Thursday, January 30, 2020

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?


குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), அதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் இந்திய விடுதலைக்குப் பிறகு நாடு கண்டிராத மிகப் பெரிய போராட்டங்களாகும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இப்போராட்டங்கள் என்னவோ இஸ்லாமியர்களால் கட்டமைக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. பலதரப்பு அறிவுத்துறையினரிடையே தொடங்கிய எதிர்ப்பு, பிறகு மாணவர்கள் போராட்டமாக மிளிர்ந்து இன்று இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் போராட்டமாக வலுப்பெற்றுள்ளது.

எதிர்ப்பு இருக்கிற அதே நேரத்தில், ஆதரவு கருத்துக்களும் இருக்கவே செய்கின்றன. சட்டத்தின் பார்வையில் இவை சரியா எனப் பார்க்கத் தவறுவதால் ஏற்படும் தடுமாற்றத்தின் விளைவாக ஆதரிப்போரும், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பின் காரணமாகவும், ஆளும் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிற அரசியல் காரணங்களுக்காவும் ஆதரிப்போரும் உண்டு. ஆதரிப்போர் பட்டியலில் சில வழக்கறிஞர்களும் உண்டு என்பதுதான் வேடிக்கை. இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் நீதிபதிகளாவதனால்தான் அயோத்தி பாபர் மசூதி வழக்கில் அநீதி தீர்ப்புகள் எழுதப்படுகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம் எப்படி அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கோணங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. அதற்கான எதிர்வினைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. “கற்றறிந்த வழக்கறிஞர் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 11-ஐ வாசித்து விட்டு அனைவரும் அறியும் வகையில் பதிவிடுவார் என எதிர்பார்க்கிறேன்” என ஒரு வழக்கறிஞர் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் எழுதுகிறார்.

அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 11 என்ன சொல்கிறது.?

இந்திய அரசியலமைப்புச் சட்டம், இரண்டாம் அத்தியாயம் (Chapter II), பிரிவு 5 முதல் 11 வரை குடியுரிமை பற்றிப் பேசுகிறது. இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும், அவர்களுடைய பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருப்பின். அத்தகைய நபரும், அரசியல் சாசனம் துவக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் வசித்து வரும் நபர் ஒவ்வொருவரும் இந்தியக் குடிமக்கள் ஆவர் என்கிறது பிரிவு 5.

மேலும் பாகிஸ்தானில் அடங்கியுள்ள பிரதேசத்திலிருந்து வெளியேறி இந்திய மண்ணில் குடியேறியுள்ள ஒவ்வொரு நபரும், இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர் என்கிறது பிரிவு 6.

இப்படி யார் யார் எல்லாம் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர், யார் யார் எல்லாம் இந்தியக் குடிமக்களாக கருதப்படமாட்டார்கள் என விவரிக்கிறது அரவியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது அத்தியாயம்.

இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளவை எதுவும், ஒரு குடியுரிமை வழங்குவதற்கும், இரத்து செய்வதற்கும் மற்றும் குடியுரிமை விவகாரங்கள் பற்றிய விதிமுறைகளை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்திற்குரிய அதிகாரத்தைப் பாதிக்காது என்கிறது பிரிவு 11.

உண்மைதான். இந்த அதிகாரத்தைக் கொண்டுதான் இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதே அடிப்படையில்தானே மோடி அரசும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, கொண்டு வந்திருக்கிறது; அரசியலமைப்புச் சட்டப்படி இது சரியானதுதானே என்பதுதான் ஆதரிப்போரின் வாதம்.

நாடு, மதம் என்கிற அடிப்படையில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்தியக் குடியுரிமைச் சட்ம் 1955, எங்குமே பேசவில்லை. ஒரு நபர் அல்லது எந்த ஒரு நபரும் (a person, any person) என்றுதான் அது பேசுகிறது. குடியுரிமை வழங்குவதில் நபர்களுக்கிடையில் பாகுபாடு காட்டவில்லை. அதனால்தான் இச்சட்டம் தவறானது என யாரும் அன்று பேசவுமில்லை; எதிர்க்கவுமில்லை. ஆனால், இன்று கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, மட்டும் ஏன் எதிர்க்கப்படுகிறது?

எந்த ஒரு நபரும் (any person) என்பதைத் தொடர்ந்து இந்து, சீக்கியர், பௌத்தர், ஜெயின், பார்சி, கிருத்தவர் (Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community) என மதத்தின் அடிப்படையிலும்; ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் என நாடு அடிப்படையிலும் (Afghanistan, Bangladesh or Pakistan) குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்க்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம் 2019.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 அரசியலமைப்புக்கு எதிரானதா?

அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயம் (Chapter III), பொதுவானவை என்ற தலைப்பில் பிரிவு 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறது.

இந்த அத்தியாயத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைக் குறைக்கக்கூடிய அல்லது பறிக்கக்கூடிய எந்தச் சட்டத்தையும் அரசு உருவாக்கக் கூடாது. அப்படி மீறி உருவாக்கப்படும் சட்டம் எதுவும் செல்லத்தக்கதல்ல என்கிறது பிரிவு 13(2).

இங்கே அரசு என்பது நடுவண் அரசு, நாடாளுமன்றம், மாநில அரசுகள், சட்ட மன்றங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து ஆட்சித் துறைகளையும் குறிக்கும் என பிரிவு 12 வரையறுக்கிறது.

மனிதனின் உரிமைகள் பற்றி 1789-இல் பிரான்சின் தேசிய அவை பிரகடனப்படுத்தியது முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பாசிச கட்டமைப்பு உள்ள நாடுகளில்கூட நடைமுறை வேறாக இருந்தாலும், மனிதனின் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமத்துவம், சுதந்திரம், சுரண்டலுக்கு எதிரான உரிமை, மதச் சுதந்திரம், கல்வி மற்றும் பண்பாட்டு உரிமை, அரசியலமைப்பு மூலம் நிவாரணம் கோரும் உரிமை என ஆறு வகையான அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 16 சமத்துவ உரிமை பற்றிப் பேசுகிறது. இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும், சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும்; பாகுபாடு எதையும் காட்டக் கூடாது என்கிறது பிரிவு 14. பிரிவு 15 மற்றும் 16 ஆகியவை இந்தக் கோட்பாட்டை மேலும் விரிவு படுத்துகிறது. இவற்றில் சில உரிமைகள், இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமானதாகவும், சில உரிமைகள் அனைவருக்குமானதாகவும் - அவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லை என்றாலும் - உறுதி செய்யப்பட்டுள்ளன.

மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையில் வேலை வாய்ப்புத் தருவதில் பாகுபாடு பார்ப்பதைத் தடை செய்தல்; பேச்சு, கூட்டம் கூட-சங்கமாகச் சேர, சொத்து வாங்க, தொழில் தொடங்க – நடத்த, இந்தியாவில் எங்கும் செல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியிருக்க-நிலைத்து வாழ, தனித்துவமான மொழி-பண்பாட்டைக் காக்க, சிறுபான்மையினர் நலன் காக்க உள்ளிட்ட உரிமைகள் இந்தியக் குடிமக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும்.
     The rights given to the citizens only are: Prohibition of discrimination on grounds of
religion, race, caste or sex, of place of birth, equality or opportunity in matters of public employment, freedom of speech, assembly and association, freedom to acquire property of to carry on any occupation, trade of business, right to move, to reside and settle in any part of the territory of India, the right to conserve a distinct language, script or culture, the protection of minority interests.

இந்தியக் குடிமக்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்வுரிமையைக் காத்தல், சட்டத்தின் முன் சமம் (equality before law), தனிமனித சுதந்திரம், ஆலைகள்-சுரங்கங்கள் உள்ளிட்ட பணியிடங்களில் அடிமை முறை-கட்டாய உழைப்புக்குத் தடை, ஒரு மதத்தைத் தழுவ-பிரச்சாரம் செய்ய மற்றும் அரசியலமைப்பு மூலம் நிவாரணம் கோரும் உரிமை உள்ளிட்ட உரிமைகள் அனைவருக்குமான உரிமைகளாகும்.
     The rights which are available to all persons whether they are citizens or not are:
Protection of life and personal liberty, equality before law, protection against ex post facto penalization, prohibition of slavery and enforced labour at employment, viz., whether in mines or factories, freedom of conscience and the right to profess, practice and propagate any religion, and right to constitutional remedies.

சட்டத்தின் முன் சமம் (equality before law), என்கிற உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 உத்தரவாதம் செய்கிறது. இந்தியக் குடிமக்கள் அல்லாத-இந்தியாவில் வசித்து வரும் எவருக்கும் இது பொருந்தும். அதாவது இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள், திபெத் பௌத்தர்கள், நேபாள இந்துக்கள், மியான்மர் ரோஹிங்கியா மற்றும் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாடுகளின் இஸ்லாமியர்கள் என இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள எவராக இருந்தாலும் அவர்களும் இந்தியக் குடிமக்களைப் போல சட்டத்தின் முன்பு சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இந்து, சீக்கியர், பௌத்தர், ஜெயின், பார்சி, கிருத்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்திருப்பதன் மூலம் ஒரு சாராரை பாகுபாட்டுடன் (discrimination) நடத்துவதற்கு வழிவகை செய்கிறது. இதனால்தான் இச்சட்டத் திருத்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்கிறோம்.  

குடியுரிமை தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11-ன் படி நாடாளுமன்றத்துக்கு  அதிகாரம் இருப்பதைப் போலவே, இந்தியா முழுவதற்கும் அல்லது இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் உரிய சட்டங்களை இயற்றுவதற்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 245-ன் படி நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவ்வாறு இயற்றப்படும் அத்தகையச் சட்டங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறது பிரிவு 245. (Subject to the provisions of the Constitution, Parliaments may make laws,.). எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, அரசியலமைப்பு விதிகளுக்கு அதாவது பிரிவு 14 உள்ளிட்ட பிரிவுகளுக்குப் புறம்பானதாக இருப்பதால், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 245-ன்படியும் செல்லத்தக்கதல்ல.
 
சட்டத்தின் முன்பு அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; பாகுபாடு பார்க்கப்படுவதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம். இதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்டிருக்கிறது. எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 என்பது ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. அதனால்தான் ஐரோப்பிய ஒன்றியமும் இச்சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறது.

பொன்.சேகர்
வழக்குரைஞர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!

No comments:

Post a Comment