வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி..
இந்தத் தொடரின் முதல் பகுதியில் குறிப்பிட்டதைப் போல,
தமிழ் நாட்டில், அருந்ததியருக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான பள்ளர், பறையர் சாதி மக்களின் கோபம்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து (MBC) வன்னியர்களுக்கு என தனி உள் ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற சாதி மக்களின் கோபம்,
மத்திய அரசுப் பணிகளில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட தனி EWS ஒதுக்கீட்டுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் கோபம்,
மேலும்,
கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பஞ்சமசாலி லிங்காயத்துகள் தங்களுக்குத் தனி ஒடுக்கீடு கோரி,
மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,
ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஜாட்டுகளுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,
என நாடெங்கிலும் ஒவ்வொரு சாதியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் உள்ள எல்லாச் சாதியினரும், வகுப்புவாரி அடிப்படையிலும், EWS அடிப்படையிலும் இட ஒதுக்கீடு
பெற்று வரும் சூழலில், எதற்காகத் தற்போது ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு எனத் தனி ஒதுக்கீடு கேட்டுப் போராடுகின்றனர்?
ஏற்கனவே நாம் குறிப்பிட்டதைப் போல கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமுதாய அளவிலும் சாதிகளுக்கிடையில் சமனற்ற நிலையே இன்றும் நீடிக்கிறது.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் (MBC) உள்ள கள்ளர், மறவர், வன்னியர் போன்ற சாதிகளோடு ஒப்பிடும் பொழுது நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளின் கல்வி பொருளாதார சமூகநிலையும் சமமானதல்ல. இவர்கள் அனைவரையும் ஒரே தொகுப்பில் வைத்திருப்பதால், இந்தத் தொகுப்பிலேயே உள்ள மிகவும் கீழ்நிலையில் உள்ள நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
அதேபோல, மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) உள்ள கொங்கு வெள்ளாளர், நாயுடு, ரெட்டி, முதலியார், வன்னியர், கள்ளர், மறவர் போன்றச் சாதிகளின் கல்வி பொருளாதார சமூக நிலையும் சமமானதல்ல. கொங்கு வெள்ளாளர், முதலியார் ஆகியச் சாதிகளோடு ஒப்பிடும் போது வன்னியர்களுக்கான வாய்ப்பும்; நாயுடு, ரெட்டி போன்றச் சாதிகளோடு ஒப்பிடும் பொழுது கள்ளர், மறவர் சாதிகளுக்கான வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும்.
பட்டியல் சாதி வகுப்பில் உள்ள பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய மூன்று சாதிகளும் கல்வி பொருளாதார சமூக நிலையில் சமமாக இல்லை. விகிதாச்சார அடிப்படையில் தங்களுக்கு உரிய பங்கைப் பட்டியல் வகுப்பிலிருந்து
அருந்ததியர்களால் பெற முடிவில்லை. ஆகையால்தான் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அருந்ததியர்கூட தனி ஒரு சாதி அல்ல. அதுவும் சில சாதிகளை உள்ளடக்கிய ஒரு வகுப்புதான் (Category). உள் ஒதுக்கீடு வந்த பிறகு, அருந்ததியர் சாதிகளுக்குள் இட ஒதுக்கீடு குறித்து இப்போதைக்குப் பிரச்சனை எதுவும் எழவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இவர்களுக்கிடையில்கூட, இட ஒதுக்கீடு தொடர்பாகப் பிரச்சனைகள் வரக்கூடும்.
அப்படியானால், வகுப்புவாரி விதாச்சாரப் பிரதிநிதித்துவ கோரிக்கை (Class based reservation) என்பது, சாதிவாரி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கோரிக்கையாக
(Caste based reservation) உருவெடுத்து வருகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அலுவலகங்களில் நிலவும் சாதிய முரண்கள் குறித்து அடுத்து பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment