குடியுரிமை திருத்த மசோதா (CAB) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட
போது அதற்கு எதிராகத்தான் முதன் முதலில் எதிர்ப்புக் கிளம்பியது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும்
மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அது சட்டமாக்கப்பட்டது. சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத்
தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஜனவரி 10, 2020 முதல் சட்டம் நடைமுறைக்கும் வந்து விட்டது.
மசோதாவுக்கு (CAB) எதிராகத் துவக்கப்பட்ட எதிர்ப்புக் கிளர்ச்சிகள் சட்டத் திருத்தத்திற்கு
(CAA) எதிரானதாக மாறியது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டம் தற்போது
தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள்
தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றிற்கு எதிரானதாகவும் உருவெடுத்துள்ளது. இவற்றிக்கிடையே
எந்தத் தொடர்பும் கிடையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். ஆனால் அவர் இவ்வாறு
அறிவித்த அதே நாளில்தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்காக 3941.35 கோடி ரூபாயை
மந்திரிசபை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்தப் பின்னணியில்
CAA, NRC, NPR பற்றியும் இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்தும் தெரிந்து கொள்வது
மிகவும் அவசியமாகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) குறித்து விவரிக்கிறது மக்கள்
தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 (The
Census Act 1948). இது ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான
சட்டம் மட்டுமே. குடியுரிமை பற்றி இச்சட்டம் பேசவில்லை. இச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான
விதிமுறைகள் 1990-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டன (Census Rules, 1990).
இந்தியாவில் வசிக்கும் மக்களில் இந்தியக் குடிமக்கள் யார் எப்பதை
வரையறுப்பதற்கான சட்டம்தான் குடியுரிமைச் சட்டம் 1955 (The
Citizenship Act, 1955). இச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான விதிமுறைகள் 2003-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டன
(Registration of Citizens and
Issue of National Identity Cards) Rules, 2003). இந்த விதிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டால்தான் CAA,
NRC, NPR குறித்த புரிதலைப் பெற முடியும்.
தேசிய மக்கள்தொகைப்
பதிவேடு (NPR) பற்றி குடியுரிமைச் சட்டம் 1955 பேசுகிறது. மக்கள் தொகைப் பதிவேடு (Population Register) பற்றிய வரையறை இச்சட்டத்தின்
விதிகள், பிரிவு 2(l)-ல் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திலோ அல்லது நகரத்திலோ வசிக்கும்
நபர்கள் பற்றிய விவரங்கள் இந்தப் பதிவேட்டில் அடங்கி இருக்கும்.
2. Definitions—In these rules, unless the context otherwise
requires,—
(l)
“Population Register” means the register containing details of persons usually
residing in a village or rural area or town
or ward or demarcated
area (demarcated by the
Registrar General of Citizen Registration) within a ward in a town or
urban area;
ஒவ்வொரு குடிமகனைப் பற்றிய கீழ்கண்ட
விவரங்கள் மக்கள் தொகை பதிவேட்டில் இருக்க வேண்டும் என்கிறது 2003 விதிகள், பிரிவு
3(3).
பெயர்
குடும்பத் தலைவரோடு அவருக்கு உள்ள
உறவு
தந்தை பெயர்
தாயார் பெயர்
திருணமாகியிருந்தால் துணைவர் பெயர்
பாலினம்
திருமணமானவரா? ஆகாதவரா?
பிறந்த இடம்
நாட்டினம்
தற்போது வசிக்கும் முகவரி
தற்போதைய முகவரியில் வசிக்கும்
காலம்
நிரந்தர முகவரி
தொழில் / நடவடிக்கை
கல்வித் தகுதி
2003 விதிகள், பிரிவு 3(4)–ன்படி
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) மத்திய அரசு தயாரிக்கும்.
3(4) The
Central Government may, by
an order issued in this regard,
decide a date by which the Population
Register shall be prepared
by collecting information
relating to all persons who are usually residing within the jurisdiction of
Local Registrar.
சாதாரணமாக பத்து ஆண்டுகளுக்கு ஒரு
முறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி 2011 ஆம் ஆண்டிற்கான
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விவரங்கள் 2010-ஆம் ஆண்டிலேயே சேகரிக்கப்பட்டு,
2015-ஆம் ஆண்டு அவை சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன. ஆனால் இதற்கு முரணாக அசாம்
தவிர்த்து நாட்டின் பிறபகுதி முழுமைக்குமான தேசிய மக்கள் தொகை விவரங்களை ஏப்ரல் 1,
2020 இல் தொடங்கி செப்டம்பர் 30, 2020 க்குள் சேகரித்து முடிக்க வேண்டும் என
31.07.2019 அன்று மத்திய அரசு ஒரு அறிவிக்கையை வெளியிடுகிறது. கேரளா, மேற்கு வங்கம்
இராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளன.
ஆனால் எடுபிடி எடப்பாடி அரசோ இதை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் (Census) தேசிய மக்கள்
தொகை பதிவேட்டுக்கும் (NPR). இடையிலான வேறுபாடு என்ன?
மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census)
என்பது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம்
1948-இன்படி ஒவ்வொரு நபரும் தாமாக முன்வந்து கொடுத்த
விவரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொகுப்பு. ஆவணங்களைக் கொண்டு சரிபார்க்கப்படாத
விவரங்களே இதில் அடங்கி இருக்கும். ஆனால் குடியுரிமைச் சட்டம் 2003 விதிகளின்படி தேசிய
குடிமக்கள் பதிவேட்டிற்கானத் (NRC) தரவுகளைப் பகிர்ந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தரவுகளைத் தருவதற்கு ஒத்துழைக்காத நபர்களை தண்டிப்பதற்கும், ஆயிரம் ரூபாய் வரை அபராதம்
விதிப்பதற்கும் குடியுரிமைச் சட்டம் 2003 விதிகள், பிரிவு 17 வழிவகை செய்வதால் தரவுகளைத்
தருவதற்கு மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
17.
Penal consequences in certain cases—Any violation of provisions of Rules 5, 7,
8, 10, 11 and 14
shall be punishable with
fine which may
extend to one
thousand rupees.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
(Census) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) அகியவற்றை தயாரிப்பதற்கான வேலைகள்
ஒரே அலுவலகத் தலைமையின் கீழ்தான் மேற்கொள்ளப்படும் என்பது மிக முக்கியமானது.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன? (NRC / NRIC)
தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதுதான் NRC. இந்திய தேசிய குடிமக்கள்
பதிவேடு (NRIC) என்றும் இதைச் சொல்லலாம். இதற்கான அடிப்படை குடியுரிமைச் சட்டம்
1955 (Citizenship Act 1955) பிரிவு
14A – ல் உள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் மத்திய அரசு கட்டாயமாகப் பதிவு செய்து அவருக்கு தேசிய அடையாள அட்டையை (National Identity Card) வழங்கலாம். இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேட்டை (NPR) மத்திய அரசு பராமரிக்கலாம், அதற்காக ஒரு தேசியப் பதிவேடு
ஆணையத்தை அமைக்கலாம் என்கிறது சட்டம்.
14A.
Issue of national identity cards.
(1)
The Central Government may compulsorily register every citizen of India and
issue national identity card to him.
(2)
The Central Government may maintain a National Register of Indian Citizens and
for that purpose establish a National Registration Authority.
குடியுரிமைச் சட்டம், விதிகள் 2003,
பிரிவு 3(1)-ன் படி குடிமக்கள் பதிவிற்கான பதிப்பாளர் தலைவர், இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேட்டை நிறுவிப் பராமரிப்பார்.
3(1).The
Registrar General of Citizen Registration shall establish and maintain the
National Register of Indian Citizens.
இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேடு என்பது மாநிலப் பதிவேடு, மாவட்டப் பதிவேடு, துணை மாவட்டப் பதிவேடு மற்றும் உள்ளூர் பதிவேடு ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்படும்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (NPR) தேசிய குடிமக்கள்
பதிவேட்டிற்கும் (NRC) தொடர்பு உண்டா?
குடியுரிமைச் சட்டம், விதிகள்
2003-ஐ வாசித்தாலே தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு
(NRC) அடிப்படையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில்
(NPR) சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட விவரங்களே, தேசிய குடிமக்கள் பதிவேட்டில்
(NRC) இடம் பெற்றிருக்கும். குடியுரிமைச் சட்டம், விதிகள் 2003, பிரிவு 3(5) இதைத்
தெளிவு படுத்துகிறது.
”3(5) மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து சரிபார்க்கப்பட்ட நபர்களின் விவரங்கள் மட்டுமே இந்தியக் குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் இருக்கும் "
3(5)
The Local Register of Indian citizens shall contain details of persons after
due verification made from the Population Register.
உள்ளூர் மக்கள்தொகை பதிவேட்டில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு
இறுதிசெய்யப்பட்ட பிறகே அதிலிருந்து இந்தியக் குடிமக்கள் குறித்த
உள்ளூர் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்துதான் NRC
உருவாக்கப்படுகிறது.
4(3) For the purposes of preparation and inclusion in the Local Register of Indian Citizens,
the particulars collected of every family and individual in the Population Register shall be
verified and scrutinized by the Local Registrar, who may be assisted by one or more persons
as specified by the Registrar General of Citizen Registration.
NPR விவரங்களை சரிபார்த்த பிறகு 'சந்தேகத்திற்குரிய குடிமக்கள்' யார்
என்பதை முடிவு செய்ய குடியுரிமைச் சட்டம் 2003 (Citizenship Act) விதிகள்
குறிப்பிட்ட உள்ளூர் பதிவேடு அலுவலருக்கு அதிகாரம் அளிக்கிறது.
விதி 4(4) சொல்கிறது
"விவரங்கள் சரிபார்க்கப்படும் போது, சந்தேகத்திற்குரிய நபர்களின் விவரங்கள், மக்கள்தொகை பதிவேட்டில் உள்ளூர் பதிவாளரால் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படும். மேலதிக விசாரணையின் மூலம் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட
பிறகு அவரது குடியுரிமை குறித்து சந்தேகம் ஏற்பட்டால், அந்த தனிநபருக்கு அல்லது அவரது குடும்பத்தாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்."
Rule 4(4) says:
"During the verification process, particulars of such individuals, whose Citizenship is
doubtful, shall be entered by the Local Registrar with appropriate remark in the Population
Register for further enquiry and in case of doubtful Citizenship, the individual or the family
shall be informed in a specified proforma immediately after the verification process is over."
'சந்தேகத்திற்கிடமான குடிமக்கள்' பட்டியலிலிருந்து தங்களது பெயரை
நீக்கக்கோரி முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்பிறகு, உள்ளூர் பகுதிக்கான NRC வரைவு வெளியிடப்படும். ஒருவரை NRC இல் சேர்ப்பதற்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்ப பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
(5)(a)
Every person or family specified in sub rule (4), shall be given an opportunity
of being heard by the
sub district or Taluk Registrar of
Citizen Registration, before a final
decision is taken to include or to exclude their
particulars in the National Register of Indian Citizens
இதைத் தொடர்ந்து, இறுதி NRC வெளியிடப்படும்.
NPR மற்றும் NRC இரண்டும் ஒரே அலுவலகத்தின் கீழ் உள்ளன என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும் (இந்தியப் பதிவாளர் தலைவர்தான், குடிமக்கள்
பதிவுத் தலைவராகவும் செயல்படுகிறார்).
NRC-க்கு NPR முதல் படிக்கட்டா?
NRC-சிக்கு NPR வழிவகுக்கும் என்பது அவசியமில்லை. முதலில் 2010 இல் NPR
தயாரிக்கப்பட்டு 2015 இல் இறுதிசெய்யப்பட்டது. ஆனால் அன்று அதைத்
தொடர்ந்து NRC தயாரிக்கப்படவில்லை.
இருப்பினும், 2003 விதிகளின்படி NRC தயாரிப்பது NPR-க்குப் பிறகுதான் செய்ய
முடியும். எனவே, NPR என்பது NRC-க்குத் தேவையான முன் நிபந்தனையாகும்.
நாடு தழுவிய NRC-ஐ கொண்டுவருவதற்கான நோக்கத்தைத்தான்
தற்போதைய நிலைமைகள் பல சந்தர்ப்பங்களிலும் உணர்த்தி வருகின்றன
2019 நாடாளுமன்றக் கலந்துரையாடலின் போது, உள்துறை அமைச்சர்
அமித்ஷா நாடு தழுவிய NRC-யைத் தயாரிக்கும் நோக்கம் குறித்து
பேசியிருந்தார்.
இனி தயாரிக்கப்படும் NPR 2020, NRC-க்கு முதல் படியாக கருதப்படுகிறது என்பதை அரசாங்கத்தின் பல அறிக்கைகள், செய்திக்குறிப்புகள், பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் ஆவணங்கள் உறுதி செய்கின்றன.
2020 NPR-க்காக கேட்கப்படும் கேள்விகள் 2010 NPR இலிருந்து வேறுபட்டது
என்று தகவல்கள் கூறுகின்றன. 2010 NPR-ல் கோரப்பட்ட விவரங்களோடு
கூடுதலாக ஒருவரின் பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் பற்றிய
விவரங்களையும், 2020 NPR 'அட்டவணை' கோருகிறது. 1987 மற்றும் 2003-ஆம்
ஆண்டுகளில் குடியுரிமைச் சட்டம் 1955-ல் மேற்கொள்ளப்பட்ட
திருத்தங்களுக்குப் பிறகு, பிறப்பின் அடிப்படையில் ஒருவரின்
குடியுரிமையை தீர்மானிப்பதற்கு பெற்றோரின் குடியுரிமை
அவசியமாக்கப்பட்டுள்ளது.
இது NPR க்கும் NRC க்கும் இடையிலான தொடர்பைக் காட்டும் கூடுதல்
காரணியாக இருக்கிறது.
NRC ஏன் சிக்கலானது?
பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் ஒரு நபரை ஆவணங்களின்
அடிப்படையில் நிர்வாக அதிகாரிகள் முன்பு தனது குடியுரிமையை நிரூபிக்கக்
கோருவது நடைமுறையில் மிகவும் சிக்கலானதாக இருக்கும்
குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர்
படிக்காதவர்களாகவும், பின்தங்கியவர்களாகவும் இருக்கும்போது இது
அதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கு தலைதூக்குவதற்கும் அவர்களின்
ஒருதலைபட்சமான, தன்னிச்சையான செயல்பாட்டிற்கும் வழிவகுக்கும்.
சமீபத்தில் முடிவடைந்த அசாம் NRC நடைமுறையின் போது கிட்டத்தட்ட
2 மில்லியன் மக்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர், NRC நடைமுறை
குறைபாடுகளுடையதாகவும் சிக்கலானதாகவும் இருந்ததாக தகவல்கள்
கூறுகின்றன. இது தன்னிச்சையாக ஒருசாராரை விலக்கி வைப்பதற்கு
வழிவகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
"சந்தேகத்திற்கிடமான குடிமகன்" என்கிற ஒரு வகையை 2003 விதிகள்
உருவாக்குகின்றன. இது வினோதமானதாகும். 'சந்தேகத்திற்கிடமான
குடிமக்களை' அடையாளம் காண்பதற்கு எந்த வழிகாட்டுதல்களும்
சொல்லப்படாத நிலையில் நிர்வாகிகள் தங்கள் விருப்பத்திற்குத்
தகுந்தவாறு தாங்களே ஒரு விளக்கத்தைக் கொடுத்து ஒருவரை
சந்தேகத்திற்குரிய நபராக அறிவிக்கலாம்.
ஒருவர் சந்தேகத்திற்குரிய நபராக இருக்கும்பட்சத்தில் அடுத்து என்ன
நடக்கும் என்பது பற்றி விதிகளில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால்
1964-ஆம் ஆண்டு போடப்பட்ட வெளிநாட்டினருக்கான தீர்ப்பாய
ஆணைகளில் 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி
'சந்தேகத்திற்குரிய ஒரு குடிமகனை' இந்தத் தீர்ப்பாயத்தில் நிறுத்தி
விசாரிப்பதற்கு மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் என்பவை அரை-நீதித்துறை அமைப்புகளாகும்,
அங்கு உள்ள நிர்வாக அதிகாரிகள் முறையான நீதித்துறை பயிற்சி
இல்லாதவர்களின் தலைமையின் கீழ் செயல்படுபவர்கள். உரிய காரணங்கள்
ஏதும் இன்றி மிசகச்சாதாரணமாக அவர்கள் உத்தரவுகளை பிறப்பிப்பதாக
ஏற்கனவே குற்றச் சாட்டுகள் உள்ளன.
எந்தவொரு நபரையும் குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் சேர்ப்பதற்கு
எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய விதி 4(6)(a) வழிவகை செய்கிறது.
யார் வேண்டுமானாலும் இந்த ஆட்சேபனையை எழுப்பலாம். இதனால்
NRC-ஐத் தவறாக பனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
இது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
தற்போதைய சட்டத்தின்படி, குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய சுமை
தனிநபர் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே, NRC அதிகாரிகள் தங்களது விருப்பதிற்கு ஏற்ப அதிகாரத்தைத்
தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் விளைவுகள் மிகக் கடுமையானதாக
இருக்கும். இது ஒரு நபரின் உண்மைத்தன்மைக்கு எதிரானதாகவும்
அமையும்.
பெரும்பான்மையான இந்தியர்களுக்கு இது பேரழிவை ஏற்படுத்தும்.
NRC தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை
என்பதால், குடியுரிமையை நிரூபிக்க என்னென்ன ஆவணங்கள்
போதுமானதாக இருக்கும் என்பது பற்றி முன்கூட்டியே பேசுவது சரியாக
இருக்காது என்றாலும்கூட NRC விதிகளின் கட்டமைப்பானது ஒரு நபரை
நிர்வாக அதிகாரிகளின் தயவை நாட வைக்கிறது. அதிகாரிகள்
தன்னிச்சையாக தங்களுக்கு உள்ள அதிகாரகத்தைப் பயன்படுத்துவதன்
மூலம் மிகப் பெரிய அளவில் இடையூறுகளை ஏற்படுத்தி ஒருவரை
துன்புறுத்த முடியும்.
CAA-க்கும் NRC-க்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு (religious persecution) ஆட்பட்டு
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து
2014, டிசம்பர் 31-க்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இந்துக்கள்,
பார்சிக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், கிருத்தவர்கள் ஆகிய
ஆறு மதப்பிரினர் மட்டும் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு ஏற்ப
குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதுதான் குடியுரிமை திருத்தச்
சட்டம் 2019 (CAA). பௌத்த சிங்களப் பேரினவாத துன்புறுத்தலுக்கு ஆளாகி
30 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக இந்தியாவில் வாழும் ஈழத்
தமிழர்கள், பௌத்த மியான்மர் ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கு
ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள்
மற்றும் பூட்டானிலிருந்து வந்துள்ள கிருத்தவர்கள், திபெத்திலிருந்து
வந்துள்ள பௌத்தர்கள், நேபாளத்திலிருந்து வந்துள்ள இந்துக்கள்
எவருக்கும் இச்சட்டத் திருத்தம் பொருந்தாது. இவர்கள் இந்தியக்
குடியுரிமை பெறத் தகுதியற்றவர்கள். மத-இன அடிப்படையில் இச்சட்டம்
மக்களை பாகுபடுத்துகிறது; இது இந்திய அரசமைப்புக்கு எதிரானது
என்பதால் நாடெங்கிலும் பல்வேறு தரப்பினரும் CAA-வுக்கு எதிராகப்
போராடி வருகின்றனர்.
CAA-வுக்கும் NRC-க்கும் இடையே வெளிப்படையான தொடர்பு இல்லை என்று
சொல்லப்பட்டாலும், முதலில் NRC, அதைத் தொடர்ந்து CAA என
வரிசைக்கிரமமாக அரசு இவற்றை நடைமுறைப்படுத்தும் என 2019
தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது அமித்ஷா பேசியதை நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும். CAA-வுக்கு எதிரானப் போராட்டங்கள் நாடு முழுவதும்
தீவிரமடைந்த உடனே, NRC-ஐக் கொண்டுவருவது குறித்து எந்தவித
விவாதமும் அரசு சார்பில் இதுவரை நடத்தப்படவில்லை என்று பிரதமர்
மோடி பம்முகிறார்.
நாடு தழுவிய அளவில் NRC அமுலுக்கு வரும் போது, பாக்கிஸ்தான்,
பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து
மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு அங்கிருந்து டிசம்பர் 31, 2014 க்கு முன்பாக
இந்தியாவிற்குள் வந்தவர்கள், தாங்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பதை
நிரூபித்தால், அவர்களுக்கு CAA உதவலாம். ஆனால் ஏற்கனவே
தொகுக்கப்பட்டுள்ள அசாம் NRC பட்டியல் மீது CAA-வின் தாக்கம் மிகப்
பெரிய அளவில் இருக்கும். இது நாடெங்கிலும் மிகப்பெரிய விவாதத்தைக்
கிளரிவிடும்.
பொன்.சேகர்,
வழக்குரைஞர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
குறிப்பு: Live Law.in இணைய தளத்தில் 27.12.2019 அன்று வெளியான
கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு சில திருத்தங்களுடன்
எழுதப்பட்டது.
https://www.livelaw.in/top-stories/what-is-the-caa-npr-nrc-linkexplainer-151105?infinitescroll=1
ஊரான்
No comments:
Post a Comment