மண்டல் குழு அமைக்கப்பட்டாலும், அதன் அறிக்கைக்காகக் காத்திராமல், மீண்டும்
டெல்லி நோக்கிப்
பயணமானார் ஆனைமுத்து. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்பட்டோருக்கு
31% இடஒதுக்கீடு
இருக்கும் போது, வடஇந்திய
மாநிலங்களில் 38 ஆண்டுகளாக மத்திய அரசுப் பணிகளை விடுங்கள், மாநில அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில்கூட
இடஒதுக்கீடு இல்லாமல் அவர்கள் ஏமாற்றப்பட்டு வருவதை அவர்களுக்கு உணர்த்திய பிறகு,
இது குறித்த விவரங்களை இந்தியில் மொழிபெயர்த்து, அதை சென்னையிலேயே அச்சிட்டு, அங்கே எடுத்துச் சென்று கொடுத்த
பிறகு, விழிப்புற்ற
வடஇந்திய பிற்படுத்தப்பட்ட மக்கள் 30000 பேர் பங்கேற்ற பேரணியால் மார்ச் 23, 1979 அன்று டெல்லி குலுங்கியது. பெரியாரும்
அம்பேத்கரும் லோகியாவும்
உயிர் பெற்று உடன் சென்றனர்.
மார்ச் 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களிடம், ஆனைமுத்து தலைமையிலான குழு, இடஒதுக்கீடு கோரிக்கை மனுவைக் கொடுத்து நேரடியாக வலியுறுத்திய
போது, "தமிழ்நாட்டில் பிராமண மாணவர்களுக்கு
கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லையாமே?" என தேசாய் கவலைப்பட்டாரே ஒழிய, வட இந்தியாவில் 38 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோருக்கு எதிலுமே
இடம் இல்லையே என்பது
பற்றி கவலைப்படவில்லை.
நாட்டின் பிரதமரே இப்படி இருந்தால், போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை
உணர்ந்து, மார்ச்
1979 இல் ராஜஸ்தான் சட்டப்பேரவை முற்றுகைப் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடா? இது என்ன புதுசா இருக்கு?” என அங்கிருந்த அமைச்சர்கள் அதிசயமாய்க் கேட்டனர்.
தேசாய் அரசு கவிழ்ந்து, சரண்
சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு,
மீண்டும் ஒரு கோரிக்கை மனுவை ஆனைமுத்து
தலைமையில் பிரதமர் சரண்சிங் அவர்களிடம் நேரில்
கொடுத்து விவாதித்தனர்.
இப்படி பலமுறை மனு கொடுத்தபோதும், செவிமடுக்க மறுத்த நடுவனரசை நம்பி இனி பயன்
இல்லை என்பதால், சிறை
நிரப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்து, 1979 நவம்பரில் டெல்லியில் பிரதமர் வீட்டின்
முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்றாடம் டெல்லியில்
பல்வேறு மறியல் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே நேரம், இட
ஒதுக்கீட்டு கோரிக்கைக்கு எதிராக பார்ப்பனர்கள் அவதூறு பிரச்சாரங்களை பரப்பிவிட,
1929 முதலே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததை விளக்கி விரிவான கோரிக்கை
மனு ஒன்றை, 1979 நவம்பர்
இறுதியில் மீண்டும் பிரதமரிடம் நேரில் கொடுத்து விளக்கம் அளித்தது ஆனைமுத்து தலைமையிலான குழு.
இன்னொரு பக்கம் போராட்டங்களும் தீவிரமடைந்தன. 1979 டிசம்பர் முதல் நாள் அன்று, 1725 வீரர்களும்,
48 வீராங்கணைகளும் கைது
செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு ஆணை பிறப்பிப்பதாக 1979,
டிசம்பர் 3 ஆம் தேதி பிரதமர் வாக்குறுதி கொடுத்தார்.
ஆனால் அந்தோ பரிதாபம், 1979 டிசம்பர் 12 ஆம் தேதி
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் பிரச்சினை கைவிடப்பட்டதாக அரசிடமிருந்து அறிவிப்பு வந்தது.
ஆனாலும் ஆனைமுத்து குழுவினர் தளர்ந்து விடவில்லை. '1943 முதலே தாழ்த்தப்பட்டோருக்கு இட
ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும் சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 16(4),
335, 338(3) களின்கீழ் பிற்பட்டோருக்கு
இடஒதுக்கீடு வழங்க
வழிவகை இருந்தும், 1929 முதலே
சென்னை மாகாண அரசாணைகள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குச் சான்றாக இருந்தும்,
அதை அரசு ஏற்காத நிலையில், இனியும் நாம் பொறுமை காப்பதில் பொருள் ஏதும்
இல்லை; 1955 முதல்
காகா கலேல்கர் குழு பரிந்துரையை அமல்படுத்தி இருந்தால்கூட இன்நேரம் பெரிய அளவுக்கு
முன்னேறி இருக்க முடியும்; எனவே போராட்டங்களை
மேலும் தீவிரப்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை' என்பதை உணர்ந்து போராட முன்வருமாறு
அறைகூவல் விடுக்கப்பட்டது.
1980 இல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகிறார். கடந்த
காலங்களில் குடியரசுத் தலைவர், தேசாய், சரண்சிங் ஆகியோரிடம் மனு கொடுத்ததைப் போல
பிரதமர் இந்திராகாந்தியிடமும் செப்டம்பர் 1981 இல் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது 1978
இறுதியில் அமைக்கப்பட்ட மண்டல் குழு,
1980 இறுதியில்
பிரதமர் இந்திரா காந்தியிடம் தனது அறிக்கையைக் கொடுத்தது.
மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கும்,
அதன் பரிந்துரையை அமல்படுத்துவதற்கும் ஆனைமுத்து அவர்கள் எடுத்த முயற்சிகள் என்ன? அடுத்து பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
No comments:
Post a Comment