Tuesday, May 23, 2023

அன்று "அம்மா"! இன்று "ஆவின்"!

இராட்டிணக் கிணறுகளை
ஆழ்துளைக் கிணறுகள் விழுங்கி
ஆண்டுகள் உருண்டோடின.
தாமரை தவழ்ந்த குளங்களெல்லாம்
கர்நாடகா போல என்றோ
தரைமட்டமாகின.

தெளிந்த நீர் ஓடைகளையும் 
தெவிட்டாத ஆற்று ஊற்றுகளையும்
கழிவுகள் கபளீகரம் செய்ததால்
காகங்கள் கூட கரைகின்றன-
நன்னீருக்காக!
ஏரிகளிலும் சாக்கடைகள் சங்கமிப்பதால்
பயிர்களுக்கே பங்கம் வந்துவிட்டன.

தாகம் என்று கதவைத் தட்டினால்
தெரிந்தவர் என்றால் செம்பு நிறைய
தெரியாதவர் என்றால் 'கைகள்' நனைய
தாகம் தீர்த்தக் காலம் ஒன்றிருந்தது!
இன்று,
ஆர்.ஓ-கேன் எல்லாமே காசு ஆன பிறகு! 
யார்தான் தருவர் சும்மா?

அதனால்தானே, 
பயணம் என்றால் பாட்டிலோடு
பயணிக்கிறோம்!
பாதி பயணத்தில் தீர்ந்து போனால் 
புது பாட்டிலைத் தேடுகிறோம்!

நாம் நாவை நனைக்கும் வேளையில்
சிற்றூர்களில் சிறு முதலாளிகளும்
பெருநகரங்களில் கார்ப்பரேட் முதலாளிகளும்
பண மழையில் நனைகின்றனர்.

ஆசை யாரைத்தான் விட்டது?
ஜார்ஜ் கோட்டைகள் 
என்றோ விழித்துக் கொண்டன.
அன்று "அம்மா"
இன்று "ஆவின்" 
எதுவாயினும் ஏற்புடையதல்ல!
பொது இடங்களில் - இலவசமாய் 
குடிநீர் வழங்க 
ஆவண செய்வதே 
அரசின் கடமை!

ஆனால்,
"அம்மா" குடிநீர் இருந்தபோது 
வாய் பொத்திக் கொண்டிருந்தவர்கள்
"ஆவின்" குடிநீர் வருவதைக் கண்டு
ஆர்ப்பரிப்பரிக்கின்றனர் - சிலர்
அரசியல் ஆதாயம் தேட!

ஊரான்





Thursday, May 18, 2023

யூடியூப் சேனல்கள்: காசு! பணம்! துட்டு! மணி! மணி!!

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, ஊடகத் துறையில் இன்று கோலோச்சுவது யூடியூப் சேனல்கள். படிப்பதை விட, பார்ப்பதும் கேட்பதும் சுலபமாகிவிட்டது மக்களுக்கு. இதை சோம்பேறித்தனம் என்பதா அல்லது நவீன தொழில்நுட்பத்துக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டார்கள் என்பதா? இதுதான் யூடியூப் சேனல் காரர்களின் மூலதனம்.

 

கொஞ்சம் குரல் வளமும், பேச்சுத் திறமையும், சில விவரங்களைச் சேகரிக்கின்ற ஆற்றலும் இருந்தால் போதும். உடனே ஒருவர் யூடியூப் சேனலைத் தொடங்கி விடுகிறார். ஏதோ சமூகத்தைப் புரட்டிப் போடுவதற்காகவே தான் யூடியூப் சேனல் ஆரம்பித்து நடத்துவதாக ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள் இவர்கள்.


ஆனால் உண்மை அதுவல்ல. வருவாயை மனதில் கொண்டுதான் இவர்கள் யூடியூப் சேனலையே தொடங்குகிறார்கள். சிலருக்கு ஆயிரங்களையும், சிலருக்கு லட்சங்களையும் வாரிக் கொடுக்கிறது யூடியூப் சேனல்கள். அவரவர் தனக்குத் தெரிந்த கலையைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். சமையல், மருத்துவம், உடல் ஆரோக்கியம், கோலம், அரசியல் என மக்களின் அன்றாடத் தேவைகள்/ பிரச்சனைகள் தொடர்பான தலைப்புகளில் யூடியூப் சேனல்கள் பல்கிப் பெருகிவிட்டன


எது, பற்றி எறிகிற பிரச்சனையோ அந்தப் பிரச்சனை பற்றி அரசியல் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டால், அது பலரிடம் சென்றடையும் என்று இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தற்போதைய 'ட்ரெண்ட்' கள்ளச்சாராயச் சாவுகள். சில நாட்களுக்கு இது தொடரும். அடுத்து வேறு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் அதில் யாரைக் குறை கூறினால் அந்தப் பதிவைப் பலரும் பார்ப்பார்களோ, அதற்கு ஏற்ப கருத்தைத் தெரிவிப்பார்கள். மற்றபடி அந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கான அறிவோ, ஆலோசனையோ அவர்களிடம் இருக்காது. சமூகத்தில் நடைபெறுகின்ற சம்பவங்கள் மக்களுக்குத்தான் பிரச்சனைக்குரியது; ஆனால் இவர்களுக்கோ அது வருமானத்துக்குரியது.


எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி ஒரு ஆயிரம் பேரை நீங்கள் சந்தாதாரர்களாக சேர்த்துக் கொண்டால் போதும்; வருமானத்துக்கு உத்திரவாதம் உண்டு. சந்தாதாரராக சேருவதற்கு பணம் எதுவும் கிடையாது. இலவசம் தான்.


இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு பார்வைக்கும் (view) வருவாய் ரூ.0.053. 10000 பார்வைக்கு ரூ.200-500, ஒரு லட்சம் பார்வைக்கு ரூ.2000-5000, பத்து லட்சம் பார்வைக்கு ரூ.7000-30000, 1.5 கோடி பார்வைக்கு ரூ.150000-600000. 

என்ன தலையை சுற்றுகிறதா? இப்படித்தான் யூடியூபில் சம்பாதிக்கிறார்கள்.  கோலம் போட்டதற்கே 4000 ரூபாய் வந்ததாக எனது தங்கை மகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூறிய போதுதான் எனக்கு இது தெறிய வந்தது


ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலின் பதிவு ஒன்றைப் நீங்கள் பார்க்கும் பொழுது, அந்தப் பதிவை அதுவரை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அந்த மாதத்தில் அவர் எத்தனைப் பதிவுகளை வெளியிட்டிருக்கிறார், மொத்தப் பார்வைகள் எவ்வளவு என்பதையும் கணக்கிடுங்கள். அதன் பிறகு அதற்கான வருவாய் எவ்வளவு என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ள முடியும். மதனும், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட யூடியூபர்களும் இப்பொழுது உங்கள் கண் முன்னே வந்து சென்றிருப்பார்களே? சமையல் கலை வல்லுநர்கள் பலரும் காட்சியளித்திருப்பார்களே?


சமையல் மற்றும் மருத்துவம், உடல் நலம்  சார்ந்த யூடியூப் சேனல்களைப் பார்த்து அதன்படி ஒருவர் செய்ய/நடக்கத் தொடங்கினால் அது சம்பந்தப்பட்ட தனி நபரை மட்டுமே பாதிக்கும். அதையே அதிகமானோர் கடைபிடித்தால் மொத்த சமூகமும் பாதிக்கும். இவை எதுவும் அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரவுகள் அல்ல என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அரசியல் சார்ந்து போடக்கூடிய பதிவுகள் மிகவும் ஆபத்தானவை. உண்மையை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அத்தகையப் பதிவுகள் பலரையும் சென்றடையாது. மாறாக பொய்யையும் புரட்டையும் கலந்து அடித்து ஒரு 'திரில்லர்' போல வெளியிட்டால்தான் மக்களை ஈர்க்க முடியும் என்று இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். சும்மாவா பின்ன? பணம்! துட்டு! காசு! மணி! மணி!


பெரும்பாலான யூட்யூப் சேனல்கள் இந்த வகையைச் சார்ந்தவையே. அவர்கள்தான் அதிகமாக துட்டு பார்க்கிறார்கள். நமது அறியாமையே அவர்களது மூலதனம். புலனறிவு-பகுத்தறிவு-நடைமுறை என்கிற சுழலேனி முறையில் நாம் உண்மையைக் கண்டறியத் தவறினால் நமது 'பாக்கெட்' மட்டுமல்ல மூளையும் சேர்ந்தே 'எம்டி'யாகிவிடும்


சமூக அக்கறையோடு நடத்தப்படுகின்ற தனிநபர் மற்றும் அமைப்பு சார்ந்த யூடியூப் சேனல்களும் சில இருக்கவே செய்கின்றன. ஆனால், அவை பெரிய அளவில் மக்களால் ஈர்க்கப்படவில்லை என்பதே எதார்த்தம்.


சொல்றத சொல்லிட்டேன். யூடியூப் சேனல்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் போகிறீர்களா அல்லது ஏமாறப் போகிறீர்களா? அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது.


ஊரான்


Tuesday, May 16, 2023

கள்ளச்சாராய மரணங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்!

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறுகின்ற ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கள்ளச்சாராயம்-கஞ்சா விற்பனை, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்ச ஊழல் முறைகேடுகள், ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், இவை அனைத்தும் அந்தந்த ஊரில் உள்ள திமுக, அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தெரியும்.

கள்ளச்சாராய மரணங்கள் போன்று தீவிரமான பிரச்சனைகள் நிகழாதவரை அனைவரும் மௌனம் சாதிப்பர். காரணம் மேற்கண்ட விசயங்களில் கட்சி வேறுபாடு இன்றி உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெறுகின்ற ஆதாயம்தான். உள்ளூர் மக்களுக்கு இவை எல்லாம் ஓரளவு தெரிந்திருந்த போதிலும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் அவர்களை ஒருங்கிணைக்கின்ற ஆற்றல்மிக்க உள்ளூர் தலைவர்கள் மேற்கண்ட விசயங்களில் ஆளுங்கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளோடு வைத்திருக்கின்ற கள்ளக் கூட்டுதான்.

ஆதாயம் கிடைக்காதவர்கள் மட்டுமே இதற்கு எதிராகக் குரல் கொடுக்க முன் வருகின்றனர். கவனிக்க வேண்டிய விதத்தில் அவர்களை கவனித்தால் அவர்களும் அதன் பிறகு மௌனம் காக்கின்றனர். ஆட்சிகள் மாறினாலும் இதுதான் அன்றாட நடைமுறை. 

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கின்ற பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்கள் பலவீனமாக இருப்பதினால் அவர்களும் கையறு நிலையில்தான் உள்ளனர். புரட்சிகர இயக்கங்கள் பலம் பெறாத வரையில் மேற்கண்ட சீர்கேடுகள் தொடரவே செய்யும். நடப்பு அரசியல் விவரங்கள் அவதானிப்பதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால்  இவர்களும் பல்வேறு குழுக்களாக பிளவுப்பட்டு சிதறுண்டு கிடப்பது மற்றுமொரு அவலம்.

மேலும் இது ஒரு அரசியல் கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்க வேண்டி உள்ளது. தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்ற உரிமையைத் தவிர வேறு எந்த உரிமையும் உள்ளூர் மக்களுக்குக் கிடையாது. மாறாக அதிகாரம் அனைத்தும் அரசு அதிகாரிகளிடம் குவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகளும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். தீர்மானங்களைக் கொண்டு வருகின்ற அதிகாரம் மட்டுமே மக்கள் பிரதிகளுக்கு இருக்கிறது. அதிகாரிகள் மனசு வைத்தால் மட்டுமே தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இல்லையென்றால் அவை எல்லாம் குப்பை தொட்டியில் வீசப்படும். 

தீர்மானங்கள் கூட மக்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்படுவதில்லை. மாறாக அந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் அதனால் எவ்வளவு ஆதாயம் பெற முடியும் என்று அரசியல்வாதிகள் முன்கூட்டியே கணக்குப் போட்டுதான் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.

கிராம வார்டு உறுப்பினர் வரை அதிகாரம் பரவலாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையான அதிகாரம் அதிகாரிகளிடமே குவிந்து கிடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கண்ட பிரதிநிதிகள் அதிகாரிகளோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. மாறாக தவறிழைக்கின்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கின்ற அதிகாரம் மக்களுக்குக் கிடையாது. அடுத்த தேர்தல் வரை அமைதி காப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழி இல்லை.

உள்ளூர் அளவில் அனைத்து அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்கே இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தீட்டுகின்ற திட்டங்களை நிறைவேற்றுகின்றவர்களாக மட்டுமே அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாக திரும்பப் பெறுகின்ற வகையில் மக்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.  இத்தகைய புதிய கட்டமைப்பு மட்டுமே ஒரு ஒழுங்கமைந்த சமுதாயத்தை உருவாக்கப் பயன்படும். அதற்காக சிந்திப்பதும் குரல் கொடுப்பதும் ஒன்றிணைவதும் இன்றைய காலத்தின் கட்டாயம். நீண்ட கால அடிப்படையில் இது ஒன்றே தீர்வு. 

அதுவரை சும்மா இருப்பதா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது அல்லவா? முடிந்த வரையில் உள்ளூர் அளவில் மக்கள் குழுக்களை கட்டி அமைத்துப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த வேலையை பொதுவுடமை மற்றும் புரட்சிகர இயக்கங்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும். அதுவரை கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்ட அவலங்கள், துயரங்கள் தொடரவே செய்யும்.

நேர்மையான அதிகாரிகளும் சில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் அரிதாக இருக்கவே செய்கின்றனர். விதிவிலக்காக இவர்கள் மிகச் சொற்பமானவர்களே. கட்டமைப்பு சரியில்லாத போது இந்த ஒரு சிலராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் கள நிலவரம்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்