Thursday, October 28, 2010

விளையாட்டு இரசனைக்கானதா?


டில்லியில் 19-வது காமன்வெல்த் போட்டிகள் முடிவடைந்தாலும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பதக்கப்பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதால்  ஊழல் முறைகேடுகள் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

விளையாட்டில் எனக்கு ஈடுபாடு இருப்பதால் பொதுவாக விளையாட்டுப் போட்டிகளை கூர்ந்து கவனிப்பது வழக்கம். அதன்படி காமன்வெல்த் போட்டிகளில் ஒரு பகுதியான மகளிர் டென்னிஸ் போட்டியில் ரோடியோனோவை வென்று சானியா மிர்சா தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கத்தை நழுவவிட்டார். இந்த ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும், சானியா ஒவ்வொரு முறை தவறிழைக்கும் போதும் ஒரு வித "தேசப் பற்று" இழையோடியதை மறுப்பதற்கில்லை. விளையாட்டிலும் தேசப்பற்று தேவைதானா என்ற கேள்வி என்னுள் எழுந்ததாலேயே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

விளையாட்டு உடலுக்கும் உள்ளத்திற்கும் உரமேற்றுகிறது. நோய் வராமல் தடுக்கவும்,  நோயுற்றவர்களை நலப்படுத்தவும், வாழ்நாளை நீட்டிக்கவும், உடல் வலியின்றி வாழவும் விளையாட்டும் உடற் பயிற்சியும் உதவுகிறது. 

உழைப்பு மட்டுமே உடலுக்கு வலு சேர்க்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், சித்தாள், கொத்தனார் உள்ளிட்ட உடல் உழைப்பில் ஈடுபடும் உழைப்பாளிகள் தங்களின் உழைப்பின் மூலமே உடலுக்கு வலு சேர்த்துக் கொள்கின்றனர். உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லாத அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட மூளை உழைப்பாளிகளுக்கு ஒப்பீட்டளவில் நோய் வர வாப்புள்ளது. எனவே உடற்பயிற்சியும் விளையாட்டும் இவர்களுக்கு அவசியமாகிறது.

கூடைப்பந்து, வாலிபால், ஹாக்கி உள்ளிட்ட சில குழு விளயாட்டுகளில் உள்ளத்திற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தனிநபர் விளையாட்டைவிட குழு விளயாட்டுகளில் கூடுதலான பயிற்சி உள்ளத்திற்கு கிடைக்கிறது. இலக்கை அடைவதற்கு சிந்தனையை சிதறவிடாமலும், அணியின் பிற வீரர்களைப் பயன் படுத்தும் கூட்டுழைப்பின் (team work) அவசியத்தையும் பயிற்றுவிக்கிறது. ஆயிரம் நாட்கள் தியானப்பயிற்சி செய்தாலும் கிடைக்காத மனதை-சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலைக் கொடுக்கிறது விளையாட்டு. 

விளையாட்டைப் பார்ப்பதென்பது அதன் நுணுக்கங்களை அறிந்து எது தமக்கு ஏற்ற விளையாட்டோ அதைத் தெரிவு செய்து விளையாடுவதன் மூலம் ஒருவர் தனது உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவதற்காக இருக்க வேண்டும். 

விளையாட்டில் பிரபலமானால் 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்' நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், அரசு வேலையோ அல்லது பிரபல தனியார் நிறுவனங்களில் நல்ல வேலையோ கிடைக்கும், அதிகமாகப் பிரபலமாகி விட்டால் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற கருத்து மெல்ல மெல்ல திணிக்கப்பட்டு வருகிறது. அணியில் இடம் பிடிக்க முறைகேடுகள் செய்வதற்கும் தயங்குவதில்லை. ஐ.பி.எல் போன்ற நிறுவனங்கள் விளையாட்டை வணிகமயமாக்கி வருகின்றன. விளையாட்டை இரசணைக்கானதாக மாற்றி வருகின்றனர்.

விளையாட்டில் சாதனைகளுக்கும் பஞ்சமில்லை. கிரிக்கெட்டில் நட்சத்திர நாயகன் சச்சினின் சத சாதனை-கிரிக்கெட்டில் வீசப்படுகிற ஒவ்வொரு பந்தும் எடுக்கிற ஒவ்வொரு ரன்னும் சாதனைதானே-உசைன் போல்ட்டின் ஓட்டப்பந்தய சாதனை, ஒரே நேரத்தில் 20 பேருடன் சதுரங்கம் ஆடும் ஆனந்தின் சாதனை, கால்பந்தாட்டத்தில் பீலேயின் சாதனை இப்படி சாதனைகளுக்குப் பஞ்சமேது. புகழ், பொருள் என்கிற சுயநலத்தை மட்டுமே வளர்க்கின்ற, பிற எதற்கும் பயன்படாத இது போன்ற சாதனைகளால் என்ன பயன்?

நாடுகளுக்கி்டையே போட்டிகள் நடைபெறும் பொழுது ஒருவித தேச வெறி திட்டமிட்டே வளர்க்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்கு நம்மை அறியாமலேயே நம்மிடம் நிலவும் ஒருவித 'தேசப்பற்று' இடமளிக்கிறது. 

சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவோரை பாராட்டும் பக்குவமும் பார்வையாளர்கள் மத்தியில் இருப்பதில்லை. தனது நாட்டுக்காரன், மாநிலத்துக்காரன், மாவட்டத்துக்காரன், ஊர்க்காரன், மதத்துக்காரன், சாதிக்காரன், சொந்தக்காரன், நண்பன் வெற்றி பெற வேண்டும் என்கிற குறுகிய மனநிலையே பெரும்பாலும் நிலவுகிறது.

உள்ளத்திற்கும் உடலுக்கும் வலு சேர்க்கும் சாதனமாகத்தான் விளையாட்டைப் பார்க்க வேண்டும். பிறர் விளையாடுவதைப்பார்த்து நாமும் விளையாட்டில் பங்கேற்று நமது உடலையும் உள்ளத்தையும் வலிமையாக்கிக் கொள்ளவேண்டும். விளையாட்டு இரசனைக்கானதல்ல. அது உடல் நலத் தேவைக்கானது.

ஊரான்.

8 comments:

 1. இணைய வாசகர்களுக்கு வணக்கம்.

  இதுவே இணையத்தில் எனது முதல் படைப்பு. கருத்து கூற வாருங்கள், கருத்தொற்றுமையை நோக்கிச் செல்ல...

  ஊரான்.

  ReplyDelete
 2. தோழரே,
  உழைப்பு என்பது நாம் உண்டு, உடுத்து உயிர்வாழ ஒவ்வொருவரும் செய்தே தீரவேண்டியது. உடல் வலுக்காக அல்ல. இது வாழ்வின் அடிப்படை.
  உடற்பயிற்சி என்பது உடலுக்கு வலு சேர்க்கவும் உடலை கட்டுக் கோப்பாகவும் வைத்துக்கொள்ளவும். இது தனி விருப்பம்.
  விளையாட்டென்பது குழுவாய்ச் சேர்ந்தோ அல்லது தனித்தோ, அதில் ஊன்றி, அதன் நுணுக்கங்களை அறிந்து, லயித்து, விளையாடுவது. மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு வலு அல்லது தெம்பையும் கொடுக்கும். கபடி என்பதும், கோல் சுற்றலும் இத்தகையன.

  கபடி விளையாட்டில் நாம் சுற்றி நின்று விசிலடித்து கை தட்டுகிறோமென்றால் அது இரசனை என்பதன்றி வேரென்ன? அந்தக் குழுவில் கடினமாக விளையாடித் தோற்ற ஒருவர் தேம்பியழுதலின் பொருளென்ன? இரசனைதான்.

  இதில் கிரிக்கெட் எனும் அடிமை விளையாடைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள். அதற்கு அடிமைகள்தான் கைதட்டுவார்கள். ஏனென்றால் பொதுவாக அது குறுந்திரையில் காணப்படுகிற விளையாட்டு. விளையாட்டை வினையாக்கும் கோக்குகளும் நைக்குகளும் இந்த பிணத்துக்கு உயிர் கொடுப்பன!

  ReplyDelete
 3. தோழர் புதிய பாமரன்,
  உயிர் வாழ ஒவ்வொருவரும் உழைக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் உடல் வலிமை இல்லை என்றால் எப்படி உழைக்க முடியும்? உழைப்பினூடேதான் உடல் வலிமையைப் பெறுகிறோம்.உடல் வலிமையும் உடல் உழைப்பும் பின்னிப் பிணைந்தது. இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.

  விசிலடிப்பதும்,தேம்பியழுவதும் இரசனைக்குரியது என்றால் அதில் ஒளிந்திருக்கும் ஒருதலைபட்சமான அல்லது சுயவிருப்பமான அல்லது தன்னலமான ஒரு போக்கு சரியானதா? இந்த தன்னலமே ஒன்றை இரசனைக்குரியதாக மாற்றுகிறது. இத்தகைய இரசனைப் போக்கு மிகவும் ஆபத்தானது.

  ஒரு உழைப்பின் சிறப்பை பாராட்டுவதும் மேலும் ஊக்கப்படுத்துவதும் அவசியமானது. விளையாட்டையும் ஒரு உழைப்பாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு உழைப்பு மற்றவருக்கு எந்த வகையில் பயன்படும் என்பதிலிருந்தே உழைப்பையும் மதிப்பிட வேண்டும்.மனித சமூகத்தின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்மான வகையில் உழைப்பு அமைந்திடல் வேண்டும். அந்த வகையில்தான் விளையாட்டையும் பார்க்க வேண்டும்.இரசனை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

  ReplyDelete
 4. உமது கருத்துக்கு முற்றிலும் மாறுபடுகிறேன், என் அருமைத் தோழரே...!

  1. உயிர் வாழ மூச்சு எப்படியோ, இதயத் துடிப்பு எப்படியோ, அது போலத்தான் உழைப்பும். நீ உழைத்தால் தான் உனக்கு உணவு. உழைப்பின் அளவுகோல் யாவருக்கும் ஒன்றுதானா? இருக்கவே முடியாது. சிறு பிள்ளையை 'கண்ணுக்குட்டீ, சித்தே கடைக்குப் போய்வாடா' என்கிற அளவுக்குத்தான் அவனின் உழைப்பிருக்கும். ஏனெனில் சிறிது காலம் (இக்கால கட்டத்தில்) நம் உழைப்பை அண்டித்தான் அவன் இருக்க வேண்டியிருக்கிறது.

  ஒரு கை நடுங்கும் பெரியவரிடம் சம்மட்டியைக் கொடுக்க முடியாது. அவரின் தசை எவ்வளவுக்கு ஒத்துழைக்கிறதோ அவ்வளவுக்கே அவரது உழைப்பு. அதற்காக, அவர் அரை வயிற்றுக் கஞ்சிதான் குடிக்க வேண்டுமா என்ன?

  2. இவ்வுழைப்பால் உடல் வலுப்பெறலாம் அல்லது அலுப்புறலாம் அல்லது சோர்வுறலாம் அல்லது உற்சாகப் படலாம். யாவும் உழைப்பால் வருகின்ற அப்பழுக்கற்ற ஊதியத்தின் பிரதிபலிப்பு.

  தோழா..,

  நமக்கு பறையோசை மெத்தப்பிடிக்கும். அதற்காக ஏ.ஆர். ரகுமான் பாடலுக்கு உங்களால் அல்லது என்னால் தாளம் போடாமலிருக்க முடியவே முடியாது. பாடல் வரிகளும், அந்தப் பேயிசையும் நமக்கு ஒரு மயிரையும் போதிக்கப் போவதில்லை. ஆனால் கைகள் தற்செயலாக தாளமிடுவதை தவிற்க முடியவில்லையே? இது யதார்த்தமல்லவா? இதுதான் இரசனை. அனிச்சையில் கலந்தது. இரசனையின் நல்லது கெட்டதுகளை நாம் தான் தரம்பிறித்து ஒதுக்க வேண்டும்.

  முட்டாள் மைக்கேல் ஜாக்சனின் பாடலுக்கு அப்பாவி மக்கள் கண் கலங்குவது சாதாரண விஷயமாக எனக்குப் படவில்லை. அந்த இரசனை ஒரு போதைதான். அதற்காகக் காதைப் பொத்திக் கொள்ள முடியாது. அந்த இசை நம் காதுகளுக்குள் விழவேண்டாமென்றால் அந்த முட்டாளின் குரல்வளையைத்தான் நெறிக்க வேண்டும். (நல்லவன் போய்ச் சேர்ந்தான். அவனொரு கள்ளுப் பானை).

  இந்த இரசனை தன்னலம் சுயனலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

  3. விளையாட்டையும் உழைப்பையும் ஒன்றாகப் பார்க்கவேண்டும் என்கிற உமது கருத்து எனக்கு ஆச்சர்யமூட்டுகிறது.
  ஓவென அழுகின்ற குழந்தையைக் கூட ஒரு ஆலமரத்து விழுதின் ஊஞ்சல் விளையாட்டு அசுவாசப்படுத்திவிடுகிறது. ஆனால் ஊஞ்சல் விளையாடுவது எப்படி உழைப்பாகும்? அல்லது ஊஞ்சல் விளையாட்டே தேவையற்றதாகிவிடுமா என்ன?

  சிறுமிகள் பல்லாங்குழியாடுவதும், சிறுவர்கள் கோலி, கிட்டியாடுவதும் உழைப்பின் கணக்கிலா சேரும்? அவை மனதிற்கு உற்சாகந்தரும் விளையாட்டுக்கள் அல்லவா? இது ஒரு இரசனைதான். விளையாட்டில் இரசனையை ஒளித்து வைத்துவிட்டு விளையாடினால் நரசிம்ம ராவ் சிரித்ததற்கு ஒப்பாகும்.

  அதனால், யார் ஒருவர் நான் ஒரு கிரிக்கெட் ப்ரொபெஷன், மை ப்ரொபெஷன் ஈஸ் பாக்சிங்க்" என்று சொல்வார்களோ அவர்களிடத்தில் வேண்டுமானால் உங்கள் விவாதம் ஓரளவுக்கு எடுபடலாம்.

  பதில் வேண்டும்.

  ReplyDelete
 5. 1.குழந்தையின் உழைப்பையும் முதியவரின் உழைப்பையும் பொருள் ஈட்டுவோரின் உழைப்போடு ஒப்பிட முடியாதுதான். உழைப்பை இயக்கத்திலிருந்து பிரிக்க முடியாது. இயக்கமே இங்கு உழைப்புதான். இயக்கம் இல்லை என்றாலே உழைப்பு இல்லை என்றுதானே பொருள். உழைப்பு அல்லது இயக்கம் அந்தந்த வயதுக்கு ஏற்ப இருக்கிறதா என்பதே இங்கு கேள்வி. உழைப்பு இயக்கம் பரிணாமத்தின் ஓர் அங்கம்.
  2.விளையாட்டு இரசனைக்கானதா என்பதே இங்கு விவாதப் பொருள். இசை இரசனை பற்றி இங்கு விவாதமில்லை. இசை குறித்தும் ஒரு இடுகையை பதிந்துள்ளேன். இது குறித்து தனியாக விவாதிக்கலாம்.
  3.உழைப்பில்லாமல் எந்த விளையாட்டும் இல்லை என்பதே எனது கருத்து. விளையாட்டு என்பது வெறும் உடல் உழைப்பு சார்ந்தது மட்டுமல்ல அது மூளை உழைப்பு சார்ந்ததுமாகும். நீங்கள் குறிப்பிடும் ஊஞ்சல், பல்லாங்குழி, கோலி, கிட்டி இவற்றில் உழைப்பு இல்லையா? நீங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது.

  மனதிற்கு உற்சாகம் என்றால் என்ன பொருள்? மனம் என்பதே மூளையின் ஒரு வெளிப்பாடு. (mind is the product of brain) மூளையின் வெளிப்பாட்டை உடல் உழைப்பிலிருந்து பிரிக்க முடியாது.

  எனவே உழைப்பில் ஈடுபடும் போது மட்டுமே, உழைப்பை நேசிக்கும் போது மட்டுமே இரசனை என்பது வருகிறது. இந்த இரசனை நம் உழைப்போடு வாழ்வோடு கலந்தே வருவது.

  விளையாட்டை அது என்னவென்றே தெரியாமல் அல்லது புரியாமல் பார்ப்பதும் ஆரவாரிப்பதுமான இரசனைப் போக்குதான் இன்று நிலவுகிறது. அத்தகைய இரசனைக்குத்தான் நாமெல்லாம் ஆட்படுத்தப் பட்டிருக்கிறோம். அதிலும் இத்தகைய இரசனை என்பது ஆட்டக்காரரின் திறமையை ஓரங்கட்டிவிட்டு தன்னலப் போக்கில் பார்க்கின்ற இழிந்த நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

  விளையாட்டை உழைப்போடு தொடர்பு படுத்திப் பார்ப்பதே சரி என நான் கருதுகிறேன்.

  ReplyDelete
 6. சரி...
  அமெரிக்க லாஸ் வேகாசில் அளவிடவியலா சூதாட்டக் கிளப்புகள் இருக்கின்றன். சூதாடும் அனைவரும் உழைகிறார்கள் என்பது உமது கருத்து. அதில் இரசனையில்லாமல் நாட்கணக்கில் குந்திகொண்டு சூதாட முடியாதல்லவா? (தனது சொந்த பணம் / பொருட்களையிழந்தும்...).

  ஆக விளையாட்டில் இரசனை என்பதில் அந்த சூதாடிக் கூட்டம் இழப்பிலிருக்கிறது. இருந்துமென்ன பயன்? அவர்கள் தமை மறந்த சூதாட்ட இரசனையிலிருக்கிறார்கள்.

  இன்னொன்று.

  தன் இடைவிடா பயிற்சி மற்றும் உழைப்பால் ஒரு மாணவன் ஒலிம்பிக்கில் வெற்றிபெற்றானெனக் கொள்வோம். மாணவனின் உழைப்பென்பது அவனது கற்குங்காலம். கற்றதை வாழ்வில் கொணர்ந்து சமுதாயத்தை முன்னேற்றுவான். இதற்கிடையில் அவன் விளையாட்டின் மூலமாகப் பெற்ற பதக்கமென்பது அவனது விளையாட்டின் உழைப்பென்பதா அல்லது அவன் அந்த விளையாட்டில் பெற்ற இரசனையின் மூலமென்பதா?

  போகும் வழியில் பூக்களை இரசித்தாலும் அதனையும் உழைப்பின் கணக்கில் சேர்த்துவிடுவீர்களா அல்லது போகும் வழியில் போகும்போது கண்களை மூடிக்கொண்டு செல்லவேண்டுமா?

  இரசனை ஒரு உந்துதல். நல்லன நடப்பதற்கும் அல்லது கெடுதில் கிடப்பதற்கும்....!

  ReplyDelete
 7. //இவ்வுழைப்பால் உடல் வலுப்பெறலாம் அல்லது அலுப்புறலாம் அல்லது சோர்வுறலாம் அல்லது உற்சாகப் படலாம். யாவும் உழைப்பால் வருகின்ற அப்பழுக்கற்ற ஊதியத்தின் பிரதிபலிப்பு.//

  இதையும் சற்று கூர்ந்து கவனிக்கவும்.

  ReplyDelete
 8. 1.சூதாட்டத்தில் உழைப்பு இல்லையா? கெட்டதாக இருந்தாலும் நல்லதாக இருந்தாலும் உழைப்பு என்பது இருக்கத்தானே செய்கிறது.

  சூதாடிகள் இரசனையினால் நாட்கணக்கில் குந்துவதில்லை. இலாபமோ நட்டமோ சூதாட்டத்தில் அவர்கள் காட்டும் ஈடுபாடே அவர்களை அவ்வாறு குந்தவைக்கிறது. இரசனையைவிட ஈடுபாடே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஈடுபாடு உழைப்போடு தொடர்புடையது.

  2.மாணவன் பதக்கம் வெல்வதும் ஈடுபாட்டுன்கூடிய உழைப்பே.

  3.பூக்களை இரசிப்பது குறித்து இங்கு விவாதம் அல்ல. அது குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. அதைத் தனியாகப் பார்ப்போம்.

  4."இரசனை ஒரு உந்துதல். நல்லன நடப்பதற்கும் அல்லது கெடுதில் கிடப்பதற்கும்.."

  சற்று விளக்கினால் கருத்துகூற இயலும்.

  ReplyDelete