Tuesday, 1 August 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உழைத்துப் பார்! தெரியும் களைப்பு!" தொடர் - 5

'கைய கால வெச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டியா?' என்று என்னைப் பார்த்து எனது தங்கை அடிக்கடி கேட்கும் கேள்வி இது. ஆம்! கிராமங்களுக்குச் சென்றால் நான் சும்மா இருப்பதில்லை. மண்வெட்டி, கடப்பாறை, கொடுவா என எது கிடைத்தாலும் அதைக்கொண்டு மண்டிக் கிடக்கும் புற்களையும், புதர்களையும், முச்செடிகளையும் அப்புறப்படுத்தி அழகு பார்ப்பவன்.

இந்த ஆறு நாட்களில், கொடுக்காப்புளி முட்செடிகளை வெட்டிய போது அதனுடன் சேர்ந்தே வளர்ந்திருந்த சீங்கை முட்கள் என் கைகளைப் பதம் பார்த்தன. மாமரத்துக்கடியில் மண்டிக் கிடந்த தேங்காய் மட்டைகளை அப்புறப்படுத்தி செருப்பணியாமல் சமன் செய்த போது மண்ணில் புதைந்து கிடந்த கவரிங் தோடு ஒன்றின் ஊசி முனை என் பாதத்தைத் துளைத்தது. தேவையற்ற கொளஞ்சிச் செடியின் கிளைகளை வெட்டிக் கழித்து அப்புறப்படுத்திய போது வலது தோள்பட்டை வலி கண்டது. மேட்டுக்கும் பள்ளத்திற்கும் இடையில் ஏறி இறங்கி வேலை செய்த போது வலது கணுக்காலில் ஏற்பட்ட உட்காயம் இன்னும் வலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. 

இந்த நாட்களில் நான் கல்லக்கா பறித்தேன். முல்லை, கனகாம்பரம் எடுத்தேன். மண்டிக் கிடந்த காய்ந்த சரகுகளை அப்புறப்படுத்தி வாழை மரங்களை மிடுக்காக்கினேன். 

இவையெல்லாம் நான் சிறு வயதில் செய்த வேலைகள்தான் என்பதனால், வயது மூப்பால் களைப்பு தெரிந்தாலும் அலுப்புத் தட்டவில்லை. விவசாயிகளின் அன்றாட வேலைகளில் இவை ஒரு சிறு பகுதிதானே?. 

எனது தாத்தாவுக்கு ஊருக்குள் பழைய வீடு ஒன்றிருந்தது. நாள் பட்டதால் அது சிதைந்து சிதிலமடைந்து இன்று வெறும் மனையாய் காட்சியளிக்கிறது. அதனால் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கொல்லையில், 10×12 அளவில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு போட்ட ஒரே அறை கொண்ட வீட்டில்தான் நீண்ட காலம் ஐந்து பேர் கொண்ட எனது தங்கை குடும்பம் வசித்து வந்தது. 

இளைய மகளுக்கு வரன் பார்க்க வேண்டி இருந்ததால் ஊருக்குள்ளே வாடகைக்கு வீடெடுத்து சிலகாலம் வசித்து வந்தனர். இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு இல்லை என்றால் வரன் கிடைப்பது கொம்புத்தேன் என்ற கதையாகிப் போனதனால், தாய்மாமன் மறைவிற்குப் பிறகு அவரும் அத்தையும் வசித்து வந்த வீட்டை, மகனுக்கு வரன் பார்ப்பதால் சற்றே புணரமைத்து அங்கே தற்போதைய வாசத்தைத் தொடர்கின்றனர். 

மூன்று படி ஏறி உள் நுழைந்தால் 6×10 அடி அளவில் ஒரு வெராண்டா. அதன் இடது மூளையில் ஒரு மேசை, அதற்கு மேலே ஒரு சிறிய ஸ்மார்ட் டிவி. வலது பக்க ஓரத்தில் சமையல் மேடை. மேசைக்கருகில் ஒரு ஒற்றைப் பாய் விரிக்கும் அளவு இருந்த இடம்தான் ஆறு நாட்களிலும் நான் படுத்துறங்கிய இடம். இந்த வெராண்டாவுக்கு ஒரு கிரில் கேட் மட்டுமே. எந்த நேரத்திலும் பூச்சி பொட்டு உள்நுழைய வாய்ப்புண்டு. 

அடுத்து, இரும்புக் கதவை பலம் கொண்டு திறந்து உள் சென்றால் வெளிச்சத்திற்கு பின்பக்கம் ஒற்றைச் சன்னலைக் கொண்ட 10×10' அறை. இடப்பக்க தெற்கு மூலையில் ஒரு இரும்புக் கட்டில், வடக்கு மூலையில் ஒரு பீரோ, போக கல்லக்கா உள்ளிட்ட வேளாண் பொருட்களை அடுக்கி வைக்க கொஞ்சம் இடம். இதுதான் இந்த வீட்டின் படுக்கை அறை மற்றும் பாதுகாப்பு அறை எல்லாமுமே! வெளிப்புற படியேறி மேலே சென்றால், பகலில் கல்லக்கா உள்ளிட்டவைகளைக் காய வைக்கவும், இரவில் மைத்துனர் படுத்து உறங்கவுமான மொட்டை மாடி.

அவசரத்துக்கு ஒதுங்க வேண்டுமானால் 
திறந்தவெளிதான். கதிரவன் மேலெழுந்து வருவதற்குள் காலைக் கடனை முடித்துக் கொள்வது சாலச் சிறந்தது. இல்லையேல் இடம் தேடித் திண்டாட வேண்டி வரும். உரிய இடம் ஏதும் கிட்டவில்லை என்றால் மாலை இருட்டும் வரைக் காத்திருக்க நேரிடும். 

20 ஆண்டுகளாக 'வெஸ்டர்ன் டாய்லெட்டி'லேயே வெளிக்குப் போயி பழகிப்போனதால் திறந்த வெளியில் குத்துக்காலிட்டு கடனைக் கழிப்பது எனக்குக் கடினம்தான் என்றாலும் கடனைக் கழித்து எழ கைத்தடியை நாடியதால் சமாளிக்க முடிந்தது. கடன் முடித்து குதம் கழுவ பிளெக்சிபிள் ஹோசுடன் பிளஷர் கிடையாது.  நெல் வயலில் தேங்கி நிற்கும் சேறு கலந்த கழனி நீரையோ, பாசன நீர்தொட்டியில் மீதமிருக்கும் நீரையோதான் நாட வேண்டும். 

உடலும் மனமும் பேசும் மொழி ஒன்று என்பார்கள் ஹோமியோபதியில். இத்தகைய சூழலில் வாழ்வதற்கு மனம் வெறுத்தால் மலம்கூட கட்டிப் போகும். ஆனால், இதுதான் வாழ்க்கை என்று மனம் ஏற்றுக் கொண்டால் எல்லாமே இயல்பாய் கடந்து போகும்.

தாளிட்டுக் குளிக்க இங்கே தனி அறை இல்லை, வாழை மரத்தடிதான். வயதுப் பெண்கள் வெட்டவெளியில் குளிப்பதென்பது சங்கடமாய் இருந்தாலும் இருட்டிய பிறகே பெரும்பாலும் குளியல். காலை முதல் மாலை வரை ஓய்வின்றி உழைப்பவர்க்கு உகந்த நேரமும் இதுதான். உடை கலைந்து குளிக்கும் போதும், பின் உடைமாற்றும் போது நிகழும் கணநேர ஆடை விலகல்கள்கூட இங்கே ஆபாசமாய்த் தெரிவதில்லை. 

காலையில் கஞ்சியோ, கூழோ இருப்பதை குடித்துவிட்டு, பிற்பகலில் முழு உணவு, பின் ஏழு மணிக்கெல்லாம் இரவு நேர உணவை முடித்துக் கொண்டு, எட்டு மணிக்கெல்லாம் உறங்கினால்தான் மறுநாள் அதிகாலை எழுந்து பூப்பறிக்க முடியும். நேரம் தொலைப்பவருக்கு மட்டுமே தொலைக்காட்சித் தொடர்கள்; உழைப்பவருக்கு வாழ்க்கையே ஒரு தொடர்தானே!

உழைப்பினூடே அன்றாடம் பூரான்களையும் சொய்யான்களையும்,  பாம்புகளையும் பல்லிகளையும், தேரைகளையும் தவளைகளையும், பூச்சிப் புழுக்களையும் வண்டுகளையும், தேளையும் நட்டுவாகத் தெறிக்கிகளையும், மரவட்டைகளையும் பிற எண்ணற்ற பூச்சிகளையும் எதிர்கொள்ளலாமல் கிராம வாழ்க்கையைக் கடந்து செல்ல முடியாது.

தொடரும்

ஊரான்

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உயிரைப் பணயம் கேட்கும் முல்லைகள்!" தொடர் - 4

இது முல்லை அரும்புகள் முகிழ்க்கும் காலம். 
கணவன் மனைவி இருவரும் அதிகாலை மூன்று மணிக்கு தலைச்சுடரொளியை (head torch light) மாட்டிக் கொண்டு ஐந்து செண்ட் அளவுள்ள முல்லைத் தோட்டத்திற்குள் நுழைகிறார்கள். தலைச்சுடரொளியின் சிறு ஒளிவட்டத்தில் வெண்மையாய் உள்ள முல்லை அரும்புகளை மட்டும் மென்மையாய்ப் பறித்து மடியிலே போடுகிறார்கள். 

கடலைச் செடியை பிடுங்கும் போதும், கடலையைப் பறிக்கும் போதும் கரடு முரடாய் இயங்கும் விரல்கள், முல்லையைத் தொட்ட உடன் மென்மையாகி விடுகின்றன. இல்லையேல் அரும்புகள் நைந்து போகுமென காய்த்துப் போன விரல்கள்கூட உணர்கின்றனவே!? கனகாம்பரத்தைப் பறிக்கும் போது மேலும் மேலும் மென்மை தேவை. 

பார்வை சற்றே பிசகினால், மறுநாள் பறிக்க வேண்டிய முகிழ்க்கா அரும்புகளும் கையில் சிக்கிவிடும். என்னதான் உற்று உற்றுப் பார்த்து பறித்தாலும், சில முகிழ்த்த மொட்டுக்கள் இலைகளுக்கிடையில் ஒளிந்து கொள்ளும். அவைகள் அடுத்த நாள் பூத்துக் குலுங்கி வீணாய்ப் போகும். 

சில சமயம் கொடிய வஞ்சகர்கள்கட தோட்டத்திற்குள் வாசம் செய்ய முயல்வர். வஞ்சகர் இருக்கும் பக்கம் நீங்கள் காலடி எடுத்து வைத்தால் அவைகள் 'உஸ்! உஸ்!' என ஒலி எழுப்பும். எச்சரிக்கையாய் இல்லையெனில் அவை உங்களை போட்டுத் தள்ளும். 

குரல் எழுப்பி, கும்மிருட்டில் வயல் வரப்புகளுக்கிடையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே, கொடிய நாகனின் நஞ்சு உங்கள் கதையை முடித்திருக்கும். வசீகரிக்கும் வாசமும் வெண்மையும் நிறைந்த முல்லைக்குப் பின்னே உள்ள ஆபத்து யாருக்குத் தெரியும்? உயிரைப் பணயம் வைத்தல்லவா மங்கையரை மகிழ்விக்கிறான் விவசாயி.

இளைய மகளின் இரண்டு வயதுக் குழந்தையை வீட்டில் தூங்கவைத்துவிட்டு, கதவை சரியாகத் தாழிடாமல், தாயும் தாத்தா பாட்டியும் அதிகாலையில் தோட்டத்துக்குச் சென்றுவிட, கண்விழித்தக் குழந்தை இவர்களைத் தேடி தோட்டத்தை நோக்கிச் சென்று 'அம்மா' என குரல்  எழுப்ப, அதிர்ந்து போய் குழந்தையை அரவணத்தச் செய்தியை அவர்கள் சொல்லும் போது யாரால்தான் பதறாமல் இருக்க முடியும்? வரும் வழியில் புற்களும் புதர்களும் நிறைந்த வாய்க்கா வரப்புகளில் ஏதேனும் தீண்டியிருந்தால், வரப்பை ஒட்டி மதிர்ச்சுவரில்லா ஆழ்கிணற்றில் இடரி விழுந்திருந்தால்....? அப்பப்பா, நினைத்தாலே நமக்கே நெஞ்சம் பதறுகிறதே! பெற்ற தாய் என்ன பாடுபட்டிருப்பாள்?

கீழ் வானம் சிவக்கும் வேளையில்  மொட்டுக்கள் பறிப்பதை நிறுத்திவிட்டு பசு மாட்டைத் தட்டிக் கொடுத்து பால் கறக்க வேண்டும். கறந்த பாலை பால்காரிடம் சேர்த்து விட்டு மீண்டும் தோட்டத்திற்குச் சென்று மீதமுள்ள மொட்டுக்களை பறித்து வந்து, எடை போட்டு ஏழு மணிக்கெல்லாம் காட்டோர கூட்ரோட்டுக்கு ஓடோடிச் சென்று முல்லைப் பாக்கெட்டை பேருந்தில் சேர்க்க வேண்டும். அது கோணாகுட்டை கேட்டில் உள்ள இடைத்தரகரிடம் சென்று, பிறகு  அங்கிருந்து செங்கம் அல்லது திருவண்ணாமலை நகரில் உள்ள மொத்த பூ வியாபாரிகளைச் சென்றடையும். இறுதியாக அங்கே எடை பார்த்து பின் மாதம் கழித்து கணக்குப் பார்த்து காசு கொடுப்பார்கள். 

நிலம் உழுது, குழி தோண்டி, எருவிட்டு, செடி நட்டு, உரமிட்டு, நீர் பாய்ச்சி, களை எடுத்து, கவ்வாத்து பண்ணி, வறட்சி என்றால் குடம் சுமந்து நீர் ஊற்றி, பெருமழை என்றால் நீர் வடித்து பாதுகாத்து வளர்த்த முல்லையல்லவா? முல்லை முகிழ்த்தலுக்குள் எத்தனை உழைப்பு? உழைப்புக்கான பலன் கிடைக்கும் என  எல்லாவற்றையும் நம்பித்தான் விவசாயி உழைத்துக் கொண்டிருக்கிறான்.


குடும்பமே மூன்று மணி நேரம் இடுப்பொடிய, கால்கடுக்க நின்று பறித்தாலும், இரண்டு கிலோவைத் தாண்டுவதே சிரமம். வெளிச்சந்தையில் ஒரு கிலோ ஐநூறோ ஆயிரமோ விற்றாலும் மொத்த வியாபாரிகள் வைப்பதே விலை. இதில் விவசாயிக்கு நூறு இருநூறு கிடைத்தாலே பெரிது. கூலிக்கு ஆள் வைத்து பறித்தால் கிலோவுக்கு ரூபாய் ஐம்பதைக் கூலியாகத் தரவேண்டுமே என்பதால் இங்கேயும் குடும்பமே உழைக்கிறது, ஏதாச்சும் மிச்சப்படுத்த முடியாதா என்று! 

பூக்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள் விலைவிக்கின்ற பொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிற உரிமையும் அதை சந்தைப்படுத்துகிற வசதியும் கிடைக்காத வரை இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளும் கொழுப்பார்களே ஒழிய விவசாயிக்கு என்ன கிடைக்கப் போகிறது? 'உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது' என்று அதனால்தான் அன்றே சொல்லி வைத்தானோ?

பூ உற்பத்தி ஒன்றும் மனிதனுக்கு அத்தியாவசியமானதல்ல. அதில் செலுத்தப்படும் உழைப்பு அர்த்தமற்ற உழைப்புதான். அர்த்தமற்ற உழைப்பிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்காத வரை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர முடியாது என்பான் மக்சிம் கார்க்கி. என்ன செய்ய? இங்கு, இன்று, இந்தப் பூக்களாவது பாடுபடும் விவசாயப் பாட்டாளிகளின் அடிவயிற்றை ஈரப்படுத்துகிறதே என்று இப்போதைக்கு ஆறுதலடைவதைத் தவிர? 

சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைபேசி, சுண்ணாம்பு, சிமெண்ட், பெயிண்ட், சேலை, சுடிதார், செருப்பு, ஜட்டி, சட்டை, பேண்ட் என மக்கள் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களே அதற்குரிய விலையை தீர்மானித்து சந்தைப்படுத்தும் உரிமை இருக்கும் பொழுது விவசாயிக்கு மட்டும், தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து சந்தைப்படுத்தும் உரிமை ஏன் இல்லை என்று கேட்க நாதி இல்லை. 

தொடரும்

ஊரான்


Monday, 31 July 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "மாடுகளின் மனங்கவர்ந்த தீனி!" தொடர் - 3

தங்கையின் நிலத்தில் ஏற்கனவே ஒரு கொல்லையில் காய்கள் பறிக்கப்பட்ட கடலைக் கொடிகள் போர் போடுவதற்குத் தயாராய் காய்ந்திருந்தன. 

ஆடிக் காற்றில் அம்மியே நகரும் என்பார்கள்.  அப்படித்தான் இருந்தது இந்த ஆண்டு ஆடிக் காற்று. வெயில் வேறு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. காற்று மற்றும் வெயிலினால் காய்ந்த கடலைக் கொடிகளிலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. கடலைக் கொடிகள் மாடுகளின் மனம் கவர்ந்த தீனி என்பதால் அவற்றைப் பக்குவமாய் இலைகளோடு பதப்படுத்தி போர் போட வேண்டும். இலைகள் அற்ற வெறும் கடலைத் தண்டுகளை மட்டும் மாடுகளுக்குத் தீனியாய்த் தருவது வெள்ளைச் சோற்றை வெறுமனே தின்பது  போலாகிவிடும்.

மாலை நேரம், காற்று சற்றே குறைந்திருந்தது. மேற்கே அடிவானம் கருமேகங்களால் சூழப்பட்டு எந்நேரமும் மழை வரலாம் என்று அறிகுறி தெரியவே, மனிதர்களுக்கான கடலையைக் காப்பதைவிட மாடுகளுக்கான கடலைக் கொடிகளைக் காப்பதே முக்கியம் என்பதால், குவிந்து கிடந்த கடலைக் கொடிகளை கட்டுக் கட்டத் தொடங்கினார் எனது மைத்துனர். நல்ல வேலை அன்று மழை வரவில்லை. மாலை நேர கருமேகங்களைக் கண்டு, மழை வருமா வராதா என்பதை துல்லியமாய்ச் சொல்லும் வல்லமை பெற்றிருந்தனர் நம் மூதாதையர்கள். எல்லாம் பட்டறிவுதான்.

ஒரு அடி உயரத்திற்கு பெரிய கற்களை வைத்து அதன் மீது குறுக்கும் நெடுக்குமாக கழிகளைப் போட்டு, அதற்கு மேலே தென்னை ஓலைகளைப் பரப்பி, கடலைக் கொடி போர் போடுவதற்கான அடித்தளம் தயாரிக்கப்பட்டது. நேரடியாக தரையிலே போர் போட்டால் ஈரம் கோர்த்து  மண்ணில் உருவாகும் செல்கள், கொடிகளை அரித்து வீணாக்கி விடும். 

கடலைக் கொடிகளை ரசித்து ருசித்து மாடுகள்  உண்ணுவதற்கு ஏற்ப, போர் போடும் போது இடையிடையே கல் உப்பையும் தூவி வைக்க வேண்டும். மேலிருந்து கீழ், அரை வட்டம் வரும் வரை போரை நன்றாகத் தட்டி அதன் மீது வைக்கோலையோ தார்ப்பாலினையோ போர்த்தி மழை நீர் உள் இறங்காமல் பாதுகாக்க வேண்டும்.


காய்ந்த கடலைக் கொடிகளை போர்முனைக்கு சுமக்க அன்று வைக்கோல் பிரிகள் இருந்த இடத்தில் இன்று உடுத்த முடியாத அளவுக்கு வெளுத்துப் போன சேலைகளே உதவுகின்றன. அம்மியும் பறக்கும் காலம் அல்லவா? போர் கலையாமல் சிதையாமல் இருக்க இச்சேலைகளே கச்சைகளாய்  இருக்கிக் காக்கின்றன.

மறுநாளிலிருந்து அடுத்து தொடர்ந்து மூன்று நாட்களாக மோடம் பிடித்தார் போல சாரல் மழை. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் கடலை பிடுங்குவதும் பறிப்பதுமாக வேலைகள் தொடர்ந்தன. ஒரிரு நாட்களில் முடிய வேண்டிய வேலை, ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கக் காரணம், கூலிக்கு ஆள் வைக்காமல் குடும்பமே கடலையைப் பிடுங்கிப் பறித்ததுதான். கூலிக்கு ஆள் வைத்தால், பறித்ததில் ஆறில் ஒரு பங்கு கூலியாக அளக்க வேண்டும்; குடும்பமே பறித்தால் அது சேமிப்புதானே என்பதுதான் இன்றைய சிறு விவசாயிகளின் நிலை. கடலை பறிப்பது மட்டும்தான் வேலை என்றால் அதை மூன்று நாட்களில்கூட இவர்களால் முடிக்க முடியும்.

ஆனால் இவர்கள் பாடோ......?

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! 'அட நன்றி கெட்டவனே!' தொடர் - 2

செங்கத்திலிருந்து சாத்தனூர் செல்லும் நகரப் பேருந்தில் பயணித்து, 19 ஜூலை, மாலை நேர வேளையில் கல்தாம்பாடி கூட்ரோட்டில் இறங்கி சுற்று முற்றும் பார்த்தேன். மேற்கே பறந்து விரிந்த காடுகளும், கிழக்கே பசுமை நிறைந்த வயல்களும் என்னை வசீகரித்தன. 

பள்ளிப் பருவ காலங்களில், பாட்டி வீட்டில் கோடை விடுமுறையை கழித்தபோது, காடுகளில் கலாப் பழம் பறித்த காட்சிகளும், அண்ணன் பாலுவோடு சேர்ந்து கொல்ல மேட்டில் கன்னி வைத்து புறா பிடித்த காட்சிகளும், சிற்றோடையில் பெருக்கெடுத்து ஓடும் நீரில் பறிவைத்து மீன்பிடித்த காட்சிகளும் கண்முன்னே வந்து போயின.

சாலையோரம் புதிதாய் முளைத்திருந்த பெட்டிக் கடையில் பத்து ரூபாய் ஸ்பிரிட் ஒன்றை சில்லென தொண்டையில் இறக்கி எனது தங்கையின் நிலம் நோக்கி நடக்கலானேன். செல்லும் வழியில் பால்ய நண்பனும் உறவினருமான பாலகிருஷ்ணனின் இணையர் எதிர்பட்டு வரவேற்க, 'இப்பத்தான் தெரிஞ்சதா ஊருக்கு வழி?' என்று வினவிய போது, அதன் பொருள் புரிந்ததால் நான் குருகித்தான் போனேன். 

2018 பிப்ரவரியில், ஒரு பாதி செயல் இழந்து நடக்க முடியாமல், சைகை மொழி பேசி, பச்சிளம் குழந்தை போல படுக்கையில் கிடந்த எனது தாயை, நான் உடனிருந்து பராமரிக்க இயலாத ஒரு இக்கட்டான சூழலில், நம்பியவர்களும் கைவிட, எனது அன்னையின் அண்ணன் மகன் நேசக்கரம் நீட்ட, அன்னையின் மூன்றாம் மகள் அரவணைக்க தான் பிறந்த இம்மண்ணிலே பத்து மாதம் தவழ்ந்து, 2019 சனவரியில் மரணத்தைத் தழுவினாள் எனது தாய். 

அவள் மறைந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், ஓரிரு முறை மட்டுமே அங்கு சென்றுள்ளேன். அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எட்டிக் கூடப் பார்க்கவில்லை‌. 'அட நன்றி கெட்டவனே!' என ஈட்டி போல எனது நண்பனின் இணையர் கேட்ட கேள்வி என் நெஞ்சைத் துளைத்ததன் பொருள் இதுதான். 'நன்றி மறப்பது நன்றன்று' என்று சும்மாவா சொன்னான் வள்ளுவன்?

எதிர்பாராத எனது வரவைக் கண்டு கொல்லையில் கடலைக்காய் பறித்துக் கொண்டிருந்த எனது தங்கை 'வாண்ணே!'என வாஞ்சையாய் அழைத்த போது என் நெஞ்சுக்கூடு சற்றே லேசாகியது.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 30 July 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! தொடர் - 1

அத்திமூரான் கொட்டாயிலிருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று நாகப்பாடியில் பேருந்தைப் பிடித்து பாட்டி ஊருக்குப் பயணித்த காலம் நினைவில் நிழலாட இந்த ஆண்டு, ஆடியிலே ஒரு நாள் வாலாஜாவிலிருந்து பாட்டி ஊருக்குப் பேருந்தில் பயணமானேன்.  

செங்கத்துக்கு முன்னால் செய்யாறு. அன்று ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கிடையாது, தரைப்பாலம் மட்டும்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மழைக்காலங்களில் பேருந்துகள் அக்கரைக்குச் செல்ல முடியாது என்பதால் இக்கரையிலேயே இறக்கி விடுவார்கள். அக்கரைக்குச் சென்றால்தான் அடுத்தப் பேருந்தைப் பிடித்து அய்வேல் (பாட்டி ஊரின் பெயர்) செல்ல முடியும். 

எனக்கு 7-8 வயது இருந்த போது ஒரு முறை, ஆற்றில் இடுப்பளவு தண்ணீர். அம்மா இடுப்பில் மூட்டை முடிச்சு, நானோ சிறுவன்.  நாலனாவோ எட்டனாவோ - சரியாக நினைவில்லை - பெற்றுக் கொண்டு எங்களை அக்கரையில் சேர்த்துவிட்டார் ஒருவர். ஆற்றைக் கடக்க இது ஒன்றுதான் அன்றைய வழிமுறை.

அம்மா கொண்டு வந்த சுமையை அவர் தனது வலது தோளில் வைத்துக் கொண்டார். இடது கையால் எனது இடுப்பைப் பிடித்துக் கொண்டார்.  எனது கால்களோ வெள்ளத்தில் மிதக்கின்றன. அவரது பிடி விலகினால் நான் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது நிச்சயம் என்பதால் அவர் என்னை இறுக்குமாய்ப் பிடித்துக் கொள்ள, எனது தாய் அவருக்கு மேல்பக்கமாய் உடன் வர பாதுகாப்பாய் மறுகரை சேர்ந்தோம். 

அந்தக் காட்சி இன்றும் என்னுள் நேர்க்காட்சியாய் நிலவுகிறதே, ஏன்? அது ஒரு கண்டம் என்பதாலா? 

ஒரு முறை, எனக்கு நீச்சல்  தெரியாத காலத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த போது, என்னை எனது அக்கா காப்பாற்றிய  காட்சியும் அதே போல  இன்றும் என்னுள் நேர்க்காட்சியாய் நிலவுகிறது. மரண பயம்தான் எத்துனை வலுவானது?

இன்றோ நேர்த்தியான சாலைகள்; நெடுஞ்சாலைகளில் பாலங்களுக்குப் பஞ்சமில்லை. குறுக்கே வரும் சாலைகளைக் கடக்கவே மேம்பாலங்கள் கட்டும் காலமல்லவா இது! 

கோடை மழையால் ஈரமான நிலங்கள் சித்திரை-வைகாசியில் ஆழ உழுது பண்படுத்தப்பட்டு, ஆனியிலே விதை விதைத்து, முளைவிட்டு மண் பிளந்து செடியாய் மலர்ந்து, இதழ் விரித்து, ஆடியிலே பூக்கும் மானாவாரி கடலைச் செடிகளின் கண்கொள்ளாக் காட்சிகளை இன்று அதிகமாகக் காண முடியவில்லை. 

கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல மழை பொழிவு, நீர் வளம் காரணமாக பயணித்த வழி நெடுகிலும் வேர்க்கடலைக்குப் பதிலாக, பரவலாக நெல்லும், ஆங்காங்கே கரும்பு-மரவள்ளி-முல்லைகளையேக் காண முடிந்தது. 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 1

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3

மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி