Wednesday, January 8, 2020

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2


இது கர்ப்போட்டக் காலமாம். காலண்டரில்கூட போட்டிருக்கானாம். கரு ஓட்டம் என்பதே கர்போட்டம் என்றாகிவிட்டதாம். தமிழர்களின் அடுத்த ஆண்டுக்கான மழை கணிப்பு முறையாம். நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு இராசி மண்டலங்களாகவும் பிரித்து பின்பற்றும் முறையாம். மார்கழியில் சூரியன் தனூர் மண்டலத்தைக் கடக்கும் போது பூராட நட்சத்திரத்தைக் கடக்க பதினான்கு நாட்களாகுமாம். இந்த நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருமாம். இந்த நாட்கள்தான் கர்போட்ட நாட்களாம். டிசம்பர் 28 முதல் ஜனவரி 11 வரை, அதாவது மார்கழி அமாவாசையிலிருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள்.

இந்த நாட்களில் லேசான தூரல் என்றால் மழை நன்றாக கருக்கொண்டு விட்டதாகப் பொருளாம். அடுத்த ஆண்டு நல்ல மழை இருக்குமாம். ஆனால் மார்கழி இறுதியில் பலத்த மழை, சூறைக்காற்று என்றால் கரு கலைந்து விட்டதாகப் பொருளாம். அதனால் அடுத்த ஆண்டு மழை இருக்காதாம். இது நம் முன்னோர்களின் அரிய கண்டு பிடிப்பாம். ஆங்கிலக் கல்வியால் நம் பாரம்பரியத்தை இழந்து விட்டோமாம். அதனால் மழை வரும் நாட்களைத் தெரிந்து கொள்ள வாநிலை அறிக்கைக்காக தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோமாம்.

இப்படி “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!” என்கிற ஒரு கூட்டம் இந்த நவீன உலகில் நம்மை பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஓரிரு முறை மட்டுமே ஜனவரியில் அதிக மழைப் பொழிவு இருந்துள்ளது. இந்த ஓரிரு ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் கர்போட்டம் நன்றாகத்தானே இருந்தது. பிறகு ஏன் மழை பொழியவில்லை? ஒரு சில ஆண்டுகளைத் தவிர பெரும்பாலும் தொடர்ந்து நாம் வறட்சிகளைத்தானே சந்தித்து வருகிறாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆர்பரித்த ஆறுகளெல்லாம் இன்று கருவக் காடுகளாய் காட்சி அளிக்கின்றனவே. படிப்படியாக மழை குறைந்து கொண்டுதானே போகிறது. இதற்கு சுற்றுச்சூழல் கேட்டைக் காரணம் காட்டி முன்னோர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.

பல ஆண்டுகளின் தொடர் நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டு கணிப்பதுதான் பழைய கால முறை. அறிவியல் வளராத காலத்தில் அப்படித்தமான் கணிக்க முடியும். கணிப்புப்படி நடக்கலாம். நடக்காமலும் போகலாம். நடக்காமல் போனால் ஏன் நடக்க வில்லை என்று ஆய்வு செய்வதற்கு கணிப்பு முறையில் வழியில்லை. அது கணிப்புதானேயொழிய உறுதியான முடிவு அல்ல. எனவே கணிப்பை அறிவியலுக்கு மேலாக நிறுத்துவது முட்டாள்தனம். அறிவியல், பொறியியல் துறைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள்கூட கணிப்புகளைத்தான் நம்புகிறார்களேயொழிய அறிவியலை நம்புவதில்லை. காரணம் அவர்கள் அறிவியலை வேலைக்குச் சென்று காசு பார்க்கும் கருவியாகத்தான் பயன்படுத்தி உள்ளார்கயேயொழிய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக அல்ல என்பதுதான் அப்பட்டமான உண்மை.

அறிவியல் என்பது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சுழல் ஏணி போன்ற ஒரு தொடர் நிகழ்ச்சிப் போக்கு. அது சூழல் மாறுபாடுகளையும் கணக்கில் கொண்டு வளர்வது. அறிவியல் ஓடும் ஆற்று நீரைப் போன்றது. ஆனால் கணிப்பு என்பது தேங்கிய குட்டை நீர் போன்றது. எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது என்கிற இயங்கிலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சூழல் மாறுபாடுகள் பற்றி கணிப்பதற்கு அதனால் முடியாது. இதற்கான வழிமுறை எதுவும் அதனிடம் கிடையாது. முன்னோர்களின் கணிப்புகளை தூக்கி நிறுத்தி அதற்கு அறிவியல் சாயம் பூச முற்படும் அவர்களின் வழித் தோன்றல்கள் தங்களது முன்னோர்களின் வழியில் இன்று கணித்துச் சொல்ல வேண்டியதுதானே. யார் தடுத்தார்கள்?

சரி! அவர்கள் முன்னிறுத்தும் இந்த முன்னோர்கள் யார்? “நம் முன்னோர்கள் யார்? குரங்குதானே நம் முன்னோர்? குரங்கிலிருந்து வந்தவன்தான் மனிதன். ------ எனக்கு யார் முன்னோர்கள்? ரிஷி, யாக்ஞவல்கியர், நாரதர், மனு இவர்கள் யார்? பத்து கோடி வருஷம் வாழ்ந்தார்கள் என்கிறான்! ஒருவனாவது மனிதனுக்குப் பிறக்கவில்லை. கழுதைக்கும், குதிரைக்கும், புலிக்கும், கரடிக்கும், பன்றிக்கும் இப்படி பிறந்தான். அஸ்திவாரமில்லாத புளுகு கற்பனைகள் இது. முன்னோர் சொன்னது, எழுதியது என்ன? சூத்திரன் படிக்கக் கூடாது பதவியில் இருக்கக் கூடாது என்பதுதானே? மனுவிலும் கீதையிலும் உபநிஷதத்திலும் காணப்படுவது அதுதானே?----“  என்கிறார் பெரியார். சங்க இலக்கிய காலத்திற்குப் பிறகு நம் முன்னோர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. கடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் நம் முன்னோர்கள் தற்குறிகளாகத்தான் வைக்கப்பட்டிருந்தனர். அப்படி இருக்க நம் முன்னோர்கள் எல்லாம் புத்திசாலிகளாக, அதுவும் இன்றைய நவீன அறிவியலுக்கு சவால் விடும் அளவிற்கு இருந்தார்கள் என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது.

முன்னோர் புராணம் படிக்கும் நண்பர்களே! நாம் நமது பிள்ளைகளிடம் பேசும் போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? “அட சும்மா இருப்பா. உனக்கு ஒன்னும் தெரியாது. நீ அந்த காலத்து ஆளு!” என்று சொல்லும் போது நாம் வாய்மூடி மௌனியாகத்தானே இருக்கிறோம். நம் கண்முன்னே  நம்மையே அடுத்த தலைமுறை ஏற்க மறுக்கும் போது நீங்கள் என்னடாவென்றால் ஓராயிரம் தலைமுறைக்கு முன்னர் சொன்னதை ஏற்கச் சொல்கிறீர்கள். 

ஊரான்

தொடரும்


தொடர்புடைய பதிவுகள்

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

No comments:

Post a Comment