Sunday, 22 March 2020

தாய்மை இன்றி தலைமுறையேது? பெண்மை இன்றி பிரபஞ்சமேது?


அம்பேத்கர்-பெரியார் வாசர் வட்டம் தனது 25-வது சந்திப்பில் “சர்வதேச உழைக்கும் மகளிர் நாள்” விழாவை 13.03.2020 அன்று மாலை இராணிப்பேட்டை ‘பெல்’ வளாகத்தில் மிக எழுச்சியோடு நடத்தியது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வை பெண்களே முன்னின்று நடத்தினர்.
சந்தியா
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் தோழர் சந்தியா வேரவேற்புரையாற்றினார். 

அம்பேத்கர், பெரியார் இருவரும் இல்லை எனில் பெண்கள் இதுபோன்று மேடை ஏறி பேசியிருக்க முடியுமா? எனப் பெண் விடுதலைக்காகத் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை தனது தலைமை உரையில் நினைவு கூர்ந்தார் தோழர் கிருபா அவர்கள்.


கிருபா
பல்வேறு தலைவர்கள் போராடிய பிறகும் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் முழுமையாக இன்னமும் கிடைக்கவில்லை; வீட்டிலும், பொது வெளியிலும் பெண்கள் சமமாக நடத்தப்படவில்லை; தலைவர்கள் காட்டிய வழியில் நாம் தொடர்ந்து பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் தோழர் தேன்மொழி அவர்கள்.

தேன்மொழி
இறுதியாக சிறப்புரையாற்றிய தோழர் ஓவியா அன்புமொழி அவர்கள் தனது உரையில்,

இது வெறும் மகளிர் நாள் விழா அல்ல. மாறாக இது சர்வதேச உழைக்கும் மகளிர் நாள் விழா. உழைக்கும் மகளிருக்கான இந்நாளை கோலப் போட்டி, சமையல் போட்டி என சிறுமைப் படுத்தும் வகையில் இதை ஒரு கொண்டாட்ட நாளாக சிலர் மாற்ற முயற்சிக்கின்றனர். இது கொண்டாட்ட நாள் அல்ல. உரிமைகள் பறிக்கப்பட்ட உழைக்கும் மகளிர் தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் கடமையை வலியுறுத்தும் நாள். வேலைக்குச் செல்லும் உழைக்கும் மகளிர் வெளியிலும், வீட்டிலும் உழைத்தாலும் அவர்களது உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை. தாங்கள் சம்பாதிக்கும் பணத்தைக்கூட ஆண்களைப் போல தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செலவு செய்ய முடிவதில்லை. சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும் கணவனிடம் கொடுத்துவிட்டு அற்பச் செலவுகளுக்குக்கூட ஆண்களை அண்டியிருக்க வேண்டி உள்ளது.
ஓவியா அன்புமொழி
பெண்கள் தங்களது அரசியல் உணர்வையோ, காதல் உணர்வையோ வெளிப்படுத்த முடிவதில்லை. மீறி வெளிப்படுத்தினால் திமிர் பிடித்தவள் என பட்டம் சூட்டுகிறார்கள். பெண்கள் தங்களது சிந்தனையைக்கூட வெளிப்படையாகப் பேச முடியாத சூழல்தான் நிலவுகிறது. ஆனால் வரலாறு நெடுகிலும் பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தே வந்துள்ளனர்.  மறைமலை அடிகளார் அவர்களின் மகள் நீலாம்பிகை அம்மையார் அவர்கள் தனது தந்தை தனித்தமிழ் இயக்கத்தை மேற்கொள்வதற்கு உந்து சக்தியாக இருந்துள்ளார்.

திரைப்படங்களிலும், சின்னத் திரையிலும் பெண்கள் போகப்பொருளாகவே சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். ஆண்கள் தெரிவு செய்வதைப் போல பெண்கள் தங்களுக்கு ஏதுவான உடையை தீர்மானிக்க முடிவதில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களே பெண்கள் என்ன மாதிரி உடையை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. இயற்கையாக மலரும் காதலில்கூட சாதிக்கு வெளியே காதலிக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

சிக்காகோ நகரில் நடைபெற்ற 8 மணி நேர உழைப்பிற்கான போராட்டத்திலும், 1917 ருசியப் புரட்சியிலும் உழைக்கும் மகளிரின் பங்கு மகத்தானது. பெண்களுக்கு வாக்குரிமை, சம வேலைக்கு சம ஊதியம் என ஆண்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக பெண்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். தொடர் போராட்டத்தின் விளைவாக 1975 இல் மார்ச் 8 ஐ சர்வதேச உழைக்கும் மகளிர் நாளாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

இன்று அதிகரித்து வரும் பார்ப்னப் பாசிச பயங்கரவாதத்தினால் நமது பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. எதை உண்பது, எதைப் படிப்பது, எதை உடுத்துவது என அனைத்தையும் இந்துத்துவா சக்திகளே தீர்மானிக்கின்றன. நீட் தேர்வால் அனிதாவை இழந்தோம். 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என நமது கல்வி உரிமையை பறிக்க முயன்றார்கள். எதிர்த்து நின்று முறியடித்தோம். நமது குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் போராட்டத்தில் பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள்.

பறிக்கப்படும் நமது உரிமைகளை காத்திட, உரிமைகளை மீட்டெடுக்க அம்பேத்கர்-பெரியார் வழியில் களமாடுவோம். நமது போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

என எழுச்சியோடு தனது கருத்துக்களை முன்வைத்தார்.

மூத்த தோழர் தங்கவேல் அவர்களும், இளம் தோழர் வீரபாண்டியன் அவர்களும் பெரியார் மற்றும் அம்பேத்கர் குறித்து இடையிடையே பாடல்கள் பாடினர்.
தங்கவேல்
வீரபாண்டியன்
மொத்த நிகழ்வையும் தோழர் ஜெயக்கொடி அவர்கள் சிறப்பாக நெறியாளுகை செய்தார். இறுதியாக தோழர் காவியா அவர்கள் நன்றி கூற தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

ஜெயக்கொடி
காவியா










தொகுப்பு
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடைமையை நேசித்த பெரியார்!

ஆளுமையை வளர்க்கும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்







Saturday, 7 March 2020

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! -----2


CAA-வுக்கு எதிராகத் தொடங்கியப் போராட்டம் NPR, NRC-க்கு எதிரான போராட்டமாக ஏன் மாறியது?

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 256. மாநில அரசுகள் நிறைவேற்ற மறுக்கும் பட்சத்தில் அரசமைப்புச் சட்டம் பிரிவு 356-ஐப் பயன்படுத்தி அவ்வரசுகளை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்றாலும்கூட CAA, NPR, NRC-ஐ நடைமுறைப்படுத்தப் போவதில்லை என சில மாநில அரசுகள் தைரியமாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன.

அது போன்றதொரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்திய சூழலிலும், CAA-வால் தமிழகத்தில் யாருக்கும் பாதிப்புக் கிடையாது எனக்கூறி NPR-க்கான பணிகளைத் தொடங்க உள்ளது எடப்பாடி அரசு. முதலில் CAA-வை ஆதரித்த சில மாநில அரசுகள்கூட தற்போது அதை எதிர்க்கின்ற போது தாங்கள் மோடியின் எடுபிடிகளாகத்தான் இருப்போம் என விடாப்பிடியாக நிற்கிறது எடப்பாடி கும்பல்.

அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக வந்துள்ளவர்களை அடையாளம் காண்பதும், CAA வை நடைமுறைப்படுத்துவதும் நேரடியாக சாத்தியப்படாது. முதலில் இந்தியாவில் வாழுகின்ற மொத்த மக்களையும் அடையாளம் காண வேண்டும். அதற்குத்தான் NPR (National Population Register) என்று சொல்லக் கூடிய தேசிய மக்கள் தொகை பதிவேடு. இதற்கு ஒருவர் ஏராளமான ஆவணங்களைக் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டப்பபடும் ஆவணங்கள் சரியாக இருந்தால், சரியாக உள்ளவர்களை மட்டும் தனியாகப் பிரித்து பதிவேடு ஒன்றை தயாரிப்பார்கள். அதுதான் NRC (National Register of India Citizens) என்று சொல்லக்கூடிய தேசிய குடிமக்கள் பதிவேடு. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே இந்தியக் குடியுரியைப் பெறமுடியும்.

நீங்கள் இந்தியர்தானா என்பதை நிரூபிக்க, நீங்கள் எங்கே எப்பொழுது பிறந்தீர்கள் என்பதற்கான ஆதாரத்தையும், உங்களது பெற்றோரும் இந்தியர்கள்தானா என்பதை நிரூபிக்க அவர்களது பிறப்பிடம் மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும். ஆதாரத்தைக் காட்டத் தவறினால் நீங்கள் சந்தேகப் பட்டியலில் வைக்கப்படுவீர்கள். உரிய ஆவணங்களைக் காட்டி நீங்கள் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். தவறினால் நீங்கள் அயல்நாட்டினர் (Foreigner) என அறிவிக்கப்படுவீர்கள்.
 
அயல்நாட்டினர் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் அயல்நாட்டினரை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள “அயல்நாட்டினருக்கான தீர்ப்பாயத்தில்” (Foreigners Tribunal) நீங்கள் மேல் முறையீடு செய்யலாம். அங்கேயும் உங்களால் உரிய ஆவணங்களைக் கொண்டு நீங்கள் இந்தியர்தான் என நிரூபிக்கத் தவறினால் இந்தியாவில் வாழுகின்ற தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய உங்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் அங்கே நீதி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை. அசாமின் சபீதா பேகமும், முனிந்திர பிஸ்வாசும் ஏற்கனவே கௌஹாத்தி உயர் நீதிமன்றம் வரை சென்று வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, PAN அட்டை, ஓட்டுநர் உரிமம், சொத்துப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டிப் போராடியும் அவர்களால் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லை. மேலும் அங்கெல்லாம் சென்று வாதாடுகிற வலிமையும் பலருக்கு இருக்காது.

நீங்கள் அயல்நாட்டினர் என்று மட்டும்தான் சொல்வார்களேயொழிய எந்த அயல்நாட்டுக்காரர் என்று சொல்லமாட்டார்கள். எனவே நீங்கள் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாது. இந்த நிலையில் எந்த நாடு உங்களை சேர்த்துக் கொள்ளும்? பிறகு எங்கேதான் செல்வது? உங்களை நேரடியாகக் கொன்று விடமாட்டார்கள். முதலில் தடுப்பு முகாம்களில் அடைப்பார்கள். ஒரு குடும்பமே தங்களது குடியுரிமையை நிரூபிக்கத் தவிறானால் தாய் ஒரு முகாமிலும், தந்தை ஒரு முகாமிலும், மகன் ஒரு முகாமிலும், மகள் ஒரு முகாமிலும் என தனித்தனியாக பிரித்து விடுவார்கள். அதோடு உங்களது குடும்பம் என்கிற பந்தமும் முடிவுக்கு வந்துவிடும். நீங்கள் அரும்பாடுபட்டு சேர்த்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை எல்லாம் அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ளும். எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ அல்லது முகாம்களில் உரிமைக்குரல் எழுப்பினாலோ சித்தரவதை செய்து மெல்ல மெல்லக் உங்களைக் கொன்று விடுவார்கள். இதுதான் ஜெர்மனியில் நடந்தது. அதையேதான் மோடி-அமித்ஷா கும்பல் செய்யப் போகிறது.

அசாம் தடுப்பு முகாம்
NRC-ஐ நடைமுறைப்படுத்தியதன் மூலம் அசாமில் 12 இலட்சம் இந்துக்களும் 7 இலட்சம் இஸ்லாமியர்களும் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடைத்து வைப்பதற்காக அசாமில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஏற்கனவே இதில் அடைக்கப்பட்டு விட்டனர். அவ்வாறு அடைக்கப்பட்டுள்ளவர்களில் இந்துக்களை மட்டும் விடுவிக்க வேண்டும் என சமீபத்தில் மோடி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் மட்டும் தொடர்ந்து முகாம்களில் இருப்பார்கள். இது மேலும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதன் மூலம் மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது மோடி-அமித்ஷா கும்பல்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து 31. டிசம்பர் 2014-க்கு முன்பு இந்தியாவிற்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள் அவர்கள் மேற்கண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டினால் அவர்கள் அனைவரும் CAA சட்டத்தின மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும். மாறாக ஒருவர் மேற்கண்ட நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர் எனவோ அல்லது இலங்கையிலிருந்து வந்த ஈத்தமிழர் எனவோ அல்லது மியான்மர் ரோஹிங்கியா முஸ்லீம் எனவோ கண்டறியப்பட்டால் அவர் CAA சட்டப்படி இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது. அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். மறுத்தால் முகாம்களில் அடைக்கப்படுவார்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அயல்நாடுகளிலிருந்து வந்துள்ள இந்து, கிருத்தவர், பௌத்தர், சீக்கியர், ஜைனர், பார்சி ஒருவரால் CAA சட்டத்தின் மூலம் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியும். ஆனால் காலம் காலமாக இந்தியாவில் வாழும் ஒரு இந்து, ஒரு இஸ்லாமியன், ஒரு கிருத்தவன் NPR மற்றும் NRC மூலம் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் தனது குடியுரிமையை இழக்க நேரிடும். இஸ்லாமியர்களை CAA ஒதுக்குகிறது என்றால் NPR மற்றும் NRC ஒட்டு மொத்த இந்தியர்களையும் அச்சுறுத்துகிறது. இந்த உண்மையை மக்கள் மெல்ல மெல்ல புரிந்து கொண்டு வருவதால்தான் CAA-வுக்கு எதிராகத் தொடங்கியப் போராட்டம் தற்போது NPR மற்றும் NRC ஆகிவற்றிற்கு எதிரானப் போராட்டமாக வலுப்பெற்றுள்ளது.

நேற்றுவரை இந்தியக் குடிமக்களாகக் கருதியவர்களை இன்று முதல் இல்லை என்றால் அது அநீதி அல்லவா? இது அநீதியானது என்பதைப் புரிந்து கொள்ளுகிற ஜனநாயகப் பக்குவத்தை இன்னமும் பெரும்பாலான இந்திய மக்கள் பெற்றிருக்கவில்லை என்பதுதான் பார்ப்பனக் கும்பலின் பலம். இந்தப் பலத்தில்தான் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறது அக்கும்பல்.

பொன்.சேகர்

வழக்குரைஞர்


தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! ---1

சட்ட அங்கீகாரம் இல்லாத NPR மற்றும் நீதிமன்றத்தின் பாராமுகம்!


குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?

CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!


Friday, 6 March 2020

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! ---1

CAA, NRC, NPR-க்கு எதிரானப் போராட்டம் இதுவரை அமைதியாக நடைபெற்றுவந்தது. இஸ்லாமியர்களையும் தாண்டி பிறர் மத்தியிலும் இப்போராட்டத்திற்கான ஆதரவு பெருகத் தொடங்கியது. இனிமேலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது முதலுக்கே மோசமாகி விடும் என்பதால் 24.02.2020 அன்று டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது திட்டமிட்டே வன்முறையை ஏவி உள்ளது சங் பரிவார பார்ப்பனக் கும்பல். வன்முறை மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதுதான் பார்ப்பனியம் கையாண்டு வரும் நடைமுறை. இதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடக்கின்றன.

டெல்லி ஷாகின்பாக் போல நாடெங்கிலும் பல இடங்கள் ஷாகின்பாக்குகளாக மாறி உள்ளன. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் ஷாகின்பாக்கை காக்கிச் சட்டைகளைக் கொண்டு சீர்குலைக்க முயன்று தோற்றுப் போன சங் பார்ப்பனப் பரிவாரங்களின் கைப்பாவையான எடப்பாடி கும்பல் அதன் பிறகு நீதிமன்றத்தின் மூலம் போராட்டத்தைச் சீர்குலைக்க முயன்று வருகிறது. இது ஏதோ இஸ்லாமியர்கள் பிரச்சனை என்பது போல வேடிக்கைப் பார்க்கிறது இந்துப் பெருஞ் சமூகம். இது இஸ்லாமியர்கள் பிரச்சனை மட்டுமல்ல இந்துக்கள் உள்ளிட்ட அனைவரின் பிரச்சனை என்பதை விரைவிலேயே இந்துப் பெருஞ் சமூகம் உணரத்தான் போகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூனறு நாடுகளிலிருந்து 31, டிசம்பர் 2014-க்கு முன்பு இந்தியாவிற்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்குவற்கு ஏற்ப CAA என்று சொல்லக்கூடிய 2019 குடியுரிமைத் திருத்தச் சட்டம் வழி செய்கிறது. மாறாக மேற்கண்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வந்துள்ள முஸ்லீம்கள் மற்றும் மியான்மர் ரோஹிங்கியா முஸ்லீம்கள், திபெத் பௌத்தர்கள், இலங்கை ஈழத் தமிழ் இந்துக்கள், பூட்டான் கிருத்தவர்கள், நேபாள இந்துக்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது.

அகதிகள் என்றால் அனைவரையும் சமமாகத்தானே கருத வேண்டும். அது என்ன ஒரு சிலருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது? மற்றவர்களுக்கு மறுப்பது? இது பாரபட்சமானதல்லவா? மதத்தின் பெயரால் பாகுபாடு பார்ப்பதாகாதா? சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதை மீறுவதாகாதா? இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 14,15,17,19 & 21 மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் பிரிவு 2 & 7 க்கு எதிரானது என்பதனால்தானே இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் CAA-வுக்கு எதிரான கண்டனக் குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கின.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 11-ன்படி குடியுரிமை குறித்த சட்டங்கள்/விதிமுறைகளை அரசு வகுக்க முடியும் என்றாலும் அவ்வாறு வகுக்கப்படும் சட்டங்கள்/விதிமுறைகள் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற வகையில் இருந்தால் அவை அரசமைப்புச் சட்டம் பிரிவு 13(2)-ன்படி செல்லாது என்பது தெரிந்தும் CAA-வை கொண்டு வருவது இந்திய அரசமைப்பை அவமதிப்பதாகாதா? இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் உரிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம் என்றாலும் அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை பிரிவு 245 தெளிவு படுத்தினாலும் 14,15,17,19 & 21 ஆகிய இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராகத்தானே CAA சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

CAA-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையமும் தங்களை ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டுள்ளது. வழக்கை விசாரித்தால் சந்தி சிரித்துவிடும் என்பதால் விசாரணைக்கு எடுக்க அஞ்சுகிறது உச்ச நீதிமன்றம். சபரிமலை வழக்குதான் முக்கியம் என்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. இதன் மூலம் வழக்கை இழுத்தடித்து CAA, NPR, NRC-யை நடைமுறைப்படுத்துவதற்குத் துணை போகிறது உச்ச நீதிமன்றம்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ‘துன்புறுத்தலுக்கு’ (persecuted minority) உள்ளாகிறார்கள் என்பதனால் அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இச்சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது மோடி-அமித்ஷா கும்பல். பௌத்த சிங்களப் பேரினவாதிகளால் சிறுபான்மை தமிழ் இந்துக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? மியான்மரில் பௌத்தப் பேரினவாதிகளால் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லீம்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? அவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பினால் அவர்களெல்லாம் அந்தந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டியதுதானே என திமிர்த்தனமாக பேசுகிறது சங் பரிவார பார்ப்பனக் கும்பல். மேலும் ‘துன்புறுத்தலுக்கு’ உள்ளாகும் சிறுபான்மையினர் (persecuted minority) என சட்டத் திருத்தத்தில் எங்குமே குறிப்பிடாத போது பொது வெளியில் மட்டும் அவ்வாறு பேசி மழுப்பி வருகின்றது இக்கும்பல்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் ‘துன்புறுத்தலுக்கு’ ஆளான சிறுபான்மை இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகளைப் பாதுகாக்கத்தான் இந்தச் சட்டம் என்கிறார்கள். பிறகு ஏன் 31 டிசம்பர் 2014 வரைக்கும் உள்ளவர்களை மட்டும் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்? அதன் பிறகு அங்கு இவர்கள் யாரும் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லையா? அப்படி துன்புறுத்தலுக்கு ஆளாகி யாரும் இந்தியாவிற்குள் தஞ்சம் புகவில்லையா? இனிமேலும் அங்கு துன்புறுத்தல் இருக்காதா? இன்றைய தேதியிலோ அல்லது நாளையோ யாராவது துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தால் அவர்களை என்ன செய்யப் போகிறார்கள்? அப்படி எல்லாம் இனி யாரும் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள் என கருதுகிறார்களா? அவ்வாறு கருதினால் அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதில்லை என எடுத்துக் கொள்ளலாமா? அப்படியானால் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்துள்ள இந்துக்கள், கிருத்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகளை திரும்ப அந்தந்த நாடுகளுக்கே போகச் சொல்லலாமே? சிங்களப் பேரினவாத துன்புறுத்தலுக்குத் தொடர்ந்து ஆளாகும் ஈழத் தமிழர்களை மட்டும் இலங்கைக்குப் போகச் சொல்கிறார்கள்? என்ன நியாயம் இது?

வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிலிருந்து அதிலும் குறிப்பாக வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து ஊடுருவும் முஸ்லீம்களைத் தடுத்து இந்திய நாட்டைப் பாதுகாக்கப் போகிறார்களாம். அங்கெல்லாம் வறுமை தாண்டவமாடுகிறதாம். குடிக்கத் தண்ணீர்கூட கிடையாதாம் இந்தியாவில் வளம் கொழிக்கிறதாம். அதனால் மேற்கண்ட நாடுகளில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் இந்தியாவிற்குள் மொத்தமாக வந்து விடுவார்களாம். அப்படி வந்து விட்டால் நம்மால் வாழ முடியாதாம். இப்படி வியாக்கியானம் செய்கிறது அன்புமணி-கிருட்டிணசாமி கும்பல். மோடிக்கு ஜால்ரா தட்டுவதில் அ.தி.மு.க டயர் நக்கிகளே தேவலாம் போல. நாட்டைப் பாதுகாக்கத்தான் இந்தச் சட்டத் திருத்தமாம். சரி! இஸ்லாமிய நாடுகள் இவை மூன்று மட்டும்தானா? வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் ஊடுருவினால் என்ன செய்யப் போகிறார்கள்? இந்தக் கேள்விக்கு இந்தக் கும்பலிடம் பதில் இல்லை.

பொன்.சேகர்
வழக்குரைஞர்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

சட்ட அங்கீகாரம் இல்லாத NPR மற்றும் நீதிமன்றத்தின் பாராமுகம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?

CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!

Monday, 3 February 2020

காந்தியும் பூணூலும்!

ஒருமுறை காந்தி கங்கையில் நீராடிவிட்டு வரும்பொழுது அவர் தலையில் உச்சிக்குடுமியும் உடம்பில் பூணூலும் இல்லாததைப் பார்த்து “இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ள நீங்கள் பூணூல் அணியாமலும் உச்சியில் குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள், ஒவ்வொரு இந்துவுக்கும் அவை இருந்தாக வேண்டும்” என்று ஒரு சன்னியாசி கேள்வி எழுப்புகிறார்.

முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத்தும் இயக்கம் ஒன்று அப்பொழுதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த பலர் பூணூல் போட்டுக் கொண்டனர்.
“சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால் மற்றவர் இனத்துக்கு மாத்திரம் அதை போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.”

“இந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு தாழ்வு என்ற பேதங்கள் எல்லாம் போய் அதில் இப்பொழுது மலிந்து கிடக்கும் பலவிதமான தீமைகளும் விஷயங்களும் நீங்கிய பிறகு இந்துக்களுக்கு அந்த உரிமை ஏற்பட முடியும். ஆகையால் பூணூல் போட்டுக் கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது.”

“அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன்படுத்தப்படுமாயின் அப்போது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும். இந்து சமயத்தை மேம்படுத்துவதற்கான சாதனமாகப் பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை.”

ஆம்! ஒருவன் பூணூல் அணிந்து கொள்வது, தான் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதற்கான அடையாளம்தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை ஒட்ட வைத்துக் கொள்வதும் இத்தகைய குணாம்சம் உடையதே! எனவே, பூணூல் அணிந்து கொள்வதும், பெயருக்குப் பின்னால் சாதியை சேர்த்துக் கொள்வதும் வேறு வேறு அல்ல.

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை என்ற நூலிலிருந்து.

ஊரான்