ஜனவரி 6, காலை 6.55 க்கு
ஜெ.பி யைப் பிடித்து விடலாம் என ஸ்கூட்டியை எடுத்தேன். சாவியைப் போட்ட போது அது
சற்றே வாட்டமுடன் மௌனித்தது. பெட்ரோல் இல்லையாக்கும். அதனால்தான் அது இந்தியப் பொருளாதாரம் போல நகர மறுக்கிறது!. இந்த ஸ்கூட்டிதான் என்னை வாலாசாரோடு இரயில் நிலையம் வரை சுமக்க வேண்டும்.
மணி 6.35 ஐத் தாண்டி விட்டது.
வேகமாகச் சென்றால்கூட வீட்டிலிருந்து இரயிலடி செல்ல 10 நிமிடங்களாவது ஆகும். அணைக்கட்டு
ரோடில் ஒரு கிலோ மீட்டர் சென்றால்தான் ஸ்கூட்டிக்கு உயிரூட்டமுடியும். இது எதிர்த்
திசை என்பதால் அதற்கொரு ஐந்து நிமிடம் என்றால்கூட பதினைந்து நிமிடம் இருக்கிறது என்ற
நம்பிக்கையோடு ஸ்கூட்டியை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு பெட்ரோல் பங்க் சென்றேன். பணமதிப்பிழப்பு எ.டி.எம் போல பங்க்கிலும் அட்டை
தொங்கியதால் இனி ஜெ.பி.யைப் பிடிப்பது உசிதமல்ல என்பதால் பேருந்து நிறுத்தம் வந்தேன்.
ஸ்கூட்டியை வண்டி ஸ்டாண்டில் ஓரங்கட்டிவிட்டு
தற்செயலாய் கிட்டிய மகிழுந்து சவாரியில் சென்னைக்குப் பயணமானேன்.
காஞ்சிபுரம் வெள்ள கேட் தாண்டிய
போது வானம் சற்றே மூட்டத்துடன் காணப்பட்டது. மார்கழி முடிந்து தை நெருங்கும் காலம் என்பதால் 'தை மாத மேக'ம்தான் நடனமாடத் தொடங்கி விட்டதோ என எண்ணியவாறு என் 'தேவி காதல் நளினம்' நினைவில்
ஆட பயணத்தைத் தொடர்ந்தேன். சுங்குவார் சத்திரத்தை நெருங்கிய போது ஓட்டுநர் வைப்பரைப்
போட்டார். எதற்கு எட்டு மணிக்கு வைப்பர் என எட்டிப் பார்த்த போது கார்மேகம் தன் ஈரக்
கரங்களால் முகப்புக் கண்ணாடிகளை நனைத்திருந்தாள்.
முகப்பு ஒளியுடன் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மூன்றடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களைக்கூட மறைத்து வருணன் சற்றே ஆர்பரித்த போது பூவிருந்தவல்லி சேர்ந்தேன். வெளியூர் பயணம் என்றால்
எப்பொழுதும் அக்யூ வெதரைப் பார்த்து குடையையும் உடன் கொண்டு செல்லும் நான் இது பனிக்காலம்
என்பதால் கை வீசிச் சென்றேன். அதனால் வருணனின் குட்டுகளுக்கு ஆளானேன். புரிதலின்மையால்தானே
நாம் பலரின் குட்டுக்கும் ஆளாகிறோம் என எண்ணிக் கொண்டு மூத்திரப் பையை காலி செய்ய மாநகராட்சி
கழிப்பிடம் சென்றால் அங்கே ஜலமோ மலமோ எதுவானாலும் கட்டணம் ஐந்து ரூபாய்தானாம். என்ன செய்ய? அடக்கி வைத்தால் ஐயாயிரம் செலவாகுமே என மூத்திரப்
பையை காலி செய்துவிட்டு அண்ணா சதுக்கம் செல்ல 25 ஜி யைத் தேடினேன்.
மழை வேறு கொட்டிக் கொண்டிருக்கிறது.
வல்லி பேருந்து நிலையமே மழைநீர் சேகரிப்புத் தொட்டியாய் மாறி இருந்ததால் அடி எடுத்து வைக்க அச்சமாய் இருந்தது.
பேருந்து நிலையம் முழுக்க விரவிக் கிடந்த கோமாதக்களின் கழிவுகளால் கால் வைக்க இடமில்லாமல்
மக்கள் திண்டாடினாலும் அதில் லாவகமாய் நடப்பது எப்படி என்பதில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
கோமாதாக்கள் சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன. நாமோ கால் வைக்க இடமில்லாமல் திண்டாடுகிறோம்.
ஊரான்
தொடரும்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment