்பி வலைகளால் சூழப்பட்ட சமுதாயக் கூடத்திற்கு வெளியே, பைரவனின் சில வாகனங்களும், எண்ணற்ற வானரங்களும், ஒரு சில வராகன்களும், தங்கள் வயிற்றுப் பாட்டுக்கு சமுதாயக் கூடத்தைச் சுற்றி வளைக்க, கூரைக்கு உள்ளே சிறைக் கைதிகளாய் நாங்கள், கோழி பிரியாணியுடன் பசியாறினோம். 

இறப்பின் தீட்டைக் கழிக்க சடங்குகள் சம்பிரதாயங்கள்  இருக்கு. ஆனால், உறவுகளுக்கிடையில் எழும் பகைமையைப் போக்க அப்படி ஏதேனும் உண்டா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்க, அவரவர் வந்த திசை நோக்கிப் பயணமானோம்? 

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவு 

No comments:

Post a Comment