Wednesday, 18 September 2019

பொதுவுடைமையை நேசித்த பெரியார்!


பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராகப் பார்த்த சமூகம் இன்று அவரை ஒரு மக்கள் தலைவராக பார்ப்பது மட்டுமல்ல அவரது தொண்டு இனியும் தேவை என 69 சதவிகித மக்கள் விரும்புவதாக ஒரு தொலைக்காட்சி கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. எதனால் பெரியாரை பெரும்பாலான மக்கள் இன்று விரும்புகின்றனர்? மக்களிடையே பக்தி முத்தி விட்டது என்பதற்காகவா? மூடநம்பிக்கை அதிகரித்து விட்டது. அதிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவா? கடவுள் பக்தி கொண்ட மக்களும் ஏன் பெரியாரை நேசிக்கிறார்கள்?

பிறப்பின் அடிப்படையில் மக்களை இழிவு படுத்தும் பார்ப்பனியம் பெரியாருக்குப் பிடிக்காது. பார்ப்பனியத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டியதால் பெரியாரைப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. தங்களின் சுயமரியாதைக்குக் குரல் கொடுத்ததால் மக்களுக்குப் பெரியாரைப் பிடிக்கிறது. காரணம் மிக எளிமையானதுதானே! பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனியமும், ஆர்.எஸ்..எஸின் கொள்கைகளும், பாரதிய ஜனதாக் கட்சியில் நடைமுறையும் வேறு வேறு அல்ல என்பதை மக்களுக்குப் புரிய வைத்தவர் மோடி. இன்று பெரியாரை மக்கள் நேசிக்க முக்கியக் காரணம் மோடி. இதற்காக மோடிக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு, அதுவும் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் மேட்டுக்குடி பார்ப்பனர்களுக்கு வேலை வாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு திட்டம், வேலை தேடும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களிடம் கோபத்தைக் கொண்டு வந்துள்ளது. பெரியார் இருந்திருந்தால் இதை அனுமதித்ருப்பாரா என்று மக்களை எண்ண வைத்துள்ளது.

படிப்பு வாசனையே இல்லாத கிராமத்து விவசாயி மகன் பள்ளிக்கூடத்தில் நுழைந்து ‘அ’ ‘ஆ’ வில் தட்டுத் தடுமாறி,  A, B, C, D  யில் விழுந்து எழுந்து, உயர் நிலை - மேல்நிலையை உற்சாகத்தோடு தாண்டி, அதன் பின் பட்டணம் சென்று பட்டயத்தையும் பட்டத்தையும் பெறும் போது நெஞ்சு நிமிர்த்திய காலம் இனி ஐந்திலும் எட்டிலும் வடிகட்டவிருப்பதால் நிகழ் காலம் கடந்த காலமாகிவிடுமோ என அஞ்சுகிறான். எட்டப்பர்களை எட்டி உதைக்க இன்று பெரியார் இல்லையே என ஏங்குகிறான் இளைஞன்.

விற்பனை வரியே கூடாது என அன்று குரல் கொடுத்த பெரியார் இன்று இருந்திருந்தால் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பால் வாழ்விழந்த தொழிலாளி மோடியின் விலா எலும்பை தன் கைத்தடியால் பதம் பார்த்திருப்பாரே என எண்ணுகிறான்.

டெல்லி எருமைப்பாலை குடித்தவனெல்லாம் இங்கே பானி பூரியில் வயிற்றைக் கழுவும் போது, தாய்ப்பால் குடித்து தலைநிமிர்ந்த தமிழனை நாசமாக்க எத்தணிக்கும் நாக்பூர் நாதாரிகளை நார் நாராய் கிழித்துத் தொங்கவிட அந்தக் கிழவனைத் தேடுகின்றான் தமிழன்.

ஹைட்ரோ கார்பன், மீதேன், ஷெல் கேஸ், எட்டு வழிச்சாலை, கூடங்குளம், ஸ்டெர்லைட் என அடுக்கடுக்காக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் மோடி கும்பலைப் பொடிப் பொடியாக்க ஒரு பெரியார் தேவை எனத் தேடுகின்றான் எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஓர் எளிய தமிழக மகன்.

கல்வி வேலை வாய்ப்பில் பெண்களை இன்றளவும் இழிவுபடுத்தி அவர்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சாமியார் கூட்டத்தை இடித்துரைக்க அந்தக் கிழக்காளையைத் தேடுகிறாள் இக்கால இளம் பெண்.

வழிபாட்டு உரிமையில் பக்தனையே இழிவுபடுத்திய பார்ப்பனியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததால்தான் வழிபாட்டிடங்களில் இன்றும் பார்ப்பனர்களால் தான் இழிவுபடுத்தப்படும் போது அவன் தன் சுயமரியாதை காக்க பெரியாரைத் தேடுகிறான். அதனால்தான் பக்தனுக்கும் பெரியார் தலைவனாய் உயர்ந்து நிற்கிறார்.

சுடு காட்டுக்கு வழியில்லை, ஆணவப் படுகொலை என தொடரும் தீண்டாமைக்கு எதிராகக் களமாட, சாதி ஒழிய மீண்டும் பெரியார் வேண்டும் என விழையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு பெரியார்.

பொதுவுடைமை முறையைத் தவிர வேறு எந்த முறையாலும் மக்களின் துயரங்களைப் போக்க முடியாது என அறுதியிட்டு உறுதியாச் சொன்னதனால் உழைப்பாளர்களுக்கும் பெரியார் தலைவராய் உயர்ந்து நிற்கிறார்.  

ஆம். இன்று சனாதனிகளைத் தவிர, நம் அனைவருக்கும் பெரியார் தேவை. சாணியில் கேக் வெட்டி பெரியாரை இழிவுபடுத்துவதாகக் கருதி அவரது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது பார்ப்பனியத்துக்குr; சோரம் போன ஒரு கூட்டம். ஆனால் தமிழகமோ அணிதிரண்டு பெரியாரின் 141 ஆவது பிறந்த நாளை குதூகலத்தோடு கொண்டாடுகிறது.

இராணிப்பேட்டை ‘பெல்’ வளாகத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசர் வட்டம், தனது 23 ஆவது சந்திப்பில் கரத்தரங்க நிகழ்வாக பெரியாரின் 141 ஆவது பிறந்த நாள் விழாவை 17.09.2019 அன்று மாலை இராணிப்பேட்டையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

தோழர் வே.இந்திரன் தலைமை ஏற்று கூட்டத்தை நெறிப்படுத்தினார். தோழர் ஜெயக்கொடி வரவேற்புரை நிகழ்த்தினார். பெண் விடுதலையும் பெரியாரும் என்ற தலைப்பில் உரையாற்றிய தோழர் கிருபா, பெண் விடுதலைக்கு பெரியார் முன்வைத்த கருத்துக்களையும் அவர் முன்னெடுத்த போராட்டங்களையும் தொகுத்துரைத்தார். பெரியார் சொன்னபடி ஒரு பெண்ணாக தன்னால் அவர் சொன்னதை கடைபிடிக்க முடியாத சமூகச் சூழலே இன்றும் நிலவுகிறது என்பதை சுட்டிக்காட்டி இதை மாற்றியமைக்க பெரியார் பாதையில் அனைவரும் பயணிக்க வேண்டும் என்பதை வலியுத்தினார்.

சாதி ஒழிப்பில் பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் பேசிய தோழர் கு.விஜயகுமார், பெரியார் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக சாதித் தீண்டாமைக்கு எதிராக பெரியாரின் போராட்டங்களை பட்டியலிட்டுப் பேசினார். பொதுவுடைமையை நேசித்த பெரியார் என்ற தலைப்பில் பேசிய தோழர் பொன்.சேகர் தனது உரையில் பொதுவுடைமையின் தேவை குறித்து பெரியார் பேசிய எழுத்துகள் மற்றும் உரைகளிலிருந்து பெரியார் பொதுவுடையை பெரிதும் நேசித்தவர் என்பதை நிறுவினார். இறுதியில் தோழர் ப.நீலகண்டன் நன்றி கூற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. பெல் ஊழியர்கள் குடும்பத்தோடு திரளாகக் கந்து கொண்டு சிறப்பித்தனர். 


















முன்னதாக 17.09.2019 அன்று காலை இராணிப்பேட்டை 'பெல்' நிறுவன வாயிலில் பெரியார் 141 ஆவது பிறந்த நாள் முக்கியத்துவம் குறித்த பிரசும் 'பெல்' ஊழியர்களிடம் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் விநியோகம் செய்யப்பட்டது.

'பெல்' இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம் (OBC) சார்பில் 'பெல்' வாயிலில் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.







 
தொடர்புடைய பதிவுகள்

ஆளுமையை வளர்க்கும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்







 

Saturday, 14 September 2019

ஆளுமையை வளர்க்கும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்.


இராணிப்பேட்டை “பெல்“ வளாகத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் 22-வது சந்திப்பு 30.08.2019 அன்று இராணிப்பேட்டையில் நடைபெற்றது. ஆயிஷா இரா நடராசன் அவர்கள் எழுதிய “டார்வின் ஸ்கூல்” நூல் குறித்து தோழர் நா.பாலாஜி அவர்களும், டாக்டர் ஜோசப் மர்ஃபி (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)  அவர்கள் எழுதிய “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” நூல் குறித்து தோழர் கோ.இளங்கீரன் அவர்களும் உரையாற்றினர். தோழர் தி.க.சின்னதுரை கூட்டத்தை நெறிப்படுத்தினார். தோழர் செ.வினோதினி வரவேற்புரை நிகழ்த்தினார். பார்வையாளர்கள் உற்சாகத்தோடு பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியில் தோழர் கோ.இளங்கொவன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

“டார்வின் ஸ்கூல்” நூல் கதை வடிவில் பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் கண்ணோட்டத்தில் விளக்குகிறது. அதே வேளையில் “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” நூல் மனித மனத்தின் நிலைகளை விளக்கினாலும் அறிவியல் பார்வையில் கருத்துமுதல்வாதத் தன்மையைக் கொண்டது. பலதரப்பு நூல்களையும் வாசிப்பது, மாறுபட்ட கருத்தோட்டங்களையும் விவாதிப்பது என்கிற நோக்கத்கில் இத்தகைய நூல்களும் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படுவதை பாராட்டியாக வேண்டும்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் பிரபலமானப் பேச்சாளர்களை மட்டும் நம்பி கூட்டத்தை நடத்துவதில்லை. மாறாக புதியவர்களை படிக்கச்சொல்லி உற்சாகப்படுத்துவதோடு, தாங்கள் படித்துப் புரிந்து கொண்டதை விளக்கிப் பேசுவதற்கான வாய்ப்பையும் தருகிறது. எனவே இங்கு ஒருவர் வாசிப்பை மட்டும் வளர்த்துக் கொள்ளவதோடு நில்லாமல் ஒரு கருத்தாளராகவும் தன்னை உயர்த்திக் கொள்கிறார். 


















தொடர்புடைய பதிவுகள்

கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்








 



Thursday, 18 July 2019

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

முன்பெல்லாம் ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை பெய்யும். இப்பொழுதெல்லாம் வெப்பச் சலனத்தையும் காணோம்; மேலடுக்குச் சுழற்சியையும் காணோம். கோடையில் வெப்பம் ஏன் சலனப்படுவதில்லை என்பதற்கான காரணத்தைச் சொல்லாமலேயே பணி ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார் இரமணன். தனக்குச் சலனம்1 என்றாலும் பிறர்க்குதவும் பண்பால்தான் கதிரவன் போற்றப்படுகிறானோ!

முன்பெல்லாம் சித்திரை முதல் தேதியில் மானாவாரி நிலத்தில் பொன் ஏர் கட்டுவார்கள். தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்தி எளிமையான வழிபாட்டுக்குப் பிறகு பச்சரிசியில் வெல்லம் கலந்து தேங்காய்ச் சில்லுடன் கொடுக்கும் அந்தத் தின்பண்டத்தை நினைத்தாலே இன்றும் நாவில் எச்சில் ஊறும்.

அதைப் பண்டம்2 என்று சொல்வதைவிட தீனி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே தயாரிக்கப்படும் வெல்லம் கலந்த பச்சரிசி பரிமாற்றத்திற்கு உரியதல்லவே!

சித்திரையில் உழுத நிலம் அவ்வப்பொழுது மறு உழவால் புரட்டப்பட்டு வேர்க்கடலை, கம்பு, சோளம், துவரை, மொச்சை என மண்ணுக்கு ஏற்ப ஆனியிலே விதைப்பும் முடிந்து விடும். முளைவிட்டு விரிந்த பயிர் பசுமையுடன் துளிர்க்கையிலே நம் நெஞ்சமெலாம் நனைந்துவிடும்.

மொச்சைக்கும் துவரைக்கும் நடுவிலே கொஞ்சம் ‘பிச்சை’3யையும் போட்டு வைப்பார்கள் பின்னாளிலே ருசி பார்க்க.

இதோ சித்திரை போய் வைகாசி – ஆனி கடந்து ஆடியும் வந்தாச்சு. இது தென்மேற்குப் பருவ மழைக்காலம். வேர்க்கடலைச் செடிகள் பூவிரித்து மண்நோக்கி பிஞ்சிறக்க காத்திருக்கும் காலமிது.

கேரளச் சீமையிலே கொட்டித் தீர்த்த மழை மிச்சம் மீதி ஏதும் இருப்பின் அதுவே மேலெழுந்து மலைதாண்டி மேலடுக்குச் சுழற்சியாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் விசிறிவிட்டு காற்றாய் கலைந்து போகும். மண் நனைந்து ஈரம் பூக்கும். கடலைச் செடியின் பிஞ்சுக் காம்புகள் மண்ணுக்குள்ளே காயாய் முதிரும். மழை ஏதும் இல்லை என்றால் கடலைச் செடியின் பிஞ்சுக் காம்புகள் மண்ணைத் தொடாமலேயே மலடாகிப் போகும்.

பொன் ஏரும் பச்சரிசி வெல்லமும் வெறும் கனவாய் நினைவில் ஓட ஆடி முதல் நாளில் சென்னைக்குப் பயணமானேன் ஜெ.பி-யிலே.

வாலாசா ரோடு இரயில் நிலையத்தில் காலையிலேயே பெருங்கூட்டம். சென்னைக் கடற்கரைவரை செல்லும் உள்ளூர் மின்தொடர் வண்டிக்காகவும் அதைத்தொடர்ந்து சென்னை சென்ட்ரல்வரை செல்லும் சோலையார்ப்பேட்டை விரைவு வண்டிக்காகவும்4 காத்திருக்கும் கூட்டம் அது.

சென்ட்ரலோடு எம்.ஜி.ஆரையும் சேர்த்து சுமக்கும் பயணச் சீட்டை பாக்கெட்டில் சொறுகிய போது ஏதோ வேண்டாத சுமையை சுமப்பதாக உணர்ந்தேன்.

மடிப்புச் சட்டைகளையும் மடிசார்களையும் மட்டுமே சுமந்து சென்ற இரயில்கள் இப்பொழுதெல்லாம் ஆயிரம் மடிப்புகளைக் கொண்ட அழுக்குச் சட்டைகளையே அதிகம் சுமக்கின்றன. உண்டி சிறுத்த அழகியப் பெண்டிரும், மடித்துக் கட்டிய லுங்கியரும் சென்னை நோக்கி பயணிப்பது இப்பொழுதெல்லாம் வழமையாகிவிட்டது. லுங்கி கட்டினால் ஏளனப் பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதனாலேயே இளவட்டமெல்லாம் பேண்டுக்குத் தாவுகிறார்கள். 

வேளாண்மை பொய்த்து கிராமங்கள் வாழ வழி அற்றுப் போனதால் நேற்று வரை நிலக்கிழாராய் நிலைத்திருந்தவன் இன்று பிழைப்பு தேடி கூலியாய் ஓடுகிறான் நகரை நோக்கி.

“முதலாளியம், நகரங்களின் ஆளுகைக்குள் நாட்டுப்புறத்தைக் கொண்டு வந்துவிட்டது. அது விரிந்து பரந்த பெரு நகரங்களை உருவாக்கியுள்ளது. அது, நகரங்களைச் சார்ந்து நாட்டுப்புறம் இருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது” என இன்றைய நடப்பைத்தான் மார்க்சும் ஏங்கெல்சும் 170 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிந்து கம்யூனிஸ்ட் அறிக்கையில் உரைத்தனரோ!

உற்பத்திக் கருவிகள் வளர்ச்சி காணும் போது உழவு மாடும் ஏர் கலப்பையும் அற்றுப் போய், அவ்விடத்தில் டிராக்டர்கள் நுழைவதை யாரால் தடுக்க முடியும்? உழவு மாடும் ஏர் கலப்பையும் இருந்த இடத்தை இன்று டிராக்டர்கள் பிடித்துக் கொண்டாலும் உற்பத்தி என்னவோ சிறுவீத அளவிலேதான் தொடர்கிறது. வேளாண்மை ஒரு தொழிலாய் உருவெடுத்து பெருவீத உற்பத்திக்கு மாறாதவரை நகரை நோக்கி ஓடுவதும் குறையப் போவதில்லை.

வாலாசா ரோடு, சோளிங்கர், சித்தேரி, அன்வர்திகான்பேட்டைகளில் நின்ற கூட்டத்தை வாரிச் சுருட்டி விரைந்தது ஜெ.பி. சூப்பர் பாஸ்ட் இல்லை என்றாலும் தான் சுமக்கும் மக்களை காலதாமதத்திற்கான ஏளனத்திலிருந்து காக்கலாமே என அரக்கோணத்தைத் தாண்டியவுடனே சூப்பர் பாஸ்ட்டாய் வேகமெடுத்தது ஜெ.பி.

காலை ஜெ.பியும் மாலை ஜே.பியும் இல்லை என்றால் நிலக்கிழார்கள் எல்லாம் ‘நினைவில் வாழும்’ விதர்பாக்களாகி இருப்பார்கள். சினிமாவிலே சிக்குபுக்கு ரெயிலைப் பார்த்தவர்களுக்கு இன்று ரெயிலே வாழ்க்கையாகிப் போனது.

தொடரும்

குறிப்பு

1.சலனம் - கலக்கம், தும்பம்

2.பரிமாற்றத்திற்காக உருவாக்கப்படும் எதுவுமே பண்டம்தான். பண்டம் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை. பரிமாற்றத்திற்காகவும் உருவாக்கப்படுகிறது. பண்டம் என்பது வெறும் பொருள் மட்டுமே அல்ல, அதற்கான விலையுடன் கூடியபொருளாக இருக்கிறது. இங்கே பச்சரியும் வெல்லமும் பயன்பாட்டுகுரிய ஒன்றுதான் என்றாலும் அது பரிமாற்றத்திற்காக, விற்பனைக்காக உருவாக்கப்படவல்லை என்பதால் அது பண்டமாகாது.

3.பிச்சை – தர்ப்பூசணியை ‘பிச்சைக்காய்’ என்பார்கள் திருவண்ணாமலை மாவட்ட வேளாண் மக்கள்

4.சோலையார்ப்பேட்டையிலிருந்து (Jolarpet) சென்னை வரை செல்லும் விரைவு வண்டியைத்தான் ஜெ.பி (JP) என்பார்கள்.

தொடர்புடைய பதிவுகள்




கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்


வேலையின்மை, வறுமை, பசி, பஞ்சம், பட்டினிச் சாவுகள், தற்கொலைகள், ஏமாற்று, பித்தலாட்டம், உழைப்புச் சுரண்டல், இயற்கை வளங்கள் சூறையாடல், சுற்றுச் சூழல் கேடு, பாலியல் வன்கொடுமைகள், சாதி-மத மோதல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என பல்வேறு துன்ப துயரங்களை நாம் அனுபவித்து வருகிறோம். இத்துன்ப துயரங்களிலிருந்து விடுபட முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு நமது அன்றாட வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. 

விடுதலையைத் தேடி……. 

“கம்யூனிட் அறிக்கை எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை உலக நிலைமையில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவ்வறிக்கையின் தத்துவமானது இன்றைய நிலைமைக்கு மிக்கப் பொருத்தமானதாகவே இருந்து வருவது அவ்வறிக்கையின் விசேசத்திற்கு ஒரு காரணமாகும்”. – தந்தை பெரியார், குடியரசு தலையங்கம் 04.10.1931.

“உலகத்தில் பொதுவாக யாவருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால் இந்த முறையைத்தான் – சமதர்மம் - கடைசி முயற்சியாக ஏதாவதொரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை” - தந்தை பெரியார், குடியரசு தலையங்கம் 04.01.1931.

கம்யூனிட் அறிக்கை எழுதப்பட்டு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிட் அறிக்கையின் பொருத்தப்பாடு மற்றும் பொதுவுடைமைச் சமூகத்தின் அவசியம் குறித்து பெரியார் மிகத் துள்ளிமாக கூறியிருக்கிறார்.

கம்யூனிட் அறிக்கை 1848-ல் வெளியாகி தற்போது 170 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

இந்த 170 ஆண்டுகளில் அதிசயிக்கத்தக்க பல மாறுதல்கள் மேலும் ஏற்பட்டு இருந்தாலும் கம்யூனிஸ்ட அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து கிரீஸ் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரௌஃபாகிஸ் அவர்கள் 2018-ல் கம்யூனிஸ்ட அறிக்கை நூலுக்கு எழுதிய முன்னுரையில்

“ஒட்டு மொத்த மானிடச் சமூகத்தையும் இரண்டு கடும் பகை முகாம்களாகப் பிளவு படுத்தும், திருட்டுக் கொள்ளைச் செயல்களில் ஈடுபடும் மூலதன முதலாளியம், 21-ம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் வடிவத்தில் நிலவுவது பற்றி கம்யூனிஸ்ட் அறிக்கை முன்னுணர்ந்து எடுத்துரைத்தது. அதே வேளையில், ஒரு சிறப்பு மிக்க உலகை உருவாக்கும் ஆற்றலை நாம் நம்மிடத்தே கொண்டுள்ளோம் என்பதையும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்”.

என புதிய ஒரு சமூக அமைப்பை – அது சோசலிசம் மட்டுமே - உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

பிள்ளை வளர்ப்பு, சமையல் வேலை, துணி துவைத்தல் உள்ளிட்ட வீட்டு வேலைகளிலிருந்து முதலில் பெண்களை விடுவிக்க வேண்டும் என்கிறார் பெரியார். அதற்கு ஒரேவழி ரசிய சோசலிச சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமுதாய உணவுக்கூடங்கள், சமுதாய சலவைக் கூடங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் போன்று உருவாக்கப்பட வேண்டும்; பெண்களுக்கானத் தீங்குகள் எல்லாம் காரணமாயமைந்த தனியுடைமை ஒழியும் வரை பெண்ணடிமையும் நீங்காது என பொதுவுடைமைச் சமூகத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். (திருப்பத்தூர் 15.09.1946 சொற்பொழிவு – குடிஅரசு 21.09.1946, ஈரோடு 4.11.1933 சொற்பொழிவு – குடிஅரசு 12.11.1933 மற்றும் சென்னை 30.09.1948 விக்டோரியா மண்டபம் சொற்பொழிவு – குடிஅரசு 11.10.1948)

பெல், இராணிப்பேட்டையில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் 12.07.2019 அன்று மாலை நடைபெற்ற 21-வது சந்திப்பில் கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்தும் பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து தோழர் அ.வில்சன் மற்றும் பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் குறித்து தோழர் அ.கிருபா ஆகியோர் உரையாற்றினர்.  தோழர் கோ.இளங்கீரன் வாசகர் வட்ட நிகழ்வை நெறியாளுகை செய்தார். தோழர் வெ.கோவிந்தசாமி வரவேற்புரை நிகழ்த்த தோழர் தி.வீரபாண்டியன் நன்றி உரை கூறினார். தோழர் பொன்.சேகர் தொகுப்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் தோழர் தமிழ்க்கனல் பாடல் பாடினார்.

இது போன்ற சந்திப்புகள் வாசகர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவதோடு சமூகப் பிரச்சனைகளை பரிசீலிக்கவும் உதவுகிறது என்பதை பார்வையாளர்கள் ஆர்வத்தோடு பங்கேற்பதிலிருந்து உணர முடிகிறது.


 

 




 தொடர்புடைய பதிவுகள்