அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து நாலரை மணிக்கு பேருந்து பிடிக்கச் சென்றேன். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிற்றூரில் குடியிருந்தாலும் அந்த நேரத்தில் போக்குவரத்து அதிகம் இருக்காது. நாலரை மணிக்கு வரவேண்டிய பேருந்து வராததால் ஐந்து மணிக்கு வேறு பேருந்தில் ஏறி அருகில் உள்ள சிறு நகரை அடைந்தேன். அங்கு ஒரு மணி நேரம் காத்துக் கிடந்து பிறகு வந்த பேருந்தில் ஏறி மற்றொரு நகரை அடைந்தேன்.
இது சற்றே பெரிய நகரம். மாவட்டத் தலைநகரம் எனபதாலும் பல்வேறு ஊர்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இருப்பதாலும் பேருந்து நிலையத்தில் இங்குமங்குமாக மக்கள் பேருந்தைப் பிடிக்க விரைந்து கொண்டிருந்தார்கள்.
எனது ஊருக்கு நேரடிப் பேருந்து கிடையாது. நான் இங்கிருந்து மற்றொரு ஊருக்குச் சென்று அங்கிருந்து வேறு ஒரு பேருந்தைப் பிடிக்க வேண்டும். அவசரமாகச் செல்ல வேண்டும்தான். இருந்தாலும் புறப்படுவது போல உருமிக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறத் தயக்கம்.
அப்பொழுது மணி ஆறரை. அந்த நேரத்திலும் தள்ளு வண்டியில் ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழங்களுடன் ஒரு இளைஞனும் சிறுவனும் நின்று கொண்டிருந்தார்கள். அவசரமாய் புறப்பட்டு வந்தவர்கள் ஊருக்கு ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டுமென்றால் பேருந்து நிலையக் கடைகள்தானே கதி. வேறு வழி கிடையாது.
சற்று முன்னெச்சரிக்கையோடு கொஞ்சம் தின்பண்டங்களை நேற்று மாலையிலேயே வாங்கி வைத்துவிட்டேன். கூடுதலாக கொஞ்சம் பழம் வாங்கிச் செல்லலாமே என திராட்சை விலையைக் கேட்க எண்ணிய போது கிராமத்துப் பெண்மணி ஒருத்தர் கால் கிலோ திராட்சையை வாங்கினார். காலை நேரக் குளிரைத் தாங்க 'ஜெர்க்கின்' போட்டிருந்த இளைஞன் எடை போட்டபோது அதிர்ந்து போனேன். ஒரு நூறு கிராம் அளவுக்கு திராட்சையை எடுத்துப் போட்டவுடனே பட்டென எடைத்தட்டு அந்தப்பக்கம் இறங்கிவிட்டது. மேலும் ஒரு கொத்து திராட்சையை எடுத்துப்போட அருகில் இருந்த சிறுவன் அதை பாலிதின் பையில் போட்டுக் கொடுக்க அந்தப் பெண் அதைவாங்கி பக்குவமாய் 'ஒயர்' கூடையில் வைத்துவிட்டு நூறு ரூபாய்த் தாளை நீட்டினார். அவன் 80 ரூபாய் மீதி கொடுத்தான்.
”எவ்வளவுப்பா?” என அவர் கேட்க
”கால் கிலோ இருபது ரூபாய்” என்றான்.
”என்னப்பா இவ்வளவு விலை?” என்றார்.
”முன்னமே சொன்னேனம்மா கால் கிலோ இருபது ரூபாய்னு” என்றான்.
பாமரர்களுக்கு கால் கிலோ எடையின் அளவு எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. ஆனால் காசு அதிகம் என்றால் எல்லோருக்கும் புரியும்தானே. அந்தம்மாவுக்கு விலை அதிமாய்த் தோன்றியிருக்க வேண்டும். கவரை கொடுத்துவிட்டு நூறு ரூபாயைத் திரும்ப பெற்றுக் கொண்டு பேருந்துக்குச் சென்றுவிட்டார்.
அடுத்து ஒருவர். தனது உறவினரை வழியனுப்ப வந்தவர். கால் கிலோ வாங்கினார். அதே எடை. அதே விலை. காசைக் கொடுத்தார். புறப்படத் தயாராய் இருந்த பேருந்தில் உடன் வந்தவரை ஏற்றி வழியனுப்பினார். விலை மற்றும் எடையில் கவனம் செலுத்த அவருக்கு அது நேரமில்லை. அவ்வளவு அவசரம். இந்த அவசரம்தானே எமாற்றுவோருக்கு சாதகமாய் அமைந்து விடுகிறது.
ஒரு கிலோ ஐம்பது ரூபாய், கால் கிலோவாக வாங்கினால் பதினைந்து ரூபாய் விற்கும் போது இருபது ரூபாய் என்பது அநியாய விலைதான். விலையையாவது தாங்கிக் கொள்ளலாம் போல இருந்தது அவன் போட்ட எடையைப் பார்த்த போது. மிஞ்சிப் போனால் 175 லிருந்து 200 கிராம் இருக்கும். எனக்குப் பழம் வாங்கும் ஆசையே விட்டு விட்டது. போகும் வழியில் ஏதாவது கிடைக்காதா எனக் கருதி தனியார் பேருந்து புறப்பட்டவுடன் அடுத்து பத்து நிமிடத்தில் புறப்படத் தயாராய் இருந்த அரசுப் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
இது மோசடிதான். இங்கே மோசடி செய்பவன் டாட்டாவோ அம்பானியோ அல்லதான். இத்தகைய மோசடியால் இவன் குபேரனாக முடியாதுதான். இருந்தாலும் ஒருவன் செய்கிற மோசடி அவனோடு நிற்பதில்லை. ஏமாற்றுகிறப் பண்பு ஒரு பரிணாமமாய் உருப்பெற்று மொத்த சமூகத்தையும் பீடிக்க வழி வகுக்கின்றனவே. அதுதானே சமூகத்தை சீரழிக்கும் மிகப் பெரிய ஆபத்து.
தனியார் பேருந்தில் என்னதான் ஆடியோக்களையும், வீடியோக்களையும் போட்டு பயணிகளைக் கவர்ந்தாலும் ஆள் பிடிக்க, அதுவும் காலை நேரப் பயணத்தின் போது...
நிற்பதும்... ஊர்வதுமாய்..
அப்பப்பா... நான்கு கிலோ மீட்டர் தூர நகரைக் கடப்பதற்குள் நாற்பது கிலோ மீட்டர் சென்றிருக்கலாம். போகும் வழி நெடுக நின்று நின்று சாவகாசமாய் பயணிகளை ஏற்றும் போது நமக்கோ எரிச்சல் செம கடுப்பாய் மாற 'பிரஷர்' தலைக்கு ஏறி நெற்றிப் பொட்டு பட்.. பட்டெனத் துடிக்கும்.
இருக்காதா பின்ன? இந்த வேகத்தில் போனால் ஊர் செல்லும் அடுத்தப் பேருந்தை கோட்டை விட்டுவிட்டால் பிறகு ஊருக்கு எப்படிச் செல்வது? சற்றே 'டர்ரு புர்ரெனப்' புறப்பட்டாலும் உரிய நேரத்தில் அடுத்த ஊரைச் சென்றடையலாம் என்பதால் நான் அரசுப் பேருந்துகளையே பெரும்பாலும் நாடுவேன். வேறு வழியே இல்லை என்றால் தனியார் பேருந்துதான் கதி.
ஊர்ப் பயணம் தொடரும்... மீண்டும் சந்திப்போம்!.
No comments:
Post a Comment