Thursday, July 18, 2019

கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்


வேலையின்மை, வறுமை, பசி, பஞ்சம், பட்டினிச் சாவுகள், தற்கொலைகள், ஏமாற்று, பித்தலாட்டம், உழைப்புச் சுரண்டல், இயற்கை வளங்கள் சூறையாடல், சுற்றுச் சூழல் கேடு, பாலியல் வன்கொடுமைகள், சாதி-மத மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என பல்வேறு துன்ப துயரங்களை நாம் அனுபவித்து வருகிறோம். இத்துன்ப துயரங்களிலிருந்து விடுபட முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு நமது அன்றாட வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. 

விடுதலையைத் தேடி……. 

“கம்யூனிட் அறிக்கை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை உலக நிலைமையில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவ்வறிக்கையின் தத்துவமானது இன்றைய நிலைமைக்கு மிக்கப் பொருத்தமானதாகவே இருந்து வருவது அவ்வறிக்கையின் விசேசத்திற்கு ஒரு காரணமாகும்”. – தந்தை பெரியார், குடியரசு தலையங்கம் 04.10.1931.

“உலகத்தில் பொதுவாக யாவருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால் இந்த முறையைத்தான் – சமதர்மம் - கடைசி முயற்சியாக ஏதாவதொரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை” - தந்தை பெரியார், குடியரசு தலையங்கம் 04.01.1931.

கம்யூனிட் அறிக்கை எழுதப்பட்டு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிட் அறிக்கையின் பொருத்தப்பாடு மற்றும் பொதுவுடைமைச் சமூகத்தின் அவசியம் குறித்து பெரியார் மிகத் துள்ளிமாக கூறியிருக்கிறார்.

கம்யூனிட் அறிக்கை 1848-ல் வெளியாகி தற்போது 170 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

இந்த 170 ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் மேலும் ஏற்பட்டு இருந்தாலும் கம்யூனிஸ்ட அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரௌஃபாகிஸ் அவர்கள் 2018-ல் கம்யூனிஸ்ட அறிக்கை நூலுக்கு எழுதிய முன்னுரையில்

“ஒட்டு மொத்த மானிடச் சமூகத்தையும் இரண்டு கடும் பகை முகாம்களாகப் பிளவு படுத்தும், திருட்டுக் கொள்ளைச் செயல்களில் ஈடுபடும் மூலதன முதலாளியம், 21-ம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் வடிவத்தில் நிலவுவது பற்றி கம்யூனிஸ்ட் அறிக்கை முன்னுணர்ந்து எடுத்துரைத்தது. அதே வேளையில், ஒரு சிறப்பு மிக்க உலகை உருவாக்கும் ஆற்றலை நாம் நம்மிடத்தே கொண்டுள்ளோம் என்பதையும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்”.

என புதிய ஒரு சமூக அமைப்பை – அது சோசலிசம் மட்டுமே - உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பிள்ளை வளர்ப்பு, சமையல் வேலை, துணி துவைத்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளிலிருந்து முதலில் பெண்களை விடுவிக்க வேண்டும் என்கிறார் பெரியார். அதற்கு ஒரேவழி ரசிய சோசலிச சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமுதாய உணவுக்கூடங்கள், சமுதாய சலவைக் கூடங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் போன்று உருவாக்கப்பட வேண்டும்; பெண்களுக்கானத் தீங்குகள் எல்லாம் காரணமாயமைந்த தனியுடைமை ஒழியும் வரை பெண்ணடிமையும் நீங்காது என பொதுவுடைமைச் சமூகத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். (திருப்பத்தூர் 15.09.1946 சொற்பொழிவு – குடிஅரசு 21.09.1946, ஈரோடு 4.11.1933 சொற்பொழிவு – குடிஅரசு 12.11.1933 மற்றும் சென்னை 30.09.1948 விக்டோரியா மண்டபம் சொற்பொழிவு – குடிஅரசு 11.10.1948)

பெல், இராணிப்பேட்டையில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் 12.07.2019 அன்று மாலை நடைபெற்ற 21-வது சந்திப்பில் கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்தும் பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து தோழர் அ.வில்சன் மற்றும் பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் குறித்து தோழர் அ.கிருபா ஆகியோர் உரையாற்றினர்.  தோழர் கோ.இளங்கீரன் வாசகர் வட்ட நிகழ்வை நெறியாளுகை செய்தார். தோழர் வெ.கோவிந்தசாமி வரவேற்புரை நிகழ்த்த தோழர் தி.வீரபாண்டியன் நன்றி உரை கூறினார். தோழர் பொன்.சேகர் தொகுப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் தோழர் தமிழ்க்கனல் பாடல் பாடினார்.

இது போன்ற சந்திப்புகள் வாசகர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவதோடு சமூகப் பிரச்சனைகளை பரிசீலிக்கவும் உதவுகிறது என்பதை பார்வையாளர்கள் ஆர்வத்தோடு பங்கேற்பதிலிருந்து உணர முடிகிறது.


 

 




 தொடர்புடைய பதிவுகள்






 
 
 







2 comments: