Monday, 16 December 2024

வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி.. - 13

வகுப்புவாரியிலிருந்து சாதிவாரியை நோக்கி.. 

இந்தத் தொடரின் முதல் பகுதியில் குறிப்பிட்டதைப் போல, 

தமிழ் நாட்டில், அருந்ததியருக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான பள்ளர், பறையர் சாதி மக்களின் கோபம், 

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து (MBC) வன்னியர்களுக்கு என தனி உள் ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற சாதி மக்களின் கோபம், 

மத்திய அரசுப் பணிகளில் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட தனி EWS ஒதுக்கீட்டுக்கு எதிரான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் கோபம், 

மேலும்,

கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பஞ்சமசாலி லிங்காயத்துகள் தங்களுக்குத் தனி ஒடுக்கீடு கோரி, 

மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,

ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஜாட்டுகளுக்குத் தனி ஒதுக்கீடு கோரி,

என நாடெங்கிலும் ஒவ்வொரு சாதியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 


தற்போது இந்தியாவில் உள்ள எல்லாச் சாதியினரும், வகுப்புவாரி அடிப்படையிலும், EWS  அடிப்படையிலும் இட ஒதுக்கீடு 
பெற்று வரும் சூழலில், எதற்காகத் தற்போது ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு எனத் தனி ஒதுக்கீடு கேட்டுப் போராடுகின்றனர்?

ஏற்கனவே நாம் குறிப்பிட்டதைப் போல கல்வியிலும் பொருளாதாரத்திலும் சமுதாய அளவிலும் சாதிகளுக்கிடையில் சமனற்ற நிலையே இன்றும் நீடிக்கிறது. 

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் (MBC) உள்ள  கள்ளர், மறவர், வன்னியர் போன்ற சாதிகளோடு ஒப்பிடும் பொழுது நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளின் கல்வி பொருளாதார சமூகநிலையும் சமமானதல்ல. இவர்கள் அனைவரையும் ஒரே தொகுப்பில் வைத்திருப்பதால், இந்தத் தொகுப்பிலேயே உள்ள மிகவும் கீழ்நிலையில் உள்ள நாவிதர், வண்ணார், குறவர், ஒட்டர் போன்ற சாதிகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். 

அதேபோல, மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) உள்ள கொங்கு வெள்ளாளர், நாயுடு, ரெட்டி, முதலியார், வன்னியர், கள்ளர், மறவர் போன்றச் சாதிகளின் கல்வி பொருளாதார சமூக நிலையும் சமமானதல்ல. கொங்கு வெள்ளாளர், முதலியார் ஆகியச் சாதிகளோடு ஒப்பிடும் போது வன்னியர்களுக்கான வாய்ப்பும்; நாயுடு, ரெட்டி போன்றச் சாதிகளோடு ஒப்பிடும் பொழுது கள்ளர், மறவர் சாதிகளுக்கான வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும்.

பட்டியல் சாதி வகுப்பில் உள்ள பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய மூன்று சாதிகளும் கல்வி பொருளாதார சமூக நிலையில் சமமாக இல்லை. விகிதாச்சார அடிப்படையில் தங்களுக்கு உரிய பங்கைப் பட்டியல் வகுப்பிலிருந்து 
அருந்ததியர்களால் பெற முடிவில்லை. ஆகையால்தான் அவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததியர்கூட தனி ஒரு சாதி அல்ல. அதுவும் சில சாதிகளை உள்ளடக்கிய ஒரு வகுப்புதான் (Category). உள் ஒதுக்கீடு வந்த பிறகு, அருந்ததியர் சாதிகளுக்குள் இட ஒதுக்கீடு குறித்து இப்போதைக்குப் பிரச்சனை எதுவும் எழவில்லை என்றாலும் எதிர்காலத்தில் இவர்களுக்கிடையில்கூட, இட ஒதுக்கீடு தொடர்பாகப் பிரச்சனைகள் வரக்கூடும். 

அப்படியானால், வகுப்புவாரி விதாச்சாரப் பிரதிநிதித்துவ கோரிக்கை (Class based reservation) என்பது, சாதிவாரி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கோரிக்கையாக
(Caste based reservation) உருவெடுத்து வருகிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அலுவலகங்களில் நிலவும் சாதிய முரண்கள் குறித்து அடுத்து பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்
















Saturday, 14 December 2024

இந்தியாவில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் யார்? யார்? -11

தமிழ்நாடு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு 

தமிழ்நாட்டில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (BC), பிற்படுத்தப்பட்ட வகுப்பு-முஸ்லிம் (BC-M), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (MBC) என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளன.
 
இவர்களுக்கு முறையே 
BC=26.5%, 
BC-M=3.5% (உள் ஒதுக்கீடு), 
MBC=20% என
ஆக மொத்தம் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அதே போல பட்டியல் சாதி (SC), பட்டியல் சாதி அருந்ததியர் (SC-A), மற்றும் பழங்குடியினர் (ST) என தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மூன்று வகுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு முறையே 
SC=15%, 
SC-A=3% (உள் ஒதுக்கீடு), 
ST=1% என 
ஆக மொத்தம் 19% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு சட்டபூர்வமாகவே வழங்கப்படுகிறது. 

தமிழ் நாடு இட ஒதுக்கீடு

மண்டல் குழு பரிந்துரைகளின் படி தமிழ் நாட்டில் பயன் பெறுவோர் யார்? யார்? 

மண்டல் குழு பரிந்துரைகளின்படி மத்திய அரசு வேலைகளில் 27% இட ஒதுக்கீடு வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குத் தகுதியுள்ளவை என தமிழ்நாட்டில் மட்டும்,

ஆச்சாரி, அகமுடையர், அம்மட்டன்,  ஒட்டர், தாழ்த்தப்பட்ட வகுப்பு கிறித்தவர், தேவாங்கர், இடையர், வடுகர், இல்லத்து பிள்ளைமார், இசை வேளாளர், செங்குந்தர், கள்ளர், கம்மாளர், கருணீகர், தேவர், கொங்கு வேளாளர், குரும்பர், குறவர், லப்பை முஸ்லீம், லம்பாடி, லத்தின் கத்தோலிக்கர், நாவிதர், மறவர், மீனவர், முத்துராஜா, சாணார், நாய்க்கர், நரிக்குறவர், ஒட்டர், தெலுங்குச் செட்டி, சேனைத் தலைவர், சௌராஷ்டிரா, சோழிய வேளாளர், தேவர், தொட்டி நாயக்கர், ஊராளிக் கவுண்டர், வாணியச் செட்டியார், வண்ணான், வன்னிய குல சத்திரியர், வேடர், வேட்டுவக் கவுண்டர், ஒக்கலிகர், இடையர் 
உள்ளிட்ட 288 சாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) இடம் பெற்றுள்ளன.

நடுவண் அரசு இட ஒதுக்கீடு

அதே வேளையில், மத்திய அரசுப் பணிகளில் இது 
OBC=27%, 
SC=15%, 
ST=7.5% என ஆக மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மீதி 50.5% அனைவருக்குமான பொதுப் பட்டியலாகும். இதை பயன்படுத்திக் கொண்டுதான் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினர் நடுவண் அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில்
பெருமளவு இடத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். தற்போது இந்த 50.5% இல் EWS என்ற பெயரில் சொளையாக 10 சதவீத்தைத் தட்டிச் செல்கின்றனர். 

'கிரீமி லேயர்' (Creamy Layer)

ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற உரிமை கிடையாது என்பதுதான் இந்தக் கிரீமி லேயர் ஏற்பாடு. இதனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ரூபாய் 8 லட்சத்திற்கும் கீழ் வருவாய் உள்ளவர்கள், ஏழைகள் பயன்பெற இது உதவும் என்று ஒருவர் கருதக் கூடும். ஆனால், இந்த வரையறையின்படி பொருத்தமான நபர்கள் இல்லை என்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் நிரப்பப்படாத இடங்கள், மூன்று ஆண்டுகள் கழித்துப் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, அதையும் உயர் சாதியினரே அபகரித்துக் கொள்ளும் ஆபத்துதான் உள்ளது. 

ஒருவன் ஏழையா என்று பார்ப்பதைவிட அவன் சமூகத்தில் (socially) பிறரால் எவ்வாறு நடத்தப்படுகிறான் என்பதை அளவுகோளாக வைத்துதான் அவனுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். உயர்சாதிகளில் உள்ள ஏழைகளை ஒப்பிடும் பொழுது SC, ST & OBC பிரிவிகளில் உள்ள மக்கள் சமூக ரீதியாக மிகவும் கீழான நிலையில்தான் உள்ளனர்.

SC, ST & OBC மக்களின் நிலையை முன்னேற்ற வேண்டும் என்று சொன்னால், சட்டத்தை இயற்றவும், திட்டங்களை வகுக்கவும், இவற்றை நடைமுறைப் படுத்தவும் அதிகாரம் கொண்ட  IAS, IPS, அரசின் உயர் மட்டச் செயலாளர்கள், மந்திரிகள், நீதித்துறை, IIT, IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை உணர்ந்த SC, ST & OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இடம் பெற வேண்டும். 

இந்தக் கிரீமி லேயர், பிற்படுத்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்புகளில் மட்டுமல்ல அவர்களின் பதவி உயர்வுகளிலும், அதேபோல SC, ST ஊழியர்களின் பதவி உயர்வுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. 

அதனால், SC, ST & OBC  மக்கள் இட ஒதுக்கீடு மூலம் அரசு வேலைகளில் பணிக்குச் சேர்ந்தாலும், மேற்கண்ட கிரீமி லேயர் முறையால் அவர்கள் கீழ்மட்ட (C&D) ஊழியராகவே பணியாற்றி ஓய்வு பெற்று விடுவர். பதவி மூப்பின் அடிப்படையில்கூட அவர்கள் ஒருபோதும் மேலே குறிப்பிட்ட உயர் பதவிகளை அடையவே முடியாது.

ஆனால், ஐயகோ! இவற்றில் எல்லாம் இன்னமும்கூட SC, ST & OBC
மக்களின் எந்த ஒரு வலியையும் உணராத பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனரே? 

I.I.Tகளில் பார்ப்பனகளின் ஆதிக்கம்

அடுத்து அரியவகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு (EWS) குறித்துப் பார்ப்போம்.

தொடரும் 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்










அரிய வகை ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு (EWS) - 12

அரிய வகை ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு (EWS)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (any backward class) மட்டும்தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 15(4) மற்றும் 16(4) வழிவகை செய்கிறது. இங்கே அரசமைப்புச் சட்டம் குறிப்பிடும் any backward class என்பது SC, ST & OBC பிரிவினரை மட்டுமே குறிக்கும்.

மேற்கண்ட சட்டப்பிரிவுகளின்படி, பிற்பட்ட வகுப்பு என்பதன் பொருள் சமூகத்திலும், கல்வியிலும் (socially and educationally backward) பின்தங்கிய பிரிவு மக்களைக் குறிப்பதாகும். இந்த வரையறைக்குள் வராத, பொருளாதாரத்தில் மட்டும் பின்தங்கியவர்கள் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது சட்டத்திற்கும்,  சமூக நீதிக் கொள்கைக்கும் எதிரானது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு, 103 வது சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்து, அரசமைப்புச் சட்டத்தில் 15(6), 16(6) ஆகியப் பிரிவுகளைப் புகுத்தி, ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சம் வரை சம்பாதிக்கின்ற பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு, பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர் (EWS) என்று நாமகரணம் சூட்டி, 10% தனி இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது மோடி அரசு. 

ரூபாய் 8 லட்சம் சம்பாதிக்கிறவன் பொருளாதாரத்தில் பலவீனமானவனாம்? கணக்குல அந்த சாணக்கியனையே மிஞ்சிட்டானுங்க! இருக்காதா பின்ன? சாணக்கியனின் வாரிசுகள்தானே இவர்கள்? 

பார்ப்பனர்களால் நிரம்பி வழியும் உச்ச நீதிமன்றமும், இந்த ஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உறுதி செய்து கொண்டது. குற்றவாளியே தனக்கான தீர்ப்பை எழுதிக் கொள்வது என்பது இதுதானோ?

இந்த EWS இட ஒதுக்கீடு என்பது ஏதோ மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மட்டும் என்று கருதி விட வேண்டாம்.

SC, ST & OBC பிரிவு மக்களுக்குத் தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லாத போது, EWS இன் கீழ் வரும் பார்ப்பனர்களுக்குத் தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு பெற வழிவகை செய்துள்ளது இந்தச் சட்டத் திருத்தம்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக, பல வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடே இல்லாதிருந்த போது, வாய் பொத்திக் கொண்டிருந்த வட மாநில ஆட்சியாளர்கள், இன்று மாநில அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும்கூட இந்த 10% இட ஒதுக்கீட்டை பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுக்கத் தயாராகி விட்டனர். ஏமாந்த சோணகிரிகள் இருக்கும்வரை பார்ப்பனர்கள் நமது தலையில் ஏறி மிளகாய் அரைப்பதை யாரால்தான் தடுக்க முடியும்?


அன்று மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்துவதற்கு எதிராகச் செயல்பட்ட இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), இன்று பார்ப்பனர்களுக்கான EWS இட ஒதுக்கீட்டை ஆதரித்து வாக்களித்ததன் மூலம், கம்யூனிஸ்டுகளின் மீது கரும்புள்ளியைக் குத்திவிட்டனர்.

மேற்கண்ட 10% இட ஒதுக்கீட்டின் மூலம், இன்று மொத்த இட ஒதுக்கீடு 59.5% ஆக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்ன வரையறை இன்று காற்றில் பறக்கிறது.

மண்டல் குழு பரிந்துரையின்படி, அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்த போது, ஒட்டுமொத்த பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதிக் கூட்டம், நாட்டில் மிகப்பெரியக் கலவரத்தை உண்டு பண்ணியது. ஆனால் இன்று, EWS இட ஒதுக்கீடு மூலம் SC/ST/OBC மக்களுக்கான வாய்ப்புத் தட்டிப் பறிக்கப்பட்ட போதும் நமது மக்கள் மௌனம் காத்தனர். இந்த மௌனம்தான் பார்ப்பனர்கள் நம்மை ஏறி மிதிப்பதற்கு அடிப்படை. 

பூரி ஜெகன்நாதர் கோயிலில் பிரகாரத்திற்கு வெளியே திண்ணைமேல் உட்கார்ந்து கொண்டு, பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதி பக்தர்களின் தலையைத் தங்களது கால் பாதத்தால் தொட்டு பார்ப்பன புரோகிதர்கள் ஆசீர்வாதம் செய்யும் காட்சிதான் இங்கே என் நினைவுக்கு வருகிறது. 

EWS இட ஒதுக்கீடு நீதியா? அநீதியா?

இதில் கொடுமை என்னவென்றால், இந்திய அளவில் 52% உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு 27% மட்டும்தான் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. ஆனால், பட்டியல்-பழங்குடி-இதர பிற்படுத்தப்பட்டோர் (SC/ST/OBC) நீங்கலாக, ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது வகுப்புவாரி விகிதாச்சார பங்கீட்டுக்கு விரோதமானது.

SC/ST/OBC பிரிவினருக்கு ஏற்கனவே உள்ள 49.5% போக, மீதமுள்ள 50.5%
எனும் பொதுப் பிரிவிலும் SC/ST/OBC மக்கள் போட்டியிட முடியும். ஆனால் தற்பொழுது EWS என்ற பெயரில் 50.5% லிருந்து 10 சதவீதத்தை அவாள்கள் அபகரித்துக் கொண்டதால், SC/ST/OBC பிரிவினருக்குப் பொதுப்பட்டியலில் இருந்த வாய்ப்பு 50.5% லிருந்து 40.5% ஆக குறைந்து போனது. அதாவது, நமது மக்கள் பொதுப்பட்டியலில் 10 சதவீதத்தை இழந்து விட்டனர்.

ஆனால் பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு EWS என 10% தனியாகவும், பொதுப்பட்டியலில் 40.5% என அதே 50.5% வாய்ப்பும் தொடர்கிறது. எனவே, EWS ஒதுக்கீடு என்பது SC/ST/OBC மக்களுக்குப் பொதுப்பட்டியலில் இருந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்து, சமூக நீதிக் கோட்பாட்டுக்கு இழைத்த அநீதியாகும்.

இந்த அநீதிக்கு ஆதரவாய் நின்று நாடாளுமன்றத்தில் முழங்கியவர் சிபிஐ (எம்) ஐச் சார்ந்த 'தோழர்' டி.கே.ரங்கராஜன் அவர்கள்.

***
ஆக, இன்றைய தேதியில் பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியினர் (EWS) என அனைத்து சாதியினருமே இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிமையைப் பெற்று விட்டனர். பார்ப்பனர் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், இன்று கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் உள்ளே நுழைபவர்கள் அனைவருமே 'கோட்டா' தான்.

இப்படி எல்லாச் சாதியினருமே, இட ஒதுக்கீடு வாய்ப்புகளைப் பெறும் பொழுது, அவர்களுக்குள் இன்று முரண்களும் மோதல்களும் ஏன் வெடித்துக் கிளம்புகின்றன? 

இட ஒதுக்கீடு கோட்பாடானது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திலிருந்து, சாதிவாரி பிரதிநிதித்துவத்தை நோக்கி நகர்கிறதா? அடுத்து பார்ப்போம். 

தொடரும் 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்











Thursday, 12 December 2024

ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது சரியா? - 10

இட ஒதுக்கீடு சர்வரோக நிவாரிணியா?

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடப்பங்கீடு என்பது சமூக நீதிக்கான முதல் படி. மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், எல்லாத் துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 

இட ஒதுக்கீட்டினால் சமதர்மம் வந்துவிடுமா என்றால், வராதுதான். ஆனால், இட ஒதுக்கீட்டினால் சமூக நீதி உறுதியாக  வரும். இது இப்போதைக்கான முதல் தேவை. 


இட ஒதுக்கீட்டினால் வேலையில்லாத் திண்டாட்டம் தீர்ந்துவிடுமா என்றால் தீராதுதான். ஆனால், தற்போது கிடைக்கிற அரசு வேலைகள் எல்லோருக்குமான பங்காகும். இதைப் பெறுவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு கொடுப்பது உடனடித் கடமையுமாகும். 

இப்படிப்பட்ட சம வாய்ப்பு தரும் சமூக நீதி நடவடிக்கைகளை, உயர் சாதியில் உள்ள அரசியல்வாதிகள் பேராசிரியர்கள் வழக்கறிஞர்கள் பத்திரிகையாளர்கள் ஆய்வாளர்கள் பொதுநல ஊழியர்கள் மற்றும் மார்க்சியம் பேசும் புரட்சி மனப்பான்மை கொண்டோர் அனைவரும், இந்தச் சமூகக் கட்டமைப்பின் தன்மையை உணர்ந்து கொண்டு, இதைச் சரியான கோணத்தில் அணுகி மிகமிகப் பொறுப்புணர்வுடன் சிந்தித்து ஆதரிக்க வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். 

இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கா? சாதிகளுக்கா?

ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப் பரிந்துரைக்குமாறு இந்திரா காந்தியே மண்டல் குழுவிடம் கண் ஜாடை காட்டினார். ஆனால் ஜாடை எடுபடவில்லை.

ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினர், "ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு" என்று தங்கள் எதிர்ப்பை வேறு வகையில் பேசுகின்றனர். இது சரியா? 

இந்துச் சமூக அமைப்பில், பிறப்பின் அடிப்படையில் மக்கள் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ மன்னர்கள், அன்னியர்கள் ஆண்ட போதும், இந்தச் சமூக அடித்தளமும் கட்டமைப்பும் அப்படியேதான் தொடர்கிறது. இதனால் விளைந்த சில கொடுமைகளை மட்டுமே ஆங்கிலேயர்கள் களையை முன் வந்தனர். 

இந்து மத மிதாட்சரச் சட்டப்படி தென்னாட்டில் பிராமணர், சூத்திரர் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே இருப்பதாக 1802 இல் ஆங்கிலேயர்கள் உறுதிப்படுத்தினர். இதில் சூத்திரர்கள் 97%, பார்ப்பனர்கள் 3%. தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொள்ளும் சைவைப் பிள்ளைமார்கள் உள்ளிட்ட சில உயர் சாதியினரையும் சூத்திரர்களாகத்தான் பார்ப்பனர்கள் கருதுகின்றனர்.

இந்து மத தாயபாகச் சட்டப்படி, வடநாட்டில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வருணங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதில் பார்ப்பனர்கள் 7%, மற்றவர்கள் 93%.  இந்த 93% இல் சூத்திரர்கள் 80%.

நான்கு வருணத்தாருக்கு வெளியே இருந்த தீண்டத்தகாத மக்கள் சண்டாளர்கள் என வகைப்படுத்தப்பட்டு அவர்களை இந்துக்களாகவே ஏற்றுக் கொள்ளப்
பார்ப்பனர்கள் மறுத்து விட்டனர். 

சூத்திரர்களே இந்து மதத்தில் அதிகமாக உள்ளனர். மனு தர்மப்படி, பிறருக்குத் தொண்டு செய்வதே இவர்களுக்குக் கடமையாக்கப்பட்டதால். இவர்கள் கல்லாமையிலும் இல்லாமையிலும் வீழ்த்தப்பட்டனர். பண்பாட்டில் இவர்கள் அடிமைகளாகவே உருவாக்கப்பட்டனர்.

'வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு போதிய வாய்ப்பு அளித்தல்' என்கிற அடிப்படையில்தான் இன்று சூத்திரர்கள் என்று சொல்லப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு, கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது ஒரு இடைக்கால தீர்வுதான் என்றாலும் இதை ஒரு சீர்திருத்த ஏற்பாடாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்ற ஒரு சமூக அமைப்பு, அதாவது மார்க்சின் பொதுவுடைமைச் சமூகம் மலரும் போது வேண்டுமானால், சாதி அடிப்படையிலான வகுப்புவாரி இட ஒதுக்கீடுகள் தேவைப்படாமல் போகலாம்.

சமூகக் கட்டமைப்பு குறித்துத் தெளிவானப் புரிதல் இல்லாத காரணத்தினால்தான் ஏழ்மை அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோரிலேயே ஏழையாக உள்ளவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தரலாம் என்று சிலர் தவறாகப் பேசுகின்றனர்.

ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்பது சரியா?

இந்துச் சமூக அமைப்பு ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய படிநிலை சாதிகளைக் கொண்டது. சமூகத்தளத்திலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும் எல்லா சாதிகளும் சமமாக இல்லை. பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதிகளில் ஒருசில ஏழைகள் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத் தளத்திலும், பண்பாட்டளவிலும் அவர்கள் உயர் நிலையில் இருக்கிறார்கள். இதனால் வாழையடி வாழையாக அவர்கள் தங்கள் வாரிசுகளை வளர்த்தெடுப்பதற்கு ஏற்றக் குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே, எல்லாச் சாதியினரையும் சரிநிகராக சமன்படுத்தி, அவர்களில் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கூறுவது, கல்வியில் சமநிலை இல்லாதவர்களிடையே, ஏழ்மை எனும் சம உரிமையை திணிக்கின்ற அநீதியாகும். இப்படித் திணிப்பதன் மூலம், காலங்காலமாக தகுதியை மட்டுமே காட்டி ஆதிக்கம் பெற்றவர்கள், இப்பொழுது ஏழ்மையைக் காட்டி மேலும் இரட்டை ஆதிக்கம் பெறுவதற்கே வழி வகுக்கும். இது வலது கையால் உரிமையைக் கொடுத்து இடது கையால் பறிப்பதற்கு ஒப்பாகும்.

'சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் பொழுது, அந்த சாதியில் வாய்ப்பு வசதி உள்ள ஒரு சிலர் மட்டுமே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வளைத்துப் போட்டுக் கொள்கிறார்கள். எனவே, ஏழை பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரலாம்' என்று சிலர் முன்மொழிகின்றனர். பட்டியல் சாதி உள்ளிட்ட எல்லா வகுப்புகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. ஆயிரம் ஆண்டுப் பிரச்சனையை ஓரிரு தலைமுறையின் அனுபவத்தைக் கொண்டு தீர்மானித்து. வசதி வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஒரு சிலரை பொதுப்பட்டியலுக்குள் தள்ளிவிடுவது, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையே நீர்த்துப் போகச் செய்யும்.

எனவே, பொதுவில் ஏழ்மை அடிப்படையில் எல்லோருக்கும் ஒதுக்கீடு என்பதும், பிற்படுத்தப்பட்டோருக்குள்ளேயே ஏழைகளுக்கு ஒதுக்கீடு என்பதும், பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினர் மட்டுமே எல்லாக் கல்வியையும் வேலைகளையும் அபகரிக்கச் செய்யும் ஆபத்தான சூழ்ச்சியாகும். அதுதான் EWS இல் நடந்தது.

அனைவருக்கும் கல்வி மற்றும் அனைவருக்கும் வேலை என்கிற நிலை உருவாகும் வரை, ஒரு இடைக்கால ஏற்பாடாக வகுப்புவாரி விகிதாச்சார ஒதுக்கீடு தவிர்க்க முடியாதது.

இந்தியாவில் யார் யாரெல்லாம் இட ஒதுக்கீடு பெறுகிறார்கள் என்பது குறித்து அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்









பிற்படுத்தப்பட்டோரின் எதிராளிகள் யார்? - 9

யார் யார் எதிராளிகள்?

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPI(M) உள்ளிட்ட அரசியல் கட்சிகளும்,

இந்தியன் எக்ஸ்பிரஸ்,  த இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ் முதலான நாளேடுகளும், 

இந்தியா டுடே, சண்டே, கல்கி முதலான வார ஏடுகளும்,

வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், சமூக ஆய்வாளர்கள் உள்ளிட்ட சில பல அறிவுத் துறையினரும்,

மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களும்,

IIM, IIT, NIT (REC) உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும்

மண்டல் எதிர்ப்புப் போராட்டம்

அகில இந்திய அளவில், குறிப்பாக வட மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டு, கலவரங்களை உண்டு பண்ணி, மண்டல் குழு பரிந்துரைகள் அமலாவதைத் தடுக்க முனைந்தனர். 

மேற்சொன்ன அனைத்திலும், உயர் சாதியினரே ஊடுருவி இருப்பதால்தான் இத்தகைய எதிர்ப்பை அவர்களால் பூதாகரமாகக் காட்ட முடிந்தது. ஊடகங்களும் இவர்களின் போராட்டச் செய்திகளை ஊதிப் பெருக்கின. 

ஆனால், பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரியும், மண்டல் குழு அறிக்கையை வெளியிடவும், அதை அமல்படுத்தவும் கோரி இந்தியா முழுக்க நடைபெற்ற பிற்பட்ட மக்களின் போராட்டச் செய்திகளை இதே ஊடகங்கள் முழுமையாக மூடி மறைத்தன. காரணம் இவை எல்லாம் உயர் சாதியினர் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான்.

மண்டல் குழு அமலாவதைத் தேசமே, அதாவது இந்தியாவே எதிர்ப்பது போன்றதொரு பிம்பத்தை இவர்கள் கட்டமைத்தனர். 'இவர்கள்தான் தேசம். இவர்கள்தான் இந்தியா. இவர்களுக்கு எதிரானது எல்லாமே தேசத்திற்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது. இவர்கள் மீது பற்று வைப்பதுதான் தேசப்பற்று'. இதுதானே இன்றும் இவர்களின் எண்ணமாக உள்ளது. 

அனைத்துச் சாதி அர்ச்சகர் உள்ளிட்டப் பிரச்சனைகளில், பார்ப்பனிய மேலாதிக்கம் குறித்துப் பேசினாலே அதை இந்து விரோதம், தேசத் துரோகம் என்று எச்.ராஜா போன்ற பார்ப்பனர்களும், அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட சில எடுபிடிகளும் பேசுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே? பார்ப்பனர்களுக்கு உவப்பான எதை ஒன்றையுமே இந்து விரோதமாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் அல்லவா இவர்கள்?

எதிர்ப்புக்கான‌ காரணம் என்ன? 

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால், சாதி வளரும் மற்றும் தகுதியும் திறமையும் நாசமாய்ப் போகும் என்பதுதான் எதிர்ப்புக்கு இவர்கள் கூறும் காரணம்.

இவை உண்மையா?

இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் பார்ப்பனச் சடங்குகளாலும் சம்பிரதாயங்களாலும், 

இந்து மதத்தில் சாதி மாறித் திருமணம் செய்யக் கூடாது என்று  1944 வரை இந்து மதச் சட்டங்கள் தடை செய்திருந்ததாலும், 4000 சாதிகளும் தங்கள் தங்கள் சாதிகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டதாலும், இன்றும் அதே நிலை தொடர்வதாலும்,

அர்ச்சகர்கள், மடாதிபதிகள், புரோகிதர்கள் உள்ளிட்ட வேலைகளில், சாதியை மட்டுமே தகுதியாக வைத்துக் கொண்டு, பார்பனர்களே மேற்கண்ட அனைத்திலும் ஆதிக்கம் செய்வதாலும்தான் 

சாதி பாதுகாக்கப்படுகிறதே ஒழிய, இட ஒதுக்கீட்டினால் சாதி வளரும் என்பது ஒரு சதவீதம் கூட உண்மை கிடையாது.

அடுத்து, தகுதியும் திறமையும் நாசமாகிவிடும் என்கிற இவர்களது புலம்பல் குறித்து,

தகுதி திறமை பற்றி வாய் கிழியப் பேசும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர்தான், குறிப்பாகப் பார்ப்பனர்கள்தான் அரசின் உயர்மட்டப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எண்ணற்ற பார்ப்பனர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் அரசாங்கப் பொறுப்புகளிலும் உள்ளனர். இவர்கள் தங்களுடைய தகுதியினாலும் திறமையினாலும் இதுவரை கிழித்தது என்ன? 

நில உச்சவரம்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இவர்கள் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்கிறார்களா? அல்லது அரசு அலுவலகங்களில் தலை விரித்தாடும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை ஏதேனும் எடுத்திருக்கிறார்களா? நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்தும் இவர்கள் பாரபட்சம் ஏதும் இன்றி உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறார்களா? 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள்கூட சட்டங்கள்தானே?  இதை அடிப்படையாகக் கொண்டு, ஆறுகளையும் ஏரிகளையும் நீர்நிலைகளையும் சாலைகளையும் இரயில் பாதைகளையும் காடுகளையும் மலைகளையும் அரசின் புறம்போக்கு இடங்களையும் ஆக்கிரமித்து, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கட்டப்பட்டுள்ள கோவில்கள் அனைத்தையும் உடனடியாக இடித்துத் தள்ள வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்குத் தகுதி திறமை பற்றிப் பேசும் பார்ப்பன அதிகாரிகள் என்ன செய்திருக்கிறார்கள்? 

அயலுறவுத் துறையில் வெளிநாட்டுத் தூதர்கள் அனைவருமே இன்று பார்ப்பனர்கள்தானே? தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அன்றாடம்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் அவலம் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுதானே இருக்கிறது? தகுதியும் திறமையும் படைத்த பார்ப்பன வெளியுறவு தூதர்களால் இதை ஏன் தடுக்க முடியவில்லை? 

இப்படி, இவர்கள் பேசும் தகுதி திறமை குறித்து எண்ணற்ற ஆதாரங்களை அடுக்க முடியும். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால், இவர்கள் கூப்பாடு போடும் தகுதி திறமை எல்லாம் நாசமாய்ப் போய்விடும் என்பது இவர்களின் ஆதிக்கம் கேள்விக்குள்ளாகிறதே என்கிற ஆதங்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை!

சரி! இட ஒதுக்கீடு சர்வரோக நிவாரணியா? அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான் 

தொடர்புடைய பதிவுகள்